பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-4-

ஆடியாடி -பிரவேசம் –
இப்படி நித்ய புருஷர்களோடே கூட எம்பெருமானை அனுபவிக்க ஆசைப்பட்ட ஆழ்வார் -அப்போதே அப்படி அனுபவிக்கப் பெறாமையாலே வந்த
நிரதிசய அவசாதத்தாலே ஒரு க்ஷண மாத்திரம் ஆத்ம தாரணம் பண்ண ஒண்ணாத தயநீய தசா பன்னராய் -அந்த தசா அனுகுணமாக
எம்பெருமானைக் குறித்துத் தாம் சொல்லுகிற வார்த்தைகளையும் செய்கிற சேஷ்டிதங்களையும் கண்டு தம்மோடு சமான சோகரான தம்முடைய பந்துக்கள்
எம்பெருமானை நோக்கித் தம்முடைய தசையை விண்ணப்பம் செய்து சொல்லுகிற படியை அனுசந்தித்து –
இப்பொருளை -எம்பெருமானை ஆசைப்பட்டு அத்யந்தம் அவசந்தனையாய் இருந்தால் ஒரு பிராட்டியுடைய திருத் தாயார் அவளுடைய தசையை
விண்ணப்பம் செய்து கொண்டு -இவள் முடிவதற்கு முன்பே ஈண்டென வந்து விஷயீ கரித்து அருள வேணும் என்று கொண்டு
எம்பெருமானை அபேக்ஷிக்கிற வாக்யாப தேசத்தாலே அருளிச் செய்கிறார் –

———————————————-

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

எம்பெருமானைப் பிரிந்த வ்யஸனத்திலே தன்னைக் கொண்டு தரிக்க மாட்டாமையாலே -தன்னுடைய ஆச்வாஸ அர்த்தமாக அவனுடைய குண சேஷ்டிதங்களைப்
பாடி யாடின விடத்திலும் அது தனக்கு ஆச்வாஸ கரமாகாதே அவசாத கரமேயாக -இனி அவனைக் கண்டால் அல்லது தரிக்க முடியாது -என்று பார்த்து –
அவனை எங்கும் தேடி -ஆஸ்ரிதருடைய துர் தசைகளில் ஸஹ ஸைவ தோன்றிக் கொண்டு நிற்கும் ஸ்வ பாவனானவனே -என்று அழைத்து –
பின்னையும் கண்டாலும் தேறாததொரு படி அற வாடிப் போய் -அற வாடினாள் இவ்வாணுதல் -என்று திருத் தாயார் ப்ரஸாபிக்கிறாள் —

————————————————————–

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-

உம்மைக் காண வேணும் -என்னும் ஆசையாலே இவள் நையா நின்றாள் -உம்மைக் காணும் படி இவள் பாக்கள் கிருபை பண்ணுகிறிலீர் —
பிரதிகூலர் திறத்தில் அன்றோ இப்படி நைர்க்ருண்யம் பண்ணுவது -உம்மை ஆசைப் பட்டார் நிறத்திலும் இப்படி நைர்க்ருண்யம் பண்ணலாமா -என்கிறாள் –

—————————————————————

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–

அவசன்னமான மனசை யுடையளாய் எரியணை அரக்கும் மெழுகும் போலே விரஹ அக்னியாலே-தஹ்யமாநையான இவள் பக்கல்
கிருபையும் கூடப் பண்ணுகிறிலீர் -இதற்கு என் செய்கேன் -கெட்டேன் -ஓ கொடுமையே இது -என்கிறாள் —

———————————————————–

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-

இப்படி நான் அவனுடைய கொடுமையை நினைத்து இலங்கை செற்றீர் -என்று சொல்லும் அளவில் -தான் அத்தைக்கு கேட்டு அவனுடைய பிரணயித்வத்தையே நினைத்து
இலங்கை செற்றவனே -என்னும் -பின்னையும் -பெரிய திருவடி மேலே ஏறி அருளி வந்து தோன்றாய்-என்னும் -என்றால் அப்போதே வரக் காணாமையாலே
உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்கலங்கி இவள் நின்று கை தொழா நிற்கும் -என்கிறாள் –

————————————

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5-

இலங்கை செற்றவனே என்றும் -வலம் கொள் புள்ளுயிர்த்தாய் என்றும் -இப்படி இராப் பகல் வாய் வெருவி-தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்–
இப்படி தயநீய தசை வரச் செய்தேயும் வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடுக்ககிறிலீர் –
பரம காருணிகரான உம்முடைய காருண்யம் இருக்கும் படி இதுவோ -என்கிறாள் –

———————————————-

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-

இப்படி இவளுடைய பிரசங்கத்தாலே அவனுடைய கிருபையை நினைத்து பரம காருணிகனே-என்று கூப்பிடும் -இப்படி கிருபையை யுடையவன் நம்மைக் கை விடான் -என்று
பார்த்துப் பின்னையும் மிகவும் ஆசைப்படும் -ஆசைப்பட்ட அப்போதே பெறாமையாலே வந்த அவசாதத்தாலே நெஞ்சு உருகும் படி உருகி நின்று –
கேட்க்கச் சொல்ல க்ஷமை அல்லாமையாலே போய்த் தன்னுள்ளுள்ளே பிரானே என்றும் என்னுடைய போக்யம் என்றும் சொல்லா நிற்கும் -என்கிறாள் –

——————————————————

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-

எம்பெருமானை பிரிகையாலே பரிதப்தையாய்–அந்தப் பரிதாபத்தைப் பொறுக்க மாட்டாமையாலே விடாய் பட்டார் -தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே
என் வள்ளலே என் கண்ணனே -என்னும் -பின்னும் -வெள்ள நீர்க் கிடந்தாய் -என்னும் -எம்பெருமானையும் கூட
வசீகரிக்கும் அழகுடையாளான இவள் அவனுடைய குணங்களில் இங்கனே அகப்பட்டாள்-என்கிறாள் –

—————————————————————-

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-

உன்னுடைய குணங்களில் என்னை அகப்படுத்தினவனே -என்னும் -பின்னைத் தன் திரு வாயால் ஒன்றும் சொல்ல மாட்டாமையாலே தன் கையாலே தொழுது இருக்கும் –
அப்போதே அவனைக் காணாமையாலே தன் நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும்-உம்மை -தன்னுடைய ஆபத்துக்குத் துணை -என்று
விஸ்வஸித்து இருந்த இவளும் உமக்கு பிரதிகூலனான கம்சன் பட்டது படுவதே -என்கிறாள் –

——————————————

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9-

ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாகத் திருவாழியை ஏந்திக் கொண்டு இருக்கிற நீர் உம்மோடு ஸம்ஸ்லேஷிக்கையில் உள்ள அபி நிவேசத்தாலே
மற்று ஒன்றும் அனுசந்திக்க க்ஷமை யன்றிக்கே இருக்கிற இவள் திறத்தில் செய்ய நினைத்து அருளிற்று என் -என்கிறாள் –

————————————

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –2-4-10-

உம்மை ஆசைப்படும் ஸ்வ பாவையாய் -உம்முடைய துர்லபத்வத்தை அறிய மாட்டாத பால்ய தசா பன்னையாய் இருந்த இவள் –
உம்மை ஆசைப்பட்டுப் பெறாத வ்யசனத்தாலே அத்யந்தம் அவ சன்னை யானாள்-இவள் முடிவதற்கு முன்னே –
பிரதிபந்தகங்களையும் நீரே போக்கிக் கொண்டு ஈண்டென வந்து ரஷித்து அருள வேணும் -என்று எம்பெருமானை அபேக்ஷிக்கிறாள் –

—————————————————-

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

ஆழ்வார் இப்படி அவசன்னரான இடத்தில் அவருடைய அவசாதம் எல்லாம் போம்படி வந்து தோன்றி அருளுகையாலே வாட்டமில்லாத —
பிரணயித்வ –காருண்ய –ஸுசீல்யாதி-கல்யாண குணங்களை யுடையனாய் இருந்த எம்பெருமானைச் சொன்ன
இத்திருவாய் மொழி அவன் திருவடிகளில் அழகியதொரு திருமாலையாகச் சூட்டலாம் -என்கிறார் –

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: