பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-9-

எம்மா வீடு பிரவேசம் –
நலமந்தம் இல்லாதோர் நாடு புகுவீர்-2-8-4- -என்ற ப்ராப்ய பிரசாங்கத்தாலே ஸ்வ அபிமதமான புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷித்து அத்தை பிரார்த்திக்கிறார் –

—————————————

முதல் பாட்டில் சர்வ பிரகார விசிஷ்டமான மோக்ஷத்திலும் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் என்று அபேக்ஷிக்கிறார் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

எத்தனையேனும் உத்க்ருஷ்ட புருஷார்த்தமான ஸ்ரீ வைகுண்டத்திலும் எனக்கு அபேக்ஷை இல்லை -மற்று எதில் அபேக்ஷை யுள்ளது எண்ணில்
உன்னுடைய அழகிய திருவடி மலர்களை என் தலையிலே வைத்து அருள வேணும் -அது செய்து அருளும் இடத்து
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு செய்து அருளினால் போலே வந்து செய்து அருள பற்றாது –
செய்து கொண்டு நிற்க வேணும் -இதே அடியேன் வேண்டுவது -என்கிறார்-

——————————————————————–

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-

எற்றைக்கும் இதுவே நான் உன் பக்கல் கொள்ளும் ப்ராப்யம் -பக்தி யோகத்தால் அல்லது சித்திக்குமோ என்னில்
அந்த பக்தி யோகம் தன்னையும் நீயே ஈண்டெனத் தந்து அருள வேணும்-என்கிறார் –

——————————————–

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-

உன் கையும் திருவாழியுமாய் இருக்கிற அழகைக் காட்டி வ்யதிரிக்த விஷயத்தில் ப்ராவண்யத்தைத் தவிர்த்து உன் திருவடிகளில் என்னை ப்ரவணம் ஆக்கினவனே –
உதக்ரந்தி திசையிலும் கூட உன் திருவடிகளை நான் இளையாது ஏத்தும்படி -பிரானே -கிருபை பண்ணி அருள வேணும் -என்கிறார் –

———————————————

தம்மை அடிமை செய்வித்துத் கொள்ளும்படியை எம்பெருமானைக் கற்பிக்கிறார் –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

சர்வ காலமும் எனக்கே அடிமை செய் -என்று திருவாயாலே அருளிச் செய்து -ஒரு க்ஷணம் மாத்திரம் ஒழியாமே என் நெஞ்சிலே புகுந்து இருந்து அருளி
தாம் சாத்தி அருளும் சாந்து சந்தனம் திருமாலை திருப் பரிவட்டங்கள் போலே
என்னைத் தனக்கே சேஷமாகக் கொள்ளும் இதுவே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பு -என்கிறார் –

————————————————————

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-

தேகமே ஆத்மாவாகலாம் -தேஹாதிரிக்தமாய் நித்ய சித்த- ஞான குணமான அஹம் அர்த்தமே ஆத்மாவாகலாம் -அதிலொரு ஆதாம் இல்லை –
கர்ம நிபந்தமான ஜென்ம ரஹிதனாய் வைத்து ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக தேவ மனுஷ்யாதி ரூபேண வந்து பிறந்து அருளும் ஸ்வ பாவனாய் இருந்த
எம்பெருமானுடைய சர்வ திவ்ய அவதாரங்களையும் சர்வ திவ்ய சேஷ்டிதங்களையும் சர்வ கல்யாண குணங்களையும்
மறவாதே என்றும் அனுபவிக்கப் பெற வேணும் -என்கிறார் –

——————————————————-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-

பரம காருண்யத்தாலே இஜ்ஜகத்தை எல்லாம் படைத்து அருளினவனே -என்னுடைய சர்வ கரணங்களாலும் சர்வ காலமும்
த்வத் அனுபவ ஏக ஸ்வ பாவனாய்க் லோடு உன்னை அனுபவிக்கும்படி வந்து அருள வேணும் -என்கிறார் –

———————————————————-

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

உன்னுடைய நிரவதிக போக்யதையை எனக்கு காட்டி வைத்து உன்னை பஜிக்கத் தாராது இருக்கிற நீ
சர்வ காலமும் உன் திருப் பாத மலர்க கீழ் பேராதே யான் வந்து அடையும்படி பிரானே வாராய் -என்கிறார் –

———————————————–

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-

எக்காலமும் என்னை எல்லா அடிமையும் செய்வித்துத் கொண்டு என்னுள்ளே மன்னில் உன்னைப் பின்னை
ஒரு காலமும் ஒன்றும் அபேக்ஷிக்கிறிலேன்-என்று கொண்டு
எம்பெருமானை அபேக்ஷித்து பின்னையும் எம்பெருமானுக்கு அடிமை செய்கையில் உள்ள ஸ்ப்ருஹஹையாலே –
எம்பெருமானை உள்ளபடி கண்டு அனுபவிக்கிற மஹாத்மாக்கள் ஆரோ -என்கிறார் –

———————————————

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

நானும் என் உடைமையும் உனக்கே அடிமையாய் இருக்கச் செய்தே-இதுக்கு முன்பு போன காலம் எல்லாம் உனக்கு அடிமை என்னும் இடத்தை அறியாதே
நான் என்றும் என்னுடையது என்றும் உண்டான ஸ்வாதந்த்ரய அபிமானத்தாலே நஷ்டனானேன் என்று –
தம்முடைய இழவை அனுசந்தித்து அத்யந்தம் அவசன்னராய் -ஸ்வ பாவத ஏவ அஸ்கலித ஞானராய்
ஒரு க்ஷணம் மாத்ரமும் எம்பெருமானை இழவாதே திரு நாட்டிலே இருந்து அனுபவிக்கிறவர்கள் ஆரோ -என்கிறார் –

—————————————————–

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-

இந்த ப்ராப்யத்தைப் பெறுகைக்கு பிரதிபந்தகங்கள் உளவே என்னில்-அவற்றை எல்லாம் நப்பின்னைப் பிராட்டிக்கு அசோக வனிகையில் பிராட்டிக்கு
உன்னோடு ஸம்ஸலேஷிக்கைக்கு பிரதிபந்தகங்களை நீயே போக்கினால் போலே போக்கியருளி -உன் திருவடிகளிலே என்னை ஈண்டெனச் சேர்த்து அருளி
உன் திருவடிகளில் திவ்ய ரேகை போலே பின்னை ஒரு காலமும் உன்னைப் பிரியாததொருபடி பண்ணியருள வேணும்
இப்படி இச் க்ஷணமே செய்து அருளாவிடில் ஒன்றும் தரியேன் -என்கிறார் –

—————————————————–

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-

இப்படி ஆழ்வார் அபேக்ஷிக்க -அபேக்ஷித்தபடியே திருமலையில் புகுந்து அருளி ஆழ்வாரோடு திருவாழி ஆழ்வானோடு ஸம்ஸலேஷித்தால் போலே
ஒருக்காலும் பிரியாதபடி ஸம்ஸ்லேஷித்த எம்பெருமானைச் சொன்ன இத்திருவாய் மொழி வல்லார் ஆழ்வார் பெற்ற பேறு பெறுவார் -என்கிறார் –

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: