பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –5–3-

இப்படி ஆஸ்ரித வாத்சல்யாதி யனவதிக கல்யாண குண விபூஷிதனாய் இருந்த எம்பெருமானோடே ஸம்ஸ்லேஷிக்க
ஆசைப்பட்டுப் பெறாதே சிரகாலம் அவசன்னையாய் இருந்தாள் ஒரு பிராட்டி தன்னுடைய வ்யாசனத்தைப் பொறுக்க மாட்டாமையாலே
மடலூர்ந்தாகிலும் அவனோடே சம்ச்லேஷிக்க வேணும் என்று மநோ ரதித்து மடலூருகையிலே வியவசிதையாய் இருந்த இடத்தில்
இவளுடைய தோழியானவள் -நீ ஆசைப்படுகைக்கு ஈடான சவுந்தர்யாதி கல்யாண குணங்கள் அவனுக்கு உண்டோ –
உண்டானால் தான் அவனை யுத்திஸ்ய மடலூருகை யுக்தமோ -இவ்வூர் எல்லாம் உன்னைப் பழி சொல்லாதோ என்ன –

—————————————

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

நிரதிசய நிர்மலா ஜ்யோதிஸ் ஸுந்தர்ய ஸுசீல்யாதி அசங்க்யேய கல்யாண குண கண மஹோததியாய்
இருந்த பரம புருஷனை ஆசைப்பட்டுப் பெறாதே அறிவழிந்து எத்தனை காலமுண்டு தோழீ
ஆனபின்பு எனக்கு ஒரு யுக்த அயுக்தத்தை யுண்டோ -என்னை ஏசுகையிலே தீர்ந்து இருக்கிற ஊரவர் கவ்வை தான்
இப்படி அறிவிழந்து இருக்கிற என்னை எத்தைச் செய்வது என்று தோழியைக் குறித்துச் சொல்லுகிறாள்

———————————————–

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-

எம்பெருமான் தன்னுடைய அதி சீதளமாய் -சர்வ சத்வ மநோ ஹரமாய் -அருண கமல சத்ருசமான அழகிய திருக் கண்களைக் காட்டி
என்னைத் தோற்பித்துப் போனான் -அவனை சம்ச்லேஷிக்கப் பெறாமையாலே தத் ஸம்ச்லேஷ ஜெனிதமான
உஜ்ஜ்வல்யமும் இழந்து மேனி மெலிவெய்தி தத் சம்ச்லேஷத்தால் புதுக் கணித்த என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப் பூர்ந்த-
இனி நம்மை என் செய்யும் உஊரவர் கவ்வை தோழீ என்கிறாள் –

—————————————–

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

ஆகிலும் மடலூருகை நமக்குப் போராது -என்று தோழி சொல்ல -தன்னுடைய அதி தைவ அதி மானுஷ திவ்ய சேஷ்டிதங்களாலும்
அழகாலும் என்னை நிறை கொண்டான் -ஆனபின்பு பேர்ந்தும் பெயர்ந்தும் அவன் திறம் அல்லது மற்று ஏதேனும் சொல்லிலும் கேளேன் –
நான் ஏதேனும் ஒன்றைச் சொன்னால் அத்தைச் செய்கையிலே எனக்கு முற்படவே துணிந்து இருக்கக் கடவ நீ என்னை பிரதிப்பந்திக்கலாமோ
நீ பிரதிபந்திக்கிறது ஊரவர் நம்மைப் பழி சொல்லுவார் -என்று இ றே -அது தத் குண பராஜிதரான நம்மைச் செய்வது என் -என்கிறாள் –

———————————–

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

இப்படி தன்னைப் பிரிந்து அத்யந்தம் அவசன்னையாய் இருக்கச் செய்தே தன்னுடைய லோபத்தாலே தன்னை உனக்குக் காட்டித் தராதே
இருக்கிற அவனை ஆசைப்படுகிறது தான் என் -என்று தோழி சொல்ல -பிரதிபந்தக சத ஸஹஸ் ரங்கள் உளவாய் இருக்கச் செய்தே
அவற்றையே வர்த்தகமாகக் கொண்டு தன் திருவடிகளிலே நிரவாதிகமான அபி நிவேசத்தை எனக்கு விளைவித்த
காரமார் மேனி நம் கண்ணனையே தோழீ லுப்தன் என்று சொல்லுகிறது என்கிறாள் –

———————————————

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

நீ சொன்ன படியே -அவன் லுப்தன் -நிர்க்க்ருணன்-துஷ் பிராபன்-வஞ்சகன் -துரவகம ஸ்வரூப ஸ்வ பாவ சேஷ்டிதன்-
மற்றும் சத சஹஸ்ர தோஷங்களை யுடையவனாகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடைக்கும் -என்னே
ஒரு நெஞ்சினுடைய அபி நிவேசமே இது என்று பிராட்டி அருளிச் செய்ய -தோழியானவள் -இப்படி அபி நிவேசிக்கை ஈடோ
அன்னைமார் பொடியில் செய்வது என் என்ன -விரஹ அக்னியாலே தக்தராய் இருக்கிற நம்மை எத்தைச் செய்வது -என்கிறாள் –

——————————————-

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

ஸ்வபாவத ஏவ நிரஸ்த ஸமஸ்த சாம்சாரிக ஸ்வ பாவராய் அஸ்கலித ஜ்ஞானரான சேஷ சேஷாசன வைனதேயாதி அசங்க்யேய
பரம ஸூரிகளால் அநவரத பரிசரித சரண யுகளனாய் இருந்து வைத்து அதி ஷூத்ர மனுஷ்ய சஜாதீய தயா அவதீர்ணனாய்
வண் துவராபதித் திரு நகரியிலே ஆஸ்ரித பரம ஸூலபனாய்க் கொண்டு எழுந்து அருளி இருந்த ஸ்ரீ வஸூ தேவர் திருமகனுடைய
கல்யாண குணங்களாகிற வலையுள்ளே யகப்பட்டேன்-இனியென்னை அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என்
தோழிமீர் என்னை இனி யுமக்கு ஆசை இல்லை என்கிறாள் –

———————————————–

வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

இப்படி தன் நிலைமையை மெய்யாகச் சொன்ன பின்பு இனி இவளால் ஒரு செயல் இல்லை என்று கொண்டு இவளுடைய அத்யாவசாயத்தைத்
தோழி இசைந்த பின்பு -அவளைக் குறித்து தன்னுடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் ஆகிற வலையுள்ளே என்னை அகப்படுத்தி
என்னுடைய நெஞ்சைக் கோவிக் கொண்டு ஆரும் செல்ல ஒண்ணாத தொரு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற
ஆழிப் பிரான் தன்னை கலை கொளகல்குல் தோழி அவனுக்குக் குண ஹானி சொல்லுகிற இந்தத் தையலார் கண் எதிரே
நம் கண்களால் கண்டு தலையில் வணங்கவுமாம் கொலோ என்கிறாள் –

————————————————–

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

பூதநா சகட யாமளார்ஜுன குவலயா பீட ப்ரப்ருதி ஆஸ்ரித விரோதி நிரசன ஏக ஸ்வ பாவனாய் இருந்தவனை
குண ஹீனன் என்று சொல்லுகிற அன்னையர்
இவனை யாகாதே பிரணயித்வ வாத்சல்ய காருண்யாதி குண ரஹிதன் என்று சொல்லுவது
என்று லஜ்ஜித்துத் தலை எடுக்க மாட்டாதே இருக்கும்படி -எந்நாள் கொலோ? நாம் உறுகின்றது தோழீ! -என்கிறாள்

—————————————————-

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு-ஒருவருக்கும் செல்ல ஒண்ணாத திரு நாட்டிலே
எழுந்து அருளி இருக்கிற தேவ பிரான் தன்னை–அயர்வறும் அமரர்களும் கூட தேறாததொரு படி
தோழீ! ஆணை-அவனை உலகு தோறு அலர் தூற்றி மற்றும் செய்யலாம் மிறுக்குகள் எல்லாம் செய்து
குதிரியாய் மடல் ஊர்தும் என்கிறாள் –

—————————————

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார் நாவும் கூட மடங்காதா பழிகளைத் தூற்றி நாடும் இரைக்க-
யாம் மடலூர்ந்தாகிலும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-என்கிறாள்

———————————————-

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

ஓதம் கிளறுகிற கடல் போலே இருந்த திருமேனியை யுடைய ஸ்ரீ கண்ணபிரான் தன்னை விரைக்கொள் பொழில்
குருகூர்ச் சடகோபன் சொல் நிரைக்கொள் அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தும் உரைக்க வல்லார்க்கு –
இத்தருவாய் மொழியைச் சொல்ல தங்கள் இருந்த தேசமே தங்களுக்குத் திரு நாடு என்கிறார் –

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: