பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –5–4-

இப்படி மடலூருகையிலே அத்யவசித்து இருந்த பிராட்டி மடலூர ஷமை அல்லாதபடி அத்யந்தம் அவசன்னையாய்

———————————–

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–5-4-1-

சர்வ ஜந்துக்களும் ப்ரஸூப் தமாய் சர்வ லோகமும் அந்நிய கார பரி பூரிதமாம் படி ஒரு நீளிரவு வந்து எங்கும் முடிகிறது இல்லை
இந்த தசையில் அந்தப் பரம காருணிகனான பாம்பணையான் வாராது ஒழிந்தான்
இனி நான் எங்கனே தரிக்கும் படி என்கிறாள் –

————————————————-

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-

ஆழ்கடல் மண் விண் மூடி மா விகாரமாய் நீண்டது -காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வருகிறிலன்
பாவியேன் நெஞ்சமே! நீயும் எனக்குத் துணை அன்றியே போனாய் -ஆவி காப்பார் இனியார்?-என்கிறாள்

———————————-

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-

மட நெஞ்சமே நீயும் துணை இன்றியே போனாய் -நீளிரவும் ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீளா நின்றது –
பிரதிகூல தஹன ஸ்வ பாவமான ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லையுடைய என் காகுத்தன் வருகிறிலன்
வாராது ஒழிந்தால் தான் முடியலாம் இறே –
முடிவான் என்றால் முடிய ஒண்ணாத படி பாபத்தினால் பராதீனை யாய்ப் பிறந்தேன் என்கிறாள் –

—————————————–

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4-

நான் படுகிற இந்த மஹா துக்கத்தை காண்கையில் முடிகையே நன்று என்று பார்த்து ஆதித்யன் பாராதே தன்னைக் கொண்டு
இந்த தசையில் தன்னுடைய காருண்ய ஸுசீல்ய ஸுந்தர்யாதி குணங்களால் என்னைத் தோற்பித்து எனக்குப்
பரம போக்யனாய் இருந்தவன் வருகிறிலன் -வாராது ஒழிந்தால் அளவிறந்த சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னை -என்கிறாள் –

———————————

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5-

அன்னையரும் தோழியரும் நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சினார் -ஆர் என்னை ஆராய்வார் –
சர்வ அவஸ்தையிலும் எனக்குத் துணையாய் இருக்கக் கடவ கார் அன்ன மேனி நம் கண்ணனும் வருகிறிலன்
வாராது ஒழிந்தால் இவ்வியசனத்துக்கு ஆஸ்ரயமான என் பேர் முடியப் பெறலாம் இறே
நான் முடிந்த பின்பும் என்னுடைய பேரானது முடிகிறது இல்லை என்கிறாள்

——————————————————

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6-

முடிந்த பின்பும் செல்லுகிற விஸ்லேஷ வியசனம் ஒன்றும் பொறுக்கலாய் இருக்கிறது இல்லை
இந்த ராத்திரியானா யுகமானது அவன் வரிலும் அவனைக் காண ஒண்ணாத படி என் கண்ணை மறைத்துக் கொண்டு நில்லா நின்றது
இவ்வன்யகாரம் எல்லாம் போம்படி நிரதிசய தீப்தி யுக்தமான திருவாழியை ஏந்திக் கொண்டு அவன் வருகிறிலன்
இந்த தசையில் இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் என்கிறாள்

—————————————

காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?–5-4-7-

மஹா அந்தகார வர்ஷா உபேதையாய் முடிவில்லதொரு யுகமாய்க் கொண்டு செல்லா நின்ற ராத்திரியிலே
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றாது ஒழிந்தான் -காப்பார் ஆர் இவ்விடத்து?
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ -என்று தன்னுடைய நிரவதிக வ்யாசனத்தாலே கூப்பிடுகிறாள்

———————————————

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8-

ஓர் இரவு ஏழூழியாய் வந்து எனதாவியை மெலிவிக்கும் -கருதுமிடம் கைந்நின்ற சக்கரத்து என் கண்ணனும் வருகிறிலன்
ஹேமந்த காலத்தில் அதி சீதளமான தென்றல் வெஞ்சுடரில் தானடும்- தெய்வங்காள் என் செய்கேன் -என்கிறாள் –

—————————————

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

வெஞ்சுடரில் தான் அடா நின்றது வீங்கிருளின் நுண் துளியாய்-அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றுகிறதில்லை
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வருகிறிலன் -இனி
நெஞ்சிடர் தீர்ப்பார் யார்? முடியப் பெறாதே கால தத்வம் எல்லாம் நின்று உருகா நின்றேனே.–என்கிறாள் –

—————————————-

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10-

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம் சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று ஆகிலும் அவன் நிறமாக
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–என்கிறாள் –

————————————–

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

ஸ்வ ஆத்ம அனுபவ ஜெனித நிரவதிக ஆனந்த மஹிம ப்ரஸக்தஸ் தைமித்யத்தாலே நிஸ்தரங்க மஹார்ணவ
எம்பெருமானைச் சொல்லி அழற்றின இத்திருவாய் மொழியில் சொன்ன ஆர்த்தியை அனுசந்தித்தார் எங்கனே தரிக்கும் படி என்கிறார்

———————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: