திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -கீசுகீசு என்று– திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

ஈராயிரப்படி -அவதாரிகை –
இப்பாட்டில் பழையளாய் வைத்து புதுமை பாவித்துக் கிடப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

நாராயணன் மூர்த்தி கேசவனை-நாராயணனானே மூர்த்தமாய் திரு மேனி எடுத்துக் கொண்டு கண்ணனாய்

போது விடிந்தது எழுந்திராய் என்ன
விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன
கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசுகின்றன -என்கிறார்கள்

கீசு
அநஷரமாய் இருக்கை-
ஓர் ஆனைச் சாத்தன் பேசும் காட்டில் விடியுமோ என்ன

எங்கும் பேசா நிற்பது -என்ன
நீங்கள் அதுக்கு இல்லையோ -என்ன
எங்களால் அன்றிக்கே தானே யுணர்ந்தன -என்ன
அதுக்கு அடையாளம் என் என்ன

கலந்து பேசுகிற பேச்சு கேட்டிலையோ –
கேளாமைக்கு மற்ற ஆரவாரம் யுண்டோ –
நிஸ்வநம் சக்ரவாகா நாம் –ஸஹ ஸாரினாம் -இத்யாதி -(கிஷ்கிந்தா -ராமன் வருந்தி சொல்வது )
இப்பேச்சுக் கேட்டு வைத்து கிருஷ்ணன் முகத்திலே விழித்துக் கொண்டு நில்லாதே தரிக்க வல்லை யாவதே
சவ்மித்ரே ஸ்ருணு வந்யாநாம் இத்யாதி (அயோத்யா) –
(ராமர் லஷ்மணன் இடம் சித்ர கூடம் புறப்பட நேரம் ஆனதே -காட்டுப் பறவைகள் ஓசை கேட்கிறதே நீ கேட்க வில்லையோ )
விடிவோறே பெருமாள் திரு மாளிகையில் சென்று எழுப்புவாரும்
கவி சொல்லுவாரும் வம்சாவளி ஒதுவாருமாக எழுந்திருக்கக் கடவ
இவர் பக்ஷிகளுக்கு முன்னே உணரும்படியாவதே என்ன தர்ம ஹானி -என்று ஆய்த்தான் அருளிச் செய்வர் –

பேய்ப் பெண்ணே-
பகவத் விஷயத்திலும் ததீய விஷயம் தன்னேற்றம் என்று அறிந்து வைத்துப் பேசாதே
கிடக்கையாலே சொல்லுகிறார்கள்
என்ன அறிவு தான் –
பேய்ப்பெண்ணே என்றதோடு
நாயகப் பெண் பிள்ளாய் வாசியில்லை -அகவாயில் பாவம் ஒன்றாகையாலே
பின்னையும் எழுப்புகிறார்கள்

காசும் பிறப்பும்
அச்சுத் தாலியும் முளைத் தாலியும் —
இடைச்சிகள் பூணும் ஆபரணம் –

கலகலப்ப –
ஆறு மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி –அரவூரு சுலாய் மலை தேய்க்கும் ஒலி -என்னுமா போலே

கை பேர்த்து-
தயிரின் பெருமையாலும் இவர்கள் சவ்குமார்யத்தாலும் கை பேர்க்கப் போகாது
அதுக்கு மேலே அவன் சந்நிதியிலும் கடையைப் போகாது -அவன் அசந்நிதியிலும் அப்படியே –

வாச நறும் குழல் –
தயிர் கடைகைக்கு நியமித்து முடித்துக் கட்டிய மயிர் முடி -கடைந்த ஆயாசத்தாலே குலைந்து –
கடைந்த வேர்ப்பாலே அதி பரிமளிதமாய்
முடை நாற்றமும் தோற்றாத படி கிண்ணக வெள்ளம் கரையை உடைத்து பெருகுமா போலே
எங்கும் சுற்று வெள்ளம் இடா நின்றது
பரிமளம் ஊரை உறங்க ஓட்டுகிறது இல்லை

ஆய்ச்சியர்-மத்தினால்-ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
க்ருஹிணிகள் எல்லாரும்
விக்ரேதுகாமா கில கோப கந்யா–கோவிந்த தாமோதர மாதவேதி – -இத்யாதி
(கிருஹணீகள் கடைய கன்னி பெண்கள் விற்க போகும் பொழுது மனசு எல்லாம் இவன் இடமே கொண்டு சொல்வது )
ஊராகக் கிளர்ந்தது -மத்தினால் ஓசைப்படுத்துகிற த்வனியும் –
இவர்கள் சிலம்பின் த்வனியும் –
(கை கங்கணம் கால் சிலம்பு -தயிர் கடைய உட்கார்ந்து பண்ண முடியாதே –
வள்ளல் -பெரிய பானை நின்றே கடைய வேண்டும் )
குழல்களில் வண்டுகளின் த்வனியும் -(மது பானம் அருந்த வண்டுகள் குழல்களில் படிந்து த்வநிக்குமே )
ஆபரணம் தன்னில் கல கல வென்கிற ஒலியும்
கைகளில் வளைகளின் ஒலியும் கிளர்ந்து
பரமபதத்தில் சென்று கிட்டி கிருஷ்ண குணங்களாய் எங்கும் பரப்புகை
கோவிந்த தாமோதர மாதவேதி-போலே

அரவம் கேட்டிலையோ
கெண்டை ஒண் கண்கள் மடவாள் ஒருத்தி இத்யாதிப் படியே -(பெருமாள் -6-2-)
(ராஜ குல மஹாத்ம்யம் தோன்ற ஊடல் )
(புலவர் நெருக்கு உகந்த பெருமாள் )ஆண்களான தேவ ஜாதிக்கு ஓரு கை பற்றுமவன் பெண்களைக் கை விடான் –
இக் கோலாஹலங்கள் அடையக் காண எழுந்திராய் என்கிறார்கள்
விடிந்தமைக்கு அடையாளம் கேட்டிலையோ

தயிர் கடைந்த ஓசை என்ன
கிருஷ்ணன் அவதரித்த பின்பு நல்லடிக் காலமாகையாலே எப்போதும் உண்டு என்ன –

நாயகப் பெண் பிள்ளாய் –
சேஷ பூதர் சேஷிகளுக்குச் சொல்லுவார் உண்டோ -அழகிதாக நிர்வாஹகை யானாய் -என்று
அவள் துணுக் என்று புறப்படுகைக்காக கேசி வத வ்ருத்தாந்தத்தைச் சொல்லுகிறார்கள் –

நாராயணன் மூர்த்தி-
முகம் தோற்றாதே நின்று வாத்சல்யத்தாலே விடாதே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன்

மூர்த்தி
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக -பரித்ராணாய இத்யாதிப்படியே அவதரிக்கை –

கேசவனைப் –
பின்னும் நம்முடைய விரோதிகளைப் போக்குமவனை –

பாடவும் கேட்டே கிடத்தியோ-தேசமுடையாய் –
உன்னைக் கண்டு நாங்கள் வாழும்படி வாய் திறவாய் என்கிறார்கள் –

————————————————-

நாலாயிரப்படி-அவதாரிகை –

சிலரைச் சிலர் எழுப்பினால் -அவர்களைக் கொண்டு நோன்புக்கு போமவர்கள் அல்லரே இவர்கள் –
பிறருடைய நன்மையே தங்களுக்கு பிரயோஜனம் என்று இருக்குமவர்கள் இறே
நாம் -வைஷ்ணவர்கள்-தந்தாமே சில நன்மைகள் சம்பாதித்துக் கொண்டாலும் பொறுக்க மாட்டோமே-
பகவத் சம்பந்தம் மெய்யாகில் தன் வயிற்றில் பிறந்த பிரஜையினுடைய ஸம்ருத்தி
தன்னது என்று இருக்குமா போலே இருக்க வேணும் இறே
நாம் இவ்வர்த்தம் சொல்லுகை பறையர் ஒத்துச் சொல்லுமா போலே இறே
ஆசாரத்திலும் சிறிது உண்டாகா விடில் ஞானம் இல்லை என்னும் அத்தனை
ஆட் கொண்ட வில்லி ஜீயர் அருளிச் செய்த வார்த்தைக்கு நஞ்சீயர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது –

ஸ்ரீ தேவி மங்கலத்திலே கமுகிலே நஞ்சீயர் ஸ்ரீ பாதத்தையுடைய சிலர் இருப்போரை யடைய அமுது செய்விக்கக் கண்டு
பட்டர் பிடாத்தை இட்டுக் கொண்டு ப்ரீதராய்
நம்முடைய கையில் சில மெய்யுண்டாய் அன்று -அடியிலே சில மெய்யர்யுண்டாய்
அவர்களுடைய மெய் இவ்வளவும் வரப் பேசுகிறது -என்று அருளிச் செய்தார் –
அடியார்கள் குழாங்களை– கூடுவது -என்றார்
யதாக்ரது ரஸ்மிந் லோகே புருஷ ததே த ப்ரேத்ய பவதி -என்கிற தத்க்ரது நியாயத்தாலே –
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை -என்றார்
இங்கே இக் குழாம் இனிதானால் இறே அக் குழாம் ஸித்திப்பது-
கலியர் சோறுடையார் வாசலிலே சென்று கூப்பிடுமா போலே சென்று எழுப்புகிறார்கள்

கீழ் பகவத் விஷயத்தில் புதியவள் ஒருத்தியை எழுப்பிற்று –
இப்பாட்டில் பழையளாய் இருந்து வைத்து புதுமை பாவித்துக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறது –

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

போது விடிந்தது எழுந்திராய் என்ன
விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன
ஆனைச் சாத்தன் என்று பேசா நின்றது என்கிறார்கள் –

கீசு
அநஷர ரஸமாய் இருக்கை-
கீழில் பாட்டில் -மெள்ள எழுந்த அரி என்ற பேர் அரவத்தோடு இவற்றினுடைய சப்தத்தோடு வாசியாற்று இருக்கிறது
விவஷித்தால் திருநாமம் சொன்னதோடு அநஷரமான இவற்றின் த்வனியோடு வாசியற உத்தேச்யமாய் இருக்கிறபடி
நாராயணாய என்றத்தோடு நாராயண என்றத்தோடு வாசியாற்று அவனுக்கு உத்தேச்யமாய் இருக்குமா போலே
ஓர் ஆனைச் சாத்தன் பேசும் காட்டில் விடியுமோ என்ன

எங்கும் பேசா நிற்பது -என்ன
நீங்கள் அதுக்கு இல்லையோ -என்ன
எங்களால் அன்றிக்கே தானே யுணர்ந்தன -என்ன
அதுக்கு அடையாளம் என் என்ன

கலந்து பேசுகிற பேச்சு கேட்டிலையோ -என்ன –
இரவு எல்லாம் உறங்கி வீடியோ நிற்கவோ கலப்பது என்ன
இரவு எல்லாம் கலந்து இப்போது பிரிக்கிறோம் என்று பகல் எல்லாம் பிரிந்து இருக்கைக்கு
விளை நீர் அடைத்து பிரியப் புகுகிறோம் என்று
தளர்த்தி தோற்ற பேசுகிற பேச்சு கேட்டிலையோ என்ன
மரக்கலம் ஏறுவார் ஆறு மாசத்துக்கு தண்ணீரும் சோறும் ஏற்றுமா போலே இக்கலவை அரவம் கேட்டிலையோ
கேளாமைக்கு மற்ற ஆரவாரம் யுண்டோ -செல்லுகிறது
நிஸ்வநம் சக்ரவாகா நாம் இத்யாதி –
இப்பேச்சுக் கேட்டு வைத்து கிருஷ்ணன் முகத்திலே விழித்துக் கொண்டு நில்லாதே தரிக்க வல்லையாவதே
சவ்மித்ரே ஸ்ருணு வந்யாநாம் வல்கு வ்யாஹரதாம் ஸ்வநம் – இத்யாதி
விடிவோறே பெருமாள் திரு மாளிகையில் சென்று எழுப்புவாரும்
கவி சொல்லுவாரும் வம்சாவளி ஒதுவாருமாக எழுந்திருக்கக் கடவ
அவர்கள் பக்ஷிகளுக்கு முன்னே உணரும்படியாய் –
வேறே சிலரையும் இப்பேச்சும் உன் செவியில் பட்டது இல்லையோ என்று
எழுப்புவதாய்த்தே என்ன தர்ம ஹானி –என்கிறான் ருஷி
பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து இடைச்சியாய் கண்ணுறங்காதே எழுப்பித் திரிகிறாப் போலே இவர்களும்

பேய்ப் பெண்ணே-
பகவத் விஷயத்திலும் ததீய விஷயம் தன்னேற்றம் என்று அறிந்து வைத்து அறியாதார் பேச்சைச் சொல்லுகை –
இவர்களாகில் இப்படி சொல்லுகை பணி என்று பேசாதே கிடக்க –
அறிந்து வைத்துக் காற்கடைக் கொள்ளுகையாலே பேய்ப்பெண்ணே என்கிறார்கள்
தத் விஷயத்திலும் ததீய விஷயம் நன்று என்று அறிந்து வைத்துப் பேசாதே கிடைக்கையாலே சொல்லுகிறார்கள் –
என்ன அறிவு தான் –
மிதுனமாய்க் கலந்தால் அடியேன் என்னிலும் என்பர் –
எதிர்தலையைத் தாழச் சொல்லிலும் சொல்லுவர்
பேய்ப்பெண்ணே என்றதோடு நாயகப் பெண் பிள்ளாய் வாசியில்லை -அகவாயில் பாவம் ஒன்றாகையாலே

போது விடியாது இருக்க விடிந்தது என்கிற நீங்களோ நானோ பேய்ப்பெண் -என்ன
விடியச் செய்தே விடிந்தது இல்லை என்கிற நீயே பேய்ப்பெண் -என்ன
விடிந்தபடுத்தி எங்கனே -என்ன
தயிர் கடைந்த ஓசை கேட்டிலையோ -என்கிறார்கள்

காசும் பிறப்பும் –
அச்சுத் தாலியும் முளைத் தாலியும் –இடைச்சிகள் பூணும் ஆபரணம் –
ப்ராஹ்மணர் சந்த்யா வேளையில் பூணூல் இடுமா போலே
தங்கள் அனுஷ்டான வேளையில் இவர்களுக்கு ஆபரணம் பூண வேணும் -என்கை –

கலகலப்ப –
அரவூரு சுலாய் மலை தேய்க்கும் மலை -என்னுமா போலே

கை பேர்த்து-
தயிரின் பெருமையாலும் இவர்கள் சவ்குமார் யத்தாலும் கை பேர்க்கப் போகாது
அதுக்கு மேலே அவன் சந்நிதியிலும் கடையைப் போகாது –
அவன் அசந்நிதியிலும் அப்படியே -என் என்னில்
காணா விடில் கை சோரும்-காணில் தயிரை மோராக்க ஓட்டேன்-என்று கையைப் பிடிக்கும்
மோரார் குடமுருட்டி என்னக் கடவது இ றே –

வாச நறும் குழல் –
தயிர் கடைகைக்கு நியமித்து முடித்துக் கட்டிய மயிர் முடி -கடைகிற ஆயாசத்தாலே குலைந்து –
கடைந்த வேர்ப்பாலே அதி பரிமளிதமாய்
முடை நாற்றமும் தோற்றாத படி கிண்ணக வெள்ளம் கரையை உடைத்து பரம்புமா போலே
எங்கும் சுழித்து வெள்ளம் இடா நின்றது
தெருவெல்லாம் காவி கமழ் திருக் காட்கரை -என்னுமா போலே
பரிமளம் ஊரை உறங்க ஓட்டுகிறது இல்லை

ஆய்ச்சியர்-மத்தினால்-ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
ஆய்ச்சியர்
ஊராகக் கிளர்ந்தது

மத்தினால் ஓசை படுத்த
ஒரு மந்திரத்தாலே கடலைக் படுத்துமா போலே முழங்கா நின்றது –
உத்காய தீ நா மரவிந்த லோசநம் வ்ரஜாங்க நாநாம்-திவமஸ்ப் ருசத் த்வனி —
தத் நஸ்ச நிர்மந்த ந சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேந திசாம மங்கலம்
அவன் கண் அழகிலே தோற்றுப் பாடுகிற த்வனியும் –
இவர்கள் காலில் சிலம்பின் த்வனியும் –
குழல்களில் வண்டுகளின் த்வனியும் –
ஆபரணங்கள் தன்னில் தான் கல கல வென்கிற ஒலியும் கைகளில் வளைகளின் ஒலியும் கிளர்ந்து
பரமபதத்தில் சென்று கிட்டி கிருஷ்ண குணங்கள் திருவாய்ப்பாடியிலே பரிமாறா நிற்க
இவ்வுயரத்தில் என்ன இருப்பு இருக்கிறிகோள்-என்று
அங்குள்ளாரை வசைபாடுவாரைப் போலே இருக்கிற த்வனியும் கேட்டிலையோ -என்கிறார்கள் –

விக்ரேது காமா கில கோப கன்யா முராரி பாதார்ப்பித்த சித்த வ்ருத்தி தத் யாதிகம்
மோஹவசா தவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி-போலே
எம்பெருமான் பக்கலில் பிச்சேறிக் கிடக்கிற பெண்களை இவர்கள் அந்நிய பரதை தீர வேணும் என்று பார்த்து
தயிரும் பாலும் நெய்யும் விற்று வாருங்கோள்-என்று கொடுத்துவிட
விற்கும் போது நெஞ்சில் நினைப்பது கிருஷ்ணனை யாகையாலே
கோவிந்தனை கொள்ளுங்கோள் கிருஷ்ணனைக் கொள்ளுங்கோள்
ஸ்ரீயபதியைக் கொள்ளுங்கோள் -என்னா நிற்பார்கள் –

அரவம் கேட்டிலையோ-
வண்டமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்பச் செவ்வாய் துடிப்ப
தண்டயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய்யறிவன் நானே -என்று சொல்லும்படி
ஆண்களான தேவ ஜாதிக்கு ஓரு கை பற்றுமவன் பெண்களைக் கை விடான் –
இக் கோலாஹலங்கள் அடையக் காண எழுந்திராய் என்கிறார்கள்

தயிர் அரவம் கேட்டிலையோ
இது கேளாதபடி தயிர் கடையா நின்றதோ -என்கை –
ப்ரணய ரசம் செல்லா நின்றதோ -என்கை –
இதுக்கு இங்கனே கொடுமை சொல்லுகிறிகோள் –
வந்த காரியத்துக்கு உடலானவற்றைச் சொல்ல மாட்டிகோளோ-என்ன
நாங்கள் தவிருமோ நீ பேசாதே கிடந்தால்-என்ன
விடிந்தமைக்கு அடையாளம் தயிர் கடைகிற ஓசை கேட்டிலையோ – என்பான் என்
பண்டு போலே பசுக்களும் பால்களும் அளவுபட்டு இருந்ததோ –
கிருஷ்ணன் அவதரித்த பின்பு நல்லடிக் காலமாகையாலே
பசுக்களும் பாலும் பெருத்து கறக்கும் போது அறியாதே கடையும் போது அறியாதே செல்லுகிற ஊரிலே
இது ஒரு அடையாளமாக மாட்டாது –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் -என்று பேசாதே கிடந்தாள்

நாயகப் பெண் பிள்ளாய் –
சேஷ பூதர் சேஷிகளுக்குச் சொல்லுவார் உண்டோ -அழகிதாக நிர்வாஹகை யானாய்-
உனக்கு இது பரம் அன்று ஆகில் எங்களுக்கோ பரம் என்று –
ததோ மவ்நமுபாகமத் -என்கிறபடியே பேசாதே கிடக்க
உங்கள் அடியேனை இங்கனே சொல்லுவதே என்ன
நீ வாய் திறவா விட்டால் நாங்கள் செய்வது என் என்ன
அவள் துணுக் என்று
புறப்படுகைக்காக கேசி வத வ்ருத்தாந்தத்தைச் சொல்லுகிறார்கள் –

நாராயணன் மூர்த்தி-
முகம் தோற்றாதே நின்று வாத்சல்யத்தாலே விடாதே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன்

மூர்த்தி
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக -பரித்ராணாய இத்யாதிப்படியே அவதரிக்கை –

கேசவனைப் –
கண்ணுக்குத் தோற்றி நின்று பின்னும் நம்முடைய விரோதிகளைப் போக்குமவனை –
அவன் சேஷ்டிதங்கள் சிலரை அச்சம் கெடுக்கும்

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ -தேசமுடையாய்
ஸ்ரோத்ர ஸூகமாய் இருந்தது தானே நீர் வாய்ப்பாக உறங்குகிறாயோ –
கர வதத்தினன்று போலே தழுவப் பாராய்
தம் த்ருஷ்ட்வா -இத்யாதி

தம் த்ருஷ்ட்வா
பண்டு மணக் கோலம் இறே கண்டது -இப்போது வீரக் கோலத்தோடு காணப் பெற்றாள்
சத்ரு ஹந்தாரம்
தமக்கு ஒரு வாட்டம் இன்றிக்கே எதிரிகளை அழியச் செய்யப் பெற்ற படி
மஹர்ஷீணாம் ஸூகாவஹம்
பிரஜையினுடைய ஆர்த்தி தீர்ந்து ஸூ கிக்கக் காண்கை இறே தாய்க்கு ஸூகம் –
பர்த்தாவானவன் பார்யை பக்கல் முகம் பேரா விட்டால் பிரஜையை எடுத்துக் கொண்டு வருமா போலே
பிராட்டி முகம் பெறுகைக்காகப் பச்சையிடும்படி
பபூவ
சரணாகதருடைய ஆர்த்தியாலும் பெருமாளுக்கு என் புகுகிறதோ என்னும் பயத்தாலும் அழிந்த ஸ்வரூபம்
அவர்களும் அவரும் உளராகப் போருகையாலே இப்போது யுண்டாய்த்து –
இரண்டு தலையும் யுண்டாய் இல்லையாகில் இல்லையாமவள் இறே
ஹ்ருஷ்டா
அதுக்கு மேலே நிரதிசய ப்ரீதி யுண்டாயிற்று
வைதேஹீ
அவதாரம் ச பிரயோஜனமாய்த்து
வைதேஹீ
வீர வாசி அறியும் குடியில் பிறந்தவள் -ஒரு வில் முறிக்க ஐயர் என்றும் உகந்த படிக்கும்
இன்று தனியே பதினாலாயிரம் ராக்ஷஸரைப் பொடி படுத்தி நின்ற பெரிய பராக்ரமம் காணப் பெற்றோம்
பார்த்தாராம் பரிஷஸ்வஜே
பண்டு ஐயர் கொடுத்தார் என்று அந்த மணக் கோலத்தை தர்மத்துக்குத் தழுவினாள்
இப்போது வீரக் கோலம் கண்டு ஆண் என்று தழுவினாள்
அம்புவாய் தெரியாதபடி தனது ஸ்தநோஷ்ம தையாலே வேது கொண்டாள்
இவருக்கு சந்தான கரணியும் விசல்ய கரணியும் அதுவே -ஜகத்துக்குத் தாயும் தமப்பனும்

கேட்டே கிடத்தியோ
இப்பிரமாதம் தப்பப் பெற்றுக் கிடக்கிறாயோ -என்ன இவர்கள் பேசின பேச்சிலே ஈடுபட்டுக்
கிடக்கிற பெண் பிள்ளையைத் திரு ஜாலாகத்தாலே

சென்று
எட்டிப் பார்த்து

தேசமுடையாய் திற-என்கிறார்கள்
இவளுடைய நிரவதிக தேஜஸைக் கண்டு உன்னைக் கண்டு வாழ
தேசமுடையாய் திறவாய் -என்கிறார்கள் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: