பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –1-10-

பொரு மா நீள் படை -பிரவேசம் –
இப்படி எம்பெருமான் தம்மோடு கலந்த கலவையால் தமக்குப் பிறந்த நிரவதிகமான நிர்வ்ருதியாலே அக்கலவியைப் பேசுகிறார் –

———————————

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

விரோதி நிரசன சமயத்தில் அவர்களுக்குத் தக்கபடி அன்றியே அதிகமாக்க கிளர்ந்து கொண்டு செல்லும் ஸ்வபாவமான திரு வாழி திருச் சங்கு முதலான
திவ்ய ஆயுதங்களை ஏந்தின அவ்வழகையும் -அளவிறந்த அழகை யுடைத்தான தன் திருவடிகளையும் -சர்வாத்மாக்களும் கண்டு தொழும்படியாக
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக்கம் என் கண்ணுள்ளே இருந்தது -என்கிறார் –

————————————————-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-

சர்வ ஜெகதீஸ்வரனான எம்பெருமான் தன்னுடைய அபி நிவேசத்தாலே என்னுடைய மநோ ரதத்தை விஞ்சும்படி
என்னுடைய கண்கள் தொடக்கமாக யுள்ள சர்வ கரணங்களுக்கும் போக்யமாக இனி நமக்கு வேண்டுவது உண்டோ -என்கிறார் –

——————————————-

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

இப்படி தம்மோடு கலந்து அருளின எம்பெருமான் பிராட்டியும் தானுமாக எழுந்து அருளி இருக்கிற இருப்பையும் -தன் திருக் கண்களால்
தம்மைக் குளிர பார்த்து அருளுகிறபடியையும் கண்டு ப்ரீதராய் -எம்பிரான் -என்றும் -எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரான் -என்றும் –
அவனை ஏத்திக் கொண்டு தமக்குத் துணையாக –
எம்பெருமானைத் தொழாய் மட நெஞ்சமே -என்று தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

——————————————-

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-

இப்படி தாம் அருளிச் செய்வதற்கு முன்பே தம்முடைய திரு உள்ளம் அவனுடைய திருவடிகளிலே விழும்படியைக் கண்டு உகந்து –
நல்லை நல்லை உன்னைப் பெற்றால் நமக்கு முடியாதது என் -இனி நமக்கு என்ன குறை யுண்டு -என்று
தம்முடைய திரு உள்ளத்தைக் கொண்டாடி இனி ஒரு தசையிலும் அவனை விடாதே கிடாய் -என்கிறார் –

—————————————

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-

உண்டானை உலகேழுமோர் மூவடி-கொண்டானை நீயும் நானும் காணப் பெற்றோம் –நெஞ்சமே நமக்கு
அசிந்தமாக வந்து ஸம்ருத்திகள் விளைகிற படி கண்டாயே -என்று தம்முடைய திரு உள்ளத்தோடு கூட அனுபவிக்கிறார் –

—————————————

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–

இப்படி இருவரும் ஒரு வண்ணம் எம்பெருமானைக் காணப் பெற்றோம் -இனி அவன் நம்மை விடில் செய்வது என் என்னில் -நீயும் நானும் இப்படி
அவனை விடாதே நிற்கில் சர்வாத்மாக்களுக்கும் தாயும் தந்தையாய் – சர்வ ஸ்வாமியாய் –ஆஸ்ரித ஸூலபனாய் –
இப்படி சம்ஸ்லிஷ்டனாய் இருந்தவன் ஒரு நாளும் நம்மை விடான் -நெஞ்சமே -என்னை விசுவாசித்து இரு -என்கிறார் –

————————————————

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-

இப்படித் தம்முடைய திரு உள்ளத்தோடு எம்பெருமானை அனுபவிக்கிற ஆழ்வார் -அவனுடைய உத்கர்ஷத்தையும்-தம்முடைய நிகர்ஷத்தையும் -பார்த்து –
அயர்வறும் அமரர்கள் தங்கள் சிந்தை யுள்ளே வைத்துச் சொல்லும் அந்த ஸ்ரீ மானை நான்
தரித்ரன் ஆக்கினேன் அத்தனை -என்ன நிக்ருஷ்டனோ -என்று தம்மை கர்ஹிக்கிறார் –

————————————————————-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

இப்படி என்னுடைய அயோக்யதையைப் பார்த்து -அவன் திறத்துப் படுவேன் அல்லேன் -என்று இருக்கச் செய்தேயும் -செல்வ நாரணன் -செல்வன் நாரணன் -என்ற
சொல்லக் கேட்க்கும் அளவில் என்னுடைய சர்வ கரணங்களும் என் வசம் இன்றியே இழுத்துக் கொண்டு அவன் பக்கலிலே விழா நின்றன –
நானும் அதி சபலனாய் -எங்குற்றாய் எம்பெருமான் –திரு நெடும் தாண்டகம் –9-என்று அவனை நாடுவன்-இது என்ன ஆச்சர்யம் -இப்படி நான்
அதி சபலனாயத் தன்னை விட மாட்டாது ஒழிந்தால் அவன் என்னை விடலாம் இறே -அவன் என்னில் காட்டிலும் அபி நிவிஷ்டனாய் என் பக்கலிலே
அதி பஹு மானத்தைப் பண்ணிக் கொண்டு என்னை விடுகிறிலன்-நான் என் செய்வன்-என்று நோகிறார் –

————————————————–

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

தன்னுடைய சாபலத்தாலே நம்மை விடாது ஒழிந்தால் அவனுடைய குண ஸ்ரவணாதி களைப் பண்ணாதே அந்நிய பரனாய் அவனை மறந்து இருந்தாலோ -என்னில் –
தத் குண ஸ்ரவண மாத்திரத்தாலே சபலனாய்த் தன் பக்கலிலே விழா நிற்கச் செய்தே அதின் மேலே அயர்வறும் அமரர்களோடே கூடத் திருக் குறுங்குடியிலே
நின்று அருளி தன்னுடைய நிரவாதிகமான அழகைக் காட்டி என்னைத் தோற்பித்துத்
தன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டான் -இனி எங்கனே நான் அவனை மறக்கும் படி -என்கிறார் –

——————————————————

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-

வருந்தி யாகிலும் அவன் பக்கலில் நின்றும் நெஞ்சை – நிவர்த்திப்பித்து அவனை மறந்து இருந்தாலோ -என்னில் -இப்படி தன் அழகை எனக்குக் காட்டி அருளி –
ஒரு நாள் தன்னைக் காட்டிப் போக்கில் -ஞான அஞ்ஞானங்கள் இரண்டுக்கும் ஆஸ்ரயம் இல்லாமையால் அசித் கல்பனான இவன் நம்மை மறக்கும் -என்று
பார்த்து அருளி -தன்னை நான் மறவாமைக்காக அசேதனத்தைச் சேதனமாக்க வல்ல தன்னுடைய அழகிய திருக் கண்களோடே கூட என்னுள்ளே புகுந்து
எனக்குப் பரம ஸூலபனாய்க் கொண்டு — இனிப் பேரேன்-என்று இருந்து அருளினான் –
இவனை நான் மறப்பேன் என்று வருந்தினாள் மறக்க முடியுமோ -என்கிறர் –

————————————-

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-

வானவர் கண்ணனாய் இருந்து வைத்து எனக்கு எளியனாய் -தனக்குத் தானே பூஷணமாய் இருந்த எம்பெருமானுக்கு
சேஷ வ்ருத்தி ரூபமாகச் சொன்ன இத்திருவாய் மொழியைக் கற்று ஆராது இருக்குமவர்களுக்கு அக்கல்வி தானே வாயும் -என்கிறார் –

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: