கீழில் திருவாய் மொழியிலே மநோ ரதித்த படி பெறாமையாலே அத்யந்தம் அவசன்னராய்
எம்பெருமானுடைய ஆஸ்ரித வாத்சல்யாதி குணங்களை
அதி சங்கை பண்ணும்படி கலங்கி காணுமாறு அருளாய் -என்று கூப்பிடுகிறார்
———————————————-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-
ஸ்ரீ லஷ்மீ பூமி நீளா நாயகனாய் –சேஷ சேஷாசன கருட ப்ரமுக நாநாவித அனந்த பரிஜன பரிசாரிகா சரண யுகளனாய்-
நிகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹாரதி சீலனாய்
ஆஸ்ரித பரித்ராணார்த்தமாக இச்சானு குண விக்ரஹனாய் –
ஸ்வ ஸுந்தர்யஹ்ருத அசேஷ மநோ நயன கமல தாளாயத லோசனனாய் அத்யுஜ்ஜ்வல வித்ருமசமான வதனாய்
நீல ரத்ன சத்ருச திவ்ய ரூபனாய்
எனக்குத் தாரகனாய் போக்யனாய் ப்ரணத ஜன சமீஹித நிர்வர்த்தனநைக ஸ்வ பாவனாய் இருந்த
உன்னைக் காணுமாறு அருளாய்-
——————————————————
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-
இப்படி காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன் –
இதற்கு மேலே இல்லை என்னும்படி ஆசைப்பட்டாலும்
உன் திரு நாமங்களையே சொல்லிக் கூப்பிடப் பெறும் இதுவோ எனக்கு அருளும் அருள் –
இங்கன் அன்றிக்கே காணுமாறு அருளாய் -காண ஒண்ணுமோ என்னில் –
காண வேணும் என்று அபேக்ஷித்தார்க்கு சக்கரவர்த்தி திருமகனாயும் ஸ்ரீ வஸூ தேவர் திருமகனாயும் வந்து
திரு வவதாரம் பண்ணி அன்றோ உன்னைக் காட்டிக் கொடுத்து அருளிற்று –
நெஞ்சால் அனுபவிக்கலாம்படி உன்னை எனக்கு போக்யமாகத் தந்து அருளின பரம உதாரன் அல்லையோ –
மற்றும் ஆசைப்பட்டார் எல்லார்க்கும் உன்னை போக்யமாகக் கொடுக்குமவன் அல்லையோ –
மஹார்ணவ அந்தர் நிமக்நமான ஜகத்தை எடுத்து ரஷித்து அருளினை பரம காருணிகன் அல்லையோ –
காணுமாறு அருளாய் -என்கிறார் –
————————————————————-
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-
அயத்நேந நிதி எடுத்தால் போலே எடுத்து அனுபவிக்கலாம் படி ஸ்ரீ நந்த கோபர்க்கும் யசோதைப் பிராட்டிக்கு பரம ஸூலபனாய் –
ஸ்ரீ ப்ரஹ்லாத ப்ரதிஜ்ஞா சமய ஸம்பூதனாய் தத் விரோத்யஸூர நிராசன உசித ஸ்ரீ ந்ருஸிம்ஹ ரூபனாய் –
நவ ராங்குர கோடி விபாரித தத் புஜாந்தரனாய்
தத் விபாரண ஹேது பூத நிரவதிக ஆஸ்ரித வாத்சல்ய மஹா தயியாய் இருந்து வைத்து
ஆஸ்ரிதனான எனக்கு அரியையாய் இன்று நீ வருகிறிலை-வாராது ஒழிந்தால்
உன்னுடைய ஆஸ்ரித வாத்சல்ய குண ஏக தாரகரான ஆஸ்ரித ஜனங்கள் எங்கனே தரிக்கும்படி என்கிறார் –
————————————————
உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-
ஆஸ்ரித விரோதி நிரசன ஏக ஸ்வ பாவனாய் – ஆஸ்ரித பரம போக்யனாய் ஆஸ்ரித விரோதி நாஸகத்வ ஏக ஸ்வரூபனாய் –
எனக்கு தாரகனாய் இருந்த உன்னுடைய ஆஸ்ரித இச்சாதீன திவ்ய அவதார திவ்ய சேஷ்டிதத்வ ரூபமான
ஆஸ்ரித வாத்சல்ய குணம் ஒன்றுமே எனக்கு தாரகம் –
நீ வாராமையாலே அதுவும் என்னுடைய பாபத்தாலே பொய்யோ என்று சங்கியா நின்றேன் என்கிறார் –
——————————————————
ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-
நீரே உபாயங்களை அனுஷ்ட்டித்து என்னை பிராபிக்கும் அத்தனை அன்றோ என்னில் –
எனக்கு தாரகனாய் நிகில ஜெகன் நிர்மாண மஹார்ணவ நிமக்ந ஜகத் உத்தரண உத்கிரண விக்ரமண ஹேது பூத
பரம காருண்ய விசிஷ்டனாய்
பயோனிதி சயன மந்த்தன பந்தன பேதன ஹேது பூத பிரணயித்வ குண யுக்தனுமாய் –
ஆத்ம குணங்களாலும் ரூப குணங்களாலும் மனுஷ்யரில் காட்டில் தேவர்கள் எத்தனை விலக்ஷணராய் இருப்பார் –
அப்படியே தேவர்கள் மனுஷ்யர் என்னும்படி அந்தக் குணங்களால் விலக்ஷணனாய்
சர்வ லோகங்களுக்கும் ஆத்மாவாய் இருந்த உன்னை நான்
என்னுடைய யத்னத்தாலே எங்கனே பிராபிக்கும் படி என்கிறார்
————————————————————
எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-
சர்வ லோகங்களும் தத் சமாராத்யமான அக்னீ இந்திராதி தைவமும் அவற்றினுடைய கிரியைகளும்
லோகத்துக்குப் புறம்புள்ள பதார்த்தங்களும் ப்ரக்ருதி சம்யுக்தமாய் கர்ம சங்குசித ஞானமாய் ஸூஷ்மமாய் இருந்த புருஷ சமஷ்டியும்
கர்ம சம்பந்த ரஹிதமாய் ப்ரக்ருதி வி நிர்முக்தமாய் பரிசுத்தமாய் இருந்த ஆத்ம ஸ்வரூபமும் நீயே –
ஆதலால் என்னுடைய யத்னத்தால் உன்னை நான் எங்கனே பிராபிக்கும்படி –
இதற்கு முன்பு நிர்ஹேதுகமாக என்னை விஷயீ கரித்தால்போலே இன்னமும் உன் கிருபையால் விஷயீ கரித்து அருளாய் என்கிறார் –
————————————————————
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-
பூத பவிஷ்யத்வர்த்தமாக சகல ஐந்து ஜாதத்துக்கும் ஆத்மாவாய் ரக்ஷகனாய் இருந்த உன்னுடைய இந்த நிரவதிக காருண்யத்தையும்
பொய்யோ வென்று சங்கியா நின்றேன் -இப்படி அதி சங்கை பண்ணுவான் என் -என்னில் –
நிரவதிக போக்ய பூதனாய் இருந்த உன்னைக் காணப் பெறாது ஒழிந்தால் சங்கை பிறவாதோ என்கிறார் –
—————————————————————–
மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-
உம்முடைய அபேக்ஷிதம் செய்ய வேண்டுமாகில் ஓர் அஞ்சலி மாத்திரம் ஆகிலும் பண்ண மாட்டீரோ என்னில் –
அதுக்கு உத்தரம் மேலிட்டு ப்ரவண ஸ்வ பாவனாகையாலும் முழுதும் வல்வினையேனாய் இருந்த என்னையும் கூட ஈரா நின்ற
ஸுசீல்யாதி கல்யாண குணங்களை உடையையாய் இருக்கையாலும் –
ஆஸ்ரித விரோதி நிராசன ஏக ஸ்வ பாவனாய் இருக்கையாலும்
ஆஸ்ரிதருடைய ஆபத்துக்கு உதவ வருகைக்கு ஈடான பெரிய திருவடியை திவ்ய வாகனமாக உடையவன் ஆகையாலும்-
திரு நாட்டில் நின்றும் வந்து ஆஸ்ரிதருடைய ஆபத்தைப் போக்கப் பற்றாமை அணித்தாகத்
திருப் பாற் கடலிலே வந்து திரு வனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகையாலும்
மத் ஸ்வரூப சேஷ்டிதங்கள் த்வத் சங்கல்ப ஆயத்தமாய் த்வதாத் மகமாயி த்வத் சரீரமாகையாலும்
என்னால் ஒரு செயலில்லை-ஆதலால் வணங்குமாறு அறியேன் என்கிறார்
————————————————-
யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-
உம்முடைய ஸ்வரூபம் உட்பட சர்வமும் நானே என்னும் இடம் அறிந்தீராகில் உமக்கு என் பக்கல் அல்பதாம்சம் உண்டோ என்னில் –
சர்வமும் நீயே யாதலால் இவ்விடத்தே இருத்தத்தோடே திரு நாட்டில் இருத்தத்தோடே வாசி இல்லை நிரூபிக்கில் –
அப்படியே யாகிலும் சர்வமும் நீயே என்னும் இடத்தை அறியச் செய்தேயும் திரு நாட்டிலே நீயேயாய் இருக்கும் இருப்பைக் காணாதே
இருக்கும் இவ்விருப்பாகிற நரகதத்தை மிகவும் அஞ்சா நின்றேன் –
அருளு நின் தாள்களை எனக்கே என்கிறார் –
—————————————————–
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-
சம்சாரிகள் எல்லாரும் பிராக்ருதி விஷய ஏக தாரக போஷக போக்யயராய் இருக்கச் செய்தே என்னை உன் திருவடிகளையே
தாரக போஷக போக்யமாய் இருக்கும் படி பண்ணி அருளினாய் –
இந்த மஹா உபகாரம் அமையாது -இவ்வுபகாரத்துக்குக் கைம்மாறாக என்னுடைய ஆத்மாவை உனக்கே அடிமையாகத் தந்தேன்
என்னும் ப்ரீதியாலே சம்பாதித்து தம்முடைய ஆத்மாவை ஆத்மாந்த சேஷமாகக் கொடுத்து
இந்த மஹா உபகாரத்தைப் பண்ணின உன்னை ஒரு கால் காண வேணும் -காண எளிதோ என்னில் –
காண வேணும் என்று அபேக்ஷித்த ஆஸ்ரிதற்காக வன்றோ நீ அஸங்க்யேய கல்யாண குணங்களையும் உடையையாய் இருக்கிறது –
உன்னை ஒழிய ஒரு க்ஷண மாத்ரமும் செல்லாது இருக்கிற எனக்கும் அரியையாகலாமோ பிரானே என்கிறார்
——————————————————————
பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-
ப்ரஹ்மாதி சகல ஸூர கணங்களுக்கும் சர்வ லோகத்துக்கும் ஈஸ்வரனாய் இருந்த நீயே
உன் திருவடிகளைத் தந்து அருள வேணும் என்று ஆசைப்பட்டு -தத் தஸ்ய சத்ருசம் பவேத் என்று பிராட்டி சொன்னால் போலே
சொன்ன உரிய சொல் மாலையான இத்திருவாய்மொழியை வல்லார்க்கு எம்பெருமானைப் பெறலாம் –
நான் பட்ட பாடு பட வேண்டா -நீர் இப்பாடு படுவான் என் என்னில் இக்கண்ணாலே இப்போதே காண வேணும் என்று படுகிறேன் –
எம்பெருமானைப் பெறாது ஒழிகிறேன் என்று படுகிறேன் அல்லேன் -என்கிறார்-
——————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply