அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -3-9–

சொன்னால் விரோதம் -பிரவேசம் –
ஒன்பதாம் திருவாய் மொழியிலே –
இப்படி தாமும் கரண க்ராமமும் கூப்பிட்ட படியைக் கண்ட ஈஸ்வரன் -லோகம் அடங்க இதர ஸ்தோத்ரம் பண்ணி அநர்த்தப்படா நிற்க –
நீர் நம்மை ஸ்தோத்ரம் பண்ணும்படி பண்ணினோமே -என்று இவருடைய பேற்றை பிரகாசிப்பிக்கக் கண்டு ஸந்துஷ்டாராய்
1-அவனுடைய ஸ்துத்யத்துவக்கு ஏகாந்தமான சவ்லப்ய அதிசயத்தையும் ‘
2-ஸூ லாபனுடைய சம்பந்த உத்கர்ஷத்தையும்
3-நித்ய ஸூரி நிர்வாஹகத்வத்தையும்
4-ஸ்துத்யதைக்கு அனுரூபமான -ஏகாந்தமான -சேஷித்வத்தையும்
5-அபேக்ஷித பல ப்ரதத்வமான உதார குண அதிசயத்தையும்
6-அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ யபதித்வத்தையும்
7-ஸ்துதி விஷயமான குண நாம பூர்த்தியையும்
8-அவனுடைய ப்ராப்ய பாவத்தையும்
9-புருஷார்த்த ப்ரதத்வத்தையும்
10-ஜகத் ஸ்ரஷ்ட்ருதவத்தையும்
அனுசந்தித்து -எவம்ப்தா விஷயத்தை ஸ்தோத்ரம் பண்ணாதே -நிஷ்பிரயோஜனமான இதர ஸ்தோத்திரங்களைப் பண்ணி அநர்த்தப் படுகிறிகோளே–என்று
லௌகிகரைக் குறித்து ஸ்வ நிஷ்டையை உபதேசித்து அருளுகிறார் –

———————————–

அவதாரிகை –
முதல் பாட்டில் -என்னை ஸ்துதிப்பைக்காகத் திருமலையிலே சந்நிதி பண்ணின உபகாரகனை ஒழிய
வேறு ஒருவரை ஸ்தோத்ரம் பண்ணேன் -என்று ஸ்வ மதத்தை அருளிச் செய்கிறார் –

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

சொன்னால் விரோதம் இது, –நீங்கள் இதர ஸ்தோத்ரம் தவிருகைக்கு உறுப்பான இந்த ஹிதம் சொன்னால் உங்கள் அபிமதத்துக்கு விரோதம் –
ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!–ஆயிருக்கிலும் உங்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே சொல்லக் கடவேன் –நீங்கள் செவி தாழ்த்துக் கேளுங்கள்
வண்டு முரல் திரு வேங்கடத்து-–வண்டுகளானவை மதுபான ப்ரீதியாலே தென்னா தென்னா என்று ஆளத்தி வைப்பாரைப் போலே சப்திக்கிற திருமலையிலே -சந்நிஹிதனாய்–
-என் ஆனை என் அப்பன், –எனக்குக் கவி பாடுகைக்கு விஷயம் போந்து -கவிக்கு பரிசிலாகத் தன்னைத் தரும் உபகாரகனாய் –
எம்பெருமான் உளனாகவே.- ப்ராப்தனான ஸ்வாமியானவன் இக் கவி பாட்டாலே தான் உளனாய் இருக்க
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்-என் நாவினுடைய சத்தைக்கு பிரயஜனமாய் -கவி பாட்டுண்கிற ஈஸ்வரனுக்கு
இனிதான கவியை -அவனுக்கு அநந்யார்ஹ சேஷ பூதனான நான் வேறு ஒருவர்க்கும் கொடுக்க சக்தன் அல்லேன் —

——————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -இந்த சவ்லப்யாதி குணங்களோடு திருக் குறுங்குடியிலே நிற்கிற என் குலா நாதனை ஒழிய
மனுஷ்யரைக் கவி பாடி பிரயஜனம் என் -என்கிறார் –

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2-

குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி –நீர் நிலங்களாலே கழனி சூழ்ந்து இடமுடைத்தாய் நன்றான திருக் குறுங்குடியிலே
மெய்ம்மையே-உளன் ஆய —பரமார்த்தமான சவ்லப் யாதி குணங்களை பிரகாசிப்பித்துக் கொண்டு நித்ய சந்நிதி பண்ணின
எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–தன்னை உளனாகவே ஒன்றாக எண்ணி- உபகாரகனான என் குல நாதனை ஒழிய –
பகவத் ஞானம் இல்லாமையாலே அசத் சமனாய் இருக்கிற தன்னை சத்தாவானாய்க் கொண்டே ஒரு வஸ்துவாக நினைத்து
தன் செல்வத்தை-வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்–தனக்கு இன்றியே இருக்கத் தன்னதாக அபிமானித்த ஷூத்ர சம்பத்தை
அத்யந்த விலக்ஷணமாக தானே அபிமானித்து இருக்கும் அதி ஷூத்ரையான இந்த மனுஷ்ய ஜாதியை கவி பாடி என்ன பிரயஜனம் உண்டு –

பரமார்த்த குண விபூதி விசிஷ்டனை ஒழிய ஆபிமாநிக சம்பத்தை யுடையாரைக் கவிபாடி பிரயோஜனம் இல்லை என்று கருத்து –

———————————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -நித்ய ஸூரி ஸேவ்யனான ப்ராப்ய பூதனை ஒழிய -உங்களுக்கு விலக்ஷணமான கவிகளைக் கொண்டு
ஷூத்ர ஸ்தோத்ரம் பண்ணினால் ஒரு நன்மையில்லை -என்கிறார் –

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்–வழியைத் தரும்-ஒரு விச்சேதம் இல்லாத படி -யாவதாத்ம பாவியான
காலம் எல்லாம் நிலை நின்று அனுபவிக்கும் படி செல்லக் கடவதாயுள்ள வழிப் பாடான கைங்கர்யத்தை தரும்
நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்–நமக்கு சேஷியான நித்ய ஸூரி சேவ்யனை ஒழிய புறம்பே போய் –
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!–அதி லோகமாம் படி மிக்க நன்மையை யுடைத்தான சீரிய கவிகளைக் கொண்டு அறிவுடையரான நீங்கள் –
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?––அறிவில்லாதாரைப் போலே அத பதிக்க நினைத்து –
ஓர் பற்றாசு இல்லாத மனுஷ்ய ஜாதியை பாடுகையாலே என்ன லாபம் யுண்டாம்

ஸ்தோத்தாக்களான உங்களுக்கும் ஸ்துத்யரானவர்களுக்கும் -ஸ்துதிக்கும் -ஒரு நன்மையில்லை என்று கருத்து –

———————————————–

அவதாரிகை –
அநந்தரம் -சர்வாதிகனானவனை ஒழிய அஸ்திரரான மநுஷ்யர்களைக் கவி பாடி என்ன பிரயோஜனம் உண்டு -என்கிறார் —

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-

புலவீர்காள்!–சப்தார்த்தங்களில் வாசி அறியும் புலவீர்காள் –
மன்னா மனிசரைப் பாடிப்-படைக்கும் பெரும்பொருள்! –என்னாவது,– எத்தனை நாளைக்குப் போதும், –நீங்கள் பாடிச் செல்லுந்தனையும்
நிலை நில்லாத மநுஷ்யர்களை கவி பாடி பெறாப் பேறாகப் படைக்கும் உங்கள் பாரிப்பாலே பெரிய அர்த்தமானது எது உண்டாம் –
உண்டானாலும் எத்தை நாளைக்கு விநியோக அர்ஹமாம்
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,–பேர் ஒலியை யுடைத்தான ரத்ன அபிஷேகத்தை யுடையனாய் பரமபத வாசிகளுக்கு
சத்தாதி ஹேது பூதனான -சர்வாதிகனை பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–தனக்கே அநந்யார்ஹமாக நினைத்து –
இதர ஸ்தோத்ர ஹேதுவான ஜென்மம் கழியும்படியும் அங்கீ கரிக்கும்

தானாகவே கொண்டு -என்று சாம்யா பத்தியைப் பண்ணிக் கொடுக்கும் -என்றுமாம் –

—————————————————————-
அவதாரிகை –
அநந்தரம் -நிஷ் ப்ரயோஜனமான இதர ஸ்தோத்ரத்தைத் தவிர்ந்து சர்வ பல ப்ரதனான மஹா உதாரனைக் கவிபாட வாருங்கோள்-என்கிறார் –

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–3-9-5-

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை-வள்ளல் புகழ்ந்து–கொள்ளலாவது ஒரு பிரயோஜனம் இன்றியே -குப்பையைக் கிளறினால் போலே
தோஷமே தோற்றும் படியான சம்பத்தையுடைய ஷூத்ர ஜாதியை மஹா உதாரையாக புகழ்ந்து
நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!–உங்கள் சத்யவாதித்தவம் ஆகிற வாக்மித்வத்தை இழக்கிற புலவீர்காள்
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் –கவி பாடுகைக்கு உள்ளுறையாகக் கொள்ளுகைக்கும் -கவிக்கு பிரயஜனம் கொள்ளுகைக்கும்
குறைவற்ற பூர்ணனாய் நாம் வேண்டியவற்றை எல்லாம் தரும் இடத்தில்
கோதுஇல் –தாரதம்யம் பார்த்தல் -பிரதியுபகாரம் பார்த்தல் கொடுத்ததை நினைத்தால் செய்யும் குற்றம் இல்லாதவனாய்
என் வள்ளல்- –இதுக்கு உதாஹரணம் என்னலாம்படி எனக்குத் தன்னை அபகரித்த மஹா உதாரனாய் –
மணிவண்ணன் தன்னைக் .-உபகாரம் இல்லையே யாகிலும் விட ஒண்ணாத படி -நீல ரத்னம் போலே ஸ்லாக்யமான வடிவையுடையவனை –
கவி சொல்ல வம்மினோ-கவி செல்லும்படி வாருங்கோள்-

——————————————

அவதாரிகை –
அநந்தரம் -நீங்கள் யாரையேனும் கவி பாடிலும் ஸ்ரீ யபதியான-சர்வ சேஷிக்கே அது சேரும் அத்தனை -என்கிறார் –

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-

வம்மின் புலவீர்!–புலவராகையாலே விசேஷஞ்ஞரான நீங்கள் -இதர ஸ்தோத்ரத்தைத் தவிர்ந்து வாருங்கோள் -தேஹ யாத்ரா சேஷமாக
நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!–உங்கள் சரீரத்தை வருந்தி கைத் தலில் செய்து உஜ்ஜீவியுங்கோள்
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;–ப்ரவாஹ நித்தியமான இந்த லோகத்தில்
ஸ்ரீ மான்களாய் இருப்பர்-இக்காலத்தில் இல்லை -ஆராய்ந்து பார்த்தோம் -இனி
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்–உங்களுடைய ஸ்லாக்கியமான கவிகளைக் கொண்டு உம் தம்முடைய ருசி அனுகுணமாக
இஷ்ட தேவதைகளை ஸ்துதித்தால்-அவர்களுக்கு நீங்கள் சொல்லுகிற குணங்கள் சித்தியாமையாலே அவர்களுக்குச் சேராதே –
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–அப்ரதிஹ பிரகாசமான தேஜஸ்ஸை யுடைத்தாய் இருக்கிற
திரு அபிஷேகத்தை யுடையனாய் எனக்கு ஸ்வாமியான ஸ்ரீயபதிக்கே சேரும் அத்தனை –

உங்களுக்கு பகவத் குண சவ்ர்யமே பலம் -சப்த அர்த்தங்கள் இரண்டும் ஸ்ரீ யபதிக்கே சேருவது என்று கருத்து –

——————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -ஸ்துத்யமான குணங்களையும் திரு நாமங்களையும் ப்ரணமாக யுடையவனை ஒழிய
வேறு ஒரு விஷயத்தை பொய்க் கவி பாட சக்தன் அல்லேன் -என்கிறார்

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7-

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,–தனக்குத் தகுதியான கொடையும் -ஆத்தாள் வந்த குண ப்ரதையும் எல்லை இறந்து இருக்குமவனாய்
ஓர் ஆயிரம்-பேரும் உடைய பிரானை அல்லால்,மற்று -அத்விதீயமாய் சஹஸ்ர அஸந்யாதமான திருநாமங்களையும் யுடைய மஹா உபகாரகனை ஒழிய வேறு
பாரில் ஓர் பற்றையை -மாரி அனைய கை,-என்று -பூமியிலே தூறு போலே நிஷ் பிரயோஜனமாய் இருபத்தொரு பதார்த்தத்தை
கை மாரி அனைய -கை வழங்கங்கள் -மேகத்தை ஒத்தன என்றும்
திண்தோள் மால்வரை ஒக்கும் என்றும் -,–திறலிய தோள்கள் பெரிய மலையை ஒக்கும் என்றும்
பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–யான்கிலேன்;–மெய் கலவாத புதுப் பொய்களை பேச– பூர்ண விஷயத்தைப் பற்றின நான் -சக்தன் அல்லேன் –

——————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -பரம ப்ராப்ய பூதனான கிருஷ்ணனைக் கவி பாடி அவனைப் பெற ஆசைப்பட்டு
இருக்கிற நான் ஷூத்ரரைக் கவி பாட வல்லேனோ -என்கிறார் –

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8-

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை–பசுமைக்கும் திரட்சிக்கும் செவ்வைக்கும்-வேய் -ஒப்பாம் இடத்தில் -அதிலும் மிகைத்து விளங்குவதான
தோளையுடைய பின்னைக்கு நித்ய அபிமதனான கிருஷ்ணனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்–ஸ்வரூப அனுபந்தியாய் -தனித் தனி அபரிச்சின்னமாய் -அஸந்கயாதமான குணங்களை
பாடி நெடும் காலம் நடந்து -போய்–என்றது காயம் கழித்து ஒரு தேச விசேஷத்தே ஏறப் போய் -என்றுமாம் –
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,–சரீரத்தைக் கழித்து -பரம ப்ராப்ய பூதனான அவனுடைய திருவடிகளிலே
ஒதுங்குகையிலே ஆசையையுடைய நான்
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–ப்ரக்ருதி வஸ்யரான மனுஷ்யரை
பகவத் ஸ்துதி யோக்யமான என் வாக்கைக் கொண்டு எத்தைச் சொல்ல வல்லேன் —

—————————————–

அவதாரிகை –
அநந்தரம் -பரம புருஷார்த்த ப்ரதனானவன் தானே விஷயமாய் இருக்க இதர ஸ்தோத்ரத்துக்கு நான் அதி க்ருதன் அல்லேன் -என்கிறார் –

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;–ப்ராப்த விஷய ஸ்தோத்ர கரணமான வாக் இந்திரியத்தைக் கொண்டு -அப்ராப்த விஷயமான மனுஷ்யரை
பாடுகைக்கு வந்த கவியானவன் அல்லேன்
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;– வேதாந்தங்களிலே மீமாம்சிக்கப் பட்ட ஆனந்தாதி குணங்களை உடைய மஹா உதாரனாய்
கவி பாடுவார் நெஞ்சு தன் வசத்திலே யாம்படி நியமித்துக் கொடுக்கும் திருவாழியை யுடைய மஹா உபகாரகன்
எனக்கே அசாதாரண விஷயமாய் உளன் -அவன் தான் –
சாய் கொண்ட இம்மையும் சாதித்து,–அதிசயித உஜ்ஜ்வல்யத்தை யுடைத்தான ஐஹிகமான அர்ச்சாவதார அனுபவத்தையும் உண்டாக்கித் தந்து
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று –நித்ய
ஸூரிகளதான பாரா விபத்தியையும் சேனை முதலியாரைப் போலே நீ ஆராய்ந்து நிர்வஹி என்று
வீடும் தரும் நின்று நின்றே.–ஸ்வ கைங்கர்ய ஜெனிதமான மோக்ஷ ஆனந்தத்தையும் க்ரமத்திலே நின்று நின்று கொடுக்கும் –

சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்-நீ கண்டு கொள் என்று வீடும் தரும் -என்று உஜ்வாலாமான ஐஹிக ஐஸ்வர்யத்தையும்
ஸ்வர்க்காதி ஸூ கத்தையும் மேஷத்தையும் தரும் -என்பாரும் உளர் –

—————————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -ஸ்துத் வர்த்தமான காரண களேபர ப்ரத்தநாள அவனுக்குக் கவியான எனக்கு வேறு ஒருவரைக் கவி பாடுகை அனுரூபம் அன்று என்கிறார் –

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

நின்று நின்று பல நாள் உய்க்கும்–காலமுள்ளதனையும் இடைவிடாதே நின்று தன் வசத்திலே சேதனனை ஆக்கும்
இவ்வுடல் நீங்கிப் போய்ச்-சென்று சென்றாகிலும் கண்டு–இஸ் சரீரத்தை விட்டுப் போய் நெடும் காலம் கழித்துச் சென்றாகிலும் –
இச் சேதனன் தன்னை அபரோக்ஷித்து
சன்மம் கழிப்பான் எண்ணி, ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –ஜென்மத்தை கழிக்கைக்காக திரு உள்ளம் பற்றி ஸ்ருஷ்ட்டி தரும்
நெஞ்சு பொருந்திப் பொருந்தி லோகத்தை ஸ்ருஷ்டித்தவனுடைய
கவி ஆயினேற்கு–என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–கவியான எனக்கு இனி காலமுள்ளதனையும் மற்று ஒருவரைக் கவி பாடுகை தகுதியோ –

————————————————

அவதாரிகை
அநந்தரம் இத்திருவாய் மொழி சொல்ல வல்லார்க்கு ஜென்மம் இல்லை என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு–பரதவ சவ்லப்யங்களுக்குத் தகுதியான குண பரத்தையை யுடையனாய் -நித்ய ஸூ ரிகளுக்கு
நிர்வாஹகானான மேன்மையோடே ஸூலெனாய் அவதரித்த கிருஷ்ணனுக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்–ஸ்தோ தாக்களாகைக்கு அனுரூபமான ஞானாதி குண ப்ரதையை யுடையராய்
அழகிய திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் –பகவத் குணாதி ப்ரதிபாதனத்துக்கு அனுரூபமான லக்ஷண ப்ரதையை யுடைத்தாய்
இருக்கிற ஆயிரம் திருவாய் மொழிக்குள்ளே
ஏற்கும் பெரும்புகழ் இவை பத்தும் -இதர ஸ்தோத்ரத்தைத் தவிர்த்து பகவத் ஸ்தோத்ரத்தை ப்ரதிபாதிக்கை யாகிற
ஸ்வரூப அனுரூபமான குண ப்ரதையை உடைத்தாய்க் கொண்டு அத்விதீயமான இவை பத்தையும் –
சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–சொல்ல வல்லார்க்கு இதர ஸ்துதி ஹேதுவான ஜென்மம் இல்லை —
இது கலித் துறை

————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: