அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –5-4-

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் -தம்முடைய அனுபவ அபி நிவேசத்தாலே ஸத்வரராய்க் கொண்டு ஸ்வரூப அநநு ரூபமான
ஸ்வ பிரவ்ருத்தியாலே யாகிலும் அவனைப் பெறுவதாக உத்யோகித்த இவர்
அனுபவ யோக்கியமான காலம் ஸந்நிஹிதமாய் இருக்கச் செய்தேயும்
அவன் அசன்னிஹிதனாய் இருக்கையாலே அத்யந்த ஆர்த்தராய் ஒரு ப்ரவ்ருத்தி ஷமர் அல்லாதபடி மிகவும் அவசன்னராய்
விளம்ப ஷமர் அல்லாமையாலே இவ்வவஸ்தையிலே அவன் முகம் காட்டி ரஷிக்கைக்கு உடலான
அகில ஜகத் ரக்ஷண அர்த்த பிரவ்ருத்தியையும்
ஆபி ரூப்ய ப்ரகாசகமான பவ்யதையையும்
அநிஷ்ட நிராசகத்வத்தையும்
அபீஷ்ட லாபத்தாலே புதுக் கணித்த அவயவ சோபாதியால் யுண்டான அத்யந்த தீப்தியையும்
உபகாரக விக்ரஹ யோகத்தையும்
ஸ்த்திரை பரிகரகண குணவத்தையும்
ஆகாங்க்ஷா ஜனகமான அசாதாரண சிஹ்னத்தையும்
ஆஸ்ரித அர்த்தமாக ஆயுதம் எடுத்துக் கார்யம் கொள்ளும் ஆகாரத்தையும்
அதிசயித ஐஸ்வர்யத்தையும்
அநந்யார்ஹம் ஆக்கும் அபதான விசேஷத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான ஈஸ்வரன் இவ்வஸ்தையில் வந்து ஸம்ஸ்லேஷித்து ரஷிக்கிறலன் –
முடிகைக்கும் யோக்யதை இல்லாதபடி பராதீனமான இவ்வாத்மாவை ரஷிக்கும் விரகு என் என்று கால விளம்பம் பொறாமல்
ஆர்த்தராய்க் கூப்பிட்ட பிரகாரத்தை அபிமத நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால்
இரவு நெடுமைக்கு இரங்கிக் கூப்பிட்ட நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

————————–

முதல் பாட்டில் ஜகத்தெல்லாம் இருளாம்படி ஏக ராத்ரியாய் நீண்டது -சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரன்
வந்து ரஷிக்கிறிலன் -இனி இவ்வாத்மாவை ரஷிப்பார் யார் என்கிறாள்

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–5-4-1-

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்–பழி சொல்லும் அயலாரோடு ஹிதம் சொல்லும் தாய்மாரோடு-
சம துக்கைகளாய் உஸாத் துணையான தோழிமாரோடு
வாசியற ஒரு முகத்தில் தரியாத படி ஊராக எல்லாரும் உறங்கி -புறம்பே ஒரு பதார்த்த தர்சனத்தாலே
தரியாத படி லோகமடைய செறிந்த இருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்–நீர் என்று பேர் பெற்றவை எல்லாம் ஜல சர சத்தவங்களினுடைய கோலாஹலம்
இல்லாமையால் அலை அடங்கித் தெளிந்து ஒரு சப்த ஸ்ரவணம் இல்லாதபடியாய் அஹோராத்ர விபாகம் அற்று ஏகாரமாய்
வளர்ந்த ராத்ரியேயாய் ஓர் அவதி காண ஒண்ணாதபடி நீண்டு விட்டது -இவ்வளவில்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்–பிரளய ஆபத் பதையான பூமியை எல்லாம் திரு வயிற்றிலே வைத்து
ரஷித்தவனாய் சேஷ பூதனான திருவனந்த ஆழ்வானை படுக்கையாகக் கொண்டு வடிவு கொடுத்து ரஷிக்கையாலே
நமக்குத் தஞ்சமானவன் வந்து முகம் காட்டி ரக்ஷிக்கிறிலன்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–என்னே -ரக்ஷகன் உதவாத பின்பு அனுபவ விநாஸ்யம் அல்லாத
வலிய பாபத்தை யுடையேனான என்னுடைய ஆத்மாவை ரஷிப்பார் ஆர் –
எல்லே =என்னே என்று விஷயத்தை ஸூசகம்
உறங்குகின்ற உஊரார் காக்கவோ
ஓர் இருள் விழுங்கின லோகம் காக்கவோ
ஜடமான ஜல தத்வம் காக்கவோ
பாதகமான தீர்க்க ராத்திரி காக்கவோ -என்று கருத்து –

———————————

அநந்தரம் -தன்னுடைய ஆபி ரூப்யத்தை பிரகாசிப்பித்து ஆஸ்ரித பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணனும் வருகிறிலன்
நெஞ்சே நீயும் விதேயமாய் இருக்கிறிலை-இனி பிராண ரக்ஷணம் பண்ணுவார் ஆர் என்று
நெஞ்சைக் குறித்துச் சொல்லுகிறாள் –

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-

ஆழ்கடல் மண் விண் மூடி–ஆழ்ந்த கடலையும் பூமியையும் ஆகாசத்தையும் மூடி -அவ்வளவில் நில்லாதே
அகில லோகத்தையும் விளாக் கொலை கொள்ளும்படி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்–பெரிய விகாரத்தை யுடைத்தாய்க் கொண்டு அநேகம் ஆதித்யர்களாலும்
பேதிக்க அரிதான சிக்கெனவை யுடைத்தான தமோ மய ராத்ரியேயாய் முடிவற வளர்ந்தது
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்-நெய்தலொடு சேர்ந்த நிறத்தை யுடையனாய் அந்நிறம் எனக்கு
ஸ்வம் மாம் படி பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணனும் இவ்வளவில் வருகிறிலன்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–பவ்யனும் அபவ்யனாம்படியான பாபத்தை யுடையேனான
என்னுடைய நெஞ்சமே -அவனைப் போலே நீயும் அநு கூலித்து இருக்கிறிலை
ஆவி காப்பார் இனியார்?-ரக்ஷகனான அவனும் உதவாதே உஸாத் துணையான நீயும் உதவாத பின்பு
பிராணனை காப்பார் ஆர் -ஒருவருமே இல்லை என்று கருத்து –

—————————————-

அநந்தரம் அநிஷ்ட நிவர்த்தன சீலனான சக்ரவர்த்தி திருமகன் வருகிறிலன் -பராதீனை யாகையாலே
முடிய விரகு அறிகிறிலேன் என்று நெஞ்சைப் பார்த்துச் சொல்லுகிறாள் –

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! -நெஞ்சமே சர்வ காரியத்துக்கும் பிரதான காரணமான நீயும் விதேயமாய் இருக்கிறிலை
நீளிரவும் ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்–பண்டே நீண்டு வருகிற ராத்திரியும் ஓயும் காலம்
இன்றியே கல்பமாய்க் கொண்டு வளர்ந்து விட்டது
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்–ஆஸ்ரித விரோதிகளைச் சுட்டுப் பொகடுவதான கடிய ஸ்ரீ சார்ங்கத்தை யுடையனான
பர உபகார சீலமான குடியிலே பிறந்த சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்கு உதவினால் போலே வந்து உதவுகிறிலன்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–அவன் உதவாமைக்கு அடியான பிரபல பாபத்தை யுடையேனான நான்
முடியும் போதும் ஸ்வ தந்திரம் இல்லாத பெண்ணாய்ப் பிறந்து முடியும் பிரகாரம் அறிகிறிலேன்

—————————–

அநந்தரம் அபேக்ஷித்த பூமியை அளந்து கொண்ட ப்ரீதியாலே புதுக் கணித்த அவயவாதி சோபையாலே செருக்கனான
த்ரிவிக்ரமன் வருகிறிலன் -அபரிச்சின்னமான என்னுடைய சிந்தா ரோகத்தைத் தீர்ப்பார் ஆர் -என்கிறாள் –

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4-

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று-பர தந்த்ரைகளாய் மிருது ஸ்வ பாவைகளான பெண்ணாய் பிறந்தார் பிராபிக்கிற
துஸ் ஸஹமான மஹா துக்கத்தை காண மாட்டுகிறிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் -உதய காலத்தில் தர்ச நீயமான தேஜஸ்ஸை யுடைய ஆதித்யன் -ஈஸ்வர அநு விதானம் பண்ணி
வரும் காலத்திலும் வராதே -ஆராய்ந்தாலும் அறிய ஒண்ணாத படி ஒளித்துப் போனான்
இம் மண்ணளந்த-இந்த பூமியை தனக்கேயாம்படி அளந்து கொண்ட ப்ரீதியாலே
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்-பரந்த திருக் கண்களையும் சிவந்த திரு ஆதாரத்தையும் யுடையனாய்
அந்த பூமியைப் போலே இவ்வயவ சோபையாலே எம் போழ்வாரையும் அநந்யார்ஹம் ஆக்கி அத்தாலே காளமேகம் போலே ஸ்யாமளமான
திரு வடிவை யுடையனாய் -நினைத்தது முடித்த ப்ரீதியாலே ரிஷபம் போலே செருக்கனாய் இருக்கிற த்ரிவிக்ரமன் வருகிறிலன்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–நினைவுக்கு அவ்வருகே விஞ்சி
அவாங்மனஸ் அகோசரமான மநோ ரத வியாதியை என்னை தவிர்ப்பார் ஆர் –

——————————-

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5-

அன்னையரும் தோழியரும்-பரிவராய் வந்து ஆராயும் தாயமாரும் ஸுஹார்த்தத்தாலே தோழிமாரும்
நீர் என்னே என்னாதே -இவள் நீர்மை ஏதாய் இருக்கிறது என்று நிரூபியாதே என்று நிரூபியாதே
நீர் என்னே என்னாதே என்று -நீர் என் செய்தீர் என்னாதே என்றுமாம் –
நீளிரவும் துஞ்சுவரால்–தீர்க்கையான ராத்திரி முழுக்க உறங்கா நின்றார்கள்
அவர்கள் ஆராயாத அளவிலும் ஆராயக் கடவனாய்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்–அதிசயித உபகார சீலமான காளமேகம் போலே இருக்கிற திருமேனியை யுடையனாய்
நமக்கு பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணனும் வந்து ஆராய்கிறிலன்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–ப்ராப்தராய் ஆராய்வாரும் ஆராயாமைக்கு ஈடான பிரபல பாபத்தை
யுடையேனான எனக்கு பின்பு நின்று நாம மாத்திரம் என்னை முடிய ஓட்டுகிறது இல்லை
ஆர் என்னை ஆராய்வார்? -ஆனபின்பு என்னை ஆராய்வார் ஆர் -ஒருவரும் இல்லை -என்றபடி
அத்யந்த அவசாதம் பிறந்த அளவிலும் இன்னாள் கிடந்தாள் என்கிற நாம மாத்ரமே ஸத்பாவ ஸூசகம் என்று கருத்து
வல்வினையேன் பின்னின்று –ஆர் என்னை ஆராய்வார் என்று அந்வயிக்கவுமாம் –

——————————————–

அநந்தரம் அபி நிவேசமும் ராத்திரியும் நலியா நிற்க ஸ்த்திரமான ரக்ஷண உபகரணத்தை யுடையவன் வருகிறிலன்
என்னுடைய ஆத்மாவை ரஷிப்பார் ஆர் என்கிறாள் –

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6-

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்–பின் தொடர்ந்து விடாமல் நடக்கிற அபி நிவேசமாகிற நோயானது
தனக்குப் பிறப்பிடமான நெஞ்சை மிகவும் அழியா நின்றது
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்–முன்னே நின்று ராத்ரியாகிற கல்பமானது கண்ணானது புதையும்படி மறைத்தது
இப்படி பின்னும் முன்னும் விரோதியான அளவில்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்–ஆஸ்ரிதருடைய வினையைக் கடிகைக்கு நித்ய ஸந்நிஹிதமான திருவாழியை யுடையனாய்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே தன்னை என் போல்வார்க்கு ஸ்வம் மாக்கின ஸ்ரீ கிருஷ்ணனும் வருகிறிலன்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–நிரந்தர துக்க அனுபவம் பண்ணா நின்றாலும் அதுக்கு இளையாது இருக்கிற
என்னுடைய நித்தியமான இந்த ஆத்மவஸ்துவை இவ்வஸ்தையிலே ரஷிப்பார் ஆர்
இந்நின்ற என்று பாடமாய் இந்த நித்தியமான ஆத்மவஸ்துவை என்றுமாம்
நித்யத்வமும் துக்க அனுபவத்துக்கு உறுப்பாயிற்று -என்று கருத்து –

———————————

அநந்தரம் தர்சன ஆகாங்ஷா ஜனகமான அசாதாரண சிஹ்னத்தையுடைய சர்வேஸ்வரன் வந்து தோன்றுகிறிலன்
இந்த மஹா அந்தகாரமான ராத்திரியிலே என் செய்கேன் என்று உறங்காத தைவங்களை நோக்கிக் கூப்பிடுகிறாள் –

காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?–5-4-7-

காப்பார் ஆர் இவ்விடத்து? -ரக்ஷகன் உதவாத இந்த அவஸ்தையில் ரஷிப்பார் ஆர்
கங்கிருளின் நுண் துளியாய்ச்–எல்லை நிலமாகச் செறிந்த இருளையும் நுண்ணிதான பனித்துளியையும் உடைத்தாய்
கங்கு-எல்லை நிலம்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்-அதி தூரமான பாலதுத ஸ்வ பாவத்தை யுடைய
கல்பமாய்க் கொண்டு செல்லா நிற்கிற ராத்ரியிடத்து
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்-அழுக்கற்ற ஸ்வ பாவத்தை யுடைத்தாய் வெளுத்த ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
திருவாழியையும் யுடையனானவன் – தூய்மை -அழுக்கறுதி/ பால் என்று ஸ்வ பாவம் –
பன்னெடும் சூழ் சுடர் நாயிற்றோடு பான்மதி ஏந்தி -என்கிறபடியே சந்த்ர ஆதித்யர்களைக் கொண்டு வருமா போலே வந்து தோன்றுகிறிலன்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?–அக்னி போலே தாஹந ஸ்வ பாவமாய் பிரபலமான பாபத்தை யுடையேனான நான்
என் துக்கம் கண்டு இமை கொட்டாமல் பார்த்து இருக்கிற தேவதைகாள் எத்தைச் செய்வேன்
ரஷ்யமான என்னால் ரஷீத்துக் கொள்ள ஒண்ணாது என்று கருத்து

——————————————–

அநந்தரம் ஆஸ்ரித விரோதி நிவர்த்தனத்தில் ஆயுதம் எடுத்துக் கார்யம் கொள்ளும் ஸ்ரீ கிருஷ்ணனும் வருகிறிலன் –
அதுக்கும் மேலே தென்றலும் நலியா நின்றது -என் செய்வேன் என்று அந்த தைவங்களைப் பார்த்துச் சொல்லுகிறாள் –

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8-

தெய்வங்காள் என் செய்கேன்? -உணர்த்தியோடே இருக்கிற தைவங்காள்-ஒரு பிரவ்ருத்தி ஷமை அல்லாத நான்
என்னுடைய ரக்ஷணத்தில் எத்தைச் செய்வது –
ஓர் இரவு ஏழ் ஊழியாய்–ஒரு ராத்திரி ஏழு கல்பமாய்க் கொண்டு
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்–புத்தி பூர்வகமாக முன்னே வந்து நின்று விரஹ க்லிஷ்டமான
என்னுடைய பிராணனை க்ருசமாக்கா நிற்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்–பகலே இரவை அழைக்க என்னிலும் நினைவு அறிந்து கார்யம் செய்யும் படி விதேயமான
திருவாழியை யுடைய என் ஸ்ரீ கிருஷ்ணனும் அத்தைக் கொண்டு ராத்திரி போம்படி வருகிறிலன் -அவன் வராதது அறிந்து
கை வருகை -நினைத்தபடி கார்யம் கொள்ளலாகை
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–நலிய வருவாரைப் போலே தடவுகிற குளிர்ந்த தென்றலானது
வெவ்விய அக்னியில் காட்டிலும் சூடா நின்றது -அக்னி போலே என்றுமாம் –
தை வருதல் -தடவுதல் –

————————————————

அநந்தரம் அதிசயித அந்தகாரமான ராத்ரியானது நலியா நின்றது -ஆதித்ய ரதம் தோன்றுகிறதில்லை –
இவ்வளவில் அத்ய பங்குர ஐஸ்வர்ய விசிஷ்டனான புண்டரீகாக்ஷன் வருகிறிலன்
சிதிலையாகிற என்னுடைய மநோ துக்கத்தைப் போக்குவார் யார் என்கிறாள் –

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்–வீங்கிச் சிதைத்த இருளை யுடைத்தாய் நுண்ணியதான பனித் துளியை
உடைத்தாய்க் கொண்டு ப்ராக்ருதமான ராத்திரி தான் வெவ்விய நெருப்பில் காட்டில் சூடா நின்றது –
இவ்வளவில் தன் தோற்றரவாலே இருளைப் போக்கும்
வீங்குதல் -தடித்தலாய் செறிதலைச் சொல்லுகிறது / நுண் துளியாய் -நுண்ணிய துளியாய்
தான் வெஞ்சுடரில் அடா நிற்கும் என்றுமாம்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்–அழகிய சுடரையுடைய உஷ்ண ஹேதுவான ஆதித்யனுடையதான
அழகிய உத்துங்கமான தேரானது தோன்றுகிறது இல்லை -இவ்வளவில்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்–அதிசயித ஐஸ்வர்ய ஸூசகமாய்ச் சிவந்த ஒளியையுடைய தாமரை போலே
இருக்கிற திருக் கண்ணை யுடையனான ஸ்ரீ மானும் வருகிறிலன் -ஆகையாலே
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–ஒருபடிப்பட நின்று உருகா நின்றேன் –
இனி என் மநோ துக்கத்தை தீர்ப்பார் யார்

——————————————

அநந்தரம் ராத்திரியிலே நான் ஈடுபட நிற்க பூமியை அநந்யார்ஹம் ஆக்கின மஹா உபகாரகன் விஷயமாக
ஒரு வார்த்தை சொல்லாதே லோகம் உறங்கா நின்றது என்று கூப்பிடுகிறாள் –

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10-

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்-ஒருகால் ஒளியாமே உருகா நிற்கிற என்னைப் போலே மஹா வகாசமான ஆகாசம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்-ஷயித்துச் சென்று உருகுகிற நுண்ணிய துளிகளை யுடைத்தாய்க் கொண்டு
இடைவிடாமல் செல்லுகிற இரவிடத்து
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று–மஹாபலி அபகரித்த அன்று ஒரு காலத்திலே பூமியை அளந்த
லோக உபகாரகன் இன்று வருகிறானோ என்றாகிலும்
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–ஒரு வார்த்தையை ஒருகால் சொல்லாதே லோகம் உறங்கா நிற்கும்
ஓ இதுவென்ன தட்டுத்தான் என்று வறுத்து உரைத்தபடி
வாராது ஒழிவதே என்று வெறுத்து உரைத்ததாகவுமாம் –

————————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக பரமபத ப்ராப்தியை அருளிச் செய்கிறார் –

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்-படுக்கை வாய்ப்புப் பெற்று உறங்குகிறவன் போலே -ஏகாந்த ஸ்தலமான
ஷீரார்ணவத்திலே ஜகத் ரக்ஷண சிந்தா யோகத்தை பண்ணிக் கிடக்கிற சர்வேஸ்வரனைப் பற்ற
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்–சம்ருத்தமான பொழிலாலே சூழப்பட்ட திரு நகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்-பண் மிஞ்சின அந்தாதியான ஆயிரத்துள் இப்பத்தால்
நிறம் -பண் -சந்தமாகவுமாம்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–சரீர விஸ்லேஷம் பிறந்து அர்ச்சிராதியாலே போய்
பரமபதத்தில் புகாது ஒழிவது எங்கனே – அத்தேசத்தில் புகுகை யறுதி என்று கருத்து –
இது கலி விருத்தம் -நாலடித் தாழிசை யாகவுமாம் –

———————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: