பெரியாழ்வார் திருமொழி-1-7- -திவ்யார்த்த தீபிகை –

அவதாரிகை –
கண்ண பிரான் தளர்நடை நடந்ததைத் தத் காலத்திலே ஸ்ரீ யசோதா பிராட்டி கண்டு அனுபவித்தாப் போலே
ஆழ்வார் தாமும் தம்முடைய ப்ரேம பாரம்யத்தாலே தம்மை அவளாகவே பாவித்து கண்ணனுடைய
அந்த சேஷ்டிதத்தை ப்ரத்யக்ஷம் போலேவே கண்டு அனுபவிக்கிறார் இத் திரு மொழியிலே

————————

தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல்
உடன் கூடி கிண்கிணி யாரவாரிப்ப வுடை மணி பறை கறங்கத்
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –1-7-1-

பதவுரை

சங்கிலி கை தொடர்–இரும்புச் சங்கிலியின் தொடர்பு
சலார் பிலார் என்ன–’சலார்பிலார்’ என்று சப்திக்கவும்
தூங்கு–தொங்குகின்றனவும்
பொன்–பொன் கயிற்றிற்கட்டி யிருப்பனவுமான-
மணி–மணிகள்
ஒலிப்ப–ஒலிக்கவும்
படு–உண்டான
மும்மதம் புனல்–மூன்று வகையான மதநீர்
சோர–பெருகவும்
நின்று–இருந்து கொண்டு
வாரணம்–யானை
பைய–மெல்ல
ஊர்வது போல்–நடந்து போவது போல
கிண் கிணி–காற் சதங்கைகள்
உடன் கூடி–தம்மிலே தாம் கூட்டி
ஆரவாரிப்ப–சப்திக்கவும்
உடை–திரு வரையில் கட்டிய
மணி–சிறு மணிகள்
பறை கறங்க–பறை போல் சப்திக்கவும்
சார்ங்கம்–சார்ங்கமென்னும் வில்லை
பாணி–கையிலேந்திய பிள்ளையாகிய இவன்
தட தாள் இணை கொண்டு–(தன்னுடைய) பெரிய பாதங்களிரண்டினால்
தளர் நடை–இளநடையை
நடவானோ–நடக்கமாட்டானோ?
[நடக்கவேணும். ]

விளக்க உரை

கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போது, காலிலணிந்துள்ள பாதச் சதங்கை கிண்கிணென்று சப்திக்கவும்,
இடையிற் கட்டிய சிறு மணிகள் பறை போலொலிக்கவும், நடக்கின்ற ஆயாஸத்தினால் உடலில் வேர்வைநீர் பெருகவும்
நேருமாதலால் இதற்கு ஓர் ஏற்ற உபமாநம் கூறுகின்றார் முன்னடிகளில்;
யானையானது மதத்தின் மிகுதியால் கட்டுத்தறியை முறித்துவிட்டுக் காலிலிட்ட இருப்புச் சங்கிலியை யிழுத்துக்கொண்டு
நடக்கையாலே அந்தச் சங்கிலித் தொடர் சலார்பிலாரென்று சத்திக்கவும்,
பொன் கயிற்றினால் கட்டித் தனது இருபுறத்திலும் தொங்கவிட்ட மணிகள் ஒலிக்கவும்,
மதநீர்பெருகவும் மெல்ல நடக்கும் யானை ஏற்ற உவமையாம். சலார்பிலார்-ஒலிக்குறிப்பு.
மூன்று+மதம்=மும்மதம்: “மூன்றனுறுப்பழிவும் வந்ததுமாகும்” என்னும் சூத்திரவிதி அறிக;
கன்னமிரண்டும் குறியொன்றுமாகிய மூவிடங்களிலும் தோன்றும் மதம். வாரணம்- வடசொல்.
உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப-அரைச் சதங்கை (நழுவிவிழுந்து திருவடிகளிலே சேர்ந்து இழுப்புண்டு
வருகையாலே அதிலுண்டான சதங்கைகள்) தம்மிலெகூடிச் சப்திக்க என்றுமாம்.
இணைதாள்-தமக்குத்தாமே ஒப்பான திருவடிகள் என்றலுமொன்று. சார்ங்கபாணி-வடசொற்றொடர்.
தளர்நடை-(திருவடிகளை நன்றாகப் பதியவைத்து நடக்கும் பருவமன்றாகையாலே) தட்டித் தடுமாறி நடக்கும் நடை.

தொடர் சங்கிலிகை -இரும்புச் சங்கிலியின் தொடர் –
சலார் பிலார் என்னத் –சலார்-பிலார்-என்று சப்திக்கவும்
தூங்கு பொன்மணி ஒலிப்பப்–தொங்குகின்றனவும் -பொன் கயிற்றில் கட்டி இருப்பனவுமான மணிகள் ஒலிக்கவும்
படு மும்மதப் புனல் சோர -நின்று –உண்டான மூன்று வகையான மத நீர் பெருக்கவும் இருந்து கொண்டு –
கன்னம் இரண்டிலும் -குறி ஒன்றிலும் -மூன்று மத ஸ்தானம்
வாரணம் பைய ஊர்வது போல்-யானை மெல்ல நடந்து போவது போலே
உடன் கூடி கிண்கிணி யாரவாரிப்ப -கால் சதங்கைகள் தம்மிலே தாம் கூடி சப்திக்கவும்
வுடை மணி பறை கறங்கத்–திருவரையிலே கட்டிய சிறு மணிகள் பறை போலே சப்திக்கவும்
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –சார்ங்கம் என்னும் வில்லைக் கையிலே ஏந்திய
பிள்ளையாகிய இவன் தன்னுடைய பெரிய பாதங்கள் இரண்டினால்-இள நடையை நடக்க மாட்டானோ -நடக்க வேணும் –
திருவடிகளை நன்றாகப் பதித்து வைத்து நடக்கும் பருவம் அன்று ஆகையாலே-தட்டுத் தடுமாறி நடக்கும் நடை –

——————————-

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளைப் போலே
நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
அக்கு வடமுடைத் தாமைத் தாலி பூண்ட வனந்த சயனன்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ -1-7-2-

பதவுரை

செக்கரிடை–செவ் வானத்திலே
நுனி கொம்பில்-கொம்பின் நுனியிலே
தோன்றும்–காணப்படுகிற
சிறுபிறை முளை போல–சிறிய பிறைச் சந்திரனாகிய முளையைப்போல,
நக்க–சிரித்த
செம் அவர் வாய்–மிகவுஞ் சிவந்த வாயாகிய
தி்ண்ணை மீது–மேட்டிடத்தில்
நளிர் வெண் பல் முளை–குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள்
இலக–விளங்க
அஃகுவடம்–சங்கு மணி வடத்தை
உடுத்து–(திரு வரையில்) தரித்த
ஆமைத் தாலி–ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை
பூண்ட–கழுத்திலணி்ந்து கொண்டவனும்
அனந்த சயனன்–திருவனந்தாழ்வான் மேலே படுப்பவனும்
தக்க மா மணிவண்ணன்–தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
வாசுதேவன்–வஸுதேவ புத்திரனுமான இவன்
தளர் நடை நடவானோ .

விளக்க உரை

புன்முறுவல் செய்துகொண்டே தளர்நடை நடக்கவேணுமென்று இதனால் பிரார்த்திக்கிறபடி, கண்ணபிரானது மிகவுஞ் சிவந்த
வாயாகிய மேட்டிடத்தில் வெளுத்த பல்லின் முளைகள் பிரகாசிப்பதானது –
செவ்வானத்தில் தோன்றுகின்ற குளிர்ந்த வெள்ளிய சிறு பிறைபோல இருக்குமென்க.
‘நக்க‘ என்றது வாய்க்கு விசேஷணம். “வெண்பல் முளையிலகத் தளர்நடை நடவானோ” என்று அந்வயம்.
‘சந்திரன் எங்கே இருக்கிறான்‘ என்றால், ‘அந்த மரக்கிளைக்கு மேலிருக்கிறான்‘ என்று உலகவழக்கிற் காட்ட
வேண்டி யிருப்பதனால், ‘நுனிக் கொம்பில் தோன்றுஞ் சிறு பிறை முளை‘ என்றார்.
சிறுபிறை முளை யென்றது மூன்றாம் பிறையை யென்பர்.
மா மணி – நீலாத்நம், மா – கறுப்புக்கும் பெயர்.

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும்-செவ்வானத்திலே கொம்பின் நுனியில் காணப் படுகிற
சிறு பிறை முளைப் போலே-சிறிய பிறைச் சந்த்ரனாகிய முளையைப் போலே -சிறு பிறை முளை -மூன்றாம் பிறை -என்பர் –
சந்திரன் எங்கே -அந்த மரக் கிளையின் மேல் இருக்கிறான் -என்று உலக வழக்கு பாலர்களுக்கு சொல்வது உண்டே
நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே -சிரித்த மிகச் சிவந்த வாயாகிய மேட்டிடத்திலே
நளிர் வெண் பல் முளை இலக–குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள் விளங்க
அக்கு வடமுடைத் தாமைத் தாலி பூண்ட -சங்கு மணி வடத்தை திருவரையிலே தரித்து -ஆமையின் வடிவமாகச்
செய்யப் பட்ட தாலியை திருக் கழுத்தில் அணிந்து கொண்டவனும்
வனந்த சயனன்-திருவனந்த வாழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுபவனும்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் –தகுதியான நீல மணி போலே நிறத்தை யுடையவனுமான -வஸூ தேவ புத்திரனான இவன்
மா மணி நீல ரத்னம் -கறுப்புக்கும் பெயர் –
தளர்நடை நடவானோ –

————————————————–

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்ப்
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்
மின்னல் பொலிந்ததோர் கார் முகில் போலக் கழுத்தினில் காறையொடும்
தன்னில் பொலிந்த விருடீகேசன் தளர்நடை நடவானோ –1-7-3-

பதவுரை

மின் கொடியும்–கொடி மின்னலும்
ஓர் வெண் திங்களும்–அதனோடு சேர்ந்திருப்பதும் களங்கமில்லாததுமான (முழுவதும்) வெண்மையாயுள்ள ஒரு சந்த்ரனும்
சூழ்-(அவ்விரண்டையுஞ்) சுற்றிக் கொண்டிருக்கும்
பரிவேடமும் ஆய்–பரி வேஷத்தையும் போல
பின்னல்–(திருவரையில் சாத்தின) பொற் பின்னலும்
துலங்கும் அரசிலையும்–விளங்குகின்ற அரசிலை போல வேலை செய்த ஒரு திருவாபரணமும்
பீதகம் சிறு ஆடையோடும்–(இவ்விரண்டையுஞ் சூழ்ந்த) பொன்னாலாகிய சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும்,
மி்ன்னில்–மின்னலினால்
பொலிந்தது–விளங்குவதாகிய
ஓர்–ஒப்பற்ற
கார் முகில் போல–காளமேகம் போல
கழுத்தினில் காறையோடும்–கழுத்திலணிந்த காறையென்னும் ஆபரணத்தோடும் (கூடிய)
தன்னில் பொலிந்த–(இவ்வாபரணங்கள் திருமேனிச்சுமை என்னும்படி இயற்கையான) தனது அழகினால் விளங்குகின்ற
இருடீகேசன்–‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திருநாமமுடைய இவன்
தளர்நடை நடவானோ-.

விளக்க உரை

மின் + கொடி மின்னுக்கொடி. “மின் பின் பன் கன் தொழிற்பெயரனைய” எனச் சிறப்புவிதிகாண்க.
பரிவேடம் – ‘பரிவேஷம்‘ என்ற வடசொற்றிரிபு. சந்த்ரனைச் சுற்றிச் சில காலங்களிற் காணப்படும் ரேகை.
இது ஊர்கோள் எனவும் படும்.
பொற் பின்னலும் அதைச்சேர்ந்து விளங்குகின்ற அரசிலைப்பணியும் இவ்விரண்டையுஞ் சூழ்ந்துகொண்டு விளங்குகின்ற
பீதகச் சிற்றாடையும் முறையே, மின்னற் கொடியையும் அதைச் சார்ந்து விளங்கும் களங்கமற்ற சந்திரனையும்
இவ்விரண்டையுஞ் சூழ்ந்து கொண்டிருக்கும் ஊர் கோளையும் போலுமென்க. இல்பொருளுவமை:
அரசிலைப் பணிக்கு வெண் திங்களை உவமையாகச் சொன்னதனால், அவ் வாபரணம் வெள்ளியினாற் செய்யப்பட்டதென விளங்கும்.
கருநிறக் கழுத்திற் பொற்காறை விளங்குவது – காள மேகத்திற் செந்நிற மின்னற் கொடி விளங்குவது போலும்.

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் -கொடி மின்னலும் -அதனோடே சேர்ந்து இருப்பதும்
களங்கம் இல்லாத முழுவதும் வெண்மையாயுள்ள ஒரு சந்திரனும்
சூழ் பரி வேடமுமாய்ப்-அவ்விரண்டையும் சுற்றிக் கொண்டு இருக்கும் பரி வேஷத்தைப் போலே
சந்திரனைச் சுற்றி சில காலங்களில் காணப் படும் ரேகைக்கு பரி வேஷம் -இத்தை ஊர் கோள்-என்றும் சொல்வர்
பின்னல் துலங்கும் அரசிலையும் -திருவரையில் சாத்தின பொன் பின்னலும் -விளங்குகின்ற அரசிலை போலே
வேலை செய்த தொரு திரு ஆபரணமும் வெண் திங்கள் -உவமை என்பதால் இது வெள்ளியால் செய்த திரு ஆபரணமாக
பீதகச் சிற்றாடையொடும்-இவ்விரண்டையும் சூழ்ந்த பொன்னாலாகிய சிறிய திரு வஸ்திரமும் –
ஆகிய இவற்றோடும்
மின்னல் பொலிந்ததோர் கார் முகில் போலக் -மின்னலினால் விளங்குவதாகிய ஒப்பற்ற காள மேகம் போலே
கழுத்தினில் காறையொடும்-திருக் கழுத்தில் அணிந்துள்ள காறை என்னும் திரு ஆபரணத்தோடும் கூடிய
தன்னில் பொலிந்த -இவ்வாபரணங்கள் திரு மேனிச் சுமை என்னும் படி இயற்கையான தனது அழகினால் விளங்குகின்ற
இவ்வாபரணங்கள் தங்களோடும் சிற்றாடையோடும் ஒன்றி பொருந்தி என்றுமாம்
விருடீகேசன் –ஹ்ருஷீகேசன் என்னும் திரு நாமம் யுடைய இவன் –
தளர்நடை நடவானோ

———————————–

கன்னற்குடம் திறந்தால் ஒத்தூறிக் கணகண சிரித்து  உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திரு மார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிகின்றான்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ –1-7-4-

பதவுரை

கன்னல் குடம்–கருப்பஞ்சாறு நிறைந்த குடம்
திறந்தால்–பொள்ளல் வி்ட்டால் (அப் பொள்ளல் வழியாகச் சாறு பொசிவதை)
ஒத்து–போன்று
ஊறி–(வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய
கண கண–கண கண வென்று சப்தமுண்டாகும்படி சிரித்து
உவந்து–ஸந்தோஷித்து
முன் வந்து நின்று–என் முன்னே வந்து நின்று
முத்தம் தரும்–(எனக்கு) முத்தங்கொடுக்கும் தன்மை யுள்ளவனும்
என் முகில் வண்ணன்–எனது முகில் போன்ற திரு நிறத்தை யுடையவனும்
திரு–பெரியபிராட்டியார்
மார்வன்–மார்பிற் கொண்டுள்ளவனுமான இவன்
தன்னை பெற்றேற்கு–தன்னைப் பெற்ற எனக்கு
தன்–தன்னுடைய
வாய் அமுதம்–அதராம்ருதத்தை
தந்து–கொடுத்து
என்னை–(தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை யுடைய) என்னை
தளிர்ப்பிக்கின்றான்–தழைக்கச் செய்கிறான்,
(இவன்)–
தன் ஏற்றும்–தன்னோடு எதிர்க்கிற
மாற்றலர்–சத்ருக்களுடைய
தலைகள் மீதே–தலைகளின் மேலே (அடியிட்டு)
தளர்நடை நடவானோ.

விளக்க உரை

தன் வாயில் நின்றும் கரும்பு ரஸம்போல் இனிமையான நீர் வெளிப்பட்டு வடியும்படி சிரித்துக்கொண்டு வந்து
எனக்கு முத்தங் கொடுக்கும் தன்மையுள்ளவன் கண்ணனென்பது – முன்னிரண்டடிகளின் கருத்து.
கண கண – வாய்விட்டுச் சிரிக்கும்போது உண்டாகின்ற ஒலிக்குறிப்பு.
இவன் நடக்கிற நடை யழகு கண்டே சத்ருக்கள் சாக வேணுமென்பது ஈற்றடியி்ன் கருத்து.

கன்னற்குடம் திறந்தால் ஒத்தூறிக் -கருப்பஞ்சாறு நிறைந்த குடம் பொள்ளல் விட்டால் அது வழியே
சாறு பொசிவதை போன்று திரு வாயில் நின்றும் நீர் சுரந்து வடிய
கணகண சிரித்து  உவந்து–கண கண என்று சப்தம் உண்டாகும் படி சிரித்து -சந்தோஷித்து
முன் வந்து நின்று முத்தம் தரும் -என் முன்னே வந்து நின்று எனக்கு முத்தம் கொடுக்கும் தன்மை யுள்ளவனும்
என் முகில் வண்ணன் -எனது முகில் போன்ற நிறத்தை யுடையவனும்
திரு மார்வன்-பெரிய பிராட்டியாரை திரு மார்பிலே கொண்டவனுமான
தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து -தன்னைப் பெற்ற எனக்கு தன்னுடைய அதர அம்ருதத்தைக் கொடுத்து
என்னைத் தளிர்ப்பிகின்றான்-தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை யுடைய என்னை தழைக்கச் செய்கிறான் இவன்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே -தன்னோடு எதிர்க்கிற சத்ருக்களின் தலைகள் மேலே திருவடியிட்டு
தளர்நடை நடவானோ –

——————————————–

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல்
பன்னி யுலகம் பரவிவோவாப் புகழ்ப் பலதேவன் என்னும்
தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை  நடவானோ –1-7-5-

பதவுரை

முன்–முன்னே
நல்–அழகிய
ஓர்–ஒப்பற்ற
வெள்ளி பெருமலை–பெரிய வெள்ளிமலை பெற்ற
குட்டன்–குட்டி
மொடுமொடு–திடுதிடென்று
விரைந்து–வேகங்கொண்டு
ஓட–ஓடிக்கொண்டிருக்க,
பின்னை–(அந்தப் பிள்ளையின்) பின்னே
(தன் செருக்காலே அப்பிள்ளையைப் பிடிப்பதற்காக)
தொடர்ந்தது-தொடர்ந்ததுமாகிய
ஓர்-ஒப்பற்ற
கரு மலை–கரு நிறமான மலை பெற்ற
குட்டன்–குட்டி
பெயர்ந்து–தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு
அடி இடுவது போல்–அடி யிட்டுப் போவது போல, –
உலகம்–லோகமெல்லாங்கூடி
பன்னி–(தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து
பரவி-ஸ்தோத்ரஞ்செய்தும்
ஓவா–முடிவு காண முடியாத
புகழ்–கீர்த்தியை யுடைய
பலதேவன் என்னும்–பலராமன் என்கிற
தன் நம்பி ஓட–தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக்கொண்டிருக்க
பின் கூட செல்வான்-(அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான்
தளர்நடை நடவானோ -.

விளக்க உரை

பலராமன் வெண்மை நிறமுள்ளவனாதலால், அவன் ஓடுதற்கு வெள்ளிமலை யீன்ற குட்டியோடுவதையும்,
கண்ணன் கருநிறம் உள்ளவனாதலால் அவன் பின்னே தொடர்ந்தோடுதற்குக் கருமலையீன்ற குட்டி தொடர்ந்தோடுவதையும் உவமை குறித்தார்.
காரியம் காரணத்தை ஒத்திருக்கும் என்ற கொள்கையை அநுஸரித்து இங்ஙனருளிச் செய்தனரென்க.
நம்பி – ஆண்பாற் சிறப்புப்பெயர். இங்கு, தமையனென்ற பொருளைக் காட்டிற்று.
அன்றி, பலராமனுக்கு ‘தம்பி மூத்தபிரான்‘ என்று ஒரு பெயர் ஸம்ப்ரதாயத்தில் வழங்குதலால்,
அதன் ஏகதேசமாகிய ‘நம்பி‘ என்கிற வித்தால் அப்பெயர் முழுவதையும் குறித்தாருமாம்.
மொடுமொடு – நடக்கும்போது தோன்றும் ஒலிக்குறிப்பு; விரைவுக்குறிப்புமாம்

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் -முன்னே அழகிய ஒப்பற்ற பெரிய வெள்ளி மலை பெற்ற குட்டி –
காரணம் காரியத்தை ஒத்து இருக்குமே -பலராமன் வெண்மை நிறம் அன்றோ
மொடு மொடு விரைந்தோட-திடு திடு வென்று வேகம் கொண்டு ஓடிக் கொண்டு இருக்க –
மொடு மொடு -நடக்கும் ஒலி குறிப்பு -விரைவு குறிப்பு என்றுமாம் –
பின்னைத் தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் -அப்பிள்ளையின் பின்னே செருக்காலே அப்பிள்ளையைப் பிடிப்பதற்காக
தொடர்ந்ததாகிய ஒப்பற்ற கரு நிறமான மலை பெற்ற குட்டி – கண்ணன் என்னும் கரும் தெய்வம் அன்றோ
பெயர்ந்து அடியிடுவது போல்-தான் இருக்கும் இடத்தை விட்டுப் புறப்பட்டு அடியிட்டுப் போவது போலே
பன்னி யுலகம் பரவிவோவாப் -லோகம் எல்லாம் கூடி -தங்களாலான அளவும் ஆராய்ந்து ஸ்தோத்ரம் செய்தும் முடிவு காண முடியாத
புகழ்ப் பலதேவன் என்னும்-கீர்த்தியை யுடைய பலராமன் என்கிற தன்னுடைய தமையன் முன்னே ஓடிக் கொண்டு இருக்க
தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் -அவனைப் பிடிக்க வேணும் என்கிற எண்ணத்தால் அவன் பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான்
தளர் நடை  நடவானோ –

———————————

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இரு காலும் கொண்டு அங்கு அங்கு எழுதினால் போலே இல்ச்சினை பட நடந்து
பெருகா நின்ற வின்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து
கரு கார்க்கடல் வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ –1-7-6-

பதவுரை

கரு கார் கடல் வண்ணன்–மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும்
காமர் தாதை–காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை,-
ஒரு காலில்-ஒரு பாதத்திலே
சங்கு–சங்கமும்
ஒரு காலில்–மற்றொரு பாதத்தில்
சக்கரம்–சக்கரமும்
உள் அடி–பாதங்களின் உட் புறத்திலே
பொறித்து-ரேகையின் வடிவத்தோடு கூடி
அமைந்த–பொருந்தி யிருக்கப் பெற்ற
இரு காலும் கொண்டு–இரண்டு திருவடிகளினாலும்
அங்கு அங்கு–அடி வைத்த அவ்வவ் விடங்களிலே
எழுதினால் போல்–சித்திரித்ததுபோல
இலச்சினை பட–அடையாளமுண்டாம்படி
நடந்து-அடி வைத்து
(தனது வடிவழகைக் கண்டு)
பெருகா நின்ற–பொங்குகிற
இன்பம் வெள்ளத்தின் மேல்–ஆநந்தமாகிற ஸமுத்ரத்துக்கு மேலே
பி்ன்னையும்–பின்னும்
பெய்து பெய்து–(ஆநந்தத்தை) மிகுதியாக உண்டாக்கிக் கொண்டு
தளர்நடை நடவானோ -.

விளக்க உரை

கண்ணபிரானாகிய பிள்ளைக்குப் புருஷோத்தம சிஹ்நமாகிய சங்கசக்ரரேகைகள் உள்ளங்காலிலிருத்தலால்
அத்தாள்களை வைத்து நடக்குமிடமெல்லாம் சங்கசக்ரத்தி துருவங்களை யெழுதினாற் போலாகின்றனவென்பது – முன்னிரண்டடியின் கருத்து.
“கரு கார் கடல்” என்பதற்கு – கரிய பெரிய கடலென்றும், கறுத்துக் குளிர்ந்த கடலென்றும்,
காளமேகம் போலவும் கடல் போலவுமென்றும் பொருள் கொள்ளலாம். இலச்சினை – லஷணம்.
கண்ணன் மந்மதனுடைய அம்சமாகிய ப்ரத்யும்நனுக்கு ஜநகனாகையால், காமர்தாதையாயினான்.
இவ்வடைமொழியால், கண்ணபிரானது அழகின் மேன்மை தொனிக்கும். தாதை – ‘தாதா‘ என்னும் வடசொல் விகாரம்.

கரு கார்க்கடல் வண்ணன் காமர் தாதை -மிகவும் கரு நிறமுள்ள சமுத்திரம் போன்ற நிறமுடையவனும் –
காம தேவனுக்கு பிதாவுமான இப்பிள்ளை -மன்மதன் அம்சமான ப்ரத்யுமனுக்கு ஜனகன் –காமர் தாதை ஆயினான் -காமன் தாதை என்றும் பாடம்
கரு கார் கடல் -என்றது கரிய பெரிய கடல் -கருத்து குளிர்ந்த கடல் -காள மேகம் போலவும் கடல் போலவும் -என்றுமாம்
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த–ஒரு திருப் பாதத்தில் சங்கமும் -மற்றொரு
திருப் பாதத்தில் சக்கரமும்–திருப் பாதங்களின் உட்புறத்திலே ரேகையின் வடிவத்தோடு கூடி பொருந்தி இருக்கப் பெற்ற
இரு காலும் கொண்டு அங்கு எழுதினால் போலே இல்ச்சினை பட நடந்து–இரண்டு திருவடிகளினாலும்
அடி வைத்த அவ்வவ இடங்களிலே சித்திரித்தது போலே அடையாளம் யுண்டாம்படி அடி வைத்து -புருஷோத்தம சிஹ்னங்கள் அன்றோ –
தனது வடிவு அழகைக் கண்டு
பெருகா நின்ற வின்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து-பொங்குகிற ஆனந்தமாகிற சமுத்ரத்துக்கு மேலே
பின்னும் ஆனந்தத்தை மிகுதியாக யுண்டாக்கிக் கொண்டு
தளர்நடை நடவானோ —

——————————————

படர் பங்கய மலர் வாய் நெகிழப் பனி படு சிறு துளி போல்
இடம் கொண்ட செவ்வாயூறி யூறி யிற்றிற்று வீழ நின்று
கடும் சேக்கழுத்தின் மணிக்குரல் போலுடை மணி கண கண எனத்
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –1-7-7-

பதவுரை

படர்–படர்ந்திருக்கிற (பெருத்திருந்துள்ள
பங்கயம் மலர்–தாமரைப்பூ
வாய் நெகிழ–(மொட்டாயிராமல்) வாய் திறந்து மலர
(அதில் நின்றும் பெருகுகி்ன்ற)
பனிபடு–குளிர்ச்சி பொருந்திய
சிறு துளி போல–(தேனினுடைய) சிறுத்த துளியைப்போலே
இடம் கொண்ட–பெருமை கொண்டுள்ள
செவ்வாய்–தனது சிவந்த வாயினின்றும்
ஊறிஊறி–(ஜலமானது) இடைவிடாமற் சுரந்து
இற்று இற்று வீழநின்று–(நடுவே) முறிந்து முறிந்து கீழே விழும்படி நின்று -,
கடும் சே–கொடிய ரிஷபத்தின்
கழுத்தில்–கழுத்திலே கட்டப்பட்டுள்ள
மணி–மணியினுடைய
குரல் போல்–ஒலிபோலே
உடை மணி–(தனது) திருவரையிற் கட்டிய மணி
கண கண என–கண கண வென்றொலிக்க

விளக்க உரை

(தடந்தாளித்யாதி முதற்பாட்டிற்போல் பொருள் காண்க.)
மலர்ந்த தாமரைப்பூவில் நின்றும் தேன் சிறுசிறு துளியாய்ப் பெருகி வடிவதுபோலத் தனது வாயில் நின்றும்
இடைவிடாமல் ஜலம் பெருகவும், எருது நடந்து போம்போது அதன் கழுத்திற்கட்டிய மணி கணகணவென்று சப்திப்பது போலத்
திருவரையில் சாத்திய மணி சப்திக்கவும் தளர்நடை நடந்து வரவேணுமென்கை.

படர் பங்கய மலர் வாய் நெகிழப் -பெருத்து இருந்துள்ள தாமரைப் பூ மொட்டாய் இராமல் வாய் திறந்து மலர
அதில் நின்றும் பெருகுகிற
பனி படு சிறு துளி போல்-குளிர்ச்சி பொருந்திய தேனினுடைய சிறுத்த துளியைப் போலே
இடம் கொண்ட செவ்வாயூறி யூறி -பெருமை கொண்டுள்ள சிவந்த வாயினின்றும் ஜலமானது இடைவிடாமல் சுரந்து
யிற்றிற்று வீழ நின்று-நடுவே முறிந்து முறிந்து கீழே விழும்படி நின்று
கடும் சேக்கழுத்தின் மணிக்குரல் போலே – கொடிய ரிஷபத்தின் கழுத்திலே கட்டப் பட்டுள்ள மணியினுடைய ஒலி போலே
உடை மணி கண கண எனத்-தனது திருவரையில் கட்டிய மணி கண கண என்று ஒலிக்க
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –சார்ங்கம் என்னும் வில்லைக் கையிலே ஏந்திய
பிள்ளையாகிய இவன் தன்னுடைய பெரிய பாதங்கள் இரண்டினால்-இள நடையை நடக்க மாட்டானோ -நடக்க வேணும் –

——————————————–

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே யருவிகள் பகிர்ந்து அனைய
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ அணி யல்குல் புடை பெயர
மக்கள் உலகினில் பெய்தறியா மணிக் குழவி யுருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ –1-7-8-

பதவுரை

கரு–கருநிறமான
சிறு–சிறிய
பாறை–மலையினுடைய
பக்கம் மீது–பக்கத்திலே
(மேடுபள்ளமுள்ள இடங்களிற் பாய்கிற)
அருவிகள்–நீரருவிகள்
பகர்ந்து அனைய–ப்ரகாசிப்பதை ஒத்திருக்கிற
(திருவரையிற் சாத்திய)
அக்கு வடம்–சங்கு மணி வடமானது
ஏறி இழிந்து தாழ–உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும்
அணி–அழகிய
அல்குல்–நிதம்பம்
புடை–பக்கங்களிலே
பெயர–அசையவும்
உலகினில்–உலகத்திலுள்ள
மக்கள்–மனிதர்
பெய்து அறியா–பெற்றறியாத
மணி குழலி உருவி்ன்–அழகிய குழந்தை வழவத்தை யுடையவனும்
(தக்க இத்யாதி இரண்டாம் பாட்டிற் போலப் பொருள் காண்க. )

விளக்க உரை

கரு நிறத்தையுடைய திருவரையிற் சாத்திய வெண்ணிறமான சங்குமணி வடமானது, தளர்நடை நடக்கும் போது
முன் பின்னாக மாறிமாறி ப்ரகாசிப்பதானது – கரிய சிறுமலையின் பக்கத்திலே வெள்ளருவி மேடும் பள்ளமுமான
இடங்களில் ப்ரகாசிப்பதை ஒத்திருக்கும்படி. அல்குல் – தொடையிடுக்குக்கும் அரைக்கும் இடையிலுள்ள இடம்.
பாறை – இலக்கணையால் மலையை உணர்த்திற்று.
பகர்ந்தனைய – ‘பகர்ந்ததனைய‘ என்பதன் விகாரம். அன்றி வினையெச்சத் திரிபாகக் கொண்டு –
பகர்ந்தால் (அதை) அனைய என்று கொள்ளினுமாம். பக்கம் – ‘பஷம்‘ என்ற வடசொல் திரிபு.
குழ – இளமை: உரிச்சொல்; அதனை உடையது குழவியெனக் காரணக் குறி; இ-பெயர் விகுதி.

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே-கரு நிறமான சிறிய மலையினுடைய பக்கத்திலே -மேடும் பள்ளமுமான இடங்களில் பாய்கிற
பாறை -லக்ஷனை குறிப்பினால் மலையைச் சொன்னபடி
யருவிகள் பகிர்ந்து அனைய-நீர் அருவிகள் பிரகாசிப்பத்தை ஓத்திருக்கிற –
திருவரையில் சாத்தி அருளிய
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ -திருச் சங்கு மணி வடமானது உயர்ந்தும் தாழ்ந்தும் தொங்கிப் பிரகாசிக்கவும்
அணி யல்குல் புடை பெயர-அழகிய நிதம்பம் பக்கங்களில் அசையவும்
மக்கள் உலகினில் பெய்தறியா மணிக் குழவி யுருவின்-உலகத்திலுள்ள மனுசர் பெற்று அறியாத அழகிய குழந்தை வடிவை யுடையவனும்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -தகுதியான நீல மணி போலே நிறத்தை யுடையவனுமான -வஸூ தேவ புத்திரனான இவன்
மா மணி நீல ரத்னம் -கறுப்புக்கும் பெயர் –
தளர்நடை நடவானோ –

—————————————————–

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்த தோர் வேழத்தின் கரும் கன்று போல்
தெண் புழுதி யாடித் திரிவிக்ரமன் சிறு புகர் பட வியர்த்து
ஒண் போதலர் கமலச் சிறுகாலுறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ  –1-7-9-

பதவுரை

திரிவிக்கிரமன்–(தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன்
வெள் புழுதி–வெளுத்த புழுதியை
மேல் பெய்து கொண்டு–மேலே போகட்டுக் கொண்டு
அளைந்தது–அளைந்ததாகிய
ஓர் வேழத்தின் கரு கன்று போல்–ஒரு கரிய குட்டியானை போல,
தெள் புழுதி–தெளிவான புழுதியிலே
ஆடி–விளையாடி
சிறு புகர் பட–சிறிது காந்தி உண்டாக வேர்த்துப் போய்,
வியர்த்து–வேர்த்துப் போய்,
போது–உரிய காலத்திலே
அலர்–மலர்ந்த
ஒள்–அழகிய
கமலம்–தாமரைப் பூவை ஒத்த
சிறு கால்–சிறிய பாதங்கள்
உறைத்து–(ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்)
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
தண் போது கொண்ட–குளிர்ந்த புஷ்பங்களுடைய
தவிசின் மீது–மெத்தையின் மேலே
தளர்நடை நடவானோ-.

விளக்க உரை

பரந்த திருவடிகளைக் கொண்டு உலக மூன்றையுமளந்த இவன் தனது சிறிய அடிகளைக் கொண்டு
புஷ்ப மெத்தையின் மேல் காலுறுத்தாமல் மெல்ல நடக்கவேணும் என்கிறார்.
கருநிறமான கண்ணன் திருமேனியிற்படிந்த புழுதியில் வேர்வைநீர் அழகியதாய்க் காணப்படுதலால்,
‘புழுதியாடிச் சிறு புகர்பட வியர்த்து’ எனப் பாராட்டிக் கூறினார்.
உரைத்து-உறைக்க; எச்சத்திரிபு. வெண்புழுதி, தெண்புழுதி, ஒண்போது, தண்போது-பண்புத்தொகை.

திரிவிக்ரமன்-தனது மூவடியால் உலகளந்த இவன்
வெண் புழுதி மேல் பெய்து கொண்டு -வெளுத்த புழுதியை மேலே பொகட்டுக் கொண்டு
அளைந்த தோர் வேழத்தின் கரும் கன்று போல்-அலைந்ததாகிய ஒரு கரிய குட்டி யானையைப் போலே
தெண் புழுதி யாடித் சிறு புகர் பட வியர்த்து-தெளிவான புழுதியில் விளையாடி -சிறிது காந்தி யுண்டாக வேர்த்துப் போய்
ஒண் போதலர் கமலச் சிறுகாலுறைத்து -உரிய காலத்தில் மலர்ந்த அழகிய தாமரைப் பூவை ஒத்த
சிறிய பாதங்கள் ஏதேனும் ஓன்று உறுத்த -அதனால்
ஒன்றும் நோவாமே-சிறிதும் நோவாத படி
தண் போது கொண்ட தவிசின் மீதே -குளிர்ந்த புஷ்பங்களினுடைய மெத்தையின் மேலே
தளர்நடை நடவானோ  –

———————————————–

திரை நீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத்துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயரப்
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர்ச் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ –1-7-10-

பதவுரை

செம் கண் மால்–சிவந்த கண்களையும் கரு நிறத்தையுமுடைய
கேசவன்–கேசவனென்னுந் திருநாமமுடைய இவன்,
திரை நீர்–அலைகின்ற நீரையுடைய ஸமுத்திரத்தின் நடுவில்
(அசைந்து தோன்றுகிற)
சந்திரன் மண்டலம் போல்–ப்ரதிபிம்ப சந்த்ர மண்டலத்தைப் போல
தன் –தன்னுடைய
திரு நீர்–அழகிய ஒளியை யுடைய
முகத்து–திருமுகத்திலே
துலங்கு–விளங்குகின்ற
சுட்டி–சுட்டியானது
எங்கும்–எல்லா விடத்திலும்
திழ்ந்து–ப்ரகாசித்துக் கொண்டு
புடை பெயர்–இடமாகவும் வலமாகவும் அசையவும்
பெரு நீர்–சிறந்த தீர்த்தமாகிய
திரை எழு கங்கையிலும்–அலை யெறிகிற கங்கையிற் காட்டிலும்
பெரியது-அதிகமான
ஓர்–ஒப்பற்ற
தீர்த்த பலம்–தீர்த்த பலத்தை
தரும்–கொடுக்கின்ற
நீர்–ஜலத்தை உடைத்தான
சிறு சண்ணம்–சிறிய சண்ணமானது
துள்ளம் சோர்–துளி துளியாகச் சொட்டவும்
தளர்நடை நடவானோ-.

விளக்க உரை

நெற்றியில் தொங்குகின்ற சுட்டி அசையவும், குறியில் நின்றும் மூத்திரநீர் துளிதுளியாகச் சிந்தவும்
தளர்நடை நடந்து வரவேணு மென்கை. கருநிறத்தனான கண்ணனது திருநெற்றியி லசைந்துகொண்டு விளங்குஞ் சுட்டிக்கு,
கருநிறமான கடலின் நடுவில் அசைந்துகொண்டு தோன்றும் சந்த்ர ப்ரதிபிம்பம் ஏற்ற உவமையாம்.
சண்ணம்-ஆண்குறி–

செங்கண் மால் கேசவன் தன்-சிவந்த கண்களையும் கரு நிறத்தையுமுடைய கேசவன் என்னும் திரு நாமமுடைய இவன்
திரை நீர்ச் சந்திர மண்டலம் போல் -அலைகின்ற நீரையுடைய சமுத்திரத்தின் நடுவில் அசைந்து தோன்றுகிற பிரதிபிம்ப சந்திரன் போலே
திரு நீர் முகத்துலங்கு சுட்டி திகழ்ந்து -தன்னுடைய அழகிய ஒளியையுடைய திரு முகத்திலே விளங்குகிற சுட்டியானது
எங்கும் புடை பெயரப்-எல்லா இடத்திலும் பிரகாசித்துக் கொண்டு இடம் வலமாக அசையவும்
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் -சிறந்த தீர்த்தமாகிய அலை எறிகிற கங்கையில் காட்டிலும்
பெரியதோர் தீர்த்த பலம்-அதிகமான ஒப்பற்ற தீர்த்த பலத்தை கொடுக்கின்ற
தரு நீர்ச் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் -ஜலத்தை யுடைத்தான சிறிய சுண்ணமானது துளி துளியாகச் சொட்டவும்
தளர்நடை நடவானோ —

——————————————

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய வஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ வொன்னார் தளரத் தளர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன வுரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே –1-7-11-

பதவுரை

ஆயர் குலத்தினில் வந்து–இடையர் குலத்திலே வந்து
தோன்றிய-அவதரித்த
அஞ்சனம் வண்ணன்–மை போன்ற கருநிறமுடையனான கண்ணன்
தன்னை–தன்னை (க்கண்டு)
தாயர்–தாய்மார்கள்
மகிழ–மனமுகக்கவும்
ஒன்னார்–சத்ருக்கள்
தளர–வருத்தமடையவும்
தளர்நடை நடந்தனை–தளர்நடை நடந்ததை
வேயர்–வேயர் குடியிலிருப்பவரெல்லாராலும்
புகழ்–புகழப் பெற்ற
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சீரால்–சிறப்பாக
விரித்தன–விவரித்துச் சொன்ன பாசுரங்களை
உரைக்க வல்லார்–சொல்ல வல்லவர்கள்
மாயன்–ஆச்சர்யமான குணங்கள யுடையவனும்
மணி–நீல மணி போன்ற
வண்ணன்–நிறமுடையனுமான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
பணியும்–வணங்க வல்ல
மக்களை–பிள்ளைகளை
பெறுவார்கள்–அடைவார்கள்.

விளக்க உரை

‘தாயர்’ எனப் பன்மையாகக் கூறியது-பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய்
எனத் தாய்மார் ஐவராதலாலும், சிறுதாய் முதலியோரும் தாய்மாரே யாவராதலாலுமாம்.
தொட்டிற் பருவத்திலேயே பூதனை சகடாஸூரன் முதலியோர்களை முடித்ததனால், கண்ணபிரான் மெல்ல அடியிட்டு
நடக்கத் தொடங்கிய போதே ‘இனி, இவனால் நமக்கு என்ன தீங்கு நேரிடுமோ!’ என்று கம்ஸாதிகள் நடுங்கி
ஒடுங்கினராதலால் ‘ஒன்னார் தளர’ என்றாரென்க. ஒன்னார்-ஒன்றார்; (தம்மோடு மனம்) பொருந்தாதவர்; எனவே, பகைவராவர்.
பெரியாழ்வார் பிறந்தகுடி—வேயர்குடி எனப்படும்.

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய வஞ்சன வண்ணன் தன்னை-இடையர் குலத்தில் வந்து அவதரித்த
மை போன்ற கரு நிறமுடைய கண்ணன் தன்னைக் கண்டு
தாயர் மகிழ வொன்னார் தளரத் தளர் நடை நடந்ததனை-தாய்மார்கள் மனம் உகக்கவும் சத்ருக்கள்
வருத்தம் அடையவும் தளர் நடை நடந்து அருளியதை
பாராட்டுத்தாய் -ஊட்டுத் தாய் -முலைத் தாய் -கைத்தாய் -செவிலித்தாய் –சிறு தாய் -போன்றவர்கள் உண்டே
ஒன்னார் -ஒன்றார் -திரு உள்ளபடி நடக்காத சத்ருக்கள்
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன வுரைக்க வல்லார்-வேயர் குடியில் உள்ளார் எல்லாராலும்
புகழப் பெற்ற பெரியாழ்வார் சிறப்பாக விரித்து அருளிச் செய்த இப்பாசுரங்களை சொல்ல வல்லவர்கள்
சீரா விரித்தன என்றும் பாட பேதம்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே –ஆச்சர்யமான குணங்களை யுடையவனும் –
நீல மணி போன்ற நிறமுடையவனுமான
எம்பெருமானுடைய திருவடிகளை வணங்க வல்ல பிள்ளைகளை அடைவார்கள்

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: