அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-7-

கேசவன் தமர் -பிரவேசம் –
ஏழாம் திருவாய் மொழியில் –
ஸ்வ சம்பந்தி பரம்பரா பர்யந்தமாக -ஈஸ்வரன் பண்ணின பக்ஷ பாதத்தாலே-தம்மளவில் அவனுடைய அபி நிவேச அதிசயத்தைக் கண்டு உகந்து-
-1-ஸ்வ சந்தாநிக விஷயத்தில் அவனுடைய பிரசாத விசேஷத்தையும் -2-அதுக்கு அடியான தம்மளவில் பக்ஷ பாதத்தையும் -3–தத் கார்யமான உபகாரத்தையும் –
-4-அவ் உபகாரம் தம் குலத்தில் உல்லார்க்கும் பிராப்தி பர்யந்தமான படியையும் -5-இது அடியாக ஈஸ்வரனுக்குப் பிறந்த உஜ்ஜ்வல்யத்தையும் –
-6-இதுக்கடைய ஹேதுவான க்ருபா பாரவஸ்யத்தையும் –7-அனுபவிக்கைக்கு உறுப்பாக ஸத்வோத்தரமான சித்த பிரதானத்தையும் –
-8-பொல்லா நெஞ்சைப் போக்கினை படியையும் –9-ப்ரேம யுக்தமான நல்ல நெஞ்சிலே புகுந்த படியையும் –
-10-அந்த நெஞ்சு அவனை விடாது ஒழிய வேணும் என்கிற அபேக்ஷையையும் –11-இன்னின்ன படியாக அவன் தன்னை முழுக்க கொடுத்த உதார குணத்தையும் –
-12-இவ் உதார அதிசயம் அதிசயித்த ஞானர்க்கும் அபரிச்சேதயம் –என்னும் இடத்தையும் அருளிச் செய்து –
ஸ்வ விஷயத்தில் ஆதாரம் ஈஸ்வரனுக்கு சம்பந்தி த்ரய சந்தான சம்ரக்ஷண பர்யந்தம் ஆனபடியை
அவனுடைய ஆஸ்ரித ரக்ஷண அர்த்த குண சேஷ்டித பிரகாசகங்களான திருத் துவாதச நாமங்களோடே கூட அருளிச் செய்கிறார் –

———————————————-

முதல் பாட்டிலே -தம்முடைய குலத்தில் உள்ளார் பகவத் அபிமான அந்தர்கதரான படியை அருளிச் செய்கிறார் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் –சர்வ சாதாரணமான ஸ்வாமித்வத்தை யுடையவனாய் -அப்படியே பொது வன்றியே –
நீல ரத்னம் போன்ற வடிவை எனக்கு காட்டி
அவ்வடிவுக்கு பரபாகமாம் படி சிவந்த அழகிய திருக் கண்களாலே என்னை அநந்யார்ஹன் ஆக்கி
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–பரமபத வாசிகளோபாதி அங்கீ கரித்து -என்னை அன்பவிப்பித்து –
எனக்கு நாத பூதனான உறவு அடியாக நிரதிசய வாத்சல்ய யுக்தனான நாராயணனாலே –
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்–கீழ் மேல் ஏழு ஏழு பிறப்பும் சர்வாதிகனான கேசவன் தமரான எமரானவர்கள்-
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா–நிர்ஹேதுக பகவத் அங்கீ காரமாகிற இந்த பெரிய சதிரைப் பெற்று –
அத்தாலே நம்முடைய ஸ்ரீ வைஷ்ணவத்வ ஸ்ரீ யானது வளருகிற படியே —

—————————————

அநந்தரம் -கீழ் யுக்தமான நாராயண சப்தார்த்தத்தை உபபாதியா நின்று கொண்டு ஸ்வ விஷய பக்ஷ பாதத்தை அருளிச் செய்கிறார் –

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்–நாராயண சப்த வாச்யனாய் -அதினுடைய அர்த்தமான -ஸமஸ்த லோகத்துக்கும் ஸ்வாமியாய் –
அந்த சப்தத்தையே பிரதானமாக ப்ரதிபாதிக்கிற வேத பிரதி பாத்யனாய்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் -கிரியா ஹேது -கிரியை -கிரியா பலமான கர்மம் -இவற்றுக்கு காரண பூதனாய் –
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று–குணோத்தரராய் -திவ்யரான தேவர்களும் ரிஷிகளும் மனுஷ்யாதிகளுமான எல்லாரும்
வணங்கி ஸ்தோத்ரம் பண்ணும் படியாக நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –எந்தை-குவலயா பீடத்தை கொம்பை முறித்த மஹா உபகாரகனாய் —
இப்படி நார சப்தார்த்தங்கள் தமக்கு விபூதியான படியை எனக்கு பிரகாசிப்பித்த ஸ்ரீ யாபதியான ஸ்ரீ கிருஷ்ணன் என்னை அநந்யார்ஹன் ஆக்கின சேஷி –
சீர் அணங்கு -என்று ஸ்ரீ மஹா லஷ்மி யாகவுமாம் –

——————————————–

அநந்தரம் -இப்பஷபாதம் அடியாக ஸ்வ விஷயத்தில் யுக்தி மாத்ரத்தையே பற்றாசாகக் கொண்டு பண்ணின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

என் கோவிந்தனே மாதவன் என்றதே கொண்டு என்னை -எனக்காக ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்த என்னுடைய ஸ்வாமியானவன் –
ஸ்ரீ மான் -என்று நான் சொன்ன அஹ்ருதய உக்தியையே பற்றாசாகக் கொண்டு -உக்தியில் வாசி அறியாத என்னை –
இனி இப்பால் பட்டது-யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து-உக்த்ய அநந்தரமாக மேலுள்ள காலம் எல்லாம்
அவித்யாதிகளான குறைகள் -ஏதேனும் ஒன்றையும் -சேர் கொடேன் -என்று சங்கல்பித்து -அதுக்கு ஈடாக என் நெஞ்சுக்குள்ளே புகுந்து அநந்ய பரனாய் இருந்து –
தீதவம் கெடுக்கும் அமுதம் –புத்தி பூர்வகமான தீமையையும் -ப்ரமாதிகமான அவத்தையும்-கெடுக்கும்படியான நித்ய போக்ய பூதனாய் -இஸ் சம்ச்லேஷத்தாலே
செந்தாமரை கட்குன்றம்-சிவந்த தாமரை போல் இருக்கிற திருக் கண்களையும் -ஸூ ஸ்திரமாய் வளர்ந்த வடிவையும் அனுபவிப்பித்து –
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான்–கொத்தும் ஆர்வமும் இல்லாத கன்னல் கட்டி போலே எனக்கு இனியனானான் –
கன்னல் கட்டி -கருப்புக் கட்டி -அதுக்கு கொத்தும் ஆர்வமும் -நீரசமான வஸ்த்வந்த்ர சம்சாரக்கமும் -பாக தோஷமும் –
ஈஸ்வரனுக்கு கோதும் அவமுமாவது -உபகாரத்தினுடைய ஹேது சா அபேக்ஷத்வமும்-ஸ்வ ப்ரயோஜன அர்த்தத்வமும் –

————————————————-

அநந்தரம் இவ்வுபகாரம் ஸ்வ சம்பந்தி குல பர்யந்தமாம் படி பண்ணின சாமர்த்தியத்தை அருளிச் செய்கிறார் –

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

வல்லன் எம்பிரான் விட்டுவே –நினைத்தது செய்ய வல்ல சக்திமானாய் -ஸமஸ்த பதார்த்தங்களையும் வியாபித்து –
ஊரை வளைத்து ஒருவனைப் பிடிக்குமா போலே -என்னை அங்கீ கரித்த ஸ்வாமியானவன் –
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து–ஜாதி உசிதமான கோ ஸம்ருத்தியை யுடையவன் -அந்த ஸம்ருத்தி உசிதமான ஹர்ஷ வ்யாபாரமாயுள்ள
குடக் கூத்தை யுடையவன் -இந்த ஐஸ்வர்யா சேஷ்டிதங்களுக்கு அனுரூபமான கோபால ஜென்மத்தை யுடையவன் -என்று என்று
இவற்றைத் தனித் தனியே சொல்லி -ப்ரீதியாலே கூத்தாடி
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்–இந்த ஸுலபயத்துக்கு அடியான பரத்வத்தையும் -தனக்கு அசாதாரணமான நீர்மையையும்
ப்ரீதிக்கு போக்குவீடாகப் பாடி சஞ்சரிக்கும் படி -இரும்பைப் பொன் ஆக்குவாரைப் போலே நித்ய ஸூரி சமானமாம் படி திருத்தி –
தன்னுடையவனாகக் கைக் கொண்டு -ஸ்வ அங்கீகார விரோதியான என்னுடைய
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்-மேவும் தன்மையம் ஆக்கினான் –பாபங்களையும் ஓடிப் போம்படி துரத்தி –
என்னோடு அன்வயமுடையார் ஏழு ஏழு ஜென்மமும் தன்னைப் பிறப்பிக்கும் தன்மையை யுடையோராம் படி பண்ணினான் –
இது ஒரு சக்தி யோகம் இருந்தபடபி என் -என்று கருத்து –
பாற– ஓட

————————————————————–

அநந்தரம் ச பரிகரமாகத் தம்மை அங்கீ கரித்த படியாலே அவனுக்குப் பிறந்த உஜ்ஜ்வல்யத்தை அருளிச் செய்கிறார் –
இப்பாட்டில் முதல் அடியில் -விட்டு என்று திரு நாமமாகப் பிரித்து -விட்டிலங்கு முடியம்மான் என்று நாலாம் அடியோடு அன்வயித்துக் கிடக்கிறது –
அல்லாத போது திரு நாமம் முதலாய் எழுகிற பாட்டுக்கள் மரியாதை குலையும் –
விட்டு -என்னும் இவ்விடத்தில் உகரம் குற்றியலாகக் கொள்க –

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –விஷ்ணுவாய் -பரந்து விளங்குகிற அபிஷேகத்தை யுடையனாய் -ஸ்வாமியான மது ஸூதனன் தனக்கு –
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்–இலங்கி சிவந்த ஒளியையுடைய தாமரை போன்றன திருவடிகளும் -திருக் கைகளும் -திருக் கண்களும் -விகசிதமாய்-
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு–விளங்கா நிற்கிற நீளமான பிரபையை யுடைத்தான மலை போன்றது -அழகிய வடிவு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி–அழகிய சங்கு பரம்பி விளங்குகிற சந்திரனைப் போன்றது சக்ரம் –
விட்டிலங்கு பரிதியே -அப்படிப்பட்ட -ஆதித்யனைப் போன்றது-
சாமா நாதி கரண்யம் உபமான உபமேய பாவத்தால் –

——————————————–

அநந்தரம் கீழ்ச் சொன்ன உபகாரத்துக்கும் தத் க்ருத உஜ்ஜ்வல்யத்துக்கும் ஹேதுவான கிருபா பாரவஸ்யத்தை அருளிச் செய்கிறார் –

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

மது சூதனை யன்றி மற்றிலேன் -என் விரோதியைப் போக்கினை மது ஸூ தனனை அன்றி மற்று ப்ராப்யம் உடையேன் அல்லேன்-என்று
எத்தாலும் கருமமின்றி-துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்று – ஏதேனும் ஒரு பதார்த்தத்தாலும் ஒரு கார்யம் அற்று –ஸ்தோத்ர ரூபத்தாலே
அவன் குண கணாதிகளைச் சூழ்ந்த பாடல்களை -பிரயோஜனாந்தரம் இன்றியே ஸ்வயம் பிரயோஜனமாக நின்று பாடி ஆடும்படி
ஊழி யூழி தொறும்-எனைத்தோர் பிறப்பும் -கல்பம் தோறும் கல்பம் தோறும் அநேகங்களாய் அத்விதீயங்களான பிறப்புக்கள் தோறும் –
எதிர் சூழல் புக்கு எனக்கே யருள்கள் செய்ய-எனக்கு அபிமுகனாகைக்கு ஈடான சூழ்ச்சியோடே அவதரித்து எனக்கே அசாதாரணமாக
பிரதம கடாக்ஷம் தொடங்கி பரபக்தி பர்யந்தமான உபகாரங்களை பண்ணுகைக்கு
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –எனக்கு உறுப்பான ஏன்று கோளை யுடையனாய் ஸ்வாமியான
த்ரி விக்ரமனை தப்ப ஒண்ணாத விதி என்னலாம் படியான கிருபையானது சூழ்ந்து கொண்டது –
ஏறுதல் -கொள்கை யாதல் -தகுதி யாகவுமாம் –

————————————————-

அநந்தரம் -ஸ்வ அனுபவத்துக்கு உறுப்பாக சத்வ உத்தரமான மனசைத் தந்தான் என்கிறார் –

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என்–த்ரை விக்ரம அபதானத்தாலே-லோகத்தை அநந்யார்ஹம் ஆக்கினவனாய் –
அது போலே -சிவந்த தாமரை போன்ற கண்ணாலே ஜிதம் -என்னும் படி என்னை அடிமை கொண்ட ஸ்வாமியானவன் –
என் செங்கனி வாய் உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் –சிவந்த கனி போலே இருக்கிற திருப் பவளத்தை
வடிவிலே பரம்பி வளர்ந்து வருகிற வெளுத்த பளிங்கு போலே இருக்கிற திரு முத்தின் நிறத்தை எனக்கு அனுபவிப்பித்தவன் –
என்று என்று உள்ளி பரவிப் -பணிந்து -என்று என்று தனித் தனியே சேஷ்டிதத்தையும் கண் அழகையும் முறுவல் அழகையும் நெஞ்சால் அனுபவித்து –
அது உள் அடங்காமையாலே அக்ரமமாகப் பரவி –அந்த ப்ரீதி பிரேரிதனாய்க் கொண்டு திருவடிகளில் விழுந்து
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே –பல்வகைப்பட்ட கல்ப விபாகத்தை யுடைத்தான கால தத்வம் உள்ளதனையும் -ப்ராப்தனான உன்னுடைய போக்யமான திருவடிகளில் –
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே -அநந்ய ப்ரயோஜனனாய்க் கொண்டு பொருந்தி அடிமை செய்யும் மனஸ்ஸையே தந்தாய் –
என் வாமனன் வல்லை காண் -மஹா பலியினுடைய நெஞ்சை வஞ்சித்து அனுகூலமாக்கின நீ என் நெஞ்சையும் அணுகூலிப்பிக்க சக்தன் என்று கருத்து-

—————————————-

அநந்தரம் -அனுபவத்துக்கு உறுப்பு அல்லாத பொல்லாத நெஞ்சைப் போக்கின உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரம் உண்டோ -என்கிறார் –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்–சர்வ ஸூலபனான வாமனனே-எனக்கு அனுபாவ்யமான மரகதம் போன்ற வடிவு அழகை யுடையவனே —
போக்தாக்களைக் கண்டு உகந்து பூர்ணமாக நோக்கும் -தாமரை போலும் கண்ணை யுடையவனே –
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து–எல்லாரும் ஆசைப்படும் அழகை யுடைய
காமனுக்கும் உத்பாதகன் ஆனவனே -என்று என்று சொல்லி
உன் திருவடிகளை பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க –ப்ரயோஜனாந்தரங்களில் போகாத ஸூத்த மனஸ்ஸை யுடையேனாய் -ஞான ப்ரயுக்தமான அலமாப்பு தீரும்படியாக
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –விஷயாந்தரங்களிலே அந்நிய பரமான தீய மனம் கெட்டுப் போம்படி பண்ணினாய் –
இப்படி எனக்கு உபகாரகனான ஸ்ரீ மானே பரிபூர்ணனான உனக்கு எத்தை செய்கேன் –
ஸ்ரீ யபதியாகையாலே–பூர்ணனான உனக்குச் செய்யலாவது ஒரு ப்ரத்யுபகாரம் இல்லை -என்று கருத்து –

——————————————————-

அநந்தரம் -விஸ்லேஷ துக்கம் தீர்க்கும்படி என் நெஞ்சுக்குள்ளே புகுந்து நான் ஹ்ருஷ்டானாம் படி அனுபவிப்பித்தான் -என்கிறார் –
தூ மனத்திலே தோற்றுவித்த பக்திக்கு விஷயமாய்க் கொண்டு நான் உய்க்கும் படி புகுந்தான் -என்கிறார் -என்றுமாம் –

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் –ஸ்ரீயபதியானவன் –அவ்ளோட்டை சம்ச்லேஷ ப்ரீதியால் செவ்வி பெற்ற தாமரை போலும் கண்ணை யுடையவன்
என்று என்று இராப்பகல் வாய் வெரீ இ –என்று என்று -இவள் இராப் பகல் வாய் வெரீஇ -2–4–5- என்கிறபடியே -இரவும் பகலும் வாய் வெருவி
அலமந்து கண்கள் நீர் மல்கி –எங்கும் நாடி நாடி –2–4–1-என்கிறபடியே அலமந்து -குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்–2–4–5-என்றும் –
கேழில் ஒண் கண்ண நீர் கொண்டாள் –2–4–10–என்கிற படியே கண்ண நீர் மல்கி
வெவ்வுயிர்த்து உயிர்த்து–உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -2–4–4-என்றும் -நெஞ்சம் வேவ நெடுது உயிர்க்கும் -2–4–8-என்கிறபடியே
பலகாலும் வெவ்விதாக நெடு மூச்சு எறிந்து
மரீ இய தீ வினை மாள –இப்படி ஆடியாடியிலே-2–4- மருவின தீவினை போம்படியாக
இன்பம் வளர -அந்தாமத்து அன்பு -2–5-தொடங்கி இன்பம் வளரும்படி
வைகல் வைகல்-சர்வ காலமும்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –இந்திரியங்களுக்கு நியாமகன் ஆகையால் உனக்கு விதேயமான என் நெஞ்சிலே
நியாந்தாவாய் போக்யனான உன்னை -பக்க நோக்கு அறியான் –2–6–2-என்கிறபடியே இருத்தி -வைத்தாய் –
பக்தி பாரவசயத்தாலே வந்த விகாரத்தை -வெவ்வுயிர்த்து உயிர்த்து-அறுதியாகச் சொல்லி -பிராப்தி பிரதிபந்தக நிவ்ருத்தி பிறந்து
அனுபவ ஆனந்தம் வளரும்படி ஸம்ஸ்லேஷித்த பிரகாரத்தை சொல்லிற்று ஆகவுமாம் –

——————————————-

அநந்தரம் -இப்படி சர்வ பிரகார உபகாரகனை விடாமையில் உண்டான அபேக்ஷையை அருளிச் செய்கிறார் –

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

இருடீகேசன் எம்பிரான் -தசை இந்த்ரியா நநமான என்னுடைய மானஸ இந்திரியத்தை நியமித்து -எனக்கு உபகாரகனாய் -அதுக்கு உதாஹரணம் என்னலாம் படி
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று–இலங்கையில் ராக்ஷஸ குலத்துக்கு
முருடான ராவணனை அழித்து நாட்டுக்கு உபகரித்தவன் –
நித்ய ஸூரி களோபாதி என்னை அனுபவிப்பித்த ஸ்வாமியானவனே -என்று பலபடியும் அனுசந்தித்து நெஞ்சே
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து–அறிவுடையையாகில் அவனை வணங்கும் படி பார் –
இத்தை சிக்கென புத்தி பண்ணு -இவ்வறிவுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –
கலக்கம் வந்ததே யாகிலும் குண பரிபூர்ணனாய் காரண பூதனான திரு நாபி கமலத்தை யுடைய
இம் மஹா உபகாரகனை விடாதே கிடாய் என்று நெஞ்சை அபேக்ஷிக்கிறார் –

——————————————————–

அநந்தரம் இப்படி அறிவு பிறந்த நெஞ்சை உடைய எனக்கு அவன் சர்வ பிரகார உபகாரகன் ஆனான் -என்கிறார் –

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்-எற்பரன்–ஜகத் உத்பத்தி ஹேது வான திரு நாபி கமலத்தை யுடையனாய் –
உத்பன்ன ஜகத் ரக்ஷண அர்த்தமாக மிகவும் உயரா நின்ற அபரிச் சின்னையான சக்தியை யுடையனாய் -இம்மேன்மையோடே என் பக்கலிலே தத் பரனாய்
என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த-கற்பகம் –அது அடியாக என்னை உண்டாக்கி அங்கீ கரித்து
எனக்கே அசாதாரணமாம் படி தன்னை தந்த கால்பக்கமாய் –
என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்வெற்பன் -எனக்கு போக்யமாய் -தரம் பாராமல் உபகரிக்கும் காள மேக சத்ருசனாய் –
அதுக்கு யோக்ய ஸ்தலமான விலக்ஷணமான திரு வேங்கடம் என்ற பேராய -இந்நிலையிலே
விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –நித்ய ஸூரி களை அனுபவிப்பிக்கிற ஆஸ்ரித பவ்யத்தையை யுடையனான தாமோதரன் –
என்னை அடிமை கொண்டான் –
கல்பகத்தில் காட்டிலும் இவனுக்கு வாசி -அர்த்தியை உண்டாக்குகையும் -அவனைத் தானே ஸ்வீகரிக்கையும் -அவன்
அபேக்ஷிதத்தை கொடுக்கை அன்றிக்கே தன்னைக கொடுக்கையும் -தானே போக்யமாகையும்-

——————————————————-

அநந்தரம் -தம்மளவில் அவன் பண்ணின உபகாரம் அதிசயித்த ஞானர்க்கும் அளவிட ஒண்ணாது -என்கிறார் –

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –2-7-12-

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை–ஆஸ்ரித பாரதந்தர்யத்தையும் ஸமஸ்த ஜகத் ஏக காரணத்வத்தையும் –
பிரளய ஆபத் ஸகாத்வத்தையும் உடையவனை –
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்-பரிச்சேதித்து அறிய ஒருவர்க்கும் போமோ என்று தொழுமவர்களாய் –
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்–அந்த தாமோதரனுக்கு ப்ரகாரத்தயா சேஷ பூதரான ருத்ரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் –
கடுகிலே கடலை மடுத்தால் போலே
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –என் பக்கலிலே தன் குண ஆரணவத்தை வைத்து
என்னை அடிமை கொண்ட ஸ்வாமியை அளவிட்டு அறியப் போமோ –
சாமான்யமான உபகாரங்களை அறிந்தாலும் -என் பக்கல் பண்ணின விசேஷ உபகாரம் அறிய அரிது -என்று கருத்து –

———————————————

அநந்தரம் இத்திருவாய் மொழிக்கு பலமாக பகவத் ப்ராப்தியை அருளிச் செய்கிறார் –

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-

வண்ண மா மணிச் சோதியை -நிறத்தை யுடைத்தாய் -பெரு விளையனான நீல மணியினுடைய ஓளி போலே இருக்கிற தேஜஸ்ஸை யுடையனாய் –
அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலைத் –இவ்வழகு-நித்ய ஸூரி களுக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாத பெரியவனாய் -ஆஸ்ரிதரைத் தானே
அனுபவிப்பிக்குமவனாய் -அதுக்கு அடியான நிரதிசய வ்யாமோஹத்தை உடையனானவனைப் பற்ற
தென் குருகூத்ச் சடகோபன் பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்–அழகிய திரு நகருக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
செய்தவையாய் சர்வாதிகாரமாக திராவிட சந்தர்ப்ப ரூபமான ஆயிரம் திருவாய் மொழிக்குள்ளும் –
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–பண்ணிலே வர்த்திப்பதாய் -திரு துவாதச நாமத்தைப் பற்றி
வருகிற பாட்டான இவை பன்னிரண்டும் -சர்வேஸ்வரன் திருவடிகளை ப்ராபிப்பிக்கும்-
இது கலித் துறை –

——————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: