ஆறாம் திருவாய் மொழியிலே -கீழ் -ஆந்திர அனுபவ ப்ரீதி நடக்கச் செய்தி பாஹ்ய சம்ச்லேஷ அலாபத்தாலே அப்ரீதியும் கலந்து நடந்த இது
பாவநா ப்ரகரஷத்தாலே அலாப நிபந்தமான ஆர்த்தியே விஞ்சும்படி அதிசயித அபி நிவேசம் பிறந்து பக்வத்தாதாம்ய பிரதிபத்தி பிறக்கும்படி பாவனை முதிர-
ஸர்வ நிர்வாஹகனான சர்வேஸ்வரனுடைய ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களும்
தத் ப்ரதிபாதகமான வித்யா ஸ்த்தலங்களும்
ஜகத்துக்கு பிரதான காரண பூதமான மஹா பூதங்களும்
சகல கிரியைகளும்
ஜகத் விஷய ரக்ஷண வியாபாரங்களும்
அவதார சேஷ்டிதங்களும்
ஜகத்தில் யுண்டான ஸமஸ்த பந்து வர்க்கமும்
ப்ரஹ்மாதிகளான தேவ ரிஷி வர்க்கமும்
புண்ய பாப ரூப கர்மங்களும்
ஸ்வர்க்க நரகாதி ரூப பலங்களும்
நான் இட்ட வழக்கு என்று அநுகார ரூப உக்தியைப் பண்ணும்படி இவருக்கு அநந்ய பாவனை பிறந்தபடி கண்ட பரிவரானவர்கள்
ஜிஜ்ஞாஸூ க்களான பார்ஸ்வஸ்தர்க்கு இவர் படியை அறிவித்த பிரகாரத்தை
பிரிவாற்றாமையால் வந்த பாவனையால் ஸ்ரீ கிருஷ்ண அநு காரம் பண்ணின கோபிமாரைப் போலே
நாயகனான சர்வேஸ்வரனுடைய பாசுரங்களை அநு கரிக்கிற நாயகியுடைய ப்ரவ்ருத்தி விசேஷங்களை
நல் தாயானவள் வினவினார்க்கு யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
——————————————–
முதல் பாட்டில் ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் எல்லாம் நானே செய்தேன் என்று சர்வேஸ்வர
ஆவிஷ்டையானால் போலே சொல்லா நின்றாள் -என்கிறாள் –
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்–கடல் சூழ்ந்த ஜகத்தை சஹாயாந்தர நிரபேஷமாக
ஸ்ருஷ்டித்தேனும் நானே என்னா நிற்கும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்–இத்தை ஸ்ருஷ்ட்டி அனந்தரம் அநு பிரவேசித்து
தத் தச் சப்த வாச்யதயா தாதாத்மகனாய் நிற்பேனும் நானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்–இத்தை மஹா பாலி அபிமானிக்க அர்த்தியாய்
இரந்து அளந்து கொண்டேனும் நானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்-அவாந்தர பிரளயத்தில் ஸ்ரீ வராஹ வேஷத்தைக் கொண்டு
இத்தை கீண்டு எடுத்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்-மஹா பிரளயத்தில் இத்தை உப சம்ஹரித்தேனும் நானே என்னும் –
உண்டேன் என்று வடதளசாயி வியாபாரமாகவுமாம்
கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?–சகல ஜெகன் நியாந்தாவான சர்வேஸ்வரன் வந்து இவளை ஆவேசிக்க கூடுமோ
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?–கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–அவிசேஷஞ்ஞராய் சம்சார வர்த்திகளான உங்களுக்கு
இத்தேசத்திலே இருந்து வைத்து அப்ராக்ருத ஸ்வ பாவையான என் மகள்
அப்யசிக்கின்றனவாய் யுள்ள இந்த அதிசயித ஆகாரங்களை என்னாகச் சொல்லுவேன் –
—————————————
அநந்தரம்-சகல வேத வித்யைகளும் தத் ப்ரவர்த்த நாதிகளும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள்
கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2-
கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்–புஸ்தக நிரீக்ஷணாதிகளால் இன்றியே ஆச்சார்ய முகத்தால்
கற்கப்படும் வேத ரூபா வித்யைகளுக்கு எல்லையை யுடையேன் அல்லேன் என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்–அந்த வித்யைகள் எனக்கு பிரகாரமாம்படி
சப்த ப்ரஹ்மாத்மகனாய் நிற்பேனும் நானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்-அவற்றை ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே ஸ்ருஷ்ட்டி காலத்தில்
யதா பூர்வம் உண்டாக்க வேணும் நானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்–ஸம்ஹ்ருதி சமயத்திலே உப சம்ஹரித்து என் நெஞ்சிலே இட்டு வைப்பேனும் நானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்-அந்த வித்யா சாரமான மூல மந்த்ராதிகளும் நான் இட்ட வழக்கு என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?-சகல வேத ப்ரதிபாத்யனான சர்வேஸ்வரன் இவளை ஆவேசித்தானாக கூடுமோ
கற்கும் கல்வி யீர்க்கு இவைஎன் சொல்லுகேன்? கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–இன்று என் பக்கலிலே இது கற்கும் படியான
உங்களுக்கு வார்த்தை கற்கும் பருவமான ஏன் பெண் பிள்ளை தான் கண்டு சொல்லுகிற இவற்றை என் என்று சொல்லுவேன்
கற்கும் கல்வி என்று சகல வித்யா ஸ்த்தானம் என்றும் சொல்லுவாரும் உளர் –
————————————————-
அநந்தரம் பிராமண ஸித்தமான ஜகத்துக்கு பிரதான காரணமான மஹா பூதங்கள் நான் இட்ட வழக்கு என்னும் -என்கிறாள் –
காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீஎல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என்காரிகை செய்கின்றவே.–5-6-3-
காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்–பிரமானத்தாலே காணப்படுவதாக சரம பூதமான பிருத்வி எல்லாம் நானே என்னா நிற்கும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்-அப்படிப்பட்ட பிரதம பூதமான ஆகாசமும் நானே என்னா நிற்கும்
காண்கின்ற வெம் தீஎல்லாம் யானே என்னும்–தேஜோ பன்னங்களில் பிரதானமாய் உஷ்ண ஸ்பர்சமான அக்னியும் எல்லாம் நானே என்னா நிற்கும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்-தத் பூர்வ பாவியாய் தாரகத்வாதிகளால் ஸந்நிஹிதமான வாயுக்கள் எல்லாம் நானே என்னா நிற்கும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்-தத் அனந்தரை பாவியான ஜலதத்வம் எல்லாம் நானே என்னா நிற்கும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?-தர்ச நீயமாய் அபரிச்சின்னமான கடல் போன்ற வடிவையுடைய சர்வேஸ்வரன் ஆவேசித்தானோ
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்? காண்கின்ற என்காரிகை செய்கின்றவே.–காண்கிற லோகம் ஒழிய அறியாத உங்களுக்கு
காண ஒண்ணாதவற்றையும் காணும்படியாய் அபி ரூபையான என் மகள் செய்கிறவற்றை என் என்பதாக சொல்லுவேன் –
—————————————————-
அநந்தரம் ஸர்வ கிரியைகளும் நான் இட்ட வழக்கு என்னும் என்கிறாள்
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-4-
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்–செய்யப்படா நிற்கிற வர்த்தமான கிரியையும் எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்–மேல் செய்வதாக நிற்கிற பவிஷ்யத்தை கிரியையும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்-முன்பு செய்து கழிந்த பூத கிரியையும் நான் இட்ட வழக்கு என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்-இந்த கிரியையினுடைய பலத்துக்கு போக்தாவும் நானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்-இக்கிரியைக்கு அனுஷ்டாதாக்களை உண்டாக்குவேனும் நானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?-இது சிவந்த தாமரை போலே இருக்கிற திருக் கண்ணையுடைய சர்வேஸ்வரன் ஆவேசித்த படியோ
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்? செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–செவ்வாய் ஒழிய அறியாத லோகத்தீர்க்கு
சிவந்த கனி போலே இருக்கிற அதரத்தை யுடையளாய் முக்தமான மான் போலே பேதையான இவள்
இடை யாட்டத்து இவை என்னாக சொல்லுவேன்
————————————
அநந்தரம் ஜகத் ரக்ஷணாதி வியாபாரம் எல்லாம் செய்கிறேன் நானே என்னும் என்கிறாள்
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.–5-6-5-
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்-ஆஜ்ஜையை அதி லங்கியாதபடி ஜகத்தை ரஷிக்கிறேன் நானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்–கோப ரக்ஷண அர்த்தமாக சலியாதபடி மலையை எடுத்தேன் என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்–தப்பாதபடி அநிஷ்ட ஏக அநு ப்ரக்ருதிகளான அஸூ ரர்களை கொன்றேன் என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்-விஜய ஹேதுவான உபாய பிரகாரங்களை காட்டிக் கொடுத்து துரியோதனாதிகள்
எதிரிட்ட அன்று பாண்டவர்கள் ஐவரையும் ரஷித்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்-நினைவு தப்பாதபடி கடலை கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?–ஆஸ்ரித ரஷணத்திலே திரும்புதல் இல்லாத கடல் வண்ணனானவன் இவளை ஆவேசித்த படியோ
திறம்பாத கடல் என்று -கரை கடவாத கடல் என்றுமாம் –
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? திறம்பாது என் திருமகள் எய்தினவே.–இது -அறிய வேணும் என்கிற நினைவு தப்பாது இருக்கிற லோகத்தீர்க்கு
என்னுடைய ஸ்ரீ லஷ்மீ சமானையான பெண் பிள்ளை தப்பாதபடி பிறப்பித்த ஸ்வ பாவங்களை எதற்காக சொல்லுகேன்
——————————————–
அநந்தரம் ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களைச் செய்தேனும் நானே என்னும் என்கிறாள்
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–5-6-6-
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்–திரளான மூங்கிலையுடைய கோவர்த்த நத்தை எடுத்தேன் நானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்–திரள வந்த ஏழு எருத்தையும் கொன்றேனும் நானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்-ஓர் இனத்தில் கன்றுகளை மேய்த்தேனும் நானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்–திரள் திரளான பசுக்களை ரஷித்தேனும் நானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்-ஒரு தரத்தில் இடைப்பிள்ளைகளுக்கு நாயகனாய் இருப்பேனும் நானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?–சங்கமான ஸூ ரிகளுக்கு நிர்வாஹகானான சர்வேஸ்வரன் ஆவேசித்த படியோ
இனத்தேவர் -என்று சாம்யம் பெற்றவர் என்றுமாம்
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்? இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–தன்னில் தான் செறிந்து
வேல் போலே இருக்கிற கண் அழகையுடைய உங்களுக்கு
வேலோடு ஒத்து இருக்கிற கண்ணையுடைய என்னுடைய பெண் பிள்ளை லபித்த இந்த ஸ்வ பாவங்களை ஏது என்று சொல்லுவேன்
—————————-
அநந்தரம் ஜகத்தில் பந்துக்கள் அளவில் அவன் படி எல்லாம் தன் படியாகச் சொல்லா நின்றாள் என்கிறாள்
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7-
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்-ஓர் உபாதியாலே கிட்டுதல் -என்னை யுள்ளபடி அறிந்து கிட்டுதல் செய்து இருக்கும் பந்துக்கள் எனக்கு ஒருவரும் இல்லை -என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்-இஜ் ஜகத்தில் நிருபாதிக சம்பந்தத்தைப் பார்த்தால் -அவர்கள் தாரதம்யம்
பாராதே எல்லாரும் எனக்கு பந்துக்களாய் இருக்கும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்-அவர்களை எனக்கு உற்றாராம்படி பண்ணுவேனும் நானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்–பிரயோஜனாந்தரத்துக்கு கிட்டினவர்களை அவற்றைக்
கொடுத்து உறவு அறுத்து விடுவேனும் நானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்–அநந்ய ப்ரயோஜனராய்க் கிட்டினார்க்கு எல்லா உறவு முறையும் நானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?–எத்தனையேனும் அளவுடையார் ஆகிலும் தன்னை முட்டக் கண்டு கிட்டினார் இல்லாத
ஆச்சர்ய பூதன் ஆவேசித்த படியோ
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்? உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–பந்துக்களான உங்களுக்கு
அதி பாலையான என்னுடைய பெண் பிள்ளை உள்ளுறக் கண்டு சொல்லுகிற வார்த்தைகளை என்ன பாசுரம் சொல்லி சொல்லுவேன்
———————————————
அநந்தரம் ஜகத் பிரதானராய் ப்ரஹ்ம ருத்ராதிகளான தேவர்களும் ரிஷிகளும் நான் இட்ட வழக்கு என்னும் -என்கிறாள் –
உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8-
உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்- ச சிவ-என்று பகவத் பிரகாரமாகச் சொல்லப்படுகிற
த்ரி நேத்ரனாய் ஈஸ்வரனாக ப்ரசித்தனான ருத்ரன் எனக்கு பிரகார பூதன் என்னா நிற்கும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்-ச ப்ரஹ்ம என்று சொல்லப்படுகிற சதுர்முகன் எனக்கு பிரகார பூதன் என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்-அப்படியே பகவத் விபூதி தயா தச ப்ரஜாபதிகளான தேவர்களும் எனக்கு விபூதி பூதர் என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்–சேந்த்ர என்று சொல்லப்பட்ட த்ரயஸ் த்ரிம் சதகோடி தேவதை அதிபதியான
இந்திரனும் எனக்கு பிரகார பூதன் என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்டியாமல் –சனகாதி ரிஷிகளும் நான் இட்ட வழக்கு என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக்கொலோ?–வேதங்களில் கோஷிக்கப்படும் காள மேக நிபாஸ்யாமமான
திரு வடிவை யுடையவன் ஆவேசித்த படியோ வ்யதிரேகத்தில் உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?-
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்? உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே –சொல்லு சொல்லு என்று உரைக்கின்ற
லோகத்தாரான உங்களுக்கு லோக மரியாதை அல்லாத பேச்சை யுடையளாய் ஸூ குமாரமாய் தர்ச நீயமான கொடி போலே
ஆஸ்ரய வியதிரேகத்தில் தறைப்படும்படியான இவளுக்கு யுண்டான இஸ் ஸ்வ பாவங்களை ஏதாக சொல்லுகேன்
—————————————-
அநந்தரம் குரூரமான கர்ம பிரகாரங்கள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னும் என்கிறாள் –
கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9-
கொடிய வினை யாதும் இலனே என்னும்–கர்ம வஸ்யரான பத்த சேதனரைக் கண்ணுற்று நலியும் கொடுமையை யுடைத்தான
கர்மம் ஒன்றும் எனக்கு இல்லை என்னா நிற்கும் –
அந்த க்ரூர கர்மமானது என் நிக்ரஹம் ஆகையால் கொடிய வினை ஆவேனும் யானே என்னும்-அது ஆகிறேனும் நானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்-பிரதி கூலரானவரை-அந்த கர்மங்களிலே மூட்டி செய்விப்பேனும் நானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்-அந்த கர்மத்தை ஆஸ்ரிதற்கு போக்குவேனும் நானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்-க்ரூர கர்மாவான ராவணனுடைய இலங்கையை அழித்தேன் என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?–ஆஸ்ரித விரோதிகளுக்கு ம்ருத்யு சமனான பெரிய திருவடியை
வாஹனமாக யுடையவன் ஆவேசித்த படியோ –
கொடிய புள் -என்று கொடியிலேயான புள் என்றுமாம்
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?- கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–நமக்கு இது நிலம் அன்று என்று இராதே
அதி நிர்ப்பந்தம் பண்ணுகிற கொடுமையையுடைய லோகத்தீர்க்கு
இவளை இப்படி விக்ருதையாகக் காண வைத்த பாபத்தை கொடுமையை யுடையேனான என்னுடைய கொடி போலே மெல்லியளான
பெண் பிள்ளையினுடைய தர்ச நீயா சேஷ்டிதங்களான இவற்றை என் என்று சொல்லுவேன்
கோலங்கள் என்று ஒருப்பாடு ஆகவுமாம் –
——————————–
அநந்தரம் ஸ்வர்க்க நரகாதிகளான சகல பலங்களும் நான் இட்ட வழக்கு என்னும் -என்கிறாள் –
கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10-
கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்–தர்ச நீயா போக்யதையை யுடைத்தான ஸ்வர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்-ஒரு வை லக்ஷண்யமும் இன்றிக்கே துக்கோத்தரமான நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்-நிரதிசய ஆனந்த ரூப வை லக்ஷண்யத்தாலே விளங்குவதாக மோக்ஷமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்-இவ்வோ பலங்களை பற்றுக் கோலும் ஒருப்பாட்டை யுடைய பிராணிகளும் நானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்–இவற்றை அடையத் தன் நினைவில் நிர்வஹிக்கும் ஒருப்பாட்டை யுடைத்தாய்
சஹாயாந்தர நிரபேஷமான பரம காரண வாஸ்து நானே என்னா நிற்கும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?–பசுத்த வடிவும் ஸ்புரிக்கிற மின்னும் நாநா வர்ணமான
இந்த்ர தநுஸ்ஸூ மான கோலத்தை யுடைத்தான மேகம் போலே இருக்கிற திருவடிவை யுடையவன் ஆவேசித்த படியோ
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? கோலம் திகழ் கோதை பரம கூந்தலுக்கே ஒருப்பாட்டை யுடைத்தாய் –
கேட்டு அல்லது போகோம் என்று ஓருப்படுகிற உங்களுக்கு அழகு விளங்குகிற மாலையை யுடைய மயிர் முடியை யுடையளான
என் பெண் பிள்ளைக்கு என்ன பிரகாரமாய் இருந்தது என்று சொல்லுவேனோ –
————————————–
அநந்தரம் இத்திருவாய் மொழி கற்றார் ஸர்வ லோக சம்பவ நீயராய்க் கொண்டு
பாகவத கிஞித்காரம் பண்ண இட்டுப் பிறந்தார்கள் என்று பலத்தை அருளிச் செய்கிறார் –
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை–வாசம் செய் பூங்குழலாள் என்கிறபடியே
விலக்ஷணமான மயிர் முடியை யுடையளாய் -தாமரைப் பூவில் பிறப்பாலே நிரதிசய போக்ய பூதையாய் நித்ய யவ்வன
ஸ்வபாவையான ஸ்ரீ மஹா லஷ்மிக்கும் இவளோடு ஒத்த ரூப வைலக்ஷண்யத்தை யுடைய ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு அபி ஜாதிரான
கோபாலர்க்கு ஸீரோ பூதையான நப்பின்னைப் பிராட்டிக்கும் அபி மதனான சர்வேஸ்வரனை யுத்தேசித்து
வாய்ந்த – வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து–பாவநா ப்ரகரஷத்தாலே தத் பாவத்தை கிட்டி இருப்பாராய்
வழுதி வள நாட்டுக்கு நிர்வாஹகராய் ஸூஸ்த்திரையான திரு நகருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அந்தரங்க விருத்தியாக அனுஷ்ட்டித்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்–ஆராய்ந்து சொன்ன தமிழ்த் தொடையான ஆயிரத்துள்
இவையும் ஒரு பத்தே என்னும்படி விலக்ஷணமான இவை பத்தையும் பாவ விருத்தியோடே அப்யஸிக்க வல்லவர்கள் லோகத்திலே
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–சிரஸா வகிக்கும் படியான ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்தை
யுடையராய்க் கொண்டு ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதரான பாகவதர்களை
ஆராதிக்கைக்கு பாக்யம் பண்ணினவர்கள் ஆவர்கள்
ஏய்ந்த என்று பாடமாய் -பொருந்தின என்றுமாம் –
இது எண் சீர் ஆசிரிய விருத்தம் –
—————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-