பெரியாழ்வார் திருமொழி-2-2- -திவ்யார்த்த தீபிகை –

அவதாரிகை –
கண்ணபிரான் பகல் முழுதும் விளையாடி -இளைத்துப் -பொழுது போனதையும் -முலை யுண்பதையும் மறந்து –
உறங்கிப் போய் பொழுது விடிந்து நெடும் போதாயும் கண் விழியாது இருக்கவே -யசோதைப் பிராட்டி அப்பிரானைத் துயில் எழுப்பி –
முலை யுண்ணாமையை அவனுக்கு அறிவித்துத் தன முலையை யுண்ண வேணும் என்று நிபந்த்தித்து விரும்பி ஊட்டின படியை
ஆழ்வார் தாமும் அனுபவிக்க விரும்பி -தம்மை யசோதை பிராட்டியாகவே பாவித்துக் கொண்டு அவனை
அம்மம் உண்ண எழுப்புதல் முதலியவற்றைப் பேசி இனியராகிறார் -இத் திரு மொழியிலே –

—————————-

அரவணையாய் ஆயரேறே யம்ம முண்ணத் துயில் எழாயே
இரவும் யுண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வனமுலைகள் சோர்ந்து பாயத்
திருவுடைய வாய் மடுத்துத் திளைத்து உதைத்துப்  பருகிடாயே –2-2-1-

பதவுரை

அரவு அணையாய்–சேஷசாயி யானவனே!
ஆயர் ஏறே–இடையர்களுக்குத் தலைவனே!
நீ இரவும் உண்ணாத–நீ (நேற்று) இரவும் முலை உண்ணாமல்
உறங்கிப் போனாய்–உறங்கிப் போய் விட
இன்றும்–இப் போதும்
உச்சி கொண்டது–(பொழுது விடிந்து) உச்சிப் போதாய் விட்டது;
ஆல்–ஆதலால்
அம்மம் உண்ண–முலை யுண்பதற்கு
துயில் எழாய்–(தூக்கந்தெளிந்து) படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேணும்;
வரவும் காணேன்–(நீயே எழுந்திருந்து அம்மமுண்ண வேணுமென்று சொல்லி) வருவதையுங் கண்டிலேன்!
(உனக்குப் பசியில்லை யென்போமென்றா)
வயிறு அசைத்தாய்–வயிறுந்தளர்ந்து நின்றாய்;
வன முலைகள்–(எனது) அழகிய முலைகள் (உன் மேல் அன்பினால் நெறித்து)
சோர்ந்து பாய–பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
திரு உடைய–அழகை உடைய
வாய் மடுத்து–(உன்) வாயை வைத்து
திளைத்து–செருக்கி
உதைத்து–கால்களாலே உதைத்துக் கொண்டு
பருகிடாய்-முலையுண்பாய்.

விளக்க உரை

(அரவணையாய்) எம்பெருமான் திருவனந்தாழ்வானாகிற படுக்கையைவிட்டு க்ருஷ்ணனாகத் தோன்றினாலும்
சென்றாற் குடையாம் என்கிறபடியே அவ்வக்காலத்துக்கு ஏற்ற கோலங்கொண்டு அடிமை செய்பவனான
திருவனந்தாழ்வான் கண்ணபிரானுக்குத் திருப்பள்ளி மெத்தையாய் இனிது தூங்குவதற்கு உதவுகின்றானென்க.
அம்ம முண்ண என்றது – கண்ணனுடைய குழந்தைப் பருவத்திற்குத் தக்கபடியாக யசோதை சொல்லியதாகும்.
சிங்கம் முதலியவற்றின் ஆணை யுணர்த்துகின்ற ஏறு என்ற பெயர் இலக்கணையால் ப்ரதாநன என்ற பொருளைத் தரும்.
இரண்டாமடியின் ஈற்றிலுள்ள ஆல் – ஆதலால் என்பதன் சிதைவு;
இனி ஆல் ஓ – இரண்டும் இரக்கப் பொருளைக் குறிப்பன வென்றுமாம்.
வயிறசைந்தாய் = நன்னூலார் சினை வினை சினையொடும் முதலொடுஞ் செறியும் என்றாராதலின் சினைவினை முதலோடு செறிந்ததென்க.
வனப்புமுலை என்கிறவிது – வனமுலை என்று விகாரப்பட்டதென்பர்;
வனமே நீரும் வனப்பு மீமமுந் துழாயும் மிகுதியுங் காடுஞ் சோலையும் புற்றுமனவே புகலுமெண் பேரே என்ற
நிகண்டின்படி வனம் என்ற சொல்லோ அழகைக் குறிக்குமென்பதும் பொருந்தும்.

அரவணையாய் ஆயரேறே -சேஷ சாயி யானவனே -இடையர்களுக்குத் தலைவனே
இரவும் யுண்ணாது உறங்கி நீ போய் -நீ நேற்று இரவும் முலை யுண்ணாமல் யுறங்கிப் போய்விட
சென்றால் குடையாம்-இத்யாதிப்படியே அழகிய திருப் பள்ளி மெத்தையாய் இனிது கண் வளர உதவுகிறான்
இன்றும் உச்சி கொண்டதாலோ-இப்போதும் பொழுது விடிந்து உச்சிப் போதாய் விட்டது ஆதலால்
யம்ம முண்ணத் துயில் எழாயே-முலை யுண்பதற்கு தூக்கம் தெளிந்து படுக்கையில் இருந்து எழுந்து இருக்க வேணும்
வரவும் காணேன் -நீயே எழுந்திருந்து அம்மம் யுண்ண வேணும் என்று சொல்லி வருவதையும் கண்டிலேன்
உனக்கு பசியில்லை என்போம் என்றால்
வயிறு அசைந்தாய் -திரு வயிறு தளர்ந்து நின்றாய்
வனமுலைகள் சோர்ந்து பாயத்-எனது அழகிய முலைகள் உன் மேல் அன்பினால் தெறித்து பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
வனமே-நீரும் வனப்பும் -ஈமமும்-துழாயும் -மிகுதியும் -காடும் -சோலையும் -புற்றும் -எனவே புகழும் என்பர் -நிகண்டு -இங்கு அழகைக் குறிக்கும்
திருவுடைய வாய் மடுத்துத் திளைத்து உதைத்துப்  பருகிடாயே –அழகை யுடைய யுன் திரு வாயை வைத்து –
செருக்கி -திருக் கால்களால் உதைத்துக் கொண்டு முலை யுண்பாய் –

————————–

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை யுணாயே –2-2-2-

பதவுரை

எம் பிரான்–எமது உபகாரகனே!
வைத்த நெய்யும்–உருக்கி வைத்த நெய்யும்
காய்ந்த பாலும்–(ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும்
வடி தயிரும்–(உள்ள நீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும்
நறு வெண்ணெயும்–மணம் மிக்க வெண்ணெயும்
இத்தனையும்–(ஆகிய) இவை யெல்லாவற்றையும்
நீ பிறந்த பின்னை–நீ பிறந்த பிறகு
பெற்று அறியேன்–கண்டதில்லை;
எத்தனையும்–(நீ) வேண்டினபடி யெல்லாம்
செய்யப் பெற்றாய்–நீ செய்யலாம்;
ஏதும் செய்யேன்–(அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை) ஒன்றும் செய்ய மாட்டேன்;
கதம் படாதே–நீ கோபியாதே கொள்;
முத்து அனைய முறுவல் செய்து–முத்தைப் போல் வெண்ணிறமாக மந்தஸ்மிதம் பண்ணி
மூக்கு உறிஞ்சி–மூக்கை உறிஞ்சிக் கொண்டு
முலை உணாய்–முலை உண்பாயாக.

விளக்க உரை

இத்தனையும் பெற்றறியேன் – (நொய் பால் முதலியவற்றில்) சிறிதும் சேத்திருக்கக் கண்டிலேன் என்றுமாம்.
கதம் – கோபம். குழந்தைகள் மூக்குறிஞ்சி முலை யுண்ணுதல் – இயல்பு.

எம்பிரான்-எமது உபகாரகனே –
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் உருக்கி வைத்த நெய்யும் -ஏடு மிகுதியாகப் படும்படி காய்ந்த பாலும்
வடி தயிரும் நறு வெண்ணெயும்-உள்ள நீரை வடித்துக் கட்டியாய் இருக்கிற தயிரும் -மணம் மிக்க வெண்ணெயும்
இத்தனையும் பெற்று அறியேன் -ஆகிய இவற்றை எல்லா வற்றையும் நீ பிறந்த பிறகு கண்டதில்லை –
நீ பிறந்த பின்னை-நீ திருவவதரித்த பிறகு
எத்தனையும் செய்யப் பெற்றாய் -நீ வேண்டியபடி எல்லாம் நீ செய்யலாம்
ஏதும் செய்யேன் -அப்படிச் செய்வதற்காக நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்
கதம் படாதே-நீ கோபியாதே கொள்
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை யுணாயே –முத்தைப் போலே வெண்ணிறமான மந்த ஸ்மிதம் செய்து அருளி
திரு மூக்கை உறிஞ்சிக் கொண்டு முலை யுண்பாயாக -குழந்தைகள் மூக்குறிஞ்சி முலை உண்ணுதல் இயல்பு –

——————————————

தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார்
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உன் திறத்தரல்லர்  உன்னை நான் ஓன்று இரப்ப மாட்டேன்
நந்த கோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே –2-2-3-

பதவுரை

தம் தம் மக்கள்–தங்கள் தங்கள் பிள்ளைகள்
அழுது–அழுது கொண்டு
சென்றால்–(தம் தம் வீட்டுக்குப்) போனால்
தாய்மார் ஆவார்–(அக்குழந்தைகளின்) தாய்மார்கள்
தரிக்க கில்லார்–பொறுக்க மாட்டாதவர்களாய்
வந்து–(தம் குழந்தைகளை அழைத்துக்) கொண்டு வந்து
நன் மேல் பூசல் செய்ய–உன் மேல் பிணங்க
வாழ வல்ல–(அதைக் கண்டு) மகிழ வல்ல
வாசு தேவா–கண்ண பிரானே!
உந்தையார்–உன் தகப்பனார்.
உன் திறத்தர் அல்லர்–உன் விஷயத்தைக் கவனிப்பவரல்லர்;
நான்–(அபலையான) நானும்
உன்னை–(தீம்பில் ..) உன்னை
ஒன்று உரப்ப மாட்டேன்–சிறிதும அதட்ட வல்லமை யற்றிரா நின்றேன்;
(இவையெல்லாங் கிடக்க)
நந்த கோபன்–நந்த கோபருடைய
அணி சிறுவா–அழகிய சிறு பிள்ளாய்!
நான் சுரந்த முலை–எனது பால் சுரந்திருக்கிற முலையை
உணாய்–உண்பாயாக

விளக்க உரை

கண்ணபிரான் தன்னோராயிரம் பிள்ளைகளோடு விளையாட போனால் எல்லாப் பிள்ளைகளையும் போல விராமல்
அப்பிள்ளைகளை அடித்துக் குத்தி விளையாடுவனாதலால் அழுதுகொண்ட வீட்டுக்குச் செல்லும் அப்பிள்ளைகளைக் கண்ட
தாய்மார்கள் மனம் பொறாமல் நொந்து அப்பிள்ளைகளைக் கண்ணுங் கண்ணீரும் அழைத்துக் கொண்டுவந்து காட்டி
இவன்மேலே பழி சொல்லிப் பிணங்கினால் இவன் அதனால் சற்றும் இளைப்புக் கொள்ளாமல்
அதையே த்ருப்தியாகக் கொண்டு ஸந்தோஷிப்பனென்பதைக் காட்டுகிறார் – முதலிரண்டடியால்
(வாசுதேவா) பசுவின் வயிற்றிலே புலி பிறந்ததீ! யென்கிறார். உன் + தந்தையார் = உந்தையார்; மரூஉ மொழி.

தம்தம் மக்கள் அழுது சென்றால் -தங்கள் தங்களுடைய பிள்ளைகள் அழுது கொண்டு தம் தம் வீட்டுக்குப் போனால்
தாய்மாராவார் தரிக்க கில்லார்-அக் குழந்தைகளின் தாய்மார்கள் பொறுக்க மாட்டாதவர்களாய்
வந்து -தம் பிள்ளைகளை கண்ணும் கண்ண நீருமாக அழைத்துக் கொண்டு வந்து காட்டி
நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல -உன் மேல் பிணங்க -அத்தைக் கண்டு-சற்றும் உழைப்பும் இல்லாமல் –
அத்தையே ஹேது வாகக் கொண்டு மகிழ வல்ல
வாசுதேவா-பசுவின் வயிற்றிலே புலி பிறந்ததீ
உந்தையார் உன் திறத்தரல்லர்  உன்னை -உன் தமப்பனார் உன் விஷயத்தை கவனிப்பர் அல்லர்
நான் ஓன்று இரப்ப மாட்டேன்-அபலையான நானும் தீம்பில் கை வளர்ந்த உன்னை சிறிதும் அதட்ட வல்லமை அற்று இரா நின்றேன் –
இவை எல்லாம் கிடக்க
நந்த கோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே -நந்தகோபருடைய அழகிய சிறு பிள்ளாய்
எனது பால் சுரந்து இருக்கிற முலையை உண்பாயாக –

——————————————–

கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழியப்
பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர் கோவே யாயர் கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனையுன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை யுணாயே –2-2-4-

பதவுரை

அமரர் கோவே–தேவர்களுக்குத் தலைவனே! (நீ)
கஞ்சன் தன்னால்–கம்ஸனாலே
புணர்க்கப்பட்ட–(உன்னைக் கொல்வதற்காக) ஏற்படுத்தப் பட்ட
கள்ளச் சகடு–க்ருத்ரிம சகடமானது
கலக்கு அழிய–கட்டு (க்குலைந்து உருமாறி) அழிந்து போம்படி
பஞ்சி அன்ன மெல் அடியால்–பஞ்சைப் போன்ற ஸூகுமாரமான உன் திருவடிகளினால்
பாய்ந்த போது–உதைத்த போது
நொந்திடும் என்று–(உன் திருவடிகளுக்கு) நோவுண்டாகுமே யென்று
அஞ்சினேன் காண்–பயப்பட்டேன் காண்;
(என்னுடைய அச்சம்)
ஆயர் கூட்டத்து அளவு அன்று ஆல்–இடையர் திரளினுடைய (அச்சத்தின்) அள்வல்ல காண்;
கஞ்சனை–(உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச் செய்த) கம்ஸனை
உன் வஞ்சனையால்–உன்னுடைய வஞ்சனையினாலே
வலைப்படுத்தாய்–(உன் கையிற்) சிக்கும்படி செய்து கொன்றவனே!
முலை உணாய்.

விளக்க உரை

(அஞ்சினேன் இத்யாதி) “பெற்றவளுக்கன்றோ தெரியும் பிள்ளையினருமை” என்றபடி உன்னைப் பெற்ற தாயான
எனக்குத் தான் உன் அருமை தெரியுமாதலால் மற்றை இடையர் திரளின் அச்சமெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் நான்
‘உனக்கு ஏதேனும் தீங்கு நேரிடுமோ!’ என்று கொண்டுள்ள அச்சத்திற்கு ஒப்பாகாது என்றபடி.
காண் – முன்னிலையசை; தேற்றப் பொருள் தரும். ஆல் – தேற்றம்; ஓ – இரக்கம். பஞ்சி – பஞ்சு; கடைப்போலி.

அமரர் கோவே-தேவர்களுக்குத் தலைவனே -நீ –
கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழியப்-கம்சனால் உன்னைக் கொல்வதற்காக ஏற்படுத்தப் பட்ட
க்ருத்ரிம சகடமானது கட்டுக் குலைந்து உரு மாறி அழிந்து போம்படி
பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது -பஞ்சு போன்ற ஸூகுமாரமான உன் திருவடிகளினால் உதைத்த போது
நொந்திடும் என்று அஞ்சினேன் காண்- உன் திருவடிகளுக்கு நோவு யுண்டாகுமே என்று பயப்பட்டேன் காண்-
என்னுடைய அச்சம் –
யாயர் கூட்டத்தளவன்றாலோ-இடையருடைய அச்சத்தின் அளவல்ல காண்
கஞ்சனையுன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் –உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச் செய்த கம்சனை –
உன்னுடைய வஞ்சனையாலே -உன் கையில் சிக்கும் படி செய்து கொன்றவனே
முலை யுணாயே –

————————————-

தீய புந்திக் கஞ்சனுன்மேல் சினமுடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா
தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர்பாடிக்கு அணி விளக்கே யமர்ந்து என் முலை யுணாயே –2-2-5-

பதவுரை

வாசுதேவா–கண்ணபிரானே!
தீய புந்தி–துஷ்ட புத்தியை யுடைய
கஞ்சன்–கம்ஸனானவன்
உன் மேல்–உன் பக்கலிலே
சினம் உடையவன்–கோபங்கொண்டவனாயிரா நின்றான்;
சோர்வு பார்த்து–(நீ) தனியாயிருக்கும் ஸமயம் பார்த்து
மாயம் தன்னால்–வஞ்சனையால்
வலைப் படுக்கில்–(உன்னை) அகப்படுத்திக் கொண்டால்
வாழகில்லேன்–(நான்) பிழைத்திருக்க சக்தை யல்லேன்;
தாயர்–தாய்மார்களுடைய
வாய் சொல்–வாயினாற் சொல்லுவது
கருமம் கண்டாய்–அவச்ய கர்த்தவ்ய கார்யமாகும்;
சாற்றி சொன்னேன்–வற்புறுத்திச் சொல்லுகிறேன்;
போக வேண்டா–(நீ ஓரிடத்திற்கும்) போக வேண்டா;
ஆயர் பாடிக்கு–திருவாய்ப்பாடிக்கு
அணி விளக்கே–மங்களதீபமானவனே!
அமர்ந்து வந்து–பொருந்தி வந்து
என் முலை உணாய்

விளக்க உரை

தேவகியின் மக்களறுவரைக் கல்லிடை மோதி சிசுஹத்திசெய்த கொடிய கம்ஸன் ‘தேவகியின் எட்டாவது கர்ப்பம் உனக்குப் பகை’
என்ற ஆகாயவாணியினாலும் பின்பு துர்க்கை சொல்லிப் போனதனாலும் ‘நம் பகைவன் கை தப்பிப்போய் நமக்கு
அணுக வொண்ணாத இடத்திலே வளரா நின்றான்; அவனை எப்படியாவது கண்டு பிடித்துக் கொன்று விட வேணும்’ என்று
உன்மேல் மிகவும் கறுக்கொண்டு ஆஸுர ப்ரக்ருதிகளை ஸ்தாவர ஜங்கமங்களான வடிவுகளைக் கொண்டு
நீ திரியுமிடங்களில் நிற்கும்படி ஏவியிருக்கிறான்! அவன் அவர்களைக் கொண்டு நீ துணை யற்றுத் திரியும் போது பார்த்து
உனக்குத் தெரியாமலே தப்ப முடியாதபடி வஞ்சனையால் உன்னைப் பிடித்துக் கொண்டால் பின்னை என்னால் உயிர் தரித்திருக்க முடியாது;
என் பேச்சைப் பேணி இங்கேயே இருக்கக் கடவாய் என்று வற்புறுத்துகின்றாள்.
(அணிவிளக்கே) உனக்கு ஏதேனும் தீங்குவந்தால் இத் திருவாய்ப்பாடி யடங்கலும் இருள் மூடிவிடுங்காணென்கிறாள்.
சோர்வு – தளர்ச்சி; இலக்கணையால் தனிப்பட்டிருத்தலைக் காட்டும். கருமம் -அமர்ந்து உவந்து என்றும் பிரிக்கலாம்.

வாசுதேவா-கண்ண பிரானே-
தீய புந்திக் கஞ்சனுன்மேல் சினமுடையன் -துஷ்ட புத்தியை யுடைய கம்சனானவன் உன் பக்கலிலே கோபம் கொண்டவனாய் இரா நின்றான்
சோர்வு பார்த்து-நீ தனியாய்ப் இருக்கும் சமயம் பார்த்து -சோர்வு -தளர்ச்சி -லக்ஷணையால்-தனிமை
மாயம் தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன்-வஞ்சனையால் உன்னை அகப்படுத்திக் கொண்டால் நான் பிழைத்து இருக்க சக்தை அல்லேன்
தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய் –தாய்மார்களுடைய வாயினால் சொல்வது அவசிய கர்த்தவ்ய காரியமாகும்
சாற்றிச் சொன்னேன் -வற்புறுத்திச் சொல்கிறேன்
போக வேண்டா-நீ ஓர் இடத்துக்கும் போக வேண்டா
ஆயர்பாடிக்கு அணி விளக்கே யமர்ந்து -திரு வாய்ப்பாடிக்கு மங்கள தீபமானவனே -பொருந்தி வந்து
உனக்கு ஏதேனும் ஒரு தீங்கு வந்தால் இத் திரு வாய்ப்பாடி அடங்கலும் இருள் மூடி விடும் காண்
என் முலை யுணாயே —

—————————————

மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் யுன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீ கேசா முலை யுணாயே–2-2-6-

பதவுரை

மின் அனைய–மின்னலை யொத்த
நுண்–ஸூக்ஷ்மமான
இடையார்–இடையை யுடைய பெண்களின்
விரி குழல் மேல்–விரிந்த (பரந்த) கூந்தலின் மேல்
நுழைந்த–(தேனை உண்ணப்) புகுந்த
வண்டு–வண்டுகள்
(தேனை யுண்டு களித்து)
இன் இசைக்கும்–இனிதாக ஆளத்தி வைத்துப் பாடா நின்ற
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலே
இனிது–போக்யமாக
அமர்ந்தாய்–எழுந்தருளி யிருப்பவனே!
உன்னை கண்டார்–உன்னைப் பார்த்தவர்
இவனை பெற்ற வயிறு உடையாள்–இவனைப் (பிள்ளையாகப்) பெற்ற வயிற்றை யுடையவள்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ–என்ன தபஸ்ஸு பண்ணினாளோ!
என்னும்–என்று கொண்டாடிச் சொல்லுகிற
வார்த்தை–வார்த்தையை
எய்துவித்த–(எனக்கு) உண்டாக்கின
இருடீகேசா–ஹ்ருஷீகேசனே!
முலை உணாய்.

விளக்க உரை

(என்ன நோன்பித்யாதி) ரூபணசேஷ்டி தாதிகளாலே இப்படி லோக விலக்ஷ்ணனாயுள்ள இப் பிள்ளையைப் பெற்றாளும் ஒருத்தியே!
அவள் தான் பூர்வ ஜந்மத்தில் நோற்ற நோன்பு என்னோ! என்று என்னைப் பலரும் கொண்டாடும்படி பிறந்தவனே! என்று
யசோதை கண்ணனை தன்வசப் படுத்தமைக்காகப் புகழ்ந்து கூறுகிறபடி.
ஹ்ருஷீகேசன் – (ரூப குணாதிகளாலே) ஸர்வேந்த்ரியங்களையும் கவருமவள்.

மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு-மின்னலை ஒத்த ஸூஷ்மமான இடையை யுடைய பெண்களின்
விரித்த -பரந்த -கூந்தலின் மேலே -தேனை உண்ணப் புகுந்த வண்டுகள்
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் யுன்னைக் கண்டார்-தேனை யுண்டு களித்து-இனிதாக ஆளத்தி வைத்துப் பாடா நின்ற
ஸ்ரீ வில்லி புத்தூரிலே போக்யமாக நித்ய வாசம் செய்து அருளும் உன்னைப் பார்த்தவர்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள்-இவனைப் பிள்ளையாகப் பெற்ற திரு வயிறு யுடையவள்
என்ன தபஸ் ஸூ பண்ணினாளோ- இவனை தன் வசப்படுத்துகைக்காக புகழ்ந்து பேசுகிற படி –
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீ கேசா -என்று கொண்டாடிச் சொல்லுகிற வார்த்தையை எனக்கு யுண்டாக்கின ஹ்ருஷீ கேசனே
ரூப குணாதிகளாலே சர்வ இந்திரியங்களும் கவருமவன் –
முலை யுணாயே–

————————————————

பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுது உண்ண வேண்டிக்
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை யுணாயே -2-2-7-

பதவுரை

கண்டவர்கள்–(உன்னைப்) பார்த்தவர்களான
பெண்டிர் வாழ்வார்–(தமது கணவர்க்கு) மனைவியாக யிருக்கின்ற ஸ்த்ரீகள்
நன் ஒப்பாரை–உன்னைப் போன்ற குழந்தைகளை
பெறுதும்–பெறுவோம் (பெற வேணும்)
என்னும்–என்கிற
ஆசையாலே–ஆசையினாலே
போக்கு ஒழிந்தார்–(உன்னை விட்டுப்) போதலைத் தவிர்ந்தார்கள்;
வண்டு உலாம்–வண்டுகள் ஸஞ்சரிக்கிற
பூ–புஷ்பங்களை யணிந்த
குழலினார்–கூந்தலை யுடையவர்கள்
கண் இணையால்–(தமது) இரண்டு கண்களினாலும்
கலக்க நோக்கி–(உனது) திருமேனி முழுவதும் பார்த்து
உன்–உன்னுடைய
வாய் அமுதம்–அதராம்ருதத்தை
உண்ண வேண்டி–பாநம் பண்ண ஆசை கொண்டவர்களாய்
கொண்டு போவான்–(உன்னை) எடுத்துக் கொண்டு போவதற்கு
வந்து நன்றார்–வந்து நிற்கிறார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ முலை உணாய்.

விளக்க உரை

முதலிரண்டடியால் – பதிவிரதைகளான பெண்களின் மநோரதமும்
பின் ஒன்றரையடியால் – யுவதிகளாய் போகமநுபவிக்க விரும்பின பெண்களுடய மநோரதமும் சொல்லுகிறதென்க.
அவற்றில் வேண்டினபடி ஆகிறது. இப்போது நீ முலையுண்ண வரவேணுமென்கிறாள்.
பெண்டிர் = இர் – பலர்பல் விகுதி. பெறுதும் – தன்மைப் பன்மை வினை முற்று. ஆஸா – வடசொல்.
கலக்க நோக்குதல் – ஒவ்வொரு அங்கத்தினுடையவும் ஸௌந்தர்யத்தை நோக்குதல்.

கண்டவர்கள்-உன்னைப் பார்த்தவர்களான
பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே-தமது கணவருக்கு மனைவியராய் இருக்கின்ற ஸ்த்ரீகள்
உன்னைப் போன்ற குழந்தையைப் பெற வேணும் என்கிற ஆசையினாலே
போக்கு ஒழிந்தார் -உன்னை விட்டுப் போதலைத் தவிர்ந்தார்கள்
வண்டுலாம் பூம் குழலினார் -வண்டுகள் சஞ்சரிக்கிற புஷ்பங்களை அணிந்த கூந்தலை யுடையவர்கள்
கண் இணையால் கலக்க நோக்கி-தமது இரண்டு கண்களினாலும் உனது திரு மேனி முழுதும் பார்த்து
உன் வாய் அமுது உண்ண வேண்டிக்-உன்னுடைய அதர அம்ருதத்தை பானம் பண்ண ஆசை கொண்டவர்களாய்
கொண்டு போவான் வந்து நின்றார் -உன்னை எடுத்துக் கொண்டு போவதற்கு வந்து நிற்கிறார்கள் –
கோவிந்தா நீ – கோவிந்தனே முலை யுணாயே –
முதல் இரண்டு அடியாலே பதி விரதைகளான ஸ்த்ரீகள் மநோ விருத்தி –
பின் ஒன்றரை அடிகளால் செல்வச் சிறுமியர்களான கோபிகளின் மநோ விருத்தி –

——————————————————

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அரங்கம் எரி செய்தாய் யுன்
திரு மலிந்து திகழ் மார்வு தேக்க வந்து என்னல்குல் ஏறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே –2-2-8-

பதவுரை

இரு மலை போல்–இரண்டு மலை போலே (வந்து)
எதிர்ந்த–எதிர்த்து நின்ற
மல்லர் இருவர்–(சாணூர முஷ்டிகரென்னும்) இரண்டு மல்லர்களுடைய
அங்கம்–உடம்பை
எரி செய்தாய்–(பயத்தாலே) எரியும்படி செய்தவனே!
வந்து–(நீ) வந்து
என் அல்குல் ஏறி–என் மடிமீது ஏறிக் கொண்டு
உன்–உன்னுடைய
திரு மலிந்து திகழும் மார்வு–அழகு நிரம்பி விளங்குகின்ற மார்பானது
தேக்க–(முலைப் பாலால்) நிறையும்படி
ஒரு முலையை–ஒரு முலையை
வாய் மடுத்து–வாயிலே வைத்துக் கொண்டு
ஒரு முலையை–மற்றொரு முலையை
நெருடிக் கொண்டு–(கையினாலே) நெருடிக் கொண்டிருந்து
(மிகுதியாயிருப்பது பற்றிப் பால் வாயிலடங்காமையினால்)
ஏங்கி ஏங்கி–இளைத்திளைத்து
(இப்படி)
இரு முலையும்–இரண்டு முலையையும்
முறை முறை ஆய்
மாறி மாறி
இருந்து–பொருந்தியிருந்து
உணாய்–உண்பாயாக.

விளக்க உரை

திருமலிந்து திகழுமார்வு = திரு – பிராட்டி என்றுமாம். தேக்க – தேங்க என்பதன் விகாரம்.
ஒரு முலையை வாயில் வைத்துக் கொண்டு மற்றொரு முலையின் காம்பைக் கையால் நெருடிக் கொண்டு பால் மிகுதியினால்
மூச்சுத் தணக்க மாறிமாறி முலை யுண்ணுதல் – குழந்தைகளினியல்பு;
“ஒரு கையாலொரு முலை முகம் நெருடா – வாயிலே முலை யிருக்க” என்ற பெருமாள் திருமொழியுங் காண்க.
இது – தன்மை நவிற்சி (ஸ்வபாவோக்தி).

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அரங்கம் எரி செய்தாய் -இரண்டு மலை போலே வந்து எதிர்த்து நின்ற சாணூர முஷ்டிகர்
என்னும் இரண்டு மல்லர்களுடைய உடம்பை பயத்தாலே எரியும் படி செய்தவனே
வந்து என் அல்குல் ஏறி -நீ வந்து -என் மடி மீது ஏறிக் கொண்டு
யுன் திரு மலிந்து திகழ் மார்வு தேக்க -யுன்னுடைய அழகு நிரம்பி விளங்குகின்ற மார்பானது-முலைபின் பால் நிறையும் படி
திரு -பிராட்டி என்றுமாம்
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு-ஒரு முலையை வாயிலே வைத்துக் கொண்டு
மற்றொரு முலையை கையிலே நெருடிக் கொண்டு இருந்து
மிகுதியாய் இருப்பது பற்றிப் பால் வாயில் அடங்காமையினால்
ஏங்கி ஏங்கி-இளைத்து இளைத்து –
இப்படி
இரு முலையும் முறை முறையா இருந்து உணாயே -இரண்டு முலையையும் மாறி மாறிப் பொருந்தி இருந்து உண்பாயாக
ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா –வாயிலே முலை இருக்க -பெருமாள் திரு மொழி

————————————

அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல்
செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம் முற்றத்தூடே
அங்கமெல்லாம் புழுதியாக வளைய வேண்டா வம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை யுணாயே -2-2-9-

பதவுரை

அம்ம–தலைவனே!
(அஸுரர்கள் கையிலகப்பட்டு இறவாமலிருக்கும்படி தேவர்கள் அம்ருதத்தைப் பெறுதற்கு உன்னை யடைந்த)
அங்கு–அக் காலத்திலே
விம்ம–(அவர்கள் வயிறு) நிரம்பும்படி
அமரர்க்கு–(அந்த) தேவர்களுக்கு
அமுது அளித்த–(க்ஷீராப்தியைக் கடைந்து) அம்ருதத்தை (எடுத்துக்) கொடுத்த
அமரர் கோவே–தேவாதிராஜனே!
அம் கமலம் போது அகத்தில்–அழகிய தாமரைப் பூவினுள்ளே
அணி கொள் முத்தம் சிந்தினால் போல்–அழகிய முத்துகள் சிந்தியதை ஒத்திருக்கும்படி
செம் கமலம் முகம்–செந்தாமரை மலர் போன்ற (உனது) முகமானது
வியர்ப்ப–வியர்த்துப் போக
இ முற்றத்தூடே–இந்த முற்றத்திலேயே
தீமை செய்து–தீம்பைச் செய்து கொண்டு
அங்கம் எல்லாம் புழுதி ஆக–உடம்பெல்லாம் புழுதி படியும்படி
அளைய வேண்டா–புழுதி யளையாதே;
முலை உணாய்–முலை யுண்ண வாராய்.

விளக்க உரை

புழுதி யளையாமல் முலை யுண்ண வாராய் என்கிறாள். செந்தாமரை போன்ற திரு முகத்திலே வியர்வைத் துளிகள்
அரும்புதற்கு ஒரு அபூதோபமை கூறுகின்றார். முதலடியில் – தாமரைமலரில் முத்துக்கள் சிந்தியிருந்தாலொக்குமென்கிறார்.

அம்ம–தலைவனே -வியப்பைக் குறிக்கும் இடைச் சொல் -என்றுமாம் -கேள் -என்றுமாம்
இறவாமல் இருக்க தேவர்கள்- அஸூரர்கள் கையிலும் அகப்பட்டு -அம்ருதத்துக்காக உன்னை அடைய –
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே -அக்காலத்திலே அவர்கள் வயிறு நிரம்பும் படி அந்த தேவர்களுக்கு –
ஷீராப்தியைக் கடைந்து அம்ருதத்தை எடுத்துக் கொடுத்த தேவாதி ராஜனே
அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல்-அழகிய தாமரைப் பூவினுள்ளே அழகிய முத்துக்கள் சிந்தியதை ஒத்து இருக்கும் படி
செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம் முற்றத்தூடே-செந்தாமரை மலர் போன்ற உனது திரு முகமானது வியர்த்துப் போக இந்த முற்றத்திலே
அங்கமெல்லாம் புழுதியாக வளைய வேண்டா விம்ம–தீமையைச் செய்து கொண்டே உடம்பு எல்லாம் புழுதி படியும் படி புழுதி அளையாதே
முலை யுணாயே –

—————————————-

ஓடவோடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடியாடி யசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தையாடி
ஓடியோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே –2-2-10-

பதவுரை

ஓடஓட–(குழந்தைப் பருவத்துக்குத் தக்கபடி) பதறி ஓடுவதனால்
ஒலிக்கும்–சப்திக்கின்ற
கிண் கிணிகள்–பாதச் சதங்கைகளினுடைய
ஓசைப் பாணியாலே–ஓசையாகிற சப்தத்தால்
பாடிப் பாடி–இடைவிடாது பாடிக் கொண்டு
அதனுக்கு ஏற்ற கூத்தை–அப் பாட்டிற்குத் தகுந்த ஆட்டத்தை
அசைந்து அசைந்திட்டு–வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அசைந்து
ஆடி ஆடி–ஆடிக் கொண்டு
வருகின்றாயை–வருகின்ற உன்னை
பற்பநாபன் என்று இருந்தேன்–(வேறோபரணம் வேண்டாதபடி) பத்மத்தை நாபியிலுடையவனென்று எண்ணி யிருந்தேன்;
நீ–நீ
ஆடி–ஆடிக்கொண்டே
ஓடிஓடிபோய் விடாதே–(என் கைக்கு எட்டாதபடி) ஓடிப் போய் விடாதே
முலை உணாய்.

விளக்க உரை

கண்ணபிரான் நிடந்து வரும்போது திருவடிச் சதங்கைகளின் ஓசை தானே பாட்டாயிருக்குமென்க.
(பற்பநாபனென்றிருந்தேன்) “கொப்பூழிலெழு கமலப்பூவழகர்” என்றபடி வேறொரு ஆபரணமும் வேண்டாமல்
திருநாபீ கமலமே ஆபரணமாம்படி யிருப்பானொருவனன்றோ இவன்! இவனுக்கு வேறொரு பாட்டும் கூத்தும் வேணுமோ?
சதங்கையோசையும் நடையழகுமே பாட்டும் ஆட்டமுமாய் அமைந்த ஆச்சரியம் என்னே! என்று வியப்புக் கொண்டிருந்தேன் என்க.

இனி – இவன் அழிந்து கிடந்த வுலகத்தை நாபீகமலத்தில் உண்டாக்கின வனன்றோ ஆகையால் நம்முடைய
ஸத்தையையுந் தருகைக்காக வருகிறானென்றிருந்தேன் என்றும் விசேஷார்த்தம் கூறுவர்.

ஓடவோடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே–குழந்தை பருவத்துக்குத் தக்க பதறி ஓடுவதனால் சப்திக்கின்ற
பாதச் சதங்கைகளினுடைய ஓசையாகிற சப்தத்தால்
பாடிப் பாடி–அதனுக்கு ஏற்ற கூத்தை அசைந்து – இடைவிடாது பாடிக் கொண்டு அப்பாட்டுக்கு தகுந்த
ஆட்டத்தை வலப்புறமாகவும் இடப்புறமாகவும் அசைந்து
ஆடியாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்-ஆடிக் கொண்டு வருகின்ற உன்னை வேறொரு ஆபரணம் வேண்டாத படி
பத்மத்தை திரு நாபியில் யுடையவன் என்று எண்ணினேன் -கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -அன்றோ –
யுத்தமா ஆடி ஓடியோடிப் போய் விடாதே நீ -உத்தமனே ஆடிக் கொண்டே என் கைக்கு எட்டாத படி ஓடிப் போய் விடாதே
இவன் அழிந்து கிடந்த உலகத்தை திரு நாபி கமலத்தில் யுண்டாக்கி அருளினவன் அன்றோ
ஆகையால் நம்முடைய சத்தையும் தருகைக்காக வருகிறான் என்று இருந்தேன் -என்றுமாம்
முலை யுணாயே

———————————

வாரணிந்த கொங்கை யாச்சி மாதவா யுண் என்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே –2-2-11-

பதவுரை

வார் அணிந்த–கச்சை அணிந்து கொண்டிருக்கிற
கொங்கை–ஸ்தநங்களையுடைய
ஆய்ச்சி–யசோதை
மாதவா–மாதவனே!
உண்–முலையை (உண்பாயாக)
என்ற–என்று (வேண்டிச்) சொன்ன
மாற்றம்–வார்த்தையைக் குறித்தனவான
நீர் அணிந்த குவளை–நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற செங்கழுநீரின்
வாசம்–நல்ல வாசனை
நிகழ நாறும்–ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்தவரும்
பார் அணிந்த–பூமி முழுவதும் அழகாகப் பரவிய
தொல் புகழான்–பழமையான கீர்த்தியை யுடையவருமான
பட்டர்பிரான்–பெரியாழ்வார் அருளிச் செய்த
பாடல்–பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்
சீர் அணிந்த–குணங்களாலழகிய
செம் கண் மால் மேல்–சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலிடத்தில்
சென்ற–பதிந்த
சிந்தை–மநஸ்ஸை
பெறுவர்–அடைவார்கள்

விளக்க உரை

வாரணிந்த கொங்கை யாய்ச்சி – ராஜாக்களுக்கு போக்யமான பொருளை வேலைக்காரர் ­மூடிக் கொண்டு போவது போல
கண்ணனுக்கு விருப்பமான ஸ்தநங்களை யசோதை பிறர் கண்படாதபடி கச்சினால் மறைத்து வைப்பாளென்க.
மாற்றம் (ஆகிய) பாடல் எனத் தொடரும். குவளை – ‘குவலம்’ என்ற வடசொல் விகாரம்; ‘குவலயம்’ என்பது மதுவே;
“குவாலயம் குவலயம் குவாலம் குவலம் குவம்” என்பது – வடமொழி நிகண்டு.
வாசம் – ‘வாஸநா’ என்ற வடசொற் சிதைவு. ‘நிகழ்நறும்’ என்ற பாடம் பொருந்தாது.

வாரணிந்த கொங்கை யாச்சி மாதவா யுண் என்ற மாற்றம்-கச்சை அணிந்து கொண்டு இருந்த ஸ்தநங்களை யுடைய யசோதை –
மாதவன் முலை யுண்பாயாக என்று வேண்டிச் சொன்ன வார்த்தையைக் குறித்தனவான
ராஜாக்களுக்கு போக்கிய வஸ்துக்களை வேலைக்காரர் மூடிக் கொண்டு போவது போலே இவளும் பிறர் கண் படாத படி
முலையை மூடி வார் அணிந்து இருப்பாள்
நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர்–நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற செங்கழு நீரின்
நல்ல வாசனை ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவவதரித்தவரும்
குவளை -குவலம்-என்னும் வடசொல்லின் விகாரம் -குவலயம் என்னும் அதுவே
குவாலயம்-குலவயம்-குவாலம்-குவலம் -குவம்-வடமொழி நிகண்டு
பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார்-பூமி முழுதும் அழகாக பரவிய பழமையான கீர்த்தியையும் யுடையவரான
பெரியாழ்வார் அருளிச் செய்த பாசுரங்களை ஓத வல்லவர்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே -குணங்களால் அழகிய சிவந்த திருக் கண்களையுடைய
திருமாலினிடத்தே பதிந்த மனசை அடைவார்கள் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: