ஸ்ரீ நயினாராச்சார்யர் அருளிச் செய்த ஸ்ரீ பிள்ளை யந்தாதி –

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

சீரார் தூப்புல் பிள்ளை யந்தாதி என்று செல்லும் தமிழால்
நேராக வேதாந்த தேசிகர் தாளிணைக் கீழ் மொழிந்தேன்
மறைப் பொருள் எல்லாம் எடுத்து இவ்வுலகு உயவே
சீராகிய வரதாரியன் பாதம் துணை நமக்கே –தனியன் –
ஸ்ரீ வரதாச்சார்யர் என்ற திருநாமம் பூண்ட ஸ்ரீ நயினாராச்சார்யர் திருவடிகளே நமக்கு துணை –

சீரார் திரு எழு கூற்று இருக்கை என்னும் செந்தமிழால்
ஆராவமுதன் குடந்தைப் பிரான் தனது அடியிணைக் கீழ்
ஏரார் மறைப்பொருளை எல்லாம் எடுத்து இவ்வுலகு உய்யவே
சோராமல் சொன்ன அருள் மாரி பாதம் துணை நமக்கே -தனியனை அடி ஒற்றி அமைந்த தனியன் –

20-பாசுரங்கள் கொண்டது -ஸ்ரீ இராமானுஜ நூற்றந்தாதி அடி ஒற்றி அமைக்கப்பட்டது –
விசேஷணங்கள் ஸ்ரீ பாஷ்யகாரருக்கும் ஸ்ரீ தேசிகனுக்கும் பொதுவாய் அமைந்து உள்ளன –
திருமந்த்ரார்த்த நிஷ்டையும் பரமைகாந்த பக்தியையும் அருளவேண்டும் என்று பிரார்த்தித்து
தேசிகன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் செய்கிறார் –
கட்டளைக் கலித்துறை யந்தாதி பாடல்கள் –

————–

மா மலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினன் தாள்
தூ மலர் சூடிய தொல் அருள் மாறன் துணை யடிக் கீழ்
வாழ்வை யுகக்கும் இராமானுச முனி வண்மை போற்றும்
சீர்மையான் எங்கள் தூப்புல் பிள்ளை பாதம் என் சென்னியதே -1-பூ மன்னு மாது -1-பாசுரச் சாயல் –

அலர்மேல் மங்கை அகலகில்லேன் என்று உறையும் திரு மார்பணிந் துயர் அறு சுடர் அடிகளே தஞ்சம் என்று இருந்த
மாறன் அடி பணி உய்ந்த இராமானுசன் வண்மை போற்றும் தேசிகன் திருவடிகளை நம் தலை-
ஆக மிதுன தெய்வ தம்பதிகள் ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் சம்பந்தம் காட்டிய படி –

சென்னி வணங்கச் சிறு பனி சோர எம் கண்ணிணைகள்
வெந்நரகங்களும் வீய வியன்கதி இன்பம் மேவத்
துன்னு புகழுடைத் தூப்புல் துரந்தரன் தூ மலர்த் தாள்
மன்னிய நாள்களும் ஆகும் கொல் மா நிலத்தீர் நமக்கே -2-

தூப்புல் பிள்ளை பாதம் என் சென்னியதே-என்றவர் -அது நித்தியமாக செல்ல பிரார்த்தனை இதில் –
அவர் திருவடி சம்பந்தமே நமக்கு இம்மை மறுமைப் பயன்கள் தர வல்லது என்றவாறு –

மா நிலத்து ஓதிய மா மறை மன்னிய நற்கலைகள்
ஆனவை செப்பும் யாரும் பொருள் அத்தனையே யருளும்
தூ நெறி காட்டும் இராமானுச முனித் தோத்திரம் செய்யும்
ஊனம் தூப்புல் அம்மான் ஓர் புகழன்றி யுய்விலையே -3-

உய்யும் வகையிலை யுத்தர வேதியல் வந்துதித்த
செய்யவள் மேவிய சீர் அருளாளரைச் சிந்தை செயும்
மெய்யவன் எந்தை இராமானுசன் அருள் மேவி வாழும்
ஐயன் இலங்கு தூப்புல் பிள்ளை யாய்நத பொருள் அன்றியே -4-

அன்று இவ்வுலகினை யாக்கி யரும் பொருள் நூல் விரித்து
நின்று தன் நீள் புகழ் வேங்கட மா மலை மேவியும் பின்
வென்றிப் புகழ்த் திரு வேங்கட நாதன் எனும் குருவாய்
நின்றும் நிகழ்ந்து மண் மேல் நின்ற நோய்கள் தவிர்த்தனனே -5-மண் மீசை யோனிகள் தோறும் -41-பாசுரச் சாயல் –

வித்தகன் வேதியன் வேதாந்த தேசிகன் எங்கள் தூப்புல்
மெய்த்தவன் உத்தமன் வேங்கட நாதன் வியன் கலைகள்
மொய்த்திடும் நாவின் முழக்கொடு வாத்தியார் மூலமறக்
கைத்தவன் என்றுரைத்தேன் கண்டிலேன் கடுவினையே -6-சுரக்கும் பெருமை -43-பாசுரச் சாயல் –
என் தன் கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூகத்தியும் உண்டே –

வினைகாள் உமக்கு இனி வேறோர் இடம் தேட வேண்டும் எனைச்
சினமேவி முன் போல் சிதைக்கும் வகை இங்கு அரிது கண்டீர்
என் எனில் இராமானுச முனி இந்த உரை சேரும் தூப்புல்
புனிதர் என் புந்தி புகுந்து திகழ்ந்து பொருந்தினரே -7-
இங்கில்லை -பெரிய திருவந்தாதி -நெய்க்குடம் பெரியாழ்வார் பதிகம் -சாயலில் அமைந்தது
கண்டிலேன் கடுவினையே-என்று கீழே –பின்னும் வினைகளை இதில் விளித்து பேசி –
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் -என்ற
இருவகைப்பட்ட வினைகளும் விட்டு ஒழிந்தமையை அருளிச் செய்தார் யாயிற்று –

பொருந்திப் புவி தனில் பொய் வாழ்க்கை பூண்கின்ற பூரியர்காள்
இருந்து நரகில் இடர் கெடுமாற்றை யறிகின்றிலீர்
பொருந்தும் பொருள் ஓன்று கேளீர் பொங்கும் இவ்விடர்க் கடற்க்கு
வருந்தாது தூப்புல் மா பூருடன் பாதம் வணங்குமினே–8–

வணக்கம் ஒடுக்கம் வழக்கம் இரக்கம் சேரும்
இணக்கம் உறக்கம் இழுக்கும் அழுக்கும் இகந்து நிற்கும்
குணக் குளம் ஓங்கும் இராமானுசன் குணம் கூறும் தூப்புல்
அணுக்கனைப் பிள்ளைதனை யாரனாக யடைபவர்க்கே -9-பொருந்திய தேசம் -39-பாசுரச் சாயல் –
அங்கு போலே-இம்மைப்பயன்களைக் கூறாமல் பிரபன்னனுக்கு வேண்டிய அம்சங்களைப் பயனாக அருளிச் செய்கிறார் –

அடைபவர் தீ வினை மாற்றி யருள் தரும் தூப்புல் ஐய
விடர்தரும் இப்பிறவிக் கடல் தன்னில் அமிழ்ந்த என்னைக்
கடையறப் பாசம் கழற்றி நின் தாளிணை காணும் வண்ணம்
உடையவனே யருளாய் யுணர்ந்தார் தங்கள் கற்பகமே -10-
கீழ்ப் பாசுரம் வரை ஸ்ரீ தேசிகன் பெருமையை உலோகோருக்கு உபதேசித்து இப்பாசுரம் முதல் -10-பாசுரங்களால் –
அடைக்கலமாய் நிற்பதற்கு வேண்டிய குணபூர்த்தி உள்ள ஸ்ரீ தேசிகனை புகழ்ந்து
அவர் திருவடிகளில் பற்று உண்டாக்கி அருள அவரை நேராக விளித்து விண்ணப்பிக்கிறார் –

கற்பகமே என்று காசினியோரைக் கதிக்க மாட்டேன்
வெற்பிடையே நின்று வெந்தவத் தீயிலும் வேவ மாட்டேன்
பற்பல கலை வல்ல பா வலனே பத்தர் ஏத்தும் தூப்புல்
அற்புதனே யருளாய் யடியேனுக்கு யரும் பொருளே -11-நிதியைப் பொழியும் -21-/ நயவேன்-35-பாசுரங்கள் சாயல் முதலடி /
கதிக்குப் பதறி -14-அடி ஒற்றி இரண்டாம் அடி —
அற்புதன் -சப்த பிரயோகமும் அங்கும் உண்டே -மோக்ஷ உபாயத்தை காட்டித் தந்து அருள விண்ணப்பம் –

பொருளானது ஒன்றும் என்னில் பொருந்தாததும் யன்றி யந்தோ
மருளே மிகுத்து மறையவர் நல்வழி மாற்றி நின்றேன்
தெருளார் மறை முடித் தேசிகன் எங்கள் தூப்புல் தேவே
யருளாய் இனி எனக்கு உன்னருளே யன்றி யாறு இலையே-12- ஆகிஞ்சன்யம் இது முதல் மூன்று பாசுரங்களில் வெளியிட்டு அருளுகிறார் –

ஆறாக எண்ணும் யரும் கருமம் ஞானம் காதல் கொண்டு
வேறாக நிற்கும் விரகு எனக்கு இல்லை விரக்தி இலை
தேறாது திண் மதி சீரார் கதியிலும் செம்பொன் மேனி
மாறாத தூப்புல் மாலே மறவேன் இனி நின் பதமே -13-

நின் பதம் தன்னிலும் நேரே எனக்கில்லை யன்பு கண்டாய்
நின் பதம் ஒன்றிய வன்பரிலும் நேசம் இல்லை யந்தோ
வென்படி கண்டு இனி என் பயன் ஏதம் இல் தூப்புல் எந்தாய்
யுன்படியே யருளாய் யுதவாய் எனக்கு உன்னருளே -14-சித்த உபாயமும் ஸ்ரீ தேசிகன் இவருக்கு –

உன்னருள் அன்றி எனக்கு ஒரு நல் துணை இன்மையினால்
என் இரு வல்வினை நீயே விலக்கி ஹிதம் கருதி
மன்னிய நல் திருமந்தம் ஓதும் பொருள் நிலையே
பொன்னருளால் அருளாய் புகழ் தூப்புல் குல விளக்கே -15-திருமந்த்ரார்த்தம் -ஸ்வரூப உபாய புருஷார்த்த நிஷ்டர்களை அருளுவாய் –
தாய் நினைந்த கன்றே ஓக்க -திருமங்கையாழ்வார் ஸ்ரீ ஸூக்தி சாயல் –

விளக்காகி வேங்கட வெற்பினில் வாழும் விரை மலராள்
வளக் காதல் கொண்டுறை மார்பன் திருத்தும் உனது அடியார்
துளைக்காதல் இல்லவர் தங்கள் நிறத்திலும் தூய்மை எண்ணிக்
களக் காதல் சேட்டும் நிலை கடியாய் தூப்புல் காவலனே -16-பகவத் பாகவத கைங்கர்யங்களை பிரார்திக்கிறார் –
திருமந்த்ரார்த்த புருஷார்த்த காஷ்டை அன்றோ இவை –
துளக்கு ஆதல் இல்லாதவர் -கலக்கமடைதல் இல்லாதவர் /எண்ணி -திரு உள்ளத்தில் சங்கல்பித்து அருளி /
களக் காதல் -கபடமான பக்தி /

காவலர் எங்கள் கடாம்பிக் குலபதி யப்புளார் தம்
தேமலர்ச் சேவடி சேர்ந்து பணிந்து அவர் தம் அருளால்
நா வலரும் தென் வட மொழி நற்பொருள் பெற்ற நம்பி
காவல தூப்புல் குலத்தரசே எமைக் காத்தருளே -17-கீழே -6-பாசுரத்தில் வியன் கலைகள் மொய்த்திடும் -என்றது
ஆச்சார்ய கடாக்ஷத்தின் அடி என்று இங்கே காட்டப்படுகிறது -தேசிகரும் ஆச்சார்ய சிஷ்ய குண பூர்த்தி உள்ளமை காட்டப்பட்டது –

அருள் தரும் ஆரண தேசிகன் எங்கள் தூப்புல் தேவே
வரு கவி தார்க்கிக சிங்கமே வாதியார் வாழ்வு அறுத்தாய்
இரு கையும் கூப்பி யுரைக்கும் இவ்விண்ணப்பம் ஓன்று கேளாய்
உருவ எனக்கு அருளாய் எண்ணும் உள்ளம் உன் தொண்டரையே -18-உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும்படி
என்னை யாக்கி யங்கு ஆட்படுத்தே போலே இங்கும் –

தொண்டர் உகக்கும் துணையடி வாழி நின் தூ முறுவல்
கொண்ட முகம் வாழி வாழி வியாக்கியா முத்திரைக் கை
வண் திரு நாமமும் வாழி மணி வட முப்புரி நூல்
கொண்ட சீர்த் தூப்புல் குல மணியே வாழி நின் வடிவே -19-
மணிவட முப்புரி நூல் கொண்ட சீர் –துளசி மணிகளாலும் தாமரை மணிகளாலும் ஆகிய மாலைகளையும்
யஜ்ஜோபவீதத்தையும் தரித்து ப்ரஹ்ம தேஜஸ் மிளிர பெற்ற தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரஹம் –

வடிவு அழகு யாரந்த வண் தூப்புல் வள்ளல் மெல் மலர் அடி மேல்
அடியவர் ஓத வந்தாதி இருபதும் யாய்ந்து யுரைத்தேன்
திடமுடன் ஈதைத் தினம் தோறும் யாதரித்து ஓதும் அன்பர்
முடியிடை நேர் படும் தூப்புல் அம்மான் பத மா மலரே –20-புருஷார்த்த காஷ்டையே பலம் -என்று அருளி நிகமிக்கிறார் –

ஸ்ரீ பிள்ளை யந்தாதி முற்றிற்று –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: