திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -மார்கழித்திங்கள் — திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

ஈராயிரப்படி -அவதாரிகை –

முதல் பாட்டுக்கு வாக்யார்த்தம் -ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் நாராயணனே -என்று அருளிச் செய்கிறார் –

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்-1-

மார்கழித் திங்கள் —
கிருஷ்ணனோடு தங்களைக் கூட்டின காலத்தைக் கொண்டாடுகிறார்கள் –
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்று நிலை நின்ற தர்மத்தைப் பற்றுகிற காலம் –
மழை விழுந்து ஹ்ருதயம் குளிர்ந்து ஸத்வ உத்தரமான காலம்
மலையின் உச்சியில் கிடந்த ஸஸ்யங்களும் நிலத்தில் கிடந்த ஸஸ்யங்களும் ஒக்கப் பருவம் செய்யும் காலம்
சைத்ர ஸ்ரீமான் அயம் மாச -என்று பெருமாளை அனுபவிக்க வந்தவர்கள்
சைத்ர மாசத்தைக் கொண்டாடினால் போலே மார்கழி மாசத்தைக் கொண்டாடுகிறார்கள் –

மார்கழித் திங்கள் –
மாசா நாம் மார்க்க சீர்ஷோ அஹம்-என்று எம்பெருமானும் அபிமானித்த மாசமாகையாலே வைஷ்ணவ மாசம்
(கேசவ மாதம் -இது -கேசவாதி இது தொடங்கி )

மதி நிறைந்த –
ஆபூர்ய மாணே பக்ஷே புண்யே நக்ஷத்ரே -என்று பூர்வ பஷமுமாகப் பெற்றது –

மதி நிறைந்த
பஞ்ச லக்ஷம் குடியில் சந்த்ரர்களும் திரண்ட நாள் –
திங்கள் திரு முகத்து சேயிழையார்கள் இறே
(ஐந்து லக்ஷம் சந்திரர்கள் திரண்ட நாள் அன்றோ
மதி நிறைந்த தொடங்கி -திங்கள் திரு முகத்து சேயிழையார் நிகமனம் )

மதி நிறைந்த நன்னாள்
அத்யமே சபலம் ஜென்ம ஸூப்ரபாதா ச மே நிசா -என்று கம்ச சம்பந்தத்தால் -விடிவு காணப் புகா நின்றோமே –
என்று இருந்த அக்ரூரனுக்கு விடிந்தால் போலே விடிந்த நாள்

நன்னாளால்
ப்ரக்ருத் யாத்ம விவேகம் பிறந்த நாள்
(குடந்தைக் கிடந்தாய் அடியேன் ஒரு வாழ் நாள் சென்னாள் எந்நாள்
அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே
அன்று நான் பிறந்திலேன் )

நீராடப் –
அவனைப் பிரிந்த காலம் ஆகையால் சீத காலமே கோடைக்கு காலமாய் –
விரஹ தாபம் அறக் குளிக்கை-எம் மடுவில் தான் இவர்கள் நீராடுகிறது என்னில்
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தில் இறே -(10-1)
தங்கள், குண சேஷ்டிதங்களாலே வயிர வுருக்காக உருக்கி வைத்தார்களாகக் கொள்ளீர் கிருஷ்ணனை

நீராட –
என்றது மாறி மாறித் தங்கள் மெல்லிய தோளில் அவன் தோயவும் -இவர்கள் அவன் மார்பில் தோயவும் இறே
(வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் )
அதாவது –
அப்பன் திருவருள் மூழ்கினாள் -(8-9-5-)-இறே

போதுவீர் –
இச்சா மாத்திரமே அதிகாரம்
(ஆசை உடையோருக்கு -என்று வரம்பு அறுத்தார் -இப்பாசுரம் கொண்டே எம்பெருமானார்
மால் பால் மனம் சுழிப்ப இத்யாதி
போவதே பிரயோஜனம் )

போதுவீர் போதுமினோ –
மடுவில் இறங்கும் போது தனி இறங்க ஒண்ணாதாய்க் கொள்ளீர் –
ஏக ஸ்வாது ந புஞ்சித -என்று நல்லது கண்டால் தனி புஜிக்குமவர்கள் அன்று இறே –

போதுவீர் போதுமினோ –
போருகை தானே பிரயோஜனம் –
அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண -(நான்முகன் )இறே
(காண்பதே பிரயோஜனம் -அழைப்பது அதிகாரி விசேஷம் –)
அவ்விஷயத்துக்கு தனி வர்த்தகமானவோ பாதி இவ்விஷயத்துக்குத் திரள் வர்த்தகம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -(5-2-2 )-இறே –

நேரிழையீர்
மார்கழி நீராட வென்று நினைப்பிட்ட பின்பு பெண்கள் உடம்பிலே பிறந்த செவ்வி –
உருவுடையார்–(நாச் -1–6-) என்றபடி வடிவு அழகு அமைந்து இருக்கிறது
பிரபத்தியை ஆபரணமாக யுடையார் -(இதுவே நேரிழையீர் )

சீர் மல்கு ஆய்ப்பாடி –
கண்டவிடம் எங்கும் கிருஷ்ணன் தீம்புகளும் –
அவன் வார்த்தைகளுமாய்ச் செல்லுகை –
கோவிந்த தாமோதர மாதவேதி–
(கோவிந்தன் வாங்கலையோ -உள்ளம் எல்லாம் இவனே
எம் தம்மை விற்கவும் பெறுவாரே )

செல்வச் சிறுமீர்காள்-
பெண்களுக்கு ஸ்ரீ மத்தையாவது –
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்று இளைய பெருமாளை போலே இருக்கை

சிறுமீர்காள் –
மறந்தும் புறம் தொழா மாந்தர் –(நான்முகன் -68)

கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்-
நம் அபேக்ஷிதம் செய்து தலைக் கட்டுவான் ஒருவன்

கூர்வேல்
பெரியாழ்வார் மகள் இறே –
அங்குத்தைக்குக் காவல் உண்டு என்று தரித்து இருக்கிறாள் –
பிள்ளை பிறந்தவாறே வேலைக் கடைய விட்டான் –
மாணிக்கமே என் மணியே ( மஞ்சனமாட வாராய் ) இறே
இது உடையவர்கள் காலிலே இறே லோகமாகக் குனிவது

நந்தகோபன்
நந்தாமி பஸ்யன் நபி தர்சநேந தாம் ஜராம் -பிள்ளையைக் கண்ட ப்ரீதியாலே
ஆனந்தத்தை யுடையனாகவுமாம்-
நரை திரை மாறி இளகிப் பதித்தபடி என்றுமாம் –
(வா போகு இன்னொரு கால் வந்து -கண்டு இளகிப் பதித்தானே சக்ரவர்த்தி )

குமரன் –
சக்ரவர்த்தி திருமகன் போல் விநயம் பாவித்து இருப்பவன்
(இவனும் அநு கரித்து -பாவித்து இருப்பானே )

ஏரார்ந்த கண்ணி –
சதா பஸ்யந்தி என்று பிள்ளையைக் காண்கைக்குத் திறந்திடு வாசலாக
நிலைக் கதவைப் பிடுங்கிப் பொகட்ட கண்கள் –
தமப்பனார் கையிலே வேல் ஒன்றும் கொண்டு நோக்கும்
அம்பன்ன கண்ணாள் யசோதை -(பெரிய திருமொழி -6-8-6)ஆகையால் இவள்
முகத்தில் அம்பு இரண்டும் கொண்டு நோக்கும்

யசோதை –
அஞ்ச யுரப்பாள் யசோதை -(நாச்சியார் -3-8)-ஆணாட விட்டிட்டு இருக்கும் –
அனுமதி பண்ணி நாட்டுக்கும் யஸசை கொடுக்க வல்லள் –

இளஞ்சிங்கம்
அவனுக்குக் குமரன் –
இவளுக்கு இளஞ்சிங்கம் –
ஒருத்தரும் முடி சூட்ட வேண்டா அதுக்கு -தானே ம்ருகேந்த்ரம் இறே
கம்சனை முடியச் செய்ய வல்ல மிடுக்குண்டாகை-

கார் மேனிச்
நம்முடைய விடாய் எல்லாம் தீரும்படியான அழகிய திருமேனி

கார் மேனி
ஆச்சர்யமான திருமேனி –
நீல மேக நிபம் அஞ்சன புஞ்ச ஸ்யாம குந்தள-என்று ஆழ்வான்
அருளிச் செய்த படியே இருந்த திருமேனி
(நேத்ர ஸாத்குரு கரீச -உடையவர் ஆணைப் படி ஆழ்வான் )
அவர்கள் நீராடப் புக்கவாறே பின்பு அவன் உடம்பிலே இட்ட செவ்வி

செங்கண்
நம் பக்கல் வாத்சல்ய அதிசயத்தாலே குதறிச் சிவந்த கண்கள் –
அஞ்சன கிரியிலே இரண்டு தாமரைப் பொய்கையைப் போலே

கதிர் மதியம் போல் முகத்தான்
தங்கள் ஆபத்துத் தீர அவனைக் கண்டால் நகடு கழற்றின சந்திரனைப் போல்
இவர்களைக் கண்ட பின்பு அவன் முகம் குளிர்ந்த படி

கதிர் மதியம்
இவன் முகம் வெய்யிலிலே நிலவை ஊட்டினால் போலே இருக்கை –
சந்த்ர பாஸ்கர வர்ச்சஸம் –என்றும்
முளைக் கதிரை-என்று சொல்லும்படி இருக்கை –
ஆஸ்ரிதற்கு நிலவைப் போலே -அநாஸ்ரிதற்கு வெய்யில் போலே
ஆஸ்ரிதற்கு புனலுரு-அநாஸ்ரிதற்கு அனலுருவாய் இருக்கும்
ஆஸ்ரிதற்கு சந்திரன் -அநாஸ்ரிதற்கு ஆதித்யன்

போல் முகத்தான்
நகட்டுச் சந்திரனும் கார்கால ஆதித்யனும் போல் அல்லன்-
அம் முகத்தை யுடையவன் என்னும் அத்தனை
என் மகன் முகம் நேர் ஒவ்வாய் -என்றும்
சந்த்ர காந்தாநநம் ராமம் -என்றும் சொல்லுமா போலே –

நாராயணனே
கோவர்த்தன உத்தரணாதிகளாலே அபலைகளான பெண்களுக்கும் கூடத் தெரியும்படி ஈஸ்வரத்வம்
இரு பொறியிட்டுக் கொண்டு போருகையாலே இத் திரு நாமத்தைச் சொல்லிற்று –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்றார்கள் -இறே
சமிதை பாதி சாவித்ரி பாதியாகை அன்றிக்கே-அவன் தானே செய்யக் கடவன் என்கிறது –
நாராயணனே என்ற அவதாரணை–

நமக்கே –
அகிஞ்சனரான நமக்கு –
வெறிதே அருள் செய்வர் -(திருவாய் -8-7-8)-என்று இருந்த நமக்கு
ஸ்வ யத்ன சாத்யன் என்று இராத நமக்கு

பறை தருவான்-
நோன்புக்கு உபகரணங்களைப் பறை என்கிறது
அவனோட்டை சம்ஸ்லேஷம் அவர்களுக்குப் பறை -நமக்கு கைங்கர்யம் –
இது இடைச்சிகள் துடைப் பேச்சு -ச கோத்ரிகள் அறியுமத்தனை -( ஸங்கேத பதம் )

பாரோர் புகழப் –
நன்மை தீமை அறியாதார் புகழ –
கிருஷ்ணனையும் தங்களையும் சேர ஒட்டாத இடையரும் இடைச்சிகளும் கொண்டாடும்படி
அனு கூலர் கொண்டாட பிரதி கூலரும் கொண்டாட –
இந்த ரசம் அறியார்கள் ஆகிலும் நாமும் கிருஷ்ணனும் சேர்ந்த சேர்த்தி கண்டு நாடு புகழ –

படிந்து –
அபி நிவேசித்து முன்பு சொன்ன மடுவில் அவகாஹித்து

படிந்து –நீராடப் போருங்கோள் –
என்று கீழோடே அன்வயம்

ஏலோர் எம்பாவாய்-
இது பாத பூர்ண அர்த்தமான அவ்யயம் –
ஏல்–கேள்
ஓர் -இத்தை அறுதி இட்டுக் கொள்
எம் பாவாய் –
எம் பிள்ளாய் –
நோன்புக்குச் சந்தஸ் என்றுமாம் –

——————————-

நாலாயிரப்படி-அவதாரிகை –
முதல் பாட்டு –
பிரபந்த தாத்பர்யமான ப்ராப்ய ப்ராபக ஸங்க்ரஹம் –
காலத்தைக் கொண்டாடுகிறது என்றும் சொல்லுவார்கள்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்-1-

மார்கழித் –
ஒழிவில் காலம் என்றும் —
அநாதிர் பகவான் கால -என்றும் காலத்தைக் கொண்டாடினால் போலே
மாசத்தைக் கொண்டாடுகிறது
ஸூத்ர விஷயங்களில் புக்கால் சமயம் பண்ணின காலம் அறவற்றே என்று இருக்கும் –
குணாதிக விஷயத்தில் இழிந்தார்க்கு புஜிக்கிற விஷயத்தில் அக்காலம் தன்னைக் கொண்டாட வேண்டும்படி இருக்கும்
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் எம்பெருமானார் கேட்டு அருளி இருக்க –
ஒழிவில் காலம் எல்லாம் -என்று இங்கனே
ஒரு நாள் எல்லாம் பாடிப் பாடிக் கண்ண நீரோடே விட்டுப் போம்

மார்கழி –
மழை இன்றிக்கே இட்ட பயிர் தீய்தல் -வெள்ளமாய் இட்ட பயிர் அழிதல் செய்யாத காலம் –
மழை யுச்சியில் கிடந்த பீஜங்களோடு -நிலத்தில் கிடந்த பீஜங்களோடு வாசியற பருவம் செய்யும் காலம்

திங்கள்
ஒரு நாளில் ப்ரஹ்ம முஹூர்த்தம் போலே சம்வத்சரத்தில் ப்ராஹ்ம முஹூர்த்தம் என்கை
ப்ராஹ்மே முஹுர்த்தே சோத்தாய சிந்தயேதாத்மா நோ ஹிதம் -என்று
வெளிறு கழிந்து நிலை நின்ற தர்மத்தை இறே இவர்கள் சிந்திக்கிறது
மாசா நாம் மார்க்க சீர் ஷோஹம் -என்று வைஷ்ணவமான மாசம்
திரு வத்யயனம் தொடங்கும் காலம் இறே
சைத்ர ஸ்ரீ மாநயம் மாச –
இது ஒரு காலமே என்கிறது –
ஜகத்தை யடைய வாழ்விக்கும் காலம்

புண்ய -புண்யமும் தானே -அதாவது அவனை அழைத்துத் தரும் காலம்
புஷ்பித காந ந –படை வீடு போலே நாம் விதானிக்க வேண்டா -தானே அலங்கரித்தது –
வ்யதி ரேகத்தில் -அபி வ்ருஷா பரிம்லாநா -இறே
அன்றிக்கே –
பாதகரான இடையர் உறங்கும் காலம் என்றுமாம் —
ஸந்த்யை தப்பிற்று என்று ப்ராஹ்மணரைப் போலே அகரேண ப்ரத்யவாயம் இல்லாமையாலே உணரார்கள்-

மதி நிறைந்த –
கிருஷ்ணனும் பெண்களும் சேர வேணும் என்று நினைப்பிட்ட நாளாகையாலே –
நள்ளிருள் கண் என்னை உய்த்திடுமின் -என்று இருள் தேட வேண்டா காலம் என்கை –
இருளன்ன மா மேனி என்று போலியான இருள் தேட வேண்டா –

அவனைக் காணப் பெறுகையாலே நிலவுக்கு இறாய்க்க வேண்டாக் காலம்
பெண்களுக்கு முகம் கண்டு வாழலாம் காலம்
திங்கள் முகங்கள் திரண்ட காலம்
திங்கள் திருமுகத்து சேயிழையார்கள் இறே
ஞான பலம் பூரணமான காலம் –
முளைத்து எழுந்த திங்கள் தானாய் –

நன்னாளால்
தாநஹம் த்விஷத க்ரூரான்-என்று இவற்றின் அபராதத்தை நினைத்து
பெற்ற தாய் பசலை அற்று இருக்குமா போலே
குழியைக் கல்லி மண்ணைவிட்டு அமுக்குவேன் என்னுமது தவிர்ந்து
தாதாமி புத்தி யோகம் -என்றும்
ஏஷ சர்வஸ்வ பூதாஸ்து -என்றும் இரங்கப் பண்ணும் நாள்
ஊரார் இசைந்து மேல் எழுத்திட்ட நாள்

வத்யதாம் -என்ற மஹா ராஜர் -அஸ்மாபிஸ் துல்யோ பவது என்றால் போலே
அநாதி காலம் பண்ணிப் போந்த விபரீத ருசி தவிர்ந்த நாள்
துர்லபமான பகவத் ருசி பிறந்த நாள்
ஸூப்ரபாதா ச மே நிசா –கம்சன் சோறுண்டு திரிந்த எனக்கு ஒரு நல்விடிவு உண்டாகப் புகா நின்றதோ என்று இருந்தேன்
இப்படி இருந்த எனக்கு ஒரு காலம் அஸ்தமியாத படி விடிந்தது

ஸூப்ரபாதாத்ய ரஜ நீ மதுரா வாச யோஷிதாம் –வில் விழவன்று ஸ்ரீ மதுரையில் பெண் பிள்ளைகளுக்கு விடிந்தால் போலே
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –
இதுக்கு முன்பு எல்லாம் ராத்ரியாய் இருந்தபடி
உறங்காத என்னையும் கண்டேன் -அஸ்தமிதியாத ஆதித்யனையும் கண்டேன் –
பாஹ்யமான விடிவு அன்றிக்கே ஆணித்தரமான விடிவு -நாராயண தர்சனம் –

நீராடப் –
அவனைப் பிரிந்த நாளாகையாலே சீத காலமே கோடையாய்த்து-
அவ்விரஹ தாபம் தீர எம்மடுவிலேயோ இவர்கள் ஆடப் புகுகிறது
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் —
மெல்லியல் தோள் தோய்ந்தாய் –
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ரதம்-
நீராட்டுமவன் முன்னே சமைந்து நின்றான் -ஆடுவாரை இறே அழைக்க வேண்டுவது
ருசி பிறந்த பின்பு அவ்வருகுள்ள ப்ராப்ய தேசமும் அர்ச்சிராதி கதி சிந்தையும்
ததீயரையும் அவனையும் அனுபவிக்கையும் காலமும் அடைய ப்ராப்யத்திலே புகும் அத்தனை –

நீராட
தம் மகளை நீராட்டினாலும் ஆழ்வார் என்ன வேண்டுமா போலே
பகவத் விஷயத்துக்கு அண்ணியாரைத் தோழிமார் என்றும் சிஷ்யர்கள் என்றும் இல்லை –
பூஜ்யராகக் கொண்டாட வேணும் என்கை –
இதுக்கு ஒரு சிஷ்டாசாரம் உண்டு –
ஆண்டாள் பட்டர் ஸ்ரீ பாதத்தைக் கழுவித் தீர்த்தம் கொள்ளும்

நீராட
கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறி முழுக்கிட –

போதுவீர்
இச்சையே அதிகாரம் -என்கை –
திருவேங்கட யாத்திரை போலே நீராடப் போகையே உத்தேச்யம்

போதுமினோ –
அவர்கள் இரந்தார்கள் அல்லர் -தன செல்லாமையாலே இரக்கிறாள்-
ஸூத்ர விஷயங்களுக்குத் தனி யல்லது ஆகாதாப் போலே இவ்விஷயத்துக்குத் திரள் அல்லது ஆகாது
இவ்விஷயத்தில் இச்சா மாத்திரம் அமைகிறபடி எங்கனே —
புறம்பு உள்ளவற்றுக்குப் பெரு நெறிகள் செல்லா நிற்க -என்னில்
இங்கு அபரிச்சேத்யமான விஷயமாகையாலும் –
தானே உபாயமாகையாலும் –
சேதனான வாசிக்கு இச்சா மாத்திரம் அமைந்தது

போதுமினோ
அவர்கள் முன்னே போகத் தான் பின்னே போக நினைக்கிறாள் –
அவர்கள் போக இசைவார்களோ என்னில் ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே
இவளுக்கு பிரியம் என்றவாறே அத்தையும் இசைவார்கள்
போகாதே இருந்தால் ஆற்றலாமாகில் தவிருங்கோள் –

நீராட
கிருஷ்ணனும் தாங்களும் மாறி மாறி முழுகக் கூப்பிட ஈடுபாட்டால் அவர்கள் எழுந்து இருக்க ஷமர் அல்லர் –
தன் செல்லாமையாலே இவள் இரக்கிறாள்
பிரதிகூலரையும் அகப்பட – தேன மைத்ரீ பவது தே – என்னக் கடவர்களுக்கு அனுகூலரை ஒழியச் செல்லுமோ –

நேரிழையீர்-
அவனோடு கலந்தார்க்கு இறே -அவனோடு கலக்க வேணும் என்று ஆற்றாமை மிகுவது
புனை இழைகள் அணிவும் -ஆபரணங்கள் அடைய மாறாடி இருக்கை –
சவ்ம்ய ரூப-பெரு நாளை -கையார் சக்கரம் என்றால் ஊர் புதுக் கணித்து இருக்குமா போலே –
மார்கழி நீராட என்ன இவர்கள் புதுக் கணித்த படி –
பாவனா ப்ரகர்ஷத்தாலே ஒருபடி பூண்டால் போலே இருக்கும் –
கிருஷ்ணன் எப்போது பார்க்குமோ என்று எப்போதும் இருந்து கோலம் செய்வர்கள் –

சீர்மல்கு ஆய்ப்பாடி –
பரமபதத்திலும்-திரு அயோத்யையிலும் திருவாய்ப்பாடி சம்பத்து மிக்கு இருக்கை –
உழக்கிலே பதக்கிட்டால் போலே -திருவாய்ப்பாடியிலே ஐஸ்வர்யம் பெருத்த படி எங்கனே என்னில்
ப்ரீதி ரோதம சஹிஷ்ட சா புரீ ஸ்த்ரீவ காந்த பரி போக மாயதம்-என்கிறபடியே

சீர் மல்கும் ஆய்ப்பாடி
பிள்ளைகள் கால் நலத்தாலே நாழிப் பால் நாழி நெய் போருகை –

சீர் மல்குகை யாவது –
பகவத் குணங்கள் மாறாதே சீராகக் கிடைக்கை என்றுமாம் –
அதாகிறது
ஊரடைய கிருஷ்ணன் தீம்பும் அவன் வார்த்தையுமாய்க் கிடக்கை-

ஆய்ப்பாடி
இக்காலத்துக்கு ஓரூர் நேர் படுவதே -என்கிறாள் –
திரு அயோத்தியை போலே வசிஷ்டாதிகள் புகுந்து நியமியாதே அநாசாரமான ஊர் –
பட்டர் திருப்பாவை அருளிச் செய்யா நிற்க பூணூல் சாத்தாத தொரு ஸ்ரீ வைஷ்ணவர் வர
கூசாதே உள்ளே புகுவீர் இவ்விடம் திருவாய்ப்பாடியாய்க் காணும் செல்லுகிறது என்று அருளிச் செய்தார் –

செல்வம் –
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -நாடு எல்லாம் தன்னைப் போலே வாழும்படி வாழப் பிறந்த பாக்யவான்
அந்தரிக்ஷகத ஸ்ரீ மான் -ராவண சம்பந்தம் அற்ற போதே ஸ்வாபாவிகமான வைஷ்ணவ ஸ்ரீ வந்து மாலையிட்ட படி
ச து நாக வர ஸ்ரீ மான் -என்று தன செயலில் கைவிட்டு அவன் செயலே செயலாக அத்யவசித்த பின்பு
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ஸ்ரீ மான் என்றால் போலே
ராவண சம்பந்தம் அற்றவோபாதி யாய்த்து ஸ்வா தந்தர்யம் அறுகையும்-
அவனுக்கு அந்நிய சேஷத்வமேயாய் ஸ்வா தந்தர்யம் இன்றியே இருந்தது
இவனுக்கு அந்நிய சேஷத்வம் இன்றியே ஸ்வ ஸ்வா தந்தர்யம் யுண்டாய் இருந்தது
இருவருக்கும் இரண்டும் அற்றவாறே லஷ்மி ப்ராபித்தாப் போலே –

செல்வம் –
வலி பாதி -வழக்கு பாதி தர்மம் பாதியாக -கிருஷ்ணனால் எச்சில் படுக்கை -என்னவுமாம் –
தர்மமாவது -ஆந்ரு சம்ஸ்யத்தாலே மனிச்சு கலக்கும் படி
வழக்கு மைத்துனமை கொண்டு கலக்கும் படி
வலியாவது-தன்செல்லாமை கொண்டு மேல் விழும்படி

சிறுமீர்காள்-
ஆண்களைக் கண்டால் -நான் என்னது என்று இருப்பாரைக் கண்டால் போலே காணும் –
பருவம் கழிந்த பெண்களைக் கண்டால் தேவதாந்த்ர பஜநம் பண்ணினாரைக் கண்டால் போலே காணும்
பாலைகளைக் கண்டால் உகக்கும் -அது என் என்னில்
பார்த்தாவுக்கு ஸ்நேஹியாத பாலை அறிந்தவாறே பார்த்தாவுக்கு ஸ்நேஹிக்கும்-
பார்த்ரந்தர பரிக்ரஹம் பண்ணினவர்கள் பார்த்தாவுக்கு ஆகாதே

சிறுமீர்காள்
அவனுக்கு சத்ருசமான அநந்யார்ஹ சேஷத்வம் யுடையராகை –
எங்களை நீர் இங்கனே கொண்டாடுகிறது என்-நமக்கு இந்நோன்பு தலைக் கட்டித் தருவாரார் -என்ன

நந்த கோபன் குமரன் –
என்கிறார்கள் -அவன் நமக்குச் செய்யுமோ -என்ன -குடிப் பிறந்தவன் அன்றோ -என்கிறாள் –

கூர் வேல் கொடும் தொழிலன் –
சக்ரவர்த்தி வில் பிடிக்க பிள்ளைகள் வில் பிடித்தால் போலே
இக்குடிக்கு வேலே ஆயுதம்
பிள்ளையைச் சொல்லும் இடத்தில் நின் கையில் வேல் போற்றி -என்று இறே சொல்லுவது –

கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் –
சிறியாத்தானைப் போலே பசும் புல் சாவா மிதியாத ஸ்ரீ நந்த கோபர்
தெளியக் கடைந்த வேலைக் கொண்டு பிள்ளைகள் தொட்டில் கால் கீழே
சிற்று எறும்பு வரிலும் ஸிம்ஹத்தின் மேலே விழுமா போலே விழுந்து கொல்வர்
சாதுவாய் நின்ற பசு கன்று இட்டவாறே அதின் பக்கல் வாத்சல்ய அதிசயத்தால்
முன்னின்ற கன்றையும் புல்லிட வந்தவர்களையும்
அகப்படக் கொம்பிலே கொள்ளுமா போலே படுவர்
பெரியாழ்வார் பெண் பிள்ளை யாகையாலே அங்குத்தைக்குக் காவல் உண்டு என்று இருக்கிறாள்

நந்த கோபன்
அம்பரமே தண்ணீரே -என்ற பிராண தாரகங்களைக் கொடுக்குமவர்
நம் பேர் இழவுக்கு இரங்கி நம் பிராண தாரகத்தைத் தாராரோ

நந்த கோபன்
பிள்ளையைக் கண்டு இளகிப் பதித்து உகப்பு ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவர் –

குமரன் –
வெண்ணெய் களைக் களவு கண்டான் -பெண்களைத் தீம்பு செய்தான் -என்று எல்லாரும் வந்து முறைப்பட கேட்டு –
என் முன்னே தோற்றும் கிடீர் என்று இருந்தவர் முன்னே தோற்றினால்
இவனையே குற்றம் சொல்வது என்று அவர்களைக் கோபிக்கும் படி
சக்ரவர்த்தி திருமகனைப் போலே விநயம் பாவித்து இருக்கும் –

ஏரார்ந்த கண்ணி-
அழகார்ந்த கண்ணை யுடையவன் -அவனை சதா பஸ்யந்தியான கண்கள் –
அம்பன்ன கண்ணாள்-என்னுமா போலே ஒரு ஆளும் ஓர் நோக்கும் ஒன்றாய் இருக்கை-

அசோதை
அஞ்ச வுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -என்று
அவன் செய்யும் தீம்புக்கும் அவள் அனுமதி பண்ணி இருக்கும் –

இளஞ்சிங்கம்
தமப்பனார்க்கு பவ்யனாய்–தாயார் சந்நிதியில் மூலையடியே திரிகை –
சிங்கக் குருகு -என்று பட்டர் –
அவர்கள் சிறுமியர் -இவன் இளஞ்சிங்கம் –
அநந்யார்ஹ சேஷத்வமும் சேஷித்வமும்
ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னுமா போலே இருக்கை –

கார் மேனி
தமப்பனாரும் தாயாரும் ஒளித்து வைத்தாலும் -களவு காண்டாகிலும் காண வேண்டி இருக்கும் விஷயம்

கார் மேனி
தங்கள் ஆடப் போகிற தடாகம்
செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் –
மடுவிலே பூத்த தாமரை ஓடத்தை விழவிட்டு வடிவைக் காட்டிக் குளிர நோக்கி
வாயாலே வினவும் படியை நினைக்கிறார்கள்

செங்கண்
ஸ்ரீ யபதித்தவத்தாலும் -வாத்சல்யத்தாலும் -சிவந்து இருக்கை –
ப்ரசன்னாதித்ய வர்ச்சசம் –சந்திரனுடைய குளிர்த்தியிலே ஆதித்யனுடைய ஒளியை ஊட்டினால் போலே இருக்கை –

கதிர் மதியம்
ஆண்களுக்கு அநபி பவனாய் -பெண்களுக்கு அணைக்கலாய் இருக்கை –
முளைக் கதிரை –
விரியும் கதிரே போல் வானை –
செய்யாதோர் நாயிற்றைக் காட்டி
ஸூர்யமிவோ தயஸ்த்தம்
பிராட்டி வடிவுக்கு -வரவுக்கு -அருணோதயம் போலே மார்கழி நீராட நினைத்த பொது பிறந்த செவ்வி –

நாராயணனே
ஓட்டொட்டியாய்-பெண்களை விடாதே இருக்குமவன் –
இத்தனை நல்லது நமக்கு கிடைக்குமோ என்னில்-நாம் அல்லோம் -என்று இருக்கும்
காலத்திலும் தான் ஆவேன் என்று இருக்குமவன்
ஆசைப்பட்ட விஷயமே வகுத்த விஷயமாய் இறுக்கிறபடி-

நமக்கே பறை தருவான்
உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்-
ஏவ கார்த்தாலே மடல் வைக்க வேண்டா என்கை –
சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே வேறு ஓன்று காணில் விடும்

நமக்கே –
என்றது என் -நாராயணத்வம் எல்லாருக்குமே என்னில்-அதிகாரி நியமம் பண்ணுகிறது –
ஸ்வரூபத்தில் உணர்த்தியும் -ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையவனுக்கே -என்கிறது –
அவனாலே அவனைப் பெற இருக்குமவர்கள் -என்றுமாம்
விலக்காமையும் அதுக்கு அடியானை சம்பந்தத்தை உணர்ந்து இருக்கையும் யுடையவர்கள் என்றுமாம் –
அப்படியல்ல வாகில் சர்வ முக்தி பிரசாங்கமாம் –
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம்-

நாராயணனே
குண ஹீனன் ஆனாலும் ஸ்வரூபம் நோக்க வேணும் –
வழி பறிக்காரனுக்கும் பசலுக்குச் சோறிட வேணுமே –
பசலுக்குச் சோறிடாதவனுக்கும் தன வயிறு வளர்க்க வேணுமே
சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் இறே

பறை தருவான்
நாட்டுக்கு நோன்பு -நமக்கு பறை —
த்வ்யர்த்தகம்

பாரோர் புகழ
இந்த சம்ஸ்லேஷம் அறியார்களாகிலும் இச்சேர்த்தி கண்டு இனியராம் படி படுத்தும் –

படிந்து
அவகாஹித்து

ஏலோர்
இப்படி அர்த்த ஸ்திதி –
இத்தை ஒருங்கோள்

எம்பாவாய்
மேல் காமனை நோர்க்கையாலே அவனகமுடையாளான ரதியைச் சொல்லிற்று ஆகவுமாம்
சந்தஸ் ஸை-என்றுமாம்
நோன்பு என்றும் அருளிச் செய்து போருவது
ஏலோர் எம்பாவாய்
என்று இரண்டு அவ்யயமும் பாத பூரண அர்த்தம் என்றுமாம் –

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: