அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –4–10-

பத்தாம் திருவாய் மொழியில் –
கீழ் -சம்சார தோஷ அனுசந்தான பூர்வகமாக பகவத் பிராப்தியை பிரார்த்தித்தவர் ப்ராப்யமான பர தசையை
அவன் ஆவிஸ்கரிக்கக் கண்டு ஸந்துஷ்டராய்-இப்பரத்வம் அறியாமல் சம்சாரிகள் இழக்க ஒண்ணாது என்று பார்த்து
ப்ராப்யத்வ பர்யந்தமான அவனுடைய பரத்வத்தை உபதேசிப்பதாக உத்தியோகித்து
அதுக்கு உபகாரகமான சர்வ காரணத்வத்தையும்
காரணத்வ அநு குணமான நித்ய கல்யாண குண யோகத்தையும்
கார்ய ரூபமான ஜகத் விஷய ரக்ஷண வியாபாரம் பரத்வாவஹமான படியையும்
சோபா பாதகமான சர்வேஸ்வரத்வத்தையும்
அந்த ஈச்வரத்வ பிரகாசகமான ஸுலப்ய அதிசயத்தையும்
சம்சார நிர்வஹண சாமர்த்யத்தையும்
பரதவ பிரகாசகமான கருட த்வஜத்வத்தையும்
அல்லாத தேவதைகள் பல பிரதத்வத்துக்கும் சக்த்யாதாயகன் அவனே என்னும் இடத்தையும்
அந்நியதுரவ போதனான அவன் வர்த்திக்கிற தேசமே உஜ்ஜீவன அர்த்திகளுக்கு ஞாதவ்யமாம் படியையும்
சர்வ சரீரியான அவன் திருவடிகளில் கைங்கர்யமே உத்தேசியமான படியையும்
உபதேசித்து -இப்படி பரம ப்ராப்ய பூதனான ஈசுவரனுடைய போக்யதா அதிசயத்தாலே
இவ்வாத்மாவினுடைய ததேக பிரியத்வத்தை உபபாதித்துத் தலைக் கட்டுகிறார் –

———————————————

முதல் பாட்டில் காரண வாஸ்ய ப்ரக்ரியையாலே ஸமஸ்த காரண பூதனான சர்வேஸ்வரன் ஸந்நிஹிதனாய் இருக்க
வேறு எந்த தேவதையைத் தேடு கிறிகோள்-என்கிறார் –

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா-அன்று —ஸ்வரூபத்தில் ஒன்றும்படி லயிப்பதான தேவ ஜாதியும் –
அவர்கள் வாஸஸ் ஸ்தானமான லோகமும் -மனுஷ்யாதி பிராணி வர்க்கமும் -மற்றும் சமஷ்டி ரூப
சகல பதார்த்தங்களும் -நாம ரூப விபாக ரஹிதங்களாய்க் கொண்டு சகல பதார்த்தங்களும் ஸம்ஹ்ருதமான அன்று
நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்–இவற்றினுடைய ஸ்ருஷ்ட்டி யோக்யதா அநு சந்தானத்தாத்தாலே
தயமானமநாவாய்க் கொண்டு சமஷ்டி புருஷனான ப்ரஹ்மாவோடே கூட தேவதா வர்க்கம் லோகம் பிராணி ஜாதங்கள் இவற்றை
ஸ்வ ஆஸ்ரயண அர்த்தமாக ஸ்ருஷ்டித்தவனாய்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்–மலைகள் போலே மாணிக்க மயமான மாடங்கள் உயர்ந்து இருக்கிற திரு நகரியிலே
நின்ற ஆதிப் பிராண நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–ஆஸ்ரயிப்பார்க்கு ஸூ லபனாய் வந்து நிற்கிற –
ஸமஸ்த காரண பூதனான மஹா உபகாரகன் ஸந்நிஹிதனாய் இருக்க ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களுக்குக்
கர்மீ பவிக்கிற தேவதைகளை வேறே ஆஸ்ரயணீயமாகத் தேடுகிறிகோளே

———————————-

அநந்தரம் அந்த தேவர்களோடு உங்களோடு வாசியற ஸ்ருஷ்டிக்கு அடியான
நித்ய மங்கள குணாஸ்ரய பூதன் வர்த்திக்கிற திருநகரியை ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்–ரஜஸ் தமஸ் பிரசுரரான நீங்கள் -உங்கள் குண அநு குணமாக
நிரூபித்து ஆஸ்ரயிக்கும் தேவதைகளையும் ஆஸ்ரயண உன்முகனான உங்களையும் ஸ்ருஷ்ட்டி காலத்திலே உத்பாதித்தவனாய்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,–அதுக்கு அடியான ஞான சக்த்யாதி நித்ய கல்யாண குணங்களை
யுடையனாக வேதாந்த பிரசித்தமான புகழையுடைய பிரதம உபகாரகனானவன் ஆஸ்ரித அபி முக்கியார்த்தமாகப் பொருந்தி வர்த்திக்கிற ஸ்தானமாய்
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்–மாடங்களும் மாளிகைகளும் சூழ்ந்து அத்தாலே அழகை யுடைத்தான திரு நகரி தன்னை
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–குண ருசி பேதங்களால் பலவகைப்பட்ட லோகங்களில் உள்ளீர்
ப்ரீதி பிரேரிதராய் பாடி ஹர்ஷத்தாலே விக்ருதராய் ஆடி பஹு முகமாக ஸ்துதித்து உகப்பாலே சர்வ பிரதேசத்திலும் வ்யாபரியுங்கோள்

——————————————–

அநந்தரம் கார்ய ரூப ஜகத்தினுடைய ரக்ஷண அர்த்த வ்யாபாரங்களே பரத்வ ப்ரதிபாதகங்கள் -என்கிறார் –

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்–ஸ்வ விபூதி நியமனத்தாலே ஈஸ்வரத்வ சங்கை பண்ணும்படி விஸ்தீர்ணமான
தேவதா வர்க்கத்தையும் அவர்களுக்கு விபூதியான பஹு வித லோகங்களையும் ஸ்ருஷ்டித்து பிரளயம் வந்த அன்று இக்க்ரமம் பாராதே கூட விழுங்கி
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்–பிரளயம் காண ஒண்ணாத படி ஒளித்து வைத்து பிரளய அநந்தரம் வெளிநாடு காண உமிழ்ந்து
மஹாபலி அபிமானம் கழியும்படி அளந்து கொண்டு அநந்யார்ஹம் ஆக்கி அவாந்தர பிரளயத்தில் வராஹ ரூபியாய் இடந்து எடுத்த இது
பிராமண முகத்தாலே விசதமாகக் கண்டு இருக்கச் செய் தேயும் ரஜஸ் தம அபிபவத்தாலே நிர்ணயிக்க மாட்டு கிறிலீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்–நித்யரான ப்ரஹ்மாதி தேவர்கள் தங்கள் பத ஸித்த்யர்த்தமாக
பஹு முகமாக தலைகளால் வணங்கும் திரு நகரிக்கு உள்ளே நிற்கிற
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–சர்வ ஸ்மாத் பரணுக்கு பிரகாரமாய் அல்லது
வேறு ஸ்வ தந்திரமாய் இருபத்தொரு தேவம் இல்லை
நாநா மதி பேதங்களாலே பலவகைப்பட்ட லோகத்தில் உள்ளீர் உண்டாகில் வந்து சொல்லுங்கோள்-

———————————————-

அநந்தரம் ஈஸ்வர தயா பிரசித்தமான தேவதாந்தரங்களுக்கும் ஈஸ்வரனாக நிர்த்தோஷ
பிராமண உபபத்தி சித்தனான சர்வேஸ்வரன் விஷயத்தில் அநீஸ்வரத்வம் சொல்லுகிற
ஆநுமாநிக ஈஸ்வரவாதிகளான நையாயிகாதிகளுக்கு என்ன பிரயோஜனம் உண்டு என்கிறார் –

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்–பிராமண ஆபாசங்களாலும் சமாக்யைகளாலும் ஈஸ்வரத்வ சங்கை
பண்ணிச் சொல்லப்பட்ட ருத்ரனுக்கும் -அவனுக்கும் உத்பாதகனாய் ஸ்வ ஸ்ருஜ்யமான விஸ்தீர்ண விபூதி யுக்தனான ப்ரஹ்மா தனக்கும்
இவர்களுக்கும் ஏவிற்றுச் செய்யும் அல்லாத தேவாதிகளுக்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்–தத் ஸ்வரூப விபூதி நிர்வாஹகனாய்க் கொண்டு
நாயகனானவன் நிர்த்தோஷ பிராமண வேதாந்த சித்தனான ஸர்வேஸ்வரனே
இவ்வர்த்தத்தை ப்ரஹ்மாவினுடைய சிரசை அறுத்துப் பாதகியான ருத்ரன் கையில் பிஷார்த்தமாக அந்த சிரஸ் கபாலத்தை –
சஹஸ்ரதாவாக ஸ்புடிதமாம்படி நன்றாகப் போக்கின -அபதானத்தை எழுதுகிற
பஞ்சம வேதமான மஹா பாரதத்தில் அபரோக்ஷித்துக் கண்டு கொள்ளுங்கோள் –
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்–இப்படி இருந்த தேஜோ மயமாய் அதி உன்னதமான மதிளாலே சூழப்பட்டு
அத்தாலே அழகை யுடைத்தான திரு நகரிக்கு உள்ளே
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–அந்தக் கபால விமோசகத்வம் தோற்ற எழுந்து அருளி இருக்கிற
நிருபாதிக சர்வேஸ்வரன் விஷயத்திலே அநீஸ்வரத்வ அபக்ருஷ்ட யுக்திகளை பண்ணுகிற இத்தால்
லிங்க பிராமண வாதிகளான ஆநு மாநிகர்க்கு என்ன லாபம் உண்டு
பிரபல பிராமண சித்தமாகையாலே அநுமானத்தால் ஸ்வ அபிமத ஈஸ்வர சித்தி இல்லை என்று கருத்து –

——————————————————–

அநந்தரம் பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்து திரு நகரியில் நிற்கிற ஸர்வேஸ்வரனே சர்வ ஸ்மாத் பரன்-என்கிறார் –

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்–லிங்க அர்ச்சநத்தை உத்தேச்யமாக பிரதிபாதிக்கிற
தாமச புராண நிஷ்டராகையாலே குத்ருஷ்டிகளான நீங்களும் பாஹ்ய ஸ்ம்ருதி நிஷ்டரான அமணரும் புத்தரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்-ஸூஷ்க தர்க்கங்களாலே மேலிட்டு வாதம் சொல்லுகிற
வைசேஷிகாதிகளான நீங்களும் வேறு உங்களுக்கு உத்தேச்யமாக பிரதிபத்தி பண்ணி இருக்கிற
தத் தத் தேவதா விசேஷங்களும் ஸ்வ அதீனமாம் படி ப்ரவர்த்திப்பித்து நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்–செந்நெலானது மிகுந்து தன் கதிர்க் கனத்தாலே கவரி போலே அசைகின்ற திரு நகரிக்கு உள்ளே
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–பரத்வ ப்ரகாசகமான குணங்களோடு சீல ஸுலப்யாதிகளும் கூடி பிரகாசிக்கும்படி
பரிபூர்ணனாய் நிற்கிற ஸர்வேஸ்வரனே காணுங்கோள்
அர்ச்சாவதாரத்தில் பரத்வம் பிரகாசிக்குமோ என்று சங்கிக்க வேண்டா
ஒன்றும் பொய் இல்லை -பிராமண சித்தம் -ஆகையால் உங்கள் பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸ்பர்சங்களை விட்டு அவனையே ஸ்துதியுங்கோள்

—————————————————

அநந்தரம் இவ்வர்த்தம் உங்களுக்கு பிரகாசியாது ஒழிகிறது கர்ம அநு ரூபமாக
அவன் சம்சாரத்தை நிர்வஹிக்கிற சாமர்த்தியம் என்கிறார் –

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே–வேறு ஒரு தேவதையை ஸ்தோத்ரம் பண்ணி ஆதரிக்கும்படி
தனக்குப் புறம்பாக்கி தத் ப்ரவணரான உங்களை நான் தன் விஷயத்திலே விஸ்வஸித்து இருக்குமா போலே இப்படி
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;–இதர தேவதா விஷயத்தில் விசுவசிப்பித்து வைத்தது எல்லாரும்
பகவத் பிராப்தி ரூப மோக்ஷத்தைப் பெற்றால் கர்ம அநு ரூபமாக பல போக்தாக்களாய் நடக்கக் கடவர்கள் என்கிற
லோக மரியாதை குலையும் என்றாய் இருக்கும் -அதுக்கு மூலம்
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்–சேற்று நிலத்தில் செந்நெலும் கமலமும் இசலி வளரக் கடவ திரு நகரியில் வர்த்திக்குமவனாய்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–அதிசயித விவித சக்தி யுக்தனாய்க் கொண்டு கர்ம பல அனுபவத்தைப்
பண்ணுவிக்கிறவனுடைய லீலா உபகரணமாய் துரத்யயையாய் மாயா சப்த வாஸ்யமான ப்ரக்ருதியோடே உண்டான சம்பந்தமாய் இருக்கும்
அத்தை அறிந்து தன் நிஸ்தரண உபாயமான பிரபத்தி ஞானத்தை உடையீர்களாய் அந்த மாயா நிஸ்தரணத்தைப் பண்ணிக் கடக்கப் பாருங்கோள்
உலகு இல்லை என்றே;-என்று லோகம் இல்லையாம் என்று நினைத்தோ -அது அல்ல இ றே ப்ரக்ருதி சம்பந்தம் இ றே என்றும் சொல்லுவர்

————————————————–

அநந்தரம் நீங்கள் இதற்கு முன்பு ஆஸ்ரயித்துப் பெற்ற பலம் இறே இனி ஆஸ்ரயித்ததாலும் பெறுவது –
ஆனபின்பு பரத்வ சிஹனமான கருட த்வஜத்தை யுடைய சர்வ காரண பூதனுக்கு அடிமை புகுங்கோள் என்கிறார் –

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்–பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;–வேறே சொல்லப் பற்றாத
தொரு தேவதையை ப்ரீதி பிரேரிதராய் கொண்டு பாடுவது ஆடுவதாய் வணங்கி பல பிரகாரத்தாலும் ஆஸ்ரயிக்கச் சொல்லுகிற
சாஸ்த்ர மார்க்கத்தாலே மேன்மேலும் ஆஸ்ரயித்து
அதன் பலமான கர்ப்ப நரகங்களிலே ஓடி பலவகையாகப் பிறந்து அபரோக்ஷித்துக் கண்டீர் –
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்-ஆனபின்பு -நீங்கள் ஆஸ்ரயிக்கிற தேவர்கள் எல்லாரும் கூடி தாங்கள்
ஆனந் நிவ்ருத்தியாதிகளுக்காக ஸ்தோத்ரம் பண்ணி ஆஸ்ரயிக்கும் படி திரு நகரியிலே நிற்குமவனாய்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–பகவத் அனுபவ ப்ரீதியாலே ஆடி வருகிற பெரிய திருவடியை பரத்வ ப்ரகாசகமான
கொடியாக யுடையனாய் சர்வ காரண பூதனான சர்வேஸ்வரனுக்கு அடிமை புகுங்கோள் –
புகுவது என்றது -புகுக என்றாய் விதியாய் இருக்கிறது –

——————————————–

அநந்தரம் மார்க்கண்டேயனுக்கு ருத்ரன் பல பிரதனாயிற்றும் ஈஸ்வரன் கிருபையால் என்று
இதர தேவதைகளுக்கும் பல பிரதான சக்த்யாதாயகன் அவனே என்னும் இடத்தை உதாஹரண நிஷ்டமாக்கி அருளிச் செய்கிறார்

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை–சேஷ விருத்தி முகத்தாலே உடட்புக்கு ஆஸ்ரயணீயனான
தன்னை அபரோக்ஷித்துக் கண்ட மார்க்கண்டேயன் என்று புராண பிரசித்தனானவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;–திகம்பரனாகையாலே நக்நன் என்று பேராய்-ஆஸ்ரிதர்க்கு
ம்ருத்யுவை ஜெயித்து நித்யத்வத்தைக் கொடுத்த உபகாரகன் ஆனவனும் பிரளய தசையில் பிழைப்பித்து பகவத் பரனாக்கி
உஜ்ஜீவிப்பித்தது அந்தராத்மபூதனான நாராயணன் -அவனுக்கு பலப்ரதானாம் படி தன்னைப் பண்ணி வைத்த கிருபையாலேயாய் இருக்கும் -ஆதலால்
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்–கொக்கின் நிறம் போலே அலருகிற பூவையுடைய பெரிய தாழைகளை
வேலியாக வுடைய திரு நகரிக்குள்ளே நிற்கிற
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–சர்வாதிகனாய் நிரபேஷ காரண பூதனான மஹா உபகாரகன் நிற்க
வேறு தத் ஸா பேஷமான எத்தை தாய்வமாக சொல்லுகிறிகோள்

————————————————

அநந்தரம் இதர துரவபோயன் வர்த்திக்கிற திரு நகரியை உங்களுக்கு உஜ்ஜீவன அர்த்தமாக அநுஸந்தியுங்கோள் -என்கிறார் –

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்–தர்க்க கோலா ஹலத்தாலே சப்த மாத்ர சாரமாய் இருக்கிற
சார்வாக சாக்கிய ஷபணக வைசேஷிக சாங்க்ய பாசுபத ரூபமான ஆறு பாஹ்ய சமயமும் மற்றுமுள்ள குத்ருஷ்ட்டி வர்க்கமும்
சபையாகத் திரண்டாலும் அபரிச்சின்ன ஸ்வ பாவனான தன் விஷயத்தில்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்–நிஷேத்யதயாவும்பரிச்சேதித்து காண்கைக்கு அரிதான ஸ்வ பாவத்தை
யுடைய சர்வ காரண பூதனான மஹா உபகாரகன் பொருந்தி வர்த்திக்கும் தேசமாய்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை–தர்ச நீயமாய் ஸ்ரமஹரமான நீர் நிலங்களாலே
சூழப்பட்டு நிரதிசய போக்யமான திரு நகரியை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–நீங்கள் உங்களை உஜ்ஜீவிப்பித்துக் கொண்டு
நடக்க வேண்டி இருந்தீர்களாகில் உங்கள் மானஸ ஞானத்துக்குள்ளே வையுங்கோள் –

————————————————————–

அநந்தரம் சர்வ சரீரியாய் நிரதிசய ஸீலவானாய் சர்வ மநோஹர சேஷ்டிதத்தை யுடையனானவனுக்கு
அடிமை செய்வதே உத்தேச்யமாய் உசிதமுமான புருஷார்த்தம் -என்கிறார் –

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-

எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்-சகல தேவதா வர்க்கமும் ஸமஸ்த லோகமும் மற்றுமுண்டான சித் அசித் வர்க்கமுமான
இவை இத்தனையும் தன் ஸ்வரூபத்திலே
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே–நிரவத்யமான அசாதாரண விக்ரஹத்தோபாதி
அத்தலைக்கு அதிசய காரமான பிரகாரமாய்க் கொண்டு தான் நிற்கிற ஸ்வரூப பேதமும் ஸ்வபாவ பேதமும் குலையாதபடி நிற்கச் செய்தே –
அம்மேன்மையோடு ஓக்க
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்–விளை நிலங்களில் செந்நெலானது கரும்போடு
ஓக்க வளரும்படியான திரு நகரிக்குள்ள நிற்குமவனாய்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–உறுவது ஆவது–ஆஸ்ரிதற்கு சிறாம்பித்து அனுபவிக்கலாம் படி வாமனனாய்
அர்த்தித்வமே நிரூபகம் என்னலாம் படியான ப்ரஹ்மசாரி வேஷத்தை யுடையனாய்
கேட்டார் எல்லாரும் ஈடுபடும்படியான நிரதிசய போக்யதா மஹாத்ம்யத்தை யுடைய குடக்கூத்தைப் பண்ணின ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
அடிமை செய்வதே சீரியதாயும் உசிதமாயும் உள்ள புருஷார்த்தம் –

————————————————

அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யசித்தவர்களுக்கு பரமபதம் கையிலே என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,–பர உபதேச முகமான வாசிக கைங்கர்யத்தைப் பண்ணி
ஆஸ்ரித அநு பாவ்யமான திரு வாழியைக் கையிலே யுடைய உபகாரகனை பிராப்பித்தவராய் விலக்ஷணமான திரு நகரிக்கு நிர்வாஹகராய்
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்-அபி நவ பரிமளத்தை யுடைய திரு மகிழ் மாலையை மார்பிலே யுடையராய்
மாறன் என்கிற குடிப் பேரையும் பாஹ்ய குத்ருஷ்டிகளான சடரை நிரசிகையாலே சடகோபர் என்னும் திருநாமமுடைய ஆழ்வார்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்-பகவத் விஷயத்தில் அபி நிவேசத்தாலே அருளிச் செய்த கான ரூபமான
ஆயிரம் திருவாய் மொழியிலும் பர உபதேசமாக இப்பத்துப் பாட்டையும் அர்த்த அனுசந்தானத்தோடே அப்யஸிக்க வல்லார்கள்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–கையது இதினுடைய அப்பியாசம் ஆகிற ப்ரயோஜனத்துக்கு மேலே அவ்வருகுண்டாய்
புநரா வ்ருத்தியில்லாத ஸ்ரீ வைகுண்டம் ஆகிற மஹா நகரமானது –
இது ஆறு சீர் ஆசிரிய விருத்தம்

——————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: