அழகிய மணவாளச் சீயர் அன்போடு அருளிச் செய்த பன்னீராயிரப்படி –8-3-

மூன்றாம் திருவாய் மொழியில் -அவனுடைய நிஸ் சங்க ஸூலபதையை அனுசந்தித்து இதர சங்க நிவ்ருத்தி பூர்வகமாகத்
தாம் தத் விஷயத்திலே சக்தரான படியை அனுசந்தித்தவர் –
அவன் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக இந்த விபூதியில் தன் போக்யதையையும் ஸுகுமார்யத்தையும் பாராதே
ஆஸூர ப்ரப்ருதிகளும் அந்நிய பரருமான திரள்களுக்கு நடுவே அஸஹாயனாய் வந்து வர்த்திக்கிற இதுக்கு அஞ்சி
அவனுடைய அதிசயித போக்யதையையும்
விரோதி நிரசன உத்தியுக்தமான ஆயுதவத்தையும்
சஹாயாந்தர ராஹித்யத்தையும்
க்ஷண காலம் காணாது ஒழியிலும் கல்பமாம்படி அச்சத்தை விலைக்கும் படி ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஆயாச சஹம் அல்லாத ஸுகுமார்யத்தையும்
ரமணீய விக்ரஹணாய் வைத்து விரோதி நிரசன அர்த்தமாக வியாபாரிக்கும் படியையும்
கிஞ்சித்க்கார அனுகுணமாக ஸ்ரீ யபதித்வத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அறியவரிய ஆகாரத்தையும்
அத்யந்த விலக்ஷண புருஷரும் சேவிக்கும் படியான அதிசயித சக்தி யோகத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனானவன் தண் அழகையும் மார்த்வத்தையும் பாராதே ப்ரதிகூல பூயிஷ்டமான சம்சாரத்திலே
அஸஹாயனாய் வர்த்திக்கிற அளவிலே அடிமை செய்யப் பெற்றிலோம் என்று தளர்ந்தவர் –
அவன் தன்னுடைய ஆஸ்ரித ஸாமக்ர்யத்தையும் அதிசயித சக்தியையும் காட்டக் கண்டு
ஸமாஹிதராய் யுகந்து தலைக் கட்டுகிறார் –

——————————————————————–

முதல் பாட்டில் -உன்னுடைய நிரதிசய போக்யதையை அறியாதே உன் சக்தி யோகத்தயே சொல்லி
அனுகூல பிரதிகூல விபாகமற அபிமத சாதனம் என்னா நிற்பார்கள் என்கிறார்

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்–ஊர்த்வ லோகங்களிலும் பூமியிலும் பாதாளதிகளான ஸமஸ்த பிரதேசங்களிலும்
அனுகூலரான தேவர்களுக்கு பிரதிகூலரான அஸூரர்களும் தாதாவிதரான மனுஷ்யாதிகளும் எல்லாம்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி–அனுபாவ்ய மஹிஷ்யாதி விசிஷ்டனான உன்னை இவ்வித போக்யன் என்று
அறிய மாட்டாதே ரக்ஷகத்வ ஏகாந்தமான சர்வ சக்தி யோகாதிகளைச் சொல்லிக் கூப்பிட்டு
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்–புஷ்ப பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற ஸ்ரீ மஹா லஷ்மியும் –
கந்தவதி யாகையாலே போக்யத்தையே வடிவான பூமியும் –
அவ்வளவே அன்றியே ஆபி ஜாத்ய ஆட்க்ஹ்யக்யத்தை யுடைய நீளையும்
ஸுந்தர்ய ஸுகுமார்யாதிகளிலே அகப்பட்டு திரு மேனியை பிரியாமல் பொருந்தி அனுபவிக்கும்படியாய்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-அனுபாவ்யமான ஆழ்வார்களை திருக் கையிலே யுடையவனாய் இருக்கிற இவன்
போக்ய பூதன் என்று அனுபவியாதே -புருஷகார பூர்த்தியையும் யுடையவன் ஆகையால் அபீஷ்ட பல சாதன பூதன் என்னா நிற்பர்கள்
பிரதிகூலரான அஸூர வர்க்கத்தைப் பற்றவும் சேஷித்வம் சாதாரணம் ஆகையால்
ஸ்வ அபீஷ்ட சித்த்யர்த்தமான சரண்யாத்வம் உண்டு என்று கருத்து
ப்ரயோஜனாந்தர பரரானவர்களும் இவனுடைய ஸுந்தர்ய ஸுகுமார்யாதிகளை அனுசந்தித்துப்
பரிவராகப் பெற்றது இல்லை என்று வெறுத்தார் ஆயிற்று

—————————————————

அநந்தரம் விரோதி நிரசன பரிகாரவானானவனைக் கொண்டு கேவலம் ஜரா மரணாதி நிவ்ருத்தியைப்
பண்ணிக் கொள்ளுகிற கேவலரை சேஷத்வ சாதற்மயத்தாலே உடன்பட்டு நின்று ஷேபிக்கிறார்

சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-

சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே–த்ரை குண்ய புருஷர்களுக்கு புகலிடமாய் -ஐஸ்வர்ய தத் சாதன ப்ரதிபாதகமான
நாலு வகைப்பட்டதாய் இருக்கிற வேதங்களாகிற சாஸ்திரங்களை சாராதே –
மேல் எழத் தோன்றுகிற அர்த்தங்களை பிரதிபத்தி பண்ணப் பற்றாதே -நிஸ் த்ரை குண்யராய்க் கொண்டு முமுஷுக்களாய்
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி-அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–-பாதக உபகரணங்களை யுடைத்தாய்
பஹுவிதமான சத்ரு சேனைகள் பற்று அற ஓடும்படி தீப்தனாகிற திருவாழி ஆழ்வான் ஆகிற ஷேமங்கரமாய் ஸ்த்திரமான
திவ்ய ஆயுதத்தை யுடையனான சர்வேஸ்வரனுக்கு சேஷபூதராய் வைத்து-சேஷத்வ அநு ரூபமான அதிசயத்தை விளைத்துப் பரியாதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்–மரணம் ஜென்மம் பெரிய வியாதி ஜரை என்று சொல்லுகிற
ஷட்பாவ விகாரங்களை கழித்துக் கொண்டு விட்டோம் இத்தனை இறே
தத்தார்யம் ஸ்வரூபமாய் இருக்க ஸ்வார்த்த பரராகை அநு ரூபமோ என்று கருத்து

————————————————-

அநந்தரம் விரோதி பூயிஷ்டமான ஜகத்தில் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக ப்ரவ்ருத்தனான அவனுடைய
சஹாயாந்தர ராஹித்யத்தை அனுசந்தித்து நான் அடிமை செய்யும்படி காணப் பெறு கிறிலேன் என்று வெறுக்கிறார்

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

ஞாலத்து ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்–ராவண அஸூரா சமரான பிரதிகூலர் வர்த்திக்கிற ஜகத்திலே
பரிவராய் இருப்பார் ஆளும் வேணும் என்று அங்கீ கரிக்கிறிலர்-
அடுத்துப் பார்க்கப் பொறாத ஸுகுமார்யத்தை யுடைய தாம் திருவாழி யையும் திருச் சங்கையும் மலை எடுத்தால் போலே வஹிப்பர்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-அப்படியானால் நந்தகத்தையும் ஸ்ரீ சார்ங்கத்தையும் கொண்டு
இளைய பெருமாளைப் போலே பின் செல்லுகைக்கு வேறு ஒருவர் இல்லையாய் இரா நின்றது
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்-நான் பின் செல்ல வென்று நினைக்கிலும் திருவடிகளையும்
நிழல் செய்கிற திருத் தோள்களையும் என் கைகளைக் கொண்டு பூர்ணமாக தொழுது
அடிமை செய்கைக்கு என் கண்ணாலே காணப் பெறுகிறிலேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–சேஷத்வமே ஸ்வரூபமான நான் சேஷிக்கு அதிசய ஜனகமான
சேஷ விருத்தியே ஜீவனம் ஆகையால் பசியர் சோறு தேடுமா போலே நாள் தோறும் தேடா நின்றேன்

———————————————————-

அநந்தரம் அஸஹாயனான வடதள சாயியினுடைய ஆபி ரூப்யத்துக்கு என்ன பிரமாதம்
வருகிறதோ என்று அஞ்சிக் கலங்கின பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–8-3-4-

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி-ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே-அத்விதீயமாய் -அதி முக்தமான வடிவை
யுடையையாய் மஹா ஜகத்தை போஜனமாக அமுது செய்து -இடம் வலம் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற ஸ்வாமியானவனே –
அந்த பிரளயத்தில் என்ன பிரமாதம் வருகிறதோ என்று
காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன் கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–காளமேகத்தின் எழிலை யுடைத்தான
உன் வடிவு அழகை காண வேணும் என்று நிர்ப்பந்தித்து அச்சத்தால் ஆழம் கால் படும்படியான கொடிய பாபத்தை யுடைய
எனக்கு ஒரு க்ஷணத்தில் நின்றும் க்ஷனாந்தரத்திலே பேருகிற கால அவகாசமானது
அத்விதீயமான அந்தகாரத்தை யுடைத்தான கல்பம் போலே ஆகா நின்றது
உன்னுடைய அகடிதகடநா சாமர்த்தியமான சக்தி யோகமும் சர்வ ரக்ஷகத்வ பூர்த்தியும் அச்சத்துக்கு உறுப்பாம் என்று கருத்து –

—————————————————————–

அநந்தரம் திருக் கோளூரிலும் திருப் புளிங்குடியிலும் முசியாதே கண் வளர்ந்து அருளுகிறது
ஆஸ்ரித விரோதி நிவர்த்தனத்தாலும் த்ரி விக்ரம அபதானத்தாலும் வந்த ஆயாசமோ -என்கிறார்

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்–விரோதிகளும் அறியலாம்படி கொடிகள் செறிந்த மாடத்தை யுடைய
திருக் கோளூர்க்கு உள்ளும் -பல இடத்தில் படுக்கை படுத்தது அலைச்சலின் மிகுதி என்று சங்கிக்கலாம் படி திருப் புளிங்குடியிலும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்–மீளாதே ஒருபடிப்பட இப்படி கண் வளர்ந்து அருளினவத்தாலே நீ
உகப்புப் பிறந்து இருக்கிற இது –
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ -ஆஸ்ரிதர் விரோதிகளான ராவணாதிகளை நிரசித்தும் –
அவர்கள் துக்கத்தைப் போக்கினை அலைச்சலாலேயோ
அன்றேலிப்படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–அது அல்லவாகில் இந்த பூமியை ஒரு நாளே வளர்ந்து அளந்து கொண்ட ஆயாசமோ –
உன் திரு மிடற்றோசையிலே வாசியால் நான் உன் ஆயாசத்தின் மிகுதி அறிகைக்காகவும்
நொந்த இடம் அறிகைக்காகவும் அருளிச் செய்ய வேணும்
அளந்த திருவடியைப் பிடித்தல் -எய்த்த திருத் தோளைப் பிடித்தல் செய்கையில் இவருக்கு கருத்து

——————————————————————

அநந்தரம் நித்ய ஸூரி களுக்கு அனுபாவ்யமான நிரதிசய போக்ய விக்ரஹத்தோடே பிரதிகூல பூயிஷ்டமான
இஜ் ஜகத்தில் என்னாகிறதோ என்று என் நெஞ்சு கலங்கும்படி வாரா நின்றார் என்கிறார்

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்-ஓர் அவஸ்தையிலும் உபாதி அடியாகவாகிலும் வேறு ஒருவர் காலில்
பணிய வேண்டாதபடி அநந்ய அதிபதிகளாக நித்ய ஸூரிகளுடைய ஸ்வரூப ப்ரயுக்தமாய்
ஸ்வாபாவிகமான பணிவுக்கும் அவர்கள் ஞான பிரேமாதி ஸ்வ பாவங்களுக்கும் தாமே விஷயமாய்க் கொண்டு
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்–திரு ஆபரண ரூபமான போக்யதையை யுடைய திருவாழியையும் திருச் சங்கையும் –
அவர்களுக்கு அநு பாவ்யமாம்படி ஏந்தி இருக்கும் அவர் கிடீர் -அப்பரிவர் இருக்கச் செய்தே லோகத்தில்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல-ஒரு காலும் தணியாமல் கடக்கக் கடவதாய் அதிசயித பரிதாப ஹேதுவான
அவித்யா கர்ம ருசி ப்ரக்ருதி சம்பந்த ரூப வியாதிகளை களைக்கைக்காக-
அந்த நித்ய ஸூ ரிகளுக்கு நித்ய அநு பாவ்யமாய் நிரதிசய ஸுந்தர்ய ஸுகுமார்யாதி சம்பத்தை யுடைத்தான நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–ரத்னம் போலே இருக்கிற திருமேனியோடே கூட
இவ்வடிவு அழகுக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று எண் மனஸ்ஸானது பிரமிக்கும்படி சம்சாரத்தில் வருவர்

—————————————————————–

அநந்தரம் கிஞ்சித் கரிக்கைக்குப் பிராட்டியோடே திருப் பரிசாரத்திலே இருக்கிறவர்க்கு உமக்குப் பரிவனாய்
இருப்பான் ஒரு கிங்கரன் உண்டு என்று ஒருவரும் சொல்லு கிறிலர் என்று வெறுக்கிறார்

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்-அங்கு நின்றும் வருவார் இங்கு நின்றும் செல்லுவாராகிற அவர்கள்
விலக்ஷண சம்பத்தை யுடைத்தான திருப் பரிசாரத்திலே என்னை அடிமை கொள்ளுகைக்கு ஈடாக எழுந்து அருளி இருக்கிற
திரு வாழ் மார்வற்கு உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு– ஸ்ரீ மானுக்கு வடிவு அழகால் பொருத்தமான
திருவாழியையும் திருச் சங்கையும் தரித்துக் கொண்டு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே -இந்த விபூதியில் உம்மோடே கூட பார்ஸ்வ வர்த்தியாய்க் கொண்டு திரிவான்
அத்விதீயனாய் இருப்பான் ஒரு அடியானும் உளன் என்று
என் திறம் சொல்லார் செய்வதென்-என் இடையாட்டம் சொல்லுகிறிலர்கள் – வருகிறவர்கள் தம்மை அழைத்து வாராமையாலும்
போகிறவர்கள் ஒரு மறு மாற்றம் கேளாமையாலும்
இவர்கள் வரத்தும் போக்கும் தமக்காக வென்று நினைத்துச் சொல்லுகிறிலீர் என்கிறார்
இவர்கள் சொல்லாத அளவில் அவர் அறிந்து அங்கீ கரிக்கைக்கு செய்யலாவது என் என்று வெறுக்கிறார் –

——————————————————–

அநந்தரம் அகில வஸ்து சம்ச்லேஷ ஸ்வ பாவனான நீ உன் திருவடிகளிலே நான்
அடிமை செய்யும்படி அங்கீ கரிப்பது என்று என்கிறார்

என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-

குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-சப்த குல பர்வதங்களையும் –
சப்த த்வீபங்களையும் சூழ்ந்த அவ்வோ சமுத்ரங்களையும் பூமியாதியான சப்த லோகங்களையும் முழுக்க
நின்ற நிலையிலே நின்று கவடடித்துக் கொண்ட நெடிய திருவடிகளை யுடையனாய் –
அந்த சேஷித்வ ஸூ சகமான திருவாழியை யுடையனாய் ஸ்ரீ யபதியானவனே
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்–உனக்கு சேஷ பூதனாய் பரிவனாய்
இருக்கிற என்னை ஸூ குமாரனாய் போக்ய பூதனான உன்னுடைய அழகு விஞ்சின திரு ஆபரண சோபையையும் யுடைத்தாய் –
ஸ்வாபாவிக ஸுந்தர்ய விசிஷ்டமான திருவடிகளின் கீழே -ஒரு காலும் பிரியாதே நின்று
உன்னுடைய ஸ்ரீ யபதித்தவ ஸுகுமார்யாதிகளுக்கு ஈடாக மங்களா சாசனம் பண்ணி அடிமை செய்வேனாம் படி
நீ கொண்டு அருளி உன் திரு உள்ளத்தால் அங்கீ கரித்து இது முழுக்க நிர்வகிப்பதாக நினைத்து அருளுவது தான் என்றாய் இருக்கிறது –
கொண்டு அருள நினைப்பது என்றும் சொல்லுவர்
என்றெல் -என்றதில் எல் அசை

———————————————

அநந்தரம் அதிசயித ஞானரான ப்ரஹ்மாதிகளும் உன் ஸுகுமார்யம் அறியாமையால்
என் ப்ரேமம் கலக்க நான் பரிவனாய்க் கூப்பிடா நின்றேன் என்கிறார் –

திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் –பெரிய பிராட்டியார்க்கு வல்லவனான வை லக்ஷண்யத்தை யுடையவனே –
ஸ்ருஷ்டியில் பஹு முக வ்யாபாரனான ப்ரஹ்மாவும் -தபஸ் பேரனான ருத்ரனும் என்று ப்ரசித்தரரான இவர்கள்
எம் பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் –எனக்கு ஸ்வாமியாய் -சர்வாதிகனான உன்னுடைய ஸுந்தர்ய ஸுகுமார்யாதியான
ஸ்வா பாவிக வை லக்ஷண்யத்தை அறிய வல்லார் ஆர் தான்
என் காதல் கலக்கவே-ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை கருமா மேனியன் என்பன் -பேசியென்-என்னுடைய ப்ரேமமானது
நெஞ்சைக் கலக்க -அத்விதீயமான பரம காரண பூதனே –
ஸ்ருஷ்டமான ஆத்மாக்களுக்கு கால அநு ரூபமாக உபகாரகனானவனே
என்னை அடிமை கொண்ட ஸ்யாமளமான விலக்ஷண விக்ரஹ யுக்தனே என்று சொல்லா நிற்பன்-
உன் ஸுகுமார்யத்தைப் பாராதே -மாதுர்யமே என்று பிராட்டி அஞ்சும்படி ஜகத் பாலனத்தைப் பண்ணுவது
உத்பன்னமான சேதனர்க்கு ஆபத்துத் தோற்றும் காலம் தோறும் உபகாரகனாய் வ்யாபரிப்பது
என் போல்வாரை அங்கீ கரிக்கைக்காக அழகிய வடிவைக் கொண்டு வருவதாகப் புக்கவாறே
உன்னுடைய ஸுகுமார்யத்துக்கு அஞ்சா நின்றேன் –
அவாக் மனஸ் அகோசாரமான இந்த ஸுகுமார்யத்துக்கு என்ன பாசுரம் இட்டுச் சொல்லுவது –

—————————————————-

அநந்தரம் முமுஷுக்களோடு முக்தர்களோடு நித்ய ஸூரி களோடு வாசியற நமக்குத் பரிவராய் இருக்க
நாம் சக்திமான்களாய் இருக்க
நீர் அஞ்ச வேண்டா என்ன –
ஆஸ்ரித ஜன சாமர்த்யத்தையும் அதிசயித சக்தி யோகத்தையும் அனுசந்தித்து ஸமாஹிதர் ஆகிறார் –

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர் துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்–சதா பகவத் போக நிஷ்டராகையாலே
சாம்சாரிக ஸ்வ பாவங்கள் ஆகிற கலக்கம் அற்ற ஞான ரூப தபஸ்ஸை யுடைய சனகாதி முனிகள் –
சம்சார அத்வாவைக் கரை கண்ட முக்தர் –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராகையாலே ஒருகாலும் கலக்கம் அற்ற நித்ய ஸூரீகள்-
எல்லாரும் பரிவராய்க் கொண்டு தொழுது மங்களா சாசனம் பண்ணுவர்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை–அபரிச்சின்னமான சமுத்திரத்தை கலங்கும்படி கடைந்த சர்வ சக்தி யுக்தனை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–நாம் முடியக் கண்டு புகழ வல்லோம் ஆகை யாகிற இது
என் செய்ததாய் ஆயிற்று -சொல்லி கோள் என்று லௌகீகரைப் பார்த்துச் சொன்னார் ஆயிற்று –

————————————————————

அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு பலமாக சம்சார நிவ்ருத்தியை அருளிச் செய்கிறார் –

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை–வாசா மகோசரமாம் படி ஸுகுமார்யாதிகளுக்கு என்ன வருகிறதோ என்று
அதி சங்கையைப் பிறப்பித்து பரிதாப ஹேதுவான கலக்கமாகிற நோயானது தீரும்படியாக
தன்னுடைய விபூதி பூர்த்தியையும் சக்தி பூர்த்தியையும் காட்டின சர்வாதிகா சேஷியானவனை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்-வரை செறிந்தால் போலே இருக்கிற மாடங்கள் ஸ்த்திரமாம் படியாய் இருக்கிற
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாருடைய
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்-யுக்தி பிரகாரமாய் செறிந்த சொல் தொடையை யுடைத்தாய்
அத்விதீயமான ஆயிரத்துள் இப்பத்தையும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே-அடைவுபட சொல்ல வல்லவர்கள் விஸ்தீர்ணமாய் பகவத் விஷயத்துக்குப்
பரிவார் இல்லாத இஸ் சம்சாரத்திலே பிறவார்
இது கலித்துறை –

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: