மொய்ம் மாம் பூம் பொழில் — பிரவேசம் –
அஞ்சாம் திருவாய் மொழியில் –கீழ்ச் சொன்ன பகவத் பிரகார தயா சேஷத்வத்தில் தமக்குப் பிறந்த ரசாதிசயத்தாலே அத்யந்த ஹ்ருஷ்டராய்
1-பிரதிசம்பந்தியான சேஷியினுடைய ஆபந் நிவாரகத்வத்தையும் –
2-அஸூரா நிராசன சாமர்த்யத்தையும்
3-ஆர்த்த சம்ரக்ஷணத்தையும்
4-அபிமத விரோதி நிவர்த்தகத்வத்தையும்
5-அவதார ப்ரயோஜனத்தையும்
6-அதிசயித போக்யதையையும்
7-ஆஸ்ரித பக்ஷபாதத்தையும்
8-அர்ச்சாவதார சவ்லப் யத்தையும்
9-உபய விபூதி நாதத்வத்தையும்
10-விலக்ஷண விக்ரஹ யோகத்தையும் —
அனுசந்தித்து -ப்ரீதி ப்ரகரஷத்தாலே சம்ப்ராந்த ராகாதாரை நிந்தித்தும்– உகந்து ஆடுவது பாடுவதாவாரை உகந்தும்–
இந்த சேஷத்வ சாரஸ்யத்தை உபபாதிக்கிறார்
————————————–
அவதாரிகை –
முதல் பாட்டில் -ஆபந்நமான ஆனைக்கு உதவினைப்படியை அனுசந்தித்து ஹர்ஷ விகாரம் பிறவாத அங்கத்தை
யுடையரால் என்ன பிரயோஜனம் யுண்டு -என்று லௌகிகரைப் பார்த்து அருளிச் செய்கிறார் –
மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-
மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை–செறிந்து உயர்ந்து பூத்த பொழில்களை யுடைத்தான பொய்கையிலே
முதலைச் சிறைப்பட்டு நின்ற–முதலையாலே சிறைப்பட்டு -கரையேற மாட்டாமல் நிஸ் சேஷ்டமாய் நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த–ஆனைக்கு அதின் கையிலே புஷ்பத்தைச் செவ்வி குலையாமல் அலங்கரிக்கை யாகிற அருளைப் பண்ணினவனாய்
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்–அது தன் ஆர்த்தி தீரக் கண்டு -களிக்கும்படியாய்-உகக்கும்படியாய் -ஸ்ரமஹரமாய்
காளமேக நிபமான வடிவையும் உள்ளே இழிந்து எடுத்துக் கரை ஏற்றும்படியான சவ்லப் யத்தையும்
எம்மானைச் சொல்லிப் பாடி- எழுந்தும்–இரண்டுக்கும் அடியான உறவையும் யுடையவனை வாயாலே பேசி– உகப்பாலே பாடி –இருந்த இடத்தில் இராதே —
பறந்தும் துள்ளாதார்-தம்மால் கருமம் என்? –தரையில் கால் பாவாதபடி பறந்து ச சம்ப்ரம ந்ருத்தம் பண்ணாதாருடைய ஸத்பாவத்தால்-என்ன கார்யம் யுண்டு
தண் கடல் வட்டத்து உள்ளீரே!–சொல்லீர்,-குளிர்ந்த கடலால் சூழப் பட்ட பூமியிலே பகவத் அனுபவ அர்த்தமாக யுளரான பீன்கள் சொல்லுங்கோள் –
இங்கு கைம்மா -என்று ஆனையைச் சொல்லிற்று -துதிக்கை ஒழிய அழுந்தின படியை நினைத்து –
—————————————————-
அவதாரிகை –
அநந்தரம் -விபூதியை அழிக்கும் ஆஸூர ப்ரக்ருதிகளை நிரசிக்கும் சாமர்த்தியத்தை அனுசந்தித்து
விக்ருதாராகாதவர்கள் சம்சாரத்தில் மஹா பாபம் மேலிடப் பிறந்தவர்கள் என்கிறார் –
தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.–3-5-2-
தண் கடல் வட்டத்து உள்ளாரைத்–குளிர்த்தியை குணமாக யுடைய கடல் சூழ்ந்த பூமியில் உண்டானவர்களை
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்–தங்கள் சரீர போஷணமே பிரயோஜனமாக கொன்று ஜீவிப்பாராய்
இந்த பாதகத்வத்துக்குக் கிட்ட
திண் கழற்கால் அசுரர்க்குத்–திண்ணிய வீரக் கழலை காலிலே யுடையரான அஸூரர்க்கு
தீங்கு இழைக்கும் திருமாலைப்-வி நாசமாகிற தீமையை நிரூபித்து -அத்தாலே-பிராட்டி உகப்புக்கு விஷயமானவனை
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்தும் –உழலாதார்-பெண்கள் மேலாம் படி பாடி -ஆகாசத்தே கிளம்பி ஆடி -எங்கும் திரியாதார்
மண் கொள் உலகிற்–வல்வினை மோத மலைந்தே.-பிறப்பார்–மண் மிஞ்சின லோகத்தில் கழிக்க வரிய மஹா பாபங்கள் மேலிட்டு
தரையோடு எற்றும் படி பிறக்குமவர்கள்
தடிதல்–சொல்லுதல் –
—————————————————
அவதாரிகை –
அநந்தரம் -ஆர்த்தங்களான கோக்களை ரசித்த படியை அனுசந்தித்து சம்ப்ராந்த ராகாதார் நரக வாசிகளாய் க்லேசிப்பர் -என்கிறார்
மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்
தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3-
மலையை எடுத்துக் கல் மாரி-காத்துப் பசு நிரை தன்னைத்-தொலைவு தவிர்த்த பிரானைச்–கோவர்த்தனத்தை எடுத்து ஆராதன பங்கம் அடியாக
இந்த்ரனால் வந்த கல் மாரியை தொலைந்து அபேக்ஷிக்கவும் அறியாத பசுத்திரளை விநாசம் அணுகாதபடி நீக்கின உபகாரகனை
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்-தலையினொடு ஆதனம் தட்டத்-தடு குட்டமாய்ப் பறவாதார்–பலகாலும் சொல்லி -சர்வ காலமும் -ஓவாதே நின்று –
தரையோடு தலை தட்டும்படியாக கீழது மேலாய் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்-கிடந்து உழக்கின்ற வம்பரே.– அநேக துக்கங்களை யுடைத்தான மஹா நரகத்திலே கரை ஏறாதபடி
அழுந்தி கிடந்தது க்லேசிக்கிற புதுமை மாறாதவர் –
தொலைவு -நாசம்–துலைவு என்றுமாம் / ஆதனம் -நிலம் /தடு கூட்டம் -மேலேதாகை / வம்பர் -புதியராகை / –
—————————————————–
அவதாரிகை –
அநந்தரம் -அபிமத விரோதி நிவ்ருத்தியால் வந்த பிரணயித்வத்திலே விக்ருதர் ஆகாதார் ஜென்மத்தாலே பிரயோஜனம் என் -என்கிறார் –
வம்பு அவிழ் கோதை பொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்க ளிடையே?–3-5-4-
வம்பு அவிழ் கோதை பொருட்டா-மால் விடை ஏழும் அடர்த்த–செவ்வியை யுடைத்தாய் மலர்ந்த மாலையை யுடையளான நப்பின்னைப் பிராட்டியைக்
கிட்டுகை யாகிற புருஷார்த்தம் ஹேதுவாக மிகவும் பெரியதான எருது ஏழையும் நெரித்துக் கொன்ற அத்தாலே
செம் பவளத்திரள் வாயன்-சிரீதரன் தொல் புகழ் பாடிக்–சிவந்த பவளம் போலே திரண்ட அதரத்தின் ஸ்புரத்தையை யுடையனாய்க் கொண்டு —
வீர ஸ்ரீ யோடே நின்ற கிருஷ்ணனுடைய ஸ்வா பாவிகமான குணத்தை பாடி
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்-கோகு உகட்டு உண்டு உழலாதார்–தலை கீழாகக் கூத்தாடி அக்ரமமான ஆரவாரத்தை செய்து திரியாதார்
தம் பிறப்பால் பயன் என்னே-சாது சனங்க ளிடையே?–-தங்களுடைய ஜென்மத்தால் சாத்விக சங்கத்தின் நடுவே என்ன பிரயோஜனம் உண்டு
கோகு கட்டுண்கை –ஆரவாரம் கொட்டுகை / கோகு கொட்டு என்றும்- பாடம் –
———————————————————-
அவதாரிகை –
அநந்தரம் -ஆஸ்ரித விரோதி நிராசன அர்த்தமாகிற அவதாரத்துக்கு ஈடுபடாதார் என்ன ஜபாதிகள் பண்ணுவது -என்கிறார் –
சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?–3-5-5-
சாது சனத்தை நலியும்-கஞ்சனைச் சாதிப்பதற்கு–சாத்விக ஜனமான தேவகீ வஸூ தேவாதிகளை நலியும் கம்சனை நியமிக்கைக்காக –
ஆதி அம் சோதி உருவை-அங்கு வைத்து இங்குப் பிறந்த–பிரதானமாய் -அப்ராக்ருதமான திவ்ய தேஜஸ்ஸை யுடைய
விக்ரஹத்தை பரம பதத்தில் வைத்த கணக்கிலே இவ்விடத்தில் வைத்துக் கொண்டு பிறந்தவனாய்
வேத முதல்வனைப் பாடி-வீதிகள் தோறும் துள்ளாதார்–அஜாயமான -இத்யாதியாலே வேத ப்ரதிபாத்யமான
அவதார வைலக்ஷண்யத்தை யுடையனான பிரதான பூதனை -இவ் வைலஷண்யத்தைப் பாடி எல்லா வீதியிலும் ஆடாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா-என் சவிப்பார் மனிசரே?– சாஸ்த்ர அப்யாஸ யுக்தரான ஞானாதிகர் சந்நிதியிலே மனுஷ்யரைப் போலே என்ன ஜபம் பண்ணுவது –
மனுஷ்யரும் அல்லர் –ஜபமும் நிரர்த்தகம் -என்று கருத்து –
——————————————————
அவதாரிகை –
அநந்தரம் அவதாரத்தில் அவதார கணிதத்திலும் உண்டான போக்யதையை அறிந்து விக்ருதரானவர்களை சர்வஞ்ஞர்-என்கிறார்
மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6-
மனிசரும் மற்றும் முற்றும் ஆய்–ராம கிருஷ்ணாதி ரூபேணவும்-உபேந்த்ராதி ரூபேணவும்-மத்ஸ்ய கூர்மாதி ரூபேணவும் -இப்படி
மனுஷ்யரும் –மற்ற தேவ ஜாதியும் -அல்லாத திர்யக் ஜாதியும் எல்லாமாய்க் கொண்டு
மாயப் பிறவி பிறந்த-தனியன் பிறப்பிலி தன்னைத்–ஆச்சர்யமான அவதாரங்களைப் பண்ணி -சஜாதீயனாய் இருக்கச் செய்தே
அத்யந்த வ்யாவ்ருத்தனான அத்விதீயனாய் -இந்த வ்யாவ்ருத்திக்கு ஹேதுவான கர்மாதீன ஜென்ம ராஹித்யத்தை யுடையனாய் -அவதார அர்த்தமாக
தடங்கடல் சேர்ந்த பிரானைக்–இடமுடைத்தான-ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளும் உபகாரகனாய்
கனியைக் -கரும்பின் இன் சாற்றைக்-கட்டியைத் தேனை –அமுதை -கண்டபோதே நுகர வேண்டும் கனியை -கோதற்ற இனிய கருப்பஞ்சாறும் –
சர்வதோமுகமான ரசத்தை யுடைய அதின் கட்டியும் -சர்வ ரஸ சமவாயமான தேனும் -போக்தாவை நித்யனாக்கும் அம்ருதமும் போலே போக்ய பூதனானவனை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்-முழுது உணர் நீர்மையினாரே.–அவதாரத்தில் நிகர்ஷ புத்தியாகிற த்வேஷம் –இன்றியே அவதார ப்ரயுக்த
சீல சவலபி யாதிகளை ஸ்தோத்ரம் பண்ணி -அந்த ப்ரீதியாலே ச சம்ப்ரம ந்ருத்தம் பண்ணுவார் -சகல சாஸ்திரங்களையும் அறிந்த ஸ்வ பாவத்தை யுடையவர்கள்
கனியை -என்று தொடக்கி தேன் என்னும் அளவும் -போஜ்யமாயும் பேயமாயும் காத்யமாயும் லேஹ்யமாயும் உள்ள சதுர்வித போஜ்யத்தையும் சொல்லிற்று ஆகவுமாம் –
—————————————————————–
அவதாரிகை –
அநந்தரம் ஆஸ்ரித பக்ஷபாதத்துக்கு ஈடுபடாதார் பாகவதருக்கு எதுக்கு உறுப்பு -என்கிறார்
நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய் வாரே!–3-5-7-
நீர்மை இல் நூற்றுவர் வீய–பந்துக்களோடே புஜிக்க வேணும் என்கிற நீர்மை ல்லாத துரியோ நாத்திகள் நூற்றுவரும் நசிக்கும் படி
ஐவர்க்கு அருள்செய்து நின்று–பாண்டவர்கள் ஐவருக்கும் நிரவதிக கிருபையை பண்ணி -கிருஷ்ண ஆஸ்ரயா-கிருஷ்ண பலா கிருஷ்ண நாதஸ் ச பாண்டவர் –
என்னும்படி அவர்களுக்கு சர்வ வித பந்துவுமாய் நின்று
பார் மல்கு சேனை அவித்த–பூமி நிரம்பும்படி விஞ்சின சேனையை -விளக்கு அவித்தால் போலே நசிப்பித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி–நிரவதிக உஜ்ஜ்வல்ய யுக்தமான வடிவு அழகை யுடையவனை இக்குண சவ்ந்தர்யா வித்தராய்க் கொண்டு நினைந்து -பிரேம பரவசராய் ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி-நெஞ்சம் குழைந்து நையாதே–ஆனந்த அஸ்ரு பூரணமான கண்களை யுடையராய் நினைத்த நெஞ்சு
கட்டுக் குழைந்து ரோமாஞ்சா திகளாலே சிதில சரீரரகாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்-உத்தமர்கட்கு என் செய் வாரே!––மாம்சோத்தரமாய்-பிடரியில் பிசல் பருக்கும் படி உடம்பை வளர்ப்பார் –
ஞானாதிகராய் -உத்தமரான பாகவதர்களுக்கு எது செய்கைக்கு உறுப்பாவார் –
அநுப யுக்த ஸ்வ பார் -என்று கருத்து –
———————————————–
அவதாரிகை –
அநந்தரம் -திருமலையிலே அர்ச்சாவதாரமாய் ஸூலபனான சர்வேஸ்வரனுடைய நீர்மைக்கு ஈடுபட்ட
ப்ரவ்ருத்திகளை யுடையவர்கள் ஸூரி களாலே ஆதரிக்கப் படுவார்கள் -என்கிறார் –
வார் புனல் அம் தண் அருவி
வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே.–3-5-8-
வார் புனல் அம் தண் அருவி-வட திரு வேங்கடத்து எந்தை–வீழா நிற்கிற புனலை யுடைத்தாய் தர்ச நீயமாய் குளிர்ந்த
அருவிகளையுடைய தமிழுக்கு வட எல்லையான பெரிய திருமலையில் நிற்கிற ஸ்வாமியுடைய
பேர் பல சொல்லிப் பிதற்றிப்–பித்தர் என்றே பிறர் கூற–ஸ்வரூப ரூப குண விபூதி விஷயமான திரு நாமங்களை பலவும் சொல்லி –
அடைவு கெடப் பிதற்றி -அத்தாலே -பகவத் ப்ரேமம் இல்லாதவர் -அந்நியர் -பித்தர் என்று சொல்லும்படியாக
ஊர் பல புக்கும் புகாதும்–உலோகர் சிரிக்க நின்று ஆடி–மனுஷ்யர் நடையாடுகிற பல ஊர்களிலே புக்கும் -மனுஷ்யர் நடையாடாத இடங்களிலும்
லௌகிகர் சிரிக்கும் படியாக -பரவசராய்க் கொண்டு நின்று நடையாடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்- அமரர் தொழப்படுவாரே.––அபி நிவேசம் விஞ்சி ச சம்ப்ரம ந்ருத்தம் பண்ணுவார்
நித்ய அனுபவரரான ஸூ ரிகளாலே ஆதரிக்கப் படுவார்கள் –
————————————————–
அவதாரிகை –
அநந்தரம் -உபய விபூதி நாதனானவன் விஷயத்தில் யோக ஜெனித பக்தி விகார யுக்தரானவர்கள் அன்றியே அது இல்லாத
அல்லாதார்க்கும் அவர்களைக் கணிசித்தும் அவர்கள் வியாபாரங்களைப் பண்ணுகை கர்த்தவ்யம் -என்கிறார்
அமரர் தொழப் படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே .–3-5-9-
அமரர் தொழப் படுவானை-அனைத்து உலகுக்கும் பிரானை–நித்ய ஸூ ரிகளுக்கு நிரதிசய போக்ய பூதனாய் ஸமஸ்த லோகத்துக்கு சேஷியான சர்வேஸ்வரனை
அமர மனத்தினுள் யோகு-புணர்ந்து அவன் தன்னோடு -ஒன்றாக –ஸ்திரமாம் படி மனசிலே யோக முகத்தால் செறிந்து பரம சாம்யா பத்தி பெறும்படி
அமரத் துணிய வல்லார்கள்-ஒழிய அல்லாதவர் எல்லாம்-நிலை நின்ற அத்யாவசாயத்தைப் பண்ண வல்ல பக்தி நிக்நர்கள் அன்றியே –
இந்த யோக ஜன்ய பக்தி கைவராதவர்கள் எல்லாரும்
அமர நினைந்து எழுந்து ஆடி–அலற்றுவதே கருமமே .–இதிலே அமர வேணும் என்று நினைத்து உத்யுக்தராய்
அவர்களைப் போலே ஆடுவது அலறுவது ஆகையே கர்த்தவ்யம் –
பக்திபாகம் பிறவாதார்க்கும் நிஷ் பன்ன பக்திக ப்ரவ்ருத்தியை அநு விதானம் பண்ணுகை பிராப்தம் -என்று கருத்து –
——————————————————-
அவதாரிகை –
அநந்தரம் -கீழ் விலக்ஷண விக்ரஹ விசிஷ்டனானவன் விஷயத்தில் உபாசகருடைய பக்தி பாரவஸ்யத்தை அதில் அந்வயம் இல்லாதாரும்
அநு விதானம் பண்ண பிராப்தம் -என்றார் -இதில் அநந்ய சாதனரான அநந்ய ப்ரயோஜனரும்
பகவத் ப்ராவண்ய பாரவசயத்தாலே விக்ருதராய் வர்த்தியுங்கோள் -என்கிறார்
கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.-3-5-10-
கருமமும் கரும பலனும்-ஆகிய காரணன் தன்னைத்–கர்மங்களும் -தத் சாத்தியமான பலன்களும் தானிட்ட வழக்கமாய்ப்படி ஸமஸ்த காரண பூதனாய்
திரு மணி வண்ணனைச் செங்கண்-மாலினைத் தேவ பிரானை-தன்னையே உபாயமாகவும் உபேயமாகவும் பற்றுவார்க்கு தர்ச நீயமான மாணிக்கம் போன்ற
ஸூப ஆஸ்ரயமான வடிவை யுடையனாய் -அவர்களைப் பூர்ண கடாக்ஷம் பண்ணும் சிவந்த கண்களையும் வாத்சல்யத்தையும் யுடையனாய்
ஸூரிகளுக்குப் போலே அவர்களுக்கு அநு பாவ்யனானவனை
ஒருமை மனத்தினுள் வைத்து-உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்–உபாய உபேயங்களில் பேதம் பிரவாதபடி ஒருமைப்பாட்டை நெஞ்சிலே வைத்து –
இவ்வாகார த்வயத்துக்கு ஈடுபட்டு நெகிழ்ந்த நெஞ்சை யுடையராய் கிளர்ந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து-பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.—தூரமான கார்யமான பெருமையையும் அதடியான மனுஷர் முன்னே யாடும்படி என் என்கிற
லஜ்ஜையையும் தவிர்ந்து -பி பாரவஸ்யம் நிகர்ஷமாக நினைக்கும் அறிவு கேட்டையும் தவிர்த்து அவனுடைய குண கணங்களை அக்ரமமாகப் பிதற்றுங்கோள்
அநந்ய சாதனர்க்கும் சேஷத்வ சாரஸ்ய காரிதமான பாரவஸ்யம் உத்தேச்யம் என்று கருத்து –
——————————————————
அவதாரிகை –
அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக அனுப விரோதி நிவ்ருத்தியை அருளிச் செய்கிறார்-
தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-
தீர்ந்த அடியவர் தம்மைத்-திருத்திப் பணிகொள்ள வல்ல-ஈஸ்வரனுடைய உபாய உபேயங்களில் வியாவசிதராய் இருக்கும் அடியவர்களை
பிரதிபந்தக நிவ்ருத்தி பூர்வகமாக பரபக்தி பரஞாநாதிகளைக் கொடுத்துத் திருத்தி நித்ய கைங்கர்யத்தைக் கொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை-அமரர் பிரானைஎம் மானை–சர்வ சக்தி யுக்தனாகையாலே பரிபூரணமான குண கணங்களை யுடையனாய்
ஆஸ்ரிதரை நழுவ விடாதவனாய் -நித்ய ஸூ ரிகளோடே ஓக்க அடிமை கொள்ளும் சர்வேஸ்வரனை
வாய்ந்த வளவயல் சூழ்தண்-வளம் குரு கூர்ச்சட கோபன்–நன்றான வளப்பத்தை யுடைய வயல் சூழ்ந்து ஸ்ரமஹரமாய்
சர்வ சம்பத் சம்ருத்தமான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்-அரு வினை நீறு செய்யுமே.–பக்தி பரவசருடைய உத்கர்ஷத்தையும் -அல்லாதாருடைய நிந்தையையும் நேர்ந்து
அருளிச் செய்த அத்விதீயமான ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இந்த பத்தும்
பகவத் குண அனுசந்தானத்தில் விக்ருதாராகாத படி பண்ணும் மஹா பாபங்களை பஸ்ம சாத்தாம் படி பண்ணும் –
வளங்குருகூர் –வாய்ந்த சடகோபன் -என்றாகவுமாம்
இது அரு சீர் ஆசிரிய விருத்தம் –
—————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply