பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-1-

வாயும் திரையுகளும்-பிரவேசம் –
இப்படி நிரவதிக ஸுந்தர்யாதி கல்யாண குண கண பரிபூர்ணனாய் இருந்த எம்பெருமானை ப்ரத்யஷித்தால் போலே தம்முடைய திரு உள்ளத்தாலே அனுபவித்து
பாஹ்ய சம்ச்லேஷத்தில் உள்ள அபேக்ஷையாலே அதிலே ப்ரவ்ருத்தராய் அது கை வராமையாலே அத்யந்தம் அவசன்னராய் அந்யாபதேசத்தாலே ஸ்வ தசையைப் பேசுகிறார் –
பகவத் சம்ச்லேஷ வியோகைக ஸூக துக்கையாய் தத் விஸ்லேஷத்தினாலே அத்யந்தம் அவசன்னையாய் இருந்தாள் ஒரு பிராட்டி
ஸ்வ த்ருஷ்ட்டி கோசாரமான பதார்த்தங்களினுடைய ப்ரவ்ருத்தி விசேஷங்களை பகவத் விஸ்லேஷ ஜெனித துக்க ஹேது கமாக ஸ்வ ஆத்ம அனுசந்தானத்தாலே
அனுசந்தித்து -அந்தச் சேதன அசேதன பதார்த்தங்களைக் குறித்து நீங்களும் நான் பட்டது பட்டிகள் ஆகாதே -என்கிறாள் –

———————————–

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

வாயும் திரைகள் உகளுகிற கழியிலே வர்த்திக்கிற மட நாராய் -நீ உறங்கிலும் உறங்காத உன்னுடைய தாய்மாரும்
ஸ்வபாவத ஏவ உறங்காத தேவா லோகமும் உறங்கிலும் நீ உறங்குகிறிலை–ஆதலால் விரஹ வ்யாஸன வைவர்ண்யத்தாலே
அபிபூதையான என்னைப் போலே நீயும் எம்பெருமானை ஆசைப் பட்டாய் ஆகாதே -என்கிறாள் –

———————————————-

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-

கூர்வாய அன்றிலே–அபஹ்ருதமான நெஞ்சை யுடையையாய் நீளியவான ராத்ரிகளில் உறங்காதே இரங்கா நின்றாய் –
நீயும் என்னைப் போலே பெரியபெருமாள் திருவடிகளில் திருத் துழாயை ஆசைப்பட்டாய் யாகாதே -என்கிறாள் –

———————————————-

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-

எம்பெருமானை ஆசைப்பட்டுப் பெறாமையாலே நீ இரவு பகல் எல்லாம் கண் துயிலாதே நெஞ்சுருகி ஏங்கா நின்றாய்-
தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினவன் திருவடிகளை ஆசைப்பட்ட நான் பட்டது பட்டாயாகாதே -ஐயோ கடலே -என்கிறாள் –

——————————————

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-

என்னைப் போலே -எங்குற்றாய் எங்குற்றாய் எம்பெருமான் -என்று கடலும் மலையும் விசும்பும் துழாவி இராப் பகல் உறங்குகிறிலை –
நீயும் எம்பெருமானுடைய திரு வாழியும் கையையும் காண ஆசைப்பட்டுப் பெறாமையாலே
காலதத்வம் எல்லாம் உடலம் நோயுற்றாய் யாகாதே -தண் வாடாய் -என்கிறாள் –

——————————————————–

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-

லோகம் எல்லாம் நிறையும்படி இக்காலம் எல்லாம் நின்று நீராய் உருகுகிற வாழிய வானமே -நீயும் எங்களை போலே
எம்பெருமானுடைய குண சேஷ்டிதங்களிலே அகப்பட்டு -அவன் பக்கலுள்ள சங்கத்தாலே இப்படி நைந்தாயாகாதே -என்கிறாள் –

——————————————–

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-2-1-6-

நாண் மதியே -நீ இந்நாள் வழிதான் இருளை அகற்றுகிறிலை–மழுங்கித் தேயா நின்றாய் -நைவும் தானாய் இருந்த என்னைப் போலே நீயும் –
பேதை நின்னைப் பிரியேன் -பெரிய திரு மொழி -9–3–3-என்றும் -ஏதத் விரதம் மம-என்றும் -மா ஸூச -என்றும் -எம்பெருமான்
அருளிச் செய்த வார்த்தையைக் கேட்டு -திருவனந்த ஆழ்வான் தொடக்கமாக யுள்ள திவ்ய புருஷர்களோடே பழகி வர்த்திக்கிற இவன்
மெய்யல்லது சொல்லான் -என்று கொண்டு அவ்வார்த்தையை விஸ்வஸித்து அகப்பட்டாயாகாதே -என்கிறாள் –

——————————————————–

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-

எம்பெருமானுடைய ஆஸ்ரித ஸூலபத்வாதி குணங்களாலே அவனுக்குத் தோற்று அடிமையானோம் -ஆதலால் -அவனைப் பிரிந்த வ்யசனத்தை
ஒன்றும் பொறுக்க மாட்டுகிறிலோம்-என்று சொல்லிக் கொண்டு அழுகிற எங்களை நீ
நடுவே சத்ருக்களிலும் கொடியையாய் நின்று எத்தனை காலம் பாதிக்கக் கடவை-கனை இருளே -என்கிறாள் – –

——————————-

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்-அறிவழிந்து இராப்பகல் முடியிலும் நீ உறங்குகிறிலை -நீயும் என்னைப் போலே
உருளும் சகடம் உதைத்த பெருமானாரோடே ஸம்ஸலேஷிக்கையில் உள்ள அபி நிவேசத்தாலே ஆழாந்து நொந்தாயாகாதே -என்கிறாள் –

———————————————-

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-

நந்தா விளக்கே -இப்பாட்டு படுகைக்கு ஈடு அன்றியே இருந்த நீயும் -என்னைப் போலே கால தத்வம் எல்லாம் அனுபவித்தாலும் ஆராத காதல் நோயானது
உன்னுடைய மெல்லாவியை உள்ளுலர்த்த -செந்தாமரைத் தடம் கண் செங்கனி வாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாயினுள்ளே ஆசை யாகிற மஹா அக்கினியால் வேவா நின்றாய் ஆகாதே -என்கிறாள் –

————————————-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

அதாஹ்யமான என்னுடைய மெல்லாவி முடிந்தாலும் தவிராதே நின்று வேட்க்கை நோயானது தஹிக்கும் படி உன்னுடைய குண சேஷ்டிதங்களாலே என்னை ஓவாதே
இராப்பகல் உன் பக்கலிலே விழுந்து கிடக்கும் படி பண்ணினாய் -இனி அடியேனைச் சொர விடாது ஒழிய வேணும் -என்கிறார் –

——————————————–

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-

இப்படி எம்பெருமானைப் பிரிந்த வ்யசனத்தாலே முடியப் புகுகிற தம்மை உஜ்ஜீவிப்பைக்காக வந்து தோற்றி அருளின எம்பெருமானைக் கண்டு தாமும் உஜ்ஜீவித்து
ஸ்வ உஜ்ஜீவனத்தாலே எம்பெருமான் ஸர்வேஸ்வரத்வம் அவிகலமான படியைக் கண்டு ப்ரீதராய் -அடியேன் இவனுடைய ஸர்வேஸ்வரத்வம்
அவிகலமாகப் பெற்றேன் ஆகாதே -என்று உகந்து கொண்டு எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வத்தை அனுபவித்து இப்படி சர்வேஸ்வரனாய் இருந்த
எம்பெருமான் பக்கலுள்ள நிரவதிகமான ஆசையாலே சொன்ன இத்திருவாய் மொழியை விடாதார் ஒரு நாளும் எம்பெருமானைப் பிரியார் -இது நிச்சிதம் -என்கிறார் –

——————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: