நாலாம் திருவாய் மொழியில் -கீழ் –
அவனுடைய ஸுகுமார்யத்தாலே தனிமைக்கு அஞ்சின இவருடைய பயம் தீரும்படி பரிவரையும் சக்தியையும் காட்டி
ஆஸ்வசிப்பித்த சர்வேஸ்வரன் இவர் இப்படி அஞ்சிற்று விரோதி பூயிஷ்ட தேசம் என்றாய் இருக்கும் –
நம்முடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி சக்தியையும் காட்டுவோம் என்று இவர் திரு உள்ளத்திலே பிரகாசிப்பிக்க
அவனுடைய அகில விரோதி நிவர்த்தகத்வத்தையும்
அசேஷ ஜகத் விஷயமான ஸ்ருஷ்ட்யாதி வியாபாரத்தையும்
ஆஸ்ரித ஆபத்சகத்வத்தையும்
ஆஸ்ரித அர்த்தமான அதிசயித வியாபாரத்தையும்
ஆஸ்ரயணீய ஸ்தலாந்தர விலக்ஷணமான தேச விசேஷ ஸ்ததிதியையும்
ஆசிரயணீயதா வை லக்ஷண்யத்துக்கு அடியான சர்வ பிரகார உபகாரகத்வத்தையும்
அநு பாவ்யமான ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்துவத்தையும்
ஸ்ரஷ்ட ருஸ் ருஜ்யாதி விபாகம் இல்லாத சர்வாத்ம பாவத்தையும்
சத்தா விபூதி ஹேதுவான நிருபாதிக சேஷித்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் பரிவரான வைதிக அக்ரேஸருடைய சம்பத்தே தனக்கு சம்பத்தாம் படி
திருச் செங்குன்றூரிலே எழுந்து அருளி நின்ற அதிசயத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராகிறார்-
——————————————————
முதல் பாட்டில் குவலயா பீடம் அகில விரோதி நிராசகனான சீர் கொள் சிற்றாயன் வர்த்திக்கிற
திருச் செங்குன்றூர் நமக்கு ப்ராப்யமான ஆஸ்ரயணீய ஸ்தலம் என்கிறார் –
வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-
வார்கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி–பாய்கிற மதமாகிற அருவியையுடைய ஆனையாகிற
பெரிய மலையினுடைய கொம்புகளாகிற சேர்ந்த சிகரங்களை முறித்து அநாயாசேன ஆனையை உருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்–ஆனை கொம்பு முறிந்து இருக்கவும்
நடத்திக் கொண்டு வர வல்ல சிஷையிலே திண்மையை யுடையனான பாகனுடைய பிராணனை அழித்து
அனந்தரத்திலே ரங்க மத்யஸ்தரான சாணூர முஷ்டிகராகிற மல்லரைக் கொன்று ரங்கம் சூழ்ந்த மச்சுக்களிலே நிற்பாராய்
போர் கடா வரசர் புறக்கிட மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த–போரை நடத்தக் கடவ ராஜாக்கள் பிறக்கிட்டுப் போம்படியாக
உத்துங்கமான மாடத்தில் மேல் நிலத்திலே இருக்கிற கம்சனை பசளைக் குடம் யுடைத்தால் போலே தள்ளிக் குதித்து உடைத்துப் பொகட்ட
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–வீர ஸ்ரீ யை யுடையனாய் பாலனான
ஸ்ரீ கிருஷ்ணன் எழுந்து அருளி நிற்கிற திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு ஆனது எங்களுக்கு சென்று கிட்டுக்கைக்கு ஆஸ்ரயணீய ஸ்தலம்
————————————————————–
அநந்தரம் -அசேஷ ஜகத் விஷயமான ஸ்ருஷ்ட்யாதி வியாபார சமர்த்தனாய் -திருச் செங்குன்றூரில்
எழுந்து அருளி இருக்கிறவன் அல்லது எனக்கு நல் துணை இல்லை என்கிறார்
எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-
எங்கள் செல் சார்வு யாமுடையமுதம் இமையவரப்பன் என்னப்பன்–எங்களுக்கு சென்று ஆஸ்ரயிக்கப்படுவதான புகலிடமாய் –
புகலிடமாம் அளவன்றியே நாம் யுடையோமான போக்யமுமாய் –
அஸ்கலித ஞானரான ஸூ ரிகளுக்கு உபகாரகனாய் அப்படியே எனக்கும் உபகாரகனாய்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம்மருவன்-சம்ருத்தமான லோக த்ரயத்தையும்
ஸ்ருஷ்டித்து ரஷித்து சம்ஹரிப்பானாய் -இதுக்குப் பொருந்தின மூர்த்தி த்ரயத்தையும் யுடையனாய் –
இவ்வாகாரங்கள் எனக்குப் பிரகாசிக்கும் படி எனக்கு அந்தராத்மாவாய் –
அப்படியே முகம் தோன்றாமை நிற்கை அன்றியே கண் கண்டு அனுபவிக்கும்படி
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ் திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு–இளமையாலே சிவந்த கயல்கள் உகளிக்கும் படி
தேன் விஞ்சின மருத நிலத்தால் சூழப்பட்ட திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறுஆகிற விலக்ஷண தேசத்திலே
பணை-நீர் நிலமுமாம் –
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்றென்னமர் துணையே–பொருந்தி வர்த்திக்கிற சகல சத்தா
ஹேது பூதனானவன் அல்லது வேறு எனக்கு அநு ரூபமான சகாயம் ஆர் தான்
————————————————————-
அநந்தரம் ஸ்ரீ வராஹ ரூபியாய் பிரளய ஆபத்தில் பூமியை இடந்து எடுத்து ரஷித்தவன்
திருவடிகள் ஒழிய வேறு உபாயம் இல்லை -என்கிறார்
என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3-
என்னமர் பெருமான் இமையவர் பெருமான்–நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகனானால் போலே எனக்கு அநு ரூப நாயகனாய்
இருநிலம் இடந்த வெம்பெருமான்–மஹா பிருத்வியை பிரளய ஆபத்தில் ஈடுபடாமல் இடந்து எடுத்த என்னுடைய நாதனாய்-அப்படியே
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம்பெருமான்–அநாதியாய் பிரபலமான பாபங்கள் எல்லாம்
ஏக உத்யோகத்தில் நசிக்கும்படி என்னை அடிமை கொண்டு அருளுகிற பெருமையை யுடையனாய்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரைமீ பால்–தெற்குத் திக்குக்கு அலங்காரமாக
கொள்ளப்படுவதான திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரையின் மேல் பக்கத்திலே
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே–நின்ற நிலை அழகிலே என்னை
அடிமை யாக்கினவனுடைய திருவடிகளை ஒழிய என்னுடைய மநோ ரத திசையிலும் வேறொரு புகல் இல்லை –
—————————————-
அநந்தரம் ஆஸ்ரித அர்த்தமான த்ரை விக்ரம சமுத்திர மதகியான ரூபமான அதிசயித வியாபாரத்தை யுடையவன்
திருவடிகளை ஒழிய வேறு எனக்கு ஒரு ரக்ஷகரும் இல்லை என்கிறார் –
பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-
பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப் பேருருவமாய் நிமிர்ந்த–மஹா அவகாசகமான த்ரை லோக்யமும்
நிறையும்படியாக பெரிய வடிவை யுடையனாய்க் கொண்டு வளர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்-ஸ்ரீ வாமன ப்ரஹ்மசாரியான என் ஸ்வாமியாய்
அதி கோஷத்தை யுடைத்தான கடலைக் கடைந்த தர்ச நீயமான ரத்னம் போலே இருக்கிற
திரு வடிவை எனக்குப் பிரகாசிப்பித்த நாதனாய்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ் திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு–செறிந்த குலையையுடைய
வாழை கமுகு தெங்குகளின் நிரைகள் சூழ்ந்த
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு ஆகிற திருப்பதியில் வர்த்திக்கிறவர்கள்
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான் அடி இணைய யல்லதோர் அரணே-உன்னை உள்ளபடி அறியும்படியாக
யாவத் பிரகாசம் பண்ணி எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளை ஒழிய
வேறு எனக்கு ஓர் ஏகதேசமும் ஒரு ரக்ஷகர் இல்லை
———————————————————————
அநந்தரம் -அர்ச்சா ஸ்தலாந்தரங்களும் அவனை ஒழிந்து இராது இருக்கத் திருச் செங்குன்றூரில்
நிலை ஒழிய என் நெஞ்சு பொருந்துகிறது இல்லை என்கிறார் –
அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-
அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை-திருச் செங்குன்றூர் ஒழிந்த அர்ச்சா ஸ்தலங்களான
புகலிடமும் அவனை ஒழிந்து வேறாய் இருப்பது இல்லை -அதுவே அர்த்த ஸ்திதிஆனாலும்
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது ஆதலால் அவனுறைகின்ற–திருச் செங்குன்றூரில் நிற்கிறவனை ஒழிய என் ஆத்மவஸ்து
பொருந்தி கிடக்கிறது இல்லை -ஆகையால் அவன் நித்ய வாசம் பண்ணும் தேமாய்
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பொளி மறைக்கும்–ப்ரேம பூயிஷ்ட்டரான சதுர்வேதிகள் யாகாதிகளிலே
முகத்தாலே சமர்ப்பித்த ஹவிர் அக்னியான தூமமானது ஆகாசத்தில் ஆதித்யாதி தேஜஸ்ஸை மறைக்கும்படியாய்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-விலக்ஷணமாய் ஓங்கின மாடங்களை யுடைத்தான
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு ஆனது எனக்கு நிர்ப்பயமான புகலிடம்
அன்றியே
கீழ் அவன் திருவடிகளை ஒழிய உபாயம் இல்லை என்றாராய் -அல்லாத கர்மாதி உபாயங்களை தத் சம்பந்திகள் அன்றோ என்கிற
சங்கையிலே அல்லாத ரக்ஷண உபாயங்களும் தத் ஆஸ்ரயண ரூபங்கள் ஆகையால் அவனை ஒழிந்து இருப்பது ஓன்று இல்லை –
அது வேதாந்த ஸித்தமான அர்த்தம் -ஆனாலும் தத் ஏக ரஷ்யமான என் ஆத்மாவானது
அவ்யவஹித உபாயமான அவனை ஒழிந்த சத்வாரா உபாயங்களில் அநு ரூப ப்ரவ்ருத்தி பண்ணிக் கிட்ட மாட்டு கிறதில்லை –
ஆதலால் அவன் வர்த்திக்கிற அர்ச்சா ஸ்த்தலமே எனக்குப் புகலிடம் என்றாராகவுமாம்
——————————————————————–
அநந்தரம் சர்வ பிரகார உபகாரகனாய் ஷீரார்ணவ சாயியான சர்வேஸ்வரனை பரிவரான
வைதிக அக்ரேஸரர் வர்த்திக்கிற திருச் செங்குன்றூரிலே காணப் பெற்றேன் என்கிறார் –
எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளியம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-
எனக்கு நல்லரணை எனதாருயிரை இமையவர் தந்தை தாய் தன்னை–எனக்கு நிர்ப்பயமான புகலிடமாய் -அவ்வளவன்றியே –
எனக்கு சத்தா தாரகனாய் -நித்ய ஸூரிகள் சத்தைக்கும் விருத்திக்கும் ஹேது பூதன் ஆகையால்
அவர்களுக்கும் தந்தை தாயாய் இருப்பானாய்
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத் தடங்கடல் பள்ளியம்மானை–சர்வஞ்ஞனான தனக்கும் தன் பெருமை அறிய அரியனாய்
இருக்குமவனாய் -ஆஸ்ரித ரக்ஷணார்த்தமாக விஸ்தீர்ணமான கடலிலே கண் வளர்ந்து அருளுமவனான சர்வேஸ்வரனை
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்–நெஞ்சிலே கொள்ளப்பட்ட பகவத் குணங்களை யுடையரான
மூவாயிரவர் ஞானாதி சம்பத்தை யுடையரான ருத்ரனும் ப்ரஹ்மாவும் சர்வேஸ்வரனான தானும் ஓக்கும்படி –
ஓர் ஒருவரே ஜகத் ஸ்ருஷ்டியாதிகளுக்கு ஷமரானவர்கள் பகவத் அனுபவம் ஆகிற
வாழ்ச்சியை யுடையராய்க் கொண்டு வர்த்திக்கிற ஸ்தலமாய்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–செறிவை யுடைத்தாய்க் கொண்டு
ஸ்த்திரமான மாடங்களை யுடைத்தான திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு ஆகிற
விலக்ஷண தேசத்துக்குள்ளே காணப் பெற்றேன்
—————————————————
அநந்தரம் அதிசயிதமான திவ்ய அவயவ திவ்ய ஆபரண திவ்ய ஆயுத சோபைகளோடே திருச் செங்குன்றூரில்
எழுந்து அருளி இருக்கிற என் ஸ்வாமி யானவன் என் நெஞ்சுக்குள்ளே நித்ய ஸந்நிஹிதன் ஆகா நின்றான் என்கிறார்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட அத்திருவடி –திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறில்
வர்த்திக்கிற நான் கண்ட ஸ்வாமியானவன்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும் சிவந்த கமலம் போலே இருக்கிற திருக் கண்களும் –
சிவந்த திருப் பவளமும் சிவந்த திருவடிகளும் சிவந்த திருக் கைகளும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய வுடையும் திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்– சிவந்த கமலத்தை
யுடைத்தான திரு நாபியும் சிவந்த திருமேனியை யுடைய ஸ்ரீ மஹா லஷ்மீயை யுடைத்தான திரு மார்வும்
சிவந்த திரு வுடையாடையும் சிவந்த திரு முடியும் திரு ஆரமும் திவ்ய ஆயுதங்களும்
திகழ- என்றும் -வென்ன சிந்தை யுளானே–விளங்கும்படியாக என்றும் என் நெஞ்சுக்குள்ளே ஆனான் –
————————————————
அநந்தரம் -இப்படி என் நெஞ்சிலே திகழ இருக்கிற ஜெகஜ் ஜென்மாதி காரண பூதனாய்
இருக்கிறவனைப் புகழும்படி அறிகிறிலேன் என்கிறார்
திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-
திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்-உஜ்ஜவலமாம்படி என் நெஞ்சுக்குள்ளே இருக்குமவனாய்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்–விலக்ஷணராய் பூமி தேவர்களாய் நாலு வாதங்களுக்கும் நிர்வாஹகாரணவர்கள்
திசை கை கூப்பி ஏத்தும்-திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை–திக்குகள் தோறும் கை கூப்பி ஏத்தும்படியான
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரையிலே வர்த்திக்குமவனாய் -பிறருக்கு ஆஸ்ரயணீய தயா வந்த
புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை-உஜ்ஜ்வல்யத்தை யுடைய தேவர்களுக்கு ஆஸ்ரயணீயனாம் ஸ்வ பாவத்தை யுடையனாய் –
அசுரர் வன்கையர் வெங்கூற்றை–அவர்களுக்கு விரோதிகளாய் பிரபலரான அ ஸூ ரர்க்கு குரூரமான ம்ருத்யுவாய்
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–தன்னோடு அப்ருதக் ஸித்தமான ஜகத் த்ரயத்தினுடைய
ஸ்ருஷ்ட்டியோடே பிரளய ரக்ஷணங்களை யுடையனானவனை
ஓர் ஆகாரத்தாலே வகை அறிந்து புகழும்படி அறிகிறிலேன் –
காப்பவன் -காப்பினை யுடையவன் –
—————————————————-
அநந்தரம் ஸ்ருஷ்ட்யாதி கர்த்ரு கர்ம விபாகம் இல்லாதபடி சர்வாத்ம பூதனானவன் திருச் செங்குன்றூரிலே
நின்று அருளும் சர்வ ஸ்வாமி என்கிறார் –
படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9-
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார் கூரிய விச்சை யோடு ஒழுக்கம்–வித்யா தானாதிகளான உதார குணத்தால்
பெரிய புகழை யுடையராய் அநேகராய் தான் என்னலாம்படி
ஞான சக்த்யாதி பூர்னரானவர்களுடைய அனுஷ்டானத்தையும்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–நித்ய யாத்ரையான பகவத் ஆராதனத்தையும்
ஸ்வ பாவமாக யுடைத்தான திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றிலே நின்ற ஸ்வாமியானவன்
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவப் பிரானவனே–ஜகஜ் ஜென்ம ஸ்த்தேம் லயங்களுக்கு நிர்வாஹகனாய் இருக்கும் –
மனுஷ்யாத் யாபேஷயா பரரான இந்த்ராதிகளுக்கும் அவ்வருகாகையாலே
பரம் பரனாய்க் கொண்டு ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவும் ததாத் மகனாய்க் கொண்டு சம்ஹரிக்கையாலே
ஸூத்தி குண யுக்தராய்க் கொண்டு ஈஸ்வரனான ருத்ரனும்
தானே யாம்படி பிரகாரியாய் நிற்பானாய்
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே–இவர்கள் இருவருக்கும் இடையிலே ரக்ஷகனாய்ப் புகுந்து
பதார்த்தத்தையும் ஒழிய விடாது இருக்குமவனாய் –
இப்படி ஸ்ருஷ்ட்டி சம்ஹார பாலான கர்த்தாவான வளவு அன்றியே ஸ்ருஷ்ய ஸம்ஹார்ய பால்யமான ஸமஸ்த பதார்த்தங்களும்
தானேயாம் படி தத் பிரகார விசிஷ்டானாய் இருக்கும் –
இதில் அர்த்தவாத ரூபமான ஸ்துதி இல்லை –
————————————————-
அநந்தரம் -நிருபாதிக சேஷியாகையாலே அவாந்தர சேஷிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளுடைய சத்தையும் தான் இட்ட வழக்காய்
தத் பிரயோஜனம் ஸ்வயம் ப்ரயோஜனமாம் படி அவர்களுக்கு விபூதி பிரதனாயக் கொண்டு
திருச் செங்குன்றூரிலே நிற்கிற ஆச்சர்ய பூதனைப் பொருந்தப் பெற்றேன் என்கிறார் –
அமர்ந்த நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி
அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-
அமர்ந்த நாதனை -முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–சகல சேதன நிர்வாஹகன் என்றால்
தகுதியாம்படியான நிருபாதிக சேஷித்வத்தை யுடையனாய் -உபாதி காரணமாய் சேஷிகளான
மூன்று கண்ணை யுடைய ருத்ரனும் சதுர்முகனும்
தானாம்படி தத் தத் அந்தராத்மாவாய்க் கொண்டு சத்தா ஹேது பூதனாய்
யவரவராகி அவரவர்கருளும் அம்மானை—ஸ்வ விபூதிகளை அர்த்தித்து பெறுகிற அவர்கள் அவற்றைப் பெற்று உகக்குமா போலே
அவர்களோடே ஏகீ பவித்துக் கொண்டு –
அவர்களுக்கு அபீஷ்ட பத ப்ரதானாத் யுபகரணங்களை பண்ணுமவனாய்
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை–செறிந்து ஸ்ரமஹரமான நீர் நிலத்தை யுடைய
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரை யை வாஸ பூமியாக யுடையனாய்
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு–செறிந்து ஸ்ரமஹரமான நீர் நிலத்தை யுடைய திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையை வாஸ பூமியாக யுடையனாய் பொருந்தின ஆத்ம குணங்களை யுடையரான
மூவாயிரவராயுள்ள வைதிகருக்கு அசாதாரண தேசமாய் பூ ஸூரரான பாகவதருடைய பகவத் அனுபவ ஐஸ்வர்ய பூமியாய் யுள்ளத்தை
அமர்ந்த மாயோனை அமர்ந்தேன் -அவர்கள் ஸம்ருத்தியே தனக்கு ஸம்ருத்தியாம்படி யுகந்து பொருந்தி வர்த்திக்கிற ஆச்சர்ய பூதனானவனை –
அநந்ய பிரயோஜனனாயக் கொண்டு பொருந்தப் பெற்றேன்
வேதியர்கள் -தம்முடைய பதியாய் -அல்லாத பூ ஸூரர்க்கு வாழ்வான திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானாய் அவர்களை அனுபவிப்பிக்கத் தகுதியான ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவனை -என்றுமாம் –
—————————————————
அநந்தரம் இத்திருவாய் மொழி கற்றார்க்கு பலமாக ஜென்ம நிவ்ருத்தி விசிஷ்டமான பரம பத ப்ராப்தியை அருளிச் செய்கிறார் –
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை–சர்வ ரஸ சமவாய ரூபமான தேனாய் –
ஸ்வாபாவிக ரசமான பாலாய் -பர்வம் தோறும் ரசிக்கும் கரும்புமாய் -முடிந்த உயிரைப் பிழைப்பிக்கும் அம்ருதமாய் –
இப்படி சர்வவித போக்ய பூதனாய் விலக்ஷண மஹா லோகம் பிரளயத்தில் அழியாத படி அமுது செய்து நோக்கின ஸ்வாமியாய்
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை-ஊர்த்தவ லோக வாசியான சதுர்முகனை –
விகசிதமாய் செவ்வியை யுடைத்தான-திரு நாபீ கமலத்தில் ஸ்ருஷ்டித்த ஆச்சர்ய பூதனாய்
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்-அத்தாலே நிருபாதிக ஸ்வாமியானவனை
நிரதிசய சம்பந்தத்தை யுடைய திரு நகரிக்கு நிர்வாஹகராய் பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–பரம பதத்தில் ஏறவிட்டு கைங்கர்ய சாம்ராஜ்யமாகிற
பகவத் அங்கீ காரத்தைபண்ணி சம்சார சம்பந்த ரூப பர்யந்தமாயுள்ள ஆச்சர்ய நாடகத்தை முடித்து விடும்
இது எழு சீர் ஆசிரிய விருத்தம் –
————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-