அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –6-8 –

எட்டாம் திருவாய் மொழியில் -கீழே ப்ராப்ய விஷயத்தில் அதி த்வரிதரான இவர்க்கு த்வர அனுரூபமான ப்ரவ்ருத்தியில்
யோக்யதை இல்லாமையால் கடக முகத்தால் பிராபிக்கையில் அபேக்ஷை பிறந்து -கடக அனுரூபமான அவனுடைய
ஸ்ருஷ்ட்ருத்வாதி ஆகாரத்தையும்
அநு பாவ்யமான அசாதாரண சிஹ்னத்தையும்
ஆஸ்ரித விரோதி நிவர்த்தனத்தையும்
அதிசயித புருஷ அநு பாவ்யமான போக்யதா வை லக்ஷண்யத்தையும்
உதார ஸ்வ பாவத்தையும்
அத்யந்த பவ்யத்தையும்
அபி ரூபனாய் அகிலாத்ம பூதனானவனுடைய அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
சர்வாதிகாத்வத்தையும்
அந்த பரத்வத்தோடே கூடின ஸுலப்யாதி அதிசயத்தையும்
உபய ப்ரயுக்தமான ஸ்ரீ யபதித்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம்வித ஸ்வ பாவனான சர்வேஸ்வரனை வடிப்பித்த மஹா உபகாரத்தை ப்ரீதி அதிசயத்தாலே
ஐஹிக ஆமுஷ்மிக சகல பதார்த்தங்களையும் கடக்கருக்கு சமர்ப்பணீயம் என்கிற அதிசயித ஆதாரத்தை
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால் தூது விடத் தேடின நாயகி தூது போகிற பக்ஷிகளைக் குறித்து
பிரதியுபகார ப்ரதர்சனம் பண்ணின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

—————————————–

முதல்பாட்டில் -தன்னுடைய காரணத்தவாதி ஸ்வ பாவங்களைக் காட்டி என்னை வசீகரித்துக் கொண்டவனுக்கு
என்னுடைய அவஸ்தையைச் சொல்லி அதுக்குப் பரிசிலாக
உபய விபூதியும் நீங்கள் இட்ட வழக்காம்படி நிர்வகிக்க வேணும் என்று சில புள்ளினங்களைச் சொல்லுகிறாள் –

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

நன்னலப் புள்ளினங்காள்! -அர்த்தித்தார்க்குக் காரியம் செய்கைக்கு அடியான விலக்ஷண ஸ்நேஹாதி யுக்தங்களாய் –
ப்ரவ்ருத்தி ஹேதுவான பஷ த்வய அன்வயத்தை யுடைய புள்ளினங்காள்
வினையாட்டியேன் நான்இரந்தேன்–பிரிந்து தூது விடுகைக்கு அடியான பாபத்தையுடைய நான் அவன் விஷயத்தில்
ஆஸ்ரிதர் பண்ணும் பிரார்த்தனையை உங்கள் பக்கலிலே பண்ணினேன் -எதுக்காக என்னில்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்– பிரதமத்தில் லோகத்தை எல்லாம் ஸ்ருஷ்டித்து ஸ்ருஷ்டமான லோகத்துக்கு
ரக்ஷகமாய் காளமேக நிபமான திருமேனியை யுடையவனாய் ஆஸ்ரிதற்கு ஸூல பனாய் -அந்த ஆகாரங்களாலே
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.—என்னுடைய விலக்ஷண ஆகாரங்களை அடங்க ஸ்வ அதீனம்
ஆக்கிக் கொண்ட உபகாரகனுக்கு என்னுடைய அவஸ்தையைச் சொல்லி
அது அடியாகச் சேர்ந்து இருக்கிற நாங்கள் இருவரும் பரிசிலாகத் தந்த
பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?–நித்ய ஸ்ப்ருஹணீயமான பரமபதத்தையும் பூமி யுப லஷிதமான
சகல லீலா விபூதியையும் ஆளுங்கோள்
பின்பு இவ்விபூதி த்வ்யமும் நீங்கள் இட்ட வழக்கு அன்றோ என்று கருத்து
இனங்காள் -என்றது சங்க பாஹுள்யமும் கார்ய உபையுக்தம் -என்று இருந்தபடி –

————————————————-

அநந்தரம் அனுபாவ்ய சிஹ்ன யுக்தனானவனுக்கு என் ஆற்றாமையை அறிவித்து வந்து என் தோழிமார் எதிரே
நான் உங்களை பண்ணும் ஆதரத்தை அங்கீ கரிக்க வேணும் என்று கிளிகளை பார்த்துச் சொல்லுகிறாள்

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-

கிளிகாள்–வடிவழகாலும் வார்த்தையின் இனிமையாலும் இரண்டு தலைக்கும் ஆதரணீயமான கிளிகாள்
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு–கையும் திருவாழி யான சேர்த்தியை யுடையவனாய்
பக்குவ பலம் போலே போக்யமான ஆதார சோபையை யுடையவனாய் -என்னை அடிமை கொண்ட
ஸ்வாமி யானவனை முற்பாடு காணப் பேறுடைய நீங்கள் கண்டு குணம் பாடி ஆவி காத்து இருக்கும் அளவன்றியே
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–உடம்போடு செறிய வேண்டும் அபி நிவேசத்தை
அவன் ஆதரித்தான் என்று கூட வர நினையாதே -ச த்வர சித்தராய் சடக்கென வந்து –
உங்கள்வார்த்தைக்கு அநந்தரம் அவன் வர அறுதியாகையாலே என் புதுக்கணிப்பு கண்டு தங்களை ஒப்பித்து நிற்கையாலே
மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து-மாய் பொருந்தி ஒளியை யுடைத்தான
நெடிய கண்ணை யுடையராய் பருவத்தாலும் ஒத்து இருக்கிற தோழிமார் சந்நிதியில்
அவர்கள் தாங்கள் ஆதரிக்கக் கண்டிருக்கை அன்றிக்கே அவன் கையிலே பிடித்த என் கை உங்களுக்குத் பாத பீடமாம்படி இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?–நெய்யோடு சேர்ந்த மதுரமான அடிசிலை
பாலோடும் கூட நித்தியமாக ஸ்வீ கரிக்க வேணும் –

——————————————————-

அநந்தரம் என் பக்கலில் நின்றும் சொல்லுகையாலே ஆஸ்ரித விரோதி நிவர்த்தகனான ஸ்ரீ கிருஷ்ணன் சிரஸா வஹித்த
புதுக் கணிப்போடே வந்து அவன் வருகிறான் என்று அலங்கரித்து இருக்கிற
என் குழலில் பூவை யூதுங்கோள் என்று சில வண்டினங்களைப் பார்த்துச் சொல்லுகிறாள் –

ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே.–6-8-3-

கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்–பரஸ்பரம் செறிந்த வண்டினங்காள்-குரு க்ஷேத்ர நிர்வாஹகரான
பாண்டவர்கள் ஐவருக்குமாக
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்–தர்ச நீய கதியான குதிரைகளையும் ஓங்கின தேர்களையும் சேனையையும்
தூளி சேஷமாம்படி அழித்த மஹா உபகாரகனான ஸ்ரீ கிருஷ்ணன்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே.–திருக் குழலில் சாத்தின ஸ்ரமஹராமான திருத்துழாயிலே இருந்து
பானம் பண்ணின தெளிந்த மதுவை யுடைத்தான வாயை யுடையீர்களாய்க் கொண்டு
ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?–சடக்கென வந்து அவனுக்கு சர்வ பிரகார போக்யமான என் குழலின் மேலே
செவ்வியை யுடைத்தாய் ஸ்லாக்யமான பூவில் மது பண உத்யோகம் தோன்றும்படி ஊத வேணும் –

——————————————

அநந்தரம் ஸூரி போக்யமான வைலக்ஷண்யத்தை யுடையவனைக் கண்டு உம்முடைய தகவுடைமை
இதுவோ என்று சொல்ல வேணும் என்று சில தும்பிகளைக் குறித்துச் சொல்லுகிறாள் –

தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4-

தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!–நான் வளர்த்துப் போருகிற முல்லைகளின் மேலே
வர்த்திக்கிற தும்பிகாள் -தூய மதுவை நிரூபகமாக வுடைத்தான வாய்களை கொண்டு வந்து
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற–அம்முல்லைகளில் மதுவை உண்ணச் செல்ல நினைத்தி கோளாகில் –
அவை வாடிக் கிடக்கிற அவஸ்தையில் செல்லாதே -விஸ்லேஷ ஹேதுவான பாபத்தை யுடையேனான என்னை
க்ருத்ரிம சம்ச்லேஷத்தைப் பண்ணி அகன்றவனாய் இப்பிரிவு தானே செந்தலிப்புக்கு உறுப்பு என்னலாம்படி
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு–பெரு வெள்ளமான மது ஒழுகுகிற குளிர்ந்த திருத் துழாயாலே
அலங்க்ருதமான திரு முடியை யுடையனாய்க் கொண்டு நித்ய ஸூரி களுக்கு நிர்வாஹகானாய் இருக்கிறவனைக் கண்டு
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.–இவ்வஸ்தையில் சந்நிஹிதங்களான உங்களுக்கு –
அவனுடைய மேன்மைக்குத் தகுதியாம்படி சோபசாரமாக நாம் இம்மேன்மை கொண்டாடி இருக்குமதுவோ
தகவுடையோமான படி என்று சொல்ல வேணும் காணுங்கோள்
அப்போது இறே என்னோபாதி இம்முல்லையும் செந்தலித்து மது பானம் பண்ணலாவது -என்று கருத்து –

————————————-

அநந்தரம் -உதார ஸ்வ பாவனானவனை எங்கே யாகிலும் போய்க் கண்டு இதுவோ தகுதி என்று
சொல்லுங்கோள் என்று தான் வளர்த்த சில கிளிகளைப் பார்த்துச் சொல்லுகிறாள் –

நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5-

நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!–பிரிந்த அவன் பரிகரம் போலே செருக்கு முடியாதே
நான் வளர்க்க வளர்ந்த கிளிகாள் -அதி பரிசயத்தாலே அநாதரித்து இராதே வாருங்கோள் –
வளர்த்த உங்களாலே பயன் பெற இருக்கிற நான் -நான் உண்டாகில் உண்டாம்படியான உங்களுக்கு
நீங்களே அறிந்து செய்யும் காரியத்தைச் சொல்லுகிறேன் –
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த-பிரதிபந்தகங்களை அழல விழிக்கும் கண்ணையுடைய
பெரிய திருவடியை தன்னுடைய த்வரை தோன்றும்படி நடத்திக் கொண்டு என் பக்கலிலே வந்து
இன்று பிரிந்து இருக்கைக்கு அடியான பாபத்தை யுடையேனான என்னை –
நானும் அறியாதபடி சித்த அபகாரம் பண்ணினவனாய் -அவ்வபஹார ஹேதுவான அந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை–சிவந்த திருக் கண்ணையும் -அதுக்குப் பரபாகமாய்ப்
பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போலே பெரிய திருவடி திருத் தோளிலே பொருந்த இருக்கிற
காளமேக நிபமான ரூபத்தை யுடையனாய் -நினைத்தது முடிந்த ப்ரீதியாலே சிவந்த அதர சோபையையும் யுடையனாய் –
இவ்வழகைத் தன் பேறாக அனுபவிப்பிக்கையாலே விலக்ஷண கல்பகம் போலே மஹா உதாரனானவனை-
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–பாரா வ்யூஹ விபவாதி ஸ்த்தலங்கள் எங்கேனுமாகிலும் சென்று கண்டு
இவளை சித்த அபஹாரம் பண்ணித் தனிமைப் படுத்தின இதுவோ தகுதி என்று சொல்லுங்கோள் –

————————————————

அநந்தரம் சர்வ பிரகார பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளில் திருத் துழாய் நமக்கு அன்றித் தாரான் –
நான் உங்களைக் கற்பித்து வைத்த வார்த்தைகளை சொல்லுங்கோள் என்று
தான் வளர்த்த சில பூவைகளைக் குறித்துச் சொல்லுகிறாள்

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-

தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–நான் உங்கள் கார்யம் செய்கை அன்றியே உங்களைக் கொண்டு கார்யம் கொள்ள
வேண்டும்படி குரூரமான பாபத்தை யுடையேனான நான் வளர்த்த முக்தமான பூவைகாள்
என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்–திருமேனிக்கு பரபாகமாம்படி மின் போலே விளங்குகிற
திரு யஜ்ஜோ பவீதத்தையுடைய திரு மார்பை என்னை அனுபவிப்பித்தனாய்
இவ்வவயவ சோபா மாத்ரம் அன்றியே சமுதாயமான ஸ்யாமள விக்ரஹத்தை எனக்கு அனுபவிப்பித்து என்னை அடிமை கொண்ட
ஸ்வாமியானவனாய் -எனக்கு சர்வ பிரகாரத்தாலும் நியமிக்கலாம்பாடி பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணனானவன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்-தன்னுடையதாய் ஆஸ்ரிதர் இருந்த இடத்தளவும் செல்லும்
திருவடிகளின் மேலே மண்ணின் ஸ்ரமஹராமான திருத் துழாயை நமக்கு அன்றி உகந்து வேறொருவருக்கு கொடான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச் சென்மின்கள் –கற்கும்படி இருங்கோள் என்று முக்தமாய்ச்
செருக்கு அடித்து இருக்கிற உங்களை நிர்ப்பந்தித்து உங்களைக் கொண்டு கார்யம் கொள்ள இருக்கிற நான் –
என் மின்னு நூல் மார்வன் -என்று தொடங்கி நல்கான் -என்ற இடம் ஈறாகக்
கற்பித்து வைத்த வார்த்தையை சொல்லிச் சொல்லுங்கோள்

————————————–

அநந்தரம் அபி ரூபனாய் அகிலாத்ம பூதனாய் ஆஸ்ரித விரோதி நிவர்த்தகனானவனுக்கு என் வார்த்தையைச் சொல்லி
என் வை வர்ணயத்தைத் தீர்க்க வல்லி கோளோ-என்று தன்னார்த்தி அதிசயத்தாலே
அசேதனங்கள் என்று பாராதே சில பாவைகளைக் குறித்துச் சொல்லுகிறாள் –

பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன்என் னாழிப்பிரான்
மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7-

பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்– பூவைப் பூக்கள் போலே தர்ச நீயமான நிறத்தை யுடையவனாய் –
அதுக்குப் பரபாகமாம்படி புண்டரீகங்கள் போலே இருக்கிற கண்களை யுடையனாய் -இவ்வசாதாரண விக்ரஹத்து அளவன்றியே
யாவையும் யாவருமாய் நின்ற மாயன்என் னாழிப்பிரான்-சகல அசேதனங்களையும் -சகல சேதனரையும் சரீரமாய்க் கொண்டு
தத் தத் ஆகாரேண அவஸ்த்திதனாய்-தத் கத தோஷைர் அஸம்ஸ்ப்ருஷ்டனாம்படி -ஆச்சர்ய சக்தி யுக்தனாகையாலே
கலந்து இருக்கச் செய்தே கழல நிற்க வல்லனாய் –
கையும் திருவாழி யான வடிவழகை அடியிலே எனக்கு அனுபவிப்பித்த மஹா உபகாரகனாய்
மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்-அநு பவிக்கிற கோபிமார்க்கு பிரதிபந்தகமான கேசியை
பிரபலமான வாயைக் கிழித்தவனாய் -விரோதி நிரசனம் ஸ்வ பாவ ஸித்தமான மது சூதனானவனுக்கு –
கிளிகளுக்கும் பூவைகளுக்கும் சொன்ன என் வார்த்தையைச் சொல்லி
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–பக்ஷிகள் போலே பறந்து போகாதே என் ஆர்த்தி கண்டு
பொறாதே இருக்கிற பாவைகள் -உங்களைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டும் பாபத்தை யுடைய
என் நிறத்தில் பசுமை அழிவை தீர்க்க வல்லி கோளோ –

————————————————————-

அநந்தரம் -ஸூரி ஸேவ்யனான சர்வாதிகனைக் குறித்து உம்மை ஒழிய வேறொரு பதார்த்தத்தில் கண் வைக்கிறிலள்
என்று சொல்லி ஒரு நாள் கிருபை பண்ணி யருள வேணும் என்று ஒரு குருகை அபேக்ஷிக்கிறாள்

பாசற வெய்தி இன்னே வினையேன் எனைஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக்குருகே! அருள்செய் தொருநாள்
மாசறு நீலச் சுடர்முடி வானவர் கோனைக்கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.–6-8-8-

ஆசறு தூவி வெள்ளைக்குருகே! –கமனத்தில் குறை அற்ற சிறகை யுடையையாய் அகவாயில் சுத்திக்கும் ப்ரகாசகமாம் படி
வெளுத்த நிறத்தையுமுடையையான குருகே-ஆசு -குற்றம் –
பாசற வெய்தி இன்னே வினையேன் எனைஊழி நைவேன்?-விரஹத்துக்கு முடிவு காணாதே பாபத்தை யுடைய நான்
நிறம் அழிந்து இப்படியே அநேக கல்பங்கள் சிதிலை யாகா நிற்பன் -ஆனபின்பு
மாசறு நீலச் சுடர்முடி வானவர் கோனைக்கண்டு–அழுக்கு அற்ற நீலச் சுடரை யுடைத்தான மயிர் முடியை யுடையனாய் –
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகானான சர்வாதிகனை கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.–பழிப்பு அற்ற உம்மை ஒழிய பின்னை வேறு மறித்துப்
பார்ப்பதொன்று இல்லை யானாள் என்று சொல்லி
ஏசறும் என்று ஏச்சுக்கு விஷயமான அவஸ்த்தையைக் கடந்தாள் என்றுமாம் –
அருள்செய் தொருநாள்-ஒரு நாள் எனக்கு உபகரிக்க வேணும்
அருள் செய்து -என்ற பாடமாக போது என்று சொல் என்று வாக்ய சேஷமாகக் கடவது

————————————————

அநந்தரம் -அந்த பரத்வத்தோடே ஆஸ்ரித ஸூ லபனான ஸ்ரீ கிருஷ்ணனைக் கண்டு வார்த்தை கேட்டு
வந்து சொல்ல வேணும் என்று சில பெரு நாரைகளைப் பார்த்துச் சொல்லுகிறாள்

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த்திரை மேல்உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன் விண்ணவர்கோனைக்கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-

நீர்த்திரை மேல்உலவி இரை தேரும் புதா இனங்காள்!-நீரின் திரை மேலிடாதபடி அவற்றை அமுக்கி மேலே உலாவி
உங்களுக்கு போக்யமான அமிஷத்தை ஆராயும் பெரு நாரை இனங்காள்
போதா என்பாரும் உளர்
பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்–உதவப் ப்ராப்தனானவன் உதவாத படியான
பாபத்தை யுடையேனான நான் உங்களை ஒழிய வேறு அத்விதீயமாய் இருபத்தொரு ரக்ஷக வஸ்து ஓன்று உடையேன் அல்லேன்-
ஆனபின்பு
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன் விண்ணவர்கோனைக்கண்டு-கார்காலத்தில் திரண்ட மஹா மேகங்கள் போலே
அபி ரூபனாய் -அவதார முகத்தால் ஆஸ்ரிதற்கு அத்யந்த ஸூ லபனாய்-
அவ்வழகைப் பரமபத வாசிகளுக்கு அனுபவிப்பிக்கும் சர்வாதிகனை கொண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–என் பக்கலிலே கிருபை பண்ணி வந்திருந்து
இதுதானே போது போக்காம்படி நெடும் போது சொல்ல வேணும் –

————————————————————-

அநந்தரம்-பரத்வ ஸுலப்ய ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்வத்தை யுடையவனுக்கு ஏகாந்தத்தில் இவள் படி இது காணும்
என்றோரு வார்த்தை சொல்லி அவன் சொன்ன மறு மாற்றங்கள் எல்லாம்
எனக்குச் சொல்ல வேணும் என்று அன்னங்களை அர்த்திக்கிறாள்

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!
என்திரு மார்வற்குஎன்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.–6-8-10-

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்-அபேஷா நிரபேஷமாக வந்து அந்நிய பரதை இன்றியே
ஆபி முக்யம் பண்ணி இருந்து உங்கள் கண்ணுக்கு இனிய ஸ்லாக்யமான சேவல்களும் நீரும்
மற்றுமுண்டான பந்து வர்க்கங்களும் எல்லாம் கூட சம்ச்லேஷ ரசத்துக்கு
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!-ஒரு இடையூறு இன்றியே புஷ்பங்களின் மேலே உலாவுகிற அன்னங்காள்
என்திரு மார்வற்குஎன்னை இன்னவாறிவள் காண்மின்என்று-என் போல்வாரான பெண் பிறந்தாருக்கு ஸ்வாமிநியான
ஸ்ரீ மஹா லஷ்மியை திரு மார்பிலே யுடையவனுக்கு என்னை இவள் இப்படி இவ்வண்ணம் ஆனாள் காணும் என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.–அவனும் அவளுமான ஏகாந்த ஸ்தலத்தில் ஒரு வார்த்தை அறிவித்து
அவன் அருளிச் செய்த மறு மாற்றங்களை சொல்லுங்கோள்-

———————————————————

அநந்தரம்-இத்திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்கள் இதின் அர்த்தத்தில் ப்ரேம பாரவசயத்தாலே
திரவ ஸ்வ பாவராகா நிற்பர்கள் என்று பலத்தை அருளிச் செய்கிறார்

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–6-8-11-

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்–விலக்ஷண சப்தங்களை ஆராய்ந்து கொண்டு ஞான ஹேதுவான
வேதங்களை அபகரித்த மதுவை நிரசித்த உபகாரகனுடைய திருவடிகள் விஷயமாக
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன–பரிமள உத்தரமான பூவை யுடைத்தான பொழில்கள் சூழ்ந்த
திரு நகரிக்கு நிர்வாஹகராய் பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசன சீலரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்–பகவத் ஆவிர்பாவம் போலே வேத ஆவிர்ப்பாவ ரூபமான
ஆயிரம் திருவாய் மொழிக்குள்ளும் அத்விதீயமான இவை பத்தையும் பாவ விருத்தியோடே அப்யஸிக்க வல்லவர்கள்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–-ஊற்றின் இடத்து நுண்ணிய மணல் நீர் வசத்திலே
ஒழுகுமா போலே பாவ வ்ருத்தி பரவசராய்க் கொண்டு ஆர்த்ரீ பவியா நிற்பர்கள் –
இது கலி விருத்தம்

————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: