ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3-10-–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

கீழில் திரு மொழியில் -ஸ்ரீ ராமாவதார குண சேஷ்டிதங்களை அனுபவித்த இவர் –
ஸ்ரீ ராக்வத்வே பவத் ஸீதா-என்கிறபடியே
அவ்வவதார அநு குணமாக ஓக்க வந்து அவதரித்த ஸ்ரீ பிராட்டி தன்னுடைய புருஷகாரத்வ உபயோகியான –
கிருபா -பாரதந்தர்ய -அநந்யார்ஹத்வங்களை
சேதனர் எல்லாரும் அறிந்து விஸ்வஸித்துத் தன்னைப் பற்றுகைக்கு உடலாக நம்முடைய அனுஷ்டானத்தாலே
வெளியிடக் கடவோம்-என்று திரு உள்ளம் பற்றி
அதில் பிரதமத்தில் தன்னுடைய கிருபையை வெளியிடுகைக்காக -தாண்ட காரண்யத்திலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ராவணன் பிரித்தான் என்ற ஒரு வ்யாஜத்தாலே லங்கையில் எழுந்து அருள –
ஆத்மாநம் மானுஷம் மந்யே-என்கிற அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே
ஸ்ரீ பெருமாள் இவள் போன இடம் அறியாமல் திருத் தம்பியாரும் தாமுமாய்க் கொண்டு தேடித் திரியா நிற்கச் செய்தே
பம்பா தீரத்திலே எழுந்து அருளின அளவிலே ஸ்ரீ மஹா ராஜருடைய நியோகத்தாலே ஸ்வ வேஷத்தை மறைத்து
பரிவ்ராஜக வேஷ பரிக்ரஹம் பண்ணி வந்து முகம் காட்டின ஸ்ரீ திருவடியோடே முந்துற உறவு செய்து –

பின்பு அவர் கொடு போய்ச் சேர்க்க
ராஜ்ய தாரங்களை இழந்து சுரம் அடைந்து கிடக்கிற ஸ்ரீ மஹாராஜரைக் கண்டு அவரோடே சக்யம் பண்ணி –
அனந்தரம் அவருக்கு விரோதியான
வாலியை நிரசித்து -அவரை ராஜ்ய தாரங்களோடே சேர்த்து வானர அதிபதி ஆக்கி கிஷ்கிந்தை ஏறப் போக விட்டு
திருத் தம்பியாரும் தாமுமாகப் ஸ்ரீ பெருமாள் வர்ஷா காலம் அத்தனையும் மால்யா வானிலே எழுந்து அருளி இருக்க –
படை வீட்டிலே போன இவர் ஸ்ரீ பெருமாள் செய்த உபகாரத்தையும் அவருடைய தனிமையையும் மறந்து
விஷய ப்ரவணராய் தார போக சக்தராய் இருந்து விட வர்ஷா காலத்துக்கு பின்பு அவர் வரக் காணாமையாலே
காம வர்த்தஞ்ச ஸூக்ரீவம் நஷ்டாஞ்ச ஜனகாத்மஜாம் புத்வா காலம் அதீ தஞ்ச முமோஹபர மாதுர -என்கிறபடியே
கனக்க கிலேசித்து அருளி

ஸ்ரீ இளைய பெருமாளைப் பார்த்து -நீர் போய் வெதுப்பி ஆகிலும் ஸ்ரீ மஹா ராஜரை அழைத்துக் கொண்டு வாரும் -என்று விட
அவர் கிஷ்கிந்தா த்வாரத்திலே எழுந்து அருளி ஜ்யா கோஷத்தைப் பண்ணி -அத்தைக் கேட்டு -ஸ்ரீ மஹா ராஜர் நடுங்கி
கழுத்தில் மாலையையும் அறுத்துப் பொகட்டு காபேயமாகச் சில வியாபாரங்களைப் பண்ணி அருகே நின்ற திருவடியைப் பார்த்து
இவ்வளவில் நமக்கு செய்ய அடுத்து என் என்ன
க்ருத்த அபராதஸ்ய ஹிதே நாந்யத் பஸ்யாம் யஹம் ஷமம்-அந்தரேணாஞ்ச லிம்ப்த்வா லஷ்மணஸ்ய பிரசாதநாத் -என்று
அபராத காலத்தில் அநு தாபம் பிறந்து மீண்டோமாய் எளியன சில செய்கிறோம் அல்லோம் –
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு இனி ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்ன –
அவ்வளவிலும் தாம் முந்துறப் புறப்பட பயப்பட்டு
ஸ்ரீ இளைய பெருமாள் திரு உள்ளத்தில் சிவிட்கை -தாரையை விட்டு ஆற்ற வேணும் -என்று தாரையைப் புறப்பட விட
அவள் சா ப்ரஸ்கலந்தீ -இத்யாதிப்படியே ஸ்ரீ இளைய பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ இளைய பெருமாள் திரு உள்ளத்தில் சிவிட்கு ஆறும் படி
வார்த்தைகள் விண்ணப்பம் செய்த பின்பு ஸ்ரீ மஹா ராஜர் தாமும் புறப்பட்டு வந்து ஸ்ரீ இளைய பெருமாளைப் பொறை கொண்டு-
அவர் தம்மையே முன்னிட்டுக் கொண்டு ஸ்ரீ பெருமாளை சேவித்த அநந்தரம்-

தம்முடைய சர்வ பரிகரத்தையும் திரட்டி
யாம் கபீநாம் சஹஸ்ராணி ஸூ பஹூந்யயுதா நிச-தி ஷூ சர்வா ஸூ மார்கந்தே-என்கிறபடியே
திக்குகள் தோறும் திரள் திரளாகப் பிராட்டியைத் தேடிப் போக விடுகிற அளவிலே –
தக்ஷிண திக்கில் போகிற முதலிகளுக்கு எல்லாம் பிரதானராகப் போருகிற
ஸ்ரீ அங்கதப் பெருமாள் -ஸ்ரீ ஜாம்பவான் -ஸ்ரீ மஹா ராஜர் -ஸ்ரீ திருவடி
இவர்களில் வைத்துக் கொண்டு ஸ்ரீ திருவடி கையில் ஒழிய இக்காரியம் அறாது என்று திரு உள்ளம் பற்றி ஸ்ரீ பிராட்டியைக் கண்டால்
விசுவாச ஜனகமாக விண்ணப்பம் செய்யத் தக்க அடையாளங்களையும் அருளிச் செய்து திருவாழி மோதிரத்தையும் கொடுத்து விட
எல்லாரும் கூடப் போய் தக்ஷிண திக்கில் ஓர் இடத்திலும் காணாமல் கிலேசப்பட்டு –
அநசநத்தில் தீஷிதராய் முடிய நினைக்கிற அளவிலே
சம்பாதி வார்த்தையால் -ராவணன் இருப்பு சமுத்ரத்துக்கு உள்ளே லங்கை என்பொதொரு படை வீடு -என்று கேட்டு
எல்லாரும் ப்ரீதராய் இக்கரையில் இருந்து திருவடியைப் போக விட -அவரும் சமுத்திர தரணம் பண்ணி அக்கரை ஏறி
ப்ர்ஷதம்சக மாத்ரமாக வடிவைச் சுருக்கிக் கொண்டு
ராத்திரியில் ராவண அந்தப்புர பர்யந்தமாக சர்வ பிரதேசத்திலும் ஸ்ரீ பிராட்டியைத் தேடிக் காணாமையாலே
கிலேசப்பட்டுக் கொண்டு இரா நிற்கச் செய்தே

அசோகவநிகா பிரதேசத்தில் சில ஆள் இயக்கத்தைக் கண்டு அங்கே சென்று
ப்ரியஞ்ஜ நம பஸ்யந்தீம் பஸ்யந்தீம் ராக்ஷஸீ கணம் -ஸ்வ கணே நம்ர்கீம் ஹீ நாம்ஸ்வ கணை ராவ்ர்தா மிவ -என்கிறபடியே
விகர்த்த வேஷைகளான ஏழு நூறு ராக்ஷஸிகளின் நடுவே மலங்க மலங்க விழித்துக் கொண்டு நோவு பட்டு இருக்கிற
ஸூஷ்ம ரூபேண சிம்சுபா வ்ருஷத்துக்கு உள்ளே மறைந்து இருக்க – அவ்வளவில் ராவணன் காம மோஹிதனாய் வந்து
ஸ்ரீ பிராட்டி சந்நிதியில் சிலவற்றை ஜல்பிக்க -அவள் இவனை முகம் பாராமல் இருந்து திஸ்கரித்து வார்த்தை சொல்லி விடுகையாலே
மீண்டு போகிறவன் ராக்ஷஸிகளைப் பார்த்து -இவள் பயப்பட்டு நம் வசம் ஆகும்படி குரூரமாக நலியுங்கோள் -என்று சொல்லிப் போகையாலே
அவர்கள் இதுக்கு முன்பு ஒரு காலமும் இப்படி நலிந்திலர்கள் -என்னும்படி தர்ஜன பர்த்ச நாதிகளைப் பண்ணி நலிய –
இனி நமக்கு இருந்து ஜீவிக்கப் போகாது -முடிந்து விடும் அத்தனை -என்று வ்யவசிதையாய்
அந்த ராக்ஷஸிகள் நித்ரா பரவசைகளான அளவிலே அங்கு நின்றும் போந்து
வேண்யுத்க்ரதந உத்யுக்தையாய் வ்ருக்ஷத்தின் கொம்பைப் பிடித்துக் கொண்டு நிற்கிற அளவிலே
இனி நாம் பார்த்து இருக்க ஒண்ணாது இவ்வளவிலே இவளை நாம் நோக்க வேணும் -என்று

ஏவம் பஹூ விதாஞ் சிந்தஞ் சிந்தயித்வா மஹா கபி ஸம்ஸரவே மதுரம் வாக்யம் வைதேஹ்யா வ்யாஜஹாரஹ-என்கிறபடியே
செவிப்பட்ட போதே ரசிக்கும் படி ஸ்ரீ ராம குண சேஷ்டித விஷயமான வாக்கியங்களைச் சொல்லி –
இத்தனை காலமும் இல்லாத ஓன்று இப்போது யுண்டாகைக்கு அடி என் -என்று சொல் வந்த வழியே
சிம்சுபா வர்ஷத்தை எங்கும் ஓக்கப் பார்த்து அதின் மேலே இருக்கிற வானர ரூபியான இவனைக் கண்டு
இது ஏதோ என்று ஏங்கி மோஹித்து விழுந்து நெடும் போதொடு உணர்த்தி யுண்டாய் பின்னையும் இது ஏதோ என்று –
கிந்நுஸ் யாச் சித்த மோஹோயம் -இத்யாதிப்படியே -விசாரிக்கிற அளவிலே இவள் முன்னே வந்து
கையும் அஞ்சலியுமாய் நின்று அநு வர்த்தக பூர்வகமாகச் சில வார்த்தைகளைச் சொல்ல
அவள் பீதையாய் இவனை ராவணன் என்று அதி சங்கை பண்ணி -இப்படி நலியல் ஆகாது காண் -என்று
தைன்யமாகப் பல வார்த்தைகளையும் சொல்ல –
இவளுடைய அதி சங்கையைத் தீர்க்கைக்காக ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்து விட்ட அடையாளங்களை எல்லாம்
ஸூ ஸ்பஷ்டமாக இவள் திரு உள்ளத்திலே படும்படி விண்ணப்பம் செய்து தான் ஸ்ரீ ராம தூதன் என்னும் இடத்தை அறிவித்து பின்பு
திருவாழி மோதிரத்தையும் கொடுத்து அவள் திரு உள்ளத்தை மிகவும் உகப்பித்த பிரகாரத்தை அநு சந்தித்து -அதில் தமக்கு யுண்டான
ஆதார அதிசயத்தாலே அவன் அப்போது விண்ணப்பம் செய்த அடையாளங்களையும் -திருவாழி மோதிரம் கொடுத்த படியையும்
அது கண்டு அவள் ப்ரீதியான படியையும் எல்லாம் அடைவே பேசி அனுபவிக்கிறார் இத் திரு மொழியிலே

———————————–

நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3-10-1-

நெறிந்த குழல் மடவாய்
நெறித்துக் கருகின குழலையும் -மடப்பத்தையும் -யுடையவளே
கோரை மயிராய் இராதே -சுருண்டு கடை அளவும் -செல்ல இருண்டு இருக்கை இறே குழலுக்கு ஏற்றம் –
இது தான் பூர்வத்தில் படியை இட்டுச் சொல்லுகிற படி –
நீல நாகா பயா வேண்யா ஜகனம் கதயை கயா -என்னும் படி இறே இப்போது கிடக்கிறது –
நாயகரான பெருமாளோடே கூடிச் செவ்வை தோற்றச் செருக்கி இருக்க ப்ராப்த்தையாய் இருக்க –
அவரைப் பிரிந்த கிலேசத்தாலே துவண்டு ஒடுங்கி இருக்கிற படியைப் பற்றி -மடவாய் -என்கிறான்
அதவா–
மடப்பமாவது -பற்றிற்று விடாமையாய் -இங்கே இருக்கச் செய்தேயும் -அஸ்யா தேவ்யா மநஸ் தஸ்மிந்–என்கிறபடியே
பெருமாளையே நினைத்துக் கொண்டு மற்று ஓன்று அறியாமல் இருக்கிறபடியைச் சொல்லுகிறான் ஆகவுமாம்-

நின்னடியேன் விண்ணப்பம்
தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய -என்று பெருமாளுக்கு அடியனான போதே இவளுக்கும் அடியனாகையாலே
உனக்கு அடியனான என்னுடைய விண்ணப்பம் என்கிறான் –
இத்தால் உனக்கு அடியேனான நான் விண்ணப்பம் செய்கிற வார்த்தையைக் கேட்டு அருள வேணும் என்கை –

செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து –
நெருங்கின ரத்னங்களோடே கூடின அபிஷேகத்தை யுடைய ஜனகராஜன் -தேவரீருக்கு சுல்கமாக விட்டு வில்லை முறித்து
இந்த வில்லை வளைத்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று வீர்ய சுல்கமாக அவன் கல்பித்து வைத்த வில் இறே அது –
அப்படி இருக்கிற வில்லை வளைக்கத் தானும் லோகத்தில் ஆள் இன்றிக்கே இருக்க திருக் கையில்
பலத்துக்கு இலக்குப் போராமையாலே-அத்தை முறித்து

நினைக் கொணர்ந்த தறிந்து
இயம் ஸீதா மமஸூதா ஸஹ தர்ம சரீதவ-ப்ரதீச்ச சைநாம் -பத்ரந்தே -பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா -என்கிறபடியே
இவளைக் கைக் கொண்டு அருள வேணும் என்று சமர்ப்பிக்க
தேவரீரை பாணி கிரஹணம் பண்ணிக் கொண்டு போந்த சேதியை அறிந்து

அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
இருப்பத் தொரு படி கால் துஷ்ட ஷத்ரியரான ராஜாக்கள் ஆகிற களையை நிரசித்தவனாய் –
ஒருவரால் செய்ய ஒண்ணாத தபஸ்ஸை யுடையனாய் இருந்துள்ள பரசுராமன்
திரு அயோத்யைக்கு எழுந்து அருளா நிற்கச் செய்தே இடை வழியிலே -என் வில் வழி கண்டு போ -என்று வந்து தகைய
விலங்க-என்றது -விலக்க-என்றபடி –

செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –
அவன் கையினின்றும் வாங்கினதாய் இருக்கச் செய்தேயும் வைஷ்ணவமான தநுஸ்ஸூ ஆகையால் இத்தலைக்கு
அநு ரூபமாய் இருக்கிற வில்லைக் கொண்டு அவனுடைய தபோ பங்கத்தைப் பண்ணி விட்டதும் ஓர் அடையாளம்
தவத்தை சிதைத்தது அடையாளம் -என்னாதே சிதைத்தும் ஓர் அடையாளம் -என்கையாலே
இன்னும் பல அடையாளங்களும் சொல்லுவதாக நினைத்துச் சொல்கிறான் என்னும் இடம் தோற்றுகிறது-
சங்கா நிவ்ருத்தி பிறக்கும் அளவும் சொல்ல வேணும் இறே

———————————–

அல்லியம்பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம்போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு பார்த்ததும் ஓர் அடையாளம் –3-10-2-

அல்லியம்பூ மலர்க் கோதாய்
அல்லி தோன்றும் படி விகசிதமான அழகிய பூவாலே கட்டப்பட்ட மாலை போலே இருக்கிறவளே-
இத்தால் திருமேனியுடைய தநுதையையும் -மார்த்தவத்தையும் -துவட்சியையும் -சொல்லுகிறது –
அடி பணிந்தேன் விண்ணப்பம்
என்னுடைய ஸ்வரூப அநு ரூபமாக தேவரீர் திருவடிகளில் வணங்கி தலை படைத்த பிரயோஜனம் பெற்றேன்
இனி வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி விண்ணப்பம் செய்யத் தக்கது ஓன்று உண்டு என்ன
அது கேட்க்கையில் யுண்டான ஆதரம் தோற்றக் கடாஷித்திக் கொண்டு இருக்கிற-சொல்லுகேன் கேட்டருளாய்-
என்கிறான் -என் பக்கல் வாத்சல்யம் தோன்ற என்னைக் கடாஷித்திக் கொண்டு இருக்கையாலும் -பவ்யதையாலும்-
இணை மலர் போலே இருக்கிற கண்களை யுடையளாய்
மடப்பத்தையும் யுடைத்தான மான் போலே இருக்கிறவளே –
அந்த விண்ணப்பம் தன்னைச் சொல்லுகிறேன் -கேட்டு அருள வேணும் -என்கை -அது தன்னைச் சொல்லுகிறான் மேல்

எல்லியம்போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
ராத்ரி காலத்தில் பெருமாளும் தேவரீருமாய் ரஸோத்தரமான இருப்பாக இருந்த தொரு ஸ்தலத்திலே
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு பார்த்ததும் ஓர் அடையாளம் —
ஸ்லாக்கியமான மல்லிகை மாலையைக் கொண்டு பெருமாளை பந்திவைத்ததும் ஓர் அடையாளம்
பெருமாளுடைய- பிரணயித்வ-பாரதந்த்ர ப்ரயுக்தமாய் -போக தசையில் நடப்பதொரு ரசமாய்த்து இது
ஆகையால் அல்லாத அடையாளங்கள் போல் அன்றிக்கே அத்யந்த ரஹஸ்யமாய் இருப்பது ஓன்று இறே இது தான்
ஸமாத்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே -புஞ்ஜாநா மானுஷாந் போகான் சர்வகாம ஸம்ருத்தி நீ -என்று
இவள் தானும் பெருமாளும் அறியும் அத்தனை இறே –

——————————-

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம் –3-10-3-

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
குப்ஜையாலே கலக்கப்பட்ட பெரிய மனசை யுடையளாய் –
முன்பு புத்ரனான ஸ்ரீ பரத்தாழ்வானைக் காட்டில் பெருமாள் பக்கல் ஸ்நேஹிநியாய்
பர்த்தாவான சக்கரவர்த்தியினுடைய ப்ரியமே செய்து போந்தவளாகையாலே -பெரிய மனசை யுடையவள் -என்கிறது –
இப்படி இருக்கிற மனசை மந்த்ரம் கடலைக் கலக்கினது போலே மந்தரை கலக்கின படி –
அதாவது முற்பட -இவள் சொன்னவை எல்லாம் அநிஷ்டமாய் -இப்படிச் சொல்லலாகாது காண் -என்று பெருமாள் பக்கல் தனக்கு யுண்டான
ஸ்நேஹத்தைச் சொல்லியும் பெருமாளுடைய குணங்களைச் சொல்லியும் இருந்தவளை உத்தர உத்தரம் தான் சொல்லுகிற
வசனங்களால் பெருமாள் பக்கல் ஸ்நேஹத்தைக் குலைத்து-அவரை அபிஷேகம் பண்ண ஒண்ணாது
என் மகனை அபிஷேகம் பண்ண வேணும் -என்று சொல்லும் படி ஆக்கினாள் இவளே இறே

கைகேசி வரம் வேண்ட
இப்படி கலக்கப் பட்ட மனசை யுடையளாய்க் கொண்டு கைகேயியானவள் தனக்கு முன்பே தருவதாகச் சொல்லி கிடக்கிற வரம்
இரண்டையும் இப்போது தர வேணும் என்றும் –
அது தான் பதினாலு சம்வத்சரம் பெருமாளை காட்டில் போக விடுகையும் –
ஸ்வ புத்ரனான பரதனை அபிஷேகம் பண்ணுகையும் -என்று சொல்லி அபேக்ஷிக்க

மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
அதுக்கு அவன் இசையாமையாலே அறுபதினாயிரம் ஆண்டு சத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ அசத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றும்
நீ இது செய்யாயாகில் நான் என் பிராணனை விடுவேன் என்றும் அதி குபிதையாய்க் கொண்டு இவள் சொன்ன சொலவுகளாலே
மலக்கப்பட்ட மஹா மனசை யுடையனாய்க் கொண்டு ராஜாவானவனும் மறுக்க மாட்டாது ஒழிய
மா மனனத்தனாய் -என்றது அறுபதினாயிரம் ஆண்டு வசிஷ்டாதிகளைச் சேவித்து தர்ம அதர்மங்கள் எல்லாம் அறிந்து
ராஜ்யத்தில் ஒருவர் ஒரு பழுதும் செய்யாத படி நோக்கிக் கொண்டு போந்தவன் ஆகையால்
ஒருவரால் கலக்க ஒண்ணாத படியான மனசில் இடமுடையவன் என்றபடி –
இப்படி இருக்கிற மனசையும் தன்னுடைய யுக்தி சேஷ்டிதங்களாலே -என் செய்வோம் -என்று
தெகுடாடும்படி பண்ணினாள் ஆய்த்து கைகேயி
மந்தரை தன் மனசை கலக்கினால் போலே ஆய்த்து இவள் அவன் மனசைக் கலக்கினபடி
இப்படியான மனசை யுடையவனாய் இவள் சொன்னதுக்கு மறுத்து ஒன்றும் சொல்ல மாட்டாது இருக்க –

குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்கச் செய்தே -பெருமாளை அழைத்துக் கொண்டு வா என்று
ஸூ மந்த்ரனைப் பார்த்துச் சொல்வதாக நினைத்து சோக வேகத்தால் அது தானும் மாட்டாது ஒழிய இவள் அருகே இருந்து –
ராஜா ராத்ரி எல்லாம் உத்சவ பராக்கிலே நித்திரை அற்று இருக்கையாலே ஸ்ராந்தராய் சற்று உறங்குகிறார்
நீ கடுகப் போய் பெருமாளை அழைத்துக் கொண்டு வா என்று போக விடுகையாலே அவன் போய் பெருமாளை எழுந்து
அருளுவித்துக் கொண்டு வந்த அளவில் பிதாவானவன் சோகித்துக் கிடக்கிறபடியைக் கண்டு –
இதுக்கு அடி என் என்று கிலேசப்பட்டுக் கேட்டவாறே
முன்பே எனக்கு இரண்டு வரம் தந்து இருப்பர் -அது இரண்டும் எனக்கு இப்போது தர வேணும் –
அதாவது பதினாலு சம்வத்சரம் உம்மைக் காட்டிலே போக விட வேண்டும்
பரதனை அபிஷேகம் செய்ய வேணும் என்று நான் சொன்னேன்
சத்ய தர்ம பராயணன் ஆகையால் மறுக்க மாட்டாமல் அனுமதி செய்து உம்மைக் காட்டில் போக விடுவதாக அழைத்து விட்டார்
உம்மைக் கண்டவாறே வாய் திறந்து சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் காணும் என்ன
என்னை நியமிக்கும் போதைக்கும் இப்படி கிலேசிக்க வேணுமோ -யாதொன்று திரு உள்ளமான படி செய்யேனோ நான் என்ன
ஆனால் அவருக்காபிறந்த குமாரரான நீர் உங்கள் ஐயரை சத்ய ப்ரதிஞ்ஞராக்க வேண்டியிருந்தீர் ஆகில்
அவருடைய வசன பரி பாலகராய்க் கொண்டு வனவாசம் பண்ணும் படியாகப் போம் -என்று போக்கிலே ஒருப்படுத்த
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம் —
ப்ராகேவது மஹா பாகஸ் ஸுமித்ரிர் மித்ர நந்தன பூர்வஜஸ் யாநுயாத்ரார்த்தே த்ருமசீரை ரலந்க்ர்த்த -என்கிறபடியே
தான் புறப்படுவதுக்கு முன்னே இளைய பெருமாளோடே காடேற எழுந்து அருளினது ஓர் அடையாளம் –
ஏகுதல்-போகை

————————-

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –3-10-4-

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ –
கச்சு அணிந்த முலைகளையும் மடப்பத்தையும் யுடையவளே -ராஜாக்களுக்கு போக்யமான வஸ்துக்களை கொண்டு திரிவார்
பிறர் கண் படாதபடி கட்டி முத்திரையிட்டுக் கொண்டு திரியுமா போலே பெருமாளுக்கு போக்யமான இவை பிறர் கண் பட ஒண்ணாது
என்னும் அத்தாலே ஆய்த்து -இவள் கச்சு இட்டுக் கட்டி மறைத்துக் கொண்டு இருப்பது –
இப்படி இருந்த முலைகள் இப்போது வெறும் புறத்திலே இருப்பதே என்று கிலேசித்துச் சொல்லுகிறான் ஆதல் –
அன்றிக்கே –
கச்சாலே அடக்கி ஆள வேண்டும்படி பரிணதமாய்த் தசைத்து இருக்குமவை
இப்போது உபவாச க்ர்சாம் -என்கிறபடி திருமேனி இளைக்கையாலே சோஷித்து இருக்கிற படியைப் பற்றச் சொல்கிறான் ஆதல் –
மடவாய் -என்றது ஸ்த்ரீத்வத்தால் வந்த ஒடுக்கம் இன்றிக்கே பிரிவாற்றாமையால் வந்த துவட்சியைப் பற்றச் சொல்கிறானாதல்
அன்றிக்கே -மடப்பமாவது பற்றிற்று விடாமையாய் அநவரதம்
பெருமாள் அளவில் திரு உள்ளமாய் மற்று ஓன்று அறியாது இருக்கிறபடியைப் பற்றச் சொல்கிறான் ஆதல்
வைதேவீ
விதேஹ புத்ரி யானவளே -இப்படி தேகத்தை யுபேஷித்து இருக்கலாய்த்து இக்குடியில் பிறப்பு இறே என்கை

தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ
தேர்களால் அலங்க்ருதமான திரு அயோத்யையில் உள்ளவருக்கு நிர்வாஹகரான பெருமாளுடைய பெருமைக்குத் தகுதியான தேவீ
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம்
ராகவ அர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-என்னக் கடவது இறே
அல்லது ஒரு சிறு தேவி யுண்டாய் பெரும் தேவி என்கிறது அன்று இறே -பெருமாள் ஏக தார வ்ரதராகையாலே
விண்ணப்பம் – கேட்டருளாய் –
நான் விண்ணப்பம் செய்கிற இத்தைக் கேட்டு அருள வேணும்
கூரணிந்த வேல் வலவன்
மிகக் கூர்மையை யுடைய வேல் தொழில் வல்லவன் -ஸ்ரீ குஹப் பெருமாள் வேல் வாங்கினார் என்றால்
சத்ருபக்ஷம் மண் உண்ணும்படி யாய்த்து இவருடைய ஸுர்யம் இருப்பது
குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –
இப்படி வேலும் கையுமாய்த் திரியுமது ஒழிய -ஏழை ஏதலன் -இத்யாதிப் படியே –
அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஒன்றும் இல்லாத ஸ்ரீ குஹப் பெருமாளோடே –
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி தோழன் நீ எனக்கு -என்று அருளிச் செய்த படியே
குணத்தோடு கூடின தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –

————————————-

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

மானமரும் மென்னோக்கி வைதேவீ
மானோடு ஒத்து இருந்துள்ள மிருதுவான நோக்கை யுடையவளாய் -விதேஹ ராஜாவினுடைய புத்ரியானவளே
இத்தால் -ப்ரியஞ்ஜநம பஸ்யந்தீம் பஸ்யந்தீம் ராக்ஷஸீ கணம் -ஸ்வ கணேநம்ர்கீம் ஹீ நாம் ஸ்வ கணை ராவர் தா மிவ -என்கிறபடியே
தன் இனத்தைப் பிரிந்து அநேகம் நாய்களினுடைய திரள்களாலே வளைக்கப் பட்டு நடுவே நின்று
மலங்க மலங்க விழிப்பதொரு மான் பேடை போலே
அநு கூல ஜனத்தின் முகத்தில் விழிக்கப் பெறாமல் பிரதிகூலமான ராக்ஷஸி கணத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிற இருப்பையும்
அவர்களுடைய தர்ஜன பர்த்ச நங்களால் உளைந்து வேண் யுத்க்ரதந யுத்யுக்தை யாம்படி தேகத்தை யுபேஷித்த படியையும் சொல்லுகிறது

விண்ணப்பம்
அடியேன் விண்ணப்பம் செய்கிற வார்த்தையை திரு உள்ளம் பற்றி அருள வேணும்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
காடு செறிந்து இருப்பதாய் கல் நிறைந்து கிடப்பதான வழியிலே திருவடிகளின் மார்த்வம் பாராதே போய் வனவாசம் பண்ணின காலத்தில்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாமல் பொருந்திக் கிடக்கிற பொழில்களோடே சேர்ந்த பர்யந்தத்தை யுடைய சித்ர கூட பர்வதத்தில் –
உடஜே ராம மாசீ நம் ஜடா மண்டல தாரிணம் கிருஷ்ணாஜிநதரம் தந்து சீரவல்கல வாஸஸம் -என்கிறபடியே
இளைய பெருமாள் சமைத்த ஸ்ரீ பர்ண சாலையிலே எழுந்து அருளி இரா நிற்க

பான் மொழியாய்
பால் போலே ரசாவகமான பேச்சை யுடையவளே -இதுக்கு முன்பு இவள் சொன்ன வார்த்தைகளில் ரஸ்யத்தையாலும்-
இது கேட்க்கையில் யுண்டான ஆதார அதிசயத்தாலும் சொல்லுகிறான்
பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் —
பாரதந்தர்யத்தால் பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து -மீண்டு எழுந்து அருள வேணும் –
என்று பிரபத்தி பண்ணினதும் ஓர் அடையாளம் –

——————————————

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் –3-10-6-

சித்ர கூடத்து இருப்பச்
சோலைகளும் ஆறுகளும் சிலாதலங்களுமாய்க் கொண்டு போக ஸ்தானமாய் இருக்கும் சித்ர கூட பிரதேசத்தில்
தஸ்யோ பவந ஷண்டேஷூ நாநா புஷ்ப ஸூ காந்தி ஷூ விஹ்ர்த்ய சவில க்லிந்நாத வாங்கே சமுபாவிசம்-என்கிறபடியே
பெருமாளும் தேவரீருமாய்க் கொண்டு ஏகாந்த ரசம் அனுபவித்து ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி மடியிலே
கண் வளர்ந்து ரஸோத்தரராய் இரா நிற்கச் செய்தே
சிறு காக்கை முலை தீண்ட
இந்திரன் மகனான ஜெயந்தன் தமோ குண பிரசுரனாகையாலே ப்ராப்த அப்ராப்த விவேக சூன்யனாய் தேவ வேஷத்தை மறைத்து
ஷூத்ரமான காக வேஷத்தைப் பரிகரித்துக்கொண்டு வந்து பெருமாள் -மடியில் கண் வளர்ந்து அருளா நிற்கச் செய்தே –
வயசஸ் ஸஹஸா கம்ய விததாரஸ் தநாந்தரே – என்கிறபடியே ஜனனி என்று அறியாதே தேவரீர் திரு முலைத் தடத்திலே நலிய

அத்திரமே கொண்டெறிய
அவ்வளவில் பெருமாள் உணர்ந்து அருளி -க் க்ரீடதி ஸரோஷேனை பஞ்ச வக்த்ரேண போகிநா -என்று அதிகருத்தராய்
ச தர்ப்பம் ஸம்ஸ்தரா த்க்ர்ஹ்ய ப்ராஹ்மணாஸ்த்ரேண யோஜயத் –ச தீப்த இவை காலாக்னி ஜஜ் வாலாபி முகோ த்விஜம் –
ச தம் ப்ரதீப்தம் சிஷேப தர்ப்பந்தம் வாயசம் பிரதி -என்கிறபடியே ஒரு தர்ப்பத்தை எடுத்து -அதில் ப்ரஹ்மாஸ்திரத்தை யோஜித்து
அத்தை அந்த காகத்தின் மேலே செலுத்திவிட

வனைத்துலகும் திரிந்தோடி வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அந்த அஸ்திரம் மந்தகதியாய் விடுகையாலே பின் தொடர்ந்து செல்ல அத்தைத் தப்ப வழி தேடி
ச பித்ராச பரித்யக்த ஸ்ஸூரைஸ் ச ச மஹரிஷிபி த்ரீந் லோகான் சம்பரிக்ரம்ய-என்கிறபடியே
முந்துற பித்ரு கிரஹத்தில் சென்ற அளவில் பிதாவாலும் மாதாவாலும் கை விடப்பட்டு பந்துக்களானவர்கள் தான் கைக் கொள்ளுவார்களோ
என்று அவர்கள் பக்கலிலே சென்ற அளவிலே அவர்களிலும் பரித்யக்தனாய் ஆன்ரு சம்சய பிரதானரான ரிஷிகள் தான்
கைக் கொள்ளுவார்களோ என்று அவர்கள் பக்கலிலே சென்ற அளவிலே அவர்களும் கை விடுகையாலே
திறந்து கிடந்த வாசல்கள் தோறும் ஒரு கால் நுழைந்தால் போலே ஒன்பதில் கால் நுழைந்து மூன்று லோகங்களையும்
வளைய ஓடித் திரிந்த இடத்திலும் ஒருவரும் கைக் கொள்ளாமையாலே
தமேவ சரணம் கத என்கிறபடியே சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருக்கும் கிருபாவானாகையாலே விசமயநீயனாய்-
எல்லாரையும் குணத்தால் ரமிப்பிக்க வல்லவனே என்று சரண்யனான பெருமாள் குணத்தைச் சொல்லி
ஓ என்று தன்னுடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கொண்டு -உனக்கு அபயம் -என்று சரணாகதனானமை தோற்றக் கூப்பிட

அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் –
இப்படி சரணம் புகுகையாலே சதம் நிபதி தம் பூமவ் சரண்யச் சரணாகதம் -வதார்ஹம் அபி காகுத்ஸ கிருபயா பர்யபாலயத் -என்கிறபடியே
கிருபையால் பெருமாள் ரஷித்து அருளுகிற அளவில் காகத்துக்கு பிராண பிரதானம் பண்ணி அஸ்திரத்துக்கு ஒரு கண் அழிவு
கற்ப்பிக்கையாலே முன்பு தலை அறுப்பதாக தொடர்ந்த அஸ்திரம் தானே அதனுடைய ஒரு கண்ணை அறுத்து விட்டதும் ஓர் அடையாளம் –

————————————-

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7-

மின்னொத்த நுண்ணிடையாய் –
மின்னோடு ஒத்து இருந்துள்ள நுண்ணிய இடையை யுடையாய் -இடையினுடைய நுண்ணிமையும் விரக தசையில்
நோவு பாடாற்ற ஒண்ணாமைக்கு உடலாய் இருக்கும் இறே-அத்தைப் பற்றிச் சொல்லுகிறான்
மெய்யடியேன் விண்ணப்பம்
புரையற்ற சேஷ பூதனான நான் விண்ணப்பம் செய்கிறதை திரு உள்ளம் பற்றி அருள வேணும் –
மெய்யடியானாகை யாவது -எதிர்த் தலையிலே ஸம்ருத்தியே புருஷார்த்தமாய் இருக்குமது ஒழிய
ஸ்வ ப்ரயோஜன பரன் இன்றிக்கே இருக்கை

பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
மாயாவியான மாரீசன் இதுக்கு முன்பு லோகத்தில் கண்டு அறியாத ஒரு வடிவை எடுத்துக் கொண்டதாகையாலே
பொன் போலே இருக்கிற நிறத்தையும் நாநா ரத்தினங்கள் போல் இருக்கிற புள்ளியையும் மற்றும் அநேகம் வைசித்தரியையும் யுடைத்தாய்
இருபத்தொரு மானானது எழுந்து அருளி இருக்கிற ஆஸ்ரமத்தின் முன்னே வந்து மநோ ஹரமாம் படி நின்று துள்ளி விளையாட –

நின் அன்பின் வழி நின்று
இத்தைப் பிடித்துத் தர வேணும் -என்று பெருமாளைப் பார்த்து தேவரீர் அருளிச் செய்த இடத்தில் -இளைய பெருமாள் அருகே நின்று –
லோகத்தில் இப்படி இருபத்தொரு மிருகம் இல்லை -மாரீசன் இங்கனே சில மாயா ரூபங்களைக் கொண்டு திரியும் என்று பிரசித்தம் –
ஆகையால் இது மாயா மிருகம் -என்னா நிற்கச் செய்தேயும் -தேவரீருடைய ஆசையின் வழியிலே நின்று

சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
இளைய பெருமாளை இங்குத்தைக்குக் காவலாக நிறுத்தி இருக்கையாலே -பிடித்த வில்லும் தாமுமாய்க் கொண்டு
அத்தைப் பிடிப்பதாகப் பெருமாள் நெடும் தூரம் எழுந்து அருள –
பின்பு தங்களை எல்லாரையும் விஷயீ கரித்த உபகாரத்தை நினைத்து -எம்பிரான் -என்கிறான் –

பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் –
நெடும் தூரம் பின் பற்றிப் போன இடத்திலும் பிடி கொடாமல்
அது தப்பித் திரிகையாலே -இது மாயா மிருகம் என்று திரு உள்ளம் பற்றி அதின் மேல் சரத்தை விட -அது பட்டு விழுகிற போது –
ஹா சீதே ஹா லஷ்மணா -என்று பெருமாள் மிடற்று ஓசை போலே கூப்பிட்டுக் கொண்டு விழ-அத்தை தேவரீர் காட்டி அருளி
பெருமாளுக்கு ஏதேனும் அபாயம் வந்ததாக நினைத்து -இத்தைச் சடக்கென போய் அறியும் -என்று அருளிச் செய்யச் செய்தேயும்
இங்குத்தைக்குக் காவலாக நிறுத்திப் போகையாலும்-பெருமாளுடைய ஸுர்யத்தை அறிகையாலும்-அங்குத்தைக்கு ஒன்றும் வாராது
தேவரீர் பயப்பட்டு அருள வேண்டா -என்று விண்ணப்பம் செய்து -தாம் போக மாட்டாமல் சுற்றிக் கொண்டு நிற்க –
அவர் நில்லாமல் போக வேண்டும்படி தேவரீர் சில அருளிச் செய்கையாலே பிற்பாடு அங்கே
இளைய பெருமாள் பிரிந்து போனதும் ஓர் அடையாளம் –

—————————————–

மைத்தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-

மைத்தகு மா மலர்க் குழலாய் –
மை போலே இருண்டு ஸ்லாக்யமான மலரோடு கூடி இருக்கும் குழலை யுடையவளே -இந்த விசேஷணங்கள் இப்போது இருக்கும்
இருப்புக்குச் சேராமையாலே -இப்படி இருக்கைக்கு யோக்யமான குழல் என்று சொல்லுகிறானாம் அத்தனை –
பிரிவாற்றாமையாலே பேணாமல் இருக்கையாலே புழுதி படைத்துப் பூ மாறி இறே இப்போது கிடக்கிறது
வைதேவீ
தேஹத்தை உபேஷித்து இருக்கிற படியைக் கொண்டு சொல்கிறான் –
விண்ணப்பம்
இந்த விண்ணப்பத்தைத் திரு உள்ளம் பற்ற வேணும் என்கை –

ஒத்த புகழ் வானரக் கோன் –
காண்பதுக்கு முன்னே -ஸூக்ரீவம் நாதம் இச்சதி -ஸூக்ரீவம் சரணம் கத -என்று இளையபெருமாள் அருளிச் செய்யும் படி
தானே பஹு மானம் பண்ணிக் கொண்டு வந்து கண்டா பின்பு அக்னி சாஷிகமாக ஸஹ்யம் பண்ணி
த்வம் வய ஸ்யோ சிஹ்ருத்யோ மேஹ் யேகம் துக்கம் ஸூகஞ்சநவ் -என்று இளைய பெருமாள் அருளிச் செய்த பின்பு
பெருமாளோடு சோக ஹர்ஷங்கள் ஒத்துப் போந்தவர் என்னும் புகழை யுடையராய் வாநராதி பதி என்றது சாபிப் ராயம் —
அதாவது தேவரீரைத் தேடுகைக்காக -யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்கிறபடியே -திக்குகள் தோறும் திரள் திரளாகப்
போக விடத் தக்க வானர சேனையை யுடையவர் என்கை

உடன் இருந்து நினைத் தேட
மால்யவானிலும் கிஷ்கிந்தையிலுமாகப் பிரிந்து இருந்து போய் பெருமாளுடன் கூடி இருந்து
தேவரீரைத் தேடுகைக்காக சர்வ திக்குகளிலும் ஆள் விடுகிற அளவிலே –
விசேஷேண து ஸூ க்ரீவோ ஹநூமத்த்யர்த்தம் உக்தவான் -என்கிறபடியே எல்லாரையும் போல் அன்றிக்கே விசேஷித்து
என்னை அபிமானித்து -இவன் இக்காரியத்துக்கு சமர்த்தன் -என்று மஹா ராஜர் திரு உள்ளம் பற்றின அநந்தரம்

அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
தேவரீரைப் பிரிந்த பின்பு -ஊணும் உறக்கமும் அற்றும்-கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே -ஏதேனும் ஒரு போக்கிய பதார்த்தத்தைக் கண்டால்
தேவரீரை நினைந்து ஈடுபட நின்றுள்ள அந்நிலைக்குத் தகுதியான பிரணயித்வ குணத்தை யுடையவராய்
ஸ்ரீ பரதாழ்வான்-அடி சூடும் அரசாய்த் திருவடி நிலை கொண்டு போகையாலே திரு அயோத்யையில் உள்ளார்க்குத் தாமே ராஜாவான
பெருமாள் விண்ணப்பம் செய்த அடையாளங்கள் எல்லாம் அடியேனுக்குத் தம்முடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்தார் –
அல்லாது போது மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்தது அடியேனுக்கு அறியக் கூடுமோ
இத்தகையால் அடையாளம் —
ஆனபின்பு விண்ணப்பம் செய்த அடையாளம் இத்தனையும் இந்த பிரகாரத்தாலே வந்தது என்று அறிவித்து
ஈது அவன் கை மோதிரமே-
இது அவர் திருக் கையிலே திருவாழி மோதிரம் என்று -ராம நாமாங்கிதஞ்சேதம் பஸ்யதே வ்யங்குளீயகம் -என்கிறபடியே
பெருமாளுடைய திரு நாமத்தாலே அங்கிதமாய் இருக்கிற திருவாழி மோதிரத்தைக் கொடுத்தான் ஆய்த்து –

———————————————

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9-

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
தத்வ ஞானத்தாலும் -பிராகிருத விஷய வைராக்யத்தாலும் -முமுஷுவாய் பல அபி சந்தி ரஹிதமாக கர்ம அனுஷ்டானங்களைப்
பண்ணிக் கொண்டு போருகையாலும்-சர்வ திக்குகளிலும் நிறைந்த புகழை யுடையனான ஸ்ரீ ஜனக ராஜனுடைய
ஆஹவநீயாத் யக்நி த்ரயத்தோடே பண்ணும் யாகத்தில் விச்வாமித்ர மகரிஷி கொண்டு செல்ல எழுந்து அருளின காலத்தில்
மிக்க பெரும் சவை நடுவே
மிகவும் பெரிய சபா மத்யத்திலே

வில்லிறுத்தான் மோதிரம் கண்டு –
தனக்கு சுல்கமாகக் கல்பித்து இருந்த வில்லை முறித்த பெருமாளுடைய திருக் கையிலே அப்போது கிடந்ததாய்
பின்பு பாணி கிரஹணம் பண்ணுகிற போது தன் கையில் உறுத்தினதாய்-சர்வ காலமும் பெருமாள் திருக் கையில்
கிடக்குமதான திருவாழி மோதிரத்தைக் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல் -வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–
அநுமானே நீ முன்பு சொன்ன அடையாளங்களும் திருவாழி மோதிரத்தின் அடையாளமும் ஒக்கும் என்று அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லி
க்ருஹீத்வா ப்ரேஷா மாணாசா பர்த்து கர விபூஷணம் -பர்த்தாராம் இவ ஸம்ப்ராப்தா ஜானகீம் உதிதாபவத் -என்கிறபடியே
அத் திருவாழி மோதிரத்தை வாங்கி அதினுடைய கௌரவமும் -தன்னுடைய ஆதரமும் தோற்றத் தலை மேல் வைத்துக் கொண்டு -பின்னை
அத்தைக் கையிலே ஏந்தி -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்கையாலே -அத் திருவாழி மோதிரத்தோடே சேர்ந்த
திரு விரலையும் -அத்தோடு சேர்ந்த -திருக் கையையும் -அத்தோடு சேர்ந்த திருத் தோள்களையும் நினையா நின்று கொண்டு
அவ்வழியாலே திருமேனி எல்லாவற்றையும் நினைத்து பாவணா ப்ரகரஷத்தாலே பெருமாள் அலங்கரிக்கப் பூ முடித்து ஒரு படுக்கையிலே
இருந்தால் போலே தோன்றி பிராட்டி மிகவும் ப்ரீதையானாள் என்று ஆச்சர்யப்பட்டு அருளிச் செய்கிறார் -ஆல்-ஆச்சர்யம் –

————————–

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
வாரொடு சேர்ந்து இருக்கைக்கு யோக்யமாய் இருக்கச் செய்தே -இப்போது வெறும் புறத்தில் இரா நிற்பதாக முலையை யுடையளாய் –
விரஹத்தால் வந்த துவட்சியும் யுடையளாய் -தேஹத்திலே உபேக்ஷையாலே விதேஹ புத்ரியானமை தொற்றி இருக்கிற ஸ்ரீ பிராட்டியைக் கண்டு
சீராரும் திறல் அனுமன்
முதலிகள் எல்லாரும் யுண்டாய் இருக்க -இவனே இக்காரியம் செய்ய வல்லான் -என்று ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் பற்றி –
அடையாளங்களும் சொல்லி -திருவாழி மோதிரமும் கொடுத்து விடும்படி ஞானாதி குணங்களால் பரி பூர்ணனாய் –
நினைத்தது முடிக்க வல்ல சக்திமானாய் இருக்கிற ஸ்ரீ திருவடி –
தெரிந்து உரைத்த அடையாளம்
பெருமாள் அருளிச் செய்த படிகளில் ஒன்றும் தப்பாமல் ஆராய்ந்து ஸ்ரீ பிராட்டிக்கு விஸ்வசநீயமாக விண்ணப்பம் செய்த அடையாளங்களை –
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
பூமி எங்கும் நிறைந்த புகழை யுடையரான ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஸ்ரீ பெரியாழ்வார்
அருளிச் செய்த பாடலான இவற்றை சாபிப்ராயமாக வல்லவர்கள்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே —
எல்லா நன்மைகளும் சேர்ந்த பரமபதத்தில் -அடியாரோடு இருந்தமை -என்கிறபடியே
நிரந்தர பகவத் அனுபவ பரரான ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக இருக்கப் பெறுவர் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: