அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –4–7-

ஏழாம் திருவாய் மொழியிலே
கீழ் ஏத்துதலும் தொழுதாடும் -என்று பகவத் நாம ஸ்ரவணத்தால்பிறந்த ஆச்வாஸம் அவனைக் கிட்டி அனுபவிக்கைக்கு உடல் அன்றியே
அலாபத்தாலே ஆர்த்தராகைக்கு உடலாகையாலே அபிநிவேச அதிசயத்தை யுமுடைய இவ்வாழ்வார் தமக்கு அநு பாவ்யமான சர்வேஸ்வரனுடைய
அகில வஸ்து சத்தையும் அழியாமல் நோக்கும் அசாதாரண சம்பந்தத்தையும்
அநந்யார்ஹமாக்கி அனுபவிப்பிக்கும் உதார குணத்தையும்
அநந்யார்ஹமான ஆஸ்ரிதர் பக்கல் அத்யந்த பவ்யதையையும்
அவர்களுக்கு ஆஸா ஜநகமான ஆபி ரூப்யாதி அதிசயத்தையும்
அரும் தொழில் செய்தும் ஆஸ்ரிதர்க்கு அபேக்ஷிதம் கொடுக்கும் படியையும்
ஆசைக்கு தீபகமான ஆந்திர ஸ்திதியையும்
அந்த அவஸ்தா நத்தினுடைய அதிசயித போக்யதையையும்
போக்யதா நிபந்தமான அபிநிவேச ஜனகத்வத்தையும்
அபி நிஷ்டர்க்கு அநு பாவ்யமான அசாதாரண சிஹ்னவத்தையும்
அகில வேத வேத்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான போக்ய பூதன் பக்கல் அனுபவ அபி நிவேசத்தால் பிறந்த ஆர்த்யதிசயத்தை அருளிச் செய்கிறார்

———————————–

முதல் பாட்டில் அகில சத்தையையும் நோக்கும் அசாதாரண சம்பந்தத்தையும் யுடைய நீ என்னை அங்கீ கரியாது
ஒழிகைக்கு நான் பண்ணின பாபா அதிசயம் இருந்த படி என் -என்கிறார் –

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-

ஞாலம் உண்டாய்! -அபேஷா நிரபேஷமாக பிரளய ஆபத்தில் அகில பதார்த்தையும் அமுது செய்து சத்தையை நோக்கினவனே
ஞான மூர்த்தி! -ஏவம்விதமான ரக்ஷணத்துக்கு விரகு அறிகைக்கு ஈடான விலக்ஷண ஞானத்தை வடிவாக யுடையவனே
நாராயணா! -இப்படி விரகு அறிந்து ரஷிக்கைக்கு ஈடான அப்ருதக் சித்த சம்பந்தத்தை யுடையனானவனே
என்று என்று–என்று என்று பலபடியும் உன் ஸ்வ பாவத்தைச் சொல்லி
காலந் தோறும் யான் இருந்து, –ஒரு காலம் ஒழியாமல் எல்லாக் காலத்திலும் -வியதிரேகத்தில் அழியும்படியான ஸ்வரூபத்தை யுடைய
உன்னைக் காண வேணும் என்கிற ஆசா பந்தம் அடியாக வருந்தி இருந்து
கைதலை பூசலிட்டால்,–கை தலையிலேயாம் படி மஹா த்வனியாகக் கூப்பிட்டால்
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–தர்ச நீய ஆகாரமான உன் வடிவை நான் கண்டு அனுபவிக்கும் படி வருகிறிலை
அது உன் தரத்துக்குப் போராது ஆகில் என்னை அங்கே அழைத்துக் கொள்ளுகிறிலை
சீலம் இல்லாச் சிறியே னேலும், –ஆதலால் நான் நன்றான சரிதம் இன்றியே அறிவிலியான ஷூத்ரனாய் இருந்தேனே யாகிலும்
செய்வினையோ பெரிதால்;-நீ ஜகத் ஸ்ருஷ்ட்டி பண்ணுமோபாதி சங்கல்ப மாத்ரத்தால் அன்றியே காயிக பர்யந்தமாக
அனுஷ்டித்த பாபம் அதி மஹத்தாய் இருந்தது இறே
ஓ என்னும் ஆசை -வெறுப்பின் மிகுதியைக் காட்டுகிறது / சீலம் -ஸூசியான சரிதம் –

———————————————

அநந்தரம் -என்னை அநந்யார்ஹம் ஆக்கி அனுபவிப்பித்த உதார குணத்தைச் சொல்லிக்
கூப்பிட்டால் என் கண் காண வந்து உன்னை எனக்குத் தருகிறிலை என்கிறார்

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே.–4-7-2-

வையம் கொண்ட வாமனாவோ!’ -அந்நிய அபிமான விஷயையான பூமியை அநன்யார் ஹை யாம்படி அளந்து கொண்ட
அர்த்தித்தவத்தை யுடைய வாமனனே
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என் வள்ளலேயோ! -அனுபவிக்க அனுபவிக்க எல்லை காண ஒண்ணாத
ஆனந்த சமுத்திரத்தை அனுபவ தசையில் திருப்தி யாதல் அந்நிய ஆகாங்ஷை யாதலாகிற கோது இல்லாத படி
ஆந்தரமாக அபகரிக்கும் என்னுடைய மஹா உதாரனே
என்று என்று-என்று என்று விஷண்ணனாய்ச் சொல்லி
நள் இராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்–மத்திய ராத்ரியிலும் பதார்த்த பிரகாசகமான பகலிலும் உன்னை ஒழியச்
செல்லாமையை யுடைய நான் அந்நிய வியாபார ஷமன் இன்றியே கூப்பிட்டால்
கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே.–கண்ணுக்குத் தோற்றாதே க்ருத்ரிமரைப் போலே நெஞ்சுக்குள்ளே இருக்கிற ஆச்சர்ய பூதனே –
கண்டு அல்லது தரிக்க ஒண்ணாத உன்னை ஆசைப்பட்ட என் கண்கள் காணும்படி வந்து தருகிறிலை -தர வேணும் என்றுமாம் –
இங்கு ஓ என்கிறவைகள் விஷாதத்தைக் காட்டுகின்றன

—————————————————

அநந்தரம் அநந்யார்ஹ விஷயத்தில் அத்யந்த பவ்யனான உன்னை அழைத்துக் கூப்பிட்டால்
பாபத்தைப் பண்ணின நீ கூப்பிடுகிறது என் என்று என் முன்னே வந்து ஒரு வார்த்தை சொல்லுகிறிலை -என்கிறார்

ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண்பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-

ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?–அனந்த கல்பம் அனுபவியா நின்றாலும் விநாசம் இன்றியே
பரிதாப ஹேது வாக்குப்படி குரூரமான பாபங்களை அஸங்க யாதமாம் எத்தனை அனுஷ்டித்தேனோ –ஈவு -வ்யயம்
அது என் என்னில் –
தாவி வையம் கொண்ட எந்தாய்! -திருவடிகளிலே அளந்து ஜகத்தை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட என்னுடைய ஸ்வாமியே
தாமோதரா! -அனன்யரானார்க்கு அத்யந்த பவ்யன் என்று தோன்றும்படி யசோதை கட்டின காம்பின் தழும்பை உதரத்திலே யுடையவனே
என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண்பனி சோர நின்றால்,–இடைவிடாதே பலகாலும் அழைத்து நெஞ்சு நீராயுருகி அது கண்ணீராய்ச் சோரும்படி
ஆர்த்தியோடே முழுக்க நின்றால்
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–-உன்னைக் காணப் பெறாத பாபத்தை யுடைய நான்
காணும்படி முன்னே வந்து நீ பாபி காண் என்று ஒரு வார்த்தை சொல்லுகிறிலை –
காண வந்து சொல்லப் பெறில் அதுவும் அமையும் என்று கருத்து –

—————————————

அநந்தரம் ப்ரஹ்மாதி தேவதைகளும் காண மாட்டாத பெரியவனை ஸ்ப்ருஹணீயமான வடிவழ கோடே என் முன்னே வந்து
நிற்க வேணும் என்று நிரலஜ்ஜனாய்க் கூப்பிடுகிற இதற்கு என்ன பிரயோஜனம் யுண்டு என்கிறார் –

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-

பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–ப்ரஹ்மாதிகளான தேவர்கள் தங்கள் ஞான ப்ரேம அனுரூபமாக ஆதரித்து
தாங்கள் காண்கைக்கும் சக்தர் இன்றியே ஒழியும்படி பெருமையை யுடையனான ஸ்வாமியை
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்!-ஓட்டற்ற ஆணிச் செம்பொன் போலே ஸ்ப்ருஹணீயமான வடிவை யுடைய என் நாயகனே
தாமரைக் கண் பிறழ,-தாமரை போன்ற திருக் கண்களானவை விளங்கும் படி என்னைப் பார்த்துக் கொண்டு -பிறழ்தல் -விளங்குதல் –
காண வந்து,என் கண் முகப்பே –ஆரம்பமே தொடங்கி நான் காணும்படியாக வந்து என் கண் முகப்பே
நின்று அருளாய் என்று என்று,-நின்று அருள வேணும் என்று பலகாலும் சொல்லி
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் –நிரலஜ்ஜனாய்க் கொண்டு ஷூத்ர ஸ்வ பாவனான நான் –
இங்கு அலற்றுவது என்- பகவத் விஷயத்தை அகற்றும் தேசத்திலே இருந்து அலற்றுவதற்கு என்ன பிரயோஜனம் யுண்டு –

————————————————

அநந்தரம் தேவர்களுக்கும் துர்லபனாய் இருக்கச் செய்தேயும் ஆஸ்ரிதரானவர்களுக்கு அரும் தொழில் செய்தும்
அபேக்ஷிதம் கொடுத்தவன் என்று நினைத்து காண்கைக்கு மிகவும் த்வரியா நின்றேன் என்கிறார்

அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5-

அப்பனே!–ஆஸ்ரித விஷயத்தில் சத்தையே தொடங்கி அபகரிக்கும் ஸ்வ பாவனை
அடல் ஆழி யானே! -அவர்களுக்கு விரோதியை நிராசைக்கும் ஸ்வ பாவத்தை யுடைய திருவாழியை யுடையவனே
ஆழ் கடலைக் கடைந்த துப்பனே!‘–அகாதமான கடலை கடைந்து அவர்களுக்கு அபேக்ஷிதம் கொடுக்கும் பெரு மிடுக்கனே
உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று–அக்காலத்தில் அவர்களுக்கு அனுபாவ்யமான உன் தோள்கள் நாலையும்
கண்டதாய் விடக் கூடுமோ -என்று நினைத்து
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,–சர்வ காலமும் கண்ணும் கண்ண நீருமாய் பிராணனாது
உலர்த்தி மேல் உலர்த்தியாக சோஷித்து
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–சத்தை அழிவதற்கு முன்னே இந்த ஷணத்திலே வர வேணும் என்று த்வரித்து
அபேக்ஷித்து சபலனான நான் இவ்வஸ்தையில் வரக் கூடும் என்று நினைத்து சம்பாவனையுள்ள பிரதேசத்தைப் பாரா நின்றேன் –

————————————————

அநந்தரம் என் பக்கலிலே ஸர்வதா சந்நிஹிதனாயக் கொண்டு என்னுள்ளே நிற்கும்படி அறிந்து இருக்க
கண்ணாலே காண வேணும் என்று ஆசைப்படுகிறது என் அறிவு கேடு இறே என்கிறார்

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6-

நாள்தோறும் என்னுடைய–ஒரு நாள் ஒழியாமல் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் -சரீரத்துக்குள்ளான ஹ்ருதயத்திலும்-அதுக்கு அபிமானியான ஆத்ம ஸ்வரூபத்தினுள்ளும்
அல்ல புறத்தினுள்ளும்– அதுக்கு கரணங்களாய் இவை இரண்டும் இன்றியே ஸ்வரூப பஹிர்ப்பூதமான இந்திரியாதிகளிலும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–ஒன்றையும் விடாதே எல்லா ஸ்தலத்திலும் அந்தராத்மாவாய் நின்றவனே
இப்படி சதா ஸந்நிஹிதனான உன்னை எப்போதும் அறிந்து வைத்து
நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் –போக்யமான வடிவையுடைய உன்னைக் கண்ணாலே காண்கைக்காக
பலகாலும் பார்த்து சபலனான நான்
எனது ஆவியுள்ளே-நாக்கு நீள்வன், ; –என்னுடைய நெஞ்சுக்குள்ளே ஆசைப்படா நின்றேன்
நாக்கு நீலுகையாவது -ஆசைப்படுகைக்கு ஸூ சகம்
ஞானம் இல்லை-அந்தராத்மாவானவன் அதீந்த்ரியன் என்கிற அறிவு இல்லாமையால் –

——————————————–

அநந்தரம் என் நெஞ்சுக்குள்ளே நிற்கச் செய்தே -பிரகாசிப்பித்த உன் வடிவு அழகை அனுசந்தித்து
சாம்சாரிகமான அறிவு கேடு தீர்ந்தேன் இத்தனை –
அந்த போக்யமான வடிவைக் கண்ணாலே காண வேணும் என்று அன்றோ இப்போது ஆசைப்படுகிறது -என்கிறார்

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

நறுந்து ழாயின் கண்ணி அம்மா! –பரிமள பிரசுரமான திருத்த துழாயை யுடைத்தான திருமாலையையுடைய சர்வாதிகனே
நான் உனைக் கண்டு கொண்டே.-உன் போக்யத்தையிலே சபலனான நான் நிரதிசய போக்யனாய் ப்ராப்தனான உன்னை –
நீ பிரகாசிப்பிக்க என் நெஞ்சால் அபரோக்ஷித்துக் கண்டு கொண்டு
அறிந்து அறிந்து, -இப்படித்தந்த மயர்வற மதி நலத்தாலே உன்னுடைய ப்ராப்ய பாவத்தையும் பிறப்பாக பாவத்தையும் அறிந்து அறிந்து
தேறித் தேறி,–தத் தத் விஷயமான வ்யவசாய பர்யந்தமான தெளிவுகளை யுடையேனாய்
யான் எனது ஆவியுள்ளே–இப்படி லப்த ஞான விவசாயனான நான் என் பிராணாஸ்ரயமான நெஞ்சுக்குள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,–பரிபூர்ண ஞான ஸ்வரூபமான உன்னை சம்சய விபர்யயமாகிற
மலம் அறும்படி ப்ரதிஷ்டித்தமாக வைத்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும் ;–பிறப்பது சாவதாய் நின்று அலமருகிற -நின்று அலறும் -பாட பேதம் -அலற்றும் -என்றுமாம் –
பேதைமை தீர்ந்தொழிந்தேன் -அறிவுகெடு தீர்ந்து விட்டேன் இத்தனை –
திரு மார்வும் திரு மாலையுமான வடிவு அழகைக் கண்ணிட்டுக் காணப் பெற்றிலேன் -என்று வாக்ய சேஷம் –

————————————-

அநந்தரம் யுக்தமான போக்யதையில் அபி நிவேசத்தாலே கண்டு அனுபவித்து அடிமை செய்ய ஆசைப்படுகிறார்

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-

கண்டு கொண்டு-நான் உன்னைக் கண்டு கொண்டு என்கிற நெஞ்சில் காட்சி அளவன்றியே கண்ணாலே பரிபூர்ணமாகக் கண்டு அனுபவித்து
என் கைகள் ஆர–தாயவனே என்று தடவும் என் கைகள் பூர்ண மநோ ரதமாம்படி
நின் திருப்பாதங்கள் மேல்-ப்ராப்தனான உன்னுடைய திருவடிகளின் மேலே ஆதார அனுரூபமாக
எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி, –சகல திக்குகளிலும் உண்டான புஷ் பங்களை சம்பாதித்து ஸ்தோத்ர பூர்வமாகப் பரிமாறி
உகந்துகந்து,-தத்தத் ப்ரவ்ருத்திகள் தோறும் ப்ரீதி பரவசராய்
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் -உன் பக்கலிலே அத்யந்த அபி நிவேச ரூப பக்தியையுடைய நாங்கள்
ப்ரீதிக்குப் போக்குவீடாகப் பாடுவது ஆடுவதாம்படி
கடல் ஞாலத்துள்ளே-கடல் சூழ்ந்த பூமியான சம்சாரத்துக்குள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–முன்பு எனக்கு நெஞ்சில் பிரகாசிப்பித்த விலக்ஷணமான
திருத் துழாய் மாலையையுடைய நாயகனே வந்திடுகிறிலை –

————————————————

அநந்தரம் அனுபாவ்யமான திருவாழியையுடைய என் நாயனை அகிஞ்சனனாய் வைத்து ஆசைப்பட்ட நான் எங்கே காண்பேன் -என்கிறார் –

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; –பசியும் தாகமும் யுடையார்க்கு ஒரு பிடி சோற்றை இடுதல் ஒரு மிடறு
தண்ணீர் வார்த்தல் செய்ய மாட்டுகிறிலேன்
இப்படி தான ரூபமான கர்ம யோகம் இல்லாமையால் ஞான யோகத்துக்கு உறுப்பாக
ஐம்புலன் வெல்லகிலேன்;-இந்திரியங்கள் ஐந்தையும் விஷயங்களில் போகாமல் நியமிக்க மாட்டு கிறிலேன்
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;-அது அடியாக பக்தி யோக சரீரத்தில் அந்வயிக்கும் படி நியதனாய்க் கொண்டு
ஆராதன அநு ரூபமான காலம் தோறும் புஷபங்களைச் சம்பாதித்து ஆராதித்து ஸ்துதிக்க மாட்டு கிறிலேன்
இப்படி அகிஞ்சனனாய் இருக்கச் செய்தே
மடவல் நெஞ்சம் காதல் கூர,-பற்றின விஷயத்தில் ப்ரவணமாய் ஒருவராலும் விடுவிக்க ஒண்ணாத நெஞ்சானது அபி நிவேசம் விஞ்சி வர
வல்வினையேன் -தத் அநு ரூபமான அனுபவத்தைப் பண்ணப் பெறாத பிரபல பாபத்தை யுடைய நான்
அயர்ப்பாய்த்-அறிவு கேட்டையே யுடையனாய்க் கொண்டு
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–போக்யமான திருவாழியை யுடைய நாதனை
காணலாம் என்று தேடா நின்றேன் -எங்கே காணக் கடவேன்-

—————————–

அநந்தரம் வேத வேத்யனானவனைக் கையும் திருவாழியுமாகக் காண ஆசைப்பட்டுக் கிடையாது ஒழிந்தால்
மறந்து பிழைக்க ஒண்ணாத படி மானஸ ஞானத்துக்கு விஷயமாய்ப் பிரகாசிக்க வேணுமோ -என்கிறார்

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து,-திருக்-கையும் திருவாழியுமான வடிவைக் காட்டி அடிமை கொண்ட ஸ்வாமியே என்று சொல்லி
அவனை அநுபவிக்கப் பெறாமையாலே தரைப்பட்டு விழுந்து
கண்ணீர் ததும்ப,-கண்கள் நீர் மிகைக்கும்படி
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; -சுற்றும் பார்த்து நின்று கிலேசித்தேன்
பாவியேன் காண்கின்றிலேன்;–காண்கைக்கு பிரதிபந்தகமான பாபத்தைப் பண்ணின நான் காணப் பெறுகிறிலேன் –
இவ்வளவில் மறந்து விட ஒண்ணாத படி
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை -அபரிச்சின்ன ஞான ஸ்வரூபனான வேதமாகிய தீபத்தாலே காணப்படுமவனை
என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–கண்ணிட்டுக் காண ஆசைப்பட்டு கிலேசிக்கிற எனக்கு தகுதியான
ஞானம் ஆகிற கண்ணாலே கண்டு ஸம்ஸ்லேஷியா நிற்பன்
காணப் பெறாமையாலே ப்ரேமம் துக்க ஹேது வானவோபாதி ஆந்தர ப்ரகாசத்தாலே ஞானமும் துக்க ஹேது வாயிற்று என்று கருத்து –

—————————————–

அநந்தரம் -இத்திருவாய் மொழியை அனுசந்தித்து ப்ரேம பரவசராமவர்கள் பரமபதத்திலே
ஏறப் பெறுவர்கள் என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11-

தழுவி நின்ற காதல் தன்னால் ஸ்வரூபத்தோடு அவிநா பூதமாய் -ஸ்திரமான பகவத் அநு பவ அபி நிவேசத்தாலே
தாமரைக் கண்ணன்றனைக்—அவ்வபி நிவேசத்துக்கு நிதானமாய் நிரதிசய போக்யமான தாமரை போன்ற திருக் கண்களை யுடையவனைப் பற்ற
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்–திரண்ட மாதங்களை யுடைத்தான திரு நகரிக்கு நிர்வாஹகரான
குடிப்பிறப்பை யுடைய ஆழ்வாருடையதாய்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்–பகவத் குணங்களில் ஒன்றும் வழுவாத படியான போதகத்வ வைலக்ஷண்யத்தை யுடைத்தாய்
சர்வாதிகாரமான தராமிட ரூபமான ஆயிரம் திருவாய் மொழியில் இப்பத்தையும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–பாவ விருத்தியோடே நெஞ்சு பொருந்தும்படி பாடி ப்ரேம பாரவசயத்தாலே
விக்ருதராய் ஆட வல்லவர்கள் அங்குசித அனுபவ ஸ்தலமான பரம பதத்தில் ஏறப் பெறுவர்கள்
இது ஆறு சீர் ஆசிரிய விருத்தம் –

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: