அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -3-6-

செய்ய தாமரைக் கண்ணன் -பிரவேசம் –
ஆறாம் திருவாய் மொழியில் -கீழ் சேஷத்வ ஸாரஸ்யத்தால் பிறந்த ப்ரீதி விகாரம் உத்தேச்யம் என்று அருளிச் செய்தவர்
அந்த இனிமை இல்லாமையால் அவிகிருதரான சம்சாரிகளுக்கும் பகவச் சேஷத்வத்தை உபதேசிப்பதாக
சேஷியினுடைய அர்ச்சாவதார பர்யந்தமான சவ்லப் யத்தை உப பாதிப்பதாக நினைத்து
1-அந்த சவ்லப்யத்துக்கு ஊற்றான ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
2-ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷண அர்த்தமான அவதார கந்தத்வத்தையும்
3-அவதீர்ணனுடைய அதிசயித சேஷ்டிதத்வத்தையும்
4-ஈஸ்வர அபிமானிகளுக்கும் ஆஸ்ரயணீயனான ஸீலாதிசயத்தையும்
5-அவதார திசையிலும் அகில விபூதித்வம் தோற்றும் படியான ஆதிக்யத்தையும்
6-ஆஸ்ரித விஷயத்தில் அதிசயித வாத்சல்யத்தையும்
7-நிரவதிக போக்யதையும்
8-பற்றினாரை நழுவ விடாத பக்ஷபாதத்தையும்
9-சர்வவித பந்துவுமாய்க் கொண்டு ஆஸ்ரிதர் இட்ட வழக்கான அர்ச்சாவதார பாரதந்த்ரியத்தையும்
10-ஆஸ்ரித பரதந்த்ரனான அவன் பக்கல் தமக்குப் பிறந்த அபி நிவேசத்தையும்
அருளிச் செய்து பகவச் சேஷத்வத்தை பிரதிபாதித்து அருளுகிறார் –

——————————————————-

அவதாரிகை –
முதல் பாட்டில் அப்யய பூர்வியான ஸ்ருஷ்ட்டி அவன் இட்ட வழக்கு என்கிறார் –

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

செய்ய தாமரைக் கண்ணனாய் –சர்வ ஸ்மாத் பரத்வத்தால் வந்த ஐஸ்வர்ய ஸூசகமாய்ச் சிவந்த தாமரை போலும் கண் அழகை யுடையனாய்க் கொண்டு –
ஸம்ஹ்ருதி சமயத்திலே -அத்தா சராசர க்ராஹணாத் –என்கிறபடியே –
உலகு-ஏழும் உண்ட அவன் கண்டீர்–சகல லோகங்களையும் தனக்குள்ளே ஒடுக்கினஅவன் கிடீர்
ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–அத்விதீயமான ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மக மூர்த்தி த்ரயத்தை யுடையனாய்க் கொண்டு
வையம் வானம் மனிசர் தெய்வம்-மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்–பூமியும் -ஊர்த்வ லோகங்களும் -தத் வாசிகளான மனுஷ்யரும் தேவரும்
மற்றும்- திர்யக்குகளும் மற்றும் -ஸ்தாவரங்களும் மற்றும்- பூத பஞ்சகமும்-முற்றும் என்றது – -மஹதாதி சமஷ்டியும் என்றபடி -ஆய் –உண்டாம்படி உபாதானமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்-பட்டு இவை படைத்தான் பின்னும்-அமோகமாகையாலே செவ்விதாய் ஸ்ருஜ்ய பதார்த்தங்கள் அடையச் சூழ்வதாய்க் கொண்டு –
பிரகாசிக்கிற சங்கல்ப ரூப ஞான ஸ்வரூபனாய் ஸ்ருஷ்ட்டி அபி முகனாய்க் கொண்டு தோற்றி -யுக்தமான ஸமஸ்த பதார்த்தங்களையும்
நிமித்தமாய்க் கொண்டு ஸ்ருஷ்டித்து –பின்னும் -அதுக்கு மேலே
மொய்கொள் சோதியோடு ஆயினான் –செறிந்த தேஜோ மயமான திவ்ய தேசத்தோடு கூடியிருந்தவன்

முற்றுமாய் -என்கிற சாமா நாதி காருண்யம் –கார்ய காரண பாவத்தால்
ஞானமாய் -என்கிறவிடம் -குண குணி பாவத்தால்
மூவர் -என்று ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களைச் சொல்லவுமாம் –

————————————-

அவதாரிகை –
அநந்தரம் -ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷண அர்த்தமாய் அவதார கந்தமான ஷீரார்ணவ ஸாயி ஆஸ்ரயணீயன் -என்கிறார் –

மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை
எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ.–3-6-2-

மூவர் ஆகிய மூர்த்தியை –ச ப்ரஹ்மா ச சிவஸ் ஸேந்த்ர-என்கிறபடியே ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களும் தான் என்னலாம் படி அவர்களுக்கு சரீரியாய் இருப்பானாய் —
சரீர பூதராய்
முதல்–மூவர்க்கும் முதல்வன் தன்னைச்–லோக பிரதானரான அவர்கள் மூவர்க்கும் காரண பூதனாய் –
சாவம் உள்ளன நீக்குவானைத்–அவர்களுக்கு குரு பாதகாதி சாபங்கள் உள்ளவற்றை போக்குமவனாய் –
பின்பு கூப்பிட்ட குரல் கேட்க்கும்படி
தடங் கடற் கிடந்தான் தன்னைத்–இடமுடைத்தான ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளி
தேவ தேவனைத் தென்னிலங்கை-எரி எழச்செற்ற வில்லியைப்–ராவண வதார்த்திகளான தேவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய்க் கொண்டு அவதரித்து –
லங்கையில் செல்லப் பெறாத அக்னி தலை எடுக்கும் படி சத்ரு நிரசனம் பண்ணின வில்லை யுடையனாம்
பாவ நாசனைப் பங்கயத் தடங்-கண்ணனைப் பரவுமினோ.– சேதுவில் வராதா நாதி முகத்தாலே
பாப விநாசகனான புண்டரீகாக்ஷனை ஸ்தோத்ர முகத்தாலே ஆஸ்ரயிங்கோள் –

——————————————-

அவதாரிகை –
அநந்தரம் -அந்த ஷீரார்ணவ ஸாயியினுடைய ராம அவதாரத்தில் காட்டில் ஆஸ்ரித அர்த்த ப்ரவ்ருத்திகளையுடைய
கிருஷ்ண அவதார சவ்லப் யத்தை அனுசந்தித்து -அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அம
ருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-

பரவி வானவர் ஏத்த நின்ற–பூ பார நிரகரண அர்த்தமாக -குண கணங்களைப் பரக்கச் சொல்லி தேவர்கள் ஸ்தோத்ரம் பண்ண –
அவர்களுக்கு சந்நிதி பண்ணி நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்–பாரம்யத்தை யுடையனாய் -அவதீர்ண தசையிலே-தேவ தேவேச என்னும்படியான நிரவதிக ஜ்யோதிஸ்ஸை யுடையனாய் –
அவதார சவ்ந்தைர்யத்திலே அகப்பட்ட கோப கன்யகைகளுக்கு
குரவை கோத்த குழகனை –திருக் குரவை முகத்தாலே இஷ்ட விநியோக அர்ஹமாம் படி பவ்யனாய்
மணி-வண்ணனைக் -மாணிக்கம் போலே முடிந்து ஆளலாம் படி ஸூலபமான வடிவை யுடையனாய் –
பெண்களே அன்றியே ஊராக அனுபவிக்கும் படி
குடக்கூத்தனை–குடக் கூத்தாடினவனாய் –
இப்படி ஆஸ்ரித கார்யம் செய்க்கைக்காக
அரவம் ஏறி அலைகடல் அமருந் துயில் கொண்ட அண்ணலை–திருவனந்த ஆழ்வான் மேலே ஏறி தன் சந்நிதியாலே கொந்தளித்து
அலை எறிகிற-கடலிலே -ரக்ஷண சிந்தையிலே பொருந்தின நித்திரையை ஸ்வீகரித்த ஸ்வாமியை
இரவும் நன் பகலும் விடாது என்றும்–ஏத்துதல் மனம் வைம்மினோ.–ஸ்தோத்ர உபயோகத்தாலே நன்றான அஹோ ராத்ர விபாகம் இன்றியே
ஓவாதே என்றும் ஸ்தோத்ரம் பண்ணுகையிலே நெஞ்சை வையுங்கோள் —

விஷய வைலக்ஷண்யத்தாலே இது தானே கொண்டு முழுகும் என்று கருத்து —

——————————————–

அவதாரிகை —
அநந்தரம் -ஈஸ்வர அபிமானிகளுக்கும் ஆஸ்ரயிக்கலாம் படியான ஷீலாதிசயத்தை யுடையவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை–உங்கள் நெஞ்சிலே வையுங்கோள் என்று நான் சொல்லுகிற
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவனுடைய சீரிதான சீலவத்தையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அதுநிற்க; — ப்ரவணரான எம் போல்வார் சொல்லுவது என் –அது கிடைக்க –
நாடொறும் வானவர்-தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்–தனித தனியே பதஸ்தரான வானவர் தங்களையும் –
தன்னளவிலே ஆளும்படியான இந்த்ரனும்-சர்வதோ முகமான ஸ்ருஷ்ட் யுபதேசாதிகளைப் பண்ணும் ப்ரஹ்மாவும் –
ஜடா மகுடதாத்வத்தால் வந்த தபோ மஹாத்ம்யத்தாலே லோகத்துக்கு ஈஸ்வரனான ருத்ரனும்
செம்மையால் அவன் பாத பங்கயம்-சிந்தித்து ஏத்தித் திரிவரே.–தங்கள் துரபிமானத்தால் வந்த அடைவுக்கேட்டை விட்டு
சேஷ சேஷி பாவத்தால் வந்த ஆர்ஜவத்தாலே -சேஷியான அவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை
நாள்தோறும் சிந்தித்து ஸ்தோத்ரம் பண்ணி இது தானே யாத்திரையாக வர்த்தியா நிற்பர் –

ஆதலால் அவனை ஆஸ்ரயிங்கோள் என்று கருத்து –

—————————————————-

அவதாரிகை –
அநந்தரம் -அவனுடைய அவதாரம் அகில விபூதியோடும் அவிநா பூதம் -என்கிறார் –

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-

கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன்-ஸ்யாமளமான வடிவை யுடையவனாய் -அதுக்குப் பரபாகமாய்ச் சிவந்த தாமரை போன்ற கண்களை யுடையனாய்
விண்ணோர் இறை-நித்ய ஸூரிகளுக்கு நித்ய அனுபாவ்யமான மேன்மையை யுடையனாய்
சுரியும் பல் கருங்குறிஞ்சி –சுருண்டு -வெடித்து அலகலகாய்-கருகின குழலை யுடையனாய்
எங்கள் சுடர் முடி யண்ணல் –எண்களையும் அடிமை கொள்ளும் உஜ்ஜ்வல்யத்தை யுடைய திரு அபிஷேகத்தை யுடையனான ஸ்வாமியாயுள்ள
கண்ணன் தோற்றமே -கிருஷ்ணனுடைய ஆவிர்பாவமானது –
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்—சதா கதியாயுள்ள வாயுவோடே கூட -விஸ்தீர்ணமான ஆகாசம் –
கடினையான பூமி – கரை கடவாது கிடந்த கடல்
எரியும் தீயோடு –ஊர்த்வ ஜ்வலநமான அக்னியோடே கூட
வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி அந்தரகதமான
இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்–சந்த்ர ஆதித்ய ப்ரமுகமான தேவதா வர்க்கம் –மற்றும் என்று மனுஷ்யர் –
மற்றும் என்று திர்யக்குகள் -முற்றுமாய் -என்று ஸ்தாவரமான முற்றுமாய் இருக்கும்

முற்றுமாய் -என்று சாமாநாதி கரண்யம் -விஸ்வ ரூபாத்யாய க்ரமத்திலே கார்ய தாரகத்வாதி நிபந்தமான சரீராத்மா பாவ ப்ரயுக்தம் –
அவனை –ஏத்துதல் மனம் வைம்மின் -3-6-3–என்று அந்வயம் –

——————————–

அவதாரிகை –
அநந்தரம் -ஆஸ்ரித விஷயத்தில் அனவதிக வாத்சல்யத்தை யுடையவனை ஒழிய -எனக்கு
சர்வ காலமும் சர்வ பிரகார உத்தேச்யராய் இருப்பார் வேறு ஒருவரை உடையேன் அல்லேன் -என்கிறார் –

தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6-

அவை-தோற்றக் கேடு-இல்லவன் –இதர சஜாதீயமான உத்பத்தி விநாசங்கள் இல்லாதவனாய் –
உடையான்–கார்ய காலங்களிலே ஆஸ்ரித அர்த்தமான ஆவிர்ப்பவாதி ரோபங்களை உடையனாக
அவன் ஒரு மூர்த்தியாய்ச்–பிராமண ப்ரசித்தனானவன் -லோகத்தில் நடையாடாத அத்விதீயமான ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தியாய்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற –ஹிரண்ய விஷயத்தில் சீற்றத்தோடே -ஸ்வ விஷயத்தில் அருளை பெற்ற
ப்ரஹ்லாதனானவன் தன் திருவடிகளின் கீழே ஒதுங்கும் படி அவனுக்கு ஸூலபனாய் நின்ற
செங்கண்மால்- சிவந்த கண்களையும் –வாத்சல்யத்தையும் யுடையவனாய்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற –கந்த ரூப ரஸ சப்த ஸ்பர்சங்களை யுடைத்தான வஸ்துக்களுக்கு நியாந்தாவாய்க் கொண்டு நின்று
எம்வானவர்-ஏற்றையே அன்றி –எங்களுக்கு ஸூரிகளை அனுபவிப்பிக்கும் மென்மையோடே ஓக்க அனுபாவ்யமானவனையே ஒழிய
மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–நான் சர்வ காலத்திலும் வேறு ஒருவரை உத்தேச்யமாக உடையேன் அல்லேன்

ஆதலால் -தொழுமின் -என்று மேலே அந்வயம்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் -என்று சிஸூபாலனாகவும் சொல்லுவர் –

————————————————-

அவதாரிகை –
அநந்தரம் -இப்படி நிரதிசய போக்யனாய்க் கொண்டு ஸூலபனானவனை ஆஸ்ரயியுங்கோள -என்கிறார்

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7-

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்–சர்வ அவஸ்தையிலும் என் ஆத்மாவுக்கு நிரதிசய போக்ய பூதனாய் –
என்னுடைய ஸ்வரூபத்தோடே செறிய-
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை–கலந்து அத்தாலே -பிரகாசித்தமான தேஜஸ்ஸை யுடையனாய் –
என்னோடு கலக்கைக்கு அடியான வடிவு அழகையும் சேஷ்டிதத்தையும் யுடையனாய்
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்–புஜிக்கும் கண்ணால் சேர்ந்த கனி போலே நிரதிசய போக்யனானவனை
தொழுமின் தூய மனத்தராய்;–ப்ரயோஜனாந்தரத்தாலே நெஞ்சை தூஷியாதே அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயியுங்கோள –
இறையும் நில்லா துயரங்களே.––அனுபவ பிரதிபந்தகமான துரிதங்கள் ஏக தேசமும் நில்லாது –

———————————————-

அவதாரிகை –
அநந்தரம் -ஆஸ்ரிதரை நழுவ விடாத சக்ரவர்த்தி திருமகனை ஒழிய வேறு தஞ்சம் இல்லை -என்கிறார்

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-

துயரமே தரு துன்ப – –நிஷ்க்ருஷ்ட பரிதாபத்தையே தரக் கடவதான துக்கத்துக்கும் –
இன்ப –துக்க சாத்யத்வ துக்க மிஸ்ரத்வ-துக்கோ தர்க்கத்வ விசிஷ்டம் ஆகையாலே நிஷ்க்ருஷ்ட பரிதாப கரமான ஸூகத்துக்கும்
வினைகளாய்- ஹேது வான பாப ரூபமாயும் புண்ய ரூபமாயும் உள்ள கர்மங்களுக்கு நிர்வாஹகனாய்
அவை அல்லனாய்–அவற்றுக்கு தான் வச்யன் அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் –விஸ்வத ப்ருஷ்டே ஷூ ஸர்வத ப்ருஷ்டே ஷூ -என்கிற உயர்த்தியை யுடைத்தாய் –
நித்தியமாய் -அத்விதீயமான தேஜோ மய திவ்ய தேஹத்தை யுடையனாய்
உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை–கர்ம வஸ்யமான சகல லோகங்களுக்கும் பிரளய ஆபத்து வந்தால் உண்டு -உமிழ்ந்து ரக்ஷிக்குமவனாய்
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை –மோஹிக்கும் படி பிராண அபஹாரம் பண்ணும் யமபடர்க்கு மீட்க அரிய நஞ்சாய்க் கொண்டு
அச்சுதன் தனைத்–ஆஸ்ரிதரை நழுவ விடாத ஸ்வ பாவனான
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–சக்கரவர்த்தித் திரு மகனை ஒழிய மற்றொரு பகவத் வ்யக்தியும் அகப்பட தஞ்சமாக உடையேன் அல்லேன்
தஞ்சம்-ஆபத்துக்கு உறு துணை –

———————————————-

அவதாரிகை –
அநந்தரம் -கீழ் யுக்தமான பரத்வமும் அவதாரங்களும் அஸ்மதாதிகளுக்கு நிலம் அன்று என்று இறாயாதே -பிற்பட்டாருக்கும் ஆஸ்ரயிக்கலாம் படி
ஸூலபமுமாய் -சர்வவித்த பந்துவுமான அர்ச்சாவதாரத்தை சம்சய ரஹிரராய்க் கொண்டு ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு -ஓர் அவஸ்தையில் பொகட்டுப் போம் தாயும் தந்தையும் அன்றியே இவன் விடும் அளவிலும் தான் விடாதே –
தஞ்சமாய் -ஹித பரத்வத்தாலும் ப்ரிய பரதத்தாலும் தந்தையும் தாயுமாய் -அவர்களோடே கூட
தானுமாய் -தனக்கு விநாசகரன் அன்றித் தஞ்சமாய்த் தனக்கு நன்மையைப் பார்க்கும் தானுமாய்
அவை அல்லனாய்-அவ்வளவு அல்லாத -சர்வவித்த பந்துவுமாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை–அனுபவ சங்கோச ரஹிதரான நித்ய ஸூரி ஸமூஹத்துக்கு-சத்தாதி ஹேது பூதனாய் –
ப்ரஹ்மாதி மூர்த்தி த்ரயத்திலும் வைத்துக் கொண்டு ப்ரதாநனாவனைப் பற்ற
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் -லௌகிகரான நீங்கள் மேன்மையைக் கண்டு கலங்கி அபரிச்சின்ன மஹிமனானவன் -அவன்
இவன் என்று கூழேன்மின்;–நாம் நினைத்தது வடிவானவன் இவன் -என்கிற உத்கர்ஷ அபகர்ஷ புத்தியால் –
இவன் ஆஸ்ரயணீயனாகக் கூடுமோ கூடாதோ என்று சம்சயியாதே
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–நெஞ்சால் நினைத்து உகந்து அருளுவிக்கப் பட்டவன் யாவன் ஒருவன் அவன்
கடல் போலே அளவிறந்த ஸ்வபாவத்தை யுடைய சர்வேஸ்வரன் ஆகும்

தாமர்ச்சயேத் –என்கிற கணக்கிலே ஆஸ்ரயணீயமான இந்த விக்ரஹத்துக்குள்ளே தாமேவ ப்ரஹ்ம ரூபிணீம் என்று ப்ராப்ய விக்ரஹமும் அந்தர்பூதம் என்று கருத்து
கூழ்ப்பு -சம்சயம்

———————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -இப்படி ஆஸ்ரித பராதீ நதைக்குச் சிரமம் செய்த கிருஷ்ண வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்து –
உபதேச அநந்தரம் தாம் அனுபவிக்க ஆசைப்படுகிறார் –

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-

விண்ணவர் கருமாணிக்கம் –பரமபத வாசிகளுக்கு நீல ரத்னம் பிளே அவிகாராகாரனாய்க் கண்டு போக்யனாய்
லீலா விபூதி நிர்வஹணார்த்தமாக
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர்–ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசித பானங்களை யுடையனாய் -ஜாதி ப்ரயுக்தமான மென்மை-குளிர்த்தி -நாற்றங்காலை யுடைய
அநந்தனாகிற அணையின் மேலே -பர பாகத்தால் வந்த தேஜஸ்ஸாலே சர்வாதிகன் என்று தோன்றும்படியான
பேர் ஒளியை யுடையனாய் -அபரிச்சின்ன மஹாத்ம்யத்தை யுடையனாய்
கடல் வண்ணன் கண்ணன்-கடல் போலே அளவிறந்த குணங்களை யுடையனாய் ஸ்ரமஹரமான வடிவையுடைய கிருஷ்ணன்
எனது ஆர்உயிர்-எனக்கு தன்னை ஒழியச் செல்லாதபடி தாரகனாய்க் கண்டு
பண்டு நூற்றுவர்-அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி –
முற் காலத்திலேயே துர்யோத நாதிகள் நூற்றுவரதாய தன் பக்கலிலே தீங்கு நினைத்து வருகிற படையானது நசிக்கும் படியாக
பாண்டவர்கள் ஐவருக்கும் -சர்வ பிரகார ரக்ஷகனாய்
வெஞ்சமத்து அன்று தேர் தடவிய -வெவ்விதான ஸமரத்திலே சத்ருக்கள் மேலிட்டு வந்த அன்று சாரதியாய் நின்று தேரை நடத்தின
பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?––சீலாதிக்கனுடைய ஸூஸ்விமான வெற்றி வீரக் கழல் செறிந்த
திருவடிகளை கண்கள் தம் ஆசை தீரக் காண்பது என்றோ –

————————————————-

அவதாரிகை –
அநந்தரம் -இத்திருவாய் மொழிக்குப் பலமாக பகவத் பக்தி லாபத்தை அருளிச் செய்கிறார் –

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்–கண்கள் அபரோஷிக்கைக்கு அரியனாய் -நெஞ்சுக்கு விஷத்தை அனுபவ விஷய பூதனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்–ப்ருத்வீ பிரதானமான கத்தில் பிராணிகளுக்கு எல்லாம்
அர்ச்சாவதார முகத்தாலே உபகரித்துக் கண்டு ஸூரிகளுக்கு கொடுக்கும் அனுபவத்தைப் பண்ணுவிக்கும் ஸ்வாமியானவனை
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்–வண்டுகள் ஒலியாலே பண் விஞ்சின சோலையை
யுடைத்தான திருவழுதி நாட்டுக்கு நிர்வாஹகராய் -திருநகரிக்கு ஸ்வாமியான ஆழ்வார் அருளிச் செய்த
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால்–பண்ணோடு கூடின ஆயிரத்தில் அர்ச்சாவதார சவ்லப்ய ப்ரகாசகமான இப்பத்தாலே
பத்தராகக் கூடும் பயிலுமினே.–ச மஹாத்மா ஸூ துர்லப-என்னும்படி பெறுதற்கு அரிய பக்தியுடையர் ஆகை ஸித்திக்கும்-
இத்திருவாய் மொழியை அப்யசியுங்கோள் –

இது எழு சீர் ஆசிரிய விருத்தம் –

————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: