பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-3-

ஊனில் வாழ் உயிர் -பிரவேசம் –
இப்படி ஸ்வ உஜ்ஜீவன அர்த்தமாக வந்து தோற்றி அருளினவன் தம்மோடு கலந்து அருளின படியைச் சொல்லுகிறார் –

—————————

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக போகனாய் ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனாய் எனக்கு ஸ்வாமியாய் இருந்த எம்பெருமான் தானும் -யானும் -எல்லாப் படியாலும்
இந்தக் கலவியினுள்ளே எல்லா ரசனைகளும் யுண்டாம்படி கலந்து ஒழிந்தோம் –திரு நாட்டிலே சென்றால் ரசிக்கக் கடவ பகவத் ஏக போகத்வத்தை இந்த ப்ரக்ருதியிலே
இருந்து வைத்தே பெற்று வாழுகிற நெஞ்சே உன்னைப் பெற்றே இந்த ஸம்ருத்தி எல்லாம் விளைந்தது -நல்லை நல்லை -என்று நெஞ்சைக் கொண்டாடுகிறார் –

——————————————

இப்படி நெஞ்சைக் கொண்டாடி எம்பெருமான் தமக்குச் செய்து அருளின ஸம்ருத்தியை அவன் தனக்குச் சொல்லிக் கொண்டு அனுபவிக்கிறார் –

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

நிரஸ்த சாமாப்யதிகனாய் -ஆச்சர்ய பூதனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித ஜனங்கள் எல்லோரோடும் சஜாதீயனாய் வந்து பிறந்து அருளி -அவர்களுக்கு அத்யந்த ஸூலபனாய் இருந்து
எனக்கு அவ்வளவு அன்றியே ஒருவன் தான் தனக்குச் செய்யும் நன்மையையும் -மாதா புத்ரனுக்குச் செய்யும் நன்மையும்-பிதா புத்ரனுக்குச் செய்யும் நன்மையும்
ஆச்சார்யன் சிஷ்யனுக்குச் செய்யும் நன்மையும் செய்து அருளினாய் -இன்னம் அடியேன் திறத்து நீ செய்து அருளினவற்றுக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் என்கிறார் –

——————————————————-

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-

தம் திறத்தில் எம்பெருமான் செய்து அருளின நன்மைகளை பேசுகிறார் –

——————————————-

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –2-3-4-

இப்படி எம்பெருமானோடு கலந்த கலவியால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே அறிவு அழிந்து -இவ்வாத்மா தம்முடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய் –
அவன் தம்மோடு கலந்த இப்பெரு நல்லுதவிக் கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா அடிமையாகக் கொடுத்து பின்னையும் –
தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -தருகிற நான் ஆர் -தரப் புகுந்த இவ்வாத்மா ஆர் –
பண்டே உனக்கு சேஷமாய் இருக்கிற இவ்வாத்மாவை நீ கொண்டு அருளினாய் அத்தனை இ றே -என்கிறார் –

———————————————

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5-

அநாஸ்ரிதர் எத்தனையேனும் உத்க்ருஷ்டரே யாகிலும் அவர்களுடைய ஞானங்களுக்கு அகோசரனாய் –அநந்ய பக்திகளாய் இருப்பார்க்குப் பரம ஸூலபனாய் –
தாதருச பக்தி ஹீனனாய் இருக்கச் செய்தே-எனக்கு அத்யந்த சித்த போக்யனாய் சமுத்ரத்திலே அழுந்திக் கிடக்கிற ஆத்ம வர்க்கத்தை
நிர்ஹேதுகமாக எடுத்து உஜ்ஜீவிப்பித்தால் போலே உன்னுடைய கிருபையாலே அநந்ய கதியாய் இருந்த என்னுடைய உஜ்ஜீவன ஹேது பூதனானவனே –
உன் திருவடிகளை இனி ஒரு நாளும் பிரியாது ஒரு படி சேர்ந்தேன் -என்கிறார் –

————————————————

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6-

போன காலமும் ஸம்ஸ்லேஷித்தோம் -என்று தமக்குத் தோற்றும்படி எம்பெருமானோடே தாம் ஸம்ஸ்லேஷிக்கையாலே –ஆஸ்ரிதருடைய ஸ்வ விஷய திவ்ய ஞான
விரோதி பாபங்களுக்கு நஞ்சாய் -அவர்களுக்கு ஸ்வ விஷய த்ருட ஞான பிரதனாய் -இப்படி தன்னுடைய ப்ரஸாதத்தாலே லப்த ஞானராகையாலே –
சம்யக் வியவஸ்திதராய் இருந்தவர்களை சம்சாரத்தில் புகை விடாதே அவர்களோடு பிரியாதே ஸம்ஸ்லேஷிக்கும் ஸ்வ பாவனுமாய் –
ஆஸ்ரித விரோதி நிராசன ஸ்வபாவனுமாய் இருந்த உன்னோடு இன்றோ அடியேன் ஸம்ஸ்லேஷிக்கப் பெற்றது -இவ்வாத்மா உள்ளவன்றோ பெற்றேன் அன்றோ -என்கிறார் –

—————————————————–

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-

சர்வ கரணங்களுக்கும் நிரவதிக போக்ய பூதனாய் -உன் திருவடிகளுக்கு நல்லராய் இருப்பார் எல்லாருக்கும் உன்னைக் கொடுக்கும் ஸ்வ பாவனாய் –
அவர்களுடைய த்வத் அனுபவ விரோதி சர்வ தோஷ நிராசன ஸ்வ பாவனாய் இருந்த உன்னை எனக்கு நிர்ஹேதுகமாகத் தந்து அருளினாய் –
நீ அல்லது எனக்கு ஒரு தாயகம் இல்லை -இனி என்னைக் கைவிடாதே கிடாய் -என்று கொண்டு –
எம்பெருமானோடு தமக்கு வ்ருத்தமான சம்ச்லேஷத்துக்கு பங்கம் வருகிறதோ என்னும் அதி சங்கையாலே எம்பெருமானை அபேக்ஷிக்கிறார் –

———————————————–

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-

தாம் இப்படி எம்பெருமானை அபேக்ஷிக்க -அவனும் -நாம் விஸ்லேஷிக்க பிரசங்கம் என் -என்று அருளிச் செய்ய
தாமும் நிவ்ருத்தாதி சங்கராய்க் கொண்டு அதி துஷ்கரமாய் அநேக கால ஸாத்யமான கர்ம யோக ஞான யோக சஹ்ருத பக்தி யோக ஸாத்யமான
சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் அனுபவத்தை இஜ் ஜென்மத்தில் அல்ப காலத்திலேயே அயத்நேந நான் பெற்றேன் -என்று
தாம் பெற்ற ஸம்ருத்தியைச் சொல்லி அனுபவிக்கிறார் –

—————————————

டிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9-

நிரவதிக போக்ய பூதனாய் -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்- திரு நாட்டிலும் கூடத் தன்னோடு ஒத்தாரையும் மிக்காரையும் உடையவன் அல்லாமையாலே -பராமனாய் –
ஸ்வ ஆஸ்ரிதருடைய ஸ்வ சம்ச்லேஷ விரோதி சர்வ தோஷங்களையும் போக்கும் ஸ்வ பாவனாய் இருந்த எம்பெருமானுடைய கல்யாண குணங்கள் ஆகிற
அம்ருத வெள்ளத்திலே என்னுடைய விடாய் எல்லாம் கெடும்படி போய்ப் புக்குப் படிந்து குடைந்தாடி வாய் மடுத்துப் பருகிக் களித்தேன் -அடியேன் -என்கிறார் –

————————————————————–

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-

இப்படி எம்பெருமானுடைய குணங்களாகிற அம்ருதத்தை புஜிக்கிற ஆழ்வார்-இந்த அம்ருதத்தை நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகனாய்க் கொண்டு
பகவத் குணைக போகரான நித்ய சித்த புருஷர்களுடைய திவ்ய பரிஷத்திலே சென்று அவர்களோடே கூட நான் புஜிப்பது என்றோ -என்கிறார் –

————————————————

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-

சா புத்ர ஜன பாந்தவமாக ராவணன் மடியும் படி சிவந்தவனை உள்ளபடி கண்டு சொன்ன இத்திருவாய் மொழியை
பகவத் ஏக போகராய் இருப்பார் எல்லாரும் கூடி புஜ்ஜியுங்கோள் என்கிறார் –

———————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: