அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-1-

வாயும் திரையுகளும்-பிரவேசம் –
இரண்டாம் பத்தில் -இப்படி பரத்வாதி குணங்களால் பரம சேஷியான சர்வேஸ்வரனுடைய சர்வ ரக்ஷகத்வ ப்ரயுக்தமான உபாயத்வத்தை ப்ரதிபாதித்து –
அநந்தரம் -இப்பத்தாலே உபேயத்வ உபயுக்தமான அவனுடைய நிரதிசய போக்யதையை அருளிச் செய்வதாக 1-அந்த போக்யத அதிசய ஸூசகமான –
அல்ப கால விஸ்லேஷத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும் –
2–ஆச்சர்ய ரூபமான -உத்துங்க லலிதத்வத்தையும் –
3–சர்வ சாரஸ்ய சமவாய ரூப திவ்ய போக்யத்தையும் –
4–போக அலாபத்தில் வந்த ஆர்த்தியைப் போக்கி ரஷிப்பான் அவனே -என்னும் இடத்தையும் –
5–ஆர்த்தி தீரும்படி கிட்டினவனுடைய ஹர்ஷ காரிதமான ஸுந்தர்ய அதிசயத்தையும் –
6–ஆஸ்ரித சம்ச்லேஷ ப்ரீதனுடைய தத் விஸ்லேஷ பீருத்வத்தையும் –
7–சமஸ்ரித சம்பந்தி குல சந்தான பயந்த சம்ரக்ஷணத்தையும் –
8–ரக்ஷண காஷ்டையான மோக்ஷ பிரதத்வத்தையும் –
9–மோக்ஷ தாத்பர்யமான பாரதந்தர்யத்தையும் –
10–போக பிரதிசம்பந்திதயா சாந்நித்யத்தையும் –
அருளிச் செய்து போக்யதையை உபபாதித்து அருளுகிறார் –
அதில் முதல் திருவாய் மொழியில் -க்ஷண விளம்பத்திலும் கிலேச அதிசய ஜனகமான ஈஸ்வரனுடைய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–தத் உபபாதகமான அவனுடைய ஸ்ரீ யபதித்வத்தையும் –
2–சேஷ சாயித்வத்தையும் –
3–அநிஷ்ட நிவர்த்த கத்வத்தையும்-
4–நிவர்த்தக பரிகர வத்தையும் –
5–சக்தி யோகத்தையும்
6–சத்யவாதித் வத்தையும்
7–சம்பந்த விசேஷத்வத்த்வத்தையும்
8–காருணிகத்வத்தையும்-
9–கமநீய விக்ரஹ யோகத்தையும் –
10–காரணத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் வித போக்ய பூதனுடைய அல்ப கால விளம்பத்தில் ஆற்றாமையாலே அசேஷ பதார்த்தங்களும் தம்மைப் போலே அவனைப் பிரிந்து
நோவு படுகிறனவாக -அபிசந்தி பண்ணும்படி கலங்கின பிரகாரத்தை -நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்தாள் ஒரு நாயகி சகல பதார்த்தங்களும் தன்னைப் போலே
தத் விரஹ துக்கத்தாலே ஈடுபடுகின்றனவாக நினைத்துப் போலிமைக்கு இரங்கி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
இது தன்னுடை யாறெய்திடு கிளவி-என்பர் –

————————————————————————

முதல் பாட்டில் -மணியை வானவர் கண்ணனை -1–10–11-என்று கீழே ப்ரஸ்துதமான போக்யதா அதிசயத்துக்கு வர்த்தகமாய் உள்ள ஸ்ரீ மஹா லஷ்மீ சம்ச்லேஷத்தை
அனுசந்தித்து ஈடுபட்ட நாயகி -கடற்கரைக்கு அருகான தன் உத்யானத்திலே இருந்ததொரு நாரையைப் பார்த்து -நீயும் அவனாலே நெஞ்சு பரியுண்டாயோ -என்கிறாள் –

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்–மேன்மேலும் கிட்டுகிற திரையில் அமுங்கி கிடப்பதாய் -கடற்கரையிலே -உன் நினைவு கைவரும் தனையும் -ஓங்கி இருக்கிற நாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்–உறக்கம் இல்லாத தாயும் -உறங்காமை நித்யமான தேவ லோகமும் -உறங்கிலும் நீ உறங்குகிறிலை –ஆதலால் –
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்-உள்ளே நோவும் உண்டாய் அதின் கார்யமான புயலையும் ஆகிற உடம்பில் வெளுப்பு மேலிட்டு வர
அபிமத விஷயமாய் அகப்பட்ட எங்களைப் போலே
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –அதுக்கு அடைவற்று இருக்கிற நீயும் -ராசாத்தி மாத்ரமே ஹேதுவாக ஸ்ரீ யபதியால் நெஞ்சு பறித்துக் கொள்ளப் பட்டாயே –
ஏ -என்னும் அசை -வினா –
இத்தால் -சாம்சாரிக கல்லோலத்தை மதியாது இருப்பார்க்கு உறங்காமையும் ரூப விபர்யாஸமும் பகவத் விஸ்லேஷ ஜெனிதம் என்று இருக்கை –

———————————————

அநந்தரம் ஓர் அன்றிலைப் பார்த்து நீயும் சேஷ சாயியான அவன் திருவடிகளிலே திருத் துழாயை ஆசைப் பட்டாயோ -என்கிறாள் –

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே–பறியுண்ட நெஞ்சை உடையையாய்க் கொண்டு அந்த ஆர்த்தி அடியாக
கத்கதமாகையாலே செறிந்த குரலை யுடைத்தான அன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்–நெடிதான யாமங்கள் -சேர்க்கையில் சேராதே துக்கியா நின்றாய் –ஆதலால் –
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்-அடிமைப்பட்ட எங்களை போலே பிரிவாற்றாமை தோற்றி இருக்கிற நீயும்
திரு அரவு அணையைத் தனக்கு நிரூபகமாக உடையவனுடைய
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –திருவடிகளிலே போக தசையில் மிதி யுண்ட செவ்வியை யுடைய திருத் துழாய் மாலையை -ஆசைப் பட்டாயோ-
வாய் என்று -வாய்மையாய் -குரலைச் சொல்லுகிறது –
கூர்தல் -செறிவு -அன்றியே
கூர்ந்த வாய் -என்று பிரிந்தாரை ஈரும் குரல் -என்றுமாம் –
இத்தால் -ஆர்த்த த்வனி யுடையார் அவனைப் பிரிந்து கூப்பிடுகிறார்கள் -என்று இருக்கை —

———————————————

அநந்தரம் -கத்துகிற கடலைப் பார்த்து விரோதி நிவர்த்தகனான அவனுடைய திருவடிகளை ஆசைப்பட்ட என்னைப் போலானாயோ -என்று சொல்லுகிறாள் –

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்-நீ -காமிக்கப் பட்ட போகங்கள் -கைபடாத இழவோடே கூடினால் போலே நீ இராப் பகல்
முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்–முழுக்க கண் உறங்குகிறிலை -அகவாயும் நீராய் -ஏங்கின குரல் இறங்காமல் முழுக்கக் கூப்பிடா நின்றாய் -ஆதலால் –
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த–தென் இலங்கையை முற்ற தீயூட்டினவன் திருவடிகளை ஆசைப்பட்ட –
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –நாங்கள் பட்டது பட்டாயோ -இரைக்கிற கடலே -உன் கிலேசம் தீர்ந்து வாழ்வாயாக –
எல்லே -என்று கடலுக்கு சம்பத்தி யாதல் /என்னே-என்னும் வெறுப்பு ஆதல் –
இத்தால் -மஹத்தையை யுடையார் வாய்விட்டு அலறுவது அவனை பிரிந்தால் என்று இருக்கை –

——————————————

அநந்தரம் விரோதி நிராசன பரிகாரத்தை உடையவனைக் காண வேணும் என்னும் வ்யாசனத்தை
நீ யுற்றனையோ-என்று ஒரு வாடையைப் பார்த்துச் சொல்லுகிறாள் –

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-

தண் வாடாய்-ஸந்நிபதித சரீரம் போலே குளிர்ந்து இருக்கிற வாடாய் –
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்–கடலும் மலையும் விசும்பும் தடவிக் கொண்டு –
அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே நாகஸ்ய ப்ருஷ்டே -என்று ஷீராப்தியிலும் திருமலையிலும் பரமபதத்திலேயும் அவனை ஆராய்கிற-எங்களை போலே
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் –சந்த்ர ஆதித்ய தேஜஸ்ஸூக்களை நிரூபகமாக யுடைய இரவும் பகலும் ஓர் இடத்திலே பர்யவாசித்து உறங்குகிறிலை -ஆதலால் –
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ–மஹா பாராத யுத்தத்தில் ஆயுதம் எடேன் என்று வைத்து எடுத்த திரு வாழியை யுடைய சர்வேஸ்வரனை –
அந்த பீஷ்மர் கண்டால் போலே காண நினைத்து -சர்வ உபகாரகமான நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –கல்ப பேதங்கள் பிறந்து நடந்தாலும் காலமுள்ளதனையும் அவனை ஒருப்பட்டு-
சரீரம் உள்ளதனையும் வ்யாப்தமான வ்யாதியைக் கொண்டாயோ –
உபகார சீலர்க்கும் உடம்பில் வரும் விகாரங்கள் அவனைக் காணப் பெறாமல் -என்று கருத்து –

———————————————-

அநந்தரம் நீயும் அவன் சக்தி யோகத்தில் அகப்பட்டு சிதிலமாகிறாயோ -என்று ஒரு மேகத்தைக் கண்டு உரைக்கிறாள் –

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-

தோழியரும் யாமும் போல்-ஸமான துக்கைகளான தோழிமாரும் துக்கோத்தரைகளான நாங்களும் போலே –
ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு-லோகம் நிரம்ப வேண்டும் நீரைக் கொண்டு காலமுள்ளதனையும்
நீராய் நெகிழ்கின்ற வானமே நீயும் மதுசூதன்-ஜலமயமாய் இற்று விழுகிற மேகமே உதார செல்லமான நீயும் -மதுமர்த்தனுடைய
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே-பேறு மிடுக்கிலே அகப்பட்டு அவன் பக்கல் ஸ்நேஹத்தாலே சிதிலமாகிறாயே –
வாழிய-இந்த ஸைதில்யம் தீர்ந்து வாழ்வாயாக –
இத்தால் -உதார ஸ்வபாவர்க்கு ஸைதில்யம் பகவத் விரஹ ஜெனிதம் -என்கிறாள் –

————————————————-

அநந்தரம் எங்களைப் போலே அவன் சத்யவாதித்வத்திலே -அகப்பட்டாயோ -என்று ஷீணனான சந்த்ரனைக் குறித்துச் சொல்லுகிறாள் –

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-2-1-6-

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்–நைகையே ஸ்வ பாவமான எங்களை போலே கலா மாத்ரமான சந்திரனே -தேஜோ ரூபமான நீ -இக்காலத்திலே
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்–மாய் போலே இருக்கிற ஆகாசத்தில் இருளை போக்குகிறிலை -மழுங்கி குறையா நின்றாய் -ஆதலால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்–பொய்மைக்குப் பல முகமும் இரண்டு நாவுமுடைய திரு அரவணை மேற்கொண்டு –
பொய்க்குப் பெரு நிலை நிற்கும் திரு வாழியை யுடையராய் -இவர்களைப் பொய் கற்பிக்கும் பெருமையை யுடையவருடைய
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-பெறும் பொய்யான வார்த்தையை கேட்டு உன் வடிவில் உஜ்ஜ்வல ஸ்வ பாவத்தை இழந்தாயோ –
நாண் மதி -புது மதி –
மேய்வான் இருள் -கருத்த பெரிய இருள் -என்றுமாம் –
மாழாந்து -மழுங்கி
இத்தால் -உஜ்ஜ்வல ஸ்வபாவடைய ஓளி மழுக்கம் அவனுடைய யுக்தி வையர்த்ய சங்கா வஹமான விளம்பம் -என்று கருத்து –

————————————————-

அநந்தரம் -நிருபாதிக சம்பந்த யுக்தனானவனைப் பிரிந்து ஆர்த்தையான என்னை உன் ஈடுபாட்டைக் காட்டி நலிவதே -என்று
இருளைக் கண்டு ஈடுபட்டு உரைக்கிறாள் –

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-

எம்பெருமான் நாரணற்கு–மட நெஞ்சம்–தோற்றோம் -எங்கள் ஸ்வாமியான நாராயணனுக்கு எங்களுக்கு விதேயமான நெஞ்சை இழந்தோமாய்-அதடியான
எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே-எங்கள் ஆற்றாமையை வாய்விட்டுச் சொல்லி அழுகிற எங்களைப் பற்ற –
நீ பாத்ய பாதக சம்பந்தம் அற்று இருக்க -நடுவே புகுந்து –
வேற்றோர் வகையில் கொடியதாய் -சத்ருக்கள் படியிலும் கொடிதாம்படி –
எனையூழி மாற்றாண்மை நிற்றியே -காலமுள்ளதனையும் எங்கள் நோவுக்கு மறுதலையான ஆளாகையாலே நிலை நிற்கிறாயோ –
வாழி கனையிருளே –திணுங்கின இருளே உன் சந்நிதியைக் காட்டி நலியாதே கிலேசம் தீர்ந்து வாழ வேண்டும் –
கனை இருள் -திணுங்கின இருள் –
இவள் நோவுக்கு மறுதலையான ஆளாகையாவது -இருள் தானும் ஈடுபடுகை–
இதன் கருகுதல் விரஹத்தாலே என்று நினைத்து பொறுக்க மாட்டாமல் உரைத்தால் ஆயிற்று –
இத்தால் தமஸ் ப்ரக்ருதிகளுடைய மாலினியமும் சர்வேஸ்வரனைப் பிரிந்து என்று இருக்கை –

——————————————

அநந்தரம் -அவன் காருணிக்கவத்திலே நசை பண்ணி ஆழங்கால் பட்டாயோ -என்று கழியைப் பார்த்துக் கலங்கி உரைக்கிறாள் –

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே–இருளினுடைய செறிந்த நிறத்தை யுடைத்தான பெரிய நீரை யுடைய கழியே-
போய் மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்-மிகவும் அறிவு கெட்டு அஹோராத்ர ரூபமான காலமும் முடியிலும் நீ உறங்குகிறிலை -ஆதலால் –
உருளும் சகடம் உதைத்த பெருமானார்-உருளுதலை யுடைத்தான சங்கடத்தை திருவடிகளாலே உத்தரித்த பெரியவருடைய
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –கிருபா குணத்திலுண்டான பெரிய ஆசையால் ஆழங்கால் பட்டு நொந்தாயோ –
மா நீர் -என்றது கருத்த நீர் -என்றுமாம்
இத்தால் -ஜல-ஜட -ப்ரப்ருதிகளும் -அவன் கிருபா குணத்திலே அகப்பட்டால் கால் தாழ்வர்-என்று கருத்து –

————————————————————-

அநந்தரம் காம நீய விக்ரஹனானவனுடைய போக்யதா விஷயமான ஆசையால் வெதும்புகிறாயோ -என்று ஒரு விளக்கை உரைக்கிறாள் –

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-

நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்–ஒன்றாய் வீவற்ற விளக்கே இப்படி வி லக்ஷணமான நீயும் –
நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த-ஈடுபட்டு இருக்கச் செய்தேயும் ஈடுபடுத்துகிறதால் வயிறு நிறையாத காதலாகிற நோயானது
உன் மேனி போலே மெல்லிதான பிராணனையும் உள்ளே உலர்த்தும்படியாக
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்-சிவந்த தாமரை போன்ற பெரிய கண்களையும் -சிவந்த கனி போன்ற வாயையும் யுடையனான
என் ஸ்வாமியானவனுடைய
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –அழகிய திருத் துழாய் மாலையில் யுண்டான ஆசையாலே பரிதபிக்கிறாயோ –
அளியத்தாய்–என்று அருமந்த -எண்ணுமா போலே நன்மையைக் காட்டுகிறது –
இத்தால் -அவன் வடிவழகில் ஆசை தேஜஸ்விகளையும் பரிதபிக்கும் -என்கை –

——————————————————-

அநந்தரம் -இவ்வார்த்தியைக் கண்டு சந்நிஹிதனான சர்வ காரண பூதனாய் யுள்ள ஈஸ்வரனை -நீ என்னை நழுவாதே ஒழிய வேணும் -என்று அபேக்ஷிக்கிறார்

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த–வேவித்து திருப்தமாகாத ஆசையாகிற நோயானது விரஹத்தாலே
பல ஹீனமான ஆத்மாவை கருத்து வற்றாக வற்றுவிக்க
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்-இராப்பகல் இடை விடாதே உன் ஸ்வ பாவங்களில் தாழ்ந்து அகப்படும் படி பண்ணினவனாய் –
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த–உன்னைக் கிட்டுவார்க்கு விரோதியான கேசியாகிற குதிரையின் வாயை பிளந்து –
த்வந்த்வமான பூமியை அளந்து கொண்டு -அத்தாலே
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –இளகிப் பதித்த சர்வ காரண பூதனே -இனி ஒரு காலமும் எங்களை நழுவா விடாது ஒழிய வேணும் –
மூவா முதல்வா -என்றது -நித்ய யவ்வன ஸ்வ பாவனான உத்பாதகன் -என்றுமாம் –
இத்தால் -தம்முடைய அநிஷ்டங்களைப் போக்கி சத்தியை உண்டாக்கின படியை அனுசந்தித்தாறாயிற்று –
இதில் ஏகாரம் -தேற்றம் –

—————————————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழிக்கு பலம் பரமபத பிராப்தி என்று அருளிச் செய்கிறார் –

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே–ஒன்றும் சோராதபடி எல்லாப் பொருள்களுக்கும் காரண பூதனான பரஞ்சோதிஸ் சப்த வாச்யனுக்கே –
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்–ஒரு காலும் திருப்தி பிறவாத அபி நிவேசத்தை யுடைய ஆழ்வார்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்-அத்விதீயமான ஆயிரமாக சொன்னவற்றுக்குள்ளே அதி ப்ரேம ப்ரகாசகமான இவை பத்தையும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –நழுவ நில்லாதவர்கள் பரமபதத்தை அறுதியாக விடாதவர்கள் கிடீர் –
இது கலி விருத்தம் -நாலடித் தாழிசையுமாம் –

—————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: