இப்படி விரஹ தயா அபி தப்தரான ஆழ்வாருடைய விடாயைப் போக்கி அருளுகைக்காக முன்னமே
திருச் செங்குன்றூரிலே திருச் சிற்றாற்றங்கரையிலே-ஒரு தாமரைத் தடாகம் நின்றால் போலே தான் நின்று அருளினபடியைக்
காட்டக் கண்டு ப்ரீதியாலே சகல ஜன மநோ நயன ஹாரி திவ்ய சேஷ்டித்த ஸூலபத்வ ஸுந்தர்யாதி
கல்யாண குண கண ஸர்வேஸ்வரத்வங்களைப் பேசி
அந்தத் தாமரைத் தடாகம் இருந்த இடத்தே ஏறச் செல்ல வேணும் என்கிறார் –
—————————————————————
வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-
நிஷ்யந்தமான மதஜலமாகிற சரித்தை யுடைத்தான குவலயா பீடமாகிற மஹா சலத்தினுடைய தந்த யுகளமாகிற சிகரங்களை முறித்து உருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து கஜ தந்த வராயுத தரராய் நம்பி மூத்த பிரானும் தானும் சர்வ லீலாவ லோகிதங்களை யுடைய
இரண்டு ஸிம்ஹங்கள் ஷூத்ர மிருகங்கள் நடுவே புக்கால் போலே ரங்க மத்யத்திலே போய்ப் புக்கு மல்லரைக் கொன்று –
மஞ்ச உபரிஸ்த்திதராய் இத பூர்வம் யுத்தத்தில் பராஜிதரான ராஜாக்கள் த்ரஸ்தராய்க் கெடும்படி எழப் பாய்ந்து
மஞ்ச உன்னதஸ்த்தல சத்தனான கம்சனை வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு
அதன் ஓசை கேட்டு விளையாடினால் போலே தகர்த்த சீர் கொள் சிற்றாயன் –
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு -எங்களுக்கு ப்ராப்யம் என்கிறார் –
————————————–
எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-
நமக்கு ப்ராப்யமாய் நமக்கு போக்யமாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் எனக்கு ஸ்வாமியாய்
நிகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி சீலனாய்
த்ரி மூர்த்தி ரூபனாய் பிரதிகூல ஐந்துர்த்தர்சனாய்-சர்வ காரணமாய்
மதிமுதித மீநாகுல மபூமிளி தசலில சீதள ஸ்யாமள பஹுல பலாச ஸூ ரசி குஸூம தரு நிகர பரிவ்ருத்தமான –
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
-அங்கு அமர்கின்றவன் அல்லது மற்று எனக்கு ஒரு துணை இல்லை என்கிறார் –
————————————————————————
என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3-
பரம ஸூரி சம்ச்லேஷ ஏக போக்யனாய் இருந்து வைத்து மத் சம்ச்லேஷ ஏக போகனாய் -மத் ஸ்வாமியாய் –
மஹார்ணவ மக்னையான பூமியை எடுத்து அருளினால் போலே
ஸ்வ விரஹ ஜெனித நிரதிசய வ்யஸன மஹார்ணவ நிமக்நனான என்னை
எடுத்து அருளி ஸ்வ விஷய கைங்கர்ய ஏக போக பிரதனாய் தக்ஷிண திக்குக்கு பஹு பூஷணமான திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால் நின்ற எம்பெருமானுடைய திருவடிகள் அல்லது மற்று
நினைப்பிலும் எனக்கு ஒரு ப்ராப்யம் இல்லை என்கிறார் –
—————————————
பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-
நிரதிசய ரமணீயமான ரூப கிங்க்ரீக்ருத மஹாத்மனாய் ஸ்வ கீய மஹத் ரூப பரிபூர்ண விஸ்தீர்ண புவன த்ரயனாய்
மஹித மஹாரவ பயோ நிதியாய் ஸுந்தர்ய சார நீல ரத்ன சத்ருச திவ்ய ரூபனாய் மத் ஸ்வாமியாய்
பஹல பலபூஞ்ச கதலீ பூத நாளிகேர ராஜி பரிவ்ருத்தமான திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாரின் கரையில்
ஆஸ்ரிதற்கு தன்னை உள்ளபடியே அறியலாம்படி நின்று அருளின எம்பெருமான் அடியிணை அல்லது
ஓர் அரண் பிறிது இல்லை என்கிறார்
——————————————————————–
அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-
மற்றுள்ள திரு நகரிகளில் சரண்யனாய் இருக்கிறானும் திருச் செங்குன்றூரில் நின்று அருளின அவனே அல்லனோ –
ஆனபின்பு அவனே அரண் என்னும் நிர்ப்பந்தம் என் என்னில் அல்லாத திரு நகரிகளில் அரணாய் இருந்தவனுக்கு அவனில் வேறு இல்லை –
அவனுக்கு ஆயதனமாய் பக்தி யுக்த சதுர்வேத வித் அக்ரேசரரான வர்களுடைய யாகங்களில்
ஹுதா மான ஹவிர் அக்னி ஹோம தூமத்தாலே திரஸ்க்ருத பூதநதல நிகில தேஜஸ் கரமாய் தர்ச நீய அத் யுன்னத பிரசாத
அலங்க்ருதமான திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு-எனக்கு நல்ல அரண் என்கிறார் –
———————————————————
எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளியம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-
எனக்கு நித்ய ரக்ஷகனாய் -எனக்குப் பிராணனாய் – அயர்வறும் அமரர்களுக்குப் பிதாவாய் -மாதாவாய் –
ஸ்வேநாபி துரவபோய ஸ்வ மஹிம ஸ்வபாவனாய் -ஷீரார்ணவ சாயியாய் இருந்த எம்பெருமானை-
சகல மநோ ஹர கல்யாண குண விசிஷ்டராய் தனித்தனியே ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர வஜ் ஜாஜ் ஜென்ம ஸ்த்தி சம்ஹார சமர்த்தராய்
த்ரி சஹஸ்ர சங்க்யாதரான ஜனங்களாலே அதயாஸ்யமானமாய் த்ருட தர பிராசாத பரிகர்மிதமான
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு-அதனுள் கண்டேன் என்கிறார் –
————————————————-
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட அந்த ரமணீய தாம்ரகமல சத்ருசமான திருக் கண்களும்
வித்ரும சத்ருசமான திருப் பவளமும் -கமல சத்ருசமான திருவடிகளும் கமல சத்ருசமான திருக் கைகளும்
கமல சத்ருசமான திரு நாபியும் நிஜ புஜாந்த்ர மந்திர இந்திரா திவ்ய ரூப மயூவாஹித பூதமாகையாலே
சிவந்த தாமரை போலே இருந்த திரு மார்வும் திவ்ய பீதாம்பரமும் –
தேஜோ ரூபமான திரு அபிஷேகமும் திவ்ய மௌக்திக ஹாரமும் சங்க சக்ராதி திவ்யாயுதங்களும்
திகழ என் சிந்தையுள் இருந்தான் என்கிறார் –
—————————————————————-
திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-
ஸ்வ குணாநு ரக்த சகல புவன சஞ்சனந பரிபாலன ஸம்ஹ்ருதி சீலனாய் -பக்தி யுக்த சதுர்முக பஸூ பதி சதமவ ஹுதவஹ
ப்ரப்ருதி சகல ஸூர ஜன சரண்யனாய்
தத் விரோதிய அஸூர ஜன ம்ருத்யு பூதனாய்
சதுர்வேத வித்ப்ரவரராய்
பரம புருஷ சரண யுகள அநு ராக யுக்தராய் க்ருதாஞ்சலி களான பவ்ம ஸூரராலே சம்ஸ்தூயமான
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யிலே நின்று அருளி
என் நெஞ்சிலே தீப்யமானனாய் இருந்து அருளினவனை எத்தைச் சொல்லிப் புகழ்வது –
புகழுமாறு அறியேன் என்கிறார் –
———————————————————————
படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9-
பரம உதாரராய் வ்யபதேஸ்யராய் ஸ்வ சத்ருசராய் நிரதிசய சகல வேத தத்துவார்த்தஜ்ஞராய் ஞான அணு குண சாரித்திரராய்
நித்ய மனுஷுட்டீயமான பஞ்ச மஹா யஞ்ஞாதி சகல கர்ம கலாபராய் இருந்த திவ்ய ஜனங்களால் அத்யாஸ்யமாநமான
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அமர்ந்த நாதன் ப்ரஹ்ம ருத்ர ரூபேண ஸ்வேன ரூபேண ச
நிகில ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸ்த்திதி சம்ஹார ஹேது பூதனாய் ஸமஸ்த வஸ்து ஜாத அந்தராத்மா பூதனாய்
சர்வ சப்த வாச்யனாய் இருக்கும் -இவ்வர்த்தத்தில் ஸ்துதி இல்லை –
புகழுமாறு அறியேன் என்கிறார் –
—————————————————–
அமர்ந்த நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி
அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வ பாவனாய் மம நாதனாய் ஆஸ்ரித சமீஹித நிர்வர்த்தகனாய் -த்ரி நேத்ர சதுர்முக விபூதிகனாய்
கமல தடாக பரிவ்ருத்தமான திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையை போக்ய பூமியாக யுடையனாய்
வேத வித அக்ரேஸரான பரம புருஷ சரணாரவிந்த யுகள அநு ராக மஹிமா வதாதஹ்ருதய அரவிந்த
த்ரிதச சத திவ்ய ஸூர ஜனங்கள் வாழ்வமர்ந்த மாயோனை அமர்ந்தேன் என்கிறார் –
———————————————————————–
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-
மது மய பாலை கன்னலை அம்ருதவத்தே போக்ய பூதனாய் நிஹீர்ண சகல லோகனாய் -ஸ்வ நாபீ கமல உத்பூத சதுர்முகனாய்-
ஆச்சர்ய பூதனாய் சர்வ ஸ்வாமியாய் இருந்த திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை வண் குருகூர் சடகோபன் சொல் வாயிரத்துள் இப்பத்தும் அருள் செய்து
வானின் மீதேற்றி பின்பு சம்சார சம்பந்தத்தைப் போக்கும் என்கிறார் –
——————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply