இரண்டாம் திருவாய் மொழியில் -தம்முடைய ஆகாங்ஷானு ரூபமாக அகவாயிலே அவன் வந்து முகம் காட்டினப்பாடியை அனுசந்தித்தவர் –
அவனுடைய பூர்த்தியைக் கண்டு பாஹ்ய சம்ச்லேஷம் பண்ண அபி நிவேசித்து அதித்வரித சித்தராய் ப்ராப்ய பூதனான ஈஸ்வரனுடைய
அபிகம்யத்வ ஸூ சகமான ஸுலப்யாதி குணாவத்தையையும்
அனுபாவ்ய ஆகாரத்தையும்
ஆகர்ஷகமான ஆபி ரூப்யத்தையும்
அநிஷ்ட நிராசகமான பரிகரவத்தையும்
அபரிச்சேதயமான உஜ்ஜ்வல்ய அதிசயத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அவபந்தும் அசக்தையையும்
அபி நிவேச ஜனகமான ஆகார விசேஷங்களையும்
அந்நிய சக்த விஷயத்தில் அஸூல பதையையும்
அநந்யார்ஹத்வ ஆபாதகத்வத்தையும்
சித்த அபஹாரியான திவ்ய விக்ரஹ உச்ச் ராயத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரனை அனுபவிக்கும் இடத்தில் இவ்வருகு யுண்டான அனுபவத்தில் சங்கம் அற்றால் அல்லது
சித்தியாது என்று அறுதி இட்டு த்வரையாலே ஆர்த்தரான தம்முடைய ஆர்த்தியை ஆற்றுகைக்காக
உன்முகரான ஸூ ஹ் ருத பிரக்ருதிகளைக் குறித்து தம்முடைய நிஸ் சங்கதையை வெளியிட்ட பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்த நாயகியானவள் தன்னுடைய அபிசரண உத்யோகத்தாலே தோழிமார் தாய்மாராடு
தான் வளர்த்த கிளி பூவை மயில் குயில்களோடு வாசியற சர்வர் பக்கலிலும் சங்கம் அற்று
தன்னுடைய ஸ்த்ரீத்வாதி குணங்களையும் அநா தரித்து அவன் வடிவு அழகிலே அபஹ்ருத சித்தையான
ஆகாரத்தைப் பேசின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
—————————————————————
முதல் பாட்டில் சர்வ ஸூலபனான திருவேங்கடமுடையானை அபி நிவேசித்து
என் ஆபரண சோபையோடு ஆபி ரூப்பியத்தோடு வாசியற இழந்தேன் என்று
தோழிமார்க்கு அறிவிக்கிறார் –
நங்கள் வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-
நங்கள் வரி வளை யாயங்களோ–வரியை யுடைத்தான வளையை யுடையராய் இருக்கிற நம்முடைய ஸமான
ஸூக துக்கைகளான உங்களைப் போல் அன்றியே
நம்முடை ஏதலர் முன்பு நாணி–ஹித வசனம் பண்ணி மீட்க்கத் தேடுகிறவர்கள் ஆகையால் ஸாத்ரவ கோடியிலே
நிற்கிற தாயார் -அயலார் -முன்பு சொல்ல நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்–அந்தரங்கதையான உங்களுக்கு யான் சொல்லலாவது ஒரு வார்த்தையானது
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்-பாரா நின்றேன் -எல்லா வழியாலும் இந்த விகார ஹேதுவைப் பாசுரமிட்டுச்
சொல்லும்படி காண மாட்டு கிறிலேன் -ஆதலால் என் விகாரம் கொண்டு அறியும் அத்தனை -அதாவது
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும்
வெவ்விய பார்வையுடைய பெரிய திருவடியை நடத்தும் நிர்வாஹகனாய் –
அந்த வாஹன அதிஷ்டானத்தைக் காட்டி என்னை அடிமை கொண்ட ஸ்வாமியாய் –
அனுபவிக்கைக்கு ஈடாக திருமலையில் ஸூலபனாய் வந்து நிற்கிற இவனை -இவ்வாகாரங்கள் அடியாக அபி நிவேசித்து நடந்து
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்–என்னுடைய சங்கு வளைகளானவை சரிந்து கழன்றன –
ஸ்வாபாவிதமான ஒளியும் இழந்தேன் -பெரிய முலைகள் பசுப்பால் பொன்னிறமாய் சிசில சரீரையானேன்-
நிர்த்தோஷ பிராமண ரூடனாய் நிருபாதிக சம்பந்த யுக்தனாய் நிரவதிக ஸுலப்ய விசிஷ்டானாவான் என்று கருத்து
—————————————————————
அநந்தரம் அனுபாவ்ய ஆகார விசேஷத்தை யுடையனான அவன் அபகரித்த வளை முதலானவற்றை
எத்தனை காலம் கிலேசிக்கிறேன்-உங்களுக்கு அகப்பட இது சொல்லும் விரகு அறிகிறிலேன் என்கிறாள் –
வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-
வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்–இவன் பாடே சென்று ஓன்று வேண்டி பெற வேணும் என்று இருப்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்-எனக்கு அசாதாரணை களான தோழிமாறான உங்களுக்கே யாகிலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ-காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்-இவ்விடத்தில் இந்த அவசாத ஹேதுவை
துக்காபிபூதையான நான் சொல்லி ஆற வேண்டி இருக்கச் செய்தே சொல்லும்படி ஐயோ காண்கிறிலேன்–துக்கம் ஏது என்னில்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்–எப்போதும் காண்கைக்கு தக்கு இருப்பதாய் –
விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரை போன்று இருக்கிற திருக் கண்ணை யுடையனாய் –
பார்வையாலே தன் பவ்யத்தையைக் காட்டி வஞ்சித்து சர்வ ஸ்வாபஹாரம் பண்ணின க்ரித்ரிமனாய் –
இக் கண் அழகாலே ஸூரி களை யடங்க அலற்றப் பண்ணுமவனாய் -அப்படி என்னையும் ஈடுபடுத்தினவனை கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–என் பக்கலில் நின்றும் அங்கே போய்க் குவிந்த
வரி வளையும் ஸ்த்ரீத்வாதி பூர்த்தியையும் வாங்கிக் கொள்ளுகைக்காக எத்தனை காலமுண்டு தளர்ந்து கிலேசிக்கிறேன்
—————————————————————–
அநந்தரம் அதிசயித ஆபி ரூபியத்தை யுடையவனைச் சென்று கிட்டி என் வளை தொடக்கமானவை வாங்கும் இடத்தில்
நீங்கள் அவன் துர்லபம் என்று விலக்கிலும்-காலம் முடிந்து போக்கிலும் நான் கிட்டி அல்லது விடேன் -என்கிறாள் –
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட–நீல நிறமாய் விகசிதமாய் அபரிச்சேத்யமான
தேஜஸ்ஸாலே சூழப்பட்ட மஹா மேகம் போலே இருக்கிற நிறத்தையுடைய ஸ்ரீ கிருஷ்ணன் அபஹரித்துக் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே–தர்ச நீயமான வளையோடே கூட என் நிறத்தை
எத்தனை காலமும் கூடச் சென்றே யாகிலும் கொள்ளுகைக்காக
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் ! இனி நாணித் தான் என் ?-லோகம் அறியும்படி துணிந்து புறப்பட்டாள் என்கிற பழியைச் சுமந்தேன் –
அழகிய நுதலை யுடைய தோழிமீர் இனி லஜ்ஜித்து என்ன பிரயோஜனம் உண்டு -ஆதலால் –
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்–காலம் இளைத்து முடிந்து போமது ஒழிய அவன் துர்பலனானாலும் விடமாட்டாத பாபத்தையுடைய நான்
இளைத்து விடுகிறேன் அல்லேன் -இது ப்ரத்யஷித்துக் கொள்ளுங்கோள்-
———————————————–
அநந்தரம் ஆஸ்ரித அநிஷ்ட நிவர்த்தகமான ஆயுத்தாதி பூர்த்தியை யுடையவனைக் கிட்ட வேணும் என்று நினைத்து
சர்வ ஸ்வாபஹாரம் பிறந்த நான் இனி எத்தைக் கொடுப்பது -என்கிறாள் –
கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-
மாடக் கொடி மதிள் தென் குளந்தை வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்–மாடங்களையும் கொடியோடு கூடின மதிளையும் யுடைத்தாய்
நன்றான திருக் குளைந்தையில்-அழகிய மேற் பக்கத்திலே நின்ற ஆச்சர்ய சேஷ்டித யுக்தனாய்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர் ஆழி வலவனை ஆதரித்தே –ஹர்ஷத்தாலே தர்ச நீய கதியான பெரிய திருவடியை மேற் கொண்டு
இருப்பானாய் ஆஸ்ரித நிரசனத்தில் வெற்றியை யுடைத்தான போரை யுடையனான திருவாழியை வலத்திலே யுடையனானவனை ஆதரித்து
கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன் ஆழி வலவன்-என்று வல்லவன் என்றுமாம்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்-ஸம்ஸ்லேஷிக்க வேண்டும் என்று அழகிய வளை நெஞ்சம் தொடக்கமானவை எல்லாம்
நெஞ்சத்துளக்கம் என்று நெஞ்சோடு யுண்டான துவக்கு இழந்தேன் என்றுமாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல் பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்–என் பக்கல் ஸேஷியாமல் விட்டுப் போம்படியாக இழந்து
பல வளையை யுடைய பெண்டுகள் முன்னே நெடும் காலமுண்டு என் ஸ்வ பாவம் அழிந்து போய் இனி எத்தைக் கொடுப்பேன் –
———————————————————-
அநந்தரம் -தத்வ ஞானராய் இருப்பார்க்கும் அபரிச்சேதயமான அதிசயித உஜ்ஜ்வல்யத்தை யுடையனான சர்வேஸ்வரனை
ஆசைப்படுகையும் அவன் நமக்கு முகம் காட்டுகையும் நம்முடைய அளவேயாய் இருக்கிறதோ என்கிறாள் –
ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5-
ஊழி தோறூழி யொருவனாக நன்கு உணர்வார்க்கும் உணரலாகா சூழலுடைய நினைக்கும் காலே—ஆராய்ந்து பார்க்கும் அளவில்
தத்துவத்தை நன்றாக உள்ளபடி அறிய வல்லார்க்கும் கால தத்வம் உள்ளதனையும் ஏவம் வித ஸ்வ பாவனாய் இருப்பான் ஒருவனாக
பரிச்சேதித்து அறிய ஒண்ணாத படி ஆஸ்ரிதரை அகப்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சியாகிற சேஷ்டிதங்களை யுடையனாய்
சுடர் கொளாதித் தொல்லை யஞ்சோதி–ஸ்வரூப பரிணாமம் வராதபடி உபாதானமாகையும் உபாதானமான தானே நிமித்தமாகையும் –
சித் அசித் பரிணாமம் தனக்குத் தட்டாதபடியுமாகிற தேஜஸ்ஸை யுடைய காரண பூதனாய்
நித்ய அசாதாரணமாய் அப்ராக்ருதமான ஜ்யோதிர்மய ரூபத்தை யுடையனாய்
ஆழி வலவனை ஆதரிப்பும் ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்–திருக் கையும் திரு வாழியுமான சர்வேஸ்வரனை ஆதரித்து ஆஸ்ரயிக்கையும்
ஆஸ்ரயண அவஸ்தையில் சர்வ ஸ்மாத் பரத்வத்தோ பாதி ஸுசீல்யத்தை யுமுடைய அவன்
ஆஸ்ரிதைகளான நம் பக்கலிலே வருகையும் அபேக்ஷிதங்கள் செய்கையும் எல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ? சொல்லுவதோ ?இங்கரியது தான்–நம் அளவிலே உடையோமானோமோ –
என்னோ பாதி இவ்விஷயத்தில் வாஸி அறியும் தோழிமீர்காள் –
சர்வ ஸுலப்ய ஸுசீல்யாதிகள் கிடக்க ஸ்வைரமான துர்லப்யம் சொல்லுகையோ இங்கு அரியதாய் இருக்கிறது-
————————————————————-
அநந்தரம் அதிசயித ஞானர்க்கும் அவபந்தும் அஸக்யமாம்படி சம்சய ஜனகனான அவன் நம்மோடே
ஸம்ஸ்லேஷித்து ஈடுபடுத்தின பின்பு வேறு ஆர்க்குக் கூப்பிடுவோம் என்கிறாள் –
தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-
தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால் என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்–ஆராயப் பார்த்தோம் ஆகில் அசாதாரணமாய்
அநவதிகமான அவனுடைய தேஜஸ்ஸானது என்னுடைய சொல்லில் அடங்குமது அன்று –
அதிசயித ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிஷ்கர்ஷிக்க ஒண்ணாத படி
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் அத்திறம் நிற்க அபர்யந்தமான ஸம்சயத்தை விளைக்கும் அந்த மேன்மை இடையாட்டம் நிற்க
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மாலே—பூங்கொடியும்-அழகிய வயலும் சூழ்ந்த திருக் குடந்தையில்
ஸ்லாக்யமான தாமரை போலே இருக்கிற திருக் கண்கள் வளரும்படி சாய்ந்து அருளின ஆஸ்ரித வ்யாமோஹத்தை யுடையவனாய்க் கொண்டு
எம்மாமை கொண்டான்-அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்-என் நிறத்தை அபஹரித்தான்–
பூந்தாரினுடைய விகாசத்தை யுடைத்தானா திருத் துழாய் மாலையையும் தரு கிறிலன் –
நாம் அவனாலே நலிவு பட்ட பின்பு நலிந்த அவனை ஒழிய ஆர் இருக்கலாரிட்டு கூப்பிடுவோம்
உறவு செய்து அகப்படுத்தினவனை ஒழிய உறவில்லாதற்குக் கூப்பிட்டு பிரயோஜனம் என் -சொல்லி கோள்
—————————————————–
அநந்தரம் -அபி நிவேச ஜனகமாய் ஆஸ்ரித உபகாரகனுடைய ஆகாரங்களை அனுபவித்து ஈடுபட்ட நான்
அநேக காலம் சென்றாகிலும் கண்டு அல்லது விடேன் -விலக்குகிற உங்களோடு
என் பக்கல் ஒரு தொடக்கம் இல்லை -என்கிறாள் –
மாலரி கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-
மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று–ஆஸ்ரித வ்யாமுக்தனானவன் -அந்த வ்யாமோஹத்தாலே
அவர்கள் பாபங்களை அபஹரிக்கும் ஸ்வ பாவத்தை யுடையவன் –
நிவ்ருத்த பாபரானவர்க்கு நித்ய அனுபாவ்யமான துணையாம்படி பிரசஸ்த கேசனனானவன் –
கீழ்ச் சொன்ன வ்யாமோஹாதிகளுக்கு எல்லாம் தலமான நிருபாதிக சம்பந்தத்தை யுடையவன் –
இக் குணங்களை ப்ரவ்ருத்தமாக்கும் ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டிக்கு பதியானவன் –
ஸ்ரீ யபதித்தவ நாராயணத்வங்கள் நிறம் பெறும்படி பிறந்து ஆஸ்ரித பவ்யனானவன் –
பவ்யத்தையைக் கண்டு ஆச்ரயித்தார்க்குக் கொடுக்கும் பரிபூர்ண விபூதியை யுடையவன் –
என்று என்று இந்த ஸ்வ பாவங்களைப் பல காலும் சொல்லி -ஒரு கார்யார்த்தமாக அன்றிக்கே
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்–ஆர்த்தி அதிசயத்தாலே கூப்பிடும்படி -இதுவே
ஸ்வ பாவமாக என்னைப் பண்ணிக் கை விட்டு பொகட்டு ஒரு பிரகாரத்தாலும் தன் வடிவையும்
தன்னைக் கிட்டுகைக்கு ஈடாய் இருப்பதோர் அடையாளத்தையும் காட்டு கிறிலன்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?-என்னை விலக்குவதாக உத்யோகித்து
ஏலம் போலே ஸ்ரமஹரமான பரிமளத்தையும் பூவையும் யுடைத்தாயுள்ள குழலையுடைய அன்னைமீர்காள் –
ஏவம் விதைகளாய் எனக்கு அசாதாரணை களான தோழிமீர்காள் அவன் ஈடுபடுத்தி முகம் காட்டாது ஒழியில் என்னாலே செய்யலாவது என்
காலம் பல சென்றும் காண்பதாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–இப்போதைக்கு விட்டுப் பிடி எனினும்
கால தத்வம் உள்ளதனையும் சென்றாகிலும் ஆணையே காணக் கடவேன்-
இந்த வ்யவசாயத்தைக் குலைக்க நினைக்கிற உங்களோடு எனக்கு ஒரு சம்பந்தம் இல்லை
கேவலம் ஆணை என்றது அவன் நாம கிரஹணம் பண்ணாமைக்கு என்று கருத்து –
அல்லது உறவில்லாத இவர்களை ஆணை ஈடாக கூடாது இ றே
——————————————————-
அநந்தரம் நிஸ் சர்க்கர்க்கு அல்லது அவன் ஸூலபனாகாத படியால் முன்பே அந்நிய வர்க்கத்தில் சங்க ராஹித்யம் சொன்னாளாய்
தன் லீலோ உபகரணங்களான ஸூக ஸாரிகாதி விஷயமான சங்க ராஹித்யத்தைச் சொல்லுகிறாள் –
இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே–4-2-8-
இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !–யான் வளர்த்துப் போந்த
கிளிகாள் பூவைகாள் குயில்கள் மயில்கள் உங்களுக்கு
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்- என் பக்கல் ஓர் அவகாசம் இல்லை –
நம்முடையதான நிறத்தையும் வளையையும் நெஞ்சையும் ஒன்றும் அவைசேஷிக்க ஒட்டாதே அபஹரித்துக் கொண்டவன்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை நணிய–எட்டாத படி போயிருக்கிற பரமபதமும் திருப் பாற் கடலும்
திருமலையுமாகிற ப்ராப்ய ஸ்தலங்களானவை கிட்டி அனுபவிக்கக் குறையில்லை
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே–இதர விஷயங்களில் சங்கங்களை ச வாசனமாக
விட்ட பின்பு அல்லது ப்ராப்ய பூதனானவன் அந்த போக ஸ்த்தானங்களை காணக் கொடான் –
———————————————————-
அநந்தரம் -வாமன வேஷத்தைக் காட்டி அநந்யார்ஹமாம் படி ஜகத்தை அளந்து கொண்ட சர்வேஸ்வரனுக்கு
என்னுடைய பூர்த்தியோடே லஜ்ஜையும் இழந்தேன் -இனி எத்தைக் கொடுப்பேன் -என்கிறாள் –
காண்கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-
காண்கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக் கை செயப் பாலதோர் மாயம் தன்னால்–எத்தனையேனும் அளவுடையார்க்கும்
ஸ்வ யத்தனத்தாலே தன்னை காணக் கொடுக்குமவன் அல்லனாய் வைத்து
ஆஸ்ரித அர்த்தமாக தன் வஞ்சகத்தால் கைத் தொழிலுக்கு அப்பாலாய் அத்விதீயமான
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த–ஸுந்தர்யத்தையுடைய அர்த்தியான வாமன வேஷத்தை காட்டி –
அனந்தரத்திலே பூமியும் ஊர்த்வ லோகமும் நிறையும்படி விஸ்திருதனாய்
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு என் நிறைவினோடு-ஓங்கி உஜ்ஜவலமான பல தோள்களும் தழைத்து இருக்கிற
ப்ரஹ்ம ருத்ராதி பதியான அவனுக்கு என்னுடைய ஸ்த்ரீத்வ பூர்த்தியோடே கூட
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–-லஜ்ஜையையும் கொடுத்தேன் –
என்னோடே உறவு உடையீர்களாய் உஜ்ஜவலமான நெற்றியையுடைய குறைவற்றவர்களே
ஸ்வரூப ஸ்வ பாவங்கள் இரண்டும் இழந்தேன் இனி எத்தைக் கொடுப்பேன் –
——————————————
அநந்தரம் மநோ ஹாரியாய் உத்துங்கமான வடிவழகை யுடைய அவன் திருவடிகளிலே என் நெஞ்சானது என்னை விட்டு பிரவேசித்தது –
நீங்கள் நியமிக்கிறதுக்கு எந்நாள் செய்யலாவது என் என்கிறார்
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-
என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி-எனக்கு பவ்யமாய்ப் போந்த நெஞ்சானது அவன் விஸ்லேஷித்துப் போன
உனக்கு கரணம் ஆவேன் அல்லேன் என்று கரணியான என்னை விட்டு அகன்று
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு–திருவாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
இரண்டு திருக் கைகளிலும் என்திக் கொண்டு பலவாய் பரந்து சூழ்ந்த சுடரை யுடைத்தானா ஆதித்யனோடே கூட
பால் மதி ஏந்தி யோர் கோல நீல நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-பால் போலே வெளுத்த நிறத்தை
யுடைய சந்திரனையும் தன் கொடு முடிகளில் ஏந்தி அத்விதீயமாய் தர்ச நீய ஆகாரமாய்
நீல நிறத்தை யுடைத்தாய் தாது வைச்சித்ர்யாதிகளால் யுண்டான வை லக்ஷண்யத்தை யுடைத்தாய் உத்துங்கமான மலை நடந்து வருவது ஒத்து –
ஆஸ்ரிதற்கு வந்து தோற்றுமவனுடைய அபி நவமான தாமரை போலே இருக்கிற திருவடிகளை அடைந்தது –
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வதென் -என்னோடு உறவுடையகோளாய் வைத்து என்னீடுபாடு அறியாதபடியாலே
அவயவ சோபையாலும் ஆத்மகுணத்தாலும் பூரணைகளாய் இருக்குமவர்களே
உங்களைப் போல் அன்றியே ஈடுபட்ட நான் அசஹாயையாம் படி நெஞ்சம் இழந்த பின்பு உங்கள் நியமனத்துக்கு எத்தைச் செய்கேன்
நெஞ்சுடையார் அன்றோ தரித்து இருப்பது என்று கருத்து –
——————————————–
அநந்தரம் இத்திருவாய் மொழியை இசையோடு அப்யஸிக்க வல்லவர்கள் உபய விபூதியிலும்
பகவத் அனுபவ பரிபூர்ணராய் இருப்பர் என்று பலத்தை அருளிச் செய்கிறார் –
பாதமடை வதன் பாசத்தாலே
மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-
பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு–திருவடியை பிராபிக்கையில் யுண்டான அபி நிவேசத்தாலே
இதர விஷயமாய் பிரபலமான பாசங்களை நேராக விட்டு -இப்படி இதர சங்கம் அறுகையாலே
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன-கோது அற்ற புகழையுடைய ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகள்
விஷயமாக தம்முடைய பாவ வ்ருத்தியைப் ப்ரபந்ததீ கரித்த பரம உதார குணத்தை யுடைய ஆழ்வார் அருளிச் செய்ததாய்
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்–கர்த்தாந்தர பிரஸ்தானம் ஆகிற தீது இன்றியே
அந்தாதியாய் அத்விதீயமான ஆயிரத்துள் கடலிலே முத்துப் பட்டால் போலே அத்விதீயமான
இவை பத்தையும் இசையோடு கூட அப்யஸிக்க வல்லவர்கள்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–அவித்யா கர்மா வாசனா ருசி பிரகிருதி சம்பந்த ரூப தோஷங்களில்
ஏதேனும் ஒரு தோஷம் இன்றியே இந்த விபூதியிலும் குண அனுபவ பூர்ணராய் அந்த விபூதியிலும்
அவாப்த ஸமஸ்த காமராய்க் கொண்டு அநந்ய அதீனராய்–சர்வ பிரகார பரிபூர்ணராவார்கள்
இது எண் சீர் ஆசிரிய விருத்தம்
—————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply