அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –5-2-

இரண்டாம் திருவாய் மொழியிலே -கீழே -பகவத் கிருபா பாரவஸ்யத்தை அனுசந்தித்து ஸந்துஷ்டாரான ஆழ்வாருடைய
ப்ரீதியை அனுபவிக்கைக்கு -பகவத் குண அனுபவ வித்தராய் ஸூரி சமரான பாகவதர்கள் சம்சாரத்தில் துரிதம் எல்லாம் நீங்கும்படி
ப்ரேம பரவசராய்த் திரண்டு வந்தபடியைக் கண்டு –
ஈஸ்வரன் இவர்களை இட்டு ஜகத்தைத் திருத்த நினைத்தானாகக் கூடும் என்று திரு உள்ளம் பற்றி
அவனுடைய நிரதிசய மஹாத்ம்யத்தையும்
மஹாத்ம்ய ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்வாதி சிஹ்னத்தையும்
ஆஸ்ரித உபகாரகமான திவ்ய விக்ரஹாதி யோகத்தையும்
உபகார அர்த்தமான சமுத்திர ஸாயித்தவத்தையும்
அதுக்கும் அடியான ஸ்ரீ வைகுண்ட வாஸத்தையும்
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமான திவ்ய ஆயுதவத்தையும்
திரு அவதார தசையில் யுண்டான அதிசயித ஆதிக்யத்தையும்
ஆதிக்ய லக்ஷணமான ஸ்ரீ வத்ஸ சிஹ்னத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் அப்ரச்யுத ஸ்வ பாவத்தையும்
அதிசயித சீலவத்தையும்
அனுசந்தித்து -இவ்வோ ஸ்வ பாவங்களில் வித்தரான பாகவதர் இங்கே ஸந்நிஹிதராகப் பெறுவதே என்று ஹ்ருஷ்டராய்
மங்களா சாசனம் பண்ணி இவர்களை அநு வர்த்தித்து ஸூத்த ஸ்வ பாவராய் இவர்களோடு ஓக்க நீங்களும்
பகவத் விஷயத்தை அனுபவிக்கப் பாருங்கோள் என்று லௌகிகரைக் குறித்து உபதேசித்து அருளுகிறார் –

———————————————————

முதல் பாட்டில் நிரவதிக மஹாத்ம்ய யுக்தனான சர்வேஸ்வரனாலே லப்த சத்தாகரான பாகவதருடைய
ஸம்ருத்தியைக் கண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார் –

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்–ரத்நாகரமாய் தர்ச நீயமான கடல் போலே குண வை லக்ஷண்யத்தாலும்
அபரிச்சின்ன மஹாத்ம்யனான சர்வேஸ்வரனாலே லப்த ஸ்வரூப சத்தாகரரான பாகவதரானவர்கள் பகவத் குணங்களுக்கு மேட்டு மடையான பூமியிலே
பூத சப்தம்–நபும்சகமாகையாலே அஃறிணை
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–சம்ருத்தமாம் படி வந்து புகுந்து பகவத் குணங்களை இசையில் பாடி –
ஹர்ஷ ப்ரகரஷத்தாலே ச சம்ப்ரம ந்ருத்தம் பண்ணி எங்கும் வியாபாரிக்கு கண்டோம் -ஆதலால்
வல்லுயிர்ச் சாபம் போயிற்று- -ஆத்மாவுக்கு வந்தேறியாய் -அனுபவ விநாஸ்யமாய் பிரபலமான அவித்யாதி ரூபமான சாபமானது நசித்துப் போயிற்று
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை-அவித்யாதிகள் புகையால் –தத் பலமாய் நலியும் நரகங்களும் சிதிலமாயிற்றன-
ஆதலால் தத் நிர்வாஹகனான யமனுக்கு இந்த விபூதியிலே நிர்வாஹ்யமாய் இருப்பது ஏதேனும் ஒரு அம்சமும் இல்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் -இதுக்கு எல்லாம் அடியான கால தோஷமும் நிசியா நிற்கும் இது கார்த்த யுக தர்ம வ்ருத்திகளான
பாகவத சந்நிதியாலே வந்தது என்னும் இடம் ப்ரத்யஷித்துக் கொள்ளுங்கோள்
பொலிக பொலிக பொலிக-இது சம்ருத்தமாக வேணும் -த்ரிரா வ்ருத்தி சாந்தி சாந்தி சாந்தி என்கிற ஸ்ருதிச் சாயையாலே

—————————————————

அநந்தரம் பரத்வ ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்தவாதிகளை யுடைய சர்வேஸ்வரன் குணங்களில் விக்தரான பாகவதரைக் கண்டு
உகந்து மங்களா சாசனம் பண்ண வாருங்கோள் என்று அநு கூல வர்க்கத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் –

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-

வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்–வண்டுகளாலே பூரணமாய் செவ்வியை யுடைத்தான
திருத் துழாய் மாலையை யுடையனாய்
அவ் வழகை யநுபவிக்கிற ஸ்ரீ மஹா லஷ்மிக்கு வல்லபனான சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதரானவர்கள்
இந்த போக்யதைக்கு நிலவர இல்லாத பூமியின் மேலே
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–அனுபவ பரவசராய்க் கொண்டு பண் மிகும்படி நின்று பாடி
ப்ரேம பாரவசயத்தாலே ஆடி எங்கும் பரந்து வியாபாரியா நின்றார்கள் –
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்-நம் கண்ணுக்கு போக்யமான ஸம்ருத்திகளை காணப் பெற்றோம் –
ஒரு கால் கண்டு விடுகை யன்றியே த்ரிரா வ்ருத்தி போலே நிரந்தர அனுபவம் பண்ணப் பெற்றோம்
தொழுது தொழுது நின்று ஆர்த்தும்-இந்த ப்ரீதி பரவசராய்க் கொண்டு நிரந்தர அநு வ்ருத்தி பண்ணி நின்று சஹர்ஷ கோலாஹலம் பண்ணுவோம் –
தொண்டீர் எல்லீரும் வாரீர்-பகவத் பாகவத விஷயத்திலே அநு கோளாறானவர்களே இப் போகத்தை இழவாதே எல்லாரும் வாருங்கோள் –

———————————————

அநந்தரம் ஆஸ்ரித அர்த்தமான வடிவை யுடையனான சர்வேஸ்வரனுடைய ஸுந்தர்யாதிகளில் வித்தரான பாகவதர்
இந்த விபூதி ஸூரிகளுக்கும் நிலமாம்படி சர்வ பிரதேசத்திலும் அவஷ்டம்பித்தார்கள்-என்கிறார் –

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து–சேதனருடைய ஸ்வ பாவங்கள் அதரோத்தரமாம் படியான கலியுகம் கடக்கப் போய்
அஸ்கலித ஜ்ஞான உஜ்ஜ்வல்யத்தை யுடைய ஸூரி களும் ஸ்வயமேவ பிரவேசித்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்–யுகாந்தர விச்சேதம் இல்லாதபடி ஏக ஆகாரமாய் வளர்ந்த க்ருத யுகமானது
கைக் கொண்டு பகவத் அனுபவ ஜெனிதமான அபரிச்சின்ன ஆனந்த சாகரம் மேன்மேலும் பெருகும்படியாக
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்-ஸ்யாமளமான மேகம் போலே அநு பாவ்யமான
திரு வடிவை யுடையனாய்க் கொண்டு எனக்கு ஸ்வாமியாய் அனவதிக குண சாகரனான சர்வேஸ்வரனுடைய
ஸ்வ பாவங்களில் வித்தரான ஸ்ரீ பாகவதர் இப்பூமியில்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–ப்ரீதி கோலாஹலம் பிறக்கும்படி பிரவேசித்து ஹர்ஷத்தாலே கீதங்களை
பாடிக் கொண்டு சர்வ பிரதேசங்களும் தங்களுக்கு இடமாம்படி கைக் கொண்டார்கள்
தொழுது தொழுது நின்று ஆர்த்தும் வாரீர் என்று அன்வயம் –

————————————

அநந்தரம் ஆஸ்ரித உபகாரகனான அர்ணவ சாயியினுடைய குணத்திலே வித்தரானவர்கள் பாஹ்ய சமயங்களை
உத்பாடனம் பண்ணுவாரைப் போலே அநேக விதமான ஹர்ஷ சேஷ்டிதங்களைச் செய்யா நின்றார்கள் என்கிறார் –

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே–வைதிக சங்கோசம் பிறக்கும்படி சர்வ பிரதேசத்திலும்
அவஷ்டம்பிக்கக் கடவதான புத்த ஆர்ஹதாதி பாஹ்ய சமயங்களை எல்லாம் ச வாசகமாக உத்பாடனம் பண்ணி போகடுவாரைப் போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்–விஸ்தீர்ணமான கடலிலே ஆஸ்ரித அர்த்தமாக
கண் வளர்ந்து அருளுகிற சர்வாதிகான் குணங்களிலே ஈடுபட்ட பாகவதர்கள் தாங்களே லோகம் எல்லாமாய் அவ்வோ பிரதேசங்களில்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி–கிடந்தும் இருந்தும் நின்றும் பகவத் குண சேஷ்டித ப்ரகாசகங்களான பலப்பல கீதங்களைப் பாடிக் கொண்டு
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.–தர்ச நீயமாம் படி சஞ்சரித்தும் ஹர்ஷத்தாலே தரையிலே கால் படாதபடி மேல் கிளம்பியும்
ச சம்ப்ரம ந்ருத்தம் பண்ணியும் இப்படி நாடகங்கள் செய்யா நின்றார்கள் –
இப்பாட்டும் கீழோடே அன்வயம் –

——————————————

அநந்தரம் பிரதி கூளரான அஸூரா ராக்ஷஸ ப்ரக்ருதிகளைக் குறித்து ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய குண அனுசந்தான
வித்தரான பாகவதர் உங்களை நிரசித்துப் பொகடுவார்கள் -உங்களுக்கு உஜ்ஜீவிக்க விரகில்லை என்கிறார் –

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து-இவர்கள் செய்கிற வியாபாரம் என் கண்ணுக்கு
அதிசயித்தமாய் இருப்பது ஓன்று போலே இரா நின்றது -ஏது என்னில் பிரதி கூல பிரசுரமான இந்த லோகத்தில்
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி–பரமபத நிலயனுடைய குண அனுபவ வித்தரான பாகவதர் தாங்களேயாய்
ஆச்சர்ய வ்ருத்திகளாலே சர்வ பிரதேசத்திலும் நிரந்தர வாசம் பண்ணி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்–ராக்ஷசியாயும் ஆஸூரி யாயுமுள்ள ப்ரக்ருதிகளோடே பிறந்தவர்கள் உண்டாகில்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–இதர விஷய சபலரானவர்களே உங்களை நிரசித்து
கலி க்ருத யுகமாம் படி காலத்தைப் பேதிக்கும்படி யாய் இரா நின்றது –
ஆதலால் உங்களுக்கு உஜ்ஜீவிக்கும் பிரகாரம் இல்லை -இதில் சந்தேகம் ஒன்றுமில்லை-

————————————-

அநந்தரம் -சாம்சாரிக சகல கிலேசமும் தீர்க்கும்படி ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான திருவாழியை யுடைய சர்வேஸ்வரனுக்கு
அடியாரானவர்கள் ஜகத்தெங்கும் பரந்தார்கள்-அவர்களை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்று
கீழ்ச் சொன்னவர்களை நோக்கி அருளிச் செய்கிறார் –

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்-சரீரத்தை முடித்து பிராணனை க்ரசிக்கக் கடவ
வியாதியும் பகையும் பசியும் முதலான க்ரூர ஸ்வ பாவங்கள் எல்லாவற்றையும்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்–நின்று கடிகைக்காக சக்ராயுதனான சர்வேஸ்வரனுடைய
அடியாராய்க் கொண்டு போந்தவர்கள்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்-விலக்ஷணமான இசைகளைப் பாடியும் ச சம்ப்ரமமாகக்
கிளர்ந்து ஆடியும் பூமி எங்கும் பரந்தார்கள்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–தேவ தாந்தரங்களையும் விஷயாந்தரங்களையும்
உத்தேச்யமாகவும் போக்யமாகவும் நினைத்து சபலரானவர்களே உங்கள் அந்நிய பரமான நெஞ்சை
ப்ராப்தமான பாகவத விஷயத்திலே செவ்விதாக நிறுத்தி அவர்கள் பரிசரத்திலே சென்று
சேஷத்வ அனுரூப விருத்தியைப் பண்ணி பிழைக்கும்படி பாருங்கோள்

—————————————–

அநந்தரம் தேவதாந்த்ர பரரானாரைக் குறித்து -அவனை ஒழிய இவர்களுக்கு ரக்ஷண சக்தி இல்லை –
சர்வ ஸூலபனான ஸ்ரீ கிருஷ்ணனே பர தேவதை -ஆனபின்பு தேவதாந்த்ர விஷயமான நித்ய நைமித்திகாதி
தர்மங்களை அவர்களுடைய பகவச் சரீரத்வ புத்தியைப் பண்ணி அனுஷ்டிக்கும்படி பாருங்கோள் என்கிறார் –

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்–உங்கள் நெஞ்சுக்குள்ள ஸூபாஸ்ரயம் அல்லாமையாலே
வலியப் பிடித்து நிறுத்திக் கொள்ளும் தெய்வங்கள் உங்களை உஜ்ஜீவிப்பித்துக் கொள்வதும்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே–தங்களுக்கும் பல ப்ரதத்வ சக்தி கொடுத்தவன் தன்னோடே மீண்டு சென்று கிட்டிக் கிடீர்
இது மார்க்கண்டேயனும் சாக்ஷியாக கண்டி கோளே -ஆகையாலே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை–இதர தேவதா பரத்வ பிரதிபத்தி பண்ணும்படி மலினமான நெஞ்சு
ஒருபடியாலும் வேண்டுவது இல்லை
தேவதாந்தரங்களுக்கு சரீரியான ஸ்ரீ கிருஷ்ணனை ஒழிய பரதேவதை இல்லை -அனபின்பு
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–சாஸ்த்ரீயமாய்க் கர்த்தவ்யமான நித்ய நைமித்திகங்களை எல்லாம்
அந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கு சரீரங்களான அந்தத் தேவதைகளை விஷயீ கரித்து
சர்வ யஞ்ஞாநாம் போக்தாவான அந்த ஸ்ரீ கிருஷ்ணன் பர்யந்தமாக சமர்ப்பியுங்கோள்
இதிலே பாகவத உத்கர்ஷ ஹேதுவான பாரம்யம் சொல்லிற்று ஆயிற்று –

———————————————–

அநந்தரம் இப்படி சர்வ தேவதா நாயகனாய் ஸ்ரீ வத்ஸ வஷாவான ஸ்ரீ கிருஷ்ணனுடைய சேஷ பூதரானவர்கள்
லோகத்தில் நிகராய் வார்த்தையா நின்றார்கள் -அவர்களை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி–நிறுத்தினான் தெய்வங்களாக- கர்த்தவ்யமான கடைமையான
நித்ய நைமித்திகங்களை சமர்ப்பித்து உஜ்ஜீவிக்கைக்காக நாநா ராசிகளான ஸமஸ்த லோகத்துக்கும் தன்னுடைய சரீர பேதங்களை –
தெய்வங்களாக தத் தத் கர்ம ஆராத்யா தேவதைகளாக நிறுத்தியவன்
அத் தெய்வ நாயகன் தானே-சர்வ தேவதா நாயகனான ஸ்ரீ கிருஷ்ணன் தானே -ஆகையால்
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி-அந்த சர்வாதிக ஸூசகமான ஸ்ரீ வத்ஸத்தை திரு மார்பில் யுடையவனான
அவனுக்கு சேஷபூதரான பாகவதர்கள் நாநா கீதங்களை பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–சாம்சாரிக தோஷத்தால் யுண்டான விஷாதம் இல்லாதபடி
சர்வ உத்க்ருஷ்டராய் வார்த்தையா நின்றார்கள்
நீங்கள் அவர்களைக் கிட்டி தொழுது உஜ்ஜீவியுங்கோள்

———————————–

அநந்தரம் ஆஸ்ரிதரைக் கைவிடாத அப்ரச்யுத ஸ்வ பாவனுடைய சகல கார்ய நிஷ்ட்டாராலும் குண நிஷ்ட்டாராலும்
லோகம் மிகுந்தது -அவர்களை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை–வேதத்தில் ஸ்வரூப ரூப குணாதி ப்ரதிபாதகம் ஆகையாலே
பரம பாவனங்களான ஸ்ரீ புருஷ ஸூக்த நாராயண அநு வாகாதி ருக் விசேஷங்களை
நாவிற் கொண்டு ஞான விதி பிழையாமே–நாவிலே உச்சரித்துக் கொண்டு பக்தி ரூப ஞான விதானம் பண்ணுகிற
சாஸ்த்ர மரியாதை தப்பாதபடி ஆராதன உபகாரணமான
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து–புஷ்பத்தோடு கூடின தூபமும் தீபமும் சாத்துப் படியும்
திரு மஞ்சனமும் பூர்ணமாக யுடையராய்க் கொண்டு
அச்சுதன் தன்னை மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–அப்ரச்யுத ஸ்வ பாவனான சர்வேஸ்வரனை
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு சேஷ வ்ருத்தி முகத்தாலே ஆஸ்ரயிக்கும் சேஷ பூதரையும்
அவனுடைய ஞான சக்த்யாதி குண அநு சந்தான வித்தரான முனிகளையும் மிக யுடைத்தாயிற்று லோகம்
ஆனபின்பு அவர்களைக் கிட்டி தொழுது நீங்கள் உஜ்ஜீவியுங்கோள்

——————————–

அநந்தரம் இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரனுக்கு சேஷபூதரான பாகவதருடைய ஆஸ்ரயணீயதையை ப்ரதிபாதித்து
இப்பாட்டில் -பிரயோஜனந்தரார்த்தமாக தேவதாந்தரங்களை ஆஸ்ரயிப்பாரைக் குறித்து -அவனை ஆஸ்ரயித்து தேவதைகள்
அபி லஷித பாதங்கள் பெற்றவொபாதி நீங்களும் அவனை ஆஸ்ரயிப்புதி களாகில் உங்களுடைய புத்தி பேத ஹேது வான கால தோஷம் இல்லை -என்கிறார்

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10-

நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்–நக்னனான ஈஸ்வரனோடே கூட ப்ரஹ்மாவும் இந்திரனும் முதலாக திரண்ட
தொக்க அமரர் குழாங்கள் -தேவதா சமூகங்கள் ஆனவை
மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி-சர்வ அபாஸ்ரய பூதனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஸ்ரீ மத்தான
விக்ரஹத்தை ஆஸ்ரயித்து போக்ய போக உபகரணாதிகளால் சம்ருத்தஸர்வத்ர விஸ்தீர்ணமான சம்பத்தை யுடையரானார்கள்
இதர புருஷார்த்த சபலரானவர்களே
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–நீங்களும் அவர்களோடே ஓக்க அவனையே தொழ வல்லி கோளாகில்
உங்களுக்குத் தேவதாந்த்ர ப்ராவண்ய ரூப புத்யபகர்ஷ ஹேதுவான கலியுக தோஷம் ஒன்றும் இல்லை –
கலியுகத்தில் பகவத் அர்ச்சனை விமுகராம்படி பாஷாண்ட உபஹதராய் இ றே ஜனங்கள் இருப்பது என்று கருத்து –

——————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழி அப்யசித்தவர்கள் நெஞ்சில் சகல மாலிந்யமும் அறுக்கும் என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்–தனக்கு அசாதாரண சேஷ பூதரானவர்களுக்கு
கலியுக தோஷம் ஒன்றும் தட்டாதபடி ஸ்வ விஷய ஞான ப்ரேம வ்ருத்திகளை தன்னருளாலே கொடுக்கையாலே
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்–அபி விருத்தமான பிரகாசத்தை யுடைத்தான
தேஜோ மய திவ்ய விகிரஹத்தை யுடையனாய்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை அவர்களை அனுபவிப்பிக்கும் உபகாரகனான ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்ற
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்–சம்ருத்தமான வயலையுடைத்தாய் தெற்குத் திக்குக்கு
ஸ்லாக்யமான திரு நகரிக்கு நிர்வாஹகராய்
ஜனக வைலக்ஷண்யத்தையும் குண வை லக்ஷண்யத்தையும் யுடையரான ஆழ்வாருடையதாய்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–ஸூ பிரசித்தமான பகவத் குண பிரதையை யுடைத்தான
ஆயிரம் திருவாய் மொழியிலும் இப்பத்தும் அப்யசித்தவர்கள் நெஞ்சை பகவத் சாம்ய பிரபத்தி ரூபமாயும்
அதுக்கு அடியான பகவத் உதகர்ஷாதி சங்கா ரூபமாயும் தேவதாந்த்ர பரத்வ பிரதிபத்தி ரூபமாயும்
ப்ரயோஜனாந்தர ப்ராவண்ய ரூபமாயும் உள்ள மாசு அறும்படி பண்ணும்
இது ஆறு சீர் ஆசிரிய விருத்தம்

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: