ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-2-2–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

அவதாரிகை –
ஆழ்வார்கள் எல்லாரும் ஸ்ரீ கிருஷ்ணாவதார ப்ரவணராய் இருந்தார்களே யாகிலும் -அவர்கள் எல்லாரையும் போல் அன்றிக்கே
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் அதி பிரவணராய் -அவ்வாதார ரஸா அனுபவத்துக்காக கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி
போகத்தில் வழுவாத புதுவையர் கோன்-என்கிறபடியே அவ்வாதார ரசம் உள்ளது எல்லாம் அனுபவிக்கிறவர் ஆகையால்
முதல் திரு மொழியிலே அவன் அவதரித்த சமயத்தில் அங்குள்ளார் செய்த உபலாளந விசேஷங்களையும்-
அனந்தரம் -யசோதைப் பிராட்டி அவனுடைய பாதாதி கேசாந்தமான அவயவங்களில் உண்டான அழகை ப்ரத்யேகம் பிரத்யேகமாகத் தான் அனுபவித்து
அநு புபுஷுக்களையும் தான் அழைத்துக் காட்டின படியையும்
அனந்தரம் அவள் அவனைத் தொட்டிலிலே ஏற்றித் தாலாட்டின படியையும்
பிற்காலமாய் இருக்க தத் காலம் போலே பாவநா ப்ரகரஷத்தாலே
யசோதாதிகளுடைய பிராப்தியையும் ஸ்நேஹத்தையும் யுடையராய்க் கொண்டு
தாம் அனுபவித்து அனந்தரம் அவன்
அம்புலியை அழைக்கை
செங்கீரை யாடுகை
சப்பாணி கொட்டகை
தளர் நடை நடக்கை
அச்சோ என்றும் புறம் புல்குவான் என்றும் யசோதைப் பிராட்டி அபேக்ஷிக்க முன்னும் பின்னும் வந்து அணைக்கை யாகிற
பால சேஷ்டிதங்களை தத் பாவ யுக்தராய்க் கொண்டு அடைவே அனுபவித்துக் கொண்டு வந்து
கீழ்த் திரு மொழியிலே அவன் திருவாய்ப்பாடியில் உள்ளாரோடே அப்பூச்சி காட்டி விளையாடின சேஷ்டிதத்தையும்
தத் காலத்திலே அவள் அனுபவித்துப் பேசினால் போலே தாமும் அனுபவித்துப் பேசி ஹ்ருஷ்டரானார்
இனி -அவன் லீலா வ்யாபாரஸ் ராந்தனாய் முலை யுண்கையும் மறந்து -நெடும் போதாகக் கிடந்து உறங்குகையாலே –
உண்ணாப் பிள்ளையைத் தாய் அறியும் -என்கிறபடியே யசோதை பிராட்டி அத்தை அறிந்து -அம்மம் உண்ணத் துயில் எழாயே-என்று
அவனை எழுப்பி நெடும் போதாக முலை உண்ணாமே கிடந்தமையை அவனுக்கு அறிவித்து
நெறித்துப் பாய்கிற தன் முலைகளை உண்ண வேணும் என்று அபேக்ஷித்து அவன் இறாய்த்து இருந்த அளவிலும் விடாதே நிர்ப்பந்தித்து
முலையூட்டின பிரகாரத்தை தாமும் அனுபவிக்க ஆசைப்பட்டு தத் பாவ யுக்தராய்க் கொண்டு
அவனை அம்மம் உண்ண எழுப்புகை முதலான ரசத்தை அனுபவித்துப் பேசி ஹ்ருஷ்டராகிறார் -இத் திருமொழியில் –

————————–

அரவணையாய் ஆயரேறே யம்ம முண்ணத் துயில் எழாயே
இரவும் யுண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வனமுலைகள் சோர்ந்து பாயத்
திருவுடைய வாய் மடுத்துத் திளைத்து உதைத்துப்  பருகிடாயே –2-2-1-

அரவணையாய் ஆயரேறே –
மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமானவற்றை ப்ரக்ருதியாக யுடைய திரு வனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையனாய் இருந்து வைத்து
நாக பர்யங்கம் உத்ஸர்ஜ்ய -என்கிறபடியே அப்படுக்கையை விட்டுப் போந்து அவதீ ர்ணனாய் ஆயர்க்குப் பிரதானன் ஆனவனே –
அப்படுக்கை வாய்ப்பாலே பள்ளி கொண்ட போந்த வாசனையோ ஆயர் ஏறான இடத்திலும் படுக்கை விட்டு எழுந்திராதே பள்ளி கொள்ளுகிறது
அவன் தான் இதர சஜாதீயனாய் அவதரித்தாள் -சென்றால் குடையாம்-என்கிறபடியே
சந்த அனுவர்த்தியாய் அடிமை செய்யக் கடவ திரு அனந்த ஆழ்வானும்
அவனுடைய அவஸ்தா அநு குணமாக பள்ளி கொள்வதொரு திருப் படுக்கையான வடிவைக் கொள்ளக் கூடும் இறே
ஆகையால் அங்கு யுண்டான ஸூகம் எல்லாம் இங்கும் யுண்டாய் இருக்கும் இ றே கண் வளர்ந்து அருளுகிறவனுக்கு –

யம்ம முண்ணத் துயில் எழாயே-
முலை யுண்ண என்னாதே-அம்மம் உண்ண என்றது -சைஸவ அநு குணமாக அவள் சொல்லும் பாசுரம் அதுவாகையாலே –
துயில் -நித்திரை / எழுகை யாவது -அது குலைந்து எழுந்திருக்கை -/ எழாய்-என்கிறது எழுந்திருக்க வேணும் என்கிற பிரார்த்தனை
இரவும் யுண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
நீ இராத்தி உண்ணாதே யுறங்கி -அவ்வளவும் அன்றிக்கே இன்றும் போது உச்சிப் பட்டது
ராத்திரி அலைத்தலாலே கிடந்து உறங்கினால் விடிந்தால் தான் ஆகிலும் உண்ண வேண்டாவோ
விடிந்த அளவேயோ-போது உச்சிப் பட்டது காண்-
ஆலும் ஓவும் ஆகிற அவ்யயம் இரண்டும் விஷாத அதிசய ஸூசகம்
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் –
நீயாக எழுந்திருந்து அம்மம் உண்ண வேணும் என்று வரவும் கண்டிலேன் –
அபேக்ஷை இல்லை என்ன ஒண்ணாத படி வயிறு தளர்ந்து இரா நின்றாய்
வனமுலைகள் சோர்ந்து பாயத்
வனப்பு -அழகும் பெருமையும் –
முலைகளானவை உன் பக்கலிலே ஸ்நேஹத்தாலே நெறித்து -பால் உள் அடங்காமல் வடிந்து பரக்க
உனக்கு பசி யுண்டாய் இருக்க இப்பால் இப்படி வடிந்து போக உண்ணாது ஒழிவதே-என்று கறுத்து –
திருவுடைய வாய் மடுத்துத்
அழகிய திருப் பவளத்தை மடுத்து -திரு -அழகு
இவ்வன முலையிலே உன்னுடைய திருவுடைய வாயை அபி நிவேசம் தோற்ற மடுத்து –
திளைத்து உதைத்துப்  பருகிடாயே
முலை யுண்கிற ஹர்ஷம் தோற்ற கர்வித்துக் கால்களாலே என்னுடம்பில் யுதைத்துக் கொண்டு இருந்து யுண்டிடாய்
பருகுதல் -பானம் பண்ணுதல்

——————————–

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை யுணாயே –2-2-2-

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
பழுதற உருக்கி வைத்த நெய்யும் -செறியுறக் காய்ந்த பாலும் -நீர் உள்ளது வடித்துக் கட்டியாய் இருக்கிற தயிரும்
செவ்வையிலே கடைந்து எடுத்த நிறுவிய வெண்ணெயும்
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை-
என்னுடைய நாயகனே -நீ பிறந்த பின்பு இவை ஒன்றும் பெற்று அறியேன் –
அன்றிக்கே இத்தனையும் என்றது -ஏக தேசமும் என்றபடியே இவற்றில் அல்பமும் பெற்று அறியேன் என்னுதல்
இப்படி என்னைக் களவேற்றுவதே -என்னைப் பிடித்தல் அடித்தல் -செய்யவன்றோ நீ இவ்வார்த்தை சொல்லிற்று என்று குபிதனாக
எத்தனையும் செய்யப் பெற்றாய் –
உனக்கு வேண்டியது எல்லாம் செய்யக் கடவை
ஏதும் செய்யேன் கதம் படாதே-
நான் உன்னைப் பிடித்தல் அடித்தல் ஒன்றும் செய்யக் கடவேன் அல்லேன்-நீ கோபிக்க வேண்டா -கதம் -கோபம்
முத்தனைய முறுவல் செய்து
முத்துப் போலே ஒளி விடா நிற்கும் முறுவலைச் செய்து -அதாவது கோபத்தைத் தவிர்ந்து ஸ்மிதம் பண்ணிக் கொண்டு என்கை
மூக்குறிஞ்சி முலை யுணாயே —
முலைக் கீழை -முட்டி முழுசி -மூக்காலே யுரோசி இருந்து முலையை அமுது செய்யாய் –

——————————–

தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார்
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உன் திறத்தரல்லர்  உன்னை நான் ஓன்று இரப்ப மாட்டேன்
நந்த கோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே –2-2-3-

தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார்-
ஊரில் பிள்ளைகளோடு விளையாடப் புக்கால் எல்லாரையும் போல் அன்றிக்கே
நீ அவர்களை அடித்துக் குத்தி விளையாடா நின்றாய் -இப்படிச் செய்யலாமோ –
தம் தம் பிள்ளைகள் அழுது சென்றால் அவர்கள் தாய்மாரானவர்கள் பொறுக்க மாட்டார்கள்
வந்து நின் மேல் பூசல் செய்ய
அவர்கள் தாங்கள் தங்கள் பிள்ளைகளையும் பிடித்துக் கொடு வந்து உன் மேலே சிலுகிட்டு-சண்டையிட்டு -பிணங்க
வாழ வல்ல –
அதில் ஒரு சற்றும் இளைப்பும் இன்றிக்கே பிரியப்பட்டு இதுவே போக
வாசுதேவா-
ஸ்ரீ வஸூ தேவ புத்ரனானவனே -பசுவின் வயிற்றிலே புலியாய் இருந்தாயீ
உந்தையார் உன் திறத்தரல்லர்  –
உன்னுடைய தமப்பனாரானவர் இன்னிடையாட்டம் இட்டு எண்ணார்-உன்னை சிஷித்து வளர்க்கார் என்றபடி –
உன் சேஷ்டைகளை நோக்கும் தன்மையை யுடையவர் அல்லர்
உன்னை நான் ஓன்று இரப்ப மாட்டேன்
பெரும் தீம்பனான உன்னை அபலையான நான் ஒரு வழியாலும் தீர நியமிக்க மாட்டேன்
நந்த கோபன் அணி சிறுவா
ஸ்ரீ நந்த கோபர்க்கு வாய்த்த பிள்ளாய் -அணி -அழகு -இவன் தீம்பிலே உளைந்து சொல்லுகிற வார்த்தை
நான் சுரந்த முலை யுணாயே —
அவை எல்லாம் கிடக்க-இப்போது நான் சுரந்த முலையை அமுது செய்யாய் –

———————————–

கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழியப்
பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர் கோவே யாயர் கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனையுன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை யுணாயே –2-2-4-

கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு-
உன் மேல் கறுவுதலை யுடையவனான கம்சனால் உன்னை நலிகைக்காகக் கற்ப்பிக்கப் பட்ட க்ரித்ரிதமான சகடமானது
அஸூரா விசிஷ்டமாய் வருகையால் -கள்ளச் சகடம் என்கிறது –
கலக்கழியப்
தளர்ந்தும் முறிந்தும் உடல் வேறாகப் பிளந்து வீய -என்கிறபடியே சாந்தி பந்தங்கள் -கட்டுக் குலைந்து உரு மாய்ந்து போம்படியாக
பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று
பஞ்சு போலே மிருதுவான திருவடிகளாலே உதைத்த போது திருவடிகள் நோம் என்று பயப்பட்டேன் காண் -பஞ்சி பஞ்சுக்கு போலி
அமரர் கோவே
தேவர்களுக்கு நிர்வாஹகனானவனே
உன்னைக் கொண்டு தங்கள் விரோதியைப் போக்கி வாழ இருக்கிற பாக்யத்தால் இ றே உனக்கு ஒரு நோவு வாராமல் இருந்தது என்கை
அஞ்சினேன் காண் யாயர் கூட்டத்தளவன்றாலோ
ஆயருடைய திரள் அஞ்சின அளவுள்ள காண் நான் அஞ்சின படி –
ஆல்-ஓ -விஷாத ஸூ சகமான அவ்யயங்கள்
கஞ்சனையுன் வஞ்சனையால் வலைப்படுத்தாய்
உன் திறத்திலே வஞ்சனைகளைச் செய்தே கம்சனை நீ அவன் திறத்தே செய்த வஞ்சனையாலே தப்பாத படி அகப்படுத்தி முடித்தவனே
முலை யுணாயே —
இப்போது முலையை அமுது செய்ய வேணும் –

———————————–

தீய புந்திக் கஞ்சனுன்மேல் சினமுடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா
தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர்பாடிக்கு அணி விளக்கே யமர்ந்து என் முலை யுணாயே –2-2-5-

தீய புந்திக் கஞ்சன்
துர் புத்தி யான கம்சன் -பிள்ளைக் கொல்லி இ றே –
மக்கள் அறுவரைக் கல்லிடை மோதின பாபிஷ்டன் இறே
உன் மே ல் சினமுடையன்
தேவகியுடைய அஷ்டம கர்ப்பம் உனக்கு சத்ரு -என்று அசரீரி வாக்யத்தாலே கேட்டு இருகையாலும்
பின்பு துர்க்கை சொல்லிப் போன வார்த்தையாலும்
நமக்கு சத்ருவானவன் கை தப்பிப் போய் நம்மால் கிட்ட ஒண்ணாத ஸ்தலத்தாலே புகுந்தான்
இவனை ஒரு வழியாலே ஹிம்சித்தாய் விடும்படி என் என்று இருக்கையாலும் உன்னுடைய மேலே மிகவும் க்ரோதம் யுடையவன்
சோர்வு பார்த்து –
அவிழ்ச்சி பார்த்து -அதாவது நீ அசஹாயனாய் திரியும் அவசரம் பார்த்து என்கை –
மாயம் தன்னால் வலைப்படுக்கில்
உன்னை நலிகைக்காக மாயா ரூபிகளான ஆஸூர பிரக்ருதிகளை திரியக்காயும் ஸ்தாவரமாயும் யுள்ள வடிவுகளைக் கொண்டு
நீ வியாபாரிக்கும் ஸ்தலங்களிலே நிற்கும் படி பண்ணி நீ அறியாமல் வஞ்சனத்தாலே நழுவாதபடி பிடித்துக் கொள்ளில்
வாழகில்லேன்
நான் பின்னை ஜீவித்து இருக்க க்ஷமை அல்லேன் -முடிந்ததே விடுவேன்
வாசுதேவா
உன்னாலே இ றே சாதுவான அவரும் -வஸூ தேவரும் -சிறைப்பட வேண்டிற்று
தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய்
தாய்மார் சொல்லும் கார்யம் காண் -அதாவது உத்தேச்யதையாலும் பரிவாலும் தாய்மார் வாக்கால் சொல்லுவது
பிள்ளைகளுக்கு அவசிய கரணீயம் காண் என்கை –
சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
இது தன்னைக் குன்னாங்குறிச்சியாக -ரஹஸ்யமாக -அன்றிக்கே -எல்லாரும் அறியும் படி பிரசித்தமாகச் சொன்னேன்
லீலார்த்தமாகவும் நீ தனித்து ஓர் இடத்தில் போக வேண்டா –
ஆயர்பாடிக்கு அணி விளக்கே
திரு ஆய்ப்பாடிக்கு ஒரு மங்கள தீபம் ஆனவனே -அணி -அழகு –
இத்தால் எனக்கே என்று -உனக்கு ஒரு தீங்கு வரில் இவ்வூராக இருள் மூடி விடும் கிடாய் என்கை
யமர்ந்து என் முலை யுணாயே —
ஆனபின்பு பரபரப்பை விட்டு ப்ரதிஷ்டித்தனாய் வந்து உனக்கு என்று சுரந்து இருக்கிற முலையை அமுது செய்ய வேணும் –

——————————-

மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் யுன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீ கேசா முலை யுணாயே–2-2-6-

மின்னனைய நுண்ணிடையார்
மின்னொடு ஒத்த நுண்ணிய இடையை யுடையவர்கள் -என்னுதல்
மின்னை ஒரு வகைக்கு ஒப்பாய் யுடைத்தாய் -அவ்வளவு அன்றிக்கே ஸூஷ்மமான இடையை யுடையவர்கள் என்னுதல்
விரி குழல் மேல் நுழைந்த வண்டு
விஸ்தரமான குழல் மேலே மதுபான அர்த்தமாக அவஹாகித்த வண்டுகளானவை
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் –
மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளைப் பாடா நிற்கும் ஸ்ரீ வில்லிபுத்தூரிலே-பரமபதத்தில் காட்டிலும் இனிதாகப் பொருந்தி வர்த்திக்கிறவனே
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கலான தேசமாகையாலே திரு உள்ளம் பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே
பரம சாம்யா பன்னருக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கும் அத்தனை இறே பரமபதத்தில்
இங்கு இரண்டுமே சித்திக்கும்
யுன்னைக் கண்டார்-என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள்-என்னும் வார்த்தை எய்துவித்த
நாட்டில் பிள்ளைகளைப் போலே அன்றிக்கே ரூப குண சேஷ்டிதங்களால் வ்யாவர்த்தனாய் இருக்கிற உன்னைக் கண்டவர்கள்
நாட்டிலே பாக்யாதிகைகளாய் விலக்ஷணமான பிள்ளைகளைப் பெறுவாரும் உண்டு இறே
அவ்வளவு இன்றிக்கே லோகத்தில் கண்டு அறியாத வைலக்ஷண்யத்தை யுடைய இவனைப் பெற்ற வயிறு யுடையவள்
இதுக்கு உடலாக என்ன தபஸ்ஸைப் பண்ணினாளோ என்று ஸ்லாகித்துச் சொல்லும் வார்த்தையை எனக்கு யுண்டாக்கித் தந்த
இருடீ கேசா
கண்டவர்களுடைய சர்வ இந்த்ரியங்களையும் வ்யக்த்யந்தரத்தில் போகாதபடி உன் வசமாக்கிக் கொள்ளும் வைலக்ஷண்யத்தை யுடையவன்
முலை யுணாயே-

———————-

பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுது உண்ண வேண்டிக்
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை யுணாயே -2-2-7-

பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும்
ஆசையாலே- கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்
ஸ்வ பர்த்தாக்களுக்கு பார்யைகளாய் வர்த்திப்பாராய் உன்னைக் கண்டவர்கள் -உன்னைப் போலே இருக்கும்
பிள்ளைகளைப் பெற வேணும் என்னும் ஆசையால் கால் வாங்கிப் போக மாட்டாத படியாய் விட்டார்கள்
வண்டுலாம் பூம் குழலினார் –கண் இணையால் கலக்க நோக்கி-
பெருக்காற்றிலே இழிய மாட்டாமையால் கரையிலே நின்று சஞ்சரிப்பாரைப் போலே மதுவின் ஸம்ருத்தியாலே உள்ளே அவகாஹிக்க
மாட்டா வண்டுகளானவை மேலே நின்று சஞ்சரிக்கும் படி பூவாலே அலங்க்ருதமான குழலை யுடையவர்கள்
தங்களுடைய கண்களாலே உன்னுடைய சமுதாய சோப தர்சனம் செய்து
கலக்க நோக்குகை யாவது -ஓர் அவயவத்திலே உற்று நிற்கை அன்றிக்கே திருமேனியை எங்கும் ஓக்கப் பார்க்கை
கீழ் -பெண்டிர் வாழ்வார் -என்று பக்வைகளாய்-பர்த்ர பரதந்த்ரைகளாய் -புத்ர சாபேஷைகளானவர்களைச் சொல்லிற்று
இங்கு வண்டுலாம் பூங்குழலினார் என்று ப்ராப்த யவ்வனைகளாய் போக சாபேஷைகளானவர்களைச் சொல்லுகிறது
உன் வாய் அமுது உண்ண வேண்டிக் கொண்டு போவான் வந்து நின்றார்
உன் வாக் அமிர்தம் புஜிக்க வேண்டி யுன்னை எடுத்துக் கொண்டு போவதாக வந்து நின்றார்கள்
கோவிந்தா
சர்வ ஸூலபனானவனே உன் ஸுலப்யத்துக்கு இது சேராது
நீ முலை யுணாயே –
அது வேண்டியபடி ஆகிறது -நீ இப்போது முலை யுண்ண வேணும்

——————————–

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அரங்கம் எரி செய்தாய் யுன்
திரு மலிந்து திகழ் மார்வு தேக்க வந்து என்னல்குல் ஏறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே –2-2-8-

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அரங்கம் எரி செய்தாய்
வடிவின் பெருமையாலும் திண்மையாலும் இரண்டு மலை போல் வந்து அறப் பொருவதாக எதிர்ந்த சாணூர முஷ்டிகராகிற
இரண்டு மல்லருடைய சரீரமானது -பய அக்னியாலே தக்தமாய் விழும்படி பண்ணினவனே
யுன் திரு மலிந்து திகழ் மார்வு தேக்க
யுன்னுடைய அழகு மிக்கு விளங்கா நின்றுள்ள மார்வானது /-மலிதல் -மிகுதி / திகழ்ச்சி -விளக்கம்
அன்றிக்கே -திரு வென்று பிராட்டியைச் சொல்லுகிறதாய் -அவள் எழுந்து அருளி இருக்கையாலே
மிகவும் விளங்கா நின்றுள்ள உன்னுடைய மார்வு என்னவுமாம்
தேக்க -தேங்க-முலைப் பாலாலே நிறையும் படியாக
வந்து என்னல்குல் ஏறி
என் மடியிலே வந்து ஏறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு-இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே —
ஒரு முலையைத் திருப் பவளத்திலே வைத்து ஒரு முலையைத் திருக் கையாலே பற்றி நெருடிக் கொண்டு இரண்டு முலையையும் மாறி மாறி
பால் பரவின மிகுதி திருப் பவளத்தில் அடங்காமையாலே நடு நடுவே இளைத்து இளைத்து அமர இருந்து அமுது செய்ய வேணும் –

————————————

அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல்
செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம் முற்றத்தூடே
அங்கமெல்லாம் புழுதியாக வளைய வேண்டா வம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை யுணாயே -2-2-9-

அங்கமலப் போதகத்தில்
நிறத்தாலும் -மணத்தாலும் -செவ்வியாலும் -விகாசத்தாலும் -அழகியதாய் இருக்கும் தாமரைப் பூவின் இடத்தில் –
போது -புஷ்பம் / அகம் -இடம்
அணி கொள் முத்தம் சிந்தினால் போல்
நீர்மையாலும் ஒளியாலும் அழகை யுடைத்தான முத்துக்களானவை சிதறினால் போலே
செங்கமல முகம் வியர்ப்பத்
சிவந்து மலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற திரு முகமானது குறு வெயர்ப்பு அரும்பும் படியாக
தீமை செய்து இம் முற்றத்தூடே-அங்கமெல்லாம் புழுதியாக வளைய வேண்டா அணி கொள் முத்தம் சிந்தினால் போல்
இம் முற்றத்துள்ளே நின்று தீம்புகளைச் செய்து உடம்பு எல்லாம் புழுதியாக இருந்து புழுதி அளைய வேண்டா
அம்ம
ஸ்வாமி என்னுதல் –
இவள் சேஷ்டித தரிசனத்தால் வந்த ஆச்சர்ய யுக்தி ஆதல்
விம்ம அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே 
துர்வாச சாப உபஹதராய் அஸூரர்கள் கையிலே ஈடுபட்டுச் சாவாமைக்கு மருந்து பெறுகைக்கு உன்னை வந்து
ஆஸ்ரயித்த தேவர்களுக்கு அத்தசையிலே வயிறு நிரம்ப அம்ருதத்தை இடுகையாலே அவர்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே
முலை யுணாயே –
அப்போது அவர்கள் அபேக்ஷைக்காக அது செய்தால் போலே இப்போது என்னுடைய அபேக்ஷைக்காக நீ முலை யுண்ண வேணும் என்கை –

————————————

ஓடவோடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடியாடி யசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தையாடி
ஓடியோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே –2-2-10-

ஓடவோடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே
நடக்கும் போது மெத்தென நடக்கை அன்றிக்கே -பால்யத்துக்கு ஈடான செருக்காலே பதறி ஓட ஓட பாதச் சதங்கைகளான
கிண் கிணிகள் த்வனிக்கும் த்வனியாகிற சப்தத்தால்
பாடிப் பாடி – -ஆடியாடி யசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தையாடி
அந்தப் பாட்டுக்குத் தகுதியான ந்ருத்தத்தை-திருமேனி இடம் வலம் கொண்டு அசைந்து அசைந்து இட்டு நடக்கிற நடையால் -ஆடி ஆடி –
கூத்தன் கோவலன் இறே -நடக்கிற நடை எல்லாம் வல்லார் ஆடினால் போலே இ றே இருப்பது
ஆகையால் விரைந்து நடந்து வரும் போது திருவடிகளின் சதங்கைகளினுடைய ஓசைகள் தானே பாட்டாய் –
நடக்கிற நடை எல்லாம் ஆட்டமாய் இருக்குமாய்த்து
அன்றிக்கே
கிண் கிணிகள் ஒலிக்கும் ஓசை காலமாக -வாயாலே பாடிப் பாடி -அத்தானுக்கு ஏற்ற கூத்தை
அசைந்து அசைந்திட்டு ஆடி ஆடி என்று பொருளாகவுமாம்
வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்
இப்படி என்னை நோக்கி வாரா நின்றுள்ள உன்னை கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -என்கிறபடியே
வேறே ஒரு ஆபரணம் வெண்டாதே திரு நாபீ கமலம் தானே ஆபரணமாம் படி இருப்பான் ஒருவன் அன்றோ
இவனுக்கு வேறே ஒரு பாட்டும் ஆட்டமும் வேணுமோ
சதங்கை ஓசையும் நடை அழகும் தானே பாட்டும் ஆட்டமுமாய் இருந்த படி என் -என்று ஆச்சர்யப்பட்டு இருந்தேன் என்னுதல்
அழிந்து கிடந்தததை யுண்டாக்குமவன் அன்றோ நம்முடைய சத்தையைத் தருகைக்காக வருகின்றான் என்று இருந்தேன் என்னுதல்
ஓடியோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே —
இவள் சொன்னதின் கறுத்து அறியாதே -இவள் நம்முடைய நீர்மையைச் சொல்லாமல் ஸ்வா தந்தர்ய பிரகாசகமான
மேன்மையைச் சொல்லுவதே -என்று மீண்டு ஓடிப் போகத் தொடங்குகையாலே
இப்படி ஆடிக் கொண்டு என் கைக்கு எட்டாத படி ஓடி ஓடிப் போய் விடாதே நீ புருஷோத்தமன் ஆகையால்
ஆஸ்ரித பரதந்த்ரனான பின்பு என் வசத்தில் வந்து என் முலையை உண்ண வேணும் என்கிறாள் –

—————————————–

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வாரணிந்த கொங்கை யாச்சி மாதவா யுண் என்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே –2-2-11-

வாரணிந்த கொங்கை யாச்சி –
ராஜாக்களுக்கு அபிமதமான த்ரவ்யங்களை பரிசாராகரானவர்கள் கட்டி இலச்சினை இட்டுக் கொண்டு திரியுமா போலே
ஸ்ரீ கிருஷ்ணனுக்கு போக்யமான முலைகள் பிறர் கண் படாதபடி கச்சாலே சேமித்துக் கொண்டு திரிகையாலே
வாயாலே அலங்க்ருதமான முலையை யுடையவளான ஆய்ச்சி என்று ஸ்லாகித்துக் கொண்டு அருளிச் செய்கிறார் –
மாதவா யுண் என்ற மாற்றம்-
ஸ்ரீ யபதி யாகையாலே அவாப்த ஸமஸ்த காமனானவனை அவதாரத்தின் மெய்ப்பாட்டுக்கு ஈடாக முலை யுண் என்ற சப்தத்தை
நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர்
நீருக்கு அலங்காரமாக அலர்ந்த செங்கழு நீரினுடைய பரிமளமானது ஒருபடிப் பட பிரகாசியா நிற்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகராய்
பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார்
பூமியிலே ராஜாக்களின் பிரதானனான பாண்டியனும் -ஜ்ஞாதாக்களில் பிரதானரான செல்வ நம்பி தொடக்கமானவர்களும்
அன்றிக்கே பூமி எங்கும் கொண்டாடும் படி வ்யாப்தமாய் -வந்தேறி இன்றிக்கே ஆத்மாவுக்கு ஸ்வா பாவிகமான புகழை யுடையராய்
ப்ராஹ்மண உத்தமரான பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலை அப்யஸிக்க வல்லவர்கள்
சீரணிந்த செங்கண் மால் மேல் –
ஆத்ம குணங்களால் அலங்க்ருதனாய் -அவயவ சோபைக்கு பிரகாசகமான சிவந்த திருக் கண்களை யுடையவனாய்
இவை இரண்டையும் ஆஸ்ரிதர் அனுபவிக்கும் படி அவர்கள் பக்கல் வ்யாமோஹத்தை யுடையனாய் இருக்குமவன் விஷயத்தில்
அன்றிக்கே
ஆஸ்ரித பாரதந்த்ரமாகிய குணத்தால் அலங்க்ருதனாய் -இந் நீர்மைக்கும் மேன்மைக்கும் ப்ரகாசகமான சிவந்த திருக் கண்களை யுடையவனாய்
சர்வ ஸ்மாத் பரனாய் இருக்குமவன் விஷயத்திலே என்று பொருளாகவுமாம்
சென்ற சிந்தை பெறுவார் தாமே —
பாடல் வல்லார் தாம் செங்கண் மால் பக்கலிலே ஒருபடிச் சென்ற மனசை யுடையராவார் –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: