பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –6-7-

இப்படி எம்பெருமானைப் பிரிந்த வியாசனத்தாலே அத்யந்தம் அவசன்னையாய் மோஹ தசாபன்னையான பிராட்டி –
தத் விஷய நிரவதிக அபி நிவேச ப்ரேரிதையாய்க் கொண்டு திருக் கோளூரிலே எழுந்து அருள –
திருத் தாயார் இவளுடைய நிரவதிக வியசனத்தாலே அத்யந்தம் அவசன்னையாய் அப்ராக்ருதிங்கதை யாகையாலே-
இவள் எழுந்து அருளுகிற சமயத்தில் அவற்றை அனுசந்திக்க க்ஷமை அன்றியே
பின்னை நெடும் போது கூட ப்ரபுத்தையாய் இவளைக் காணாமையாலே
இவளை இழந்தேன் -என்கிறாள் –

——————————————————–

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-

லோக ஸித்தமான தாரக போஷக போக்யங்களை இவள் புஜிக்க வேணும் -என்று கொண்டு சொன்னால் அத்தை ஆதரியாதே –
எனக்கு தாரகமும் போஷகமும் போக்யமமும் கண்ணன் எம்பெருமான் என்று என்றே சொல்லி அவனைப் பெறாமையாலே
கண்கள் நீர் மல்கி இருந்த என்னுடைய பெண் பிள்ளை பூமியில் எங்குத்தையிலும் பகவத் குணங்கள் சம்ருத்தமாக
இவனை வளைத்துக் கிடக்கிற திருக் கோளூரிலே அதி மாத்ர அசக்த மானசை யாகையாலே –
அவ்வூரை வினவி வினவித் தனக்கு அதுவே பாதேயமாகக் கொண்டு திருக் கோளூரிலே போய்ப் புகும் –
இதிலொரு சந்தேகம் இல்லை -அங்கனே கண்கள் நீர் மல்க இருந்த இருப்பை யாகிலும் கண்டு இருக்கப் பெறுகிறிலேன்-
இழந்தேன் -என்று அலற்றுகிறாள் –

——————————————–

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

அவனுடைய கல்யாண குணங்களையும் திவ்ய சிஹ்னங்களையும் நிரவதிகமான ஆர்த்தியோடே
கூப்பிடுகிற தன்னுடைய ஆர்த்த ஸ்வரத்தைகே கேட்டு ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே
அத்யந்தம் அவசன்னமாய்க் கொண்டு அத் திரு நாமங்களையும் திவ்ய சிஹ்னங்களையுமே சொல்லிக் கூப்பிடும்படியாகக்
கூப்பிடுகிற இவள் அந்த வ்யஸனம் பொறுக்க மாட்டாமையாலே துரதி க்ரமமான தன்னுடைய
ஸ்த்ரீத்வத்தை த்ருணவந்மந்யமாகையாய்க் கொண்டு பொகட்டு நல் வளம் சேர் பழனத் திருக் கோளூருக்கே போய்ப் புகும்
பாக்ய ஹீனையான என்னுடைய பெண் பிள்ளை உங்களை நினைத்தாகிலும் ஒரு கால் வருமே
என்று அவளுடைய பூவைகளைக் கேட்க்கிறாள்

———————————————-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்என்
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-

லீலார்த்தமாகக் கொண்டு வந்த சுகசாரிகாதி லீலா உபகரணங்களைக் கண்டால் வரும் லீலாரசமும் -தனக்குப் பிராட்டியோடே
ரமமணனான எம்பெருமானைக் காணுமதுவே யாகையால் -அவனை நினைத்துக் காணப் பெறாமையாலே
அவன் திரு நாமங்களைச் சொல்லிக் கூப்பிடச் சொல்லி அதனுடைய மாதுர்யத்தாலும் குளிர்த்தியாலும் உஜ்ஜீவித்து இருக்கிற
என் பெண்பிள்ளை திருக் கோளூரிலே போய்ப் புக்கு
இனித் தன்னுடைய மநோ ரதம் எல்லாம் பரிபூர்ணமாம்படி இருக்குமோ –
அன்றியே தன்னுடைய கண்ணநீரும் அழுகையுமேயாய் நிற்குமோ -என்கிறாள் –

————————————————–

கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.–6-7-4-

ஐஸ்வர்யத்தால் ஸூ சம்ருத்தமாய்க் கொண்டு அவன் கண் வளர்ந்து அருளுகிற திருக் கோளூர்க்கே -முஃயையானவள்
மெல்லிடை நுடங்கப் போனாள்-மர்யாதையைக் கடந்தாள் என்று லோகத்தார் இவளுக்குக் குற்றமாகச் சொல்வரோ-
அன்றியே திருக் கோளூரிலே ஒருத்திக்குள்ள அபி நிவேசம் இருக்கும்படி என் -என்று மஹா குணமாகச் சொல்வரோ-
அங்கனே குணமாகச் சொல்லுகை சம்பவிக்குமோ –
பாதகமான குணத்தையும் தோஷமாகவே காண்கிற லோக ஸ்வ பாவம் இருந்தபடி என் -என்று இன்னாதாகிறாள் –

—————————————————–

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-

பிள்ளையாய் விளையாடும் பதமானால் பிள்ளைகளோடு விளையாடுகையில் ஆதரம் இன்றியே எம்பெருமானைக் காண வேணும்
என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே நைந்து நைந்து இருக்கிற என் சிறுத்தேவி போய் இனித்தன்
திருமால் திருக் கோளூரில் பூவியல் அதுக்குள்ளே தாமரைத் தடாகங்களையும் அதுக்குள்ளே
அவன் திருக் கோயிலையும் கண்டு தன்னுடைய நிரவதிக ஸந்தாபம் எல்லாம் போய் ஆவியுள் குளிர இன்று எங்கனே உகக்கிறாளோ –
நான் அந்த ஸம்ருத்தியைக் காணப் பெற்றிலேன் -என்கிறாள்-

—————————————————–

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-

இன்று தன்னைப் பிரிந்து வ்யசனப்படுகிற எனக்குத் துணையாகாதே என்னைப் பொகட்டுப் போன என் இளமான்
இனிப் போய் தென் திசைத் திலதமனைய திருக் கோளூர்க்கே சென்று அவன் கோயிலுள்ளே போய்
தனக்குப் பிராட்டியோடுள்ள ஸம்ஸ்லேஷத்தாலே புதுக்கணித்த திருக் கண்களையும் திருப் பவளத்தையும் கண்டு
நிரவதிக ப்ரீதியாலே விகசித்தமான இவளுடைய கண்களையும் ஆனந்தமான கண்ணநீரையும்
ஆனந்தாகதமான சைத்தில்ய பரம்பரையையும் காணப் பெற்றிலேன் -என்கிறாள் –

—————————————–

மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

எம்பெருமானைக்கண்டு ஸம்ஸ்லேஷிக்கைக்காக க்லுப்தமாக வரும் அந்த காலம் எல்லாம் அவனோடே
ஸம்ஸ்லேஷிக்கப் பெறாமையாலே கண்ணநீர் மல்கி நெடுமால் மேடுமால் என்று அழைத்து
இனி இவள் தன்னுடைய விரஹ வ்யசனத்தாலும் ஸுகுமார்யத்தாலும் அதி மாத்ரம் அவசன்னையாய்
பரிம்லாநையாய்க் கொண்டு -செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே நடந்து போய்ப்
புகும்படியைக் காணப் பெற்றிலேன் -என்கிறாள் –

—————————————–

ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண்மல ராள்கொழுநன திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–6-7-8-

வண்டாலே துகையுண்ட பூமாலை போலே எம்பெருமானோடுள்ள கலவியாலே ஒசிந்த திருமேனியையுடைய பிராட்டியோடு
திருக் கோளூரிலே அவன் கண் வளர்ந்து அருளுகிறபடியைக் காண வேணும் என்னும் ஆசையால்
என்னைப் பொகட்டுப் போன என் காரிகை வ்யசனத்தாலே மெலிந்த நுண்ணிடை மேலே ஸ்ரமாதிசாயத்தாலே
கையை வைத்து நொந்து நொந்து கண்ணீர் துளும்ப அவ்வபி நிவேசமே துணையாக
அவ்வூரிலே புக்கு முடிய வல்லளேயோ என்கிறாள்

————————————————————

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-

அதி மநோ ஹராமான போக்ய வஸ்துக்களைக் காணில் இவையெல்லாம் என் கண்ணனுக்கே என்று சொல்லா நிற்கும் இப்பெண் பிள்ளை –
தனக்காக நாங்கள் கொண்டு வந்த போக்ய பதார்த்தங்களையும் எங்களையும் ஒரு த்ருணமாக நினையாதே பொகட்டு
லோகம் எல்லாம் இவள் தனியே போனாளே என்று பழி சொல்லி இரைக்கும்படியாகத் திருக் கோளூரிலே போனாள் -என்கிறாள் –

———————————————————-

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-

தன் திருக் கண்களின் அலகால் சர்வ லோகங்களையும் தோற்பித்து அடிமையாக்கிக் கொண்டு இருக்கிறவனுடைய
திருக் கண்களைக் கண்டல்லது ஒரு க்ஷண மாத்ரமும் தரிக்க மாட்டாது இருக்கிற நெடும் கண் இளமான்
இனி இது குடிப்பழி என்னும் இடம் ஒன்றும் நினையாதே அவன் சேர் திருக் கோளூர்க்கே போய்ப் புக்காள்-
இவளை பிரிந்த வ்யாசனாதிசயம் நினைக்கவும் கூடுகிறது இல்லை என்று சொல்லி
பின்னையும் தன் செயல் அறுதியாலே தெய்வங்காள் -என்று கூப்பிடுகிறாள் –

————————————————–

வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-

ஆழ்வார் விஸ்லேஷமாகிற ஆபத்துக்குத் தமக்கு வாய்ப்பாக படித்த மஹா நிதியாய் இருந்த எம்பெருமானையே அலற்றிச் சொன்ன
இத்திருவாய்மொழியை திருக் கோளூர்க்கே ப்ரவணமான மனசை யுடையளாய்க் கொண்டு
சொல்லுவார் இட்ட வழக்காம் திரு நாடு என்கிறார் –

—————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: