அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-9-

எம்மா வீடு பிரவேசம் –
ஒன்பதாம் திருவாயமொழியிலே -ஈசுவரனுடைய மோக்ஷ பிரதத்வத்தை அனுபவித்தவர் -அந்த மோக்ஷ பிரகாரங்கள்
எல்லாவற்றுக்கும் தாத்பர்ய பூமியாவது-பகவத் பாரதந்தர்யமே என்று நிஷ்கர்ஷித்து –
1–அவன் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் என்னும் இடத்தையும் –
2–தத் விஷய ஞானத்தில் அபேக்ஷையையும்
3–ஞான அனுரூபமான ஸ்துத் அனுபவத்தில் ஸ்ரத்தையையும்
-4-அனுபாவ்யம் ததேக பாரதந்தர்யம் என்னும் இடத்தையும்
5–அதனுடைய அவிஸ்மரணம் ஆனந்த ஜனகம் என்னும் இடத்தையும்
6—அந்த ஸ்ம்ருதி காரிதமான பாஹ்ய அனுபவ அபேக்ஷையையும்
7—நிரந்தரமான ஆந்திர அனுபவம் அதிருப்தி கரம் என்னும் இடத்தையும்
8—அல்ப கால அனுபவத்திலும் அதிசயித்த அபி நிவேசத்தையும்
9—அனுபாவ்ய விஷயத்தோடு உண்டான அபிருத்தாக் சித்தி சம்பந்தத்தையும்
10—அந்த சம்பந்தத்தைக் குலையாமையில் உண்டான அபேக்ஷையையும்
அருளிச் செய்து -மோக்ஷ பிரதனான ஈஸ்வரன் சந்நிதியில் மோக்ஷ தாத்பர்யத்தை நிஷ்கர்ஷித்து அபேக்ஷித்து அருளுகிறார் –

—————————————

சர்வ பிரகார விசிஷ்டமான மோக்ஷத்திலும் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் -என்று அபேக்ஷிக்கிறார் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -எவ்வகைப்பட்ட உத்க்ருஷ்டமான மோக்ஷ பிரகாரமும் சொல்லோம்
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்-உன்னுடைய சிவந்த உத்தேச்யமான திருவடித் தாமரைகளை தலையிலே கடுக சேர்க்க வேணும்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே–துதிக்கை முழுத்தும் படி அழுந்தின ஆனையினுடைய துக்கத்தைப் போக்கினை மஹா உபகாரகனாய்
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே-இவ்வபத்தானத்தைக் காட்டி என்னை அடிமை கொண்ட ஸ்வாமியே உனக்கு அடியேனான நான் –
ஏன் ஸ்வரூபத்துக்குத் தகுதியான பலமாக வேண்டி இருப்பது இதுவே
-புருஷன் அர்த்தித்து அன்றோ புருஷார்த்தம் என்று கருத்து –
ஒல்லை -சடக்கென / கைம்மா -ஆனை/ஒல்லை கைம்மா என்று கூட்டவுமாம்
செப்பம் -செப்போம் அன்றியே செப்பம் -என்று செவ்விதாம் என்றாய் மோக்ஷ பிரகாரம் எல்லாம் செவ்விதாகை யாவது -திருவடிகளில் சேர்த்தி என்றாகவுமாம் –

——————————————————–

அநந்தரம் இந்த சம்பந்த விஷயமான ஞானத்தைத் தந்து அருள வேணும் -என்கிறார் –

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-

என்மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்–எனக்கு இந்த ருசி ஜனகமான -கருமையும் செறிந்த ஒளியையும் உடைத்தான
மாணிக்கம் போன்ற வடிவு அழகையுடைய என் ஸ்வாமியே
ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் -உன்னை நான் எக்காலத்திலும் கொள்ளும் பிரயோஜனம் இதுவே -ஏது என்னில்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்கைதா -பெறுதற்கு அறிய உன் திருவடிகளை நான் பெறுதற்கு ஈடான தெளிவாகிற ஞானக் கையை தர வேணும்
காலக் கழிவு செய்யலே –கால விளம்பம் பண்ணாதே கொள்-
ஞானத்தைக் கை என்றது தமக்கு ஆலம்பனம் ஆகையாலே –

————————————————–

அநந்தரம் அவ்வறிவுக்கு ஈடாக ஆபத்தசையிலும் உன்னை ஸ்தோத்ரம் பண்ணும்படி பண்ணி அருள வேணும் -என்கிறார் –

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் -அக்ருத்ய கரணாதிகளான தீ வினைகளை செய்யாதே கொள் என்று
என் பக்கலிலே கிருபா கார்யமான நியமனத்தை பண்ணுகைக்கு உறுப்பாய்
என்கையார் சக்கரக் கண்ண பிரானே–திருக் கையோடு பொருந்தின திருவாழியை யுடையனாய் -கிருஷ்ணனாக ஸுலப்யத்தாலே உபகரித்தவனே
ஐயார் கண்டம் அடைக்கிலும் -ஐயாலே நிறைந்த கண்டமானது யுக்தி சாமர்த்தியம் இல்லாத படி நிரவிவரமாகிலும்
நின் கழல்எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –விரோதி நிவர்த்தகனாய் ஸூலபனாய் ப்ராப்தனான உன் திருவடிகளை
இளைப்பற்று ஏத்தும்படி எனக்கே அசாதாரணமாக கிருபை பண்ணி அருள வேணும் –
ஐ -ஸ்லேஷமா –

—————————————

அநந்தரம் காயிகமாயும் மாநஸமாயும் வாசிகமாயும் உள்ள பகவச் சேஷத்வத்தை -கீழ் மூன்று பாட்டிலும் அனுசந்தித்து –
இதில் பிரதானமான ததேக பாரதந்தர்யத்தை ப்ரயோஜன தயா நிஷ்கர்ஷிக்கிறார் –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று -எல்லாக் காலத்திலும் எனக்கே அடிமை செய் என்று அருளிச் செய்து -அவ்வளவில் நில்லாதே
என்மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி–என் மனஸ்ஸூக்கே வந்து –விச்சேதம் இல்லாத படி நிரந்தர வாசம் பண்ணி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே–பிறருக்கும் அன்றியே எனக்கும் அன்றியே எனக்கும் தனக்கும் கூட்டு அன்றியே தனக்கே பரதந்த்ரனாம் படி என்னை அங்கீ கரிக்கும் இதுவே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -எனக்கு அனுரூபமாக கிருஷ்ணனை நான் அபேக்ஷிக்கும் பிரயோஜனம்
சிறப்பு -பிரயோஜனம்-

————————————–

அநந்தரம் இப்பாரதந்தர்ய ப்ரகாசகனான ஈஸ்வரனை மறவாது ஒழிகை யாகிற உகப்பைப் பெற வேணும் -என்கிறார் –

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-

இறப்பில் -சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்- -இச் சரீரத்தை விட்ட அளவிலே -ஆனந்தமாகிற நன்மையில் யான மோக்ஷம்
ஸூக ஆபாசமான சுவர்க்கம் -துக்கை கதாநமான நரகம் ஆகிற இவற்றை
எய்துக எய்தற்க – தேஹாத் பரனாய்க் கொண்டு போய்க் கிட்டவுமாம் -தேஹம் தான் என்றாய் இவற்றைக் கிட்டாதே முடிந்து விடவுமாம்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை-தனக்குப் பிறவிக்கு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே-பஹுதாவாக பிறக்கக் கடவனான சர்வேஸ்வரனை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –இவ்வாதாரத்தாலே ஆஸ்ரிதரை நித்ய பரதந்த்ரர் ஆக்கின குண சேஷ்டிதங்களை ஒன்றையும் மறவாதே –
என்றும் அவிஸ்மரணத்தால் வந்த ஆனந்தத்தை உடையேனாக வேணும் –
கீழ்ப் பாட்டும் இப்பாட்டும் முன்னிலை யன்றியே ஸ்வ கத அனுசந்தானமாய் இருக்கிறது –

———————————————————-

அநந்தரம் இந்த ஆந்திர அனுபவம் அடியாக பாஹ்ய அனுபவத்தை அபேக்ஷிக்கிறார் –

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்–ஸூக பிரசுரமான தேவதா வர்க்கம் -ஞான பிரகாச யுக்தமான மனுஷ்ய வர்க்கம் -பிரகாச ரஹிதமான திர்யக் ஸ்தாவரங்கள்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே-தேஜஸ்விதையால் வந்த உகப்பை உடைத்தான் ஜ்யோதி பதார்த்தங்களாய்க் கொண்டு
பஹுஸ்யாம் என்கிற கணக்கிலே விஸ்திருதனான ஸ்வாமியானவனே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு -உன் பக்கல் ஆபிமுக்யத்தாலே ப்ரீதி யுக்தமான நினைவையும் உக்தியையும் கிரியையும் கொண்டு
என்றும்-சர்வ காலமும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –ஆனந்த நிர்ப்பரனாய்க் கொண்டு நான் -இக்கரணத்ரய வியாபாரத்தை யுண்டாக்கிக் தந்த உன்னை
அனுபவிக்கும் படி எழுந்து அருளி வர வேணும் –
உலோகம் அலோகம் -என்று சேதன அசேதனங்கள் ஆகவுமாம்-

———————————————————–

அநந்தரம் -ஆந்திர அனுபவம் ஆராமையாலே ச விஷாதமாக பாஹ்ய அனுபவ அபேக்ஷை பண்ணுகிறார் –

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

உன்னை என்னுள் வைப்பில் என்றும்-ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –நித்ய அனுபாவ்யனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே
நிரந்தரமாக வைக்கும் இடத்தில் -அமையும் என்னா தபடி எனக்கு அதிருப்திகரனாய் -எல்லா நாளிலும் எல்லாப் போதிலும்
யுன் திருப்பாத மலர்க்கீழ்–ப்ராப்தனான உன்னுடைய சிலாக்யமாய் போக்யமான திருவடிகளிலே-பரதந்த்ரனாய்க் கொண்டு
பேராதே நான் வந்தடையும் படி தாராதாய் வாராய் -விஸ்லேஷ ரஹிதனாம் படி நான் வந்து கிட்டுக்கைக்கு அவகாசம் தாராதவனே
யுன் திருப்பாத மலர்க்கீழ்-பேராதே நான் வந்தடையும் படி நான் அப்படி கிட்டும்படி –
வாராய் –வந்து அருள வேணும் –

—————————————————————–

அநந்தரம் அல்ப கால அனுபவம் பெறிலும் அது ஒழிய வேறு ஒன்றும் வேண்டா என்கிற அத்யபிநிவேசத்தை அருளிச் செய்கிறார் –

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-

மிக்கார் வேத விமலர் விழுங்கும் -அதிசயித ஸ்வ பாவராய் வைதிக அக்ரேஷரான நிர்மலரானவர்கள்
தங்கள் ஆதார அதிசயத்தாலே கபளீ கரித்து- அனுபவிக்கும் கணக்கிலே
என்-அக்காரக் கனியே — எனக்கு அக்காரம் தோய்ந்த கனி போலே போக்கிய பூதனானவனே
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் -ஏதேனும் அல்ப காலத்திலேயே யாகிலும் எனக்கு ஸ்வாமியான ஆகாரம் தோன்றும்படி
என் நெஞ்சிலே பிரகாசிப்பித்து நிற்கப் பெறில்
மற்று-எக்காலத்திலும் யாதொன்றும் உன்னை யானே வேண்டேன்-இது ஒழிய எல்லாக் காலத்திலும் ஏதேனும் ஒன்றையும் உன்னை நான் அபேக்ஷியேன்

—————————————————————

அநந்தரம் -சம்பந்தம் அப்ருதக் ஸித்தமாய் இருக்க அநாத்ய ஞானத்தால் அஹங்கார மமகார தூஷிதனாய் இழந்தேன் -என்கிறார் –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

யானே என்னை யறியகிலாதே-நான் தானே என் விஷயத்திலே யாதாத்ம்ய ஞானம் இல்லாமையாலே
யானே என்தனதே என்று இருந்தேன்-நான் ஸ்வ தந்த்ரனே யாகவும் என்னை ஒழிந்தவை என் உடைமையாகவும் –
அஹங்கார மமகாரங்களைப் பண்ணி முடிந்து போகாதே ஆத்ம நித்யத்வமும் அநரத்த அவஹாம் படி இருந்தேன் –
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –இவ்வறிவு கேடு இன்றியிலே யாதாத்ம்ய ஞானம் நடையாடும் பரமபதமாக –
உன்னுடைய சம்பந்தத்தை ஏத்தும்படி அங்குள்ளார்க்கு சேஷியான செருக்குத் தோன்ற இருக்குமவனே –
அர்த்த ஸ்திதி உணர்ந்தால்
யானே நீ என்னுடைமையும் நீயே-நான் நீயே என்னலாம்படி அபிருத்தாக் சித்த பிரகார பூதனாய் இருப்பன் –
என்னுடைமையானவையும் உனக்கு அப்படியே பிரகாரமாய்க் கொண்டு நீயே எண்ணலாம் படியாய் இருக்கும் –

——————————————-

அநந்தரம் அந்த சம்பந்தம் குலையாதபடி என்னைக் காய் விடாது ஒழிய வேணும் -என்கிறார் –

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-

ஏறேல் ஏழும் வென்று –ஏன்று கொண்ட ஏறு ஏழையும் வென்று
ஏர் கொள் இலங்கையை நீறே செய்த -அழகை யுடைத்தானா இலங்கையை பஸ்ம சாத்கரித்ததாலே
நெடுஞ்சுடர்ச் சோதி-மிக்க தேஜஸ்ஸை யுடையனான உஜ்ஜ்வல விக்ரஹனே
தேறேல் என்னை -என்னை எனக்கு நன்மை அறிவன் என்று விஸ்வசியாதே
உன் பொன்னடி சேர்த்து ஒல்லை-உன்னுடைய உஜ்ஜவலமான திருவடிகளிலே சடக்கென சேர்த்து
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –விஷயாந்தரங்களை நினைத்து வேறு போகும்படி எல்லாக் காலத்திலும் விடாது ஒழிய வேணும்
விதி நிர்மிதமான இந்த அன்வயத்தைப் பாலனம் பண்ணி விடாது ஒழிய வேணும் -என்று கருத்து –

—————————————————–

அநந்தரம் இத்திருவாயமொழி மோக்ஷ ஆனந்த ப்ரதம் என்று பலத்தை அருளிச் செய்கிறார்

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-

விடலில் சக்கரத் தண்ணலை -விடுதல் இல்லாத திருவாழியை யுடைய ஸ்வாமியை
அப்படியே
மேவல்-விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-மேவி விட ஷமர் அல்லாத மஹா உதாரரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்
இதில் அந்வயித்தார்க்கு
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்-அனர்த்தம் வாராதபடியான ஆயிரத்துள் இவை பத்தும்
கிளர்வார்க்கே – சாதரமாகச் சொல்ல வல்லவர்களுக்கு
இது தானே
கெடலில் வீடு செய்யும்-அவித்யாத்ய அநர்த்த கந்த ரஹிதமான மோக்ஷ ஆனந்தத்தை பண்ணிக்க கொடுக்கும்
கிளர்தல் -சொல்லுதல் -கிளர்த்தியாய் உத்யோகமாகவுமாம்
இது கலி விருத்தம் –

————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: