அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –5-5-

அஞ்சாம் திருவாய் மொழியில் -கீழ் -உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் என்று
அவனுடைய ஆஸ்ரித சம் ரக்ஷண சிந்தா யோகத்தை அனுசந்தித்து ஆஸ்வஸ்தராய் பூர்வ அநு பூதமான –
நல்கி என்னை விடான் -என்கிறபடியே தம்மை ஒரு காலும்
கைவிடாத நம்பியுடைய வடிவழகு ஸ்ம்ருதி விஷயமாய் ஆந்தர ப்ரீதியை ஜெநிப்பிக்க
அசாதாரண சிஹ்ன அவயவ வை லக்ஷண்யத்தையும் –
அலங்கார சோபையையும்
ஆஸ்ரிதரைக் காத்தூட்டும் திவ்ய ஆயுத பூர்த்தியையும்
பரத்வ ப்ரகாசகமான பரிஷ்க்கார பிரகாரத்தையும்
அதிசயித போக்யமான திரு முக திவ்ய அவயவ சோபையையும்
திரு முக திவ்ய அவயவத்தோடு சேர்ந்த திவ்ய ரூப புஜ வை லக்ஷண்யத்தையும்
தேஜோ மாயமாய் உத்துங்கமான திவ்ய விக்ரஹ யோகத்தையும்
சர்வ அவயவ ஸுந்தர்யத்தையும்
அசங்க்யேய ஆபரண சோபா விசிஷ்டமான அதிசயித போக்யதையையும்
அநந்ய கோசாரமாம் படி ஆந்தரமாகப் பிரகாசிக்கிற அதிசயித தேஜோ விசிஷ்டமான ப்ராப்ய விஷத்தையும்
அனுசந்தித்து -இந்த ஆந்தர அனுபவ ப்ரீதியோடே அலாப நிபந்தமான அப்ரீதியும் ஓக்க நடக்கையாலே
இவரை ஆஸ்வசிப்பிப்பதாக உத்யோகித்த ஸூஹ்ருத்துக்களையும் பரிவரையும் குறித்து ஸ்வ தசையை ஆவிஷ்கரித்து பிரகாரத்தை
நாயகனைப் பிரிந்த காமிநி யானவள் தத் ஸுந்தர்யாதி ஸ்மரணத்தாலும் தத் அலாப அர்த்தியாலும் ப்ரீதி அப்ரீதிகள் சமமாய் நடக்க
இவள் ஆர்த்தியை மீட்க்கைக்காக நியமித்த தோழிமாரையும் தாய்மாரையும் குறித்து
தான் இவ்விஷயத்தில் அகப்பட்ட படியைச் சொல்லி அவர்களுக்கு மறுத்து உரைத்த படியாய் இருக்கையாலே
கழற்று எதிர்மறை என்கிற துறையாலே அருளிச் செய்கிறார்

————————————————

முதல் பாட்டில் -நம்பியுடைய அசாதாரண சிஹ்னமான ஆழ்வார்களில் பிரபாகமான திவ்ய அவயவ
சோபையிலும் என்னெஞ்சு சகிதமாய் நடவா நின்றது என்கிறாள் –

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1-

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!–அன்னைமீர்காள் -பெற்ற நீங்கள் பிரியம் செய்யாதே நல்லது கண்டு
மேல் விழுந்த என்னை உகக்கப் பிராப்தமாய் இருக்க முனிகிறபடி எங்கனே
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-நம் குடிக்கு அசாதாரண பூதராய் தர்ச நீய வேஷரான திருக் குறுங்குடியிலே
கல்யாண பரிபூர்ணரான நம்பியை நான் அனுபவித்த பின்பு அவருடைய ப்ராப்ய பாவத்துக்கு அசாதாரண சிஹ்னமான
கோலம் -திவ்ய தேசத்துக்கு விசேஷணம் ஆகவுமாம்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடும் திருவாழியோடும் தாமரை போலே
தர்ச நீயமான திருக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–சிவந்த கனி போலே அத்விதீயமாய் இருக்கிற
திரு அதரத்தோடும் என் நெஞ்சு சகிதமாய் நடவா நின்றது –

——————————-

அநந்தரம் -நம்பியுடைய ஒப்பனை அழகும் தோளும் சர்வ தேசத்திலும் வந்து நின்று அனுபவ விஷயமாகா நின்றது -என்கிறாள் –

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே–என்னை நியமித்து வார்த்தை சொல்லாதே அனுபவித்தாலும்
குறி அழியாத உங்கள் நெஞ்சு போல் அன்றியே பாவ யுக்தமான என் நெஞ்சால் அனுபவித்து பாரிகோள்
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்–தெற்குத் திக்கில் நன்றான சோலையை யுடைத்தான
திருக் குறுங்குடியிலே நம்பியை -அவன் அருள் அடியாக நான் கண்ட பின்பு
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்–வடிவுக்கு பரபாகமாய் ப்ரஹ்ம வர்ச்சஸ ப்ரகாசகமான திரு யஜ்ஜோ பவீதமும் –
இரு பாடும் இலங்குகிற திரு மகர குண்டலங்களும் விலக்ஷணமான திரு மார்பில் கழற்றாத திரு ஆபரணமாக ஸ்ரீ வத்ஸமும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–எப்போதும் கழற்றாத திரு ஆபரண வர்க்கமும்
சதுர்வர்க்க பிரதமான நான்கு திருத் தோள்களும் நான் போன விடம் எங்கும் வந்து நில்லா நின்றன –

——————————————————————-

அநந்தரம் இவ்வழகை காத்தூட்டும் ஆயுத வர்க்கம் பஹிர் அந்த பிரகாசித்தும் போகிறது இல்லை -என்கிறாள்

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3-

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்-ஒரு வியாபார ஷமை இன்றியே ஸ்தப்தையாய் நில்லா நிற்கும் –
சொல்லிற்று அறியாத படி அறிவு அழியா நிற்கும் -ஆந்தர அநு சந்தானத்தாலே சிதிலை யாகா நிற்கும் என்று கொண்டு
பெற்ற தாய்மாராய் அடியிலே இப்பியத்திலே ப்ரவர்த்திப்பித்த நீங்களும் அப்ரிய வசனங்களைப் பண்ணா நின்றிகோள்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்–மலை போலே இருக்கிற மாடங்களை யுடைத்தான
திருக் குறுங்குடி நம்பியை வீர வேஷம் கண்டு உகக்கும் நான் அனுபவித்த பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்-வென்றியை யுடையவான வில்லும் கதையும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–ஒரு படிப் பட நின்று என் கண்ணுக்குள்ளே தோன்றி போகிறனவில்லை
இப்படி புறவாய வளவன்றியே நெஞ்சுக்குள்ளே நீங்குகிறனவில்லை

———————————————

அநந்தரம் பரத்வ ப்ரகாசகமான நம்பியுடைய வேஷ வை லக்ஷண்யமானது என் பார்ஸ்வஸ்த்தமாகா நின்றது -என்கிறாள்

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4-

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்-இவள் கண்ண நீர்கள் பேர நிற்கிறனவில்லை –
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-தேனை யுடைத்தான சோலைகளை யுடைத்தான
திருக் குறுங்குடி நம்பியை அவன் மேன்மை கண்டு உகக்கும் நான் அனுபவித்த பின்பு
தேங்கோள் சோலை என்று பாடமாகவுமாம்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்–
அநு பாவ்யமாய் ஸ்ரமஹரமான மாலா ரூபமாயுள்ள செவ்வித் திருத் துழாயும்
ஆதி ராஜ்ய ஸூ சகமாய் ஸ்ப்ருஹணீயமான திரு முடியும் -அம்மாலைக்கும் திரு முடிக்கும் தகுதியான திரு வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–திரு வரைக்குப் பாங்காய் தோன்றுகிற
பட்டுப் பரிவட்டமும் மேல் திரு ஆபரணமாக விடு நாணும்
உள்ளே பிரகாசியா நிற்க -கிட்டி அனுபவிக்கப் பெறாத பாபத்தை யுடையேனான
என்னுடைய பார்ஸ்வஸ்த்தங்களாகா நின்றன –

———————————-

அநந்தரம் நம்பியுடைய திரு முக அவயவ சோபையானது என் ஆத்மகதமாய்த் தோற்றா நின்றது -என்கிறாள் –

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்–அவன் வருகைக்கு சம்பாவனையுள்ள பார்ஸ்வத்தை நோக்கி நிற்கும் –
வரக் காணாமையாலே சித்திலையாகா நிற்கும் என்று இப்படி ஸ்நேஹத்தைப் பிறப்பித்த நீங்களும் ஸ்நேஹம் தவிருகைக்காக
முனிந்து வார்த்தை சொல்லா நின்றி கோளே
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்–பூர்த்திக்குத் தகுதியான கீர்த்தியை யுடைய திருக்குறுங்குடி நம்பியை –
அவருடைய கீர்த்தியிலே அகப்பட்ட நான் அனுபவித்த பின்பு
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்-திரண்ட ஜோதீஸ்ஸை யுடைத்தான தொண்டைப் பழம் போலே இருக்கிற
திரு அதரமும்-நீண்ட திருப் புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–அந்த திருப் புருவத்துக்குத் தகுதியான நீட்சியை யுடைத்தாய்
தாமரை போலே தர்ச நீயமான திருக் கண்களும்
நினைத்தபடி அனுபவிக்கப் பெறாத பாபத்தை யுடையேனான என்னுடைய ஆத்மகதமாகா நின்றது-

————————————

அநந்தரம் திரு முக சோபையோடே கூடின ரூப தேஜஸ் வைலக்ஷண்யம் என் நெஞ்சிலே பூர்ணமாயிற்று என்கிறாள் –

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6-

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்–அவன் வரக் காண விருக்கும் நம் குடிக்கு –
தான் காண த்வரிக்கிற இவள் இன்றைய அளவன்றியே காலதத்வம் உள்ளதனையும் கழிக்க அரிய
சிக்கென்ற பழி தான் ஒரு வடிவாய் இருக்கிறவளாய் இருக்கும் என்று தாயாரானவள் நம்பியைக் காண இடம் தருகிறிலள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-சோலை சூழ்ந்து ஸ்ரமஹரமான திருக் குறுங்குடியிலே
நம்பியை பழி புகலாம் படியான ப்ராவண்யத்தை யுடைய நான் கண்டா பின்பு
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்–அபி ரூபமாய் நீண்ட கற்பகக் கொடி போலே இருக்கிற திரு மூக்கும்
அதினுடைய பூ என்னலாம் படியாய்த் தாமரை போலே இருக்கிற திருக் கண்களும்
அதின் கனி என்னும்படி பழுத்த திரு அதரமும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–அதற்கு பரபாகமான நீல நிறத்தை யுடைய திரு மேனியும்
பச்சிலை மரம் பணைத்தால் போலே இருக்கிற நான்கு திருத் தோள்களும்
என் நெஞ்சிலே நிறைந்தன-

——————————————

அநந்தரம் நிரதிசய தேஜோ விசிஷ்டமாய் உத்துங்கமான ஸ்ப்ருஹனீய திவ்ய விக்ரஹத்தோடே நம்பி
என் நெஞ்சுக்குள்ளே திருக் கையும் திருவாழியுமாய் நின்றார் என்கிறாள் –

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்-நம்முடைய குடிக்கு இவள் பூரணமாய்
பிரபலமான பழி என்று தாயார் காண இடம் கொடுக்கிறிலள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-சிறப்பை யுடைத்தான கீர்த்தியை யுடைய திருக் குறுங்குடி நம்பியை
அக்கீர்த்தி அதிசயத்துக்கு அகப்பட்ட நான் அனுபவித்த பின்பு
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்-பூர்ணமான தேஜோ ராசியாலே சூழப்பட்டு
உத்துங்கமாய் ஸ்ப்ருஹணீயமான திரு வடிவோடே கூட
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–என் நெஞ்சுக்குள்ளே நிறைந்து நின்று விட்டான் –
அசாதாரண சிஹ்னமான திருவாழியும் அழகிய திருக் கையிலே உண்டாயிருந்தது –

————————————

அநந்தரம் – நம்பியுடைய சர்வ திவ்ய அவயவ சோபைகளும் என் முன்னே நில்லா நின்றன என்கிறாள்

கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8-

கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்–ஆற்றாமையால் கையுள்ளே அழகிய முகத்தை வையா நிற்கும்
அதற்கு மேலே சிதிலையாகா நிற்கும் -என்று இஸ் சைத்திலயத்துக்கு கிருஷி பண்ணின நீங்களும் முனியா நின்றி கோளே
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்-நம்பியுடைய நிழலீட்டாலே கருகின நிறத்தை யுடைத்தாய்
மாடங்களை யுடைத்தான திருக் குறுங்குடி நம்பியை
நைவே ப்ரக்ருதியான நான் கண்டபின்பு
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்-சிவந்த தாமரை போலே இருக்கிற திருக் கண்களும்
அநு பாவ்யமான கடி பிரதேசமும் முஷ்டி க்ராஹ்யமாம் படி சிறுகின இடையும் -இவ்வயவ சோபைக்கு ஆஸ்ரயமான திரு வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் –செறிவை யுடைத்தாய் நீண்ட குழல்கள் தாழ்ந்த பஜ சிகரங்களும் –
மொய்கொள் நீள் -பாட பேதம்
பாவியேன் முன்னிற்குமே.–-அபி நிவேச அநு ரூபமாக அனுபவிக்கப் பெறாத பாபத்தை யுடையேனான
என்னுடைய முன்னே நில்லா நின்றன –

—————————-

அநந்தரம் நம்பி அசங்க்யேய திவ்ய ஆபரண சோபா விசிஷ்டத்வத்தாலே அதிசயித
போக்யனாய்க் கொண்டு என் நெஞ்சு விட்டுப் போகிறிலன் என்கிறாள்

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்-அஸூர்யம் பஸ்யையாய்க் கொண்டு வளர்ந்த நீ
மனுஷ்யர் காண முன்னே நின்றாய் என்று
சம துக்கைகளான தோழிமாரும் ஹித பரைகளான தாய்மாரும் முனியா நின்றி கோளே
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்–ஸ்த்திரமான மாடங்களையுடைய திருக் குறுங்குடி நம்பியை
ஸ்த்ரீத்வம் பேணாமல் புறம்பு புறப்படும்படியான நான் கண்டபின்பு
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்–உத்தம அங்கத்தில் ஆதி ராஜ்ய ஸூ சகமாய் ஓங்கிய
திரு அபிஷேகம் முதலாய் அசங்க் யேயமாய் அணியப்பட்ட திவ்ய ஆபரணங்களை யுடையவன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–கன்னலும் பாலும் அமுதமும் போலே
நிரதிசய போக்யனாய்க் கொண்டு வந்து என் நெஞ்சம் விட்டுப் போகிறிலன் –

———————————————-
அநந்தரம் நித்ய ஸூ ரி போக்யமாய் அத்யுஜ்ஜ்வலமான ப்ராப்ய திவ்ய விக்ரஹமானது
அநந்ய கோசாரமாம் படி என் அகவாயிலே பிரகாசியா நின்றது என்கிறாள்

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்–இவள் கை கழிய விஞ்சின காதலை
யுடையவளானாள் என்று அன்னையானவள் நம்பியைக் காண இடம் தருகிறிலள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்–ஆஸ்ரிதரை அநந்யார்ஹம் ஆக்கும் அவிகலமான
கீர்த்தியையுடைய திருக் குறுங்குடி நம்பியை அபி நிவேச அதிசயத்தை யுடைய நான் கண்ட பின்பு
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே–ஸூரி சங்கங்களானவை பரஸ்பரம் சங்கீ பவித்து
சேஷ விருத்தி பண்ணி அனுபவிக்கும் படி தேஜோ ராசி மத்யத்திலே உச்சரிதமாய்த் தோற்றுகிற
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–தோற்றுகிற அத்விதீயமான ப்ராப்ய திவ்ய விக்ரஹமானது
அப்படியே என் நெஞ்சுக்குள்ளே தோன்றா நின்றது
இது எத்தனையேனும் அறிவுடையார்க்கும் ஸ்வ யத்தனத்தாலே அறிய அரிது

———————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யசித்தவர்களுக்கு பகவச் சேஷத்வம் ஆகிற
ஸ்வரூப லாபம் பலமாக அருளிச் செய்கிறார்

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி–ஸ்வ சாமர்த்தியத்தால் அறிய நினைத்து இருப்பார்க்கு
அறிய ஒண்ணாத படியான ஸ்வாமியாய்
அதுக்கு ஸூசகமான திருவாழியை அழகிய திருக் கையிலே யுடையவனை ப்ரேம பாரவஸ்யம் தோற்றும்படி அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன-பரிமள உத்தரமாய் ஸ்லாக்யமான புஷ் பங்களைப் போலே
ஆராய்ந்து அனுபவ யோக்கியமான ஞானாதி வை லக்ஷண்யத்தை யுடையராய் திரு நகருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
நன்குருகூர் என்று திவ்ய தேச அழகாகவுமாம்
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்–ஆயிரத்தில் திவ்ய ஆயுத அவயவ ஆபரண ரூப சிஹ்னங்களை யுடைய
திருக் குறுங்குடி அதன் மேல் இவை பத்தும்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–ஞான பிரகாசம் விருத்தம் அப்யஸித்து அர்த்த அனுசந்தானம் பண்ண வல்லவர்கள்
அகாயமான கடல் சூழ்ந்த பூமிக்குள்ளே பகவத அசாதாரண சம்பந்த அனுபவ தத்பரராய்கே கொண்டு வர்த்திப்பார்கள்

——————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: