பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –4-10–

அவைஷ்ணவ ஸஹவாசத்தில் காட்டில் முடிகை நன்று என்று ஈண்ட என்னை முடித்து அருள வேணும் என்று எம்பெருமானை
அபேக்ஷிக்கச் செய்தேயும் -அவன் செய்து அருளாமையாலே -இனி இவர்களோடுள்ள ஸஹவாஸம் அவர்ஜ்ஜ நீயமான பின்பு
இவர்களை ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆக்கிக் கொண்டாகிலும் இவர்களோடு கூட வர்த்திப்போம் என்று பார்த்து எம்பெருமானுடைய
ஸர்வேச்வரத்வ சர்வ ஸூலபத்வாதிகளை உபபாதித்து அவனை ஆஸ்ரயியுங்கோள் என்று அவர்களுக்கு அருளிச் செய்கிறார்
எம்பெருமானைக் கண்டு ஸம்ஸ்லேஷித்த பக்ஷத்தில் அந்த ஸம்ச்லேஷ ஜெனித ப்ரீதி அதிசயத்தாலும்
எம்பெருமானை இழந்து கிடக்கிற ஆத்மாக்கள் பக்கல் உள்ள கிருபையால் எம்பெருமானை ஆஸ்ரயியுங்கோள் என்று
அவர்களைக் குறித்து அருளிச் செய்கிறார் என்னுமது –

————————————————

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

சகல ஸ்ம்ருதி இதிஹாச புராண உப ப்ரும்ஹிதங்களான சகல உபநிஷத் வாக்ய ஜாதங்களாலே –
சதுர்முக பசுபத ப்ரப்ருதி சகல பூத ஜாத பரிபூர்ண அசங்க்யேய அண்ட மண்டலா நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி சீலதயா –
ப்ரஹ்மருத்ராதி சர்வாத்ம சேஷிதயா-சர்வ ஜகதாதார தயா -ஸாங்க சகல வேத வேத்ய தயா
ப்ரஹ்ம ருத்ராதி சர்வ தேவ சர்வ ரிஷி பூஜ்ய தயா – சர்வ தேவ நமஸ்காரிய தயா -சர்வ நியந்தரு தயா –
சர்வ வியாபிதயா-ச ப்ரதிபாத்யமாநனாய் -சர்வ ஸூ லபனாய் இருந்த நாராயணனை ஒழிய வேறொரு தைவத்தை
சமாஸ்ரயணீயமாகத் தேடுகிறீர்கள் –
மற்றும் ஒரு தைவம் உண்டோ என்று கொண்டு தேவதாந்தர ப்ரவணரானவர்களைக் குறித்து அருளிச் செய்கிறார் –

————————————————–

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-

ஆதலால் இப்படி நீங்கள் ஆஸ்ரயிக்கிற தைவங்களுக்கும் காரண பூதனாய் -ப்ரஹ்ம வாமன வராஹாதி புராண வாக்ய ப்ரதிபாத்யமான
அனவதிக அசங்க்யேய கல்யாண குண கணனான சர்வேஸ்வரன் எழுந்து அருளி இருந்த
திருநகரியை ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார்

—————————————————–

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

ஸ்ருதி வாக்ய சித்த ஸர்வேச்வரத்வ ஸூசக நிகில ஜெகன் நிகரண உத்தரணாதி நாராயண திவ்ய சேஷ்டிதங்களைக் கண்டு
இவனே சர்வேஸ்வரன் என்று அறிய மாட்டுகிறிலீர் -அவன் அல்லது மற்றொரு தைவம் இல்லை –
உண்டாகில் அத்தை ஒரு ப்ரமாணத்தாலே சாதியுங்கோள் என்கிறார் –

——————————————————

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-

ப்ரஹ்ம ருத்ரர்களுடைய ஸர்வேஸ்வரத்வம் அனுமான சித்தம் இறே என்னில் -பல ஸ்ருதி ஸூ க்திகளாலே
உங்களால் ஈஸ்வரத்வேந சொல்லப்படுகிற ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் நாயகன் அந்த நாராயணனே -என்கிறார்

————————————–

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-

லிங்க புராண நிஷ்டரான நீங்களும் மற்றும் சாக்கிய உலூக்யாஷபாத ஷபண கபில பாஞ்சலி மத அநுசாரிகளானவர்களும்
மற்றும் உங்களுடைய தைவங்களும் எல்லாம் நாராயணாத்மாம்–
இவ்வர்த்தத்துக்கு ஸ்ருதி ஸூ க்திகள் பிரமாணமாம் -ஆகையால் அவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

—————————————————-

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-

இப்படி நாராயணனே சர்வ நியாந்தாவாக்கில் தன்னையே ஆஸ்ரயிக்கும்படி எங்களைப் பண்ணாதே வேறொரு தெய்வங்களை
ஆஸ்ரயிக்கும் படி பண்ணுவான் என் என்னில் போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் சத் அசாத் கர்ம யுக்த ஜந்துக்கள் தத் தத் கர்ம அநு குண பலன்களை அனுபவிக்கக் கடவதான
இந்த லோக மரியாதை அழியும் என்று இந்த லோக மரியாதை சித்த்யர்த்தமாக அசாத் கர்ம காரிகளான உங்களை அந்த அசத் கர்ம
அனுகுணமாக இப்படி தேவதாந்தரத்தை ஆஸ்ரயித்து சம்சாரிக்கும்படி சர்வ சக்தியான பரம புருஷன் தானே பண்ணி அருளினான் –
ஆதலால் அத்தை அறிந்து இந்த சம்சார நிவ்ருத்தி பூர்வகமான பரம புருஷ கைங்கர்ய அர்த்தமாக
அவனை ஈண்டச் சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

————————————————–

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-

தேவதாந்தரத்தை ஆஸ்ரயித்ததால் மோஷாதி பிரயோஜனங்கள் சித்தியாதோ என்னில் இவ்வளவும் வர
இவ்வனாதி காலம் எல்லாம் தேவதாந்தரத்தை ஆஸ்ரயித்து என்ன பிரயோஜனம் பெற்றீர் –
ஆனபின்பு இந்த தேவதாந்தரங்களை விட்டு பொலிந்து நின்ற பிரான் திருவடிகளை ஆஸ்ரயித்து என்கிறார் –

—————————————————–

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

ருத்ரனை ஆஸ்ரயித்து அன்றோ மார்க்கண்டேயன் ஸ்வ அபி லஷிதம் பெற்றது என்னில் –
அவனும் ஸ்வ அபி லஷிதம் பெற்றது நாராயணனுடைய ப்ரஸாதத்தாலே –
அவ்விடத்தில் ருத்ரன் புருஷகார மாத்ரமே-ஆதலால் இப்படி சர்வேஸ்வரனான
நாராயணனை ஒழிய மற்று என்ன தைவத்தைக் கொண்டாடுகிறீர் -என்கிறார் –

—————————

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-

ஷூத்ர தைவங்களை விட்டு வேத பாஹ்ய குத்ருஷ்ட்டி ப்ரப்ருதி ஸமஸ்த துஸ் தர்க்க துரபஹ்நவ ஸ்வரூப ரூப குண விபூதிகனான
பரம புருஷன் எழுந்து அருளி இருக்கிற திரு நகரியை ஆஸ்ரயியுங்கோள் -உஜ்ஜீவிக்க வேண்டி இருந்து கோளாகில் என்கிறார் –

——————————————————–

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-

ஸ்வ அசாதாரண விக்ரஹம் போலே விதேயமான சர்வ ஜகத்தையும் யுடையனாய் அஜஹத் ஸ்வ பாவனாய்க் கொண்டு
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள் நின்று அருளின
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவதாவது-என்கிறார் –

—————————————————–

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-

பகவத் கைங்கர்யத்தி சீதள அம்ருதமய தடாக அவபாஹன ஸூ ப்ரசன்னாத்ம ஸ்வரூப பாத்திர
நிரதிசய ஸூகந்த்ய விகஸத்கேசர மால அலங்க்ருத வக்ஷஸ்தலரான ஆழ்வார் பரம புருஷ விஷய நிரதிசய பக்தியாலே சொன்ன ஆயிரத்துள்
இப்பத்தும் வல்லார்க்கு இதுவே வல்லராமதுவே பரம ப்ராப்யம் -மற்றுத் திரு நாடு வேண்டி இருக்கில் அது இவர்கள் கையது என்கிறார் –

——————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: