இப்படி என்னைத் திருவாய் மொழி பாடுவித்து அருளுகைக்காக திரு நாட்டில் நின்றும் அங்கே எழுந்து அருளி இருந்த படியே
ச பரிகரமாகத் திரு வாறன் விளையிலே வந்து புகுந்து
என்னைத் திருவாய் மொழி பாடுவித்துப் பட்டைக்கு கேட்டு அருளி
திருவடி பெருமாள் குணங்களை சொல்லக் கேட்டருளி அசோகா வனிகையிலே பிராட்டி நிர் வ்ருத்தையாய் இருந்தால் போலே
நிர் வ்ருத்தனாய் இருந்த திருவாறன் விளையை என்றோ சென்று நாம் அனுபவிக்கப் பெறுவது
என்று மநோ ரதிக்கிறார்
————————————————————-
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-
பரஸ்பர சாஹித்யத்தாலே தங்களுக்கு இன்பம் உண்டாம்படி யாகவும் அயர்வறும் அமரர்களுக்கு இனிதாம்படியாகவும்
பிராட்டியோடே கூடத் திரு மா மணி மண்டபத்திலே வீற்று இருந்து அருளி
இவ் வேழ் உலகை இன்பம் பயக்க ஆள்கின்ற எங்கள் பிரான் அன்புற்று அமர்ந்து உறைகின்ற
அணி பொழில் சூழ் திரு வாறன் விளை அன்புற்று அமர்ந்து வலம் செய்து
கை தொழு நாள்களும் ஆகவற்றேயோ-என்கிறார் –
—————————————————-
ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2-
ஒரு ஸந்தேஹம் இன்றிக்கே அகலிடம் முற்றவும் ஈரடியே யாகும்படி அளந்து அருளின ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருக்கிற
திருவாய் மொழி பாடுவிக்கை யாகிற மஹா உத்சவத்துக்காக கொடி கட்டி அலங்க்ருதமான
திரு வாறன் விளையை சந்தன கர்ப்பூராதி ஸூ கந்த த்ரவ்ய வாசிதமாய்
ஹிம சீதளமான நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடுமேயோ -என்கிறார் –
——————————————–
கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-
ஸுசீல்ய வாத்சல்யாதி கல்யாண குண விசிஷ்டனான எம்பெருமான் பெரிய திருவடி மேலே எழுந்து அருளி இருக்கும்படியைக் கண்டு
கை தொழுகை அன்றியே அவனுக்கும் கூட ப்ராப்யமாய் ஸாங்க சகல வேதவித் அக்ரேசரராய் –
ததர்த்த பரம புருஷ ஆராதன ரூப பஞ்ச மஹா யஜ்ஜாத் அனுஷ்டான சீலராய் இருந்த திவ்ய ஜனங்கள் வாழ்கிற
திரு வாறன் விளையை நிச்சலும் தொழக் கூடுமேயோ -என்கிறார் –
——————————————————
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-
ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணி அருளுகையாலே அத்யுஜ்ஜ்வலமான ஆத்ம குணங்களையும் ரூப குணங்களையும்
யுடையனாய் இருந்த அவன் எழுந்து அருளி இருந்த திரு வாறன் விளையிலே
அவன் திருவடி மலர்களை நெஞ்சால் என்று அனுபவிக்கக் கூடும் -என்கிறார் –
————————————————-
மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5-
தன் திருவடி மலர்களை என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கித் திருவாய் மொழி பாடி அனுபவிக்கும் படி
திருவனந்த ஆழ்வான் முதலாக யுள்ள பலரடியார் முன்பு அருளிய பரம காருணிகன் அமர்ந்து உறையும்
திரு வாறன் விளையினுடைய உலக மலி புகழ் பாட நம்முடைய கிலேசம் எல்லாம் தீரும் –
திரு வாறன் விளையைப் பாடுங்கோள் என்று ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து அருளிச் செய்கிறார் –
————————————————————————
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்து அருளிய திரு மணம் புணர்ந்து அருளின
திரு அழகை என்றும் என் நெஞ்சம் ஸ்துதிப்ப என் நெஞ்சுக்குள்ளே புகுந்து இருக்கிற பிரான் அன்றி
அணி திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே உள்ளித் தொழுமின் தொண்டீர்
உங்கள் ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –
—————————————————————–
நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே பரம ப்ராப்யம் -அது பெறுகைக்கு உபாயம் அதிலே நின்று அருளினவவன்–
அவன் ஆகிறான் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து ஆஸ்ரித வாத்சல்ய மஹோதயி ஆகையால்
ஸ்ரீ மதுரையிலே ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக வந்து திரு அவதாரம் பண்ணி அருளின
ஆஸ்ரித விரோதி நிராசன ஏக போகனான ஸ்ரீ கிருஷ்ணன்
அவன் அல்லது உபாயம் இல்லை -அவனை சரணம் புகுங்கோள் என்கிறார் –
—————————————————————-
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-
சரணம் புக்கால் நம் அபேக்ஷிதம் செய்து அருளுமோ என்னில் -பரம ஆபத் பன்னனாய்-சரணாகதனான
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபத்தை எல்லாம் போக்கி அவனை ரஷித்து அருளின சரணாகத வத்சலன் அல்லனோ
திரு வாறன் விளையிலே இருக்கிறான் -அவன் நம்முடைய அபேக்ஷிதம் செய்து அருளும் –
ஆதலால் உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம்படி திரு வாறன் விளையிலே போய் அனுபவியுங்கோள் என்கிறார் –
————————————————————————-
‘தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-
திரு வாறன் விளையோ ப்ராப்யம் -திரு நாடு அன்றோ என்னில் நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராய்த் தெளி விசும்பு ஏறலுற்றால்
திரு வாறன் விளையைக் கண்டால் திரு நாட்டை விட்டு இத்தையே ப்ராப்யமாகக் கொண்டு
சர்வ கரணங்களாலும் அனுபவிப்பார் -திரு நாட்டில் உள்ளார்க்கும் இதுவே ப்ராப்யம் –
என் நெஞ்சம் திரு வாறன் விளையை மேவி வலம் செய்து கை தொழக் கூடுமேயோ என்று மநோ ரதியா நிற்கும் –
அதுவே ப்ராப்யம் -என்கிறார்
—————————————————————-
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-
திருநாடு ப்ராப்யம் என்னும் பிரசித்தியாலே உம்மைத் திரு நாடு ஏறக் கொண்டு எழுந்து அருளில் செய்வது என் என்னில் –
திரு வாறன் விளையே ப்ராப்யம் என்று இருக்கைக்கு விரோதியான பாபத்தைப் போக்கி
என்னைத் திரு வாறன் விளையே ப்ராப்யம் என்று இருக்கப் பண்ணின பின்பு
திரு வாறன் விளை என்றால் என் நெஞ்சு தாழ்ந்து கிடக்கும்படி அறியானோ –
சர்வஞ்ஞன் அல்லனோ என்கிறார்-
————————————————-
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-
திருவாறன் விளையே பிராப்யம் என்று இருக்கைக்கு விரோதியான என்னுடைய பாபத்தைப் போக்குகையாலே பவித்ரம் –
அதில் நின்று அருளின எம்பெருமான் –
அதிலும் பவித்ரம் அவனை ப்ரதிபாதித்த திருவாய் மொழிகள்-
இவை வல்லார் அவற்றிலும் பவித்ர பூதர் என்று இந்திராதி தேவர்கள் சதிகரித்துக் கொண்டு
தங்கள் பிரணயி நிகளுக்குச் சொல்லுவர் என்கிறார்-
—————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply