இப்படி எம்பெருமானைப் பிரிந்து வ்யசனப்படுகிற தமக்கு ஒரு துணை இன்றியே இருக்கிற படியை அருளிச் செய்கிறார் –
——————————————————-
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-
ஸ்வர்க்காதி லோகங்களிலும் இந்த லோகத்திலும் மற்றும் எங்கும் வர்த்திக்கிற தேவ தானவ ப்ரப்ருதி ஸமஸ்த ஆத்மாக்களும்
ஏவம் பூதன் என்று உன்னை உள்ளபடி அறியாதே ஸ்ரீ லஷ்மீ பூமி நீளா நாயகனாய்
சங்க சக்ர கதா தரனாய் பரம ப்ராப்யனாய் இருந்த உன்னைத் தங்களுக்கு ப்ராப்யமான ஷூத்ர ஐஸ்வர்யத்துக்கு உபாயம் என்பர் –
ஆதலால் எனக்கு அவர்க்க்ள் துணை அல்லர் -என்கிறார்
——————————————————-
சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-
இப்படி ஐஸ்வர்யாதிகள் துணை அல்லர் என்று அருளிச் செய்து கைவல்யார்த்திகளும் தமக்குத் துணை அல்லர் என்கிறார் –
ஐஸ்வர்ய உபாய விதாயக சாஸ்திரங்களை விட்டு மோக்ஷ உபாய விதாயகசாஸ்திரத்தை அவலம்பித்த நாமும்
அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்ய ரூப விசிஷ்டனாய் சங்கு சக்ர கதா தரனான பரம புருஷனை ஸூபாஸ்ரயமாக அநு சந்தித்து
ஜெயத்தைப் பண்ணி சம்சார நிவ்ருத்தி மாத்ரத்தை ப்ராப்யமாகப் பற்றினோம் அத்தனை இறே –
அவன் திருவடிகளை ப்ராப்யமாகப் பற்றிலோம் இறே –ஆதலால் நீங்களும் எனக்குத் துணை அல்லீர் என்கிறார் –
தம்மோடு அவர்களுக்கு யுண்டான ஐஸ்வர்ய வைராக்ய ரூப சமயத்தாலே கைவல்யார்த்திகளை அஸ்மச் சப்தத்தால் வ்யபதேசிக்கிறார் –
—————————————————
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-
தன் தனிமையினுடைய பிரசங்கத்தாலே அவன் தனிமையை நினைத்து அவன் தனிமைக்கு உதவப் பெற்றிலேன்
என்று சொல்லிக் கொண்டு தம்முடைய தனிமையைச் சொல்லுகிறார் –
மாரீச நிரசன அர்த்தமாக வாதல் –கர தூஷண நிரசன அர்த்தமாக வாதல் -எழுந்து அருளும் போது துணை இன்றியே
தன்னுடைய சங்க சக்ராதி திவ்ய ஆயுதங்களைத் தானே சுமந்து கொண்டு போகா நிற்கும் –
வாளும் வில்லும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை – தானே எழுந்து அருளும் போது அவனுடைய
திவ்யாயுதங்களைச் சுமந்து கொண்டு அவன் திருவடிகளையும் திருத் தோள்களையும் என்னுடைய கைகளினுடைய
விடாய் தீரும்படி தொழக் காணப் பெறு கிறிலேன் –
அவனைக் காண வேணும் என்று ஆசைப்பட்டு நாளும் நாளும் இந்த லோகமாகிற நாட்டிலே
தனியே கிடந்தது கூப்பிடா நின்றேன் என்கிறார் –
————————————–
ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–8-3-4-
ஒரு முற்றா உருவாய் அந்தப் பிள்ளைத் தனத்தால் சர்வ லோகங்களையும் அமுது செய்து பெரிய வெள்ளத்திலே
சிறியதோர் ஆலிலையில் யசோதை பிராட்டியைப் போலே இருப்பாள் ஒரு தாயாரும் இன்றியே
தனியே கண் வளர்ந்து அருளுகிற தசையில் துணையாய் இருக்கப் பெறாமையாலும்
வடிவு அழகைக் காண ஆசைப்பட்டுப் பெறாமையாலும்
அஹாயமான துக்க ஆர்ணவத்திலே நிமக்நனாய்க் கிடக்கிற எனக்கு ஒரு க்ஷணமானது
அந்தகாரமயமான யுகமாய்ச் செல்லுகிறது என்கிறார் –
—————————————————————————–
கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-
அந்த இழவு தீர வேணும் என்று ஆஸ்ரிதற்கு ஆத்மாதானம் பண்ணுகைக்குக் கொடி கட்டிக் கொண்டு இருக்கிற
திருக் கோளூரிலும் திருப் புளிங்குடியிலும் போய்ப் புக்க இடத்திலே தம்மைத் திருக் கண்ணாலே பார்த்து அருளுதல் –
ஒரு வார்த்தை அருளிச் செய்தல் -ஒரு திவ்ய சேஷ்டிதத்தைப் பண்ணுதல் செய்து அருளாதே
ஒரு படியே கண் வளரக் கண்டவாறே நீ ஒரு படியே கண் வளர்ந்து அருளுகிறது
ஆஸ்ரித விரோதி நிரசன ஜெனித ஸ்ரமத்தாலேயோ -அன்றிக்கே த்ரை லோக்ய விக்ரமண ஜெனித ஸ்ரமத்தாலேயோ
என்று கொண்டு இவனுக்கு ஒரு வியஸனம் யுண்டானதாக சங்கித்து வியசனப் படுகிறார்-
—————————————————-
பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-
ஸ்வ ஆஸ்ரித சதுர்முகாதி தேவர்களுக்கு ஸ்வ இதர சகல ஜன அபிவந்த்யத்வ நிரதிசய ஐஸ்வர்ய பிரதனாய்
சகல லோக துக்க நிரசன காரியமாக ஸ்வாத்ம விபூஷண சங்க சக்ராதி திவ்யாயுத தரனாய்
நிரதிசய ரமணீய நீல ரத்ன சத்ருசனாய் இருந்த அவனை
ஆசைப்பட்டுக் கிடீர் நான் இப்பாடு படுகிறது என்கிறார் –
—————————————–
வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-
நான் இப்பாட்டு படா நிற்கச் செய்தே அவன் எழுந்து அருளாது ஒழி கிறது என்னுடைய வ்யஸனம் அறியாமை என்று பார்த்து
ஸ்வ கார்ய அர்த்தமாகப் போகிறாரும் வருகிறாரும் திருப் பரிசாரத்து ஏறப் போகிறாராகவும் அங்கு நின்று வருகிறாராகவும் நிச்சயித்து
அவர்கள் திருப் பரிசாரத்திலே எனக்குத் தாயும் தந்தையாய் என்னைத் தேடிக் கொண்டு இருக்கிற என் திரு வாழ் மார்வற்கு
நிரதிசய தர்சநீய ஸூ தர்சன ஸங்காதி திவ்யாயுதங்களைச் சுமந்து கொண்டு இந்த லோகத்தில் தனியே எழுந்து அருளும் போது
சாயையைப் போலே திரிவான் ஓர் அடியானும் உளன் என்று என் திறம் சொல்லார் -செய்வது என் -என்கிறார் –
——————————————————–
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-
அவன் சர்வஞ்ஞன் அல்லனோ -அறிந்து அருளாமை யுண்டோ நினையாமை யல்லது என்று பார்த்து
என்னை உன் ஏரார் கோலத் திருவடிக் கீழ் நின்றே ஆட்செய்யும்படி நீ விஷயீ கரித்து அருள நினைப்பது தான் என்று -என்று
அபேக்ஷித்து பின்னையும் அபேக்ஷிதம் செய்து அருளாது ஒழிந்தவாறே
நான் ஒரு உபாய அனுஷ்டானம் பண்ணாமையால் ஆகாதே அபேக்ஷிதம் செய்து அருளாது ஒழிகிறது -என்று பார்த்து –
உன்னுடைய கிருபையால் நிர்ஹேதுகமாக சர்வ லோகத்தையும் அளந்து அருளினால் போலே
அடியேனுடைய அபேக்ஷிதம் செய்து அருளாய் என்கிறார்-
—————————————————————
திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-
ஆகிலும் என்னை உள்ளபடி அறிந்து ஏத்தினால் அல்லது உம்முடைய அபேக்ஷிதம் செய்யக் கடவது என் என்னில் –
திருமால் -எம்பெருமானாய் இருந்த உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை சர்வஞ்ஞரான ப்ரஹ்மாதிகள் தாம் அறிய வல்லரோ –
இவ்வர்த்தம் உபபோதயமோ -ஆனபின்பு அதி ஷூத் ரனான நான் அறிந்து ஏத்துகை யாவது என் என்ன –
அங்கனே யாகில் அத்விதீய பரம காரண பூதனே-
சங்கல்ப மாத்ரத்தாலே க்ருதத்ரேதாதி சகல யுபப்ரவர்த்தகனே-
பிராகிருத ஷூத்ர விஷய பிராவணனான என்னையும் கூட தோற்பித்து அடிமை யாக்கவல்ல
நிரவதிக ஸுந்தர்ய ஸுகுமார்ய லாவண்ய யவ்வனாதி அனந்த குண நிதியாய் –
நீல மேக சத்ருசமான திவ்ய ரூபத்தை யுடையவனே என்று சொல்லுவான் என் என்னில்
காதலால் கலக்குண்டு சொன்னேன் -நான் அறிந்து சொன்னேன் அல்லேன் -என்கிறார் –
—————————————————————
கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-
அவனை அறிந்து ஏத்தினீர் ஆனாலோ என்னில் அஸ்கலித ஞானராய் -நிரதிசய பக்தி யுக்தராய் பகவத் அனுபவ ஏக போகரான
அயர்வறும் அமரர்கள் அவனுடைய கல்யாண குண மஹா தயியினுடைய-இக்கரை கண்டார் –
பகவத் பரிசர்யை ஏக போகரான நித்ய சித்த புருஷர்கள் –
அவன் திருவடிகளிலே ஸ்துத் யாதி பரிசர்யை பண்ணுவார் –
அஷோ பயமஹோதயியை ஷூபிதமாம் படி கடைந்து அருளினவன் பரிசர்யை பண்ணப் படுகிறவன் –
இப்படி இருக்கிற அவனை நாம் உள்ளபடி அறிந்து புகழுகையாவது என் -ஆகில் நீர் புகழ்வான் என் என்னில் –
என் காதல் என்னைக் கலக்க நின்றால் நான் செய்வது என் –
ஆனபின்பு உன் கிருபையால் அடிமை கொண்டு அருள வேணும் என்கிறார் –
———————————————————————–
உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-
துர்வசமாய் காலாக்னி சத்ருசமாய் இருந்த விரஹ தாபத்தால் யுள்ள ஸந்தாபம் தவிர்க்கும்படி
நிரதிசய விஷயீ கார ஸூ சகமான காருண்ய மய சிரஸ் கம்ப நத்தாலே தம்மை விஷயீ கரித்த எம்பெருமானைச் சொன்ன
இத்திருவாய் மொழியை வல்லார் சம்சார மருகாந்தரத்தில் பிராவார் என்கிறார்
———————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply