எட்டாம் பத்தில் -இப்படி -ஏழாம் பத்திலே –
உபாய நிவர்த்யமான விரோதி ப்ராபல்யத்தை அனுசந்தித்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தை இப்பத்திலே அனுசந்திப்பதாக –
விரோதி நிவர்த்தகனுடைய ஆஸ்ரித ஆகாங்ஷ அதீன சாந்நித்யத்தையும்
ஸ்வ விஷயத்தில் சங்கம் யுண்டே யாகிலும் இதர சங்கம் அற்றார்க்கு அல்லது ஸூலபன் அல்லன் என்னும் அத்தையும்
ஸ்வ ஆஸ்ரித ஜன விஸ்லேஷத்தில் தான் அஸஹாயன் என்னும் படியான ப்ரேம ஜனகத்வத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் அத்யந்த துர் மோசமான விரோதிகளைப் போக்கி அவர்கள் சம்பத்தே சம்பத்தாய் இருக்கும் ஆகாரத்தையும்
ப்ராப்ய பூதனான தன் பக்கலிலே ப்ராவண்யம் யுண்டானால் பிரதிபந்தகம் தன்னடையே கழலும் என்னும் இடத்தையும்
ஆஸ்ரித விரோதியைப் போக்குகைக்கு ஆசன்னமாய் இருக்கும் இருப்பையும்
அந்தஸ்த்திதனாய்க் கொண்டு அசேஷ விரோதி நிவர்த்தகனாம் படியையும்
அப்ருதக் ஸித்தமான ஆத்ம ஸூத்தீயை பிரகாசிப்பித்து உபாதி அடியாக தோஷத்தினுடைய அதி பூரி கரணத்தையும்
அபாஸ்த தோஷனான அதிகாரியை அதிசயித தாஸ்ய அம்ருதத்திலே மக்நனாக்கும் படியையும்
ஸ்வ தாஸ்யத்திலும் அதிகமான ஸ்வ கீரை தாஸ்ய போகத்தை பிரகாசிக்கும் படி தத் விரோதி நிவர்த்தன பிரகாரத்தையும்
அருளிச் செய்து –
பூர்வ நிரூபிதமான விரோதியினுடைய நிவ்ருத்தி கிரமத்தை உபபாதித்து அருளுகிறார் –
இதில் -முதல் திருவாய் மொழியில்
அடிமை செய்யப் பாரித்த அர்ச்சாவதார ஸ்தலத்தில் ஆசானுரூபமான அபிமதம் சித்தியாமையாலே ஆர்த்தராய்
மிகவும் பகவத் அனுபவ ஆகாங்ஷை நடக்க -அந்த ஆகாங்ஷைக்கு ஹேதுவான
அனவதிக விபூதி பூர்த்தியையும்
அந்த விபூதி ரக்ஷண அர்த்தமா அவதாரங்களினுடைய அதிசயித போக்யதையையும்
ஆஸ்ரித பவ்யதா விசிஷ்டமான அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
ஆஸ்ரித அநாஸ் ரித விபாகேந யுண்டான அனுகூல பிரதிகூல ரூபத்தையும்
அசேஷ பிரகார ரக்ஷகத்வத்தையும்
அகிலாத்ம பாவத்தையும்
அசேஷ பிரகார போக்யதையையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான ஷீரார்ணவ ஸாயித்த்வத்தையும்
அதிசயித புருஷார்த்தமான ப்ராப்ய தேச வர்த்தித்தவத்தையும்
ஆசானுரூப உபகாரத்தால் வந்த அத்யந்த மஹத்தையையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான சர்வேஸ்வரன் தம்முடைய ஆகாங்ஷ அநுரூபமாக முகம் காட்டி
ஆஸ்வசிப்பித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்
—————————————————
முதல் பாட்டில் நிரவதிக விபூதி யுக்தனாய் – விஸ்லேஷத்தில் தரியாத படி பண்ணும்
போக்யதையை யுடைய உன்னை நான் காணும் படி இரங்க வேணும் -என்கிறார் –
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்–உன் அழகுக்கும் பெருமைக்கும் தகுதியான தேவிமாராவார் – –
உனக்கு நிரதிசய சம்பத் ரூபையான ஸ்ரீ லஷ்மியும் -ஸமஸ்த விபூத்ய அபிமானியான பூமியும் –
அதுக்கும் மேலே பின்னையும் இவர்களோடு கூட இருக்கிற நீ ஏவ -நியோயிக்க கைங்கர்யம் பண்ணுவார்கள் நித்ய ஸூரிகள்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்–உன்னோடு அப்ருதக் சித்தமாம்படி பொருந்திய
பிரதான புருஷ காலாத்மகமான த்ரை வித்யத்தை யுடைய லோகங்கள் ஆஜ்ஞானு விதாயிகள் –
அவற்றினுடைய ரக்ஷண அர்த்தமாக தத் தத் அவஸ்த உசிதமாயும்–ஸ்வ அபிமதமுமாயுமாய்
இருக்கிற ரூபங்கள் உனக்கு அசாதாரண ரூபங்கள்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே–இந்த உபய விபூதி நிர்வஹணத்தைக் காட்டின அளவன்றியே –
இவ்வாகாரத்தை அனுபவிக்கப் பெறாத பாபத்தை யுடைய என்னை முடிப்பாரைப் போலே நலிகிற –
நிரதிசய போக்யமான தாமரை போன்ற திருக் கண்ணும் அத்விதீயமான பவளம் போன்ற திரு அதர சோபையையும் யுடைத்தான-
நீல ரத்னம் போலே தர்ச நீயனாய்
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–வ்யதிரேகத்தில் தரிக்க ஒண்ணாத படி பிராண பூதனாய் –
அவ்வளவு அன்றியே அழிந்த சத்தியை யுண்டாக்கும் அனவரத போக்யமான அம்ருதமாய் –
அர்வாசீ நாம்ருதத்தில் அபேக்ஷை யுடையார்களுக்கும் யரும் தொழில் செய்து கொடுக்கும் அதிசயித உபகாரகனானவனே –
அப்படி ஆயாசிக்க வேண்டாத படி கண்டு அனுபவிக்கும் படியாக கிருபை பண்ணி அருள வேணும்
—————————————————
அநந்தரம் -வேண்டு வேண்டுருவம் நின்னுருவம் என்று சொன்ன திரு அவதார விக்ரஹ போக்யதையை
அனுசந்தித்து நான் கிலேசியாதபடி கண்டு அனுபவிக்கும் படி கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார் –
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்–காணும்படி கிருபை பண்ண வேணும் என்று
பல காலும் சொல்லி -காணப் பெறாமையாலே கலங்கி -கண்ணினுடைய நீர் பரவா நிற்க –
காணப் பெறாத பாபத்தை யுடையேனான நான்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ–உன்னை ஆசைப்பட்டு நீ ஆதரியாத அளவிலே –
ஆத்மாத்மீயங்களை இழந்தும்–பல காலம் சரணம் புக்கும் –மோஹித்தும் -இப்படி ஆதரிக்கும் பிரகாரம் எல்லாம் ஆதரித்து –
அவ்வளவிலும் கிடையாமையாலே உன் திரு நாமங்களையே சொல்லிக் கூப்பிடும்படியாக இறே எனக்குப் பண்ணின அருள் –
ஐயோ -ஆசா லேசமுடையாரும் அநவரதம் அனுபவிக்க எனக்கு இப்படி பலித்தது -ஆனபின்பு
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !-ககுத்ஸ்த்த வம்சத்தில் பிறந்து காட்டோடு நாட்டோடு
வாசியறக் காட்சி கொடுக்குமவனாய் –
ஸ்ரீ கிருஷ்ணனாய் திரு அவதரித்து பெண் பிறந்தார் எல்லாரும் கண்டு அனுபவிக்கும்படி எளியனாய் –
இவ்வளவும் அன்றிக்கே சபலனான எனக்கு நீ டீகாஙே உன்னை பிரகாசிப்பித்த உதார குணத்தை யுடையையாய் –
அப்போதே நுகர வேண்டும்படி பக்குவ பல பூதனாய்
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–ஆசையுடையாருக்கு சத்தா ஹேதுவான நித்ய போக்யமாய்
அபர்யந்தமாய் சீதளமான ஜலத்திலே அழுந்தின மஹா பிருத்வியை எடுத்த மஹா புருஷனே –
முழுகவும் மீட்க்கவும் வேண்டா -நான் கண்டு அனுபவிக்கும்படி கிருபை பண்ணி அருள வேணும் –
————————————————–
அநந்தரம் ஆஸ்ரித பவ்யனாய்க் கொண்டு அநிஷ்டத்தை நிவர்த்திப்பிக்கும் நீ என் அவஸ்தா அனுரூபமாக
வாராத அளவில் உன்னைப் பற்றினவர்கள் எங்கனே விஸ்வசிப்பர்-என்கிறார் –
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு–தரித்ரன் மஹா நிதியை எடுத்தால் போலே
உன்னை எடுத்துக் கொண்ட பெரியவனான நந்த கோபனுக்கு நிரதிசய போக்யமான பிராணனாய்க் கொண்டு
பவ்யனாய் அத்யந்த சைசைவத்தை யுடையனாய் -தேவகியார் பிரிந்து இருக்க யசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !-வந்து கிட்டின தொல்லை இன்பத்து இறுதி என்கிறபடியே
நிரதிசய ஆனந்தாவஹனாய் -அக் குலத்துக்கு ஆனைக் கன்று போலே செருக்கனாய் வர்த்திப்பானாய் –
தாயும் தமப்பனுமாக நினைத்து இராதே அடியேனான எனக்கு உன் பெருமை எல்லாம் காட்டி எட்டாது இருக்கும் ஸ்வாமியாய்
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !–பிரபலமாய் யுத்த கண்டூதி விஞ்சி இருக்கிற
ஹிரண்யாசூரனுடைய சரீரம் இரண்டு பிளப்பாம் படி கையிலே உகிரை பரிகரமாக வுடையையாய்
இப்படி ஆஸ்ரித விஷய வாத்சல்யத்துக்கு ஜலதயியானவனே
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–நீ அன்று போலே இன்றும் அனுரூபமான
வடிவைக் கொண்டு வருகிறிலை
ஒரு விஷயத்தில் உதவாது இருந்தால் உன்னைத் தஞ்சம் என்று இருப்பர் எங்கனே விஸ்வசிப்பர்
ஒன்றோடு ஓன்று எடுத்த ரூபம் என்று நரஸிம்ஹ ரூபமாகவுமாம்
———————————————————————-
அநந்தரம் ஆஸ்ரித அநாஸ்ரித விஷயங்களில் அனுகூலனுமாய் பிரதிகூலனுமாய் இருக்கையாலே
உன்னுடைய ரூப குண சேஷ்டிதங்கள் ஆஸ்ரித அதீனம் என்று நினைக்கிற அறிவு
சங்க நீயமாகா நின்றது என்கிறார் –
உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே–தூத்யாதி முகத்தால் லோக பிரசித்தமான யுத்தத்தை
உண்டாக்கி விஸ்தீர்ணையான பூமியினுடைய பரிசரம் எங்கும் சூழ்ந்து இருப்பதாய் –
கொலையில் உத்யுக்தையான சேனையை நிஸ் சேஷமாக நசிப்பித்த ஸ்வாமியாய்
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–பூமியின் அளவன்றியே –
அனுகூலரான தேவர்களுக்கு அதிசயித போக்யமாய் –
பிரதிகூலரான அஸூரர்களுக்கு பிராண விநாச ஹேதுவான நஞ்சாய்
உபய ஆகாரத்தாலும் -எனக்கு தாரகனானவனே
உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான-இவர் –உனக்கு அசாதாரண சேஷ பூதரானவர்கள்
எப்போதும் உகந்த ரூபமே உனக்கு ரூபமாய் உன் தனக்கு அவ்வடிவிலே அன்பை யுடையரானவர்கள்
உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் –வினையேன்-ஆதரித்து அநந்ய பிரயோஜனமாக
அடிமை செய்கைக்கு ஈடாய் இருக்கிற உன்னுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை அறியும் இது
ஒன்றையும் அகப்பட சங்கியா நிற்பன்
தஞ்சமாக நினைத்து இருக்கும் அர்த்தத்தில் சங்கை பிறக்கும்படியான பாபத்தை யுடைய நான்
ஓ என்று தம் இழவு தோன்ற அருளிச் செய்கிறார் –
—————————————————–
அநந்தரம் சர்வ பிரகார ரக்ஷகனான உன்னை நான் ரத்னம் பண்ணிக் காண்பது எங்கே -என்கிறார்
ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-
ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த–தாரகமான பிராணாதிகளுக்கு தாரகனாகையாலே –
பரிபூர்ண பிராண பூதனாய் விஸ்தீர்ணமான ஜகத்தை எல்லாம் ஸ்ருஷ்டித்து -பிரளயத்தில் அழியாமல் இடந்து எடுத்து –
திரு வயிற்றிலே வைத்து நோக்கி -வெளி நாடு காட்டி உமிழ்ந்து அந்நிய அபிமானம் அறும்படி அளந்து கொண்ட
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த–சர்வாதிகா சேஷியாய் -ஜகத்தை உஜ்ஜீவிப்பிக்கைக்காக
மஹா ஜலமான ஏகார்ணவத்தை ஸ்ருஷ்டித்து அங்கே கண் வளர்ந்து அருளி –
தத் கார்யமான ஷீரார்ணவத்தை கடைந்து -தத் சஜாதீயமான கடலை அடைத்து
சம்சாரிகளுக்கு தீர்த்த ஹேது வாம்படி தனுஷ்கோடியாலே உடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !–ஆஸ்ரித ரக்ஷணத்தில் ஆத்மாவோ பாதி சீரியனாய்
மனுஷ்யாதிகளுக்கு தேவர்கள் உத்தேச்யரானவோ பாதி தேவர்களுக்கும் உத்தேச்யதயா ஆஸ்ரயணீயனாய்
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–பிராண கம்யமான சகல பதார்த்தங்களை எல்லாம்
ஏகாத்ம வானவன் -சரீரத்துக்கு ஆத்மாவைப் போலே தாரகனுமாய் சேஷியுமாய் பரிவனுமாய் -உத்தேச்யனுமாய் –
அவ்வாத்மாக்களைப் போலே ஸ்வரூப பேதம் இல்லாதபடி சகல சேதன அசேதனங்களுக்கும் ஏக ஆத்மாவான உன்னை ஒழிய
த்வத் ஏக தார்யனுமாய்-த்வத் ஏக சேஷ பூதனுமாய் த்வத் ஏக ரஷ்யனுமாய் த்வத் ஏக ஆஸ்ரயனுமாய்
த்வத் ஏக நியாம்யனுமாய் இருக்கிற நான் எங்கே வந்து கிட்டுவேன்
ஸ்வ தந்த்ரனான உன்னுடைய யத்னம் பல பர்யந்தமாம் அது ஒழிய சர்வ பிரகார பரதந்த்ரனான நான்
யத்னம் பண்ணிக் கிட்டுவது ஓன்று உண்டோ என்று
பிரதிபதம் ஓ என்றது அத்தலை இத்தலை யாவதே -என்கிற வெறுப்பைக் காட்டுகிறது –
————————————————-
அநந்தரம் கார்ய காரண அவஸ்த சகல பதார்த்தங்களும் நீ இட்ட வழக்காம் படி
சர்வாத்மகனாகையாலே எங்கே வந்து கிட்டுவது என்கிறார்
எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-
என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே-இவ்வளவும் வர என்னை நிர்வஹித்தவனே –
சாதன அனுஷ்டானம் பண்ணுவாருக்கு அனுஷ்டான ஸ்தலமாயும் ப்ராப்யமாயும் உள்ள ஸமஸ்த லோகங்களும் நீ இட்ட வழக்கு –
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே-அந்த லோகங்களில் பாலார்த்திகளான ஆராதனர்க்கு
பல பிரதமாகவும் ஆராத்யமாகவும் சமைத்து வைத்த தேவர்களும் நீ இட்ட வழக்கு –
அர்த்திவான்கள் விஷயமாக ஆராதன ரூபமான அவ்வோ கர்மங்களும் நீ இட்ட வழக்கு
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்–இந்த லோகங்களில் காட்டில் விஞ்சி
புறம்பான மகாதாதி ஸமஸ்த பதார்த்தங்கள் பிராமண பிரசித்தமாய் தோன்றின யுண்டாகிலும் அவையும் நீ இட்ட வழக்கு
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—ஸம்ஹ்ருத்ய அவஸ்தமாய் நாம ரூப ரஹிதமான
ஸூஷ்ம சித் அசித்தும் நீ இட்ட வழக்காய் இருக்கும் –
பரம ஆகாசத்தில் அதீந்திரியமான முக்தாத்ம வர்க்கமும் நீ இட்ட வழக்காய் இருக்கும்
எங்கு வந்துறுகோ -இப்படி சர்வாத்ம பூதனாகையாலே த்வத் ஏக நிர்வாஹ்யனான நான்
யத்னம் பண்ணி உன்னை எங்கே வந்து கிட்டுவேன்-
————————————————————————-
அநந்தரம் சர்வ பிரகார போக்ய பூதனான நீ கால உபாதிகமாயும் தேச உபாதிகமாயும் யுள்ள ஸமஸ்த பதார்த்தங்களையும்
பிரகாரமாக யுடையையாய் இருப்புதி என்கிற இத்தத்துவ ஞானத்தையும்
சங்கிக்கும்படி பண்ணா நின்றது -உன்னைக் கிட்டப் பெறாத இழவு என்கிறார்
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !–கறந்த போதே ஸ்வா பாவிக ரசத்தை யுடைத்தான பாலாய்-
அதில் சாராம்ஸ்யமான நெய்யாய் -நெய்யினுடைய இனிய ரசமாய் –
இப்படி லௌகிக போக்யம் அன்றியே திவ்ய போக்யமாம் படி கடலிலே பிறந்த அம்ருதமாய்
அமுதிற் பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே –அந்த அம்ருதத்திலே உத்பன்னமாய் லோகோத்தரமான இனிமையாய் –
அவ்வினிமையால் பிறந்த பிரயோஜனமாக ஸூ கமாய் –
பின்னை தோள் மணந்த பேராயா !–இப்படி பிராகிருத போக்யமாம் அளவன்றியே அநந்ய பிரயோஜனர்க்கு
அதிசயித போக்ய பூதனாம்படி நப்பின்னைப் பிராட்டி திருத் தோளோடு ஸம்ஸ்லேஷித்த மஹா ப்ரபாவனான ஸ்ரீ கிருஷ்ணனே
வினையேன்-உன்னுடைய நிரதிசய போக்யதையை அனுபவிக்கப் பெறாத பாபத்தை யுடைய நான்
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்–பூத பவிஷ்யத்வர்த்தமாக கால உபலஷித சகல பதார்த்தங்களும்
தனித்தனியே நீ இட்ட வழக்கு -இப்படியான பின்பு
சிறந்த நின் தன்மை சங்கிப்பன் –தூரஸ்தமாயும் ஸந்நிஹிதமாயும்-அதூர விப்ரக்ருஷ்டமாயுமுள்ள தேஜோ உப லஷித
சகல பதார்த்தங்களும் விலக்ஷணமான உன்னுடைய ஸ்வ பாவங்கள் என்று அறிகிற
இத்தத்துவ ஞானம் ஒன்றையும் அகப்பட குலைய புகுகிறதோ என்று சங்கியா நிற்பன்
——————————————————
அநந்தரம் -ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமாகவும் விரோதி நிரசன அர்த்தமாகவும் திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற நீ
வழக்காம் படி என் கரணங்களும் கரணியான நானும் உனக்கு பிரகாரமான பின்பு
நான் வணங்குவன் என்ற ஒரு பிரகாரம் அறிகிறிலேன் என்கிறார் –
மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-
மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற–ஆச்சார்ய சேஷ்டிதங்களாலே அகில பதார்த்தங்களையும்
அபிமதையோடே செறிந்து உகப்பிக்கும் பெருமையை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனாய் –
அப்படி ஸம்ஸ்லேஷிக்கப் பெறாத பிரபல பாபத்தை யுடையேனான என்னை சர்வ காலமும் ஈரா நிற்கிற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !–சீல ஸுலப்ய ஸுந்தர்யாதிகளான குணங்களை
ஸ்வ பாவமாக யுடையையாய் ஆஸ்ரித விரோதிகளான பிரபல அசுரர்க்கு மிருத்யுவாய் –
அவர்கள் கண்ட போதே முடியும்படியான பெரிய திருவடியை கொடியாக யுடையையாய் இப்படி ஜகத் ரக்ஷண அர்த்தமாக
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !–ஆயிரம் பணங்களை யுடையனுமாய்
அதி விஸ்தீர்ணமான திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை யுடையையாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனே
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–மநோ வாக் காய ரூப கரணங்களும்
கரணியான நானும் உனக்குப் பிரகாரமாகக் கொண்டு நீ தானே யாம்படியாய் இருந்தது –
ஆகையால் வணங்குகைக்கு ஒரு கர்த்தாவையும் அறிகிறிலேன் -கரணங்களையும் அறிகிறிலேன்
————————————————–
அநந்தரம் -இவ்வறிவோடு எங்கும் இருந்தாலும் குறைவற்று இருக்க துக்காத்மகமான சம்சாரத்தில் இருக்க அஞ்சா நின்றேன் –
நிரதிசய புருஷார்த்தமான ப்ராப்ய தேச வர்த்தியான உன் திருவடிகளைத் தந்து அருள வேணும் என்கிறார் –
யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-
யானும் நீ தானே -அஹம் புத்தி வ்யவஹார விஷயமான நானும் -த்வத் பிரகார பூதனாகையாலே நீ தானேயாய் இருப்பன் –
இப்படி – இவ்வர்த்தம் பிராமண பிரசித்தம் ஆகையால்
யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்-பரமார்த்தம் -துஸ்தரமாய் துக்கோத்தரமான சம்சாரத்தில்
த்வத் பிரகார பூதங்கள் -ஆனபின்பு
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்-விலக்ஷணமான உனக்கு சேஷமான ஆத்மாவுக்கு
அநு ரூபமான பரமபதத்தில் உச்ச்ரிதமான ஆனந்தத்தை பெற்று இருக்கில் என் –
அவிலக்ஷணமாய் ஸ்வா தந்தர்யாவஹமாய் துக்கோத்தரமாகையாலே அதுக்கு எதிர்த்தட்டான சம்சார நிரயத்தை பெறில் என்
என்கிற அர்த்த ஸ்திதி யானது லோகத்தில் வ்யவஹரித்துப் போரிலும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் நரகம் நானடைதல்–ஞான ஆனந்த லக்ஷணமான அஹமர்த்தம்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா நானான நீயாம்படி த்வத் பிரகாரமாக உணர்ந்த போது எல்லாம்
சம்சார நிரயத்தை நான் கிட்டுகையை -ஸ்ரீ கௌஸ்துபத்தைச் சேற்றிலே புதைத்தவோபாதி மிகவும் அஞ்சா நின்றேன்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–பரம வ்யோம சப்த வாஸ்யமான பரமபதத்தில்
அவாக் மனஸ் கோசரமாம் படி உச்ச்ரிதமான ஆனந்தத்தை உடையையாய்க் கொண்டு நிரந்தரமாக உன்னுடைய
சர்வ சேஷித்வ வ்யாவ்ருத்தி தோன்ற எழுந்து அருளி இருக்கிறவன்
இவ்விபூதியில் உள்ளார் அனுபவித்து அடிமை செய்கிற உன் திருவடிகளை எனக்கு தந்து அருள வேணும்
————————————————————-
அநந்தரம் -ஆசா அநு ரூப உபகாரத்துக்குத் தாம் பண்ணின பிரதியுபகாரத்தாலே அத்தலையில் பிறந்த
உஜ்ஜ்வல்யத்தையும் அதிசயித வைபவத்தையும் அருளிச் செய்கிறார்
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா–அருளு நின் தாள்களை எனக்கே என்ற ஆசைக்கு ஈடாக
அத்திருவடிகளை எனக்கு அசாதாரணமாம் படி
சேஷத்வ பிரதி சம்பந்தியாகவும் ஆஸ்ரயண பிரதி சம்பந்தியாகவும் கைங்கர்ய பிரதி சம்பந்தியாகவும்
மேன்மேல் என சிறக்கும்படி தந்து அருளின மஹா உபகாரத்துக்கு பிரதியுபகாரமாக
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ-அமூர்த்தமான என் ஆத்மவஸ்துவை உபகார ஸ்ம்ருதியால்
யுண்டான ஹர்ஷாதிசயத்தாலே தோள்கள் நிரம்பும்படி மூர்த்த வஸ்துவை ஆலிங்கனம் பண்ணுமா போலே அத்யாதரம் பண்ணி
இஷ்ட விநியோக அர்ஹமாம் படி உபகார பிரதியுபகாரங்களில் யுண்டான கிரய விக்ரய சமாதியாலே அறவிலை செய்து தந்தேன் –
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -என்று மீளாதே உபகார ஸ்ம்ருதியால் யுண்டான கலக்கத்தாலே பண்ணின சமர்ப்பணத்தை
ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே-உன்னது பெற்றாயாய் இராதே பெறாப் பேறு பெற்றாயான உஜ்ஜ்வல்யத்தை யுடையவனே
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !–இந்த வடிவில் ஒளி அளவன்றிக்கே
பஹுமுகமாக தழைத்த -ஆயிரம் தோளால் என்கிறபடியே உபகாரமான திருத் தோள்கள் ஆயிரமும் யுடையையாய் –
திரு முடிகள் ஆயிரத்தையும் யுடையையாய் -இணையான மலர் போன்ற திருக் கண்கள் ஆயிரத்தையும் யுடையையாய்
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–திருவடிகள் ஆயிரத்தையும் யுடையையாய் –
திரு நாமங்கள் ஆயிரத்தையும் யுடையையாய் –
அறிவையும் சங்கிக்கும் படி தனிமைப்பட்டு எனக்கு உன் பெருமைக்கு ஈடாக உபகரித்த ஸ்வாமி யானவனே
இப்படி உஜ்ஜ்வல்யத்தையும் வைபவத்தையும் யுடையவனே எனக்கு மஹா உபகாரகனாய் என்றுமாம்
என்னுயிரை அறவிலை செய்தனன் என்று அந்வயம்
———————————————————–
அநந்தரம் -இத்திருவாய் மொழி ஆத்ம உஜ்ஜீவன ஹேது என்று பலத்தை அருளிச் செய்கிறார் –
பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-
பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை –சர்வாதிகா ஸ்வாமியாய் -சகல ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கு உத்பாதகனாய் –
அப்படியே சம்ஹார கர்த்தாவான ருத்ரனுக்கும் உத்பாதகனாய்
முனிவர்க் குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை–ஞானாதிகாரண சனகாதி முனிவர்களுக்கும் அசாதாரண சேஷியாய் –
அவசிஷ்டரான தேவர்களுக்கு உத்பாதகனாய் இப்படி சகல லோகத்துக்கும் அத்விதீயனான பிரதான நாயகனானவனை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்–பெரிய சம்பத்தை யுடைத்தான திரு நகரிக்கு நிர்வாஹகராய்
பிரபந்த நிர்மாண முகத்தால் மஹா உதாரரான ஆழ்வார் அத்யந்த அபி நிவேசம் பண்ணி
ஆதரித்துச் சொன்ன ஆயிரம் திருவாய் மொழிக்குள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–பகவத் போக்யதாதி குண ப்ரதிபாதனத்தில்
உரிய சப்த சந்தர்ப்பத்தை யுடைத்தாய் இருக்கும் இவை பத்தையும்
இவற்றால் இதர விஷயங்களில் சபலராய்த் தொண்டரராய்த் திரிகிறவர்களே -அநாதி காலம் அந்நிய பரரான நமக்கு உஜ்ஜீவிக்கலாம்
இது ஏழு சீர் ஆசிரிய விருத்தம் –
—————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply