பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –5–6-

இப்படி எம்பெருமானைப் பிரிந்த வ்யஸனம் மிக்கு அந்த வியஸன அதிசயத்தாலே ஆத்ம தாரண ஷமை அன்றிக்கே இருந்த பிராட்டி
ஆத்ம தாரண அர்த்தமாக ஸ்ரீ கோபிகளைப் போலே வண் துவரைப் பெருமாளுடைய திவ்ய சேஷ்டிதங்களையும்
மற்றும் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரங்களையும் அநு கரித்து தரிப்போம் என்று அதிலே
இவள் படியைக் கண்ட திருத் தாயார் -இவள் சொல்லுகிற பாசுரங்கள் ஆச்சர்யமாய் இரா நின்றன –
இவள் பக்கல் எம்பெருமான் ஆவேசித்தானாகாதே
இவளுடைய அதி லோகமான ப்ரவ்ருத்திகள் இன்னபடி என்று அத்யவசிக்க முடிகிறது இல்லை என்று
வினவ வந்தவர்களை நோக்கிச் சொல்லுகிறாள் –

———————————————

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-

கடலோடி கூடின ஜகத்தை சஹாயாந்தர நிரபேஷமாக ஸ்ருஷ்டித்தேனும் நான் என்னும்
இஜ் ஜகத்து மதாத்மகம் -ஸ்வ தந்திரமாய் இருபத்தொரு பதார்த்தம் இல்லை என்னும்
இத்தை மஹாபலி அபஹரிக்க நான் அளந்து கொண்டேன் என்னும்
பிரளய அர்ணவத்திலே அழுந்தின இத்தை ஸஹாய நிரபேஷமாக எடுத்தேனும் நான் என்னும்
பூமி தான் பிரளயம் வாரா நின்றது என்று அறியாது இருக்க நானே அறிந்து திரு வயிற்றிலே வைத்துப் பரிஹரித்தேன் என்னும்
இவள் பக்கல் கடல் ஞாலத்து ஈசன் வந்து ஆவேசித்தானோ
இந்த பூமியிலே இருந்து வைத்து ஏன் மகள் மேன்மேல் எனச் சொல்லுகிற இவற்றை
லௌகிகரான உங்களுக்குச் சொல்ல உபாயம் உண்டோ என்கிறாள் –

————————-

கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2-

நான் கற்ற வித்யைகளுக்கு ஒரு முடிவு இல்லை என்னும்
எல்லாரும் விரும்பிக் கற்கின்ற வித்யைகள் நான் இட்ட வழக்கு என்னும்
அவற்றை யுண்டாக்கினேன் நானே என்னும்
அவற்றினுடைய தாத்பர்ய நிர்ணயம் என்னாலே என்னும்
வித்யா பலம் நானே என்னும்
அப்யஸிக்கப்படும் சகல வித்யா வேத்யனான சர்வேஸ்வரன் வந்து ஏறினானோ
அறிவில்லாத உங்களுக்கு அறியத் தொடங்கும் பருவத்தையுடைய இவள்
அனுசந்திக்கிறவற்றைச் சொல்ல விரகுண்டோ என்கிறாள் –

——————————

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீஎல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என்காரிகை செய்கின்றவே.–5-6-3-

அபரிச்சேதயமான பிருதிவ்யாதி பூத பஞ்சகமும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்
கடல் போலே எப்போதும் தர்ச நியாமான திரு நிறத்தை யுடையவன் வந்து ஏறினானோ
நமக்குத் தெரியாத நிலத்திலே புக்கு அவகாஹித்து என் மகள் பண்ணுகிற சேஷ்டிதங்கள் நீங்கள்
காண்கிற படிக்கு மேற்பட என்னால் சொல்லலாவது இல்லை என்கிறாள் –

———————————————

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-4-

வர்த்தமான கிரியைகளும் மேல் வருவதான கிரியைகளும் பண்டு செய்த கிரியைகளும் கிரியா பலம் புஜிப்பேனும்
கிரியா கர்த்தாக்களை அவற்றில் ப்ரவர்த்திப்பித்துப்பேனும் நான் என்னும்
இவள் கண்ணின் அழகாலும் அவன் ஆவேசித்தால் போலே இரா நின்றது
சிவந்த கனி போலே இருக்கிற வாயை யுடையவளாய் இருக்கிற சிறு பெண் பிள்ளை இடையாட்டத்தில்
ஆழம் காண மாட்டாதே படுபாடரான உங்களுக்கு எத்தைச் சொல்லுவேன் என்கிறாள் –

————————————

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.–5-6-5-

ஒருவருக்கும் தப்பச் செய்ய ஒண்ணாத படி இத்தை எல்லாம் ஒரு துணை இன்ரிக்கே காக்கின்றேன்
சாலியாதபடி கோவர்த்தந உத்தரணம் பண்ணினேன்
தப்பாதபடி கோலி அஸூரரை முடித்தேன்
ஒருவருக்கும் அறிய ஒண்ணாத என் படியை லோகத்தில் ஆவிஷ்கரித்து தர்ம புத்ராதிகள் ஐவரையும் காத்தேன்
நினைத்தபடி தப்பாமல் கடலைக் கடைந்தேனே என்னும்
ஒருவருக்கும் தன சாசனத்தைத் தப்ப ஒண்ணாத படியான சர்வேஸ்வரன் ஆவேசித்தானோ
ஸ்ரீ லஷ்மீ சமையான என் மகள் பகவத் குணங்களில் தப்பாமே அகப்பட்ட படிகளை கேட்டு அல்லது போகோம் என்று
நிர்பந்திக்கிற உங்களுக்கு என் என்று சொல்லுகேன் என்கிறாள்-

————————————–

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–5-6-6-

திரள் திரளான மூங்கிலை யுடைத்தான கோவர்த்தந கிரி தாரணம் முதலான ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்கள் எல்லாம்
நானே பண்ணா நின்றேன் என்னா நின்றாள்
தனித்தனி அநு பவிக்க முடியாமையாலே திரண்டு இருக்கிற அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன் ஆவேசித்தானோ
வேல் போலே இருக்கிற திருக் கண்ணை யுடையீராய் அவஹிதராய் இருக்கிற உங்களுக்கு தான் படுகிற பாட்டைப்
பிறரைப் படுத்த வல்ல திருக் கண் அழகையுடைய இவளுற்ற இவற்றை என் சொல்லுகேன் -என்கிறாள் –

———————————————————-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7-

இஜ் ஜகத்தில் என் படியை அறிந்து எனக்கு பந்துக்களாய் இருப்பார் ஒருவரும் இல்லை
அவர்கள் அப்படி இருந்தமை அறிந்து வைத்தே எனக்கு உறவாக நினைத்து இராதார் ஒருவரும் இல்லை
சிலர் என்னை ஆஸ்ரயிக்கும் படி பண்ணுவேன்
அநாஸ்ரயிக்குமவர்களில் ப்ரயோஜனாந்தர பரர்க்கு அவர்கள் வேண்டியவற்றைக் கொடுத்து அகற்றுவேன் நான்
அநந்ய ப்ரயோஜனரானவர்களுக்கு எல்லா பந்து க்ருத்யமும் பண்ணுவேன் நான் என்னும்
எத்தனையேனும் அளவுடையார்க்கும் முட்டக் காண ஒண்ணாத அத்யாச்சர்ய பூதனானவன் ஆவேசித்தானோ
ஈடுபட்டு அத்யந்த பாலையான என் மகள் சொல்லுகிறவற்றை உறவு முறையாரான உங்களுக்கு
என்ன பாசுரத்தாலே சொல்லுவேன் நான் என்கிறாள் –

———————————————————-

உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8-

ஜகத் பிரதானராக சாஸ்திரங்களில் சொல்லப்படுகிற சதுர்முக ப்ரமுவரும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்
கால தத்வம் உள்ளதனையும் பேசினாலும் பேசி முடிக்க ஒண்ணாத அழகை யுடையவன் ஆவேசித்தானோ
அதி லோகமான பேச்சைப் பேசுவதும் செய்து துக்க சைஹையும் இன்றிக்கே இருக்கிற
இவ்விலக்ஷணையான பெண் பிள்ளைக்குப் பிறந்த
அவசாதத்தை -சொல்லு சொல்லு என்று நிரந்தரமாகச் சொல்லுகிற லௌகிகரான உங்களுக்கு
ஏதென்று சொல்லுவேன் நான் -என்கிறாள் –

——————————————————

கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9-

கர்ம வஸ்யரை நலியுமா போலே நலியக் கடவதாய் கொடிதான கர்மங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்னும்
அவை நான் இட்ட வழக்கு என்னும்
பிரதி கூலர்க்கு கொடிதான பாபத்தை விளைப்பேன் நான் என்னும்
அநு கூலர்க்குகே கொடிதான வினையைத் தீர்ப்பெனும் நான் என்னும்
கொடியான இலங்கையை ஒரு படி அளித்தேன் என்னும்
பிரதி பஷத்துக்குகே கொடியனான பெரிய திருவடியை வாகனமாக யுடையவன் வந்து ஏறினானோ
இப்படி படுகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின என்னுடைய மகளுடைய ஒருப்பாடுகளை சொல்லு சொல்லு என்று
மிகவும் அலைக்கிற உங்களுக்கு என் என்று சொல்லுவேன் -என்கிறாள் –

——————————————

கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10-

கலப்பற்ற ஸூக ரூபமான சுவர்க்கமும் -ஸூக காந்தம் இன்றிக்கே துக்கமேயான நரகமும் -அபரிச்சின்ன ஸூக ரூபமான மோக்ஷமும்
கர்ம அநு குணமாக தேவாதி சரீர பிரவேசம் பண்ணக் கடவ ஆத்மாக்களும் -விசித்திர கார்ய ஜனன சக்தி யுக்தையான ப்ரக்ருதியும்
நான் இட்ட வழக்கு என்று சொல்லா நின்றாள் -ஸமஸ்த குணாத்மகனாய் வில்லிட்டு மின்னி தர்ச நீயமான
மேகம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடையவன் வந்து ஏறினானோ
அழகிய மாலையையும் மயிர் முடியையும் யுடைய என் மகளுக்குப் பிறந்த அவஸ்தைகளை கேட்க்கையிலே
ஒருப்படா நின்றுள்ள உலகத்தீர்க்கு என் சொல்லுவேன் -என்கிறாள் –

——————————————–

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை-அநு காரத்தாலே கிட்டின
மன்னு குருகூர்ச் சடகோபன் வாசிக கைங்கர்யமாய் ஆராய்ந்து சொன்ன ஆயிரத்துள் இப் பத்தும் வல்லவர்கள்
லோகத்தில் எல்லாரும் கொண்டாடும்படியான பெரும் செல்வத்தை யுடையராய்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரியமான வ்ருத்தி பண்ணப் பெறுவர் என்கிறார் –

———————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: