அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -1-1-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -பிரவேசம் –

அபிவந்த்ய சடார்யார்யம் ஆசார்யாத்ருதமாகதம் த்ரமிட உபநிஷத் பாஷ்யம் தர்சயிஷ்யே யதா ஸ்ருதம் –

ஸாங்க உப ப்ரும்ஹண சகல வேத வேதாந்த சாரார்த்த ப்ரகாசகமாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மக ஸ விபூதிக பகவத் அனுபவ ப்ரவ்ருத்த பரபக்தி சிந்து பரிவாக ரூபமாய்
சாம்சாரிக சகல தாப தாவாநல நிர்வாபண சரஸ அம்ருத ப்ரவாஹ பூராத்மகமாய் நித்ய ப்ரத்யக்ர நிரவதிக அதிசய பரமானந்த ஸந்தோஹ சம்வர்த்தகமாய்
சகல ஜன உஜ்ஜீவன அர்த்தமாக சர்வேஸ்வரன் தன் பரம காருணிகத்வத்தாலே ஸ்வ ஹ்ருதயத்திலே பிரவர்த்திப்பிக்க
சர்வாதிகாரி யோக்யமான த்ராமிட பாஷா சந்தர்ப்பத்தாலே பிரதம ஆச்சார்யரான நம்மாழ்வார் அருளிச் செய்த
திரு விருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய்மொழி ஆகிற ப்ரபந்தங்களில் –
திரு விருத்தத்திலே சம்சார சம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷித்து
திருவாசிரியத்திலே நிவ்ருத்த சம்சாரர்க்கு அநுபாவ்யமான ஸுந்தர்யாதிகளை அநுபவித்து
பெரிய திருவந்தாதியிலே அநுபவ ஜனிதமான அபிநிவேச அதிசயத்தைப் பேசி
திருவாய் மொழியிலே அபிநிவேச அநுரூபமாகப் பூரணமான பகவத் விஷயத்தை அநுபாவித்து இவர் க்ருதார்த்தார் ஆகிறார் –

இதில் சரமமான திருவாய் மொழியாகிற திவ்ய பிரபந்தம்
ஸ்ரீ பதிஸ் சேதனஸ் யாஸ்ய ஹேதுத்வேந ஸமாச்ரித அநிஷ்ட ஹானிம் இஷ்டஸ்ய பிராப்திஞ்ச குருதே ஸ்வயம் -என்று
ஸ்ரீ யபதியானவன் சேதனனுக்கு உபாயத்வேந ஆஸ்ரிதனாய்க் கொண்டு அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்டமான ஸ்வ ப்ராப்தியையும்
தானே பண்ணிக் கொடுக்கும் என்று அநு யாயியான மஹா வாக்யார்த்தத்தை ப்ரதிபாதிக்கிறது –

இப்பிரபந்தம் சர்வ சாஸ்த்ர சார உப ப்ரும்ஹணம் பண்ணுகிறது ஆகையால் -சகல வேத சாஸ்த்ர தாத்பர்யமான
அர்த்த பஞ்சகமும் இப்பிரபந்தத்தினுடைய மஹா வாக்யார்த்தத்திலே அந்தர்பூதம்-
ஸ்ரீ பதி -என்று ப்ராப்யமான ப்ரஹ்மத்தினுடைய ஸ்வரூபமும்
சேதனஸ்ய என்று பிரத்யாகாத்ம ஸ்வரூபமும்
‘ஹேதுத்வேந -என்று உபாய ஸ்வரூபமும்
அநிஷ்ட ஹானிம் -என்று பிராப்தி விரோதி நிவ்ருத்தியும்
இஷ்டஸ்ய ப்ராப்திம் -என்று பிராப்தி பல வாப்தியுமான
அர்த்த பஞ்சகமும் ஸூசிதம் ஆகிறது –

இப்பிரபந்தத்தில் முதலிட்டு நாலு பத்தாலே சித்த ரூபமான பராவராத்ம யாதாம்யத்தை ப்ரதிபாதிக்கிறது –
முடிவிட்டு நாலு பத்தாலே ஸாத்ய ரூபமான அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தியை ப்ரதிபாதிக்கிறது –
நடுவிட்டு இரண்டு பத்தாலே சித்த ஸாத்ய ரூபமான நிர்பய உபாய வரணத்தை ப்ரதிபாதிக்கிறது
-ஸித்தமான உபாயத்தினுடைய வரணம் ஸாத்யம் என்று கருத்து -அதில் சித்த ரூபமான பராவராத்ம யாதாம்யா ப்ரதிபாதிதமான
முதல் நாலு பத்தில் -முதல் பத்தும் இரண்டாம் பத்தும் ப்ராப்யமான பர ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது –
மூன்றாம் பத்தும் நாலாம் பத்தும் ப்ராப்தாவான பிரத்யாகாத்ம ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது –
அஞ்சாம் பத்தும் ஆறாம் பத்தும் பிராப்தி உபாய ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது –
ஏழாம் பத்தும் எட்டாம் பத்தும் பிராப்தி விரோதி நிவ்ருத்தியை பிரதிபாதிக்கிறது –
ஒன்பதாம் பத்தும் பத்தாம் பத்தும் பிராப்தி பல சித்தியை பிரதிபாதிக்கிறது —

அதில் முதல் பத்து பேரனான சேஷியினுடைய ரக்ஷகத்வத்தையும் –
இரண்டாம் பத்து போக்யத்தையும் சொல்லுகிறது –
மூன்றாம் பத்து பகவத் ஏக சேஷ பூதனான ஆத்மாவினுடைய தத் ஏக அநுபவத்தையும்
நாலாம் பத்து தத் ஏக பிரியத்வத்தையும் சொல்லுகிறது –
அஞ்சாம் பத்து நிர்பாயமான உபாய விஷத்தையும்
ஆறாம் பத்து தத் வரண பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஏழாம் பத்து அநிஷ்டமான விரோதி பிரகாரத்தையும்
எட்டாம் பத்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஒன்பதாம் பத்து பல பிரகாரத்தையும் பத்தாம் பத்து ததவாப்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஆக இவ்வர்த்த பஞ்சகத்தினுடைய அவாந்தர அர்த்த பேதத்தாலே இப்பிரபந்தத்திலே பத்துப் பத்துக்கும் வாக்யார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –

அதில் சேஷியினுடைய ரக்ஷகத்வ பாரமான முதல் பத்தில்
முதல் திருவாய்மொழி ரக்ஷகத்வ உபய யுக்தமான சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
இரண்டாம் திருவாய்மொழி சர்வ ஸமாச்ரயணீ யத்வத்தையும்
மூன்றாம் திருவாய்மொழி தத் அனுகுணமான ஸுலப்யத்தையும்-
நாலாம் திருவாய்மொழி ஆஸ்ரித அபராத சஹத்வத்தையும்
அஞ்சாம் திருவாய்மொழி ஸுசீல்ய அதிசயத்தையும்
ஆறாம் திருவாய்மொழி ஸ்வாராததையும்
ஏழாம் திருவாய்மொழி ஆஸ்ரயணத்தில் அத்யந்த சாரஸ்யத்தையும்
எட்டாம் திருவாய்மொழி ஆஸ்ரித விஷயமான ஆர்ஜவ குணத்தையும்
ஒன்பதாம் திருவாய்மொழி சாத்ம்ய போக பிரதத்வத்தையும்
பத்தாம் திருவாய்மொழி நிர்ஹேதுக மஹா உபகாரித்வத்தையும் சொல்லுகையாலே பரம சேஷியினுடைய ரக்ஷகத்வ பூர்த்தியை ப்ரதிபாதித்ததாயிற்று –

அதில் பரதவ பிரகாசகமான முதல் திருவாயமொழியில் தத் உபபாதகமான விலக்ஷண குண விபூதி விக்ரஹ யோகத்தையும்
தத் ஆஸ்ரயமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் அபரிச்சின்னமான லீலா விபூதி சம்பந்தத்தையும்
அநந்தரம் மூன்று பாட்டாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகள் ஸ்வ அதீனங்கள் என்னும் இடத்தையும்
அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களின் உடைய ஸ்வரூபம் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனம் என்னும் இடத்தையும்
மேலே ரக்ஷண ரூபையான ஸ்திதி வையதி கரண்யத்தாலே தத் அதீனை என்னும் இடத்தையும்
சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனங்கள் என்னும் இடத்தையும்
தத் உபபாதகமான சரீராத்ம பாவ சம்பந்தத்தையும்
அநந்ய ஈஸ்வரத்தையும் அவைதிகரால் அப்ரகம்ப்யத்வத்தையும் அகில வியாபகத்வத்தையும் சொல்லி அசேஷ சேஷித்வ ரூபமான பரத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகிறார் –

—————————–
அவதாரிகை –

இத் திருவாய் மொழிக்கு சங்கக்ரஹமான இப்பாசுரத்தில்
பரத்வ-பிரதான உபபாதகமான நிரவதிக கல்யாண குண யோகத்தையும் -நிர்ஹேதுக உபகாரத்வத்தையும் -நித்ய ஸூ ரி நிர்வாஹகத்வத்தையும்
நித்ய மங்கள விக்ரஹ -யோகத்தையும் உடைய சர்வேஸ்வரன் திருவடிகளில் நிரந்தர சேஷ விருத்தியைப் பண்ணு என்று தன் நெஞ்சை நியோகிக்கிறார் –

உயர்வற யுயர் நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே —-1-1-1-

உயர்வு –ஆனந்த வழியில் சொல்லுகிற கணக்கிலே -அல்லாத உயர்திகள்
அற -அசத் கல்பமாம் படி
யுயர் -அவாங்க மனஸ கோசரமாய் உயர்ந்த
நலம் -ஆனந்தத்தை
உடையவன்-யுடையனாக
யவனவன்-பிராமண பிரசித்தனானவன் யாவன் ஒருவன்
மயர்வற-சம்சய விபர்யயாதி ரூபமான அஞ்ஞானம் நசிக்கும் படி
மதி நலம்-ஸ்வாபாவிக ஜ்ஞான ப்ரேமான்களை
அருளினன் -தன் அருளினால் தந்து அருளினவனாக
யவனவன்–ப்ரஜ்ஞா ஸ தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ -என்கிற ப்ரஸித்தியை யுடையவன் யாவன் ஒருவன்
அயர்வறும் அமரர்கள் -விஸ்மரண பிரசங்கம் இல்லாத நிரந்தர அநுபவ யுக்தரான நித்ய ஸூரிகளுக்கு
அதிபதி யவனவன்-நிரவதிக சேஷியானவன் யாவன் ஒருவன் -அவனுடைய
துயரறு சுடரடி -ஸமாச்ரித துக்க நிவர்த்தகமாய் நிரந்தர ஒஜ்ஜ்வல்ய விசிஷ்டமான திருவடிகளைக் குறித்து
தொழுது -பத்தாஞ்சலி புடா என்கிறபடியே சேஷத்வ அநு ரூப வ்ருத்தியைப் பண்ணி
என் மனனே எழு-என் மனசே எழு -நித்ய ஆச்ச்ராய ரூபமான உஜ்ஜீவனத்தை பெறு-என்று தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து அநு சாதித்து அருளினார் ஆயிற்று-

இதில் முதல் அடியில் -நலம் என்று ஆனந்த குணத்தை யாதல் -ஆனந்த ஹேதுவாக உபநிஷத்து சொன்ன யுவத்வாதி குண விபூதியை யாதல் சொல்லுகிறது –
இரண்டாம் அடியில் நலம் என்று பக்தி ரூப ஸ்நேஹத்தைச் சொல்லுகிறது –
இப்பாட்டில் மூன்று அடியிலும் யவன் என்கிற சப்தத்தோடு அவன் என்று தொடங்கி நாலாம் அடியைத் தனித் தனியே அன்வயித்து மூன்று வாக்யமாகவும் சொல்லுவர்-
முதல் அடியில் யவனோடே அவன் என்று தொடங்கி இரண்டாம் அடியைக் கூட்டி வாக்யமாக்கி -அவ்விரண்டாம் அடி தன்னை ஆவர்த்தித்து யச் சப்தத்தால் நிர்தேசித்து-
அத்தை அவன் என்று தொடங்கி மூன்றாம் அடியோடு கூட்டி -அது தன்னையும் ஆவர்த்தித்து யவன் என்று நிர்தேசித்து அத்தோடே அவன் என்று தொடங்கி
நாலாம் அடியிலே வினை முடித்து வாக்ய ஏக வாக்யமாகவும் சொல்லுவர் –
அங்கன் அன்றியே ஸ யஸ்ஸாயம் புருஷே யஸ்ஸாஸா வதித்யே ஸ ஏக -என்ற கணக்கிலே யவனவன் என்று யஸ் சப்தார்த்தமாய் ப்ரஸித்தியைக் காட்டி
அத்தை அவன் என்று நாலாம் பாதத்தால் பராமர்சித்து முடிக்கையாலே ஏக வாக்யமாகவும் சொல்லுவர் –

இப்பாட்டு சர்வ சாஸ்த்ர உப ப்ரும்ஹணமான இப்பிரபந்த ஸங்க்ரஹம் ஆகையால் சகல சாஸ்த்ர ஸங்க்ரஹ ரூபமான மந்த்ர ரஹஸ்யார்த்த தாத்பர்யத்தை பிராஜ்காசிப்பிக்கிறது –
எங்கனே என்னில்
உயர் நலம் யுடையவன் -என்கிற சர்வாதிக சேஷித்வத்தாலே பிரதம பதார்த்தமான அநந்யார்ஹ சேஷத்வ பிரதி சம்பந்தித்வத்தையும்
மதி நலம் அருளினன்-என்று கிருபா கார்யமாகச் சொன்ன உபகாரகத்வத்தாலே மத்யம பதார்த்தமான உபாய பாவத்தையும்
அமரர்கள் அதிபதி என்று நித்ய ஸூரி ஸேவ்யத்தாலே சரம பதார்த்தமான ப்ராப்யத்வத்தையும்
தொழுதெழுஎன்கையாலே சதுர்த்தி யர்த்தமான கைங்கர்யத்தையும் சொல்லிற்று ஆயிற்று –
———————————————–
அநந்தரம் -யவன் என்று சொன்ன ஸ்வரூபத்தினுடைய ஸ்வேதர ஸமஸ்த வைலக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் –

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

மனனகம் -மனசின் இடத்து
மலமற –மலமான காம க்ரோதாதிகள் கழிய
மலர் மிசை எழு தரும்-அத்தாலே மலர்ந்து மேலே வளர்ந்து வரக் கடவதான
மனன் உணரளவிலன்–மானஸ ஞானத்தாலே அளவிடப்படும் ஆத்மாவின் படி அன்றியே அளவிறந்து இருப்பானாய்
பொறியுணர் யவையிலன்-பாஹ்ய இந்திரிய ஜனிதமான ஞானங்கள் தன் பக்கல் தட்டாத படியால் இந்திரிய கோசாரமான அசித்த்தில் வியாவ்ருத்தனாய்
இனன்-இப்படி சேதன அசேதன விலக்ஷணனானவனாய்
உணர் முழு நலம் -முழு உணர்வும் முழு நலமுமான ஞானானந்த நிரூபணீயனாய்
எதிர் நிகழ் கழிவினும்–எதிரான பவிஷ்யத் காலத்திலும் நிகழான வர்த்தமான காலத்திலும் கழிவான பூத காலத்திலும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே -இனத்து இருப்பாரையும் மிகுத்து இருப்பாரையும் உடையன் அல்லனாவான் -எனக்கு தாரக பூதன் —

அவன் துயரறு சுடரடி தொழுதெழு என்று கீழில் பாட்டில் வினையோடு அன்வயம் -இப்படிப் பத்துப் பாட்டிலும் அன்வயமாகக் கடவது
இத்தாலே சோதகமான சத்ய ஞானாதி வாக்யத்திலே ஸத்ய சப்தார்த்தமான சேதன அசேதன வைலக்ஷண்யத்தையும்
ஞான சப்தார்த்தமான அஸங்குசித ஞானானந்த ரூபத்துவத்தையும்
அனந்த சப்தார்த்தாலே கால அபரிச்சேத ரூபமான நித்ய சமாப்யதிக ராஹித்யத்தையும் சொல்லிற்று ஆயிற்று –
முதல் -இனன் என்றது இப்படிப்பட்டவன் என்றபடி -அநந்தரம் இனன் இலன் -என்றது ஓத்தார் இல்லாதவன் -என்றபடி-
———————————————-
அநந்தரம் வஸ்து பரிச்சேத ராஹித்யத்துக்கும் தேச பரிச்சேத ராஹித்யத்துக்கும் உப பாதகமான லீலா விபூதி யோகத்தை அருளிச் செய்கிறார் –

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

இலனது–விப்ரக்ருஷ்டம் ஆகையாலே அஸந்நிஹிதமான வஸ்துவை உடையன் அல்லன்
உடையனிது -ஆசன்னத்தையாலே சன்னிஹிதமான வஸ்துவை யுடையவன்
என நினைவரியவன்-என்று சில வஸ்துவாலே பரிச்சேதித்து நினைக்க அரியவனாய்
நிலனிடை விசும்பிடை -பூமியிலும் ஊர்த்வ லோகத்திலும்
யுருவினன் அருவினன்-ரூப யோக்யமான அசித்தையும் ரூப ரஹிதமான சித்தையும் பிரகாரமாக யுடையவனாய்
புலனொடு –இப்படி பிராமண பிரசித்த தயா புலப்படும் பதார்த்தங்களோடே கலந்து நிற்கச் செய்தே
புலன் அலன் -அவற்றின் ஸ்வபாவம் தனக்கு யுடையன் அல்லனாய்
ஒழிவிலன் பரந்த -ஒன்றும் ஒழியாமல் பரந்து வியாபித்து இருக்குமவனாய்
வந்நலனுடை ஒருவனை நணுகினம் நாமே-கீழ்ச் சொன்ன உயர்வற உயர் நலத்தை யுடையனான அத்விதீயனை நாம் கிட்டப் பெற்றோம் –

இப்பாட்டில் முதல் கூற்றாலே வஸ்து பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்லி மேலே வ்யாப்தியால் தேச பரிச்சேத ராஹித்யத்தையும் சொல்லிற்று யாயிற்று –
ஆக இப்பாட்டில் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது –
————————————
அநந்தரம் மூன்று பாட்டுக்களாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூப -ஸ்திதி -ப்ரவ்ருத்த்யாதிகள் பகவத் அதீனங்கள் என்கிறார் –
அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூபமும் தத் அதீனம் என்று சாமாநாதி கரண்யத்தால் அருளிச் செய்கிறார் –

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

நாம் -மேலே சொல்லுகிற தூரத்வாத் யுபாதிகளுக்கு த்ருவமான தாமும்
அவன் -அதுக்கு தூரஸ்தனும்
இவன் -அந்திகஸ்தனும்
உவன்-ஆத்தூர் விப்ரக்ருஷ்டனும்-என்று புல்லிங்க சப்த நிர்திஷ்ட பதார்த்தமும்
அவள் -ஸ்த்ரீ லிங்க சப்த நிர்திஷ்டையான தூரஸ்த்தையும்
இவள் -சந்நிஹிதையும்
உவள்-ஆத்தூர் விப்ரக்ருஷ்டையும்
எவள் -வினவப் படுமவளும்
தாம் -கௌரவ்யதயா பூஜ்யரும்
அவர் -அவர்களில் விப்ரக்ருஷ்டரும்
இவர் -அந்திகஸ்தரும்
உவர் -அநதி தூர வர்த்திகளும்
அது விது வுது -நபும்சக லிங்க சப்த நிர்திஷ்டமான தூராந்திகா அதிதூரஸ்தமும்
வெது-வினவப்படும் வஸ்துவும்
வீமவை யிவை வுவை அவை–நஸ்வரமாய் அப்ரக்ருஷ்டங்களான ஆசன்ன அநதி தூர -விப்ரக்ருஷ்ட வஸ்துக்களும்
நலம் தீங்கிவை-உத்கர்ஷ அபகர்ஷ ரூப தர்மங்களும்
ஆமவை -ஆகாமிகளாயும்
யாயவை -அதீதங்களாயும் யுள்ள எவம்வித வஸ்துக்களும்
ஆய நின்ற அவரே –தாமேயாய் நின்ற அவர் –

இதாநீந்தநங்களான இவ்வஸ்துக்களும் ஆனார் என்றதாயிற்று -எவன் எவர் என்று இல்லாத இடங்களுக்கு அழைத்துச் சொல்லிக் கொள்வது –
இத்தால் காலத்ரய வர்த்தி சகல பதார்த்தங்களும் தத் அதீனம் என்று கருத்து –
——————————-
அநந்தரம் ரக்ஷண ரூபையான ஸ்திதி தத் அதீனை என்று வையதி கரண்யத்தாலே அருளிச் செய்கிறார் –

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

அவரவர் -அவ்வோ புருஷார்த்தங்களுக்காக அதிகாரிகள்
தமதமது அறிவறி வகைவகை-தந்தாமுடைய அறிவின் அறிவின் வகையாலே
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்-ருசிக்கு ஈடான தேவதைகளை பலம் தரும் சேஷிகளாக ஆஸ்ரயிப்பார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் அவ்வவ தேவதைகள் பலம் கொடுத்து ஸ்வாமிகளாக குறையில்லை
இறையவர்-சர்வ ஸ்வாமியானவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –அவ்வோ அதிகாரிகள் விதி மார்க்கத்தாலே பலத்தை அடையும்படி அத்தேவதைகளுக்கு அந்தராத்மாவாய் நின்றார் –
அன்றியே –
அவரவர் விதி வழி யடைய என்று -அவ்வோ தேவதைகள் தந்தாமுடைய பல ப்ரதத்வாதி பத சித்த்யர்த்தமாக வித்யுக்த மார்க்கத்தாலே
ஆஸ்ரயிக்கும்படி இறையவர் ஆஸ்ரயணீயராய் நின்றார் என்றுமாம் –
————————————
அநந்தரம் சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் தத் அதீநைகள் என்று சாமாநாதி கரண்யத்தால் அருளிச் செய்கிறார் –

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்–நிற்றலும் இருத்தலும் கிடைத்தாலும் திரிதலுமாகிற ப்ரவ்ருத்திக்கு ஆஸ்ரயமான பதார்த்தங்களும்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்–நிவ்ருத்திக்கு ஆஸ்ரயமான பதார்த்தங்களுமாய்
இத்தாலே
என்றும்-என்றும் ஓக்க
ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்–ஒரு ஸ்வபாவத்தை யுடையவர் என்று நினைக்கைக்கு அரியராய் இருப்பர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –என்றும் ஓக்க ஸ்வ இதர ஸமஸ்த வ்யாவருத்தமான நம்முடைய த்ருட பிராமண ஸித்தர்–

ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளான தர்மங்களினுடைய தத் ஆதீனத்தவம் சொல்லா நிற்க தர்மி பர்யந்தமாகச் சொல்லிற்று -இத்தர்மங்கள் ஆச்ரயத்தை ஒழிய பிரதிபத்தி
பண்ண ஒண்ணாமையாலும் -கீழே தர்மி ஸ்வரூபம் தத் அதீனம் என்று சொல்லுகையாலும் தர்மி பர்யந்த சப்தமே யாகிலும் தர்மத்தில் தாத்பர்யமாகக் கடவது —
இவ்விடத்தில் ப்ரவ்ருத்தி ஈஸ்வர அதீநை யானாலும் ஏறிட்ட கட்டி விழுகைக்கு ப்ரேரகர் வேண்டாதாப் போலே நிவ்ருத்திக்கு தத் அபேக்ஷை யுண்டோ என்னில்
திரிசங்கு நிவ்ருத்திக்கு பிரதிபந்தகம் காண்கையாலே நிவ்ருத்திக்கும் ஈஸ்வர அபேக்ஷை யுண்டு -இப்படி பாபாதிகளில் ப்ரவ்ருத்தருடைய நிவ்ருத்திக்கும்
ஈஸ்வர அபேக்ஷை யுண்டாகையாலே சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கும் ஈஸ்வர அபேக்ஷை யுண்டு –
—————————————-
அநந்தரம் இந்த சாமாநாதி கரண்யம் சரீராத்மா பாவ சம்பந்த நிபந்தநம்-என்கிறார் –

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

திட-பூதாந்தரங்களில் காட்டில் சில காலம் நிற்கையாகிற சிக்கனவை உடைத்தான
விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை-ஆகாசமும் அக்னியும் வாயுவும் ஜலமும் பூமியும் இவை ஆஸ்ரயமாகக் கொண்டு
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்-பரந்த பவ்திக பதார்த்தங்களும் எல்லாம் தானாம் படி அவற்றுக்கு உபாதானமாய் அவ்வோ பதார்த்தங்கள் தோறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-சரீரத்தில் ஆத்மா வியாபிக்குமா போலே கரந்து வியாபித்து இப்படி சகல பதார்த்தங்களில் வியாப்தனாய்
சுடர்மிகு சுருதியுள் –ஸ்வத ப்ராமாண்ய ஓவ்ஜ்வல்யத்தாலும் மிக்கு இருப்பதாய் கேள்வியாலே வருவிக்கப் படுவதான
ஸ்ருதியினுடைய உள்ளான பொருளாய்க் கொண்டு தோற்றுமவன்-
இவை யுண்ட சுரனே -இப்பதார்த்தங்களை ஸம்ஹ்ருதி காலத்திலேயே அத்தா சராசர க்ரஹணாத் என்று தன்னுள்ளே விழுங்கின தேவ சப்த வாச்யன் –
தம பரே தேவ ஏகி பவதி -என்னக் கடவது இறே-
விசும்புக்கு அநந்தரம் வளியை எடாதே எரியை எடுத்தது –தைத்ரிய உபநிஷத்திலே ஆத்மந ஆகாஸாஸ் ஸம்பூத என்கிற ஆகாச ப்ராதமயமும்
சாந்தோக்யத்தில் தத் தேஜோ அஸ்ருஜத -என்கிற தேஜஸ் பிரதாம்யமும் தோற்றுகைக்காக
இத்தால் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களும் அநுபிரவேச நிபந்தனமான அந்தராத்மத்வமும் தத் அதீனம் என்றதாயிற்று –
———————————
அநந்தரம் வ்யஷ்டி ஸ்ரஷ்ட்ரு சம்ஹர்த்தாக்களான ப்ரஹ்ம ருத்ர்களும் தத் அதீனர் என்கிறார் –

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

சுரர் அறிவரு நிலை -தேவர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய ஒண்ணாத நிலையை யுடைத்தான
விண் முதல் முழுவதும்-ஆகாசம் முதலாய் யுள்ள சமஷ்டி ரூப ஸமஸ்த வஸ்துக்களும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்-வரிஷ்டமான காரணமாய் அவற்றை நிஸ் சேஷமாக உப சம்ஹரிப்பதும் செய்கையாலே
வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி சம்ஹார கர்த்தாக்களாய்க் கொண்டு பரரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் பரனானவன்
அரன் அயன் என-ருத்ரனும் -ப்ரஹ்மாவும் என்று பிரசித்தராம்படி
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து-அத்விதீயமான புர த்ரயத்தை தஹித்தும் தேவர்களுக்கு ஞானத்தை உபதேசித்தும்
வுலகு அழித்து அமைத்து உளனே –அண்டாந்தர வர்த்தி லோகங்களை சம்ஹரித்து அவற்றை ஸ்ருஷ்ட்டித்தும் அவர்களுக்கு உள்ளே ஆத்மாவாய் நிற்குமவன் –

விண் என்று கஸ்மின்நு கல்வாகாச ஓதஸ் ச ப்ரோதஸ்ச -என்று கார்க்கி வித்யையில் சொல்லுகிற கணக்கிலே மூல பிரகிருதி யாகவுமாம் –
இயத்தல் -கொடுத்தல்
இத்தால் ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கலிலே பரத்வ சங்கை பண்ணுகிற குத்ருஷ்டிகளை வ்யாவர்த்திக்கிறது –
——————————————
அநந்தரம் ஈஸ்வர தத்துவத்தை இசையாதே வேத பாஹ்யரில் பிரதம கண்யராய்-சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார் —

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

உளன் எனில் –ஸ்வ மதத்தாலே உளன் எனிலும்
உளன் அலன் எனில்-பர மதத்தாலே உளன் அலன் எனிலும்
உளன்-ஸத்பாவ அஸத்பாவ தர்மங்களுக்கு ஆஸ்ரய விதுர ஸ்திதி இல்லாமையால் பிரதிஜ்ஞா வேளையிலும் உளன் என்றாய் சத் பாவம் கொள்ள வேணும் -ஆனபின்பு
உளன் என இலன் என விவை-உளன் என்றும் இலன் என்றும் சொல்லுகிற இவற்றை
குணமுடைமையில்-குணமாக உடையனாகையாலே
இவ்வுருவுகள்-இவ்வருவுகள்-ரூபவத்தாயும் அரூபவத்தாயும் யுள்ள இஜ் ஜகத்தில் வஸ்துக்கள்
அவன் உருவம் அவன் அருவம் -தனக்கு பிரகாச ரூபமாயும் அப்ரகாச ரூபமாயும் யுள்ள பிரகாரமாய் இருக்கிற
இரு தகைமையோடு உளன் பிறந்து ஒழிவிலன் –இரண்டு ஸ்வ பாவத்தோடும் உளநோய் அவற்றை வியாபித்து ஒழிவின்றியே நிற்குமவன்-
————————————–
கீழ்ச் சொன்ன வியாப்தியினுடைய ஸுகர்யத்தை அருளிச் செய்கிறார் –

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

பரந்த தண் பரவையுள் -எங்கும் ஓக்க பரந்த பூதாந்தர கார்யமான விகாரம் இல்லாமையால் ஸ்வ தர்மமான சைத்யத்தை யுடைத்தான காரண ஜல ரூபமான ஏகார்ணவத்தின்
நீர் தொறும்-அதி ஸூஷ்மாமா ஜல பரமாணுக்கள் தோறும்
பரந்த வண்டமிதென-மஹா வகாசமான இவ்வண்டத்தில் இருக்குமா போலே
பரந்துளன்-அசங்குசிதமாக இருக்குமவனாய்
நில விசும்பு ஒழிவறக்-இப்படி பூமியிலும் உஊர்த்வ லோகங்களிலும் ஓன்று ஒழியாமே
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்–அதி ஸூஷ்மாமாயை அல்பமான ஸ்தலங்கள் தோறும் -அந்த ஸ் தலங்களிலே
ஸ்வயம் பிரகாசமான உஜ்ஜவலமான ஆத்ம வஸ்துக்கள் தோறும்
கரந்து எங்கும் பரந்துளன் வியாப்ய வஸ்துக்களும் அறியாத படி மறைந்து எங்கும் ஓக்க வியாப்தனாய் இருக்கும் –
இவையுண்ட கரனே –-இவ்வஸ்துக்களை சம்ஹார திசையிலும் தனக்குள்ளே அடக்கித் தான் ஸ்திரனாய் நின்றவன்
இத்தால் காரண தசையோடு கார்ய தசையோடு அதி ஸூஷ்மமான சேதன அசேதனங்களிலும் அசங்குசிதமாக வியாபித்து இருக்கும் என்றதாயிற்று –
——————————————
அநந்தரம் கீழ் உப பாதித்த பரத்வத்தை நிகமியா நின்று கொண்டு இத்திருவாய் மொழிக்கு பலம் மோஷமாக அருளிச் செய்கிறார்

கரவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

கரவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை-ஸூஷ்மாம் ஆகையாலே கரத்தலை யுடைய ஆகாசம் -அக்னி -வாயு -ஜலம் -பூமி -இவற்றை ஆஸ்ரயமாக யுடைத்தாய்
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற-ஸ்ரேஷ்டமான -நவில் -சப்தம் /திறல்-தாஹா கத்வம்/பலம் /தண்ணளியான குளிர்த்தி -காரகத்வம் –
இது தர்மிகளோடு தர்மங்களோடு வாசி அறத் தனக்கு பிரகாரமாம் படி நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்–சர்வ ஸ்மாத் பிறனுடைய துயரறு சுடரடி விஷயமாக திரு நகரியைப் பிறப்பிடமாக யுடையராய்
சடரான பாஹ்ய குத்ருஷ்டிகளை வெல்லும் ஸ்வ பாவரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –சொல்லும் பொருளும் இயலும் இசையும் தாளமும் அபி நயமும் ஒன்றுக்கு ஓன்று சேருகையாலே
நிரந்து நிறைந்த ஆயிரத்து பரத்வ ப்ரதிபாதகமான இவை பத்தும் பரனடி மேல் விடப் பட்டன -சமர்ப்பிக்கப் பட்டன -என்றபடி –

இவை பத்தும் வீடான மோக்ஷத்தைகே கொடுடிக்கையாலே -வீடு -என்று காரணத்திலே கார்ய உபசாரம் ஆகவுமாம்-
வால்மீகிர் பகவான் ருஷி –என்று அனுபவத்தாலும் ஞானாதி வைபவத்தாலும் அவனுக்குப் பூர்த்தி சொன்னாப் போலே-
குருகூர்ச் சடகோபன் -என்று பிரபந்த கர்த்தாவான ஆழ்வாருடைய ஆப்தி சொல்லுகிறது –
நிரல் நிறை என்று அடைவே நிறைந்த -என்றுமாம் –
ஆயிரம் என்கிற சங்க்யா நிர்தேசத்தாலே கர்த்தாவான இவருடைய பகவத் அதீனத்வம் ஸூசிதமாகிறது –
இத்திருவாய் மொழி நாற்சீராய் அளவடி நான்கும் ஒத்து இருக்கையாலே கலி விருத்தம் என்பது –
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: