ஸ்ரீ அதிகார சங்கிரகம் – -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல் வரும் குருகேசன் விட்டு சித்தன்
துய்ய குல சேகர நம் பாண நாதன்
தொண்டர் அடிப்பொடி மழிசை வந்த சோதி
வையம் எலா மறை விளங்க வாள் வேல் ஏந்து
மங்கையர் கோன் என்று இவர் கண் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –1-

———————————————————————–

இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராகம் மாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவு ஒக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மை யாக்கில்
அன்பர்க்கே யாவதரிக்கும் ஆயன் நிற்க
வருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே–2-

——————————————————————–

என்னுயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கு
யான் அடைவே யவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின்னருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி யாளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை யவர்க்கு உரைத்த வுய்யக் கொண்டார்
நாத முனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே –3-

—————————————————————–

ஆரண நூல் வழிச் செவ்வை அழித்திடும் ஹைதுகர்க்கு ஓர்
வாரணமாய் அவர் வாதக் கதலிகள் மாய்த்த பிரான்
ஏர் அணி கீர்த்தி இராமானுச முனி இன்னுரை சேர்
சீர் அணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீ வினையே –4-

-ஹைதுகர்கள் -வேத பிரமாணம் கொள்ளாமல் ஹேதுவையே -காரணத்தையே கேட்பவர்கள் –

—————————————————————

நீள வந்து இன்று விதிவகையால் நினைவு ஒன்றிய நாம்
மீள வந்து இன்னும் வினை உடம்பு ஒன்றி விழுந்து உழலாது
ஆளவந்தார் என வென்று அருள் தந்து விளங்கிய சீர்
ஆளவந்தார் அடியோம் படியோம் இனி யல் வழக்கே –5–

—————————————————–

காளம் வலம் புரி யன்ன நற்காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை யின்னிசைதந்த வள்ளன்
மூளும் தவ நெறி மூட்டிய நாத முனி கழலே
நாளும் தொழுது எழுவோம் நமக்கு யார் நிகர் நானிலத்தே –6-

——————————————————————-

ஆளும் அடைக்கலம் என்று எமை யம்புயத்தாள் கணவன்
தாளிணை சேர்ந்து எமக்கும் அவை தந்த தகவுடையார்
மூளும் இருள்கள் விள்ள முயன்று ஓதிய மூன்றின் உள்ளம்
நாளும் உகக்க விங்கே நமக்கோர் விதி வாய்க்கின்றதே –7–

மூன்றின் உள்ளம்-ரகஸ்ய த்ரய தாத்பர்யம் –

———————————————————————

திருவுடன் வந்த செழுமணி போல் திருமால் இதயம்
மருவு இடம் என்ன மலர் அடி சூடும் வகை பெறும் நாம்
கருவுடன் வந்த கடு வினை யாற்றில் விழுந்து ஒழுகாது
அருவுடன் ஐந்து அறிவார் அருள் செய்ய அமைந்தனரே –8–

அருவுடன் ஐந்து அறிவார்–ஸூஷ்ம அர்த்தங்களுடன் அர்த்த பஞ்சகத்தை அறிந்த நம் ஆச்சார்யர்கள் –

——————————————————————————-

அமையா விவை எனும் ஆசையினால் அரு மூன்று உலகில்
சுமையான கல்விகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் எத்திய எட்டு இரண்டு எண்ணிய நம்
சமய ஆசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே –9–

18 வித்யா ஸ்தானங்கள் ஆகிய கல்விகள் கற்றாலும் அவை வீண் சுமையே -ரகஸ்ய த்ரயங்களே உஜ்ஜீவிக்க
சாரமான சாதனம் -என்பதை தாமும் அனுசந்தித்து நாமும் அந்த சாரத்தை ஏற்குமாறு செய்து அருளினார் –

———————————————————————————————

நிலை தந்த தாரகனாய் நியமிக்கும் இறைவனுமாய்
இலது ஓன்று எனா வகை எல்லாம் தனது எனும் எந்தையுமாய்த்
துலை ஓன்று இல்லை என நின்ற துழாய் முடியான் உடம்பாய்
விலையின்றி நாம் அடியோம் எனும் வேதியர் மெய்பப் பொருளே –10-

துலை ஓன்று இல்லை என-ஒப்பார் இலையா மா மாயன்
விலையின்றி-தனக்கு ஒரு காரணமின்றி
சரீராத்மா பாவம் என்னும் சம்பந்தமே பிரதான பிரதிதந்த்ரம் -நம் விசிஷ்டாத்வைத சித்தாந்ததுக்கே முக்கியமான விஷயம் –

——————————————————————————————————

பொருள் ஓன்று என நின்ற பூமகள் நாதன் அவனடி சேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன் கொள் உபாயம் அமைந்த பயன்
மருள் ஒன்றிய வினை வல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார்
இருள் ஓன்று இலா வகை எம் மனம் தேற வியம்பினரே –11–

——————————————————————————————

தேற வியம்பினர் சித்தும் அசித்தும் இறையும் என
வேறுபடும் வியன் தத்துவம் மூன்றும் வினை யுடம்பில்
கூறுபடும் கொடு மோகமும் தாம் இறையம் குறிப்பும்
மாற நினைந்து அருளால் மறை நூல் தந்த ஆதியரே –12–

மறை நூல் தந்த ஆதியரே-வேத சாஸ்த்ரத்தை உபதேசித்த நம் முன்னோர் -ஆச்சார்யர்கள்
வினை யுடம்பில் கூறுபடும்-கர்மத்தினால் ஏற்பட்ட இச் சரீரத்தில் பங்கிட்டுக் கொண்டு வளர்கின்ற
கொடு மோகமும் -சரீராத்மா பாவம் ஆகிய கொடிய பிரமமும்
தாம் இறையம் குறிப்பும் -ஸ்வ தந்திர பிரமமும்
மாற நினைந்து -நமக்கு ஒழிய வேண்டும் என்று
சித்தும் அசித்தும் இறையும் என வேறுபடும் வியன் தத்துவம் மூன்றும் அருளால் -தேற வியம்பினர்

——————————————————————————————–

வாதியர் மன்னும் தருக்கச் செருக்கின் மறை குலையச்
சாது சனங்கள் அடங்க நடுங்கத் தனித் தனியே
யாதி எனா வகை யாரண தேசிகர் சாற்றினர் நம்
போது அமரும் திரு மாதுடன் நின்ற புராணனையே–13–

————————————————————————————

நின்ற புராணன் அடியினை ஏந்து நெடும் பயனும்
பொன்றுதலே நிலை என்றிடப் பொங்கும் பவக் கடலும்
நன்று இது தீயது இது என்று நவீன்ற்றவர் நல்லருளால்
வென்று புலன்களை வீடினை வேண்டும் பெரும் பயனே –14–

———————————————————————-

வேண்டும் பெரும் பயன் வீடு என்று அறிந்து விதி வகையால்
நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளுக்கு ஏற்கும் அன்பர்
மூண்டு ஒன்றில் மூல வினை மாற்றுதலில் முகுந்தன் அடி
பூண்டு அன்றி மற்றோர் புகல் ஓன்று இல்லை என நின்றனரே –15-

நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளுக்கு -வெகு காலம் அனுஷ்டிக்க வேண்டிய பக்தி -ஷண காலம் அனுஷ்டிக்க வேண்டிய பிரபத்தி உபாயங்களுக்கு
மூண்டு ஒன்றில் -இரண்டு உபாயங்களில் ஒன்றில் முயன்று
பக்தி யோக நிஷ்டனுக்கும் பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க பிரபத்தியே உபாயம் என்றவாறு –

——————————————————————————————————-

நின்ற நிலைக்கு உற நிற்கும் கர்மமும் நேர் மதியால்
நன்று என நாடிய ஞானமும் நல்கும் உட்கண் உடையார்
ஒன்றிய பத்தியும் ஒன்றுமிலா விரைவார்க்கு அருளால்
அன்று பயன் தருமாறும் அறிந்தவர் அந்தணரே –16-

———————————————————————————

அந்தணர் அன்னியர் எல்லையில் நின்ற அனைத்து உலகும்
நொந்தவரே முதலாக நுடங்கி அனந்யரராய்
வந்து அடையும் வகை வன் தகவு ஏந்தி வருந்திய நம்
அந்தமில் யாதியை யன்பர் அறிந்து அறிவித்தனரே –17-

——————————————————————————–

அறிவித்தனர் அன்பர் ஐயம் பறையும் உபாயம் இல்லாத்
துறவித் துனியில் துணையாம் பரனை வரிக்கும் வகை
யுறவு இத்தனை இன்றி ஒத்தார் என நின்ற யும்பரை நாம்
பிறவித் துயர் செகுப்பீர் என்று இரக்கும் பிழை யறவே –18-

யுறவு இத்தனை இன்றி ஒத்தார் என நின்ற யும்பரை-தேவதாந்தரங்களை
ஐயம் பறையும் -நம்மால் அனுஷ்டிக்க முடியுமா என்ற சந்தேகத்தை வெளியிடக் கூடியதான
உபாயம் இல்லாத் -பக்தி யோகம் முதலிய உபாயாந்தரன்களை அனுஷ்டிக்க முடியாமை யாகிய
துறவித் துனியில் -வறுமையால் உண்டான துர்த்தசையில்
துணையாம் பரனை வரிக்கும் வகை -சகாயமாக நிற்கும் சர்வேஸ்வரனை சரணம் அடையும் பிரகாரத்தை
அன்பர் அறிவித்தனர் -அன்புள்ள ஆச்சார்யர்கள் உபதேசித்து அருளினார்கள் –

————————————————————————–

அறவே பரம் என்று அடைக்கலம் வைத்தனர் அன்று நம்மைப்
பெறவே கருதிப் பெரும் தகவுற்ற பிரான் அடிக்கீழ்
உறவு ஏய் இவனுயிர் காக்கின்ற ஓர் உயிர் உண்மையை நீ
மறவேல் என நம் மறை முடி சூடிய மன்னவரே –19–

மன்னவர் பிரான் அடிக்கீழ் அடைக்கலம் வைத்தனர் என்று அந்வயம் –

————————————————————————————————-

மன்னவர் விண்ணவர் வானோர் இறை ஒன்றும் வான் கருத்தோர்
அன்னவர் வேள்வி யனைத்தும் முடித்தனர் அன்புடையார்க்கு
என்ன வரம் தர வென்ற நம் அத்திகிரித் திருமால்
முன்னம் வருந்தி யடைக்கலம் கொண்ட நம் முக்கியரே –20–

அன்புடையார்க்கு என்ன வரம் தர வென்ற நம் அத்திகிரித் திருமால் -தம்மிடம் பக்தி உடையவர்க்கு அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும்
மோஷம் அருளி மேலும் என்ன வரம் கொடுப்பது என்ற திரு உள்ளம் கொண்ட பேர் அருளாளனால்
முன்னம் வருந்தி யடைக்கலம் கொண்ட நம் முக்கியரே –முன்பே முயன்று ரஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக
ஏற்றுக் கொள்ளப் பட்ட நமக்கு முக்கியரான பிரபன்னர்கள்
மன்னவர்
விண்ணவர்
வானோர் இறை ஒன்றும் வான் கருத்தோர் -பரம பதத்தில் கருத்தை செலுத்துபவர்
அன்னவர்-பரம ஹம்சர்
வேள்வி யனைத்தும் முடித்தனர்

———————————————————————————————

முக்கிய மந்திரம் காட்டிய மூன்றில் நிலையுடையார்
தக்கவை யன்றித் தகாதவை ஒன்றும் தமக்கு இசையார்
இக்கருமங்கள் எமக்கு உள வென்னும் இலக்கணத்தான்
மிக்க வுணர்த்தியர் மேதினி மேவிய விண்ணவரே–21–

முக்கிய மந்திரம் காட்டிய மூன்றில் நிலையுடையார் -திருமந்தரம் வெளியிடும் ஸ்வரூபம் உபாயம் புருஷார்த்தம் -மூன்றிலும் நிஷ்டை யுடையவர்கள்
தக்கவை யன்றித் தகாதவை ஒன்றும் தமக்கு இசையார் -உசிதமான நல்ல கர்மங்களைத் தவிர தகாதவற்றை இசையார்
இக்கருமங்கள் -ஸ்வ நிஷ்டையின் அடையாளம் ஆகிய இச் செய்கைகள்
எமக்கு உள வென்னும் இலக்கணத்தான் மிக்க வுணர்த்தியர் -சிறந்த நிச்சய ஜ்ஞானத்தை உடைய அந்த அதிகாரிகள்
மேதினி மேவிய விண்ணவரே–பூமியிலே அவதரித்த நித்ய ஸூரிகளே யாவார் –

———————————————————————————–

விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமை யெல்லாம்
மண்ணுலகத்தின் மகிழ்ந்து அடைகின்றனர் வண் துவரைக்
கண்ணன் அடைக்கலம் கொள்ளக் கடன்கள் கழற்றிய நம்
பண் அமரும் தமிழ் வேதம் அறிந்த பகவர்களே–22-

———————————————————————————————-

வேதம் அறிந்த பகவர் வியக்க விளங்கிய சீர்
நாதன் வகுத்த வகை பெறும் நாம் அவன் நல் அடியார்க்கு
ஆதரம் மிக்க வடிமை இசைந்து அழியா மறை நூல்
நீதி நிறுத்த நிலை குலையா வகை நின்றனமே –23–

———————————————————————

நின்றனம் அன்புடை வானோர் நிலையில் நிலம் அளந்தான்
நன்று இது தீயது இது என்று நடத்திய நான்மறையால்
இன்று நமக்கு இரவு ஆதலின் இம்மதியின் நிலவே
யன்றி யடிக்கடி ஆர் இருள் தீர்க்க அடி உளதே –24–

——————————————————————-

உளதான வல்வினைக்கு உள்ளம் வெருவி யுலகளந்த
வளர் தாமரையிணை வன் சரணாக வரித்தவர் தாம்
களை தான் என எழும் கன்மம் துறப்பர் துறந்திடிலும்
இளைதாம் நிலை செக வெங்கள் பிரான் அருள் தேன் எழும் –25-

——————————————————————–

தேனார் கமலத் திரு மகள் நாதன் திகழ்ந்து உறையும்
வான் நாடு உகந்தவர் வையத்து இருப்பிடம் வன் தருமக்
கான் ஆர் இமயமும் கங்கையும் காவிரியும் கடலும்
நானா நகரமும் நாகமும் கூடிய நன்னிலமே –26-

————————————————————————–

நன்னிலமாம் அது நல் பகலாம் அது நல் நிமித்தம்
என்னலுமாம் அது யாதானுமாம் அங்கு அடியவர்க்கு
மின்னிலை மேனி விடும் பயணத்து விலக்கிலது ஓர்
நன்னிலயாம் நடு நாடி வழிக்கு நடை பெறவே –27–

நன்னிலயாம் -பரம பதத்துக்கு கொண்டு சேர்ப்பதால் நல்ல ஸ்வ பாவத்தை உடையதான
ஓர் -தனியாகச் செல்லுகிற
நடு நாடி வழிக்கு -நடுவில் உள்ள ப்ரஹ்ம நாடியாகிய வழியில்
நடை பெறவே -சஞ்சாரம் பெற –

——————————————————————————-

நடை பெற அங்கி பகல் ஒளி ஒளி நாள் உத்தராயணம் ஆண்டு
இடை வரு காற்று இரவி இரவின் பத்தி மின் வருணன்
குடையுடை வானவர் கோன் பிரசாபதி என்று இவரால்
இடையிடை போகங்கள் எய்தி எழில் பதம் ஏறுவரே –28–

——————————————————————–

ஏறி எழில் பதம் எல்லா வுயிர்க்கும் இதம் உகக்கும்
நாறு துழாய் முடி நாதனை நண்ணி யடிமை இனம்
கூறு கவர்ந்த குருக்கள் குழாங்களை குரை கழல் கீழ்
மாறுதல் இன்றி மகிழ்ந்து எழும் போகத்து மன்னுவமே –29-

——————————————————————-

மன்னும் அனைத்து உறவாய் மருள் மாற்று அருள் ஆழியுமாய்த்
தன் நினைவால் அனைத்தும் தரித்து ஓங்கும் தனி இறையாய்
இன்னமுதத்து அமுதால் இரங்கும் திரு நாரணனே
மன்னிய வன் சரண் மற்றோர் பற்று இன்றி வரிப்பவர்க்கே –30-

———————————————————————-

வரிக்கின்றனன் பரன் யாவரை என்று மறையதனில்
விரிக்கின்றதும் குறி ஒன்றால் வினையரை யாதலின் நாம்
உரைக்கின்ற நன்னெறி ஒரும் படிகளில் ஓர்ந்து உலகம்
தரிக்கின்ற தாரகனார் தகவால் தரிக்கின்றனமே –31-

—————————————————————————–

தகவால் தரிக்கின்ற தன்னடியார்களைத் தன் திறத்தில்
மிகவாதரம் செயும் மெய்யருள் வித்தகன் மெய்யுரையின்
அகவாய் அறிந்தவர் ஆரண நீதி நெறி குலைதல்
உகவார் என வெங்கள் தேசிகர் உண்மை யுரைத்தனரே –32-

—————————————————————

உண்மை உரைக்கும் மறைகளில் உத்தமனார் ஓங்கிய உத்தமனார்
வண்மை அளப்பரிதாதலின் வந்து கழல் பணிவார்
தண்மை கிடக்கத் தரம் அளவென்ற வியாப்பில தாம்
உண்மை உரைத்தனர் ஓரம் தவிர உயர்ந்தனரே -33-

—————————————————–

உயர்ந்தனன் காவலன் அல்லார்க்கு உரிமை துறந்து உயிராய்
மயர்ந்தமை தீர்ந்து மற்றோர் வழியின்றி அடைக்கலமாய்ப்
பயந்தவன் நாரணன் பாதங்கள் சேர்ந்து பழ வடியார்
நயந்த குற்றேவல் எல்லாம் நாடு நன் மன்வோதினமே -34-

———————————————–

ஓதும் இரண்டை இசைந்து அருளால் உதவும் திருமால்
பாதம் இரண்டும் சரண் எனப் பற்றி நம் பங்கயத்தாள்
நாதனை நண்ணி நலம் திகழ் நாட்டில் அடிமை எல்லாம்
கோதில் உணர்த்தியுடன் கொள்ளுமாறு குறித்தினமே -35-

———————————————-

குறிப்புடன் மேவும் தருமங்கள் இன்றி அக் கோவலனார்
வெறித் துளவக் கழல் மெய்யரண் என்று விரைந்து அடைந்து
பிரித்த வினைத்திரள் பின் தொடரா வகை அப்பெரியோர்
மறிப்புடை மன்னருள் வாசகத்தால் மருள் அற்றனமே –36-

——————————————–

மருள் அற்ற தேசிகர் வான் உகப்பால் இந்த வையம் எல்லாம்
இருள் அற்று இறையவன் இணையடி பூண்டு உய எண்ணுதலால்
தெருள் அற்ற செந்தொழில் செல்வம் பெருகிச் சிறந்தவர்பால்
அருள் உற்ற சிந்தையினால் அழியா விளக்கு ஏற்றினரே–37-

—————————————————

ஏற்றி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தும்
மாற்றினவர்க்கு ஒரு கைம்மாறு மாயனும் கண கில்லான்
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ்
சாற்றி வளர்ப்பதும் சற்று அல்லவோ முன்னம் பெற்றதற்கே–38-

———————————————-

முன் பெற்ற ஞானமும் மோகம் துறக்கலும் மூன்று உரையில்
தன் பற்ற தன்மையும் தாழ்ந்தவர்க்கு ஈயும் தனித் தகவும்
மன் பற்றி நின்ற வகை உரைக்கின்ற மறையவர் பால்
சின்பற்றி என் பயன் சீர் அறிவோர்க்கு இவை செப்பினமே –39-

————————————–

செப்பச் செவிக்கு அமுது என்னத் திகழும் செழும் குணத்துத்
தப்பு அற்றவருக்குத் தாமே உகந்து தரும் தகவால்
ஒப்பற்ற நான் மறை உள்ளக் கருத்தில் உறைத்து உரைத்த
முப்பத்து இரண்டு இவை முத்தமிழ் சேர்ந்த மொழித் திருவே –40-

திருவுடன் வந்த செழு மணி போல் திருமால் இதயம்
மருவிடம் என்ன மலரடி சூடும் வகை பெறு நாம்
கருவுடன் வந்த கடு வினை யாற்றில் விழுந்து ஒழுகாது
அருவுடன் ஐந்து அறிவார் அருள் செய்ய அமைந்தனரே-

————————————————

புருடன் மணி வரமாகப் பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான் தண்டாகத்
தெருள் மருள் வாள் உறையாக ஆங்கு அரங்கள் சார்ங்கம் சங்காக மனம் திகிரியாக
இருடிகங்கள் ஈரைந்தும் சரங்களாக இரு பூத மாலை வன மாலையாகக்
கருடன் உருவாம் மறையின் பொருளாம் கண்ணன் கரிகிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்றானே–41-

————————————————

ஆராத அருள் அமுதம் பொதிந்த கோயில் -அம்புயத்தோன் அயோத்தி மன்னற்கு அளித்த கோயில்
தோலாத தனி வீரன் தொழுத கோயில் துணையான விபீடணற்குத் துணையாம் கோயில்
சேராத பயன் எல்லாம் சேர்க்கும் கோயில் செழு மறையின் முதல் எழுத்துச் சேர்ந்த கோயில்
தீராத வினை யனைத்தும் தீர்க்கும் கோயில் திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே –42-

————————————————-

கண்ணன் அடியிணை எமக்கு காட்டும் வெற்பு கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்பு
திண்ணம் இது வீடு எனத் திகழும் வெற்பு தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்பு பொன் உலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே — 43-

———————————————–

உத்தம வமர்த்தலம் அமைத்ததோர் எழில் தனு உய்த்த கணையால்
அத்திர வரக்கன் முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத்த தயிர் மொய்த்த வெண்ணெய் வைத்தது உண்ணும் அத்தனிடமாம்
அத்திகிரி பத்தர் வினை தொத்தற அறுக்கும் அணி அத்திகிரியே –44-

————————————————–

எட்டுமா மூர்த்தி எண் கணன் எண் திக்கு எட்டு இறை எண் பிரகிருதி
எட்டு மா வரைகள் ஈன்ற எண் குணத்தோன் எட்டு எணும் எண் குண மதியோர்க்கு
எட்டு மா மலர் எண் சித்தி எண் பக்தி எட்டு யோகாங்கம் எண் செல்வம்
எட்டு மா குணம் எட்டு எட்டு எணும் கலை எட்டு இரதம் மேல் அதுவும் எட்டினவே -45-

—————————————————–

ஒண் டொடியாள் திரு மகளும் தானுமாகி ஒரு நினைவால் ஈன்ற உயிர் எல்லாம் உய்ய
வண் துவரை நகர் வாழ வசுதேவர்க்காய் மன்னர்க்கு தேர்ப் பாகனாகி நின்ற
தண் துளவ மலர் மார்பன் தானே சொன்ன தனித் தருமம் தான் எமக்காய்த் தன்னை என்றும்
கண்டு களித்தடி சூட விலக்காய் நின்ற கண் புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே –46-

———————————————–

மூண்டாலும் அரியதலில் முயல வேண்டா முன்னம் அதில் ஆசை தன்னை விடுகை திண்மை
வேண்டாது சரண நெறி வேறோர் கூட்டு வேண்டில் அயன் அத்திரம் போல் வெள்கி நிற்கும்
நீண்டாகு நிறை மதியோர் நெறியில் கூடா நின் தனிமை துணையாக என் தன பாதம்
பூண்டால் உன் பிழைகள் எல்லாம் பொறுப்பன் என்ற புண்ணியனார் புகழ் அனைத்தும் புகழுவோமே –47-

—————————————————-

சாதனமும் நற் பயனும் நானே யாவன் சாதகனும் என் வசமாய் என்னைப் பற்றும்
சாதனமும் சரண நெறி யன்று உமக்குச் சாதனங்கள் இந்நிலைக்கோர் இடையில் நில்லா
வேதனை சேர் வேறு அங்கம் இதனில் வேண்டா வேறு எல்லாம் நிற்கு நிலை நானே நிற்பன்
தூதனுமாம் நாதனுமாம் என்னைப் பற்றிச் சோகம் தீர் என உரைத்தான் சூழ்கின்றானே–48-

—————————————————

தன் நினைவில் விலக்கின்றித் தன்னை நண்ணார் நினைவு அனைத்தும் தான் விளைத்தும் விலக்கு நாதன்
என் நினைவை இப்பவத்தில் இன்று மாற்றி இணையடிக் கீழ் அடைக்கலம் என்று எம்மை வைத்து
முன் நினைவால் யாம் முயன்ற வினையால் வந்த முனிவயர்ந்து முத்தி தர முன்னே தோன்றி
நன் நினைவால் நாம் இசையும் காலம் இன்றோ நாளையோ என்று நகை செய்கின்றானே–49-

————————————————–

பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைபி பண்டு ஒரு கால்
மாட்டுக்கு அருள் தரு மாயன் மலிந்து வருத்துதலால்
நாட்டுக்கு இருள் செக நான் மறை அந்தி நடை விளங்க
வீட்டுக் கிடை கழிக்கே வெளிக் காட்டும் அம் மெய் விளக்கே –50-

—————————————

உறு சகடம் உடைய வொரு கால் உற்று உணர்ந்தன -உடன் மருதம் ஓடிய ஒரு போதில் தவழ்ந்தன
உறி தடவும் அளவில் உரலோடு உற்று நின்றன உறு நெறியோர் தருமன் விடு தூதுக்கு உகந்தன
மற நெறியர் முறிய பிருந்தாவனத்து வந்தன மலர் மகள் கை வருட மலர் போதில் சிவந்தன
மறு பிறவி அறு முனிவர் மாலுக்கு இசைந்தன மனு முறையில் வருவதோர் விமானத்து உறைந்தன
அறமுடைய விசயன் அமர் தேரில் திகழ்ந்தன அடல் உரக படமடிய ஆடிக் கடிந்தன
அறு சமயம் அறிவரிய தானத்து அமர்ந்தன அணி குருகை நகர் முனிவர் நாவுக்கு அமைந்தன
வெறியுடைய துளவ மலர் வீறுக்கு அணிந்த விழு கரியோர் குமரன் என மேவிச் சிறந்தன
விறல் அசுரர் படையடைய வீயத் துரந்தன விடல் அரிய பெரிய பெருமாள் மெய்ப் பதங்களே–51-

——————————————————

மறை உரைக்கும் பொருள் எல்லாம் மெய் என்று ஓர்வார் மன்னிய கூர் மதி உடையார் வண் குணத்தில்
குறை உரைக்க நினைவில்லார் குருக்கள் தம் பால் கோதற்ற மனம் பெற்றார் கொள்வார் நன்மை
சிறை வளர்க்கும் சில மாந்தர் சங்கேதத்தால் சிதையாத திண் மதியோர் தெரிந்து ஓரார்
பொறை நிலத்தின் மிகும் புனிதர் காட்டும் எங்கள் பொன்றாத நன்னெறியில் புகுத்துவாரே –52-

———————————————-

இது வழியின் அமுது என்றவர் இன் புலன் வேறிடுவார்
இது வழியாம் அலவென்று அறிவார் எங்கள் தேசிகரே
இது வழி எய்துக என்று உகப்பால் எம் பிழை பொறுப்பார்
இது வழியா மறையோர் அருளால் யாம் இசைந்தனமே -53-

—————————————

எட்டும் இரண்டும் அறியாத எம்மை இவை அறிவித்து
எட்ட ஒண்ணாத இடம் தரும் எங்கள் அம்மாதவனார்
முட்ட வினைத்திரள் மாள முயன்றிடும் அஞ்சல் என்றார்
கட்டெழில் வாசகத்தால் கலங்கா நிலை பெற்றனமே –54-

———————————-

வானுள் அமர்ந்தவர்க்கும் வருந்த வரு நிலைகள்
தான் உளனாய உகக்கும் தரம் இங்கு நமக்கு உள்ளதே
கூனுள நெஞ்சுகளால் குற்றம் எண்ணி இகழ்ந்திடினும்
தேனுள பாத மலர்த் திருமாலுக்குத் தித்திக்குமே–55-

————————————–

வெள்ளைப் பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம்
உள்ளத்து எழுதியது ஓலையில் இட்டனம் யாம் இதற்கு என்
கொள்ளத் துணியினும் கோது என்று இகழினும் கூர் மதியீர்
எள்ளத்தனை யுகவாது இகழாது எம் எழில் மதியே –56–

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: