பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-7-

கேசவன் தமர் -பிரவேசம் –
என் பக்கலுள்ள அபி நிவேசத்தாலே என்னோடு சம்பந்தித்தாரையும் கூட விஷயீ கரித்து அருளினான் -என்று ப்ரஸ்துதமான பொருளை விஸ்தரிக்கிறது –

————————————

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

சர்வேஸ்வரனாய் -நிரதிசய ஸுந்தர்யாதி கல்யாண குணகனாய்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -எனக்கு ஸ்வாமியாய் இருந்த நாராயணனாலே –
யேந கேநாபி பிரகாரேண சாஷாத் வா -பரம்பரயா வா என்னோடு சம்பந்தம் யுடையார் எல்லாரும் பகவத் ஏக போகரானார்கள் –
தத் சம்பத்தினாலே பகவத் ஏக போகத்வ லக்ஷணமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நமக்கு விளையும் படியே இது -என்கிறார் –

——————————————————–

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

ஈசன் -என்று ப்ரஸ்துதமான ஈச்வரத்வத்தை உபபாதிக்கிறது -சர்வ அந்தராத்மா பூதனாய்– சர்வ லோக ஈஸ்வரனாய்– சர்வ வேத வேத்யனாய்-
காரணத்துக்கும் க்ரியைக்கும் காரியத்துக்கும் நிர்வாஹகானாய் இருந்து வைத்து -எனக்கு போக்யமாகைக்காக-
பெரிய பிராட்டியாரும் அயர்வறும் பாமரர்களும் தொழுது ஏத்த அதினாலே சம்வர்த்தித்த பலனாய் நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் மாதவனாலே எமர் ஏழு ஏழு பிறப்பும் கேசவன் தமராயிற்று -என்கிறார் –

—————————————

இப்படி எம்பெருமான் என்னோடு சம்பந்தித்தாரையும் கூட விஷயீ கரிக்கும் படி என்னை வைஷ்ணவன் ஆக்குகைக்கு
ஹேதுவான என் பக்கலுள்ள சதிராகிறது என் என்னில் -அது இன்னது என்று சொல்லுகிறது –

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

யாதிருச்சியா பிராட்டி பரிக்ரஹித்தார் சொல்லுவதொரு சொல்லைச் சொல்ல -அச்சொல் மாத்ரத்தையே கொண்டு மெய்யே பிராட்டி பரிக்ரஹமாய் இருப்பாரைப் பார்த்து
அருளும் பார்வையாலே என்னைப் பார்த்து அருளி -இவரை யாகாதே தான் நெடும் காலம் எல்லாம் இழந்தது -என்று இழந்த காலத்தை அனுசந்தித்து மோஹித்து
பின்னை நெடும் பொது கூட பிரபத்தனாய் போன காலத்தை இனிச் செய்யலாவது இல்லை இ றே- இனி இப்பாலுள்ள காலமாகிலும் என்னை விட்டேன் என்று
நிரதிசய ஸுந்தர்யத்தை யுடையனாய் நிரதிசய போக்ய பூதனாய் -ஆஸ்ரித ஸூ லபனாய் -பரம காருணிகனாய் இருந்த எம்பெருமான் என்னுள் புகுந்திருந்து-
என் பக்கலுள்ள ஸ்வ சம்ச்லேஷ விரோதியான ஸ்வரூப ப்ரயுக்த தோஷத்தையும் -ஹேது க்ருதமான தோஷத்தையும் போக்கி எனக்கு பரம போக்யனானான் -என்கிறார் –

————————————————–

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

இப்படி என்னுள்ளே புகுந்து இருந்து தன்னுடைய குண சேஷ்டிதங்களை ஏத்திக் களிக்கும் படியாகவும் -தன்னுடைய ஸர்வேஸ்வரத்வத்தையும் –
ஆஸ்ரித பராதீனத்வம் ஆகிற தன்னுடைய ஸ்வரூபத்தையும் பாடி ஆடும்படியாகவும் என்னைத் திருத்தி இப்படி என்னை விஷயீ கரித்து பின்னை
என் பக்கலுள்ள பிரதிபந்தகங்களை எல்லாம் போக்கி அவ்வளவில் பர்யவாசியாதே என்னோடு சம்பந்தித்தாரையும் கூட என்னைப் போலே
தன் திருவடிகளை ஸம்ஸ்லேஷிக்கும் -ஸ்வபாவராக்கினான் –
வல்லன் வல்லன் எம்பிரான் –வல்லன் வல்லன் என் நாயகன் –வல்லன் என் அப்பன் –வல்லன் என்று என்று அவனைப் புகழுகிறார் –

————————————————

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

இப்படி என்னை வைஷ்ணவன் ஆக்குகைக்குத் தன் அழகை உபகரணமாகக் கொண்டு என்னுள்ளே புகுந்து அருளினான் -என்கிறார் –

—————————————————–

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

அநாதி காலம் தொடங்கி இன்று அளவும் வர நான் பிறந்த பிறவிகள் தோறும் என்னை வசீகரிக்கைக்கு ஈடான வடிவுகளைக் கொண்டு வந்து பிறந்து அருளி
என்னை வசீகரித்து -மது ஸூதனன் அல்லது எனக்கு மாற்று ஒரு ப்ராப்யம் இல்லை என்று அத்யாவசித்து -தத் வ்யதிரிக்தங்களை எல்லாம் விட்டு -சர்வ காலமும் நின்று
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி யாடுகை யாகிற இஸ் ஸம்ருத்தியை எனக்கே தந்து அருளுகைக்காக திரி விக்ரமனை எனக்காகவே கிருபையாகிற விதி சூழ்ந்தது என்கிறார் –

—————————————————

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

ஆச்சர்ய திவ்ய சேஷ்டிதன்–பிரபுத்த முக்த அம்புஜ சாரு லோசனன் -அழகிய திருப் பவளத்தை யுடையவன் -ஸூசிஸ்மிதன் -இவற்றால்
என்னை அடிமை யாக்கினவன் என்று என்று உள்ளிப் பரவிப் பணிந்து இப்படியே சர்வ காலமும் உன்னுடைய பாத பங்கயமே மருவித் தொழும்
மனமே தந்தாய் -வல்லை காண் -எம்பிரான் வல்லை காண் —
ஒருவர்க்கும் செய்ய முடியாதன வெல்லாம் -செய்ய வல்லன் ஒருவன் அல்லையோ -என்கிறார் –

—————————————————–

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

நிரதிசய ஸுந்தர்ய ஜென்ம பூமியாய் இருந்த உன்னுடைய வடிவையும் -அழகையும் -அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு பாடி –
உன் திருவடிகளைப் பணிந்து கொண்டு பிரதிபந்தகங்களைப் போக்கும் படி என்னுடைய மனஸ்ஸை
உன் திருவடிகள் அல்லது மற்று ஓன்று அறியாதபடி பண்ணினாய் -ஸ்ரீ மானே -உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வது -என்கிறார் –

—————————————————

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-

ஸ்ரீ தரனாகையாலே செய்ய தாமரைக்கு கண்ணன் என்று என்று இராப் பகல் வாய் வெருவி அலமந்து-கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து-
மருவி இருந்த தீ வினைகள் மாள-இன்பம் வளர எப்போதும் உன்னை என்னுள்ளே இருத்தி வைத்து அருளினாய் –
இப்படி உன் அழகாலே என்னுடைய கரணங்களையும் தோற்பித்தவனே -உனக்கு என் செய்கேன் -என்கிறார் –

—————————————————

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

தன் அழகாலும் செயலாலும் என்னை அடிமை கொண்டவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று என்று அவனை ஏத்தி -நினைந்து -வணங்கு –
இத்தை அழகியதாகக் கைக் கொள்ளக் கொண்டு மறந்தும் நம்பி பற்ப நாபனை விடாதே கிடாய் நெஞ்சே –
என்று கொண்டு தம்முடைய நெஞ்சைக் குறை கொள்ளுகிறார் –

—————————————————

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

அவன் நம்மை விடில் செய்வது என் என்னில் -அளவிறந்த அழகை யுடையனாய் -நிரவதிக தேஜஸ் ப்ரப்ருதி கல்யாண குணங்களை யுடையனாய் –
என்னை ஸ்வ இதர சர்வ விஷய வைராக்ய பூர்வக ஸ்வ அனுபவ ஏக போகனாக்கிக் கொண்டு -எனக்கே தன்னைத் தந்த பரம உதாரனாய் –
என்னுடைய போக்யமாய் -நிரதிசய ஸுந்தர்ய பரிபூரணமான திருமலையோடு உள்ள ஸம்பந்தத்தாலே லப்தமான இந்த உதார குணத்தை யுடையனாய் –
திரு நாட்டில் திவ்ய புருஷர்களுக்கு நாதனாய் -எனக்கு ஸ்வாமியாய் -ஆஸ்ரித பராதீனனான எம்பெருமான் என்னை அல்லது அறியான் –
ஆதலால் அவன் என்னை விடான் -என்கிறார் –

———————————————-

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –2-7-12-

ஆஸ்ரித பரதந்த்ரனாய் -சர்வ ஜகத் ஏக காரணமாய் -சர்வ ஜகத் ரக்ஷகனாய் இருந்த எம்பெருமானை ஒருவருக்கும் தான் அறியலாமோ -என்று தொழுகின்ற
பரம புருஷ சேஷத ஏக ஸ்வ பாவரான சிவற்கும் திசை முகர்க்கும் -எம்மானை என்னாழி வண்ணனைத் தரம் அறியலாமோ என்று கொண்டு
அவனுடைய அபரிச்சேத்ய மஹத்வத்தைச் சொல்லி ஏவம் பூதனானவன் கிடீர் ஏற்பரனாய் இருக்கிறவன் -என்கிறார் –

———————————————

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-

இத்திருவாய் மொழி வல்லார் எம்பெருமானைப் பெறுவார் -என்கிறார் –

———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: