ஸ்ரீ அமிருதாசுவாதினி -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

திருமந்திரம் முதலிய மூன்று ரஹஸ்யங்களின் தாத்பர்யம் -ஸ்ரீ மத் ராமாயணம் சாரமான காகாசுரன் சரணாகதி ஸ்ரீ விபீஷண சரணாகதி முதலியனவும் பிரஸ்தாவிக்கப் படுகின்றன –
ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் பொருளும் அஞ்சலி உடைய பெருமையையும் ரஹஸ்யார்த்த விஷயங்களும் சுருக்கி அருள படுகின்றன –
சம்பாஷணையாக அமைந்த ஒரு பாசுரத்தால் ஸ்ரீ பாஷ்யகாரர் கீர்த்தியையும் அமலனாதி பிரான் சாரார்த்தத்துடன் நிகமிக்கிறார் –
37–பாசுரங்கள் -அமுதம் போன்ற விஷயங்கள் தன்னுள் அடங்கப் பெற்று நம்மை அனுபவிக்கச் செய்வதால் இந்த பிரபந்தம் அம்ருதாசு வாதினி -என்று வழங்கப் படுகிறது –

————————–

முதல் ஆறு பாசுரங்கள் சாரசாரம் திருமந்த்ராதிகாரம்

மூலம் கிளையென ஓன்று இரண்டான மொழி இரண்டும்
மேல் ஓன்று நிலை என நின்ற அவ்வித்தகன் உரையும்
காலம் கழிவதன் முன்னம் கருத்துறக் கண்டிடவே
ஞாலம் புகழும் நம் தேசிகர் தான் நம்மை வைத்தனர் —1-

மூலம் கிளையென ஓன்று இரண்டான மொழி இரண்டும் -வேரும் கிளையும் என்று சொல்லும் படி முறையே ஒரு வாக்யமாகவும் இரண்டு பகுதியாகவும்
உள்ள திருமந்திரம் த்வயம் -மந்த்ரங்கள் இரண்டையும்
மேல் ஓன்று நிலை என நின்ற அவ்வித்தகன் உரையும்-அந்த கண்ணனுடைய சரம ஸ்லோகத்தையும்
காலம் கழிவதன் முன்னம் கருத்துறக் கண்டிடவே -ஞாலம் புகழும் நம் தேசிகர் தான் நம்மை வைத்தனர் -நம்முடைய வாழ் நாள் கழிவதற்கு முன்பு –
-உள்ளத்தில் பதிந்து அனுபவிக்கும் படி உலகோர் புகழும் நம் ஆச்சார்யர்கள் நம்மை நிறுத்தி அருளினார்கள் –

திருமந்த்ரத்தால் ஸ்வரூபம் அறிந்து -அதனால் வேர் -த்வயத்தால் பிரபத்தியை அனுஷ்ட்டித்து -அதனால் கிளை
-சரம ஸ்லோகத்தால் வேறு ஒன்றையும் தேட வேண்டாதபடி உபாயத்தை விளக்கி விதிப்பதால் நிகரற்றது -என்னலாயிற்று-

————————————–

காரணமும் காவலனுமாகி என்றும் கமலையுடன் பிரியாத நாதனான
நாரணனுக்கு அடியேனாய் அடிமை பூண்ட நல்லடியார்க்கு அல்லால் மற்று ஒருவருக்கு அல்லேன்
ஆரணங்கள் கொண்டு அகமும் புறமும் கண்டால் அறிவாகி அறிவதுமாய் அறு நான்கு அன்றிச்
சீரணிந்த சுடர் போலத் திகழ்ந்து நின்றேன் சிலை விசயன் தேர் அனைய சிறு வேதத்தே –2-திருமந்திரம் -பிராணவார்த்தம் –

காரணமும் காவலனுமாகி என்றும் கமலையுடன் பிரியாத நாதனான -மூல காரணன் -சர்வ ரக்ஷகன் -ஸ்ரீ யபதி
நாரணனுக்கு அடியேனாய் அடிமை பூண்ட நல்லடியார்க்கு அல்லால் மற்று ஒருவருக்கு அல்லேன்-ஸ்வாமிக்கு தாசன் -பாகவதர்களுக்கு தாசன் -வேறு ஒருவருக்கும் அல்லேன்
ஆரணங்கள் கொண்டு அகமும் புறமும் கண்டால் -வேதங்களினால் ஜீவாத்மா ஸ்வரூபத்தை ஆராய்ந்து பார்த்தால்
அறிவாகி அறிவதுமாய் -ஞானமே வடிவாய் தர்ம பூத ஞானத்தால் மற்ற பொருள்களை அறிபவனாய்
அறு நான்கு அன்றிச் -24-தத்வங்களாகிய அசேதனங்களில் வேறு பட்டு
சீரணிந்த சுடர் போலத் திகழ்ந்து நின்றேன் -தேஜஸ் போலே பிரகாசித்து நின்றேன்
சிலை விசயன் தேர் அனைய சிறு வேதத்தே –அர்ஜுனன் தேர் -போன்ற சிறிய வேதம் ஆகிய பிரணவத்தில்-
கிருஷ்ணன் முன்பும் அர்ஜுனன் பின்பும் வீற்று இருந்தது போலே அகாரம் முன்பும் மகாரம் பின்பும் இருப்பதால் ஒப்புமை –

—————————————————————

யான் எனது என்பது ஓன்று இல்லை என் செய்வது அவனை அல்லால்
ஆனது அறிந்திடும் தன்னடியார்க்கு எனை யாட்படுத்தித்
தான் எனை நல்கி நடத்துகின்றான் தன் அருள் வழியே
நான் உனை வீடு செய்வேன் என்ற நம் திரு நாரணனே-3-திருமந்திரம் -நம சப்தார்த்தம் –

நான் உனை வீடு செய்வேன் என்ற நம் திரு நாரணனே–நான் உனக்கு சம்சார பந்தத்தை நீக்கி முக்தி கொடுப்பேன் என்று உறுதி கூறிய
நம்முடைய ஸ்ரீ மன் நாராயணன் -சரம ஸ்லோகத்தில் அருளிச் செய்த படியே –
தான் எனை நல்கி நடத்துகின்றான் தன் அருள் வழியே -தானும் என்னிடம் அன்பு வைத்து -தன்னுடைய கருணை செல்லும் வழியிலே என்னை நல் வழிப் படுத்துகின்றான் –
தனது அருளினால் பிரபத்தி உபாயத்தில் மூட்டி அனுஷ்ட்டிக்கச் செய்கின்றான் –
யான் எனது என்பது ஓன்று இல்லை-நான் என்றும் என்னுடையது என்றும் கூறுவதற்குத் தகுந்த பொருள் ஒன்றும் இல்லை –
என்னுடைய அகங்கார மமகாரங்களைப் போக்கி அருளி -அடியேனை பரதந்த்ரனாக்கி அருளி -அநந்யார்ஹமாகவும் அருளிச் செய்தான்
என் செய்வது அவனை அல்லால் -அவ்வெம்பெருமானை அன்றி செய்யத் தக்கது என்ன இருக்கின்றது –
ஆனது அறிந்திடும் தன்னடியார்க்கு எனை யாட்படுத்தித் –தகுந்த நல்ல விஷயத்தை அறிந்தவர்களான பாகவதர்களுக்கும் என்னை தாசனாகச் செய்து –

சரணாகதி உபாயம் அனுஷ்ட்டித்து அகங்கார மமகாரங்கள் கழிந்து -ஸ்வாதந்திரமும் கழிந்து ததீய சேஷத்வமும் பெற்று -இருப்பதே நம சப்தார்த்தம் –
——————————————————–

யாதாம் இவை அனைத்தும் படைத்து ஏந்தும் இறைவனுமாய்க்
கோதாம் குணங்களுடன் குறுகாத குணத்தனுமாய்
மாதா பிதா என மன்னுற வாய்க்கதி என்ன நின்றான்
போதார் திருவுடன் பொன்னருள் பூத்த நம் புண்ணியனே –4–திருமந்திரம் –நாராயண சப்தார்த்தம் –

போதார் திருவுடன் பொன்னருள் பூத்த நம் புண்ணியனே–புஷ்ப்பத்தில் வசிக்கும் பிராட்டியுடன் சிறந்த கருணை மிகுந்தவனும்
நம் புண்ணியமே வடிவு எடுத்தால் போன்றவனுமான எம்பெருமான்
யாதாம் இவை அனைத்தும் படைத்து ஏந்தும் இறைவனுமாய்க்-எவ்வகைப்பட்ட பொருளுமான இந்தச் சேதன அசேதனங்கள்
எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்து காப்பாற்றும் ஸ்வாமியாக இருந்து
கோதாம் குணங்களுடன் குறுகாத குணத்தனுமாய் –குற்றம் எனப்படும் இழி குணங்களுடன் சேராத குணம் உடையனுமாக இருந்து
மாதா பிதா என –தாயும் தந்தையும் என்னலாம் படி –
மன்னுறவாய்க் கதி என்ன நின்றான்–திடமான பந்துவுமாக இருந்து அவனே கத்தி என்னும்படி நிற்கின்றான் –

———————————-

இரு விலங்கு கழித்து இடராம் உடலம் தன்னில் இலங்கு நடு நாடியினால் எம்மை வாங்கி
ஒரு விலங்கு நெறி யல்லா வழி யான் மன்னும் உயர் வானில் ஏற்றி யுயிர் நிலையும் தந்து
பெரு விலங்காம் அருள் தன் அடிக்கீழ் பிரியாத வமரருடன் பிணைத்துத் தன்னார்
உருவில் இலங்கு மிசைவிக்கும் உம்பர் போகமும் உக்காந்து தரும் திருமாலை யுகந்தோம் நாமே –5–திருமந்திரம் -நாராயணாய -சதுர்த்தியின் அர்த்தம் –

இரு விலங்கு கழித்து –புண்ய பாபா கர்மங்கள் ஆகிய இரண்டு விலங்குகளையும் ஒழித்து
இடராம் உடலம் தன்னில்-முக்திக்கு தடையாய் உள்ள இந்த சரீரத்தில்
இலங்கு நடு நாடியினால் -பிரகாசிக்கின்ற நடு நாடியாகிய பிரம்மா நாடியினால்
எம்மை வாங்கி -ஜீவாத்மா வாகிய எம்மை -இச் சரீரத்தின் நின்றும் பிரித்து எடுத்து
ஒரு விலங்கு நெறி யல்லா வழி யால்-தூமாதி மார்க்கத்தைப் போலே சம்சாரத்திலேயே மறுபடி பிணைக்கும் வழியாக இல்லாத அர்ச்சிராதி மார்க்கத்தால்
மன்னும் உயர் வானில் ஏற்றி-சாசுவதமான உயர்ந்த பரமபதத்தில் ஏற்றி வைத்து
யுயிர் நிலையும் தந்து -ஜீவனுக்கு கர்மா சம்பந்தத்தால் இதுவரை மறைந்து இருந்த குணங்களையும் கொடுத்து
பெரு விலங்காம் அருள் தன்னால் -பக்தர்களை விடாமல் கட்டிப் பிடித்துக் காப்பதால் பெரிய விலங்கு போன்ற கிருபையினால்
அடிக்கீழ் பிரியாத வமரருடன் பிணைத்துத் -தன் திரு வடிக் கீழ் க்ஷணமும் பிரியாது இருந்து கைங்கர்யம் செய்யும் நித்ய சூரிகளுடன் ஓன்று கூட்டி
அங்கு -பரமபதத்தில்
தன்னார் உருவில் -தன்னுடைய பரிபூர்ணமான ஸ்வரூபத்தில்
இலங்கு மிசைவிக்கும் உம்பர் போகமும்–ஊட்டும் நித்ய சூரிகளின் அனுபவத்தை
உகந்து தரும் திருமாலை யுகந்தோம் நாமே-நம்மிடம் மகிழ்ந்து கொடுக்கும் எம்பெருமானைப் பற்றி நாம் அறிந்து மகிழ்ந்தோம் –

——————————————–

உறவை இசைந்து இறையில்லா ஒருவற்கு என்றும் ஒண் சுடராய் ஓர் எழுத்தில் ஓங்கி நின்றோம்
துறவறமும் தூ மதியும் துயரம் தீர்வும் தூயவர்கட்க்கு ஆனமையும் இரண்டில் உற்றோம்
அறம் முயலும் அனைத்து உறவாய் அனைத்தும் ஏந்தும் அம்புயத்தாள் கணவனை நாம் அணுகப் பெற்றோம்
பிறவி அறுத்து அடி சூடி அடிமை எல்லாம் பிரியாத அமரருடன் பெற்றோம் நாமே –6-திருமந்திரத்தின் திரண்ட பொருள் –

ஓர் எழுத்தில் -ஓர் எழுத்தாகிய பிரணவத்தில்
இறையில்லா ஒருவற்கு-தனக்கு ஒரு நாயகன் இல்லாத எம்பெருமானோடு
உறவை இசைந்து என்றும்-எப்போதும் நமக்கு உள்ள சேஷத்வம் என்னும் சம்பந்தத்தை ஏற்றுக் கொண்டு
ஒண் சுடராய் -அழகிய பிரகாச ஸ்வரூபமாய்
ஓங்கி நின்றோம் -உயர்ந்து நின்றோம்
இரண்டில்–இரண்டு அக்ஷரமாய் யுள்ள நமஸ் சப்தத்தில்
துறவறமும் -அகங்கார மமகாரங்களை விடுகையாகிய முக்கிய தர்மமும்
தூ மதியும்-பரிசுத்தமான ஞானம் ஆகிய சரணாகதியும்
துயரம் தீர்வும்-தன்னை ஸ்வதந்திரனாய் நினைத்தால் ஆகிய துன்பம் நீங்குதலும்
தூயவர்கட்க்கு ஆனமையும் -பரிசுத்தரான பாகவதருக்கு அடியன் ஆனமையும் –
ஆகிய அர்த்தங்களை –
உற்றோம் -அடைந்தோம் –
மேல் நாராயண சப்தத்தில்
அறம் முயலும் -சரணம் அடைந்தவனைக் காப்பதால் ஆகிய தர்மத்தில் ரத்னம் உள்ளவனும்
அனைத்து உறவாய் அனைத்தும் ஏந்தும் -சகல வித பந்துவாய் சகல வஸ்துக்களையும் ரக்ஷிப்பவனான
அம்புயத்தாள் கணவனை -தாமரையில் வசிக்கும் பிராட்டியின் கணவனான எம்பெருமானை
நாம் அணுகப் பெற்றோம் -நாம் நெருங்கி அனுபவிக்கும் பாக்யத்தைப் பெற்றோம்
மேல் நான்காம் வேற்றுமையில்
பிறவி அறுத்து -மறு பிறவி ஒழியப் பெற்று
அடி சூடி -திருவடிகளை நம் முடியில் சூடி
அடிமை எல்லாம் -கைங்கர்யங்கள் முழுவதையும்
பிரியாத அமரருடன் பெற்றோம் நாமே –பகவானை க்ஷணமும் பிரியாத நித்ய சூரிகளுடன் சேர்ந்து நாம் செய்யப் பெற்றோம் –

————————————————-

பாசுரங்கள் -7-8-9-சாரசாரம் த்வயதிகாரம்
கருமம் என ஞானம் என வதனால் கண்ட யுயிர் கவரும் காதல் எனக் கானில் ஓங்கும்
அரு மறையால் தரும் நிலையில் இந்நாள் எல்லாம் அடியேனை அலையாத வண்ணம் எண்ணி
தருமம் உடையார் உரைக்க யான் அறிந்து தனக்கு என்னா அடிமைக்காம் வாழ்ச்சி வேண்டித்
திருமகளோடு ஒரு காலும் பிரியா நாதன் திண் கழலே சேது எனச் சேர்க்கின்றேனே –7-த்வயம் சரணாகதியைப் பற்றுதல் –

கருமம் என ஞானம் என-கருமை யோகமும் ஞான யோகமும்
வதனால் கண்ட -ஆகிய இரண்டால் சாஷாத் கரித்த
யுயிர் -ஜீவாத்மாவை
கவரும் -வசப்படுத்தித் தன்னிடத்தில் ஈடுபடச் செய்கின்ற
காதல் எனக் -பக்தி யோகம் என்னும் உபாயமும் ஆகிய
கானில் ஓங்கும் -அனுஷ்டிக்க அரியனவாய் இருப்பதால் காடு போன்ற உயர்ந்து நிற்பதாயும்
அரு மறையால் தரும் நிலையில் -அருமையான வேதத்தால் உபதேசிக்கப் படுவதுமான நிஷ்டையில்
இந்நாள் எல்லாம் -இந்த நாள் முழுவதும்
அடியேனை அலையாத வண்ணம் எண்ணி -சேஷ பூதனான யான் அனுஷ்டிக்க முயன்று துன்பம் அறாத படி திரு உள்ளம் கொண்டு
தருமம் உடையார் உரைக்க -தர்மம் அறிந்த ஆச்சார்யர்கள் அடியேனுக்கு சரணாகதியை உபதேசிக்க
யான் அறிந்து -அடியேன் அதை அறிந்து கொண்டு
தனக்கு என்னா அடிமைக்காம் -மமகாராம் இல்லாமல்
வாழ்ச்சி வேண்டித் -வாழ்க்கையை விரும்பி
திருமகளோடு ஒரு காலும் பிரியா நாதன் –பிராட்டியை விட்டு எப்பொழுதும் பிரியாத எம்பெருமானுடைய
திண் கழலே சேது எனச் சேர்க்கின்றேனே –வலிய திருவடிகளே சம்சாரத்தைக் கடக்கும் அணை என்று உறுதி கொண்டு -அவற்றை உபாயமாக அடைகின்றேன் –

————————————————————–

வினை விடுத்து வியன் குணத்தால் எம்மை யாக்கி வெருவுரை கேட்டு அவை கேட்க விளம்பி நாளும்
தனை யனைத்தும் அடைந்திடத் தான் அடைந்து நின்ற தன் திரு மாதுடன் இறையும் தனியா நாதன்
நினைவு அழிக்கும் வினை வழிக்கு விலக்காய் நிற்கும் நிகர் இல்லா நெடும் குணங்கள் நிலை பெறத் தன்
கனை கழல் கீழ் அடைக்கலமாக் காட்சி தந்து காரணனாம் தன் காவல் கவர்கின்றானே-8-த்வயம் -ஸ்ரீ சப்தார்த்தத்தின் ஆறு பொருள்கள் –

வினை விடுத்து –தன்னை அடைந்தவர்களின் கர்மங்களை போக்கி
வியன் குணத்தால் எம்மை யாக்கி –அதிசயிக்கத் தக்க தன் சிறந்த கருணை முதலிய குணத்தால் எம்மைப் பக்குவப்படுத்தி
வெருவுரை கேட்டு -பாபிகளான எங்களை எம்பெருமான் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று தாசர்கள் அச்சத்துடன் புலம்பும் குரலைக் கேட்டு
அவை கேட்க விளம்பி -அந்த புலம்பல்களை எம்பெருமான் கேட்க விண்ணப்பித்து
நாளும் தனை யனைத்தும் அடைந்திடத் –எப்பொழுதும் தன்னை எல்லாம் சரணம் அடைய
தான் அடைந்து நின்ற -அவர்களை உஜ்ஜீவிப்பைக்காக தாம் எம்பருமானை அடைந்து நின்றவளான
தன் திரு மாதுடன் இறையும் தனியா நாதன் -தனக்கே உரியலான பிராட்டியுடன் க்ஷணமும் பிரியாது இருக்கும் எம்பெருமான்
நினைவு அழிக்கும் வினை வழிக்கு -நல்ல அறிவைப் போக்குகின்ற பாபா மார்க்கத்துக்கு
விலக்காய் நிற்கும் -தடையாய் நிற்பவையும்
நிகர் இல்லா நெடும் குணங்கள் நிலை பெறத் -ஒப்பற்றவையான அளவற்ற தன்னுடைய குணங்கள் நிலை பெற்று நிற்பதற்காக
தன் கனை கழல் கீழ் அடைக்கலமாக் காட்சி தந்து -நம்மை ரக்ஷிக்கப் பட வேண்டிய வஸ்துவாகக் கொண்டு சேவையைக் கொடுத்து
காரணனாம் தன் காவல் கவர்கின்றானே-சர்வ காரகனான தன்னுடைய ரேஷன் ஸ்வபாவத்தை நிலை நாட்டிக் கொள்ள விரும்புகின்றான்
ஸ்ரீ யதே–ஸ் ராயதே -/ஸ்ருனோதி ஸ்ராவ்யாதி / இத்யாதி ஆறு வியுத்பத்திகளின் அர்த்தங்களையும் அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————-

என்னது யான் செய்கின்றேன் என்னாதாருக்கு இன்னடிமை தந்து அளிப்பான் இமையோர் வாழும்
பொன்னுலகில் திருவுடனே யமர்ந்த நாதன் புனலாரும் பொழில் அரங்கம் திகழ மன்னித்
தன்னகலம் அகலாத தகவால் ஓங்கும் தகவுடனே தன் கருமம் தானே எண்ணி
யன்னை என அடைக்கலம் கொண்டு அஞ்சல் தந்து என் அழல் ஆற நிழல் ஆற அளிக்கின்றானே–9-ஸ்ரீ ரெங்கநாதன் சாஸ்வதமாக நின்று அருள் புரிதல் –

என்னது யான் செய்கின்றேன் என்னாதாருக்கு –இப்பொருள் என்னுடையது -இதை யான் செய்கின்றேன் -என்னும் மமக அஹங்காரங்கள் இல்லாதவர்களுக்கு
இன்னடிமை தந்து அளிப்பான்–இனிய கைங்கர்யத்தை அருளி ரஷித்து அருளுவதற்காக
இமையோர் வாழும் பொன்னுலகில் -நித்ய சூரிகள் நித்ய கைங்கர்யம் செய்யும் ஸ்ரீ பரம பதத்தில்
திருவுடனே யமர்ந்த நாதன் -பெரிய பிராட்டியார் உடன் எழுந்து அருளி உள்ள எம்பெருமான் –
புனலாரும் பொழில் அரங்கம் திகழ மன்னித் -நீர் வளம் மிகுந்த சோலை சூழ்ந்த திருவரங்கம் திவ்ய க்ஷேத்ரம் விளங்கும் படி
தன்னகலம் அகலாத தகவால் ஓங்கும் -தன்னுடைய திரு மார்பை விட்டுப் பிரியாத கருணை வடிவமான பிராட்டியின் சம்பந்தத்தால் விருத்தி அடைகின்ற
தகவுடனே தன் கருமம் தானே எண்ணி -கருணையுடன் என்னைக் காப்பதாகிய தன் கடைமையை தான் நினைத்து
யன்னை என அடைக்கலம் கொண்டு அஞ்சல் தந்து -பெற்ற தாய் என்னும்படி என்னைக் காக்க வேண்டிய வஸ்துவாகக் கொண்டு அபய பிரதானம் செய்து
என் அழல் ஆற நிழல் ஆற அளிக்கின்றானே–என் சம்சார தாபம் எல்லாம் தீர்க்கும்படி தன் திருவடி நிழலை நிறையத் தந்து ரஷித்து அளிக்கின்றான் –
தன் கைங்கர்யத்தை இங்கேயே அளிக்க நினைத்து ஸ்ரீ ரெங்கத்தில் திருப் பள்ளி கொண்டு நித்ய வாசம் செய்து அருள்கின்றான் –
ஸ்வாபாவிக கருணை பெரிய பிராட்டியின் சம்பந்தத்தால் மேன்மேலும் வளர்ந்து அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் செய்து அருள்கின்றான் –

—————————————————-

ஒண்டொடியாள் திரு மகளும் தானுமாகி ஒரு நினைவால் ஈன்ற வுயிர் எல்லாம் உய்ய
வண்டுவரை நகர் வாழ வசுதேவர்காய் மன்னவற்குத் தேர்ப் பாகனாகி நின்ற
தண் துளவ மலர் மார்பன் தானே சொன்ன தனித் தருமம் தான் எமக்காய்த் தன்னை என்றும்
கண்டு களித்து அடி சூட விலக்காய் நின்ற கண் புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே –10–ஸ்ரீ கண்ணன் அருளிச் செய்த சரம ஸ்லோகார்த்தம் –
அதிகார சங்கிரகம் -46-பாசுரமும் இதுவே –

வண்டுவரை நகர் வாழ-அழகிய ஸ்ரீ மத் த்வாரகா நகரத்தில் உள்ளவர் உஜ்ஜீவிப்பதற்கு
வசுதேவர்காய் மன்னவற்குத் தேர்ப் பாகனாகி நின்ற -ஸ்ரீ வாசு தேவர்க்கு திருக் குமாரனாய் திரு அவதரித்து அர்ஜுனனுக்கு தேர் ஓட்டும் பாகனாகி நின்றவனும்
தண் துளவ மலர் மார்பன் -குளிர்ந்த திருத் துழாயுடன் பூவைத் திரு மார்பில் அணிந்தவனுமான ஸ்ரீ கண்ணபிரான்
ஒண்டொடியாள் திரு மகளும் தானுமாகி -அழகிய கை வளையல்களை யுடைய பிராட்டியும் தானும் ஓன்று கூடி
ஒரு நினைவால் ஈன்ற -ஒரே விதமான சங்கல்பத்தால் படைத்த
வுயிர் எல்லாம் உய்ய –ஜீவாத்மாக்கள் எல்லாம் உஜ்ஜீவிப்பதற்காக
தானே சொன்ன தனித் தருமம் தான் எமக்காய்த் -தானே சரம ஸ்லோகத்தில் வெளியிட்டு அருளிய நிகரற்ற உபாயமாக
எமக்குத் தானேயாகி நின்று -யாம் பரந்யாசம் செய்ய அவன் தானே உபாயமாய் நின்று
தன்னை என்றும் கண்டு களித்து அடி சூட -தன்னைப் பரமபதத்தில் எப்பொழுதும் சேவித்து மகிழ்ந்து திருவடிகளை நம் முடியில் தரித்துக் கைங்கர்யம் செய்வதற்கு
விலக்காய் நின்ற கண் புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே –தடையாய் இருந்த பிரக்ருதியைக் கொண்டு தத்வ ஞானத்தை ஒழிப்பதாகிய
கண் பொத்தும் விளையாட்டை நீக்குகின்றான் -இனி விரைவில் மோக்ஷம் பெறலாம் –

—————————————————–

துய்ய மனத்தர் துறை யணுகாத துணையிலியேன்
ஐயம் அறுத்து உனது ஆணை கடத்தல் அகற்றினை நீ
கையமர் சக்கரக் காவலர் காக்கும் திருவருளால்
வையம் அளந்த வடிக் கீழ் அடைக்கலம் வைத்து அருளே –11-சரமஸ்லோகார்த்தம் -பிரபத்தியில் மூட்டுதல் —

கையமர் சக்கரக் காவலர் –திருக் கையில் அமர்ந்துள்ள சக்கரத்தால் -அடியார்களை ரஷிப்பதில் வல்லவனே
துய்ய மனத்தர் துறை யணுகாத-பரிசுத்தமான மனத்தை யுடைய -விசேஷ ஞானம் சக்தியும் யுடைய – உயர்ந்த அதிகாரிகளால்-
அனுஷ்ட்டிக்கப் படுகிற பக்தி யோகம் முதலிய உபாயத்தில் நெருங்குவதற்கு சக்தியற்ற வனும்
துணை யிலியேன் -வேறு கதி அற்றவனுமான எனக்கு
ஐயம் அறுத்து -பலன் பெறுவதில் உள்ள சங்கைகளைப் போக்கி
உனது ஆணை கடத்தல் அகற்றினை நீ -உன்னுடைய ஆஞ்ஜை யை மீறி நடப்பதாகிய அபராதத்தை நீயே போக்கி அருளி விட்டாய் –
இனிச் செய்ய வேண்டியது யாது என்னில்
காக்கும் திருவருளால் –உலகம் முழுவதையும் காக்க வல்ல உனது சிறந்த கிருபையால்
வையம் அளந்த வடிக் கீழ் அடைக்கலம் வைத்து அருளே –முன் திரிவிக்ரமனாய் உலகத்தை தன் நிழலில் ஒதுங்குமாறு அளந்த
திருவடிகளின் கீழே என்னை -உபாயத்தை அனுஷ்டித்த என்னை ரஷித்து அருள வேண்டிய பெருளாக அருள வேண்டும் –

——————————————-

அறியாத இடைச்சியரும் அறியும் வண்ணம் அம்புயத்தாளுடன் அந்நாள் அவதரித்த
குறையாதும் இல்லாத கோவிந்தா நின் குரை கழல் கீழ் அடைக்கலமாம் குறிப்புத் தந்தாய்
வெறியாரும் மலர்மகளும் நீயும் விண்ணில் விண்ணவர் அடி சோபித இருக்கும் மேன்மை
குறையாத வினை யகற்றி யடிமை கொள்ளக் குறுக வொரு நன்னாள் நீ குறித்திடாயே -12-சரமஸ்லோகார்த்தம் -முக்தி பெறத் துடித்தல்-

அறியாத இடைச்சியரும் அறியும் வண்ணம் -விசேஷ -ஞானம் இல்லாத இடைப்பெண்களும் தன்னை அறிந்து அனுபவிக்கும்படி
அம்புயத்தாளுடன் அந்நாள் அவதரித்த -மலர்மகளுடன் முன்பு திருவதரித்தவனும்
குறையாதும் இல்லாத கோவிந்தா –குறை ஒன்றும் இல்லாத பரிபூர்ணனான எம்பெருமானே
நின் குரை கழல் கீழ் அடைக்கலமாம் குறிப்புத் தந்தாய் -உன்னுடைய கழல் ஒலிக்கின்ற திருவடிகளின் கீழே ரக்ஷிக்கப்பட வேண்டிய
வஸ்துவாக ஆகும்படி உள்ளக்கருத்தை எனக்கு கொடுத்து அருளினாய்
வெறியாரும் மலர்மகளும் நீயும் விண்ணில் விண்ணவர் அடி சூட இருக்கும் மேன்மை -பரிமளமே உபாதானமாக உள்ள பெரிய பிராட்டியும் நீயுமாக
நித்ய முக்தர்கள் உன் திருவடிகளின் கீழ் முடி சூடிக் கைங்கர்யம் செய்ய ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி யுள்ள நிலையில் நின்றும்
குறையாத வினை யகற்றி யடிமை கொள்ளக் குறுக வொரு நன்னாள் நீ குறித்திடாயே -எங்கள் இடம் குறையாது நிறைந்துள்ள கர்மங்களை ஒழித்து
எங்கள் கைங்கர்யத்தையும் நீ ஏற்பதற்கு விரைவில் கிட்டும்படி ஒரு நல்ல காலத்தை நீ குறிப்பிட்டு அருள வேண்டும் –

————————————————————

தத்துவமும் சாதனமும் பயனும் காட்டும் தாரம் முதல் இரு நான்கும் தன் கருத்தால்
முக்தி வழி நாம் முயலும் வகையே காண முகுந்தன் இசைத்து அருள் அருள் செய்த ஐ நாலைந்தும்
பக்தி தனில் படிவில்லார் பரம் சுமத்தப் பார்த்தன் தன் தேர் முன்னே தான் தாழ நின்ற
வுத்தமனார் உத்தம நல்லுரை நாலெட்டும் உணர்ந்தவர் தாம் உகந்து எம்மை யுணர்வித்தாரே —13–ரஹஸ்ய த்ரயங்கள் காட்டும் அர்த்தங்கள் —

தத்துவமும் சாதனமும் பயனும் காட்டும் –தத்துவத்தையும் உபாயத்தையும் பலனையும் வெளியிடுகின்ற
தாரம் முதல் இரு நான்கும் -பிரணவத்தை முதலாகக் கொண்ட எட்டு அக்ஷரங்கள் அமையப் பெற்ற திரு மந்திரத்தையும்
முக்தி வழி நாம் முயலும் வகையே காண –மோக்ஷத்தின் உபாயத்தில் நாம் அனுஷ்ட்டிக்கும் பிரகாரத்தைக் காண்பதற்காக
முகுந்தன் தன் கருத்தால்-எம்பெருமான் தன் திரு உள்ளத்தால்
இசைத்து அருள் அருள் செய்த ஐ நாலைந்தும் -வேதத்தில் பிரிந்து இருந்த இரு பாகங்களை ஓன்று கூட்டி உலகுக்கு அருள் புரிந்த
இருபத்தைந்து அக்ஷரங்கள் அமைந்த த்வயத்தையும்
பக்தி தனில் படிவில்லார் பரம் சுமத்தப் -பக்தி யோகத்தில் ஈடுபட முடியாதவர்கள் தம்மைக் காக்கும் பொறுப்பை அவன் மீது சுமத்த
பார்த்தன் தன் தேர் முன்னே தான் தாழ நின்ற -அர்ஜுனனுடைய தேரின் முன்னே பாகனாகத் தாழ்ந்து நின்றவனான
வுத்தமனார் உத்தம நல்லுரை நாலெட்டும் உணர்ந்தவர் தாம் உகந்து எம்மை யுணர்வித்தாரே —தாம்-அசை சொல் -சர்வேஸ்வரனுடைய
உயர்ந்த நல்லுபதேசம் ஆகிய முப்பத்திரண்டு அக்ஷரங்கள் பொருந்திய சரம ஸ்லோகத்தையும்
அர்த்தத்துடன் அறிந்த ஆச்சார்யர்கள் நம்மை விரும்பி உபதேசித்து அருளினர்-

————————————————–

பரக்கும் புகழ் வரும் பைம் பொருள் வாய்த்திடும் பத்தர்களாய்
இரக்கின்றவர்க்கு இவை ஈந்தால் அறம் உளது என்று இயம்பார்
கரக்கும் கருத்துடைத் தேசிகர் கன்று என நம்மை எண்ணிச்
சுரக்கும் சுரவிகள் போல் சொரிகின்றனர் சொல்லமுதே –14-ஆச்சார்யர்கள் பலன்களை எதிர்பாராமல் உபதேசித்து அருளும் தன்மை –

கரக்கும் கருத்துடைத் தேசிகர் -ரஹஸ்யார்த்தங்களை ரஹஸ்யமாக வைத்துக் கொள்ளத் திரு உள்ளம் கொண்ட நம் ஆச்சார்யர்கள் –
பத்தர்களாய் -இரக்கின்றவர்க்கு -பக்தி உள்ளவர்களாய் வந்து பிரார்த்திக்கும் அதிகாரிகளுக்கு
இவை ஈந்தால் -இந்த ரஹஸ்யார்த்தங்களை உபதேசத்தால்
பரக்கும் புகழ் வரும் -நாட்டில் பரவுகின்ற கீர்த்தி உண்டாகும்
பைம் பொருள் வாய்த்திடும் -மிகுந்த செல்வம் கிடைக்கும்
அறம் உளது என்று இயம்பார் -புண்ணியம் உண்டாகும் என்று நினைத்து உபதேசிக்க மாட்டார்கள்
கன்று என நம்மை எண்ணிச் -நம்மைக் கன்று போலே நினைத்து
சுரக்கும் சுரவிகள் போல் சொரிகின்றனர் சொல்லமுதே -தம் கன்றுக்கு பாலைப் பெருக்கும் காமதேனுக்கள் போலே உபதேசமாகிய அமுதத்தை பொழிகின்றனர்-

—————————————————-

சோகம் தவிர்க்கும் சுருதிப் பொருள் ஓன்று சொல்லுகின்றோம்
நாகம் தனக்கும் இராக்கத்திற்கும் நமக்கும் சரணம்
ஆகண்டவன் மகனாகிய வா வலிப்பேறிய வோர்
காகம் பிழைத்திடக் கண்ணழிவே செய்த காகுத்தனே -15-ஸ்ரீ மன் நாராயணனே உபாயம் -15-முதல் -19-வரை அபய பிரதான சாரம் –

சோகம் தவிர்க்கும் சுருதிப் பொருள் ஓன்று சொல்லுகின்றோம் -சகல துக்கங்களையும் ஒழிக்கக் கூடிய வேதத்தின் சாரார்த்தம் ஒன்றை வெளியிடுகின்றோம்
அதாவது
ஆகண்டவன் மகனாகிய வா வலிப்பேறிய வோர் -இந்திரனுடைய புத்தரானாகிய கர்வம் கொண்ட ஒரு காகம் குற்றம் செய்ய அவன் உயிர் வாழுமாறு
காகம் பிழைத்திடக் கண்ணழிவே செய்த காகுத்தனே -ஒரு கண்ணை மாத்திரம் அளித்த ஸ்ரீ ராம பிரான் ஒருவனே
நாகம் தனக்கும் இராக்கத்திற்கும் நமக்கும் சரணம் -ஸ்வர்க்க லோகத்தில் உள்ள தேவர்களுக்கும் ராக்ஷஸர்களுக்கும்
முக்தியை விரும்பும் நமக்கும் உபாயமாக ஆவான் -நாகம் -இட ஆகு பெயர் –

———————————————————-

ஒருக்காலே சரணாக அடைகின்றாற்கும் உனக்கு அடிமை யாகின்றேன் என்கின்றார்க்கும்
அருக்காதே யனைவர்க்கும் அனைவராலும் அஞ்சேல் என்று அருள் கொடுப்பன் இது தான் ஓதும்
இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
நெருக்காத நீள் விரதம் எனக்கு ஓன்று என்னும் நெறி யுரைத்தார் நிலை யுணர்ந்து நிலை பெற்றோமே –16-ஸ்ரீ ராம பிரான் அருளிச் செய்த அபய பிரதானம் –

ஒருக்காலே சரணாக அடைகின்றாற்கும் உனக்கு அடிமை யாகின்றேன் என்கின்றார்க்கும் -ஒரு முறையே என்னைச் சரணமாக அடைந்தவனுக்கும்
உனக்கு சேஷபூதனாக இருக்கின்றேன் என்று அனுசந்திக்கின்றவனுக்கும்
அருக்காதே யனைவர்க்கும் அனைவராலும் அஞ்சேல் என்று அருள் கொடுப்பன் -சிறிதும் குறைவின்றி சகல பிராணிகளுக்கும் சகல பிராணிகளால்
பயம் அடையாமல் இருக்கும் படி அபாய பிரதானம் செய்வேன்
இது தான் ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன் என் இசைவினாலும் -இவ்வாறு செய்வது தான்
அத்யயனம் செய்யப்படும் வேதத்தாலும் பெருமை பொருந்திய முனிவர்களால் செய்யப்பட ஸ்ம்ருதியினாலும் வேதத்தையும் ஸ்ம்ருதியையும் அறிந்த
பெரியோர்களின் அனுஷ்டானத்தாலும் என் உடன்பாட்டாலும்
நெருக்காத நீள் விரதம் எனக்கு ஓன்று என்னும் நெறி யுரைத்தார் நிலை யுணர்ந்து நிலை பெற்றோமே –எனக்கு நீக்க முடியாத ஒரு பெறிய விரதம் ஆகும் என்று
சரணாகதி மார்க்கத்தை உபதேசித்து அருளிய ஸ்ரீ ராமபிரானுடைய உறுதியை நினைந்து நாம் அமைதி பெற்றோம் –

——————————————-

பொன்னை யிகழ்ந்து விருகங்கள் புல்லிய புல்லுகந்தால்
மன்னர் எடுப்பதப் பொன்னலதே மன் உலகம் அனைத்தும்
தன்னை அடைந்திடத் தான் அருள் செய்யும் தனிச் சிலையோன்
பொன்னடி நாம் அடைந்தோம் புறம் ஆர் என் கொல் செய்திடினே—17 –இழிவான பலனைப் பற்றாமை –

பொன்னை யிகழ்ந்து விருகங்கள் புல்லிய புல்லுகந்தால் -மிருகங்கள் பொன்னின் பெருமை யறியாது வெறுத்துவிட்டு அற்பமான புல்லையே ப்ரியமாகக் கொண்டாலும்
மன்னர் எடுப்பதப் பொன்னலதே -அரசர்கள் விரும்பி எடுத்துக் கொள்வது அப்பொன்னைத் தவிர வேறு உண்டோ
அது போலே
மன் உலகம் அனைத்தும் -நிலை பெற்ற உலகம் முழுவதும்
தன்னை அடைந்திடத் தான் அருள் செய்யும் தனிச் சிலையோன் -தன்னைச் சரணமாக அடைய தான் கிருபை செய்பவனும் நிகரற்ற வில்லை யுடையவனான
ஸ்ரீ ராமாபின்னானுடைய பொன்னடி நாம் அடைந்தோம் புறம் ஆர் என் கொல் செய்திடினே—அழகிய திருவடிகளை நாம் சரணமாகப் பற்றினோம் –
இதற்கு மாறாக யார் வேறு எந்தக் கார்யத்தைச் செய்தாலும் நமக்கு என்ன நஷ்டம் –

————————————————————–

வேதத் திரளின் விதி யுணர்ந்தோர்கள் விரித்துரைத்த
காதல் கதியையும் ஞானத்தையும் கருமங்களை
சாதிக்க வல்ல சரணாகதி தனி நின்ற நிலை
யோதத் தொடங்கும் எழுத்தின் திறத்தில் உணர்மின்களே –18-மற்ற யோகங்களுக்கும் பிரபத்தியின் உதவி –

வேதத் திரளின் விதி யுணர்ந்தோர்கள் விரித்துரைத்த -வேத வேதாந்தங்கள் கட்டளையை அறிந்த பூர்வாச்சார்யர்கள் தெளிவாக வெளியிட்டு அருளிய
காதல் கதியையும் ஞானத்தையும் கருமங்களை -பக்தியாகிய உபாயத்தையும் ஞான யோகத்தையும் கர்ம யோகத்தையும்
சாதிக்க வல்ல சரணாகதி தனி நின்ற நிலை -முடித்துக் கொடுக்கச் சக்தியுள்ள பிரபத்தியானது தானே சகல பலத்தையும் கொடுப்பதாய்த்
தனித்த உபாயமாகவும் நின்ற பெருமையை
யோதத் தொடங்கும் எழுத்தின் திறத்தில் உணர்மின்களே –வேதத்தை அத்யயனம் செய்யும் பொழுது முதலில் அனுசந்திக்கப்படுகின்ற
முதல் எழுத்தாகிய பிரணவத்தினுடைய ஸ்வபாவத்தால் அறிவீர்களாக –

——————————————————

மூ உலகும் தன் பிழையைத் தானே சாற்ற முனிவர்களும் தேவர்களும் முனிந்த அந்நாள்
தாவு அரிதாய் எங்கும் போய்த் தளர்ந்து வீழ்ந்த தனிகே காகம் தான் இரந்த உயிர் வழங்கிக்
காவல் இனி எமக்கு எங்கும் கடன் என்று எண்ணிக் காண நிலை இலச்சினை அன்று யிட்ட வள்ளல்
ஏவல் பயன் இரக்கம் இதற்கு ஆறு என்று ஓதும் எழில் யுடையார் இணை அடிக்கீழ் இருப்போம் நாமே -18-ஸ்ரீ ராமபிரான் காகாசுரன் பிழை பொறுத்தல் –

மூ உலகும் தன் பிழையைத் தானே சாற்ற-மூன்று உலகங்களிலும் அலைந்து தான் செய்த அபராதத்தை தானே வெளியிட்டு பேசித் தன்னைக் காக்கும் படி வேண்ட
முனிவர்களும் தேவர்களும் முனிந்த அந்நாள் -ரிஷிகளும் தேவதைகளும் அவன் மீது கோபித்து துரத்திய அக்காலத்திலே
தாவு அரிதாய் எங்கும் போய்த் தளர்ந்து வீழ்ந்த தனிக் காகம் தான் இரந்த உயிர் வழங்கிக்-வேறு புகலிடம் கிடைக்காமல் நாடு எங்கும் சுற்றி சோர்ந்து
ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகளில் வந்து வீழ்ந்த உதவியற்ற காகம் யாசித்த உயிர்ப் பிச்சை அளித்து
காவல் இனி எமக்கு எங்கும் கடன் என்று எண்ணிக் காண நிலை இலச்சினை அன்று யிட்ட வள்ளல் -இனி மேல்
எவ்விடத்திலும் யாரையும் ரஷித்தலே எம்முடைய கடைமை என்று திரு உள்ளம் கொண்டு
ஒற்றைக் கண் குருடாகும் சாசுவதமான அடையாளத்தை அப்பொழுது காகனுக்குச் செய்த பெரும் கொடையாளனான ஸ்ரீ ராமபிரானுடைய
ஏவல் பயன் இரக்கம் இதற்கு ஆறு என்று ஓதும் எழில் யுடையார் இணை அடிக்கீழ் இருப்போம் நாமே-கைங்கர்யமே நமக்குச் சிறந்த புருஷார்த்தம் ஆகும்
இந்தப் பலனைப் பெறுவதற்கு உபாயம் நாம் செய்யும் பிரபத்தியால் அவனுக்கு நம்மிடம் உண்டாகும் தயை தான் என்று
உபதேசித்து அருளிய தேஜஸ் பொருந்தியவர்களாக ஆச்சார்யர்களின் திருவடிகளின் கீழே நாம் நிலை பெறுவோம் –

———————————————————————

திருத்தம் பெரியவர் சேரும் துறையில் செறிவிலர்க்கு
வருத்தம் கழிந்த வழி யாரும் என்ற நம் மண் மகளார்
கருத்து ஒன்ற ஆதிவராகம் யுரைத்த கதி யறிவார்
பொருத்தம் தெளிந்து உரைக்கப் பொய்யிலா மதி பெற்றனமே –20 –ஸ்ரீ பூமி தேவிக்கு ஸ்ரீ வராஹ நயினார் உபதேசம் /-20 –முதல் –23 -வரை ரஹஸ்ய சிகாமணி –

திருத்தம் பெரியவர் சேரும் துறையில் -திருந்திய ஞானம் அனுஷ்டானம் இவற்றால் பெரிய மஹரிஷிகளால் அனுஷ்ட்டிக்கப்படும்
பக்தியோகம் முதலிய உபாயத்தில்
செறிவிலர்க்கு -முயல்வதற்கு வேண்டிய அதிகாரம் இல்லாதவர்க்கு
வருத்தம் கழிந்த வழி யாரும் என்ற நம் மண் மகளார் -சிரமம் இல்லாமல் எளிதில் அனுஷ்ட்டிக்கக் கூடிய உபாயத்தைத் தேவரீர் அருள் புரிய வேண்டும்
என்று பிரார்த்திக்க நம் ஸ்ரீ பூமி தேவியினுடைய
கருத்து ஒன்ற ஆதிவராகம் யுரைத்த கதி யறிவார்-திரு உள்ளத்துக்கு ஏற்ப ஆதி வராஹப் பிரானாய் திருவதரித்த எம்பெருமான் வெளியிட்டு
பிரபத்தி என்னும் உபாயத்தை ஸ்வரூபத்தை அறிந்த நம் ஆச்சார்யர்கள்
பொருத்தம் தெளிந்து உரைக்கப் பொய்யிலா மதி பெற்றனமே –நம் தகுதியைக் கண்டு அவ்வுபாயத்தையே உபதேசித்து அருள அழிவு இல்லாத ஞானத்தைப் பெற்றோம் –

—————————————–

இடம் பெற்றார் எல்லாம் என்னுடலாய் நிற்ப இடர் பிறப்பு என்று இவை இல்லா வென்னை யன்பால்
அடம் பற்று அவன் என்று நினைத்தான் யாவன் அவன் ஆவி சரியும் போது அறிவு மாறி
உடம்பில் தாரு உபலம் போல் கிடக்க நானே உய்யும் வகை நினைந்து உயர்ந்த கதியால் என்தன்
இடம் பெற்று என்னுடன் வாழ எடுப்பன் என்ற வெம்பெருமான் அருள் பெற்று மருள் செற்றோமே –21 –ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகார்த்தம் –

இடம் பெற்றார் எல்லாம் என்னுடலாய் நிற்ப -உலகில் இடம் பெற்றுள்ள யாவரும் -சகல வஸ்துக்களும் எனக்குச் சரீரமாய் நிற்க
இடர் பிறப்பு என்று இவை இல்லா வென்னை யன்பால்-நாசமும் பிறப்பும் ஆகிய இந்த தோஷங்கள் இல்லாத சர்வேஸ்வரனான என்னை ப்ரீதியுடன்
அடம் பற்று அவன் என்று நினைத்தான் யாவன் -அவன் ஒருநாளும் கைவிடாத திடமான கதியாக ஆவான் என்று எவன் நினைந்தவனாகச் சரணம் அடைகின்றானோ
அவன் ஆவி சரியும் போது அறிவு மாறி -அவனுடைய உயிர் நீங்கும் காலத்தில் தன் நினைவு இழந்து
உடம்பில் தாரு உபலம் போல் கிடக்க –கட்டை போலும் கல் போலும் தன் சரீரத்தில் கிடக்கும் போது
நானே உய்யும் வகை நினைந்து உயர்ந்த கதியால் என்தன்-அந்த சேதனன் உஜ்ஜீவிக்க வேண்டிய பிரகாரத்தை நானே செய்ய நினைந்து சிறந்த அர்ச்சிராதி கதியால்
இடம் பெற்று என்னுடன் வாழ எடுப்பன் என்ற -என்னுடைய ஸ்தானம் ஆகிய பரமபதத்தைப் பெற்று என்னோடே இருந்து
சகல கைங்கர்யங்களையும் செய்து வாழும்படி உயர்த்தி வைப்பன் என்று அருளிச் செய்த
வெம்பெருமான் அருள் பெற்று மருள் செற்றோமே –ஸ்ரீ வராஹப் பிரானுடைய கிருபையைப் பெற்று அஞ்ஞானம் ஒழியப் பெற்றோம் —

—————————————————-

இரண்டு உரையாத நம் ஏனம் உரைத்த யுரை இரண்டின்
திரண்ட பொருள்கள் தெளிந்து அடி சூடினம் திண் அருளால்
சுருண்ட நம் ஞானச் சுடர் ஒளி சுற்றும் பார்ப்பதன் முன்
புரண்டது நம் வினை போம் இடம் பார்த்து இனிப் போம் அளவே –22 –பிரபன்னனுக்கு முத்தி நிலையில் கர்மங்கள் வெளியேறுதல் –

இரண்டு உரையாத நம் ஏனம் உரைத்த யுரை இரண்டின் -இரண்டு வார்த்தை சொல்லாத நம்முடைய ஸ்ரீ வராஹ நாயனார் அருளிச் செய்த சரம ஸ்லோகம் இரண்டின்
திரண்ட பொருள்கள் தெளிந்து அடி சூடினம் திண் அருளால் -சாரமான அர்த்தங்களை நாம் அறிந்து அவனுடைய வலிய கிருபையினால்
அவன் திருவடிகளை உபாயமாகவும் பலனாகவும் கொண்டோம்
சுருண்ட நம் ஞானச் சுடர் ஒளி சுற்றும் பார்ப்பதன் முன் -கர்மா சம்பந்தத்தால் எல்லா விஷயங்களையும் அறிய முடியாது சுருங்கி உள்ள நம் ஞானம் ஆகிய
தேஜஸின் பிரகாசம் எல்லா இடத்திலும் பரவுதற்கு முன் -எல்லாவற்றையும் அறியும் சக்தியைப் பெறுவதற்கு முன்
புரண்டது நம் வினை போம் இடம் பார்த்து இனிப் போம் அளவே –நம்முடைய கர்மம் அகன்று விட்டது -இனித் தாம் போகத் தக்க
இடத்தைப் பார்த்து அவை போக வேண்டிய அளவே உள்ளது –புண்ய கர்மம் நண்பர்கள் இடமும் பாப கர்மம் விரோதிகள் இடமும் போய்ச் சேரும் என்று உபநிஷத் கூறுகின்றது –

—————————————————

மலையும் குலையும் என்று எண்ணியும் வன் பெரும் புண் திரங்கித்
தலையும் வெளுத்த பின் தானே யழிய விசைகின்றிலீர்
அலையும் கடல் கொண்ட வையம் அளித்தவன் மெய்யருளே
நிலை என்று நாடி நிலை நின்ற பொய்ம்மதி நீக்குமினே –23 –மரணத்திற்கு அஞ்சுபவர்க்கு நல்லுரை கூறுதல் –

மலையும் குலையும் என்று எண்ணியும் -ஸ்திரம் என்று நாம் நினைக்கும் மலையும் ஒரு காலத்தில் சிதறிப் போம் என்று அறிந்து இருந்தும்
வன் பெரும் புண் திரங்கித் -வலிய பெரிய புண்ணாய் யுள்ள சரீரம் மடிப்பு விழுந்து
தலையும் வெளுத்த பின் தானே யழிய விசைகின்றிலீர் -தலையும் நரைத்துப் போன பின்பும் மரணம் அடைய மனம் இல்லாது இருக்கும் சேதனர்களே
அலையும் கடல் கொண்ட வையம் அளித்தவன் மெய்யருளே -அலை நிறைந்த பிரளய சமுத்ரத்தால் கொள்ளப் பட்ட உலகத்தை அக்கடலில் இருந்து
எடுத்து ரசித்து அருளிய ஸ்ரீ வராஹப் பிரானுடைய சாத்தியமான கிருபையால் திருவதரித்த பிரபத்தியே
நிலை என்று நாடி நிலை நின்ற பொய்ம்மதி நீக்குமினே –ஸ்திரமான உபாயம் என்று அறிந்து உங்கள் இடம் வெகு காலமாக
வேரூன்றி நிற்கின்ற அஞ்ஞானத்தை ஒழித்துகே கொள்வீர்களாக —

———————————————–

கண்ணன் கழல் தொழக் கூப்பிய கையின் பெருமை தனை
எண்ணம் கடக்க யமுனைத் துறைவர் இயம்புதலால்
திண்ணம் இதுவென்று தேறித் தெளிந்த பின் சின் மதியோர்
பண்ணும் பணிதிகள் பாற்றிப் பழம் தொழில் பற்றினமே –25 –அஞ்சலி வைபவம் –

கண்ணன் கழல் தொழக் கூப்பிய கையின் பெருமை தனை-எம்பெருமானுடைய திருவடிகளை வணங்குவதற்காக கூப்ப்ப் பட்ட கைகளின் -அஞ்சலியின் பெருமை தனை
எண்ணம் கடக்க யமுனைத் துறைவர் இயம்புதலால் -ஸ்ரீ ஆளவந்தார் நம் நினைவின் எல்லையை மீறியதாக ஒரு ஸ்லோகத்தால் அருளிச் செய்தபடியால்
திண்ணம் இதுவென்று தேறித் தெளிந்த பின் சின் மதியோர் -இதுவே திடமான சித்தாந்தம் என்று நாம் நிச்சயித்துத் தெளிந்த பிறகு அல்ப புத்தியை யுடையவர்கள்
பண்ணும் பணிதிகள் பாற்றிப் பழம் தொழில் பற்றினமே -செய்கின்ற வாதங்களை ஒழித்து பழைமையாய் வந்த செய்கையாகிய பிரபத்தியை உபாயமாகக் கொண்டோம் —
அம் ஜலயதி-எம்பெருமானை நீர்ப் பண்டமாக உருக்கச் செய்வதால் அஞ்சலி -வேறு ஒன்றையும் செய்ய வேண்டாதபடி நிற்கும் நிலையையும் காட்டும் அஞ்சலி –

——————————————————–

பொங்கு புனல் ஆறுகளில் புவனம் எல்லாம் பொன் கழலால் அளந்தவன் தன் தாளால் வந்த
கங்கை எனும் நதி போலக் கடல்கள் ஏழில் கமலை பிறந்தவன் உகந்த கடலே போலச்
சங்குகளில் அவன் ஏந்தும் சங்கே போலத் தாரிலவன் தண் துளவத் தாரே போலே
எங்கள் குலபதிகள் இவை மேலாம் என்றே எண்ணிய நல் வார்த்தை கணம் இசைக்கின்றோமே –25 –முக்கிய பொருள்களையே கைக் கொள்ளல்
-25 –முதல் –27-வரை பிரதான சதகம் –

பொங்கு புனல் ஆறுகளில் புவனம் எல்லாம் -பெருகி வருகின்ற ஜலத்தை யுடைய உலகில் உள்ள ஆறுகளுக்குள் உலகம் முழுவதும்
பொன் கழலால் அளந்தவன் தன் தாளால் வந்த -த்ரிவிக்ரம திரு அவதாரத்தில் தன்னுடைய அழகிய திருவடிகளால் அளந்த எம்பெருமானுடைய திருவடிகளில் இருந்து வந்த
கங்கை எனும் நதி போலக் -கங்கை என்னும் நதி சிறப்புற்றது போலவும்
கடல்கள் ஏழில் கமலை பிறந்தவன் உகந்த கடலே போலச் -ஏழு சமுத்ரங்களுக்குள் -உப்பு பால் தேன் நெய் கருப்பஞ்சாறு தயிர் சுத்த ஜலம் –
இவற்றுள் பிராட்டி திரு அவதரித்தனால் அவ்வெம்பெருமானுக்கு பிரியமான திருப் பாற் கடல் சிறப்புற்றது போலவும்
சங்குகளில் அவன் ஏந்தும் சங்கே போலத் -சங்குகளுக்குள் அவன் திருக்கையில் ஏந்தும் பாஞ்சஜன்யம் உயர்ந்தது போலேயும்
தாரிலவன் தண் துளவத் தாரே போலே-புஷப மாலைகளுக்குள் அந்த பகவான் அணியும் குளிர்ந்த திருத் துழாய் மாலை சிறப்புற்றது போலேயும்
எங்கள் குலபதிகள் இவை மேலாம் என்றே எண்ணிய நல் வார்த்தை கணம் இசைக்கின்றோமே -எங்கள் பிரபன்ன குலத்துக்கு தலைவர்களான ஆழ்வார்
முதலியவர்கள் அருளிச் செய்த ஸ்ரீ ஸூ க்திகள் சிறந்தவை ஆகும் என்று நிச்சயித்து அனுசந்தித்த நல்ல உபதேசங்களை நாம் அங்கீ கரித்து நடத்துகின்றோம் –

———————————————————

சீர்க் கடலின் திரை என்னத் தகவால் மிக்க தேசிகராய்த் திண் இருளாம் கடலை நீக்கிப்
பாற் கடலோன் திரு வணையாய் நின்று பாரம் காணாத பவக் கடலைக் கடத்து கின்றான்
ஈர்க்கும் மரக் கலம் அன்ன இறைவர் இன்பம் எழுந்து அழியும் குமிழி என விகந்து ஒழிந்தோம்
ஆர்க்கு இனி நாம் என் காட்டுவோம் நமக்கும் ஆர் என் காட்டுவார் என்று அடைந்தவர்கட்க்கு அறிவித்தோமே—26 —
சரண்யனே ஆச்சார்யனாக திரு வவதரித்து ரஷித்து அருளுகிறார் –

பாற் கடலோன் சீர்க் கடலின் திரை என்னத் தகவால் மிக்க தேசிகராய்த் -திருப் பாற் கடலில் பள்ளி கொண்ட எம்பெருமானே சிறப்புற்ற சமுத்திரத்தின்
அலை என்னும் படி மேல் மேல் வருகின்ற கருணை மிகுந்த ஆச்சார்யராக திரு அவதரித்து
திண் இருளாம் கடலை நீக்கிப் -நம்மை அஞ்ஞானம் ஆகிய வழிய இருள் என்னும் கடலில் நின்றும் நீக்கி
திரு வணையாய் நின்று பாரம் காணாத பவக் கடலைக் கடத்து கின்றான் -சிறந்த அணையாய் தானே நின்று கரை காண முடியாத சம்சாரம் ஆகிய
சமுத்திரத்தின் நின்றும் நம்மைக் கரை ஏற்றுகின்றான்
ஈர்க்கும் மரக் கலம் அன்ன இறைவர் இன்பம்-மனிதரை இழுத்துச் செல்லுகின்ற ஓடம் என்னப் படுமவரான ப்ரஹ்மாதிகள் தேவர்களின் ஸூ கமும் –
அல்ப சுகங்களை தர வல்லவர் என்ற கருத்து –
எழுந்து அழியும் குமிழி என விகந்து ஒழிந்தோம்-நீரில் கிளம்பி அமிழும் நீர்க் குமிழி போல் நிலையாதது என்று நினைத்து அதில் விருப்பத்தை விட்டு ஒழிந்தோம்
ஆர்க்கு இனி நாம் என் காட்டுவோம் நமக்கும் ஆர் என் காட்டுவார் என்று அடைந்தவர்கட்க்கு அறிவித்தோமே— நம்மை வந்து அடைந்தவர்களுக்கு பிரபன்னரான நாம் இனி யாருக்கு இவ்விஷயத்தில் கடைமைப் பட்டுள்ளோம் -நமக்கும் யார் எவ்வகையில் கடமைப் பட்டுள்ளார் -எம்பெருமானும் நாமும் ஒருவருக்கு ஒருவர் கடமைப் பட்டுள்ளோம் என்று உபதேசித்தோம் –

————————————————–

காசினியில் மணி யனைத்தும் காயா வண்ணன் கடைந்து எடுத்த கவித்துவத்தை சீர்மைக்கு ஒவ்வா
காசி முதலாகிய நன்னகரி எல்லாம் கார் மேனி யருளாளர் கச்சிக்கு ஒவ்வா
மாசில் மனம் தெளி முனிவர் வகுத்த வெல்லாம் மால் உகந்த வாசிரியர் வார்த்தைக்கு ஒவ்வா
வாசி அறிந்து இவை யுரைத்தோம் வையத்து உள்ளீர் வைப்பாக விவை கொண்டு மகிழ்மினீரே—-27 –வஸ்துக்களின் ஏற்றத் தாழ்வை அறிவித்தல் –

காசினியில் மணி யனைத்தும் காயா வண்ணன் கடைந்து எடுத்த கவித்துவத்தை சீர்மைக்கு ஒவ்வா -பூமியில் உள்ள ரத்தினங்கள் முழுவதும்
காயம் பூவைப் போன்ற நிறமுடைய எம்பெருமான் கடலைக்கடைந்து தனக்காக எடுத்த கௌஸ்துபம் என்னும் ரத்னத்தின் சிறப்புக்கு ஒப்பாகா
காசி முதலாகிய நன்னகரி எல்லாம் கார் மேனி யருளாளர் கச்சிக்கு ஒவ்வா -காசி முதலிய புண்ய ஸ்தலம் எல்லாம் மேகம் போன்ற
திருமேனியை யுடைய பேர் அருளாளன் எழுந்து அருளி இருக்கும் திருகாஞ்சீ புரத்துக்கு ஈடாகாது
அவை போலே
மாசில் மனம் தெளி முனிவர் வகுத்த வெல்லாம் மால் உகந்த வாசிரியர் வார்த்தைக்கு ஒவ்வா -குற்றம் அற்ற மனத்தெளிவை யுடைய
மகரிஷிகள் வெளியிட்டு அருளிய -வேதம் ஸ்ம்ருதி புராணங்கள் -எல்லாம் எம்பெருமானுடைய கிருபைக்கு உரியரான நம்மாழ்வார் முதலிய
ஆச்சார்யர்களின் ஸ்ரீ ஸூ க்திகளுக்கு சமம் ஆகா
வாசி அறிந்து இவை யுரைத்தோம் வையத்து உள்ளீர் வைப்பாக விவை கொண்டு மகிழ்மினீரே—-பொருள்களின் தாரதம்யம் அறிந்து இவ்விஷயங்களை –
ஏற்றத் தாழ்வுகளைக் கூறினோம் -உலகத்தில் உள்ளோர்களே நீங்கள் இவ்விஷயங்களை சேம நிதியாக ஏற்று மகிழ்வீர்களாக –

———————————————–

அந்தமிலாப் பேரின்பம் அருந்த ஏற்கும் அடியோமை யறிவுடனே என்றும் காத்து
முந்தை வினை நிரை வழியில் ஒழுகாது எம்மை முன்னிலையாம் தேசிகர் தம் முன்னே சேர்த்து
மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி வழிப் படுத்தி வானேற்றி யடிமை கொள்ளத்
தந்தையென நின்ற தனித் திருமால் தாளில் தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே–28 –எம்பெருமான் அருளும் உபகாரங்கள் -உபகார சங்க்ரஹம் -28 –முதல் –30 -வரை –

அந்தமிலாப் பேரின்பம் அருந்த ஏற்கும் அடியோமை -அளவற்ற பெரிய மோக்ஷ ஆனந்தத்தை அனுபவிப்பதற்குத் தகுதியுள்ள சேஷபூதர்களான எங்களை
யறிவுடனே என்றும் காத்து –எப்பொழுதும் நித்தியமான தர்ம பூத ஞானத்துடன் ரஷித்து அருளி
அடியோமை என்றும் காத்து -அடியோமை என்றும் அறிவுடனே காத்து -என்று இரண்டு தொடராக்கி கொள்க –
நித்ய சங்கல்பத்தாலே ஜீவனை நித்யமாக்கி ஜீவா ஸ்வரூபத்தையும் தர்ம பூத ஞானத்தை நித்ய குணமாக்கி ஜீவ ஸ்வபாவத்தையும் ரஷித்து அருளுகின்றான் என்று தாத்பர்யம் –
முந்தை வினை நிரை வழியில் ஒழுகாது எம்மை -எங்களை அநாதியாய்த் தொடர்ந்து வரும் கர்மப் பெருக்கில் -கரை ஏறாமல் ஆழ்ந்து செல்லாதவாறு
முன்னிலையாம் தேசிகர் தம் முன்னே சேர்த்து -நமக்கு அருள் புரிய முதல் ஸ்தானத்தில் நிற்கின்ற ஆச்சார்யர்கள் பாக்கள் கொண்டு சேர்த்து
மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி வழிப் படுத்தி -திருமந்திரம் முதலிய மந்திரத்தையும் -அந்த மந்திரத்தில் சொல்லப் படும் பிரபத்தி என்னும் உபாயத்தையும் உபதேசித்து
-அவ்வுபாயத்தை அனுஷ்டிக்கும்படியும் செய்து
வானேற்றி யடிமை கொள்ளத் -பரம பதத்தில் சேர்த்து நாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்வதற்கு
தந்தையென நின்ற தனித் திருமால் தாளில் தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே-இவ்வளவு மஹா உபகாரங்கள் செய்ய முற்பட்டதால்
தகப்பன் என்னும் படி நின்ற நிகரற்ற எம்பெருமான் திருவடிகளில் நம்மாழ்வாருடைய கிருபையாலே தலை வணங்கப் பெற்றோம்

———————————————-

தான் தனக்குத் தன்னாலே தோன்றித் தான் ஓர் ஒளி யணைக்கும் குணத்தாலும் தன்னைக் கண்டு
தான் தனக்கு என்று அறியாத தன் குணத்தைத் தன் குணத்தால் தான் இறையில் தானே கூட்டி
யூன் மருத்துப் புலன் மனம் மான் ஆங்காரங்கள் ஓரு மூலப் பிரகிருதி யன்றி நின்ற
நான் தனக்குத் தான் தனக்கு என்று இசைவு தந்த நாரணனை நான் மறையால் நான் கண்டேனே –29 –ஜீவ ஸ்வரூபத்தை அறிதல் –

தான் தனக்குத் தன்னாலே தோன்றித் -ஜீவாத்மா வாகிய தான் தனக்குத் தானே நான் என்று தோன்றி
தான் ஓர் ஒளி யணைக்கும் குணத்தாலும் தன்னைக் கண்டு -தன்னுடைய ஒரு பிரகாசம் போன்ற தர்ம பூத ஞானத்தாலும் ஜீவாத்மாவாகிய தன்னை அறிந்து
தான் தனக்கு என்று அறியாத தன் குணத்தைத் -தன் குணத்தால்– அசேதனம் ஆதலால் தான் என்றும் தனக்கு என்றும் அறிவில்லாத
தர்ம பூத ஞானத்தை -தனக்குக் கிடைத்துள்ள தத்துவ ஞானத்தால்
தான் இறையில் தானே கூட்டி -தானே சர்வ ஸ்வாமியான எம்பெருமான் விஷயத்திலே செலுத்தி
யூன் மருத்துப் புலன் மனம் மான் ஆங்காரங்கள் ஓரு மூலப் பிரகிருதி யன்றி நின்ற -மாம்ச மயமான சரீரம் பிராண வாயுக்கள் இந்திரியங்கள்
மனது மஹான் என்னும் தத்துவம் அஹங்காரம் என்னும் தத்துவம் தனியான மூலப் பிரகிருதி ஆகிய அசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டு நிற்கின்ற
நான் தனக்குத் தான் தனக்கு என்று இசைவு தந்த -ஜீவாத்மாவாகிய நான்-சர்வேஸ்வரனாகிய தனக்கு சேஷபூதன்-பகவானாக தானே தனக்கு ஸ்வாமி என்று
நான் அங்கீ கரிக்கும் படி செய்து அருளிய நாரணனை நான் மறையால் நான் கண்டேனே -நாராயணனை நான்கு வேதத்தால் ஒருவாறு நான் அறிந்தேன் –

———————————————

கழியாத கரு வினையில் படிந்த நம்மைக் காலம் இது என்று ஒரு கால் காவல் செய்து
பழியாத நல் வினையில் படித்தார் தாளில் பணிவித்துப் பாசங்கள் அடைய நீக்கிச்
சுழியாத செவ்வாழையில் துணைவரோடே தொலையாத பேர் இன்பம் தரமேல் ஏற்றி
யழியாத வருள் ஆழிப் பெருமான் செய்யும் அந்தமிலா உதவி எலாம் அளப்பார் ஆரே-30–எம்பெருமான் உபகார பெருமையை அளவிட முடியாமை

கழியாத கரு வினையில் படிந்த நம்மைக் -நீங்காத கர்ப்ப வாசத்தைத் தரும் கர்மங்களில் அழுந்திக் கிடக்கின்ற நம்மை
காலம் இது என்று ஒரு கால் காவல் செய்து -இதுவே தக்க சமயம் என்று நினைத்து நம்முடைய பாக்யம் பக்வமான ஒரு சமயத்தில் ரஷிக்க முற்பட்டு
பழியாத நல் வினையில் படித்தார் தாளில் பணிவித்துப் –
பழிக்கப் படாத குற்றம் அற்ற நல்ல கார்யம் ஆகிய பிரபத்தி மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள ஆச்சார்யர்களின் திருவடிகளில் நம்மை வணங்கச் செய்து
பாசங்கள் அடைய நீக்கிச் -கர்மா பாசங்கள் முழுவதையும் போக்கி
சுழியாத செவ்வாழையில் துணைவரோடே தொலையாத பேர் இன்பம் தரமேல் ஏற்றி –அழிவில்லாத பெரிய மோக்ஷ ஸூகத்தை தந்து அருள –
திரும்புதல் இல்லாத சிறந்த அர்ச்சிராதி மார்க்கத்தால் ஆதி வாஹ்யகர்கள் ஆகிய துணைவரோடே ஸ்ரீ வைகுண்டத்துக்கு ஏற்றி
யழியாத வருள் ஆழிப் பெருமான் செய்யும் அந்தமிலா உதவி எலாம் அளப்பார் ஆரே—அழியாத சாஸ்வதமான கருணைக் கடலான எம்பெருமான்
சேதனனுக்கு செய்கின்ற எல்லை இல்லாத உபகாரங்களை எல்லாம் அளவிட்டு அறிபவர் யார் -ஒருவரும் இல்லையே -என்றபடி
அருள் ஆழிப் பெருமான் -பேர் அருளாளனை காட்டி அருளுகிறார் –

—————————————————-

நின்னருளாம் கதியன்றி மற்று ஓன்று இல்லேன் நெடும் காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்
உன்னருளுக்கு இனிதான நிலை யுகந்தேன் உன் சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன்
மன்னிருளாய் நின்ற நிலை எனக்குத் தீர்த்து வானவர்தம் வாழ்ச்சி தர வரித்தேன் உன்னை
இன்னருளால் இனி எனக்கோர் பரம் ஏற்றாமல் என் திருமால் அடைக்கலம் கோல் என்னை நீயே -31-எம்பெருமானை ஐந்து அங்கங்களுடன் சரண் அடைதல் -சார சங்க்ரஹம் –

நின்னருளாம் கதியன்றி மற்று ஓன்று இல்லேன் -உன்னுடைய கிருபையாகிய கதியைத் தவிர வேறு ஒரு கதி இல்லாதவனாக இருக்கின்றேன் -அநந்யகதித்வம்-கார்ப்பண்யம் –
நெடும் காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்-அநாதிகாலமாக அபராதம் செய்து வந்த நிலைமை இப்பொழுது கழியப் பெற்றேன் -ப்ராதிகூல்ய வர்ஜனம்
உன்னருளுக்கு இனிதான நிலை யுகந்தேன் -உன் கிருபையை பெறுவதற்குத் தக்க நல்ல பிரபத்தி மார்க்கத்தை விரும்பினேன் -ஆனுகூல்ய சங்கல்பம்
உன் சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன் -உன் திருவடியே உபாயம் என்னும் உறுதியைப் பெற்றேன் -மஹா விசுவாசம்
மன்னிருளாய் நின்ற நிலை எனக்குத் தீர்த்து வானவர்தம் வாழ்ச்சி தர வரித்தேன் உன்னை -திடமான அஞ்ஞான மயமாய் இருந்த நிலைமையை
எனக்குப் போக்கி வைத்து நித்ய ஸூ ரிகளின் வாழ்வை எனக்குத் தரும்படி உன்னைப் பிரார்த்தித்துக் கொண்டேன் -கோப்த்ருத்வ வர்ணம்
இன்னருளால் இனி எனக்கோர் பரம் ஏற்றாமல் என் திருமால் அடைக்கலம் கோல் என்னை நீயே -உன் இனிய கிருபையால் இனிமேல் எனக்கு ஒரு பொறுப்பும் வைக்காமல்
நீ என்னை ரஷித்து அருள வேண்டிய வஸ்துவாக கைக் கொண்டு அருள வேண்டும் -ஆத்ம சமர்ப்பணம் –

———————————————-

பரவும் மறைகள் எல்லாம் பதம் சேர்ந்து ஒன்ற நின்ற பிரான்
இரவு அன்று இரவியின் காலத்து அழைத்த எழில் படையோன்
அரவும் கருடனும் அன்புடன் ஏந்தும் அடி இரண்டும்
தர வெம்தமக்கு அருளால் தளரா மனம் தந்தானே –32-பகவத் கைங்கர்யத்தில் மனா உறுதி -32-/-33-/-34-பாசுரங்கள் விரோதி பரிஹாரம் –

பரவும் மறைகள் எல்லாம் பதம் சேர்ந்து ஒன்ற நின்ற பிரான்-ஸ்தோத்ரம் செய்யும் தன்மையுள்ள வேதங்கள் முழுவதும் தன திருவடிகளில்
ஈடுபட்டுப் பேசி நிற்க அதனால் உயர்ந்து நிற்கும் ஸ்வாமியும்
இரவு அன்று இரவியின் காலத்து அழைத்த எழில் படையோன்-அந்நாள் -பாரத போரில் ஸூரியன் பிரகாசிக்கும் பகல் பொழுதிலே
ராத்ரியை வருவிக்க பிரகாசமான சக்கராயுதத்தை யுடையவனுமான எம்பெருமான்
அரவும் கருடனும் அன்புடன் ஏந்தும் அடி இரண்டும் -தர வெம்தமக்கு அருளால் தளரா மனம் தந்தானே –ஆதிசேஷனும் பெரிய திருவடியும் பக்தியுடன் ஏந்திக்
கைங்கர்யம் செய்கின்ற திருவடிகள் இரண்டையும் யாமும் கைங்கர்யம் செய்யும் படி திரு உள்ளம் கொண்டு கிருபையால் சோர்வடையாத மனத்தைக் கொடுத்து அருளினான் —
சேராச் சேர்த்தி –சேஷனும் கருடனும் -பகலும் இரவும் -இதன் ரஹஸ்யம் விரோதி பரிஹாரம் –

———————————————————

அலர்ந்த வம்புயத்து இருந்து தேன் அருந்தி இன் அகல் அல்குலார் அசைந்து அடைந்த நடை கொளாதது என் மெனோ
நலம் தவிர்த்ததால் என் கொல் நாவின் வீறு இழந்ததால் நா அணங்கு நாதர் தந்த நாவின் வீறு இழந்தது என்
சலம் தவிர்ந்து வாது செய்து சாடி மூண்ட மிண்டரைச் சரிவிலேன் எனக் கனத்து உரைத்த வேதிராசர் தம்
வலம் தரு கை நாயனார் வளைக்கு இசைந்த கீர்த்தியால் வாரி பாலது ஆம் அது என்றும் மாசில் வாழி வாழியே -33- எம்பெருமானார் புகழ் -இருவர் வினா விடை –

அலர்ந்த வம்புயத்து இருந்து தேன் அருந்தி -ஹம்சம் மலர்ந்த தாமரைப் பூவில் உட்க்கார்ந்து அதில் உள்ள தேனைப் பருகி
இன் அகல் அல்குலார் அசைந்து அடைந்த நடை கொளாதது என் மெனோ-அழகிய அகன்ற அல்குலையுடைய ஸ்த்ரீகள் அசைந்து நடக்கும் நடையை
கொள்ளாமல் வருந்தி வாடிக் கிடைப்பதால் காரணம் என்ன
என்று கேட்க -மற்றவர்
நலம் தவிர்த்ததால் -தன பெருமையை அது இழந்து விட்டதால் -என்று சொல்ல
ஒருவர் அது என் கொல் என்று கேட்க-மற்றவர்
நாவின் வீறு இழந்ததால் -தன் நாவிற்கு உள்ள பாலையும் நீரையும் பிரிக்கும் சக்தியை இழந்து விட்டதால் -என்ன
நா அணங்கு நாதர் தந்த நாவின் வீறு இழந்தது என் –வாக்குக்குத் தேவதையாகிய சரஸ்வதியின் கணவனான ப்ரஹ்மாவால் கொடுக்கப்பட்ட
நாவின் அந்த சக்தியை ஏன் இழந்தது -என்ன -மற்றவர்
சலம் தவிர்ந்து வாது செய்து சாடி மூண்ட மிண்டரைச் சரிவிலேன் எனக் கனத்து உரைத்த –குற்றம் இல்லாது வாது செய்து ஜெயித்து
இன்னம் யாவர் வாதம் புரிய வந்தாலும் தளர மாட்டேன் என்று கர்ஜித்துக் கூறிய
வேதிராசர் தம் வலம் தரு கை நாயனார் வளைக்கு இசைந்த கீர்த்தியால் –ஸ்ரீ பாஷ்யகாரருடையதும் அடைந்தவர்களுக்குப் பலத்தை தரும்
திருக் கையையும் யுடைய எம்பெருமானுடைய சங்கம் போன்றதுமான கீர்த்தி உலகம் எங்கும் பரவியதால்
வாரி பாலது ஆம் அது என்றும் மாசில் வாழி வாழியே -ஜலம் முழுவதும் பாலாகி விட்டதாம் –எல்லாப் பொருள்களும் வெண்மையான படியால் —
எக்காலத்திலும் குறைவு படாத அந்த புகழ் வாழக் கடவது —

————————————————————————-

சடையன் திறலவர்கள் பெரு ஞானக் கடல் அதனை
இடை அமிழாது கடக்கினும் ஈது அளவு என்று அறியார்
விடையுடன் ஏழு அன்று அடர்த்தவன் மெய்யருள் பெற்ற நல்லோர்
அடைய அறிந்து உரைக்க அவ்வடியோமும் அறிந்தனமே –34-தேவதாந்த்ரங்களின் பால் சாரார்த்தங்களை அறிய முடியாமை —

சடையன் திறலவர்கள் பெரு ஞானக் கடல் அதனை –சடையைத் தரிக்கும் சிவனுடைய பலத்தால் ஞானத்தைப் பெற்றவர்கள் பெரிய ஞானம் ஆகிய சமுத்திரத்தை
இடை அமிழாது கடக்கினும் ஈது அளவு என்று அறியார் –நடுவில் அமிழ்ந்து போகாது தாண்டினாலும் -எவ்வளவு ஞானம் பெற்றாலும்
இது தான் அந்த ஞான சமுத்திரத்தின் அளவு என்று அறிய மாட்டார்கள்
விடையுடன் ஏழு அன்று அடர்த்தவன் மெய்யருள் பெற்ற நல்லோர் -முன் ஒரு நாள் ஏழு காளைகளையும் ஒரே சமயத்தில் ஒரு சேர அடக்கிய
ஸ்ரீ கண்ணபிரானுடைய நிலையான கிருபையைப் பெற்ற சிறந்த ஆச்சார்யர்கள்
அடைய அறிந்து உரைக்க அவ்வடியோமும் அறிந்தனமே –முழுதும் சாரார்த்தங்களை தங்கள் அறிந்து நமக்கு உபதேசிக்க சேஷ பூதர்களான நாமும் ஞானத்தைப் பெற்றோமே —

————————————————–

பா வளரும் தமிழ் மறையின் பயனே கொண்ட பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலனுக்கு கணவனுமாய்க் கலந்து நின்ற காரணனைக் கருத்துற நாம் கண்ட பின்பு
கோவலனும் கோமானுமான வன்னாள் குரவை பிணை கோவியர் தம் குறிப்பே கொண்டு
சேவலுடன் பிரியாத பெடை போல் சேர்ந்து தீ வினையோர் தனிமை ஏழாம் தீர்ந்தோம் நாமே –35-எம்பெருமானை பிரியாத நிலை பெறுதல் -35-/-36–/-37-முனி வாஹந போகார்த்தங்கள் –

பா வளரும் தமிழ் மறையின் பயனே கொண்ட பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில் –பாசுரங்கள் நிறைந்துள்ள தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில்
சாரார்த்தங்கள் அடங்கப் பெற்றவையும் திருப் பாண் ஆழ்வாரால் பாடப் பெற்றவையுமான அமலனாதி பிரான் என்னும் நிகரற்ற பத்துப் பாசுரங்களால்
காவலனுக்கு கணவனுமாய்க் கலந்து நின்ற காரணனைக் கருத்துற நாம் கண்ட பின்பு -அனைத்தையும் காப்பவனும் நாயகனுமாய் -எல்லா வஸ்துக்களிலும்
அந்தர்யாமியாய் கலந்து நிற்கின்ற சர்வ காரணான எம்பெருமானை -நாம் மனத்தில் பதியுமாறு அறிந்த பின்பு
கோவலனும் கோமானுமான வன்னாள் குரவை பிணை கோவியர் தம் குறிப்பே கொண்டு -கோபாலனும் யதுவம்சத்து அரசனுமாய் திரு வவதரித்து இருந்த
அக்காலத்திலே ராஸக்ரீடை புரிந்தவர்களான இடைபி பெண்களின் உள்ளக் கருத்தையே நாமும் கொண்டு
சேவலுடன் பிரியாத பெடை போல் சேர்ந்து தீ வினையோர் தனிமை ஏழாம் தீர்ந்தோம் நாமே –ஆண் பறவையை விட்டு நீங்காத பெண் அன்றில்
பஷி போலே நாமும் எம்பெருமானைச் சேர்ந்து பாபிகளுக்கு உள்ள உதவி அற்ற நிலை எல்லாம் நாம் நீங்கப் பெற்றோம் –

———————————————————–

ஆதி மறை என ஓங்கும் அரங்கத்துள்ளே அருள் ஆரும் கடலைக் கண்டவன் நம் பாணன்
ஓதியது ஓர் இரு நான்கும் இரண்டுமான வொரு பத்தும் பற்றாக உணர்ந்து யுரைத்தோம்
நீதி அறியாத நிலை அறிவார்க்கு எல்லாம் நிலை இதுவே என்று நிலை நாடி நின்றோம்
வேதியர் தாம் விரித்து உரைக்கும் விளைவுக்கு எல்லாம் விதையாகும் இது வென்று விளம்பினோமே -36-அமலனாதி பிரான் அருளிச் செய்யும் நிஷ்டை –

ஆதி மறை என ஓங்கும் அரங்கத்துள்ளே அருள் ஆரும் கடலைக் கண்டவன் நம் பாணன் –உருவத்தில் வேதத்தின் முதல் அக்ஷரமாகிய பிரணவம் என்னும்படி
உயர்ந்து நிற்கின்ற ஸ்ரீ ரெங்க விமானத்துக்குள் பிரகாசிக்கின்ற கிருபையாகிய நீர் நிறைந்த ஸ்ரீ அரங்கனாகிய கடலை கண்டு அனுபவித்தராகிய நம் திருப் பாண் ஆழ்வாரால்
ஓதியது ஓர் இரு நான்கும் இரண்டுமான வொரு பத்தும் பற்றாக உணர்ந்து யுரைத்தோம் -அருளிச் செய்யப் பட்டவனாய் -நித்யம் அனுசந்திக்கத் தக்கனவாய் எட்டும் இரண்டுமான
நிகரற்ற அமலனாதிபிரான் பத்துப் பாசுரங்களையும் கதியாக அறிந்து அனுசந்தித்தோம்
நீதி அறியாத நிலை அறிவார்க்கு எல்லாம் நிலை இதுவே என்று நிலை நாடி நின்றோம் -பிற மதங்களைக் கண்டிப்பதற்காக வேண்டிய யுக்திகளை அறியாதவர்களாய் –
தத்துவங்களின் ஸ்வரூபத்தை மாத்திரம் அறிந்தவர்களுக்கு எல்லாம் இந்த பிரபந்தம் உறுதி தர வல்லது என்று நினைத்து இதில் அருளிச் செய்த நிலைமையை –
அனுபவத்தை -அடைய விரும்பி நின்றோம்
வேதியர் தாம் விரித்து உரைக்கும் விளைவுக்கு எல்லாம் விதையாகும் இது வென்று விளம்பினோமே -வேதாந்திகள் தங்கள் விரிவாக வெளியிடுகின்ற
பலன்களுக்கு எல்லாம் இந்த பிரபந்தம் காரணமான விதை போன்றதாகும் என்று இந்த ரஹஸ்யத்திலே அருளிச் செய்தோம் –

———————————–

காண்பனவும் உரைப்பனவும் மாற்று ஓன்று இன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும் பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரி திரை நீர் வையத்துள்ளே வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம்
நாண் பெரியோன் அல்லோம் நா நன்றும் தீதும் நமக்கு யுரைப்பார் உளர் என்று நாடுவோமே –37-விசேஷ ஞானம் பெற்ற ஆசார்யனை நாடுதல் –

காண்பனவும் உரைப்பனவும் மாற்று ஓன்று இன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல் –தம் கண்ணால் காணப் படுவதும் பேசப் படுவதும்
வேறு ஒரு வஸ்துவாக இல்லாமல் எம்பெருமானையே கண்டு அவனைப் பற்றியே பேசியவரும் -எம்பெருமானிடம் அதிகமான பக்தியை யுடையவருமான
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும் பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம் -திருப் பாண் ஆழ்வார் அருளிச் செய்த அமலனாதி பிரான்
என்னும் பத்துப் பாசுரங்களையும் அநாதியான வேதத்தின் சாரம் என்று நினைத்துக் கொண்டாடுகின்றோம்
வேண் பெரிய விரி திரை நீர் வையத்துள்ளே வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம் -விருப்பத்தால் பெரியதும் -எல்லாராலும் மிக விரும்பப் படுகின்றதும் –
அகன்ற அலை நிறைந்த கடல் நீரால் சூழப் பட்டதுமான இவ்வுலகத்தில் வேதாந்தாசார்யன் என்று புகழும் படி நிலை பெற்றோம்
நாண் பெரியோன் அல்லோம் நா நன்றும் தீதும் நமக்கு யுரைப்பார் உளர் என்று நாடுவோமே –நாம் அஹங்காரம் நிறைந்தவர்களாக ஆக மாட்டோம் –
நல்ல விஷயங்களையும் தீய விஷயங்களையும் நமக்கு உபதேசித்து அருளும் ஆச்சார்யர்கள் இருந்தே தீர்வார்கள் என்று துணிந்து அவர்களைத் தேடியே நிற்போம் –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: