ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை- 121-149—தாத்பர்ய சாரம் -ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் —

121-வித்யை தாயாகப் பெற்று -ஆனால் இவர்க்குத் தம் பேச்சு அன்றோ ஸ்வாபாவிகம்-பிராட்டிமார் தசையை அடைந்து
பேசும் பேச்சு வந்தேறி யன்றோ என்னில் -அன்று -ஆச்சார்யன் திரு மந்த்ர முகத்தாலே ஸ்வரூப ஞானத்தை உண்டாக்கின போது
இவ்வாத்ம ஸத்பாவம் ஆகையால் -வித்யையை மாதாவாகக் கொண்டு இவ்வாத்ம வஸ்துவை ஜெநிப்பித்து
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் என்கிற போக்ய பதார்த்தமான திருமந்திரத்தாலே -அநந்யார்ஹ சேக்ஷத்வாதிகளாலே-
லஷ்மீ சத்ருசமாக வளர்த்துக் கொண்டு போந்த ஆப்த ரக்ஷகனான ஆச்சார்யன் ஆகிற பிதா அந்நிய சேஷத்வ பிரசங்கம் வாராத படி
சர்வ லோக நாயகனாகச் சொல்லப்படுகிற பணமாடு அரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளரை
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருபத்தொரு மங்கள ஸூத்ரம் போலே
எட்டு அக்ஷரமாய் மூன்று பதமாய் ஈஸ்வர சம்பந்த பிரகாசகமான திருமந்திரம் ஆகிற மங்கள ஸூ த்ர பந்தத்தோடே வரிக்கும் படி பண்ண
பரம புருஷரான மணவாளர் பரிக்ரஹித்த அநந்தரம் கைங்கர்ய பிரார்தனையோடே செல்லும் சரம சதுர்த்தியில் உள் புகுந்து
பகவத் அனுபவ விரோதியாய் இடையீடான சரீரம் நடுவே கிடக்கிற நாலு நாளையும் கழித்து ஒருவராலும் விட முடியாத ஜென்ம பூமியான
இவ்விபூதியை முன்பு ஆதரணீயமாய்ப் போந்த வஸ்துக்களோடே கூட விட்டு நீங்கி சூழ் விசும்பு அணி முகில் -என்கிற
திருவாய் மொழியில் சொல்லுகிறபடியே அர்ச்சிராதி மார்க்கத்தாலே வழியில் உள்ளார் எல்லாரும் ஸத்கரிக்க நயாமி பரமாம் கதிம்-என்கிற
நாயகன் முன்னே போகப் பின்னே போய் பார்த்திரு கிருஹத்துக்குப் போகிற பெண் அவ் வூர் எல்லையில் சென்றவாறே
அவர்கள் குளிப்பாட்டக் குளிக்குமா போலே அம்ருத வாஹினியான விரஜையிலே இப்பால் உள்ள அழுக்கு அறும் படி நீராடி
குளித்து ஏறின பெண்ணை பர்த்ரு பந்துக்களான ஸ்த்ரீகள் வந்து அலங்கரிக்குமா போலே அலங்கார உபகரணங்களான
திவ்ய மால்ய திவ்ய அஞ்சன திவ்ய சூர்ண திவ்ய வஸ்திர திவ்ய ஆபரணங்களை ஏந்திக் கொண்டு திவ்ய அப்சரஸ்ஸூக்கள் எதிரே வந்து
போக்தாவான ஈஸ்வரனுக்கு போக்யமாம் படி அலங்கரித்து இவ்விஷயத்தில் கிஞ்சித் கரிக்கையில் உண்டான சாபலம் தோற்ற
திரள நின்று மங்களா சாசனம் பண்ணி சாமரம் பரிமாற-அலங்க்ருதையாய் உபாலால நத்தோடே செல்லுகிற பெண் பர்த்ரு கிருஹத்தை
அணுகச் சென்றவாறே அங்குள்ள ஸ்த்ரீகள் மங்கள தீபாதிகளை ஏந்திக் கொண்டு எதிரே வந்து சத்கரிக்குமா போலே
பூர்ண கும்ப தீபாதிகளைத் தரித்துக் கொண்டு நித்ய நவ யவ்வநை களான வேறே சில ஸ்த்ரீகள் எதிர் கொள்ள
உபாலால நத்தோடே சென்ற பெண் பர்த்ரு கிருஹத்திலே புக்கு இருக்குமா போலே
ஸ்ரீ யபதி யானவனுக்கு போக ஸ்தானமான ஸ்ரீ வைகுண்டத்தை பிராபித்து அவனோடே கூடி இருந்து பர்த்ரு கிருஹத்திலே பெண் வந்த பின்பு
தம்பதிகளும் மற்றும் உள்ள பந்துக்களும் கூடி இருந்து பெரும் களிச்சி உண்ணுமா போலே -அடியார் குழாங்களும் அவனுமாக இருக்கிற சேர்த்தியிலே
பெரும் களிச்சியாகப் பூர்ண அனுபவம் பண்ணி நித்ய ஸூ ரிகள் புஜிக்கிற போகத்தை – ஸோஸ்நுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண விபச்சிதா
-என்கிறபடியே புஜித்து பர்த்ரு சம்ச்லேஷத்துக்கு படுக்கையில் ஏறுமா போலே உபய விபூதி யாதிபத்ய பிரகாசமாய்
சர்வ ஆச்சார்ய மயமான திவ்ய பீடத்திலே பாத பீடத்திலே அடி இட்டு ஏறி ஸ்ரீ பரதாழ்வானையும் அக்ரூரனையும் திருவடியையும்
ஆதரித்து அணைத்துக் கொண்ட ஸ்ரீ கௌஸ்துப உஜ்ஜவலமான திரு மார்பிலே ஸ்ரீ கௌஸ்துபம் போலே போக்யமாய் அணைகிற
ஆத்மவஸ்துவுக்கு நாயகிப் பேச்சு ஸ்வாபாவிகமே ஒழிய வந்தேறி யன்று-

122-இன்பும் அன்பும் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -என்னும் படி பிராட்டிக்கு முன்னே இவர் பக்கல் இன்பனாவது –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்னும் படி அவள் பக்கல் பண்ணின ஸ்நேஹம் இவர் அளவும் வர வளருவதாய்
இப்படி இன்பம் முற்படுவது -அன்பு கொழுந்து விடுவது ஆகிறது -பிராட்டியோடு இத்தலைக்கு உள்ள சாம்யத்துக்கு உடலான ஆறு பிரகாரத்தாலே யாய்த்து –
அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் -சம்ச்லேஷத்தில் தரிக்கை-விஸ்லேஷத்தில் தரியாமை
-ததேக நிர்வாஹயத்த்வம் ஆகிற இவை யாய்த்து பிரகார ஷட்கம் –

123- கீழ்ச் சொன்ன ஆகாரத்தாலே பெரிய பிராட்டியார் உடன் உள்ள சாம்யம் அன்றிக்கே -தம்முடைய பாவ விசேஷங்களாலே
பகவத் அபிமத திவ்ய மஹிஷிகளான பிராட்டிமார் மூவரோடும் இவர்க்கு உண்டான சாம்யம் இவர் பாசுரங்களில் தோற்றும் -எங்கனே என்னில்
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து –கிடந்து இருந்து நின்று அளந்து –சூட்டு நன் மாலைகள் -இத்யாதி படியே
பிரதிபாதிக்கப் பட்ட வைலக்ஷண்யாதி அதிசய சாலிநிகளாய்-சர்வேஸ்வர சாம்ராஜ்யத்திலே அவனோடு ஓக்க முடி சூடுகையாலே
முடிக்கு உரியரான சீதா பிராட்டி பூமிப பிராட்டி நப்பின்னைப் பிராட்டி என்னும் இவர்களோடு மாயோன் திறத்தினளே இத்திருவே -என்றும்
-மண்ணேர் அன்ன ஒண் நுதலே -என்றும் -பின்னை கொல் நிலா மா மகள் கொல் திரு மகள் கொல் -என்றும் சொல்லுகிறபடியே
இவ்வாழ்வாருக்கு உண்டான சாம்யமாவது -தென்பால் இலங்கை வெங்காயம் செய்த -என்றும்
-இலங்கை குழாம் நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே-என்றும்
காயும் கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால் -என்றும் –
இலங்கை நகர் அம்பெரி யுத்தவர் தாளிணை மேலணி-என்றும் -தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள் நயந்த -என்றும்
-மாறில் பொற் அரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த -என்றும் கிளர் அரக்கன் நகர் எரித்த -என்றும் –
காண் பெரும் தோற்றத்து என் காகுத்த நம்பிக்கு -என்றும் -என்னாருயிர் காகுத்தன் நின் செய்யவாய் ஒக்கும் வாயன் -என்றும் பாசுரங்களிலும்
ஆதி யம் காலத்து அகலிடம் கீண்டவர் -என்றும் மண் புரை வையம் கிடந்த வராகர்க்கு -என்றும் ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் -என்றும்
-ஏனம் ஒன்றாய் மண் துகள் ஆடி -இத்யாதி பாசுரங்களிலும்
எருது ஏழ் தழி இக்கோளியார்-சறையினார் கவராத -இத்யாதி பாசுரங்களாலும் தோற்றும் –
இத்தால் திவ்ய மகிஷிகள் மூவரிடம் இவருக்கும் உண்டான சாம்யம் சீதா பிராட்டிக்கு அசாதாரணமான ராமாவதார தத் அபதானங்களிலும்
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு அசாதாரணமான வராஹாவதார தத் அபதானங்களிலும்
நப்பின்னை பிராட்டிக்கு அசாதாரணமான கிருஷ்ணாவதார தத் அபதானங்களிலும் அந்தப் பிராட்டிமார் தங்களை போலே
மிகவும் பிரவணராய் அருளிச் செய்த அவ்வவ திவ்ய ஸூக்திகளிலே அபிவியக்தம் என்றதாயிற்று –

124-இவர்கள் தேடி நிற்க -இப்படி பிரதான மஹிஷிகளான இவர்களோடு உள்ள சாம்யம் அன்றிக்கே அவனுக்கு இவர்களில் காட்டிலும்
அபிமதைகளான கோபிமார்களுடையவும் மதுரா நகர ஸ்த்ரீகளுடையவும் -நரக வதத்துக்கு பிறகு பரிக்ரஹித்த பதினாறாயிரம் தேவிமாருடையவும்
பாவங்கள் இவருக்கு உண்டு என்னும் இடம் இவர் தம் பேச்சில் தோன்றும் –
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப -என்கிறபடியே பிரதான மஹிஷிகளான ஸ்ரீ பூமியாதிகள் தன்னை தேடி நிற்க வேண்டும் படி
இவர்களை உபேக்ஷித்து -பொய்கை மணல் குன்று முல்லைப் பந்தல் திரு முற்றம் மச்சு மாளிகை முதலான அவ்வவ ஏகாந்த ஸ்தலங்களில் சென்று புக்கு
துகில்களை வாரியும்-சிற்றிலை அழித்தும்-பந்தைப் பறித்தும் -கச்சோடு பட்டைக் கிழித்தும் -இப்படி நியாமகர் அற்ற ஸ்வதந்த்ரர் செய்யுமவற்றையும்
-நியாமாகர் கீழ் அடங்காமல் மூலை படியே நடத்துவார் செய்யுமவற்றையும் செய்து பேர் ஆரவாரம் விளைத்து விரும்பி அனுபவிக்கப் பெற்ற
பரம விலக்ஷணைகளான திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பாவனை இவர்க்கு உண்டு என்னும் இடம்
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் -மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ -என்கிற திருவாய் மொழிகளிலும்
பேய் முலை யுண்டு சகடம் பாய்ந்து -முனிந்து சகடம் உதைத்து -என்கிற பாட்டுக்களிலும் தோன்றும் –
ஸ்ரீ மாலா காரரும் கூனியும் கொடுத்த திருமாலையையும் சாந்தையும் சாத்திக் கொண்டு ராஜ மார்க்கத்தால் எழுந்து அருளி
குவலயா பீட நிரசனம் பண்ணி நிற்கிற போது
முழுசி வண்டாடிய தண் துழாயின் –ஆவரிவை செய்து அறிவார் -என்கிற பாட்டுக்களில் சொல்லுகிறபடியே
ரூப ஸுந்த்ராய சேஷ்டிதாதி களில் தோற்று தங்கள் பேசுகிற இனிய பேச்சுக்களாலே அவர் கோகுலத்தை மறக்கும் படி பண்ண வல்ல
ஸ்ரீ மதுரையில் பெண்களுடைய பாவனை இவர்க்கு உண்டு என்னும் இடம் -மல் பொரு தோளுடை மாய பிரானுக்கு
-விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் -என்னும் பாசுரங்களில் தோன்றும் –
நரகாசூரன் கன்யைகளாய்க் கொண்டு வந்து திரட்டி வைக்க அவனை நிரசித்து ஒழித்து பரிக்ரஹிக்கப் பட்ட பதினாறாயிரம் தேவிமார்
பாவனை இவர்க்கு உண்டு என்னும் இடம் -நூற்றுவரை யன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன் நேமியான் -என்ற பாசுரத்திலும்-
வாயும் திரை யுகளும்-என்ற திருவாய் மொழியிலும் தீர்ப்பாரை யாமினியிலும் தோற்றும் –

125-இரான் எனில் -இப்படி பிரதான மஹிஷிகளோடு மற்றும் பகவத் பரிக்ரஹம் யுடையாரோடும் இவருக்கு சாம்யம் உண்டே யாகிலும்
அல்லாதார் எல்லாம் இவருக்கு ஒரு வகைக்கு ஒப்பாம் அத்தனை ஆகையால் -ஸர்வதா சாம்யம் சீதா பிராட்டியோடே என்கிறது –
ந ச சீதா த்வயா ஹீ நா -இத்யாதி ஸ்லோகத்தில் படியே நீரில் நின்றும் எடுக்கப் பட்ட மீன் போலே விஸ்லேஷத்தில் சத்தா ஹானி பிறக்கும்படி யானாள் பிராட்டி –
ஆழ்வாரும் மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் -பின்னை யான் ஓட்டுவனோ –என்று அவனைப் பிரிந்தால் தான் உளராகாதபடி யானார்
இலங்கை செற்றாய் உன்னை என்னுள்ளே குழைத்த எம் மைந்தா -என்று இவரோடு ஏக தத்வம் என்னலாம் படி சம்ச்லேஷித்த பெருமாள் –
லங்காத்வாரத்தளவும் அவளைத் தேடி பின் தொடர்ந்தால் போலே -எதிர் சூழல் புக்கு எனத்தோர் பிறப்பும் -என்று
இவர் பிறந்த ஜென்மங்கள் தோறும் தானும் பின் தொடரும் படி –
அவள் ராவண பாவனத்திலே சிறை இருந்தால் போலே இவரும் வன் சிறையில் அவன் வைக்கில் -என்று சம்சாரத்திலே சிறை இருந்தார் –
அப்போது பிரதிகூலனான ராவணனுக்கு -விதிதஸ் ச ஹி தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்சசி -என்று
ஹிதம் சொன்னால் போலே இவரும் பிரதிகூலரான சம்சாரிகளுக்கு -புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கே -என்று ஹிதம் அருளிச் செய்தார் –
நஹி மே ஜீவிதே நார்த்தோ நைவார்த்தைர் நச பூஷணை-வசந்த்யா ராக்ஷஸீ மத்யே விநா ராமம் மஹா ரதம் -என்று சக்கரவர்த்தி திருமகனை
ஒழிய ராக்ஷஸிகள் நடுவே இருக்கிற எனக்கு பிராணாதிகளால் என்ன பிரயோஜனம் என்று பிராட்டி அவற்றை உபேக்ஷித்தால் போலே இவரும் –
ஏறாளும் இறையோனும் -என்கிற திருவாய்மொழியில்-மணிமாமை குறைவிலமே-மட நெஞ்சால் குறைவிலமே -உடம்பினால் குறைவிலமே
உயிரினால் குறைவிலமே -என்று அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என் உடைமையும் வேண்டா என்று ஆத்மாத்மீயங்களை உபேக்ஷித்தார் –
விஷஸ்ய தாதா நஹி மேஸ்தி கஸ்ச்சித் சஸ்த்ரஸ்ய வா வேசமநி ராக்ஷஸ்ய -என்று ராவண பவனத்திலே பிராட்டி மரண உபாயங்களை
சிந்தித்தால் போலே இவரும் மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே -என்று முடியும் வகை தேடினார் –
ஹா ராம ஸத்ய வ்ரத தீர்க்க பாஹோ ஹா பூர்ண சந்த்ர ப்ரதிமா நவக்த்ர –என்று பிராட்டி பெருமாளுடைய ஸுர்யாதிகளை சொல்லிக் கூப்பிட்டால் போலே இவரும்
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ-என்று அவனுடைய வீரப்பாட்டைச் சொல்லிக் கூப்பிட்டார்
க்யாத ப்ராஜ்ஞ க்ருதஞ்ஞஸ் நிர நுக்ரோசஸ் ச சங்கே மத் பாக்யே சம்ஷயாத் –என்று பெருமாளை பிராட்டி நிர்த்தயராக சங்கித்தால் போலே இவரும்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் -என்றும் -இலங்கை குழாம் நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே -என்றும்
அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் -என்றும் அவனை நிர்க்க்ருணனாக சங்கித்தார் –
ஜீவந்தீம் மாம் யதா ராமஸ் சம்பாவயதி கீர்த்திமான் தத் த்வயா ஹநுமன் வாஸ்யோ வாசா தர்மமவாப்நஹி -என்று தம்முடைய
ரஷ்ய வர்க்கத்திலே நானும் ஒருத்தி இருப்பதாகப் பெருமாளுக்கு விண்ணப்பம் செய் என்று பிராட்டி ஆள் விட்டால் போலே -இவரும்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனாருக்கு என்னையும் உளன் என்மின்களே-என்று தூது விட்டார் –
அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா –என்று ஆதித்யனோடு பிரபை போலேவே நான் பெருமாளோடு அநன்யயையாய் இருப்பேன்
என்று பிராட்டி சொன்னால் போலே இவரும் -சோர்ந்தே போகல் கோடாச் சுடரை யரக்கியை மூக்கீர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே -என்று
சேஷத்வத்தாலே அவனோடே தாம் நித்ய சம்யுக்தராய் பேசினார் -அவள் அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்கிறபடி
உன்னை க்ஷண காலமும் பிரிந்து இருக்க வல்லேன் அல்லேன் என்னுமா போலே இவரும் அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே -என்று பேசினார் –
ஆகையால் இவருக்கு ஸர்வதா சாத்ருஸ்யம் பெரிய பிராட்டியாரோடே யாய்த்து –

126-பிரியில் இலேனுக்கு-இப்படி பிராட்டியைப் போலே பிரியில் தரியாதார் இவர் ஒருவரேயோ-பின்னையும் யுண்டோ வென்னில்-
அவனைப் பிரியும் அளவில் -நின் அல்லால் இலேன் காண்-என்னும் இவரைப் போலே சத்தை அழிகைக்கு-நஸாஹம் அபி ராகவ -என்று
சொன்ன இளைய பெருமாளும் -கீழ் ப்ரஸ்துதமான ஜலாதுத்ருத மத்ஸ்யம் இ றே-
இத்தால் பிராட்டியைப் போலே பிரியில் முடிகைக்கு இளைய பெருமாளும் இவரும் ஒக்கும் என்றதாய்த்து –

127-அழும் தொழும் -இனி மேல் லஷ்மண பரத சத்ருக்ந தசரத யசோதா பிரகலாத விபீஷண ஹனுமத்
அர்ஜுனர்களுடைய படிகளும் ஆழ்வார் பக்கலிலே உண்டு என்கிறது –

இளைய பெருமாள் -பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த-என்கிறபடியே பால்யமே தொடங்கிப் பிரியில் தரியாத ஸ்நேஹத்தால்-
பாஷபபர்யா குலமுக -என்றும் -ப்ரஹவாஞ்சலி புடம் ஸ்திதம்-என்றும் சொல்லுகிறபடியே விஸ்லேஷ பிரசங்கத்தால் உண்டான சோக வேகத்தால்
சொரிகிற பாஷ்பத்தோடே அஞ்சலியும் கையுமாகக் கொண்டு -ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத-என்றும்
-பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ஸ்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி -ஜாக்ரதஸ் ஸ்வபதஸ் ச தே -என்றும் சொல்லுகிறபடியே
திருச் சித்ர கூட கிரித் தாழ் வரை முதலான ருசிர தேசங்களிலே இருவருமான சேர்த்தியிலே சர்வவித கைங்கர்யங்களும் அடியேன் செய்யும் படி
ஏவிக் கொண்டு அருள வேணும் என்று பிரார்த்தித்து -அப்படிப்பட்ட அவிச்சின்ன கைங்கர்யத்தை பெறுகைக்காக-
ச ப்ராதுஸ் சரணவ் காடம் நிபீடிய ராகு நந்தன ஸீதாம் உவாசாதியசா ராகவம் ச மஹாவ்ரதம் -என்கிறபடியே புருஷகார பூர்வகமாக திருவடிகளைக் கட்டி கொண்டு
அக்ரத ப்ரயயவ் ராமஸ் சீதா மத்யே ஸூ மத்யமா ப்ருஷ்டதஸ் து தனுஷ் பாணீர் லஷ்மனோ து ஜகாம ஹா -என்கிறபடியே
ஆயுத பாணியாய்க் கொண்டு பெருமாளைப் பின் சென்று -பிராதா பர்த்தா ச பந்துஸ் ச பிதா ச மம ராகவ -என்று
தமக்கு சர்வ வித பந்துவும் பெருமாளே என்றால் போலே -இவரும்
அரியாக் காலத்துள்ளே அடிமைக்கு கண் அன்பு செய்வித்து -என்கிறபடியே பருவம் நிரப்புவதற்கு முன்னே பிரியில் தரியாதபடி
பிறந்த ஸ்நேஹத்தாலே விஸ்லேஷம் பொறாமல் -அழும் தொழும் ஆவி அனல் வெவ்வுயிர்க்கும் -என்று கண்ணும் கண்ணநீரும் -கையும் அஞ்சலியுமாய்
திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு –ஒளியில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
மொய்த்த சோலையும் மொய் பூம் தடம் தாழ்வரையுமான போக ஸ்தலங்களை யுடைய திருமலையில் -அலர் மேல் மங்கை யுறை மார்பன் ஆகையால்
பிராட்டியோடே கூடே இருக்கிற பரம சேஷியானவனுக்கு ஸர்வதா சகல சேஷ வ்ருத்திகளும் பண்ண வேணும்
-அது தன்னிலும் முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்று சந்நிதியில்
ஏவிக் கொள்ளவும் வேணும் என்று பிரார்த்தித்தபடி தாத் கைங்கர்யத்தை பெறுகைக்கு உபாயமாக -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று
புருஷகாரம் முன்னாக அவன் திருவடிகளைப் பற்றி -வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை என்று
திவ்யாயுதங்களைக் கொண்டு தாம் பின்னே திரிய ஆசைப்பட்டு
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் மேலாயத் தாய் தந்தையரும் அவரே என்று
சர்வேஸ்வரன் தமக்கு சர்வ வித பந்துவும் என்கையாலே இளைய பெருமாளோடே ஒப்பர் –

ஸ்ரீ பரதாழ்வான் -பெருமாள் முடி சூடி இருக்க தாம் அடிமை செய்து வாழப் பெறாத படி -கைகேயி அவரைக் காட்டிலே துரத்தித் தம் மேலே
ஸ்வா தந்தர்யத்தை ஆரோபித்த கொடுமையாலே-ஹந்யாம் அஹம் இமாம் பாபாம் கைகேயீம் துஷ்ட ஸாரிணீம்-என்று
மாதாவானவளை சீறி உபேக்ஷித்து தமக்கு ஸ்வாதந்தர்யம் அஸஹ்யம் என்னும் இடம் தோற்ற -ராஜ்ஜியம் சாஹம் ச ராமஸ்ய –என்று சொல்லி
-வசிஷ்டாதி புரோகிதர் நீ ராஜாவாக வேணும் என்று நியமியா நிற்க மகத்தான ஐஸ்வர்யத்தையும் விரும்பாமல் பெருமாளை மீட்டுக் கொண்டு
வந்து பட்டாபிஷேகம் பண்ணுவிக்க விரும்பி அவர் திருவடிகளாலே சென்று மீண்டு எழுந்து அருள வேணும் என்று அபேக்ஷித்த இடத்தில்
-அவர் அது செய்யாமல் திருவடி நிலைகளைக் கொடுத்து விட அந்தப் பாதுகைகளை சிரஸா வஹித்துக் கொண்டு மகிழ்ந்து
மீண்டு வந்து பெருமாள் வனவாசம் முடிந்து த்வரையோடு திரும்பி வரும் அளவும் -பங்கதிக் தஸ் து ஜடிலோ பரத -என்கிறபடியே
கண்ணநீரால் உண்டான சேற்றிலே அழுந்தி -மூத்தார் இருக்க இளையோர் முடி சூடலாகாது என்ற இஷ்வாகு குல மரியாதை தப்பாமல்
நோக்கிக் கொண்டு தம்முடைய மநோ ரதம் தலைக் கட்டப் பெறாத இழவோடே இருந்தாப் போலே -இவ்வாழ்வாரும் –
பகவத் ப்ராவண்ய அதிசயத்தாலே வழி அல்லா வழியே யாகிலும் கிட்டும் அத்தனை என்கிற த்வரைக்கு இசையாமல் விலக்கும் மாதாவை
சத்ரு பஷமாய் காண்பவராய் -அன்னை என் செய்யில் என் -என்று சீறி உபேக்ஷித்து -யானே என் தனதே -என்கிற ஸ்வா தந்தர்யத்தை சஹியாதே
யானே நீ என்னுடைமையும் நீயே -என்று ஆத்மாத்மீயங்கள் இரண்டும் அங்குத்தைக்கு சேஷம் என்று
-கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு -என்று நிரவதிக ஐஸ்வர்யத்தையும் அக்னி சமமாகக் கொண்டு
-வேங்கட வாணனை வேண்டிச் சென்று என்று திருச்சித்ர கூடத்தில் இருந்தால் போலே திருமலையில் இருக்கிற அவனை
அனுபவிக்க விரும்பிச் சென்று தம் அபேக்ஷிதம் அவன் அப்போது செய்யாமல் ஒரு வைஸத்ய முகத்தால் -உன் திருவடியே சுமந்து
உழலக் கூட்டரிய திருவடிக் கண் கூட்டினை -என்று திருவடிகளைத் தந்தாய் என்று ஹ்ருஷ்டராம் படி பண்ணி விட
அப்படி அவன் கொடுத்த திருவடிகளை சிரஸா வகித்து -வீடு திருத்தப் போனவன் விண்ணுலகம் தர விரைந்து வரும் அளவும்
-கண்ண நீர் கைகளால் இறைக்கும் -இரு நிலம் கை துழா விருக்கும் -என்கிறபடியே கண்ண நீர் வெள்ளத்தால் உண்டான சேற்றிலே
இருந்து ஆற்றாமையாலே தரையைத் துழாவி -குடிக்கிடந்து ஆக்கம் செய்து -என்கிறபடியே பிரபன்ன குல மரியாதை தப்பாமே இருந்து
காமுற்ற கையறவோடு-என்கிறபடியே தாம் ஆசைப்பட்ட பொருள் கை புகுராத இழவோடே இருக்கையாலும் பரத ஆழ்வானோடு ஒப்பர் –

ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பாகவத சேஷத்வமே பரம புருஷார்த்தம் என்று ஸ்ரீ பரத ஆழ்வானுக்கே சேஷ பூதராய்-அவனுடைய
பாவனத்வ போக்யத்வங்களிலே கால் தாழ்ந்து -பெருமாளுடைய வடிவு அழகிலும் துவக்கு ஒண்ணாதே தம்முடைய நிஷ்டைக்கு
அது நித்ய சத்ரு என்று நிஷ்கர்ஷித்து இருக்கச் செய்தே ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு உகப்பாகையாலே
உத்தேச்ய ப்ரீதி என்று புரிந்து பெருமாள் வடிவிலே நெஞ்சு சென்று –
நாஹம் ஸ்வ பிமி ஜாகர்மி தமே வார்யம் விசிந்தயன் இத்யேவ மப்ரவீத் ப்ராதா சத்ருக்நோ பரதபிரிய-என்கிறபடியே எப்போதும்
அத்தை மனசிலே கொண்டு இருக்குமா போலே -இவ்வாழ்வாரும்
ஸ்வரூபத்தினுடைய எல்லை நிலமாகையாலே -கோதில் அடிமை -என்று சொல்லப் படுகிற பாகவத சேஷத்தினுடைய ரசம்
-அவன் அடியார் சிறு மா மானிடராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே-அவர்களைத் தவிர்ந்து -செந்தாமரைக் கண் திருக் குறளன்
-நறு மா விரை நாண் மலர் அடிக் கீழ் புகுதல் பாவியேனுக்கு உறுமோ -என்று சொல்லுவிக்கப் பட்டதாய்
அந்த பாகவத நிஷ்டா விரோதியான பகவத் விக்ரஹத்தை உத்தேச்ய ப்ரீதி என்னுமத்தைப் பற்ற -திரி தந்தாகில் -படியே மீண்டு -புலன் கொள் வடிவு
என் மனத்ததாய் என்று எப்போதும் மனஸ்ஸூ க்கு விஷயமாகக் கொண்டு இருக்கையாலே சத்ருக்ந ஆழ்வானோடு ஒப்பர் –

தசரத சக்கரவர்த்தி -ந ததர்ப்ப சமாயாந்தம் பஸ்யமா நோ நராதிப -என்கிறபடியே -வைத்த கண் வாங்காதே மேன்மேலும் அனுபவியா
நிற்கச் செய்தேயும் ஒரு காலே திருப்தி பெறாமல் இன்னமும் அனுபவிக்க வேணும் என்கிற விருப்பத்துடன் செல்லுமா போலே -இவ்வாழ்வாரும்
எப்போதும் நாள் திங்கள் ஆண்டூழி யூழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுதமே -என்று அநு க்ஷணம் எனக்கு
ஆசையைப் பெருக்குமதான போக்யவஸ்து என்று மேன்மேலும் அபிநிவிஷ்டராகையாலே சக்கரவர்த்தியோடு ஒப்பர் –

க்ருத சங்கேதமாய் நலிய வந்து நின்ற யாமளார்ஜுனங்களின் நடுவே கிருஷ்ணன் போனபோது யசோதை பிராட்டி ஓடிச் சென்று
எடுத்துக் கொள்ளா நிற்க -மருத மரங்களின் பெருமையையும் இவனது இளமையையும் கண்டு வயிறு எரிந்து முகத்தைப் பார்த்து-
இப்பெரிய மரங்களின் நடுவே போனாயே -என்று வெறுத்தால் போலே இவரும்
அதீத காலஸ்தமாய் இருக்கவும் சமகாலத்தில் போலே பிரகாசிகையாலே அப்படி வயிறு எரிந்து கொண்டு -போனாய் மா மருதின் நடுவே
என் பொல்லா மணியே -என்கையாலே யசோதை பிராட்டியோடே ஒப்பர் –

ஸ்ரீ ப்ரஹ்லாதன் -நாக்நிர் தஹதி நைவாயம் சாஸ்த்ரைஸ் சின்னோ மஹோரகை-இத்யாதிப்படியே அக்னி முதலானவை பாதகம் ஆகாதபடி
சர்வமும் பகவத் ஆத்மகதயா அநு கூலமாக அநு சந்தித்து -உர்வ்யா மஸ்தி –சர்வத்ராஸ்தி–என்று பிறருக்கும் உபதேசத்தால் போலே -இவரும்
அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் -மெய்வே வாள் எறியும் தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும் —
போம் இள நாகத்தின் பின் போயவன் கிடக்கை ஈது என்னும் -என்று அக்னி முதலான பாதக பதார்த்தங்கள் பகவத் ஆத்மகத்வேன-
அநு கூலமாம் படி அவனை இடையறாது அநு சந்தித்து -பரந்த தண் பரவையுள் என்கிற பாட்டாலே எங்கும் உளனான அவனது
தன்மையைப் பலரும் அறியப் பேசுகையாலே -பள்ளியில் ஓதி வந்த சிறுவனான அந்த ப்ரஹ்லாதனோடு ஒப்பர் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் லங்கையோடே கூட புத்ர தாராதிகளான சர்வத்தையும் விட்டு சக்கரவர்த்தி திருமகனைத்
தமக்கு எல்லாமாகப் பற்றினால் போலே இவரும்
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -என்று சாம்சாரிக சகல சங்கங்களையும் சவாசனமாக விட்டு
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்று சக்கரவர்த்தி திருமகனையே தமக்கு
சர்வ பிரகார ரக்ஷகனாகப் பற்றுகையாலே தர்மாத்மாவான விபீஷணனோடு ஒப்பர் –

திருவடி -சக்கரவர்த்தி திருமகனை தன்னுள்ளே யுடையவனாய் -அவனுடைய வீர சரிதத்தையே போக்யமாக யுடையவனாய் –
ஸ்நேஹத்தாலும் பக்தியாலும் இவ்விஷயத்தை விட்டு பரத்வத்தில் தன் நெஞ்சு போகாமை சொல்லுகிற இடத்தில் பரத்வத்தின் பேர் சொல்லுகையும்
அஸஹ்யமாய் -அந்யத்ர-பாவோ நான்யத்ர கச்சதி -என்னும்படி -சக்கரவர்த்தி திருமகனை அல்லது அறியேன் என்று இருந்தால் போலே -இவரும்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவன் -திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே
யுறையும் பிரான் கண்டீர் -என்று ஏக வீரனான சக்கரவர்த்தி திருமகனை தம் உள்ளே உடையராய்
-கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே –ஓவாத வூணாக வூண்-என்கிறபடியே அவன் வீர சரித்திரத்தையே
போக்யமாக யுடையராய் -கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்று தமக்கு இவ்விஷயத்தில் உண்டான ப்ராவண்ய அதிசயத்தாலே
பரத்வாதிகளைக் கழிக்கிற இடத்தில் அவற்றின் பேர் சொல்லுகையும் அஸஹ்யமாய் மற்று என்னும் படி
-தயரதன் மகன் தன்னை அன்றி மற்று இலராய் இருக்கையாலே ராமதாசரான திருவடியோடே ஒப்பர் –

அர்ஜுனன் -பஸ்யாமி தேவாம்ஸ் தவ தேவ தே ஹே -என்று விஸ்வரூபம் கண்ட பிறகு திவ்ய சஷூஸ் ஸாலே இப்போது கண்ட விஸ்வரூபம்
முன்பு ஒரு காலும் கண்டது அல்லாமையாலே ஹர்ஷ பயங்கள் இரண்டையும் விளைக்கையாலே பூர்வ பரிசிதமான
சவ்ம்ய ரூபத்தை காண விரும்பி சதுர் புஜமாய் சங்க சக்ர கதா தரனான திவ்ய விக்ரஹத்தைக் காட்ட வேணும் என்று வேண்டினால் போலே -இவரும் –
நல் குரவும் செல்வமும் -என்று தொடங்கி -பல்வகையும் பரந்த பெருமானை –திரு விண்ணகர் கண்டேனே என்று விருத்த விபூதி உக்தனாய் கொண்டு
விபூதி முகத்தாலே பல படியாக விஸ்திருதனாய் இருக்கிறவனைக் கண்டு -நீராய் நிலனாய் -என்று தொடங்கி –சிவனாய் அயனாய் -என்று
-காரண காரியங்கள் இரண்டையும் சரீரமாகக் கொண்டு
நீ ஜெகதாகாரகனாய் இருக்கும் இருப்பை எனக்கு காட்டித் தந்தாய் ஆகிலும் இது எனக்கு ஆகர்ஷகமாய் அநு பாவ்யமாய் இருக்கிறது இல்லை
ஆனபின்பு கூராழி வெண் சங்கு ஏந்தி –வாராய் என்று அசாதாரண விக்ரஹத்தை அநு பவிக்கக் கடவாய் என்று அபேக்ஷிக்கையாலே அர்ஜுனனோடு ஒப்பர்

இங்கனே மற்றும் பல ஞானிகளின் படியும் இவர் பக்கலிலே காண அடுக்கும் –

128-குழலில் நெஞ்சும் -கீழ் சொன்னவர்களோடு இவருக்கு சாம்யம் மாத்திரமே அன்று ஆதிக்யமும் உண்டு –
குழல் கோவலர் -என்கிற பாட்டின் படியே பிராட்டிமாரும் நித்ய ஸூ ரிகளும் அவனுமான திரளில் பற்றின நெஞ்சை யுடையராய்
அருகலிலாய பெரும் சீர் -என்ற பாட்டின் படியே -பிராட்டிமாரோடும் நித்ய ஸூ ரிகளோடும் ஒரோ வகையில் பரிமாறுபவன்
அவர்களோடு பரிமாறுமா போலே ஒரு வழியால் வந்த ரசத்தை தந்துவிட்டு என்னளவில் அவ்வளவோடு ஒழிகிறான் இல்லை –
அவர்கள் எல்லார் பக்கலிலும் பண்ணும் ஆதாரத்தை என்னளவில் பண்ணா நின்றான் என்னும் படி எல்லா வழிகளாலும் உள்ள சம்ச்லேஷ ரசத்தை
அவன் தமக்கு விளைக்கையாலே போக ரசமும் விசேஷிக்கப் பெற்றவரான இவ்வாழ்வார் கீழ் சொன்ன லஷ்மணாதி களில் அத்யந்த வ்யாவ்ருத்தர்-

129-எற்றைக்கும் என்றது தோற்ற -ஸ்ரீ பூமிப் பிராட்டி அவதாரமான ஆண்டாளுடைய பிரார்த்தனை மூவருக்கும் ஒக்கும் ஆகையால் –
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்று அபேக்ஷித்தது
தோன்றும் படி எம்பெருமானுடைய அவ்வவ அவதாரங்களுக்கு அநு குணமாக ஸ்ரீ பூமியாதி ரூபேண அவதரிப்பாள் என்றபடியே –

அவன் சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்த போது தானும் சீதா பிராட்டியாக அவதரித்து பெருமாளை திரு அபிஷேக அர்த்தமாக அலங்கரித்து
-அருகே சேவித்து நின்று திரு வெண் சாமரம் பரிமாறி பின்பு சக்கரவர்த்தி திரு மாளிகைக்கு எழுந்து அருளுகிற போது பெருமாள் வடிவு அழகைக் கண்டு
இது நமக்குத் தொங்கப் போகிறதோ என்னும் வயிறு பிடியால் அந்தபுரத்துவாரத்தளவும் பின் சென்று மங்களா சாசனம் பண்ணி
அதன் பின் காட்டுக்கு எழுந்து அருளிகிற போது அக்ரதஸ் தே கமிஷ்யாமி-என்று தான் முற்பட்டு -ஸ்ரீ தாண்ட காரண்யத்தில் எழுந்து
அருளுகிற போது அவர் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு நிற்கிற நிலையைக் கண்டு இவர் சாயுதராய் நின்றால்
யாரேனும் மேல் விழுந்து பிரமாதம் விளையக் கூடும் என்று பயப்பட்டு
எல்லாவற்றுக்கும் தர்மமே மூலம் என்னும் இடத்தை ஸ்மரிப்பித்து ஆயுதத்தை வைத்து தாபஸ வேஷத்தோடே தர்மத்தை
அனுஷ்ட்டிக்க அமையும் என்று தர்ம உபதேசத்தையும் பண்ணின பெரிய பிராட்டியாரையும் –

ஸ்ரீ வராஹ நாயனார் பக்கலிலே பரம தர்மம் கேட்டு அதற்காக சிஷ்யையும் தாசியும் பக்தையுமாய் -உன் தன்னைப் பாடி -என்கிறபடியே -கவி பாடி –
செங்கமலத் திரு மகளும் புவியும் செம் பொன் திருவடி இணை வருட -என்கிறபடியே பெரிய பிராட்டியாரைப் போலே அவன் திருவடிகளை பிடித்து –
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நாண் ஓன்று நூறாயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -என்று
தன்னை அடிமை கொண்டால்-அதுக்கு பிரதியுபகாரம் பண்ணுவேன் என்று சொன்ன ஸ்ரீ பூமிப் பிராட்டியாரையும்-

சென்றால் குடையாம்-என்கிற பாட்டிலும் – நிவாஸ சய்யா ஆசன -இத்யாதி ஸ்லோகத்திலும் சொல்லுகிறபடியே பகவத் விநியோகத்துக்குத்
தகுதியாக சத்ர ஸிம்ஹாஸன பாதுகாதி சரீர பேதங்களைக் கொண்டு சகல வித கைங்கர்யங்களையும் செய்யும் திருவனந்த ஆழ்வானையும்-

ஊரும் புட் கொடியும் அஃதே -என்கிற சந்தையிலும் -தாஸஸ் சஹா இத்யாதி ஸ்லோகத்திலும் சொல்லுகிறபடியே
வாகன த்வஜ விதாநவ்யஜநாதி தேஹ பேதங்களைக் கொண்டு அநேக கைங்கர்யங்களை செய்யும் பெரிய திருவடியையும் போலே

இவரும் பிறந்து பிராட்டிமார் தசையில் நின்று -பேசும்படியான பல பாவ வ்ருத்திகளையும் -ஒழி வில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா
அடிமை செய்ய வேண்டும் நாம் என்னும் அபி நிவேச அதிசயத்தையும் யுடையவர் ஆகையால்
பிராட்டிமாரையும் அனந்தாதி ஸூ ரிகளையும் அவர்களுக்கும் தமக்கும் ஒரு விசேஷம் அற அவர்கள் தாமாகவே பாவிப்பர் –

130-எழுவதோர் உரு வழிக்க–சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு -என்று தேஜஸ் புஞ்ச மத்யத்திலே உன் நேயமாம் படி இருப்பதாய்
ஆண்களையும் பெண் உடை உடுத்துமதான அவனுடைய அப்ராக்ருத விக்ரஹம் இவ்வாழ்வாருடைய பும்ஸவத்தை அழித்து
ஸ்த்ரீத்வ பாவனையை விளைத்ததற்கும் அவன் விஷயத்தில் ப்ரீதியாலே வழு விலா வடிமை செய்ய வேணும் நாம் என்கிற தம்முடைய பாவ
விசேஷங்களால் இவர் செய்கிற நாநா வித அனுவ்ருத்திகளுக்கும் -திரௌபதியானவள் -ஸ்வ தேஹ ஸுந்தரியத்தாலே புருஷ பாவத்தை அடைவித்ததையும்
கௌசல்யை யானவள் ஓவ்பாதிக பர்த்ரு விசேஷத்தில் பண்ணின சீல அநு வ்ருத்திகளையும் ஒரு புடை ஒப்புச் சொல்வோம் என்றாலும் இதுக்கு அது பற்றாது –

131-பெருக்காறு பல தலைத்து–பெரு வெள்ளம் கொண்ட ஆறு பல தலையாக பரந்து செல்லா நிற்க -தனக்கு ஒரு குறை இல்லாமல் –
தனக்கு புகலான கடலை நோக்கிச் சென்று சேருமா போலே சிதிலராய் த்ரவீ பூதராய் நிலை கலங்கி நெஞ்சு கட்டழிந்து உருக்குலைந்து
போம்படி அபாரமாகப் பெருகும் ஆழ்வாருடைய காதலானது ஷீராப்தி சாயியான எம்பெருமான் ஆகிற கடலை
தாமான தன்மையிலும் அவஸ்தாந்த்ரா பத்தியாலும் யுண்டான பேதத்தாலே பல முகமாக சென்று சேரும் –
அவஸ்தாந்த்ரத்தை அடைந்தாலும் தாமான தன்மையால் செல்லும் அபி நிவேசமும் இவருக்கு குறையாது என்றபடி –

132-அச்சேத்யோயம் என்னுமது -அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய அசோஷ்ய-ஏவ ச -வெட்டுதல் கொளுத்துதல் -நனைத்தல்-உலர்த்துதல்-ஆகிற
இக்காரியங்களுக்கு அநர்ஹமாகச் சொல்லப் படுகிற ஆத்மவஸ்து –
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திருவாகம் எம்மாவி ஈரும்-வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு-
காரியம் நல்லன களவை காணில் என் கண்ணனுக்கு என்று ஈரியாய் இருப்பாள் -வேட்கை நோய் மேலாய் உள்ளுலர்த்த-என்னும் பாசுரங்களில்
ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த -என்று சேதனார்ஹமாகவும்-தாஹநார்ஹமாகவும் -க்லேத நார்ஹமாகவும் -சோஷணார்ஹமாகவும்-ஆயிற்று என்று
தாம் சொல்லும் படியாக அதுக்கு மேலே அசேதனமான மனசானது சேதன சமாதியை அடைந்து -என்னெஞ்சு என்னை நின்னடையேன் அல்லேன்
என்று நீங்கி -என்கிறபடியே -உறவு அறுத்துக் கொண்டு தம்மை விட்டு நீங்க -அதுக்கு மேலே சஷூஸ் ஸ்ரோத்யாதி பாஹ்ய கரணங்கள்
முடியானே -படியே சேதன சமாதியாலே ஒரு கரணத்தினுடைய விருத்தியை மற்று ஒரு கரணத்தின் விருத்தியை ஆசைப்படும் படி விடாய்க்க
-அதுக்கு மேலே சரீரமானது ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய -என்று அன்பு தான்
ஒரு வடிவு கொண்டால் போலே யாய் மேன்மேலும் ஸைதில்யம் அடைந்து ஆத்மதர்மத்தை ஏறிட்டுக் கொள்ள
வாயும் திரை யுகளும் -திருவாய் மொழியில் -கடலும் மலையும் விசும்பும் –இருளின் திணி வண்ணம் -இத்யாதிகளின் படியே
அசேதனமான காற்று முதலானவற்றை தமக்கு சக துக்கிகளாகக் கொண்டு தாம் அவற்றைக் கட்டிக் கொண்டு கிடந்து கதறும் படியாக
விளைந்த அபரிமித பக்திக்கு நூல் பிடித்து பரிமாறும் படி வரம்பு கட்ட ஒண்ணாது –
அத்யந்த பக்தி யுக்தாநாம் ந சாஸ்த்ரம் நைவசக்ரம -என்னக் கடவது இ றே —

133-சம்பந்த உபாய பலன்கள் -இப்படிப்பட்ட பக்தி தசையில் இவர் பெண் பேச்சாக பேசும் இடத்தில் -தோழி-தாய் -மகள் -என்று
-மூவகையாகப் பேசுகிற இதுக்கு கருத்து ஏது என்னில்
அநந்யார்ஹ சேக்ஷத்வாதி சம்பந்தத்தில் ஞானமும் -சித்த உபாயத்தில் திருட அத்யவசாயமும் -பலத்தில் த்வரையும் ஆகிற பிரஞ்ஞா அவஸ்தைகளுக்கு
முறையே-தோழி என்றும் –தாய் என்றும் -மகள் என்றும் பேர் -அதாவது –
தோழி யாவாள் -நாயக நாயகிகளை இணக்கிச் சேர்ப்பவள் ஆகையால் -திரு மந்திரத்தில் முதல் பதமான ப்ரணவத்தால் ஈஸ்வரனோடு ஆத்மாவுக்கு
சொல்லப்பட்ட அநந்யார்ஹ சேக்ஷத்வாதி சம்பந்த ஞானமே அவனோடே இவ்வாத்மா சேருகைக்கு ஹேதுவாகையாலே
அந்த சம்பந்த ஞானம் ஆகிற பிரஞ்ஞா அவஸ்தை தோழி என்கிறது –
தாயானவள் -பெற்று வளர்த்து பெண் பிள்ளை யவ்வனப் பருவம் அடைந்து கணவன் இடத்தில் மிக்க ப்ராவண்யத்தால் அவன் இருந்த இடத்து ஏறப்
போக வேணும் என்று பதறும் அளவிலும் அவன் தானே வந்து கைப்பற்றும் படி நிற்கை ஒழிய மரியாதை தப்பி புறப்படுகை தகாது என்று தடுப்பவள்
ஆகையால் சித்த உபாயத்தை பற்றினவர்கள் ப்ராப்யத்துக்கு பதறும் அளவில் இது பிரபன்ன குல மரியாதைக்கு சேராது என்று தடுத்து இவளது
துடிப்பை அடக்கப் பார்க்கிற நமஸ் பாதத்தால் பிரதிபாதிக்கப் பட்ட உபாய அத்யாவசியம் ஆகிற பிரஞ்ஞா அவஸ்தையை தாயார் என்கிறது –
தலைமகள் ஆவாள் இயற்கையில் புணர்ந்து நாயகனுடைய வை லக்ஷண்யத்தில் ஈடுபட்டு குல மரியாதைகளையும் பாராமல் அவனைக்
கிட்டி அல்லது தரிக்க மாட்டேன் என்னும் பதற்றத்தை யுடையவன் ஆகையால் பிரணவ நமஸ் பதங்களால் அறியப்பட்ட
சேஷித்வ சரண்யத்வங்களை யுடையவனுக்கு சரமமான நாராயண பதத்தால் சொல்லப்பட்ட ஸ்வரூப ரூப குண விபூதிகளால் வந்த
வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து அவனை அனுபவிப்பதில் விளம்பம் பொறுக்க மாட்டாமையால் தத் ஏக உபாயத்வ அத்யவசாயத்தையும்
அதிக்ரமித்து கிட்டி அனுபவித்து அல்லது தரிக்க முடியாத படி நடக்கிற ப்ராப்ய த்வரை யாகிற பிரஞ்ஞா அவஸ்தையை மகள் -என்கிறது –

134-சகி வெறி விலக்கு –இவ்வவஸ்த்தைகள் மூன்றும் இவர் பேச்சிலே தோன்றுமோ என்னில் -தோழியானவள் –
1-தீர்ப்பாரை யாமினி -என்ற திருவாய் மொழியில் வெறி விலக்கியும்–2-துவளில் மா மணி மாடம் -என்ற திருவாய் மொழியில் ஆசை அறுத்தும்
3–கரு மாணிக்க மலை மேல் -என்ற திருவாய்மொழியில் அறத்தொடு நின்றும் -ஈவஸ்து அந்நிய சேஷமும் அன்று -ஸ்வ சேஷமும் அன்று –
பகவத் ஏக சேஷம் -என்று சொன்ன படியால் சம்பந்த ஞான தசையில் வரும் பேச்சாகிய இம்மூன்று திருவாய் மொழிகளிலும் அநந்யார்ஹ சேஷத்வம் தெரியும்-

அடியார்கள் குழாங்களை உடன் கூடப் பெறாமையாலே வந்த கிலேசத்தால் ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே வாடுகிற படியைப் பேசின -1-ஆடியாடி -யும்
அதீதங்களை ஆசைப்பட்டு மெலிந்த படியைப் பேசின -2-பாலனாய் ஏழ் உலகும் –
சத்ருச பதார்த்தங்களையும் அவனாக நினைத்து கிட்டும்படி பிச்சேறின படியைச் சொன்ன -3-மண்ணை இருந்து துழாவியும் –
ஆற்றாமையாலே அணுகரிக்கிறபடியே அறியாமல் ஈஸ்வரன் ஆவேசித்தானோ என்னும்படி அவன் தானாகப் பேசியபடியைச் சொன்ன-4- கடல் ஞாலமும் –
எம்பெருமானைப் பெறாத இழவாலே சகலத்தையும் இழந்தமையைச் சொன்ன 5-மாலுக்கு வையமமும்
என் மகள் எனக்கு உதவாமல் போனாள்-என்னும் படி தன்னை விட்டுப் பிரிந்து போந்த படியைச் சொன்ன 6-உண்ணும் சோறும் –
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையல் –என்னும் படி அவனைக் கிட்டி அவன் சந்நிதியில் முடிய வேணும் என்று கொண்ட விவசாயம் சாதன கோடியிலே
புகுகிறதோ என்று மாதாவானவள் பயப்பட்டு அவனைக் குறித்தும் வினவ வந்தவர்களைக் குறித்தும் -என் பெண் வாடா நின்றாள் மெலியா நின்றாள்
என்றால் போலே முறைப்பட்டுக் கூப்பிடுகிற-7- கங்குலும் பகலுமாகிய -தாய் பேச்சான ஏழு திருவாய் மொழிகளிலும் உபாய அத்யாவசிய தோற்றும் –

தலைமகள் தூது விடும் திருவாய்மொழிகளான-1-அஞ்சிறை மட நாராய்-2 -வைகல் பூங்கழிவாய்-3–பொன்னுலகாளீரோ
-4–எங்கானல் அகம் கழிவாய்-என்கிற திருவாயமொழிகளிலும்
தன் ஆற்றாமையைச் சொன்ன-5- வாயும் திரை யுகளும்
அவன் விரும்பாவதவற்றை உபேக்ஷித்த -6- ஏறாளும் இறையோனும்
ஜகத் ஷோபம் பிறக்கும் படி மடல் எடுத்த -7- மாசறு சோதியும்
பிரேம வியாதியும் காள ராத்திரியும் கண்ணை மூடுகையாலே வேறு கதி இல்லாமையைச் சொன்ன -8-ஊரெல்லாம் துஞ்சியும்
அப்ராக்ருத விக்ரஹம் நெஞ்சின் உள்ளே பிரகாசிக்கும் படியைச் சொன்ன —9-எங்கனேயோ அன்னைமீரும்
அவனோடு கூடி வாளும் நாளைத்தேடின -10-மானேய் நோக்கும் —
அவன் விளம்பித்து வந்ததற்கு ஊடின -11–மின்னிடை மடவாரும்-
உசாத் துணை அற்று வருந்தின -12-வெள்ளைச் சரி சங்கும்
அவனுடைய உரு வெளித் தோற்றத்தில் பாதைப்படுவதை பேசின –13–ஏழையர் ஆவியும்
ஹிதம் சொல்லுகிற தாய்மார் தோழிமாரை அதிக்ரமித்த-14-நங்கள் வரிவளையும்
ஸ்மாரக பதார்த்த தர்சனத்தாலே தளர்ந்த —15-இன்னுயிர்ச் சேவலும்
மாலைப் பூசல் என்று பிரசித்தமான -16-மல்லிகை மருமறு தோளிணையும்
ஆகிற மகள் பேச்சான பதினேழு திருவாய் மொழிகளிலும் ப்ராப்ய த்வரை தெரியும் –

135-தோழிமார் அன்னையர் -தோழி என்றும் தாய் என்றும் சொல்கிறது -சம்பந்த ஞானத்தையும் உபாய அத்யவசாயத்தையும் ஆகில்
தோழிமார் அன்னையர் என்கிற பஹு வசனத்துக்கு கருத்து என் என்னில் -திருமந்திரத்தில் சொல்லுகிறபடியே இவ்வாத்மாவோடு ஈஸ்வரனுக்கு
ரக்ஷகத்வ சேஷித்வ காரணத்வ சரீரத்வாதி சம்பந்தங்கள் பலவும் உண்டாகையாலே அந்த சம்பந்தங்களை
விஷயீ கரித்த ஞானத்தினுடைய பேதத்தாலே -தோழிமார் என்கிற பஹு வசனம் உபபன்னம் –
உபாயபூதனான அவனுடைய வாத்சல்ய ஸ்வாமித்வ ஸுசீல்ய ஸுலப்ய ஞான சக்தி கிருபாதிகளைப் பற்றி வரும்
வியவசாய ரூபமானா ஞானத்தினுடைய பேதத்தாலே அன்னையர் என்கிற பஹு வசனம் உபபன்னம் –

136-அபிலாஷா சிந்தனாநு –தலைமகள் என்கிறது ப்ராப்ய த்வரை யாகில் -பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண் -என்கிற
பருவம் ஏழும் இங்கே கொள்ளும் படி என் என்னில் -அநு பாவ்யமான விஷயத்தை முதலில் காணும் போது பிறக்கும் ஆசை யாகிற -1-அபிலாஷையும்
கண்ட பின்பு அவ்விஷயத்தில் உண்டான -2-ஸ்மரணம் ஆகிற சிந்தனையும் –
அந்த ஸ்மரணத்தின் அனவரத பிரசாரம் ஆகிற -3-அநு ஸ்ம்ருதியும்
அவ்விஷயத்தை அவசியம் அனுபவித்தே நிற்க வேணும் என்னும் ஆசை யாகிற -4-இச்சையும் –
அவ்வாசை தான் வேறு ஒரு ரசத்தில் மாற்றாத படி முதிருகை யாகிற -5-ருசியும்
அவ்விஷயத்தில் சம்ச்லேஷ விஸ்லேஷன்களே ஸூ க துக்கங்கள் ஆகிற-6- பரபக்தியும்
அவ்விஷயத்தை பிரிந்தால் சத்தை அழிகை யாகிற -7-பரமபக்தியும் ஆகிற ஏழு அவஸ்தையிலும்
பேதை முதலான ஏழு பருவமும் தலை மகளான ப்ராப்ய த்வரைக்குக் கொள்ளலாம் –
பக்தி ரூபமான ப்ராப்ய த்வரைக்கு பக்தியினுடைய ஒவ்வொரு தசையும் ஒவ்வொரு பர்வமாகக் கொள்ளலாம் என்கை —

137-மயில் பிறை வில் அம்பு -இனி தலைமகளான அவஸ்தையில் வருணிக்கும் அவயவ விசேஷங்கள் எவை என்னில் -தோகை மா மயிலார்கள் -என்று
ஸ்திரீகளை மயிலாகச் சொல்லுகிறது -கூந்தலின் விஸ்தாரத்தைப் பற்றி யாகையாலே -அத்தால் இவ்வாத்மாவினுடைய ஞான விகாசம் சொல்லுகிறது –
பிறையுடை வாண் நுதல் -என்று நெற்றியைப் பிறையாகச் சொல்லுகையாலே அதில் வெண்மையை இட்டு ஸ்வாதந்தர்ய சேஷத்வங்கள் ஆகிற
தோஷ ஸ்பர்சம் அற்று இருக்கும் சுத்தியைச் சொல்லுகிறது
வில் புருவக் கொடி -என்று புருவத்தை வில்லாகச் சொல்லுகிறது வளைவைப் பற்றியாகையாலே பாஹ்ய அந்தகரணங்களை அடக்குகிற தாந்தியைச் சொல்லுகிறது –
அம்பன்ன கண்ணாள் -என்கையால் -கண்ணை லஷ்யத்தில் விழுகிற அம்பாகச் சொல்லுகையாலே -தாமரையாள் கேள்வன் ஒருவனையே
நோக்கும் உணர்வு என்று தனக்கு வகுத்த விஷயத்தைப் பற்றின ஞானத்தைச் சொல்லுகிறது –

-பவள வாயாள் -என்று அதரத்தை ப்ரவாளமாகச் சொல்லுகிறது சிவப்பை இட்டு
ஆகையால் அவ்விஷயத்தில் உண்டான அநு ராகத்தைச் சொல்லுகிறது –
செப்பன்ன மென் முலை -என்று பரிபக்குவமான முலையை செப்பாகச் சொல்லுகையாலே சேஷியானவன்
விரும்பி மேல் விழும்படி முதிர்ந்த பக்தியை சொல்லுகிறது
மின்னனைய நுண் மருங்குல் -என்று இடையை மின்னலாகச் சொல்லுகிறது -ஸூ ஷ்மத்தைப் பற்றி யாகையாலே கீழ் சொன்ன
ஞான அவஸ்தா விசேஷங்களுக்கு எல்லாம் ஆதாரமான ஆத்ம ஸ்வரூபத்தின் அணுத்துவத்தைச் சொல்லுகிறது –
தேர் அணங்கு அல்குல் -என்கிற நிதம்ப வை லக்ஷண்யத்தையும் போக்தாவுக்கு போக்யமாய் இருக்குமதாகையால்
சேஷிக்கு மிகவும் ரசாவஹமாம் படி இருக்கிற ஆத்மவஸ்துவின் போக்யதையைச் சொல்லுகிறது
அன்ன மென்னடையாள் என்று -ஹம்சத்தை ஒப்பிடுகிறது -நடை அழகுக்கு ஆகையால் சேஷியும் ததீயரும்
சிலாகிக்கும் படி ஸ்வரூப அநு ரூபமாக நடக்கையைச் சொல்லுகிறது
ஆக இப்படி மயில் பிறை இத்யாதி வர்ணனத்துக்கு உரிய அவயவ விசேஷங்களோடு கூடி அப்ராக்ருதமாக சொல்லப் பட்ட ரூபமாவது
ஞான விகாச சுத்தியாதிகளுக்கு ஆஸ்ரயமாய் ஆந்தரமாய் இருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தின் வகுப்பு –

138-சூழ்ச்சி அகற்றினீர் என்னும் -தோழிமார் பலர் கொண்டு போய் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் -என்று தாயானவள் தோழிமார் மேல் பழி இடுவது –
துலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு அமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசையின்றி அகற்றினீர் -என்று தோழியானவள் -தாய்மார் மேலே பழி இடுவதாகிற இதுவும் –
இணைக்கி எம்மை எம் தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை -என்று எம்பிரானே உன்னை
வெறுப்பான என் -என்னை உன் பக்கலில் அகப்படுத்தின தோழிமாராலே வந்தது அன்றோ இது என்பது –
எங்கனேயோ அன்னைமீர்காள் என்னை முனைவது நீர் என்று -என்று எனக்கு அவ்விஷயத்தைக் காட்டி இந்த ப்ராவண்யத்தை விளைத்த
தாய்மாரான நீங்கள் இப்போது என்னை வெறுப்பான என் என்பதாய் -கீழ்ச் சொன்ன பழி –
தோழி தாய்மார் ஆகிற இரண்டு தலைக்கும் ஒக்கும் என்று தலைமகள் மேல் எழுத்து இடுகையும்
முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் என்னும் படி தோழி தாயமாரோடு கூடி நின்று தலைமகளை சீறுவது
இவளை இனி நீர் அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடுமினோ என்று தாயமார்க்கு கார்ய உபதேசம் பண்ணுவாராய்ப் போலே
தோழி தலைமைகளுக்கு துணை செய்வதாய்க் கொண்டு இரண்டு தலைக்கும் ஒவ்வ்வொரு சமயத்திலே உதவி செய்கை யாகிற இருப்பதை மெய்க்காட்டும்
அன்னையரும் தோழியரும் நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால் –
என்று தாயமாரோடும் தோழிமாரோடும் தலைமைகளுக்கு உண்டான உடன்பாடும் -அதாவது -உறவு கொண்டாடுதல் –
உங்களோடு எங்கள் இடையில்லையே என்று தோழிமார் அன்னையர் என்ற இரண்டுதலையையும் உதறி விடுகையும்
இருந்து இருந்து அரவிந்த லோசனன் என்று என்றே நைந்து இரங்கும்-என்று தோழி கொண்டாடுவது
திருக் கோளூருக்கே நேர் இழை நடந்தாள்-என்று தாயார் கொண்டாடுகிற இதுவும் தோழி தாய் மகள் என்கிற அவஸ்த்யா த்ரயத்தின் யுடைய வியாபாரம் –

139-தாய் ஏதலர் -இந்த அவஸ்தத்ரயத்தில் தாய் என்றும் மகள் என்றும் சொல்லுகிற அவஸ்தைகளில்
ஸ்வ ஸ்வ சத்ருக்களும் பந்துக்களுமாக சொல்லுகிறது ஆரை என்னில் -தாயாரான உபாய அத்யவஸாய தசையில்
-ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் -என்று சத்ருக்களாகச் சொல்லுகிறது -சித்த உபாய நிஷ்டைக்கு பிரதிகூலரான சாத்திய உபாய நிஷ்டரை –
உற்றீர்கட்க்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான் என்று பந்துக்களாகச் சொல்லுகிறது -அநு கூலரான சித்த உபாய நிஷ்டரை –
மகளான ப்ராப்ய த்வார தசையில் -நம்முடை ஏதலர் முன்பு நாணி -என்று அந்தரங்க சத்ருக்களாகச் சொல்லுகிறது –
பகவத் ஏக பரராய் இருக்கச் செய்தே அவனுடைய உபாயத்வத்திலே ஊன்றி நின்று பதறுதல்
பாரதந்த்ரத்துக்கு சேராது என்று நிஷேதிக்கிற சித்த சாதன பரரை-
யாமுடைத்துணை என்னும் தோழிமார் என்று தன்னோடு ஒத்த ஸூ க துக்கங்களை யுடையவர்களாகச் சொல்லுகிறது
தன்னைப் போலே அவனுடைய உபேயத்வத்திலே உடன் பட்டு இருக்கிற சாத்திய பரரை –

140-நால் அயலார் அயல் சேரியார்–நாணி இனி யோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் -என்கிற நால் அயலார் என்கிறார்
கர்ம ஞான பக்தி பிரபதிக்கள் ஆகிற நாலு உபாயங்களிலும் ஊன்றி இருப்பவர் –
நானக் கரும் குழல் தோழிமீர்காள் அன்னையர்காள் அயல் சேரியீர்காள் -என்கிற அயல் சேரியார் ஆகிறார்
அர்ச்சாவதாரங்களில் ஊற்றம் அற்று தேவதாந்தர்யாமித்வத்தில் ஊன்றி இருப்பவர் –

141-கீழை மேலை வடக்கிலவை-பிரபத்தி பரரையும் அசலாகச் சொல்லலாமோ என்னில் -கீழை யகத்து தயிர் கடைய -என்கிற
பாசுரத்தில் சொல்லுகிற தயிர் கடைதல் என்கிற கிரியையாகிற கர்ம யோகமும் –
மேலையகத்து நங்காய் வந்து காண்மின்கள் -என்ற பாசுரத்தில் சொல்லுகிற காணுதல் என்னும் தர்சனம் ஆகிற ஞான யோகமும்
வடக்கில் அகம் புக்கிருந்து மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்றுருவம் செய்து வைத்த -என்கிற பாசுரத்தில் சொல்லுகிற
ஒரு கன்னிகையை விகாரப் படுத்துகை என்னும் அனுபவம் ஆகிற பக்தி யோகமும்
சித்த உபாய பரர்க்கு பாஹ்ய சத்ருவாய் -அவ்விஷயத்தில் ஸ்வ கத ஸ்வீகாரமானது அந்தரங்க சத்ருவாய் இருக்கும் –
ஆகையால் ஸ்வகத ஸ்வீகார ரூப பிரபத்தி பரரை அசலாகச் சொல்லக் குறை இல்லை என்கை –

142-ஊரார் நாட்டார் உலகர் —ஊரார் இகழிலும் –ஊரவர் கவ்வை -நாட்டாரோடு இயல் ஒழிந்து -எங்கள் கண் முதல்லே உலகர்கள் எல்லாம் –
இம்மட உலகர் -ஊரும் நாடும் உலகமும் -என்னும் இடங்களில் ஊரார் என்பது ஆத்மபிராப்தி காமரான கேவலரை –
-நாட்டார் என்பது -புத்ர பஸ்வ அன்னாதி ரூப இஹ லோக ஐஸ்வர்ய காமரை –
உலகர் என்பது ஸ்வர்க்காதி பரலோக ஐஸ்வர்ய காமரான ஸ்வ தந்த்ரரை –

143-இறுகல் இறப்புக்கும் -கைவல்ய நிஷ்டரை ஒரூராகச் சொல்லுவான் என் என்னில் -அபரிச்சின்னமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடைய
எம்பெருமானுடைய அனுபவம் போல் அல்லாமல் அணுவான ஆத்மாவின் அனுபவ மாத்திரமே யாகையாலே -இறுகல் இறப்பு -என்கிற
சங்கோச ரூபமான அந்த கைவல்ய மோக்ஷத்துக்கும் -ஜரா மரணாதிகளில் அந்வயம் ஒழிந்து அனுபவிக்கும் போது
ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களுக்கு ஆளாகிற பிரகிருதி மண்டலத்துக்கு மேற்பட்ட பரம ஆகாசத்தில் இருந்து அனுபவிக்க வேண்டுகையாலே
-யோகி நாம் அமிர்தம் ஸ் தானம் ஸ்வாதமா சந்தோஷ காரிணாம்-எகண்டு கொள்மின் என்கிறபடியே
பிரகிருதி சம்பந்தம் அற்றால் பின்பு போய் வசிக்கும் தேசம் சமானம் இ றே –

144-சிறு சீரார் சுளகுகள் -சிறு சுளகு மணலும் கொண்டு -என்றும் சீரார் சுளகில் நெல் பிடித்து எறியா-என்றும் சொல்லுகிற இடங்களில்
சிறு சுளகாவது-பெரிய மணலையும் சிறிய மணலையும் பிரிப்பதொரு வஸ்துவாகையாலே தேஹாத்ம விவேகத்துக்கு பரிகரமான பிரமாணத்தை சுளகு என்கிறது
சீரார் சுளகு ஆனது -இவனுக்கு இந்த வியாமோஹத்தை விளைவித்தவன் ஆர் என்று ஆராயும் அளவில் -சில நெல் பிடித்து எறியா -என்று தொடங்கி
பேர் ஆயிரம் உடையான் என்றாள்-என்று தேவதாந்த்ரங்கள் அன்று சர்வேஸ்வரன் என்று விவேகிக்கிற போதைக்கு உபகரணம் ஆகையால்
ஆத்மபரமாத்மா விவேகத்துக்கு பரிகரமான பிரமாணத்தை சீரார் சுளகு என்கிறது –

145-மாலை கங்குல் காலை –செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை -என்றும் செல்கதிர் மாலை -என்றும் -இத்யாதிகளில்
மாலை யாவது பதார்த்தங்களை உள்ளபடி விசதமாக பிரகாசிப்பியாமல் மாறாகத் தோற்றுவிக்கும் சந்த்யா காலம் ஆகையால்
அந்யதா பிரதிபத்திக்கு உறுப்பான ராஜஸ ஞானத்தை -மாலை என்கிறது –
சூழ்கின்ற கங்குல் இத்யாதிகளில் -கங்குல் என்றது பதார்த்தங்களில் ஒன்றும் தோற்றாதபடியாய்
ஏதேனும் தோற்றினாலும் விபரீத மாக தொடரும்படி இருக்கும் இருள் மூடின காலம் -விபரீத பிரதிபத்தி -தாமச ஞானத்தை கங்குல் என்கிறது
காலை எழுந்து இருந்து -இத்யாதிகளில் காலை யாவது -ப்ரஹ்ம முஹூர்த்தம் -சாத்விக ஞானத்தை சொல்லும்
பகல் கண்டேன் இத்யாதியில் -பகல் என்றது -பதார்த்தங்களை சம்சய விபர்யயம் இன்றியே விசதமாக பிரகாசிப்பிக்கும்
பகல் கண்டேன் -நாரணனைக் கண்டேன் -என்கிறபடி ஸமஸ்த குண விக்ரஹ விபூதிகளோடே கூடின எம்பெருமானை
நன்றாக சாஷாத் கரிக்கும் சுத்த சத்வ ஞானத்தை பகல் என்கிறது –

146-நிலா முற்றம் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்-என்கிற நிலா முற்றமாவது -பிரஞ்ஞா பிரசாதம் ஆருஹ்ய
அசோஸிய சோசகான் ஜனான் பூமி ஸ்தாநிவ சைலஸ்தோ ஹ்யஞ்ஞான் ப்ராஞ்ஞா பிரபஸ்யதி
என்கிறபடி உயர நின்று எல்லாவற்றையும் காண்கைக்கு உறுப்பாக சொல்லப் படுவதாய் அதிலே நின்று பார்த்த அளவிலே
காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள் -என்கையாலே
ததீய விஷயமே பரமப்ராப்யம் என்று பிறர்க்கும் விளங்கும்படி சரமாவதியான புருஷார்த்த ஞானம் –

147-கலை வளை அஹம் மம -கை வளையும் மேகலையும் காணேன் -கலையாளா வகலல்குல் கனவளையும் கையாளா-
இத்யாதிகளில் சொல்லுகிற -கலையும் வளை யுமாவன -பகவத் அனுபவத்துக்கு விரோதியான அகங்காரமும் மமகாரமும் –
கழல் வளை பூரிப்ப யாம் கண்டு -இத்யாதிகளில் த்யாஜ்யமான அஹங்கார மமகாரங்கள் அல்லாமல்
-சேஷோஹம்–என்னுடைய திருவரங்கர் -என்றால் போன்ற உத்தேச்ய சாத்விக அஹங்கார மமதைகளைச்
சொல்லுவதாக கொள்ளலாம் ஆகையால் அவ்விடத்துக்கு இதுவே ஸ்வாபதேசமாகக் குறையில்லை-

148-பட்டம் சூடகம் ஆவன -பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் -என்றும் -சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே –
இத்யாதியாகச் சொல்லுகிற ஆபரணங்கள் ஆவன -கிருஷ்ண அங்க்ரி துலஸீ மௌலி பட்டம் கிருஷ்ண அபிவந்தனம்-குண்டலே கிருஷ்ண சரித
ஸ்ரவணம் கங்கண அஞ்சலி -என்கிறபடியே
இவ்வாத்மாவை அங்கீ கரித்த ஆச்சார்யன் உண்டாக்குகிற சேஷத்வ ஞானாதிகள் ஆகிற ஆத்ம அலங்காரங்கள் –

149-பந்து கழல் பாவை –என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ -இத்யாதி பாசுரங்களில் சொல்லப்படுகிற
-பந்து கழல் பாவை -குழ மணன்-மரப்பாச்சி -யாழ் -மதியம் -அடிசில் சாந்தம் -பூண் அகில் சிற்றில் தூதை முதலான
விளையாட்டு கருவிகளாயும்-போக்யங்களாயும் -போக உபகரணங்களாயும்-எவை என்னில் –
அஜாமேகாம் லோஹித சுக்ல கிருஷ்ணம் -என்கிறபடியே செந்நூல் வெண்ணூல் கருநூல்-என்னலாம் படியான சத்வ ரஜஸ் தமஸ் குணங்களோடு
விசித்திரமான கர்ம ஸூ த்ரத்தாலே கட்டி ஈஸ்வரன் தன்னுடைய விளையாட்டுக்காக அஞ்ஞனாய் அசக்தனான இவன்
கர்ம அனுகுணமாக மேல் உலகங்களும் போவது மீளுவதாம் படி தன் சங்கல்பத்தால் ப்ரேரிக்க-தாழ விழுந்தும் உயர எழுந்தும் சக்ர
பிரமம் போலே சுழன்றும் -ஒரு கால் போனதில் பல தடவை போவது வருவதாய் உழன்றும் போருகிற ஆத்மாவோடு உண்டான
சம்பந்தத்தாலே விழுந்து எழுகை முதலான ஸ்வபாவங்களோடு கூடியதாய் -ஈஸ்வரன் தன்னுடைய போக விரோதி என்று விடுவிக்கும் அளவில் விடுபட்டும்
அல்ப ரசங்களுமாய் மதியம் என்று ஸ்வசம்பந்தத்தை இட்டுப் பார்க்கும் போது -சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற -என்கிறபடி த்யாஜ்யங்களாய் –
ததீயம் என்று தத் சம்பந்தத்தை த்தை காணும் போது -இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ -என்கிறபடி முழுவதும் உபாதேயமாமாவையாய்-
அன்னை முனைவதும் அன்றிலின் குரல் ஈர்வதும் -என்றும் பனிப்பியல்வாக யுடைய தண் வாடை
இக்காலம் இவ்வூர் பனிப்பியல்வு எல்லாம் தீர்ந்து எரி வீசும் -என்னும்
இப்பாசுரங்களில் படியே அவன் இல்லாமல் கண்ட போது பிரதிகூலங்களாகவும்
அவ்வாடை ஈதோ வந்து தண் என்றதே -என்று அவனோடே சேர்த்துக் கண்ட போது அனுகூலங்களாயும் சொல்லப் படுமவையான
பொங்கைம்புலனும் பொறி ஐந்தும் -என்கிற பாட்டில் சொல்லப்பட்ட போக்ய போக உபகரண போக ஸ்தான ஸமூஹம்-
மூன்றுவகை நூல்களாலே செய்யப் பட்ட பத்தாவது -குண த்ரய மயமாய் போக ஸ்தானமான தேஹம் –
அம்மானை என்கிற கழலாவது ஐந்தாய் இருப்பதால் போக உபகரணமான பஞ்ச இந்திரியங்கள் –
பாவை குழமன்கள்-லீலா உபகரண விசேஷங்கள்
யாழ் முதலிய ஏழும் போக்யங்களான சப்தாதி விஷயங்கள்
சிற்றிலாவது போக ஸ்தானம்
சிறு சோறு சமைப்பதற்கு உபகரணமான தூதை -இந்திரியங்கள் தவிர மற்ற போக உபகரணங்களுக்கு உப லக்ஷணம் -என்று கண்டு கொள்வது –

இரண்டாம் பிரகரணம் முற்றிற்று –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: