பெரியாழ்வார் திருமொழி-3-10- -திவ்யார்த்த தீபிகை –

அவதாரிகை
பஞ்சவடியில் தனித்து இருந்த பிராட்டியை இராவணன் மாய வகையினால் இலங்கைக்குக் கொண்டு போய்
அசோகா வநிகை யில் சிறை வைத்திட-பின்பு ஸ்ரீ ராம பிரானால் தூது விடப் பட்ட சிறிய திருவடி அவ்விடத்தே வந்து
பிராட்டியின் முன் நின்று பல அடையாளங்களைச் சொல்லித் தான் ஸ்ரீ ராம தூதன் என்பதை அவள் நம்புமாறு தெரிவித்துப்
பின்பு திருவாழி மோதிரத்தையும் கொடுத்து அவள் திரு உள்ளத்தை மிகவும் மகிழ்வித்த படியை ஆழ்வார் அனுசந்தித்து
அதில் தமக்கு உண்டான ஆதாரதிசயத்தாலே-அவன் அப்போது விண்ணப்பம் செய்த அடையாளங்களையும்
திருவாழி மோதிரம் கொடுத்த படியையும்
அது கண்டு அவள் மகிழ்ந்த படியை எல்லாம்
அடைவே பேசி இனியராகிறார் இத் திரு மொழியிலே –

—————————————-

நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3-10-1-

நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம் -நெறிப்புக் கொண்ட கரிய கூந்தலை யுடையவளும்
மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ உமது அடியவனான என்னுடைய விஞ்ஞாபனம் ஒன்றைக் கேட்டருள வேண்டும்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த -நெருங்கின ரத்தினங்களை யுடைய கிரீடத்தை அணிந்த ஜனக மகா ராஜன்
கன்யா சுல்கமாக ஏற்படுத்தின ருத்ர தனுசுவை முறித்து -உம்மை -பிராட்டியை -திரு மனம் புரிந்து கொண்டதை
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச் -தெரிந்து கொண்டு துஷ்ட ராஜாக்களை பயிருக்குக் களை களைவது போலே
அழித்து- 21-தலைமுறை கார்த்த வீர்யார்ஜுனன் போல்வாரை -அழித்து அரிய தவத்தை யுடைய பரசுராமன் நடுவழியில் தடுக்க –
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம்-தனக்குத் தகுந்த அப்பரசுராமன் கையில் இருந்த விஷ்ணு தனுசுவை –
இதனாலே செறிந்த சிலை -வாங்கிக் கொண்டு அப்பரசுராமனுடைய தபஸை அழித்ததுவும் ஒரு அடையாளமாகும்

—————————–

அல்லியம்பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம்போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு பார்த்ததும் ஓர் அடையாளம் –3-10-2-

அல்லியம்பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம் சொல்லுகேன்-அக இதழ்களை யுடைய பூக்களாலே தொடுக்கப்பட்ட பூ மாலை
போன்றவளே -இழைத்த தன்மை -மென்மை-துவட்சி-இவற்றால் உவமை – உமது திருவடிகளில்
வணங்கிய நான் விஞ்ஞாபனம் ஒன்றை உம்மிடத்தில் சொல்லுவேன் –
துணை மலர்க் கண் மடமானே – கேட்டருளாய்-ஒன்றோடு ஓன்று ஒத்துத் தாமரை மலர் போன்ற திருக் கண்களையும்
மடப்பத்தையும் யுடைய மான் போன்றவளே -அத்தைத் திருச் செவி சாத்தி அருள வேணும்
எல்லியம்போது-அம் எல்லிப் போது – இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில் -அழகிய-ஸூக அனுபவத்துக்கு ஏகாந்தமான
காலம் என்பதால் அம் காலம்- இராத்திரி வேளையிலே- – இனிமையான இருப்பாக இருந்ததான ஓர் இடத்திலே
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு பார்த்ததும் ஓர் அடையாளம் — மல்லிகைப் பூவினால் தொடுக்கப் பட்ட சிறந்த மாலையினால்
நீர் ஸ்ரீ ராமபிரானைக் கட்டியதும் ஓர் அடையாளம் -வனவாசம் பற்றி இன்னும் அருளிச் செய்யவில்லை என்பதால்
இது திரு அயோத்யையில் நிகழ்ந்ததாகக் கொள்வதே பொருத்தம் –

——————————-

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம் –3-10-3-

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட–கைகேயியானவள்-கைகேசி-யகர சகரப் போலி -மந்தரையினால் கலக்கப் பட்ட
சிறந்த மனத்தை யுடையவளாய் தசரதர் முன் தனக்குக் கொடுத்திருந்த வரங்களின் பயனைக் கேட்க
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக் -அக்கைகேயின் வார்த்தையினால் கலக்கமடைந்த
சிறந்த மனத்தை யுடையவனாய்
தசரத சக்கரவர்த்தியும் மறுத்துச் சொல்ல முடியாமல் வெறுமனே கிடக்க
அந்த சந்தர்ப்பத்தில் கைகேயியானவள்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப -உயர் குலத்தில் பிறந்த ஸ்ரீ ராமனே -காட்டிலே பதினாலு வருஷங்கள்
வசிக்கும் படி போவாய் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்ப –
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம் -அக்காட்டிலே லஷ்மணனோடு கூட -ஸ்ரீ சீதையாகிய உம்மோடும் -என்பதற்கும்
உப லக்ஷணம் -ஸ்ரீ ராமபிரான் சென்று அடைந்ததும் ஓர் அடையாளம் –

——————————–

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –3-10-4-

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம் -கச்சை அணிந்த முலையையும் மடப்பத்தையும்
யுடைய பிராட்டீ -விதேக வம்சத்தில் பிறந்தவளே ஒரு விஞ்ஞாபனம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்-தேர்களாலே அலங்காரமான திரு அயோத்தியில் யுள்ளார்க்கு
அரசனாவதற்கு உரிய-ஏக தார வ்ரதனான – ஸ்ரீ ராமபிரானது பெருமைக்குத் தகுந்த தேவியே அவ்விண்ணப்பத்தைக் கேட்டருள வேணும் –
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் -கூர்மை பொருந்திய வேலாயுதத்தில் வல்லவனாகிய
ஸ்ரீ குஹப் பெருமாளோடே கூட கங்கைக் கரையிலே
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் -சிறப்புப் பொருந்திய ஸ்நேஹத்தைப் பெற்றதும் ஓர் அடையாளம்
தோழமையைக் கொண்டதும் -பாட பேதம் –
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்றவர்க்கு இன்னருள் சுரந்து -மாழை மான் மட நோக்கி யுன் தோழி யும்பி எம்பி என்று
ஒழிந்திலை யுகந்து -தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் -பெரிய திருமொழி –

—————————-

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

மானமரும் மென்னோக்கி வைதேவீ -மானை ஒத்த மென்மையை யுடைய திருக் கண்களை யுடைய பிராட்டியே –
அனுகூல ஜனங்களைப் பிரிந்து மனம் கலங்கி இருக்கும் பிராட்டிக்கு மலங்க மலங்க விழிக்கும் மான் பேடை ஏற்ற உவமை யாகுமே
பால் மொழியாய்-விண்ணப்பம்-பால் போலே இனிய பேச்சை யுடையவளே -விண்ணப்பம் –
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத் –காட்டில் பொருந்திய கல் நிறைந்த வழியிலே போய் காட்டில் வசித்த போது
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப் -வண்டுகள் பொருந்திய சோலைகளை யுடைய
தாழ்வரையோடே கூடின சித்ரா கூட பர்வதத்தில் நீங்கள் இருக்கையிலே
பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் -ஸ்ரீ பரதாழ்வான் வந்து வாங்கியதும் ஓர் அடையாளம்

———————————-

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் –3-10-6-

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட -சித்ர கூட பர்வதத்திலே நீங்கள் இருவரும் ரசானுபவம் பண்ணிக் கொண்டு
இருக்கையில் -சிறிய காக்கையின் வடிவு கொண்டு வந்த ஜெயந்தன் உமது திரு முலைத் தடத்தைத் தீண்ட -அதனால் சீற்றமுற்ற ஸ்ரீ ராமபிரான்
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி -ப்ரஹ்மாஸ்திரத்தை தொடுத்து பிரயோகிக்க -அக்காகம் அதற்க்குத் தப்புவதற்காக –
உலகங்கள் எல்லாம் திரிந்து ஓடிப் போய் -தப்ப முடியாமல் ஸ்ரீ ராமபிரானையே அடைந்து
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப-ஆச்சர்யமான கல்யாண குணங்களை யுடையவனே -ஸ்ரீ ராமபிரானே ஓ -யான்
உம்முடைய அடைக்கலம்-யான் அநந்ய கதி – என்று கூப்பிட
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் -உயிரைக் கவர வேணும் என்று விட்ட அந்த அஸ்திரமே அந்த காகத்தின்
ஒரு கண்ணை மாத்திரம் அறுத்து விட்டதும் ஓர் அடையாளம் –
ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டி திருவடிக்கு அருளிச் செய்ததாக இருக்கும் இவ்விருத்தாந்தம் இங்கு
திருவடி அருளிச் செய்வதாக சொல்வது கல்பாந்தரத்தில் புராணாந்தரங்களில் உண்டு என்று கொள்ள வேண்டும் –

———————————-

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7-

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம் -மின்னலை ஒன்ற மெல்லிய இடையை யுடையவளே -உண்மையான
பக்தனாகிய எனது விண்ணப்பத்தை கேட்டருள வேணும் –
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட -பொன் நிறத்தை ஒத்த நிறமுடைய மாரீசனாகிய ஒரு மான் பஞ்சவடியிலே
நீர் எழுந்து அருளி இருக்கும் ஆஸ்ரமத்தின் அருகில் வந்து அழகாக விளையாடா நிற்க –
அத்தை மாயமான் -என்று இளைய பெருமாள் விலக்கவும்
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப் -உம்முடைய ஆசைக்குக் கட்டுப்பட்டு நின்று வில்லை எடுத்துக் கொண்டு
ஸ்ரீ ராமபிரான் -அம்மானைப் பிடித்துக் கொணர்வதாக அதன் பின்னே தொடர்ந்து எழுந்து அருள
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -பிறகு அவ்விடத்திலே இளைய பெருமாளும் பிரிந்ததுவும் ஓர் அடையாளம் –

————————————

மைத்தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-

மைத்தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்-மை போலே விளங்குகிற சிறந்த புஷ்ப்பங்களை அணிவதற்கு உரிய
கூந்தலை யுடையவளே -ஸ்ரீ வைதேஹீயே விண்ணப்பம் -உடம்பை உபேக்ஷிப்பவள் என்பது தோற்ற ஸ்ரீ வைதேஹீ –
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட -பெருமாளோடு இன்ப துன்பங்கள் ஒத்து இருக்கப் பெற்றவன் என்ற கீர்த்தியை யுடைய
வானரங்களுக்கு எல்லாம் தலைவரான ஸூக்ரீவ மஹா ராஜர் ஸ்ரீ ராமபிரானோடே கூட இருந்து
உம்மைத் தேடும்படி ஆள் விடுகையில் என்னிடத்து விசேஷமாக அபிமானிக்க
அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான் -பிரிந்த அந்த நிலைக்குத் தகுதியான–ஊணும் உறக்கமும் அற்று
கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே ஏதேனும் போக்கிய பதார்த்தத்தைக் கண்டால் உம்மையே நினைத்து வருந்தா நின்றுள்ள
அந்த நிலைக்குத் தக்க அன்பு என்னும் குணமுள்ள திரு அயோத்யையில் உள்ளவர்க்கு தலைவரான பெருமாள் இவ்வடையாளங்களை
என்னிடத்தில் சொல்லி அருளினான் -ஆதலாலே-நான் சொன்ன அடையாளங்கள்
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே-இவ்வழியால் வந்தன –
அன்றியும் இதுவானது அந்த ஸ்ரீ ராமபிரானுடைய திருக் கையில் அணிந்து கொள்ளும் திரு மோதிரமாகும்-

————————————–

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9-

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் -திக்குகளில் நிறைந்த கீர்த்தியை யுடையனான ஸ்ரீ ஜனக ராஜனுடைய
அக்னிகளைக் கொண்டு செய்யும் யாகத்தில் விச்வாமித்ரருடன் போன காலத்திலே
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு -மிகவும் பெரிய சபையின் நடுவிலே ருத்ர தனுசை முறித்த
ஸ்ரீ ராமபிரானுடைய திரு மோதிரத்தை பார்த்து -சபை நடுவே -பாட பேதம்
மலர்க் குழலாள் சீதையுமே-அனுமான் அடையாளம்
ஒக்குமால் என்று-பூச் சூடிய திருக் கூந்தலை யுடையலான ஸ்ரீ சீதா பிராட்டியாரும் –
வாராய் ஹனுமான் -நீ சொன்ன அடையாளங்கள் எல்லாம் ஒத்திரா நின்றுள்ளவையே என்று திருவடியைச் சொல்லி –
ஆல்-அசைச் சொல் –அந்தத் திருவாழியை
உச்சி மேல் வைத்துக் கொண்டு உகந்தனளால் -தன் தலையின் மீது வைத்துக் கொண்டு மகிழ்ந்தாள் –
ஆல் – மகிழ்ச்சிக் குறிப்பு –

————————————–

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு-கச்சு அணிந்து இருக்கைக்கு உரிய முலையையும்
மடப்பத்தையும் யுடையளான ஸ்ரீ சீதா பிராட்டியைப் பார்த்து
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம் -சீர்மை பொருந்திய சக்தியை யுடையனான சிறிய திருவடி –
பெருமாள் இடத்திலே தான் அறிந்து கொண்டு -பின்பு பிராட்டி இடத்தில் சொன்ன அடையாளங்களை
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார் -பூமி எங்கும் பரவி கீர்த்தியை யுடையரான
ஸ்ரீ வில்லிபுத்தூருக்குத் தலைவரான பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பாடல்களை ஓத வல்லவர்கள்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –எல்லா நன்மைகளும் நிறைந்த ஸ்ரீ வைகுண்டத்தில்
நித்ய ஸூரி களோடு ஒரு கோவையாக இருக்கப் பெறுவார்கள்

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: