அழகிய மணவாளச் சீயர் அன்போடு அருளிச் செய்த பன்னீராயிரப்படி –7-10-

பத்தாம் திருவாய் மொழியில்
கீழ் இப்படி தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரத்தால் தம்முடைய விரோதி அஸத் சமமாம்படி
ஹ்ருஷ்டரானவர் -அவன் உபகாரத்துக்கு ஒரு பிரதியுபகாரம் காணாமையாலே
சேஷியானவனுக்கு அதிசய ஜனகமான சேஷ வ்ருத்தி ஒழிய இல்லை என்று அறுதி இட்டு -பிரதி சம்பந்தியான அவனுடைய
அசேஷ சேஷித்வ ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்தவ பூர்த்தியையும்
அநந்யார்ஹ சேஷத்வ அபதானத்தையும்
ஆஸ்ரித ரக்ஷண ஆகாரத்தையும்
அனுபாவ்யமான விக்ரஹ யோகத்தையும்
அனுபவ அர்த்தமான அவதாரத்துக்கு மூலமாயுள்ள அனந்த சயனத்வத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி விசிஷ்டமான அபிமத சயாகத்வத்தையும்
பிரபல விரோதி பஞ்சநத்வத்தையும்
ஆந்திர துக்க நிவர்த்தகதத்தையும்
பாபம் நிவ்ருத்தமாய் ப்ராப்ய தேசம் சித்திக்கிலும் உத்தேசியமான ஆஸன்ன தேச யோகத்தையும்
நிரதிசய வ்யவசாய ஜனகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான அவன் நம்மை விரோதியைக் கழித்து அடிமை கொள்ளுகைக்காக ஆசன்னமான
திரு வாறன் விளையிலே ஸந்நிஹிதனான அவன் திருவடிகளிலே அடிமை செய்யக் கடவோம் என்று மநோ ரதித்து
இப்படி நிவர்த்திய விரோதி பல நிரூபண பூர்வகமாக அதனுடைய சரண்ய நிவர்த்யத்வத்தை நிஷ்கர்ஷித்து நிகமிக்கிறார் –

——————————————————–

முதல் பாட்டில் -சேஷியானவன் ஸ்ரீ மஹா லஷ்மீ யோடே பரி பூர்ணனாய் எழுந்து அருளி இருக்கிற
திரு வாறன் விளையை அனுபவித்து அடிமை செய்யும் காலமும் ஆமோ -என்கிறார்

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் –ஸுந்தர்யாதி குண உபேதையாய் பத்ம வாஸிநீத்வத்தால் வந்த
போக்யதையை யுடைய ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டியும் -அவர்கள் தான் விரும்விபி மேல் விழும்படியான
வை லக்ஷண்யத்தை யுடைய தானும் பரஸ்பர ஆனந்த வ்ருத்தி உண்டாம்படியாக
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து–போக சாரஸ்யத்தோடே கூட சர்வ சேஷித்வ வ்யாவ்ருத்தி தோன்றும்படி இருந்து
இவ் வேழுலகை -வ்யக்த அவ்யக்த கால ஸூத்த சத்வாத்மாக-சதுர்வித அசேதன வர்க்கமும் -பத்த முக்த நித்ய ரூபமான
த்ரிவித சேதன வர்க்கமும் ஆகிற ஏழு வகைப் பட்ட இந்த லோகங்களை
இன்பம் பயக்க ஆள்கின்ற எங்கள் பிரான் -ஆனந்த கந்தளிதமாம்படி அடிமை கொள்ளா நிற்குமவனாய் –
எங்களையும்-வாசிக கைங்கர்யம் கொண்ட மஹா உபகாரகனானவன்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை–அடிமை கொள்ளுகைக்கு ஏகாந்த ஸ்தலம் என்று விரும்பி –
அல்லாத பர வ்யூஹாதி ஸ்தலங்களில் காட்டிலும் பொருத்தமுடையனாய் நிரந்தர வாசம் பண்ணுகிற
தர்ச நீயமான பொழில் சூழ்ந்த திரு வாறன் விளையை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–அடிமை செய்கைக்கு ஆஸன்ன ஸ்தலம் என்று ஸ்நேஹித்து –
பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகலப் போகத் தேடாதே பொருந்தி
ஸ்வரூப அனுரூபமான அனுகூல விருத்தியைப் பண்ணி ஹ்ருஷ்டராய் பக்தாஞ்சலி புடராய்
நாம் அனுபவிக்கும் நாள்கள் உண்டாமோ –

————————————————

அநந்தரம் அநந்யார்ஹத்வ ஆபாதகமான த்ரி விக்ரம அபதானத்தை யுடையவன் வர்த்திக்கிற திரு வாறன் விளையை
ஸூ கந்த்யமான ஜலங்களாலே திரு நீரிட்டு ப்ரதக்ஷிணாதி அநு விருத்திகள் பண்ணக் கூடுமோ -என்கிறார் –

ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2-

ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே–ஒரு சந்தேகமற உண்டாமோ -எது என்னில்-
விஸ்தீர்ணமான லோகங்களை எல்லாம் இரண்டு அடியேயாம்ப்பாடி
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்–வளர்ந்து அருளின ஸ்ரீ வாமனனான மஹா உபகாரகன்
அவதார ஸ்த்தலமான தேவ லோகங்களில் காட்டிலும் அமர்ந்து உறையக் கடவதாய்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை–பெரிய ஆகாசத்தில் விளங்கா நிற்கிற கொடிகளை யுடைய
மாடங்களையும் நெடிய மதிள்களையும் யுடைத்தான திருவாறன் விளையை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–வி லக்ஷணமான கந்த்யத்தை யுடைத்தான நீரைக் கொண்டு
தூவி ப்ரதக்ஷிணம் பண்ணி அஞ்சலி பண்ண கூடுமோ
ஆகும் கொல் என்ற நினைவை மேலே உபபாதித்த படியாய் இருக்கிறது –
ஐயம் ஓன்று இன்றி என்று மேலே கூட்டவுமாம்
இது ஸக்யமோ என்கிற ஐயம் இன்றி அளந்தான் என்னவுமாம் –

——————————————————-

அநந்தரம் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமான ஆகாரத்தை யுடைய கருட வாஹனனை அனுபவித்து
அவன் வர்த்திக்கிற தேசத்தை நித்யமாகத் தொழ வாய்க்கவற்றோ -என்கிறார் –

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை-என்றும் இப்படி கூடவற்றோ -கோ ரக்ஷணத்துக்கு
முடி சூடினவனாய் ரஷ்ய விரோதியான மதுவுக்கு நிராசகனாய் –
அத்யுஜ்ஜ்வல தேஜோ ரூப ஸிம்ஹம் போலே விரோதிகளுக்கு அநபிபவ நீயனானவனை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்-தர்ச நீய கதியான பெரிய திருவடி மேலே கண்டு –
அஞ்சலி பண்ணி அனுபவித்து -அவ்வளவும் அன்றியே அவன் வர்த்திக்கும் இடமாய்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்–உச்ச்ரித ஸ்வரமாம் படி பாடப்படுகிற
பெரிய பகவத் குண பிரதையை யுடைத்தான ருக் யஜுஸ் சாம அதர்வண ஸ்வரூபமான நாலு வேதங்களையும் –
தேவ பித்ரு பூத மனுஷ்ய ப்ரஹ்ம யஜ்ஞங்களையும் –
சீக்ஷை நிருக்தம் வியாகரணம் சந்தோ விஸிதி கல்ப ஸூத்ரம் ஜ்யோதிஸ் சாஸ்திரம் என்கிற அங்கங்கள் ஆறையும்
பரக்க நிரூபித்துப் போருகிற வர்கள் -பகவத் அனுபவத்தோடு வாழ்வதாய்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–பெரிய பொழிலை யுடைத்தான
திரு வாறன் விளையை தொழ நித்யமாக வாய்க்கவற்றோ –

————————————————————————-

அநந்தரம் -அனுபாவ்ய விக்ரஹ விசிஷ்டானாய்க் கொண்டு திரு வாறன் விளையில் வர்த்திக்கிறவன்
திருவடிகளை நெஞ்சால் நிரந்தரமாக அனுபவிக்கும் படி வாய்க்க வற்றோ -என்கிறார்

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை–சம்ருத்தமாய் வாய்த்து வருகிற கரும்பும் பெரும் செந்நெலுமான
வயல் சூழ்ந்த திரு வாறன் விளையிலே
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த–ஸந்நிஹிதனாகையாலே அபி வ்ருத்தமான புகழை யுடையனாய்
த்ரிவித சேதன அசேதனங்களுக்கும் ஸ்வாமியாய் வைத்து -ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக ஸ்ரீ மதுரையிலே திருவவதரித்து
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–ஆஸ்ரித அனுபாவ்யமாம் படி வாய்த்த நீல ரத்னம் போலே இருக்கிற
திரு நிறத்தையுடைய ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிற மஹா உபகாரகனுடைய விகசிதமான திருவடித் தாமரைகளை
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற-இங்கே இருந்து மனசிலே நினைக்க
அவன் நினைவின் படியே எப்பொழுதும் ஒரு க்ஷணமும் ஒழியாமல் பெறும்படி வாய்க்க வற்றோ –

—————————————————————————–

அநந்தரம் ஆஸ்ரித அனுபவ அர்த்தமாக அனந்த சாயியானவன் வர்த்திக்கிற திரு வாறன் விளையினுடைய
சம்ருத்தமான புகழைப் பாட நம் பாபம் ஒன்றும் ஒழியாமே போம் என்கிறார்

மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5-

மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்–நிரதிசய போக்யமாம் படி விகசிதமான திருவடித் தாமரைகளை
என் நெஞ்சத்திலே சர்வ காலமும் இருத்தி அந்த உகப்பாலே வணங்கும்படியாக
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்–ஸூரி களும் பராசராதிகளும் பக்தர்களுமான பலவகைப்பட்ட
அடியார் சந்நிதியில் நிரவதிக கிருபையைப் பண்ணி யருளின ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவனாயுள்ள
அனந்த சாயியானவன் புறம்பு ஜகத் வியாபார அந்நிய பரதை அற்று வாசம் தானே பிரயோஜனமாக வர்த்திக்குமிடமாய்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை–புஷ்ப உபஹாரங்களை யுடைத்தான மணி மயமான
ஓங்கின மாடங்களையும் நெடிய மதிளையும் யுடைத்தானா திரு வாறன் விளையினுடையதாய்
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–லோகத்தில் மிக்க புகழாய் உகப்போடே பாட நம்மை மேலிட்டு
வர்த்திக்கிற பாபங்கள் தானே நம் பக்கல் ஒன்றுமே நில்லாதே புக்க இடம் அறியாமல் போம்

———————————————————

அநந்தரம் -அநிஷ்டமான விரோதியைத் தலை அழித்து அபிமதையான ருக்மிணியை ஸம்ஸ்லேஷித்த
ஸ்ரீ கிருஷ்ணன் வர்த்திக்கிற திரு வாறன் விளையை ஆஸ்ரயிக்க ஸமஸ்த பாபங்களும் போம் என்கிறார்

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-

அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்–சிசுபாலன் கைப் பிடிப்பதாகப் படை திரட்டின அன்று –
பின் தொடர்ந்து வந்த இடத்திலே ருக்மனை பூசலில் வென்று பரி பூர்ண அனுபவையான ருக்மிணியினுடைய
அலங்கார அலங்க்ருதமாய் அதிசயித போக்யமான திருத் தோள்களை ஸம்ஸ்லேஷித்தவனாய்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்-என்றும் ஒரு க்ஷணமும் ஒழியாமல் என் நெஞ்சமானது
அனுபவித்து ஸ்தோத்ரம் பண்ணும்படி என் அகவாயிலே இருக்கிற மஹா உபகாரகனானவன்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–எல்லாரும் கண்டு அனுபவிக்கும் படி நின்று அருளின
தர்ச நீயமான திரு வாறன் விளை என்று பிரசித்தமான அந்த மஹா நகரத்தை
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!–அனுபவ சாபலமுடைய நீங்கள் அனுசந்தித்து
தொழும்படி பாருங்கோள் -குரூரமான பாபங்கள் ஒன்றும் சேஷியாதபடி நிலை குலைந்து சர்வமும் நசித்துப் போம்

————————————————————–

அநந்தரம் அநிருத்தனுக்கு பிரதிபந்த்யகனான பாணனை அஸஹாயனாம் படி பொருது அழித்து
அவன் பாஹு வனத்தைச் சோதித்த ஸ்ரீ கிருஷ்ணனே ப்ராப்தயுபாய பூதன்-என்கிறார்

நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-

நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை–அயோத்யை அபராஜிதை-என்று ஸ்ருதி பிரசித்தமான மஹா நகரம் –
அர்ச்சாவதார ஸ்த் தலமான அதுவேயாம்படி –மலரை யுடைத்தான சோலைகள் சூழ்ந்த திரு வாறன் விளையாகிற
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்–மஹா நகரத்திலே நித்ய வாசம் பண்ணுகிற
மஹா உபகாரகனாய் ஆஸ்ரித வ்யாமுக்தனாய்க் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணனாய் திரு அவதரித்த நித்ய ஸூறி ஸேவ்யனாய்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து–அநிருத்தன் நிருத்தனான பாண புரத்திலே சென்று
சக்தி ஸூசகமான த்ரி நேத்ரத்வத்தையும் ஈஸ்வரத்வ அபிமானத்தையும் யுடைய ருத்ரனை
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணினது அமையும் என்று உபரதனாம் படியாக பிராதாபோத்தரமான பூசல்களை பண்ணி
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–பாணனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்தவன்
தேச ப்ராப்திக்கு உபாய பூதன் -அவனை ஒழிய வேறு ஒரு உபாயத்தை யுடையோம் அல்லோம் –

—————————————————————

அநந்தரம் -ஆஸ்ரிதருடைய ஆந்திர துக்க நிவர்த்தகன் வர்த்திக்கிற திரு வாறன் விளையை
ஆஸ்ரயிக்க நெஞ்சில் ஒரு பாபமும் நடையாடாது என்கிறார்

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்–உன் திருவடிகளை ஒழிய
மற்று ஒன்றையும் உடையோம் அல்லோம் -என்று விஸ்தீர்ணமாய்
அஹாயமான பொய்கையிடத்திலே முதலையின் கையிலே அகப்பட்டு
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்–நின்று தன் ஆபன்னர் இருந்த இடத்து அளவும் வரும்
திருவடிகளை நாராயணா என்று சம்பந்த பூர்வகமாக ஏத்தின-ஆனையினுடைய
செவ்வி மாறாமல் பூவைச் சாத்தப் பெற்றிலோம் என்கிற நெஞ்சு துக்கத்தை தீர்த்த மஹா உபகாரகன்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை–ஆஸ்ரிதற்கு உதவுக்கைக்காக சென்று
அங்கு இனிமையோடே வர்த்திக்கிற இடமாய் நிரதிசய போக்யமான பொழில் சூழ்ந்த திரு வாறன் விளையை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–கிட்டி வலம் செய்ய கூடுமோ –
கூடுமாகில் குரூரமான பாபங்கள் உள்ளத்தின் பொருத்தத்தை யுடைய அல்லவாம்
ஒன்றி வலம் செய்ய தீ வினை ஒன்றும் உள்ளத்தின் சார்வல்ல என்று யுக்தி பிரகாரமாகவுமாம்

———————————————————

அநந்தரம் பாப நிவ்ருத்தி பிறந்து ப்ராப்ய தேசம் சித்திக்குமானாலும் சர்வ அனுபாவ்யமான திரு வாறன் விளையைப்
பிராபித்து அனுபவிக்க அமையும் என்னா நின்றது என் நெஞ்சு -என்கிறார்

‘தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-

‘தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்–அவித்யாதிகள் ஆத்மாவை ஸ்பர்சியாத படியாய்
மனஸ்ஸூ நிர்தோஷமாய்-என்றபடி இங்குள்ளார் அங்கே செல்லிலும் தெளிவைப் பிறப்பிக்கும் தேசம் –
அவனே வரிலும் சோக மோஹங்களை விளைக்கும் இது -இருள் தருமா ஞாலம் இறே இது -ஸூத்த சத்வம் அது –
போக ப்ராப்தமானால் -கிடைப்பதானால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று-யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
-மநோ வாக் காயங்களால் நித்ய ஸூரி களும் பயின்று ஆஸ்ரயிக்குமதாய்-நிரதிசய போக்யமான திரு வாறன் விளையை
தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகி -என்ன வேண்டாத நித்ய நிர்தோஷர் படுகாடு கிடக்கிற தேசம் என்கை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–கிட்டி அனுகூல விருத்தியைப் பண்ணவற்றே
என்னா நின்றது என் மனஸ்ஸூ -என் வசம் அல்ல என் மனஸ்ஸூ —

——————————————————————-

அநந்தரம் திரு வாறன் விளையிலே வர்த்திக்கிற தன் பக்கலிலே வ்யவஸ்தமான பின்பு
நெஞ்சு வேறு ஒன்றில் போகாது என்னும் இடம் அவன் தானே அறியும் என்கிறார்

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்–மநோ வாக் காயங்களாலே நிலத் தேவரான
பாகவதருடைய சங்கமானது அனுபவிக்க வணங்கும்படியாய்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே. –போக்தாக்கள் நெஞ்சை மகிழ்விக்கும்
திரு வாறன் விளையிலே வர்த்திக்கிற பரம பாவன பூதனுக்கு அநந்யார்ஹ சேஷமாம் படி அறுதி யுடைத்தான பின்பு
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்–நெஞ்சு வேறு ஒன்றை உத்தேச்யமாக
நினைத்திராத ஸ்வ பாவத்தை ஸூரி ஸேவ்யனான-சர்வஞ்ஞன் தானே அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை–சிந்தையினால் செய்யப்பட்டு மறைந்த தொழில்களானவை
அவன் தான் அறியாதது ஒன்றும் இல்லை –

————————————————————–

அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்களை நித்ய ஸூரிகள்
ஸ்லாஹிப்பர்-என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே–உபாய உபதேஷ்டாவான அவனுக்கு
அநந்யார்ஹமான பின்பு வேறு ஒரு உபாயம் இல்லை என்று அறுதியிட்டு –
சர்வ பாப விமோசகனாய்ப் பரம பாவன பூதனான -அவனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன–அறுதியாக்கப் பட்ட நெஞ்சை யுடையராய்க் கொண்டு
தர்ச நீயமான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்–தனித்தனியே வித்யா ஸ்தானங்களான
ஆயிரம் திருவாய் மொழியிலும் இப்பத்தையும் அப்யஸிக்க வல்லவர்களை நித்ய ஸூரி களானவர் சர்வ காலமும்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–தங்கள் மஹிஷிகளுக்கு பஹுமானமாக ஸ்நேஹித்து
சம்சார தோஷ நிவர்த்தகரான பவித்ர பூதர் என்று சொல்லா நிற்பர்கள்
இது ஆறு சீர் ஆசிரிய விருத்தம் –

————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: