ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை- 100-120—தாத்பர்ய சாரம் -ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் —

87-அணைய வூரப் புனைய –ஆத்மாவுக்கு நிரூபகமான சேஷத்வத்துக்கு பாங்கான பிறவியே உத்க்ருஷ்ட ஜென்மம் என்பது விளக்கப் படுகிறது –
நித்ய விபூதியில் எம்பெருமான் -அணைவதற்கு -கண் வளர்ந்து அருளுகைக்குப் பாங்காய் இருக்கும் அரவணையாயும் –
அவன் பல காலும் மேல் கொண்டு ஊர -நடத்துகைக்கு வாஹனமான கருத்மானாயும்-
அவன் புனைந்து கொள்ள -ஆதரித்து சாத்துகைக்கு அர்ஹமான திருத் துழாயுமாய் இரா நின்றுள்ள –
திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை மஹாத்மாக்களான நித்ய ஸூ ரிகள் பகவத் கைங்கர்ய இச்சையால் பரிக்ரஹித்தார்கள் –
யமுனைக் கரையில் அவன் திருவடிகளால் மிதித்து ஏறின கடம்ப மரமாக ஆதல் -குருந்த மரமாக வாதல் ஆக வேணும் –
பிருந்தா வனத்தில் கண்ண பிரான் போன வழியை பின் தொடர்ந்த பெண்களுடைய பாத தூளியை வஹியா நின்றுள்ள
சிறு செடிகள் கொடிகள் ஒளஷதிகளில் ஏதேனும் ஒன்றாக வேணும் என்றும்
வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய்-மீனாய் -செண்பகமாய் -தம்பகமாய்–அன்னனைய பொற் குடவாம் —
-எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -என்று திருமலையோடு சம்பந்தம் உடைய
திர்யக் ஸ்தாவர ஜென்மங்களில் ஏதேனும் ஒன்றாக வேணும் என்றும் –
ஸ்ரீ சுக ப்ரஹ்ம மகரிஷி -உத்தவர் -ஸ்ரீ குலசேகர பெருமாள் ஆளவந்தார் முதலான முமுஷுக்கள் பிரார்த்தித்தார்கள் –
திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை வாசிக காயிக பாப பலமாக சாஸ்திரம் சொல்லா நின்ற போதிலும் இந்த ஜென்மங்களை
நித்ய ஸூ ரிகள் பகவத் விநியோக அர்ஹமாக ஸ்வ இச்சையால் ஏறிட்டுக் கொள்ளுவார்கள் என்றும்
அடிமைச் சுவடு அறிந்தவர்களான முமுஷுக்கள் தத் சம்பந்த ததீய சம்பந்தம் உள்ள திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை
பிரார்த்திப்பார்கள் என்றும் சொல்லுகையாலே அடிமைக்கு உரிய ஜென்மமே உத்க்ருஷ்டம் என்றது யாய்த்து-

88-சேஷத்வ பஹிர்ப்பூத -முமுஷுக்களான இவர்கள் பகவத் பாகவத சேஷத்வத்தில் விருப்பத்தால் திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை
பிரார்த்தித்தார்கள் ஆகிலும் உத்க்ருஷ்டமாக சாஸ்திர ஸித்தமான வர்ணத்தை இப்படி கழிப்பான் என் என்னில் –
ந தேஹம் ந பிராணான்-இத்யாதி ஸ்லோகத்தில் படியே சேஷத்வத்துக்கு புறம்பான போது ஞானானந்த மயத்வத்தாலே
சிலாக்யனான ஆத்மாவையும் சஹியாதவர்கள் -சேஷத்வத்துக்கு விரோதியான அஹங்காரத்துக்கு ஹேது என்னும் இடத்தால் த்யாஜ்யமாயும்
-கர்ம நிபந்தனம் ஆகையால் ஒவ்பாதிகமாயும் இருக்கிற வர்ணத்தை ஆதரிக்க மாட்டார்கள் இ றே-

89-இதில் ஒவ்பாதிகத்வம்-வர்ணம் ஒவ்பாதிகம் என்னும் இடம் எங்கனே தெரியும் என்னில் -ஷத்ரியனான விச்வாமித்ரன் தன்னை
ப்ரஹ்ம ரிஷியாக்கின வசிஷ்டனாலே யஜ்ஜோப வீதமே வாராம் படி சண்டாளன் ஆக்கப் பட்ட திரிசங்கு ராஜாவை அந்த வார் தானே
யாகத்துக்கு அங்கமான உறுப்புத் தோலாகக் கொண்டு தன்னுடைய தபோ பலத்தால் யாகம் செய்வித்து ஸ்வர்க்கம்
ஏற்றுவித்தான் என்கிற கதையால் வர்ணம் ஒவ்பாதிகம் என்பது தெரியும் –
இது ஒவ்பாதிகம் அன்றாகில் ஒரு ஷத்ரியன் ப்ரஹ்ம ரிஷியாவதும் மற்று ஒரு ஷத்ரியன் சண்டாளன் ஆவதும் கூடாது அன்றோ –

90-மா உருவில் கள்ள வேடம் -ப்ரமேயம் பிரமாணம் பிரமாதா
என்னும் வகுப்புக்களில் த்யாஜ்யங்கள் உண்டு -உபாதேயங்கள் உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது –
அப்ராக்ருதமாய் சிலாக்யமாய் இருந்துள்ள பகவத் அவதார விக்ரஹங்களுள் வைதிக ருசியைக் குலைப்பதற்காக
பரிக்ரஹித்த புத்த முனி ரூபமான விக்ரஹம் த்யாஜ்யம் –
பகவத் ஸ்வரூபாதிகளை உள்ளபடி பிரதிபாதிக்கையாலே கட்டளைப் பட்டு இருந்துள்ள வேதத்தில்
மலாம்சமான மனுஷ்ய ப்ரஸம்ஸா வாக்கியங்கள் த்யாஜ்யம்
எல்லா வர்ணங்களிலும் பகவத் பக்தர் அல்லாதார் எவரோ அவர்கள் ஸூத்ரர்கள் என்கையாலே அன்னவர்கள் த்யாஜ்யர்கள்
ஆக பிரமேய பிராமண பிரமாதாக்கள் யுடைய த்யாஜ்ய அம்சங்களை இங்கனே அறிவது
பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காடுகளில் வசிக்கும் இடைச் சாதியிலே கிருஷ்ணனுடைய பசு மேய்த்து வருகிற
போதுள்ள அலங்காரம் யுடைய விக்ரஹம் உபாதேயம் –
திராவிட பாஷா மயமான கிரந்தங்களில் பகவத் ப்ரதிபாதகமானவை உபாதேயம் –
ஸ்வபாகரில்–கீழ் ஜாதிகளில் -பகவத் பாத கமல பக்தி யாகிற தனம் உடையவர்கள் உபாதேயர்கள்-
ஆக ப்ரமேய பிராமண பிரமாதாக்களில் உபாதிய அம்சங்களை இங்கனே அறிவது -இவ்விபாகம் அறியுமவர்கள் ஏதேனும்
ஜென்ம விருத்தங்களை யுடையரே யாகிலும் நித்ய ஸூ ரி சமானர் என்னும் படி ஸ்லாகியராய் பரகதியை அடைவார்கள்
-கீழ் சொன்ன ப்ரமேயம் முதலிய மூன்றிலும் வாசி அறியாதவர்கள் உத்க்ருஷ்ட ஜன்மாக்களுமாய் சகல யோக்யதா பரி பூர்ணராய்
இருந்தார்களே யாகிலும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஜென்மாதிகளை இட்டு நிந்திப்பார்கள் ஆகில்
ஒரு காலும் கரை ஏற யோக்யதை இல்லாத கர்ம சண்டாளராய் கீழே விழுவார்கள் –

91-தமிழ் மா முனி திக்கு -ஆழ்வாருடைய வைபவ ஸூ சகமாக பிரமாணம் காட்டப் படுகிறது –
தக்ஷிணா திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மணா -என்று திராவிட சாஸ்திர பிரவர்த்தகரான அகஸ்தியன் இருக்கிற திக்கு எல்லார்க்கும் புகலிடம்
என்று சொன்ன ரிஷிகள் –
கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா க்வசித் க்வசித் மஹா பாக திராவிடேஷூ ச பூரீச -தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ
காவேரீ ச மஹா பாகா ப்ரதீஸீ ச மஹா நதீ யே பிபந்தி ஜலம் தாஸாம் மநுஜா மனு ஜேஸ்வர தேஷாம் நாராயணே பக்திர் பூயஸீ நிருபத்ரவா
-என்று ஞாதாக்கள் வந்து ஆவிர்பவிக்கும் ஸ்தல விசேஷங்களைச் சொல்லுகிற அளவில் முதன் முதலாக
-தாம்ர பர்ணீ நதீ யத்ர என்று இவர் ஆவிர்பாவ ஸ்தலத்தை சொல்லுகையாலே இவ்வாழ்வாருடைய ஆவிர்பாவமானது
த்ரிகாலஞ்ஞரான ஸ்ரீ சுகாதிகளாலே ஸூ சிப்பிக்கப் பட்டது -இவ்வாழ்வார் தாம் மயர்வற மதிநலம் அருள பெற்றவர் ஆகையால்
-கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று கலியன் உடையவர் போல்வார் அவதரித்து கலியுக ஸ்வபாவமும் கழியும் என்று
மேல் வருமதை நோக்கிச் சொன்னால் போலே யாய்த்து இதுவும் –

92-அத்ரி ஜமதக்கினி -ஆழ்வாருடைய அவதாரத்தில் பல வகையான உல்லே கங்கள் உண்டு என்கிறது -க்ருத யுகத்தில் அத்திரியும் ஜமதக்கினியுமாகிற
ப்ராஹ்மண உத்தமர்களுக்கு பிள்ளையாய்க் கொண்டு தத்தாத்ரேயனும் பரசுராமனுமாய் த்ரேதா யுகத்தில் ஷத்ரியனான தசரத சக்கரவர்த்திக்கு பிள்ளையாய்
-த்வாபர யுகத்தில் ராஜ்ய பிராப்தி இல்லாத யது குலத்தில் பிறந்து ஷத்ரியரில் தண்ணியரும் வைஸ்யப்ராயருமான வஸூ தேவர்க்கும்
பசு ரஷணத்தாலே சாஷாத் வைஸ்யரான ஸ்ரீ நந்த கோபருக்கும் பிள்ளையாய்
இப்படி க்ருதாதி யுக க்ரமத்தாலே ப்ராஹ்மணேதி வர்ண க்ரமேண அவதரித்து வந்த சர்வேஸ்வரன் நான்காவதான கலி யுகத்திலே
நான்காவது வருணத்திலே ஆழ்வாராக வந்து அவதரித்த படியோ என்றும்
வேதங்களை பரிஷ்கரிப்பது முதலான காரியங்களுக்காக வியாசாதிகள் பக்கல் ஆவேசித்தால் போலே திராவிட வேத ப்ரவர்த்த நார்த்தமாக
இவர் பக்கல் ஆவேசித்த படியோ -என்றும்
இவ்விபூதியை திருத்துக்கைக்காக ஈஸ்வர நியமனத்தாலே நித்ய ஸூ ரிகளிலே ஒருவர் வந்து அவதரித்த படியோ -அன்றிக்கே
முக்தரில் ஒருவர் வந்து அவதரித்த படியோ –
அல்லது ஸ்வேத த்வீப வாசிகளில் ஒருவர் வந்து அவதரித்த படியோ என்றும்
அல்லது கீழ் சொன்னவர்கள் ஒருவரும் அல்லாமல் சம்சாரிகளுக்குள் ஜன்மாந்தர சஹஸ்ர சஞ்சிதமான தம்முடைய ஸூ க்ருத பலமாகக் கொண்டு
இப்படி திருந்தினார் ஒருவரோ என்றும் –
அன்றிக்கே நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷத்தாலே நித்ய சம்சாரியை நித்ய ஸூ ரி சமமாக்க வல்ல அநந்த சாயியான சனாதன புண்யம்
முழு நோக்காக பலித்த படி திருந்தினார் ஒருவரோ என்றும் இப்படிப்பட்ட வகைகளால்
இவரை இன்னார் என்று நிச்சயிக்க மாட்டாமல் ஞானிகள் சங்கிப்பார்கள் –

93-அதுக்கு மூலம் யான் நீ –இவரை இப்படி எல்லாம் சங்கிக்கைக்கு ஹேது என் என்னில் புவியும் இரு விசும்பும் என்கிற பாட்டாலே –
விபூதிமானை யுடைய நான் பெரியவனே யன்றி விபூதியை யுடைய நீ பெரியவன் அல்ல -என்று ஈஸ்வரனோடே மறுதலிக்கும் படியான
வைபவத்தை யுடையராய் ஒன்றுக்கும் விகாரப் பட மாட்டாத சர்வேஸ்வரனும் தெகுடாடும் படி திருவாய் மொழி பாடுகிற நா வீறு யுடைமையாலே
உபய விபூதியிலும் உபமான ரஹிதராய் -சம்ச்லேஷ விஸ்லேஷன்கள் மாறி மாறி நடக்கையாலே சம்ச்லேஷக ரசராய் செல்லும் அங்குள்ளார் படியும் அல்லாமல்
உண்ணும் சோறு பேருக்கு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம் கண்ணன் என்று இருக்கையாலே அன்ன பானாதிகளாலே தரிக்கும் இங்குள்ளார் படியும் அல்லாமல்
இப்படி உபய விபூதியிலும் அடங்காமல் அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே -என்று வாசஸ் ஸ்தலம் தெரியாத படியால்
-தெய்வத்தினமோர் அனையீர்களாய்-என்னும் படி நித்ய ஸூ ரிகள் எல்லாம் கூடினாலும் தமக்கு ஒரு வகைக்கு ஒப்பு ஆகும் படியாய்
நித்ய ஸூரி பரிஷன் நிர்வாஹகனான எம்பெருமான் பரமபதத்தில் பண்ணும் வ்யாமோஹத்தை தம்மிடத்தில் ஒரு மடை செய்ய
மேன்மேலும் அவனது விஷயீ காரங்களை பெற்றமைக்கு கலவிக் குறிகள் உண்டாய்ச் செல்ல அவன் ஸுந்தர்ய சீலாதிகளை அனுசந்தித்து
உத்தரோத்தம் விளைகிற பாஹ்யாப்யந்த்ர ஹர்ஷத்தாலே சிதிலராவது -பர ப்ரஹ்ம சாஷாத்காரம் பிறந்தாரைப் போலே ஸ்திமிதராவதாய்
உண்டியே உடையே உகந்தோடி யானே என் தனதே என்ற அகங்கார மமக வஸ்யராய் இருக்கிற லௌகீகருடைய சம்பந்தம் அற்று
சடகோபர் ஆகையால் பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற சடரை ஸ்வ ஸூக்தி விசேஷங்களாலே துரத்தி
பராங்குசர் ஆகையால் அபிஜன வித்யாதன மதமத்தராய் திரியுமவர்களுக்கு மதம் ஒழிந்து தலை வணங்கும் படி உபதேச ரூபமான அங்குசம் இட்டு
சர்வேஸ்வரன் விஷயத்தில் எல்லார்க்கும் பக்தியும் யுண்டாக்கி நடத்தா நின்று கொண்டு தம் கடாக்ஷத்தில் அகப்பட்டவர்களின் சம்சாரத்துக்கு மிருத்யுவாய்
சாம்சாரிக துக்க ஹேதுவான பாபம் முதலியவை அருகிலும் வாராத படியாய் -பகவத் ருசி விரோதியான கலியுகம் போய் கேவல வைஷ்ணவ தர்மமே
நடக்குமதான கிருதயுகம் பிரவேசிக்கும் படியாய் இராப்பகல் வாசியும் அறியாமல் அகால கால்யமான தேசத்தில் போலே
பகவத் அனுபவ ஏக பரராய் இருந்த பிரபாவம் யாய்த்து கீழ் ச் சொன்ன சங்கைக்குக் காரணம் –

94-அதுக்கு ஹேது -கீழே விரிவாக விளக்கிய பிரபாவம் இவர்க்கு உண்டானமைக்கு அடி ஏது என்னில் -உலகில் கிருஷி செய்பவன் தான் பண்ணின க்ருஷிகள்
நிஷ்பலமாய் ஒழிந்தாலும் சோம்பிக் கை வாங்காமல் பின்னையும் க்ருஷியையே பண்ணுமா போலே –
எம்பெருமான் கல்பம் தோறும் ஸ்ருஷ்டிக்கச் செய்தே சபலமாகாது இருக்க அவ்வளவோடே கை வாங்காமல் மிகவும் ஒருப்பட்டு என்றேனும்
ஒரு நாள் பலிக்கும் என்று கிருஷியை உகந்து ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணி படைத்த அந்த ஜகத்திலே அநு பிரவேசித்து -அவற்றைச் சொல்லும்
வாசக சப்தம் தன்னளவில் பர்யவசிக்கும் படி பிரகாரியாய் நின்று அறிய வேண்டும் அர்த்தங்களை எல்லாம் அறிவிக்குமதான சாஸ்திரத்தை உபதேசித்து
திருப் பாற் கடலிலே திரு வனந்த ஆழ்வான் மேலே ஏறிப் படுக்கை வாய்ப்பாலே கண் வளர்ந்து அருளுகிறாப் போலே ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணி
-சிந்தித்த உபாயத்துக்குத் தகுதியாக என்றேனும் கட் கண்ணால் காணக் கூடாத தான் துக்க மயமான மனுஷ்ய பிறவியிலே ஆவிர்ப்பவித்து அருளி
அவர்களுடைய மாம்ச சஷூஸ்ஸூக்கு விஷயமாம் படி வந்து இப்படி அவதாராதிகளாலே எனக்கு
அடிமை யாவார் யுண்டோ என்று இதுவே கார்யமாகத் தேடித் திரிகிறவன்-சப் தாதி விஷயங்களில் துக்கப் பட்டு அழுந்துகிற
லோக ஸ்வபாவத்தை சவாசனமாகப் போக்குகைக்காக-
மிருக பஷிக்கள் பிடிப்பார் சஜாதீய புத்தியால் தன்னோடே இணைக்க வற்றான மிருக பஷிகளை பார்வையாக வைத்து பிடிப்பாரைப் போலே
பார்வை வைத்து இணக்குவதாக-அதுக்கு ஆவார் ஆர் என்று தேடி –
கழறலம் ஒன்றே நிலம் முழுதாயிற்றே -என்கிற பாசுரத்தில் படியே தன்னுடைய திருவடித் தாமரையும் ஞான தீபமும் மாறுபாடுருவின பரப்பு எங்கும்
ஓட்டிப் பார்த்த புண்டரீகாக்ஷனுடைய திருக் கண்களானவை ஓர் இடத்திலும் அதுக்கு ஆவாரைக் காணாமையாலே
-ஒரு விஷயத்தை அப்படிக்கு ஆக்குமதாக பார்க்கிற அளவிலே ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விஷயமாக எப்போதும் அன்போடு பார்த்துக் கொண்டே
கிடக்கையாலே தனக்கு பள்ள மடையான திசையிலே ஜாதி நியமமாதல் வர்ண நியமமாதல் அன்றிக்கே கர்ம அநு குணமாக ஏதேனும்
ஒரு சரீரத்தில் பிரவேசித்து அந்த சரீரத்தின் வழியே போய் ஜென்ம பரம்பரைகளிலே தோல் மாறி அவ்வனர்த்தத்திலே வெறுப்பு இன்றிக்கே
அதிலே அவகாஹித்து தரை காண ஒண்ணாத சம்சார சாகரத்தின் உள்ளே ஆழ்ந்து நடுங்குகிற இவ்வாழ்வார் மேல் பட
-இப்படி இவர் மேல் பட்ட இத்தை -நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -என்கிறபடியே ஒரு மடைப் படுத்தி -எங்கும் பக்க நோக்கு அறியான் -என்று
நாய்ச்சிமார் முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும் புரிந்து பார்க்க அறியான் என்னும் படி ஸ்வ இச்சையால்
நிர்ஹேதுகமாக பண்ணப் பெற்ற விசேஷ கடாக்ஷம் யாய்த்து கீழ்ச் சொன்ன ஆழ்வார் பிரபாவத்துக்கு ஹேது
இத்தால் அத்ரி ஜமதக்கினி இத்யாதி சங்கா ஸூ த்ரத்தில் சொன்ன சங்கைகள் எல்லாம் கிடக்க
அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவர் இவர் -என்று நிச்சிதம் யாயிற்று –

95-சிரமணீ விதுர -நித்ய சம்சாரியாய் போந்தார் ஒருவருக்கு பகவத் கடாக்ஷ மாத்திரத்தாலே சகல பாபங்களும் நீங்கி
இந்த பிரபாவம் எல்லாம் உண்டாகக் கூடுமோ என்னில் –
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் தானே சென்று விஷயீ கரித்த வேடுவிச்சியான சிரமணீ -தேவரீருடைய அழகிய திருக் கண் பார்வையாலே
என்னுடைய பிராப்தி பிரதிபந்தகங்கள் எல்லாம் போய்ப் பரி சுத்தை யானேன் -என்று சொல்லும் படியாகவும்
கண்ண பிரான் தானே சென்று கிரஹத்திலே புகுந்து விரும்பி அமுது செய்யப் பெற்ற ஸ்ரீ விதுரர் அழகிய திருக் கண்களின்
கடாக்ஷத்தாலே சகல சாம்சாரிக தோஷங்களும் போய் பரிசுத்தராம் படியாகவும்
பக்த விலோசனத்திலே ருஷி பத்னிகளில் ஒருத்தி -தத்ரைகா விக்ருதா பர்த்ரா பகவந்தம் யதாச்ருதம் ஹ்ருதோ பகூஹ்ய விஜஹவ் தேஹம் கர்ம நிபந்தனம் -என்று
கிருஷ்ண விஷய ப்ராவண்யத்தாலே அப்போதே சம்சாரத்தில் நின்றும் விடுபட்டவளாம் படி யாகவும் பண்ணின
சர்வேஸ்வரனுடைய கடாக்ஷமானது அனுபவ விநாஸ்யமான சகல பாபங்களும் ஒரு கணப் பொழுதிலே தீரும்படி செய்யத் தட்டுண்டோ –

96-கோ விருத்திக்கு -இப்படி ஆழ்வாரை எம்பெருமான் நிர்ஹேதுகமாக விசேஷ கடாக்ஷம் பண்ணினது ஏதுக்காக-
கடாக்ஷத்தின் தன்மை தான் எப்படிப் பட்டது -கடாக்ஷிக்கப் பெற்ற பின்பு இவர் எங்கனே யானார் -என்னில்
பசுக்களை ரஷிக்கக் கருதின கண்ண பிரானை ஒவ்வொரு பசுவையும் தனித்தனியே ரஷிப்பது என்றால் மஹா சிரமமாகும் என்று பார்த்து
சதுபாயமாக நெரிஞ்சிக் காட்டை பசும் புல் காடாம்படி சங்கல்பித்தால் போலே ஜகத்தினுடைய ஹிதார்த்தமாக
-எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்ரமனையே -என்று
இவர் பேசும் படி சர்வ பூதங்களின் பக்கலிலும் நடக்கிற தன்னுடைய ஸுஹார்த்த பலமான பிரசாதம் ஆகிற கிருபையை
இவர் ஒருவர் விஷயமாக ஒரு மடைப்படுத்தி அஞ்ஞான சக்திகளுக்கு எல்லையாய் இருக்கிற இவரைத் தன்னோடு ஒத்த
ஞான சக்திகளை யுடையராம் படி பண்ண இப்படி அவனாலே திருந்தின இவர் ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலவே
அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற என்கிறபடியே தம்மோடு அந்வயித்த இந்த லோகத்தாரை எல்லாம்
தம்மைப் போலே பகவத் ஏக பரராகப் பண்ணும் படி யானார் –

97-அதாவது மயர்வற -ஆழ்வாரை எம்பெருமான் தன்னோடு ஒத்த ஞான சக்திகளை யுடையராம் படி பண்ணுகை யாவது
மயர்வற மதிநலம் அருளுகை -அஞ்ஞானத்தை சவாசனமாகப் போக்கி பக்தி ரூபா பன்ன ஞானத்தைக் கொடுக்கை –

98-இருள் துயக்கு மயக்கு -மயர்வற மதிநலம் அருளுகையாவது -இன்னது என்கிறது -அடியோடு ஞானம் பிறவாமையும் –
-நிர்ணயமாக அன்றிக்கே சந்தேகமாக யுணர்வதும் -உள்ளபடி உணருகை அன்றிக்கே விபரீதமாக யுணர்வதும்
-உள்ளபடி உணர்ந்ததை மறந்து போகையும் ஆகிற நான்கு வகைப்பட்ட சங்கோச அவஸ்தையும் அற்று
மன பரிசுத்தியாலே விகசிதமாய் கொழுந்து விட்டு ப்ராப்த விஷயத்தை நோக்கி கிளருகிற ஞானத்தை பரமபக்தி தசா பர்யந்தம் ஆகும் படி பண்ணுகை
-இதற்குப் படிப்படியாக சில அவஸ்தா பேதங்கள் உண்டு -அவை -காதல் -அன்பு -வேட்க்கை -அவா -அதாவது
சங்கம் காமம் அநுராகம் ஸ்நேஹம் என்கிற அவஸ்தா பேதங்கள் –
-இப்படிப்பட்ட அவஸ்தைகளுக்குத் தகுதியான நாமங்களை யுடைத்தாகின்ற -மலர் மிசை எழுகிற ஞானத்தை க்ரமேண
பரமபக்தியின் தசையின் அளவாக முதிரப் பண்ணுகையே மயர்வற மதி நலம் அருளுகை –

99-ஜன்மாந்தர சகஸ்ர -இனி மேல் இவ்வாழ்வாருடைய பக்தியானது -உபாசகர்களுடைய பக்தி எண்ண -ப்ரபன்னர்கள் எம்பெருமானிடத்து பெறும்
கைங்கர்ய உபகரணமான பக்தி என்ன-இவ்விரண்டு பகுதிகளில் காட்டிலும்
விலக்ஷணம் என்பதை அறிவிக்கைக்காக முதலில் சாதன பக்தியின் நிலைமை காட்டப் படுகிறது –
அநேக ஜென்மங்களில் பகவத் ஆராதனை ரூபமாக அனுஷ்டித்த சத் கர்மங்களாலே ப்ரஹ்ம வித்துக்களாக ப்ரசித்தரானவர்களுடைய
வம்சங்களிலே பிறந்து பகவத் விஷயமான சப்தங்களை எழுதுவது வாசிப்பது பிறர் சொல்லக் கேட்பதாய் கொண்டு இந்த சாஸ்திர அப்யாஸ முகேன
பிறந்த தத்வ ஞானத்தை யுடையராய் நித்ய கர்ம அனுஷ்டான உபயுக்தமாய் இருந்துள்ள காய சுத்த்யர்த்தமான ஸ்நானத்தைப் பண்ணி
சந்த்யா வந்தன காயத்ரீ ஜபம் பஞ்ச மஹா யஜ்ஜம் ஷாட் கர்மங்கள் என்று இப்படி
இருந்துள்ள நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானங்களால் பரி பூர்ணராய் நித்ய கர்மாதிகளை குறைவற அனுஷ்டிக்கையாலே
தபஸிலே யோக்யதை பிறந்தவாறே காய சோஷண அர்த்தமாக ஆகாரத்தைக் குறைத்து பிராண தாரணத்துக்கு
தக்க அளவாக்கி உஷ்ண காலங்களில் மலை யுச்சியிலும் பஞ்சாக்கினி மத்யத்திலும் நின்று சீத காலங்களில் குளங்களில் முழுகிக் கிடந்து
ஜீரண பர்ண பலாச நராயும் இப்படி தபஸ் சர்யையாலே உடம்பை உலர்த்தி கீழ் சொன்ன கர்ம அனுஷ்டானத்தாலே துக்க ஹேதுவான
பாபங்களைப் போக்கி -இப்படி பிரதிபந்தக பாப நிவ்ருத்தியாலே மனஸ் சுத்தி ஹேதுவான விவேகாதிகளும்
சமதமாதிகளும் அபிவ்ருத்தமாக -காம க்ரோத லோப மோஹ மத மாத்சர்யா அஞ்ஞான அஸூயைகளாகிற ஏட்டையும் போக்கி
அஹிம்சை முதலான அஷ்ட வித புஷ்ப்பங்களையும் இட்டு -சாஷ்டாங்க பிரமாணம் பண்ணி புஷ் பாங்க ராகாதிகளான
சமாராதன உபகரணங்களை சம்பாதித்திக் கொண்டு பகவத் சமாராதனத்தை செய்து பரிசுத்த அந்த கரணராய்
விஷயாந்தர வனங்களில் ஓடா நிற்கிற மிகக் கொடிய இந்திரியங்கள் ஆகிற மத்த கஜத்தை ஞானம் ஆகிற அங்குசத்தாலே வசப்படுத்தி
விஷய போகங்களைக் குறைத்து பகவத் விஷய ப்ரவணமாக்கி இந்திரிய மார்க்கத்தைத் தடுத்தி
இப்படி ஜிதேந்த்ரியராய் அவித்யா அஸ்மிதா ராக த்வேஷா அபி நிவேச ரூப கிலேச பஞ்சக சஞ்சாரத்தை தவிர்த்து
ஸ்வயம் பிரகாசமான ஆத்ம ஸ்வரூபத்தை சாஸ்திர யுக்த ப்ரக்ரியையாலே சாஷாத் கரித்து
யோகமாகிற உபாயத்தாலே கிட்டி ஆன்ருசம்சய ரூப தர்மத்தை யுடையவர்களான தார்மிக அக்ரேஸருடைய ஹிருதயத்திலே பொருந்தி
இரா நின்றுள்ள பெறுதற்கு அரிய அத்யுஜ்வல விக்ரஹம் யுடையவனாய் இருக்கும் சர்வேஸ்வரனை -கண்கள் சிவந்து -என்ற பாட்டிலே
சொல்லுகிறபடியே ஹிருதய கமலத்தில் த்யானம் பண்ணி அந்த தியானத்துக்கு விச்சேதமும் விஸ்ம்ருதியும் அற்று அநுஸ்யூதமாக நடக்கும்த்ரு
வ அநு ஸ்ம்ருதியுமாய் -ஸ்வப்னத்தில் காட்டிலும் அதிசயிதமாக ப்ரத்யக்ஷ சாமானகாரமாய் -அப்படி தரிசன சமமான அது தான்
அங்கநா பரிஷ்வங்கம் போலே ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே மிகவும் பிரியமாய் பரமபதத்தில் அனுபவத்தையும் உபேக்ஷிக்கும் படி
தானே பரம பிரயோஜனமாம் படி ரசிக்கையாலே அநந்ய பிரயோஜனமாய் -வேதனம் என்றும் உபாசனம் என்றும் சேவை என்றும்
த்யானம் என்றும் இத்யாதி சப்தங்களால் சொல்லப் படுகிற பக்தியானது கர்ம ஞான சம்ஸ்க்ருத அந்த கரணனுக்கு பிறக்குமது ஓன்று
ஆகையால் சேதன சாத்யமாய் பகவத் ப்ரசாதன உபாயதயா தத் பிராப்தி சாதனமான பக்தியாக வேதாந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது
இத்தால் கர்ம ஞான சாத்யையாய் பகவத் பிராப்தி சாதனமான உபாசகருடைய பக்தியின் வேஷம் காட்டப் பட்டது –
பிரபன்னர் எம்பெருமான் இடத்தில் பிரார்த்தித்து பெருகிது கைங்கர்ய உபகரண பக்தி விசேஷம் மேல் பிரதிபாதிக்கப் படுகிறது –

100-ஸ்வீக்ருத சித்த சாதனர் -பிரபன்னர்களுடைய பக்தி ஸ்வரூபம் நிரூபிக்கப் படுகிறது
-த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்று சித்த உபாய ஸ்வீகாரம் பண்ணின பிரபன்னர் –
போஜனத்துக்கு பசி போலே இந்த பக்தி கைங்கர்யத்துக்கு உபகரணம் ஆகையால் ப்ராப்யமான கைங்கர்யம் போலே இதுவும் நமக்கு பிராப்யம் என்று கருதி –
பகவத் பக்திம் அபி ப்ரயச்ச மே -இத்யாதிகளில் படியே இந்த பக்தியை பகவான் பக்கலிலே பிரார்த்திக்க சரீர
வியோகத்துக்கு பிறகு பகவத் பிராப்தி பண்ணுவதற்கு முன்னே சித்திக்கும் –

101-இது உபயமும் இன்றிக்கே –முன் சொல்லப் பட்ட ஆழ்வாருடைய பக்தியானது -உபாய பக்தியும் பல பக்தியும் ஆகிற
இவ்விரண்டு பக்தியும் இல்லாமல் -திருத் துழாய்க்கு பரிமளம் போலே கூடப் பிறந்து விட ஒண்ணாததாய் -மநோ ரதப்படி அனுபவிக்கப் பெறாத போது
போஜனம் பெறாத தசையில் பசி போலே கஷ்டம் என்பது வியாதி என்பதாம் படி வெறுப்பை விளைத்து
அசோஷியமான ஆத்ம வஸ்துவை சோஷிப்பித்து அபிநிவேச சாகரத்தில் விழுந்து துவளும்படி பண்ணி
இதர உபாய பரித்யாக பூர்வகமாக அவனே உபாயம் என்று அறுதி இட்டு இருக்கும் இவரை
குதிரியாய் மடலூர்துமே என்னும்படி த்யஜித்த உபாயத்திலே மூட்டுகையாலே தியாக நிஷ்டாஹானியையும்
உனபாதம் சேர்ந்தேனே-அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று அடிக்கடி பிரபத்தி பண்ணும் படி ஆக்குகையாலே
ஸக்ருத் கர்தவ்யமான சுவீகாரத்தில் நிஷ்டாஹானியையும் உண்டாக்கி
சத்தைக்கும் போகத்துக்கும் விருத்திக்கும் உபகாரணமாய் இருபத்தொன்று
ஆக -இவருடைய பக்தி சாதித்துப் பெற்றதும் அன்று -அபேக்ஷித்துப் பெற்றதும் அன்று -சஹஜையாய் இருப்பது ஓன்று என்றதாய்த்து –

102-இடகிலேன் நோன்பு -இங்கனம் இன்றிக்கே இவருடைய பரம பக்தி -கர்ம ஞான பகுதிகள் ஆகிற சாதன த்ரயத்தையும்
இந்த ஜென்மத்தில் அனுஷ்டிக்கையாதல்-பூர்வ ஜென்மங்களில் ஆதல் -அப்யாஸத்தாலே யாதல் -உண்டானதாய் இருக்கக் கூடாதோ என்னில்
இடகிலேன் என்று அட்டகில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன் கடவனாகி காலம் தோறும் போப் பறித்து ஏத்த கில்லேன் -என்றும்
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -என்றும் இத்யாதி பாசுரங்களில் கர்ம ஞான பக்தி யோகங்கள் ஒன்றிலும்
தமக்கு நிவேசம் இல்லை என்னும் இடத்தை ஆழ்வார் தாமே அருளிச் செய்கையாலே வர்த்தமான ஜென்மத்தில்
கர்ம ஞான பக்திகள் ஆகிற சாதன த்ரய அனுஷ்டானத்தால் உண்டானது அல்ல
கிற்பன் கில்லேன் என்றிலேன் முன நாளால் -என்றும் -தெரிந்து உணர்ந்து ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா இருந்து
ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -என்றும் அருளிச் செய்கையாலே பூர்வ ஜென்மங்களில் அப்யாஸத்தால் உண்டானதும் அல்ல –

103-இப்பிறப்பே சில நாளில் -ஆழ்வாருடைய பக்தியின் வை லக்ஷண்யம் -இன்னமும்
-குறிக்கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும் கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்-என்று
யம நியாமாத்யவஹிதராய் கொண்டு சம்பாதிக்க வேண்டிய வேதன தியாக உபாஸனாத்தியவஸ்தா விசேஷங்களான ஞானங்களாலே
அநேக கல்பம் கூடி ஸ்ரவணமாய் மனனமாய் த்ருவ அநு ஸ்ம்ருதியாய் வரக் கடவதான பக்தி யோகம் ஆகிற தபஸினுடைய பலத்தை
ஒரு யத்னமும் இல்லாமல் சத் உபாய பூதனான அவ் வெம்பெருமானாலே பீஜே ஜென்மத்தில் ஸ்வல்ப காலத்திலே பெற்றேன் என்று
ஆழ்வார் தாமே ஸ்பஷ்டமாக அருளிச் செய்து வைக்கையாலே வர்த்தமான ஜென்மத்தில் சாதன த்ரய அனுஷ்டானத்தால் உண்டானது என்றும்
பூர்வ ஜென்ம அப்யாஸத்தால் உண்டானது என்றும் சொல்லுகிற இரண்டு வாதமும் கழியுண்டாய்த்து –

104-பெறும் பாழில் ஷேத்ரஞ்ஞன் –ஆனால் இவர்க்கு இந்த பக்தி உண்டாகைக்கு ஹேது என் என்னில் -பலனை அனுபவிப்பவனான
எம்பெருமானுடைய கிருஷி பலித்த படி இது என்பது ஷேத்ரமும் பயிர் செய்பவனும் பயிரும் அதன் பலனுமாக ரூபித்திக் கூறப்படுகிறது –
அளவிட முடியாததாய் போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளலாம் நிலமான பிரகிருதி தத்துவத்தில் கலியுகம் ஆகிற வன்னியன்
இவனை நலியுங்கோள் என்று ஏவ மனசைத் தங்களுக்கு சேஷமாக ஆளுகிற மிடுக்கரான இந்திரியங்கள் ஆகிற குறும்பர்
இச் சேதனனுக்கு நியாமகராய்க் கொண்டு தேஹத்திலே குடி புகுந்து தங்களுக்கு பிரதானமான மனசையும் தங்கள் நினைத்த வழியே
நடக்கும் படியாகப் பண்ணி விஷயங்களில் படிந்து புஜிக்கிற போகத்திலே ஒரு காலும் திருப்தி பெறாதே -இவற்றாலே வந்த நலிவை
ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாத படி விஷய போகங்களை புஜிக்க வேணும் என்று இவனைச் சிறை செய்து தனக்கு
அபீஷ்டமானவற்றை தா வென்று துகைத்து இழுத்து சரீரமாகிய செக்கிலே இட்டுச் சுழற்றி க்ரூரமாய் கரை ஏற ஒண்ணாத படியாய்
இருக்கும் விஷயங்கள் ஆகிற படு குழியிலே தள்ளி வெகுவிதமாகத் தண்டித்து அர்த்த காமங்கள் இரண்டையும்
கடன் செலுத்திக் கொள்ளுவாரைப் போலே செலுத்திக் கொள்ள -பக்த சேதனனுடைய பக்திக்கு விளை நிலமான மனசானது
ஸூ க்ருத கந்தம் அற்று பாழ் பட்ட வாறே -இந்திரிய வஸ்யத்தையாலே இப்படி பாழ் பட்ட மனசை தன் வசம் ஆக்குவதற்காக
இந்திரியங்கள் ஆகிற ஐவர் ஷயித்து முடிந்து போம்படி ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்தான் –
கிருபையாகிற வாளை உருவி பாபம் ஆகிற தூறுகளை நிர்மூலம் ஆக்குவித்து உருமாய்ந்து போம்படி தக்தமாக்கினான் –
பகவத் ஆபி முக்கியம் பிறந்த அளவிலே இவன் பாகவதன் ஆனான் என்று சம்சாரிகள் சொல்லும் படி பழி மொழியை பக்தி யாகிற பயிர் வளருவதற்கு
எருவாக இட்டு ஞானம் ஆகிற அம்ருத நதியை வாயளவாகத் தலைக்கு மேலே போம்படி பெருகப் பண்ணினான் –
மனசானது ஆர்த்தமாய் பதம் செய்து வாய்த்தவாறே அந்நெஞ்சிலே சங்கம் ஆகிற நெல்லை விரைத்து-தத் ஏக பரதந்த்ரமாய் -தத் ஏக போகமாய்
வளருகிற இப்பயிரிலே கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தியை விளைக்கும் அஹங்கார மமகாரங்கள் ஆகிற களையையும்
ஊசி வேரோடு பறித்துப் பொகட்டான் -களை பரித்தாலும் பட்டி புகாமல் நோக்கினால் அன்றிப் பயிர் தலைப் பெற்றுச் செல்லாதாகையாலே
பக்தியாகிற இப்பயிருக்கு பட்டியான இந்திரியங்கள் ஆகிற சேக்களினுடைய ஸ்வச்சந்த சஞ்சார ஹேதுவான கர்வத்தைப் போக்கினான்
பக்தியாகிற பயிர் விளைந்து கிடக்கிற நெஞ்சு அந்யார்ஹம் ஆகாத படி
பள்ளி யறை குறிக் கொள்மின் -என்கிறபடியே காவல் அடைத்து காளமேக நிபாஸ்யமான வடிவழகை வர்ஷித்து வளர்க்கையாலே
அந்த பக்தியாகிற பயிர் கடல் போலே அபரிச்சேத்யமாம் படி பலித்து பக்தி பரிபாக நிபந்தமான ஆர்த்தியால் வரும் பாரவஸ்யம் பிறந்த வாறே
ஒரு நாள் புஜித்து விடுகை யன்றிக்கே நாள் தோறும் புஜியா நிற்கச் செய்தேயும் அதிருப்தனாய் இத்தலையில்
ஸ்வல்பம் சேஷித்துக் கிடக்கிறது என்று நிரூபித்து அறிய வேண்டும்படியாக
அருகே இருந்த பிராட்டிமார் முதலானோரும் அறிய மாட்டாதபடி பெரும் பசியரானவர்கள் விளைந்த நெல்லைச் சேர அறுத்துக்
கொண்டு போய் புஜிக்கப் பற்றாமல் முற்றின அளவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு போய் புஜிக்குமா போலே
முக்தன் ஆனவாறே பின்பு பூர்ணமாக புஜிப்போம் என்று இருக்க மாட்டாத தன் அபி நிவேசத்தாலே இச் சரீரத்தோடு இருக்கச் செய்தே
விளைந்த பரிபாக அநு குணமாக மனஸ் ஸூக்குத் திருப்தி பிறவாமல் மேன்மேலும் விரும்பி புஜித்து பரிபக்வமான இவ்வஸ்து
காலக் கழிவாலே தரைப் பட்டு மங்கிப் போகாமல் பிராப்தி விரோதமான கர்மங்களை அறுத்தான் –
அறுத்த நெல் கதிரை தடியால் அடித்து பதரும் மணியும் பிரிக்குமா போலே -அருள் என்னும் தண்டால் அடித்து -என்கிறபடியே –
தன்னுடைய கிருபை யாகிற த்ருடமான சாதனத்தாலே பதர் போன்ற ஆத்ம அனுபவத்தில் ருசியை அறுத்தான் –
அந்த நெல்லில் உமியை விடுவிக்குமா போலே ஆத்மாவைப் பொதிந்து கிடக்கிற ஆதி வியாதி ஷட்பாவ விகாரங்களுக்கு காரணமான ஸ்தூல தேகத்தை விடுவித்தான் –
பின்பு அரிசியைத் தவிடு ஏறக் கழுவுமா போலே சம்சரண ஹேதுவாய்ப் போந்த ஸூ ஷ்ம சரீரத்தை விரஜா ஜல ஸ்பர்சத்தாலே
வாசனா ரேணுக்களோடே போக்கி -ஸ்தூல ஸூஷ்ம ரூபையான ப்ரக்ருதியில் நின்றும் விவேகித்து வாங்கின இவ்வாத்ம வஸ்துவை
அமானவ கர ஸ்பர்சத்தாலே அப்ராக்ருத தேஹத்திலே பிரவேசிப்பித்து ஸத்கார ஸாமக்ரியோடு எதிரே வருகிற அப்சரஸ்ஸூக்களைக் கொண்டு
ஞானாதி ஷட் குணங்கள் ஆகிற அறு சுவைகளோடே அஹம் அன்னம் -என்கிற அன்னமாம் படி பக்குவம் ஆக்கி
நித்ய ஸூ ரிகளுக்கு பரம போக்யமாம் படி யானவாறே-இவ்வாத்ம வஸ்துவை முழுக்க புஜிப்பதாக-இவ்வாத்ம வஸ்துவுக்கு ருசி பிறப்பதற்கு முன்னே
பிடித்தும் பாரித்து இவன் கர்க்ஷகன் என்று தோற்றும் படி க்ருஷி சாதனத்தை கையிலே கொண்டு இவ்வாத்ம உஜ்ஜீவனத்துக்கு
மிகவும் யதனியா நிற்கும் ஸ்வபாவனாய் ஸ்வ விஷய பக்தியை விளைக்கைக்கு கிருஷி பண்ணித் திரியும் சர்வேஸ்வரனுடைய ‘
கிருஷியின் பலம் இ றே இவ்வாழ்வாருக்கு உண்டான இந்த பக்தி –
இத்தால் ஆழ்வாருடைய பக்தியின் உத்பத்திற்கு காரணம் பகவானுடைய கிருஷி என்றதாயிற்று –

105-கோசல கோகுல –இப்படி இத்தலையில் ஒரு ஸூ க்ருதமும் இல்லாமல் இருக்க ஈஸ்வரனுடைய கிருஷி பலிக்கக் கண்ட இடம் உண்டோ என்றால்
திரு வயோத்தி கோசல தேச வர்த்திகளான சராசரங்கள் எல்லாம் -புற் பா முதலாக புல் எறும்பாதி ஓன்று இன்றியே –
-நற் பாலுக்கு உய்த்தனன் -என்னும்படி நிர்ஹேதுகமாக பகவத் விஷயீ காரம் பெற்ற படியும்
கோகுலத்தில் உண்டான சராசரங்கள் எல்லாம் அவன் ஒருவன் குழலூதின போது நிர்ஹேதுக பகவத் ப்ராவண்ய பரவசங்களான
படியைக் கண்டு -நங்கைமீர்காள் இஃதோர் அற்புதம் கேளீர் -என்று விசேஷஞ்ஞர் ஈடுபட்டுச் சொல்லும் படியும் கண்டோம் அன்றோ
இத்தால் எம்பெருமான் நிர்ஹேதுக விஷயீ காரம் இப்படிப் பலிக்கக் காண்கையாலே ஆழ்வாருடைய பக்தியும்
அவனது நிர்ஹேதுக கிருஷி பலம் என்னத் தட்டில்லை என்றதாயிற்று –

106-பட்டத்துக்கு உரிய யானையும் -ஆனால் இப்படி நிர்ஹேதுகமாக விஷயீ கரிக்கும் அளவில் எல்லாரையும் விஷயீ கரிக்கலாய் இருக்க
இங்கனே இவர் ஒருவரை விஷயீ கரிக்கைக்கு ஹேது என் என்னில் -அராஜகமான தேசத்தில் பட்டத்துக்கு உரிய யானையைக் கண்ணைக் கட்டி விட்டால்
அவ்வானையால் எடுக்கப் பட்ட ஒருவன் ராஜாவாகும் போது -அல்லாதார் எல்லாம் கிடைக்க இவனை இப்படி எடுக்கைக்கு அடி என்
என்று ஆராயாதாப் போலேவும் ராஜாவானவன் தன் செருக்கால் ஒருத்தியைத் தனக்கு மஹிஷியாகப் பரிக்ரஹிக்கும் அளவில்
இப்படிக்கு ஒத்த ஸ்த்ரீகள் பலரும் உண்டாய் இருக்க இவளை இவன் இப்படி பரிக்ரஹிக்கைக்கு அடி என் என்று ஆராயாதாப் போலே யும் –
நிரங்குச ஸ்வதந்த்ரனான சர்வேஸ்வரன் ஸ்வ அதீனமுமாய் ஸ்வார்த்தமுமான ஆத்ம வஸ்துக்களிலே ஓர் ஒன்றை ஸ்வ இச்சையால்
தன் விநியோகத்துக்கு உரித்தாம் படி விஷயீ கரித்தால் அதுக்கு ஹேது ஆராயப்படாது –

107-முந்நீர் வாழ்ந்தார் சூட்டும் -இப்படி சொல்லுவான் என் -இவர் தமக்கு ஞானத்தை ஸூ க்ருதங்கள்அன்றோ இல்லை என்றது –
யாதிருச்சிகாதி அஞ்ஞாத ஸூக்ருதங்கள் அடியாக அங்கீ கரித்தான் ஆகாதோ என்னில்
முந்நீர் ஞாலம் படைத்த –வாழ்ந்தார்கள் வாழ்ந்தது -சூட்டு நன் மாலைகள் -கோவை வாயாள் பொருட்டு -ஆழி எழ -இத்யாதிகளால் –
தமது வ்ருத்தாந்தங்களையும் பிறரது விருத்தாந்தங்களையும் சாஷாத் கரித்து அருளிச் செய்கிற ஆழ்வாருக்கு அஞ்ஞாதமான அம்சம் ஒன்றும் இல்லாமையால்
தம்மை ஈஸ்வரன் அங்கீ கரிக்கைக்கு அடியான யாதிருச்சிகாதி ஸூ க்ருதங்கள் உண்டாகில் மற்றவை போலே அவையும் பிரகாசிக்கும் –
பிரகாசித்தால் ஆழ்வார் அருளிச் செய்வர்-அப்படி அருளிச் செய்யக் காணாமையாலும் கேவல நிர்ஹேதுக விஷயீ கார பிரகாசக
ஸ்ரீ ஸூ க்திகள் பலவும் அருளிச் செய்தமை காண்கையாலும் அவையும் இவர்க்கு இல்லை –

108-செய்த நன்றி தேடி –இப்படி அங்கீ கார ஹேதுவாய் இருபத்தொரு ஸூ க்ருதம் இல்லையே யாகிலும் -அத்வேஷமும் ஆபி முக்கியமும்
ஸூ க்ருதம் அடியாக ஆனாலோ என்னில் -வாட்டாற்றார்க்கு என் நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே -என்று
எம்பெருமான் தம்மை விஷயீ கரிக்கைக்கு உடலாகத் தாம் செய்த ஸூ க்ருதம் ஏதேனும் உண்டோ என்று தேடிக் காணாமல்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவித் தொழும் மனமே தந்தாய் -என்று தீ மனம் போக்கை யாகிற அத்வேஷமும்
மருவித் தொழும் மனம் உண்டாகை யாகிற ஆபி முக்கியமும் -இரண்டுமே அவனாலே உண்டாய்த்து என்று
தாமே நிஷ்கரிஷ்க்கையாலே அத்வேஷ ஆபி முக்யங்களும் சாதகர்மத்தாலே வந்தவை அன்று –

109-எண்ணிலும் வரும் –ஆனால் பரம பக்திக்கு முகம் காட்டுமா போலே என்னில் பரி கணனைக்கும் முகம் காட்டும் என்றாரே இவர் தாம் –
அந்த பரி கணநை தான் இவருக்கு உண்டானாலோ என்னில் –எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்-என்றது
எம்பெருமானுடைய குண பிரகர்ஷத்தை சொன்ன அத்தனையே யன்றோ -அந்த பரிகணநைக்கு தம்மோடு அந்வயம் இல்லாமை கண்டு
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று -ஓர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு -என்று தம்
திரு உள்ளத்துக்கு மூதலிக்கையாலே அதுவும் இவர்க்கு இல்லை –

110-மதியால் இசைந்தோம் என்னும் -அது தான் வேண்டுமோ -தமக்கு அனுமதி இச்சைகள் இருப்பதாக அருளிச் செய்தார் –
அவைதான் ஹேது வானாலோ என்னில்
வைத்தேன் மதியால் எனது உள்ளத்தகத்தே-என்றும் -யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் என்றும்
தமக்கு இருப்பதாகச் சொன்ன அநுமதியும் இசைவும் ஈஸ்வர கிருஷி பலம் என்னும் இடம்
-யானொட்டி என்னுள் கிருத்துவம் என்று இலன்-என்றும் –
இசைவித்து என்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானை -என்றும் -என் இசைவினை -என்றும் அருளிச் செய்யும்
-ஸ்வ ஸூக்திகளாலே விளங்கும் –

111-மாதவன் மலை நீர் -இவை ஒன்றும் இல்லை யாகிலும் மாதவன் என்றும் -திருமால் இரும் சோலை என்றும் சொன்ன யுக்தி மாத்ரத்தை
பற்றாசாகக் கொண்டு எம்பெருமான் தம்மை விஷயீ கரித்தானாக ஆழ்வார் அருளிச் செய்கையாலே அவை தான் உண்டே என்னில் –
மாதவன் என்றதே -கொண்டு என்னை இனி இப்பால் பட்டது -யாதவங்களும் சேர் கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து -என்றும் –
திருமால் இரும் சோலை மலை என்றேன் -திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்று சொல்லும் படி
மாதவன் என்று நம் பேரைச் சொன்னான் -திருமால் இரும் சோலை மலை என்று நம் ஊரைச் சொன்னான் -என்று ஏறிடுகிறவை
ஈஸ்வரன் உகந்த திரு நாமம் என்றும் -அவன் உகந்து வர்த்திக்கிற திருமலை என்றும் சொன்னவை அல்ல -பேருக்கும் மலைக்கும் வியாவ்ருத்தி சொன்ன மாத்திரமே —
மற்றும் இவையோடு சஹபடிதமாய் பொருமவையான -என் அடியார் விடாய் தீர்த்தாய் -அவர்களுக்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் –
என்று ஏறிடுகிறவை தன் பயிர் கெடாமைக்கு தண்ணீர் இறைக்கிறதும் சூது சதுரங்கம் ஆடுகைக்காக திருத்த திண்ணை கட்டி வைக்குமது ஒழிய
பாகவதர்களுடைய விடாயைத் தீர்க்கைக்கும் அவர்கள் ஒதுங்க நிழல் ஆகைக்கும் செய்கிறது அல்லாமையாலே அன்யார்த்தம்
இவை இத்தனையும் இத்தலையில் நினைவு இன்றிக்கே இருக்க அவனடித்து ஏறிடுகிறவை யாகையாலே புத்தி பூர்வகம் அல்ல
இவை தான் பல ஹேதுவாக சாஸ்த்ர விஹிதங்களும் அன்று -பகவத் விஷயீகாரம் என்கிற மகா பாலத்துக்கு சத்ருசமும் அல்ல
இவை உண்டானால் இவ்வருகே சில அல்ப பிரயோஜனங்களுக்கு ஹேதுவாம் அத்தனை -ஆகையால் இவை பகவத் அங்கீகார ஹேது வாக மாட்டாது –

112-இவன் நடுவே -ஆனால் இவரை இப்படி நிர்ஹேதுகமாக விஷயீ கரிக்க வேண்டுவான் என் என்னில் -இப்படி ஒன்றை ஆரோபித்தாகிலும்
விஷயீ கரிக்குமவன் நிர்ஹேதுகமாக வந்து -த்வம்மே இத்யாதிப்படியே -இவன் என் அடியான் என்று பிடிக்க -அதுக்கு இவர் இசையாமல் –
என்னை நீ உன் அடியான் என்றது எத்தாலே -என்ன -இவரை இசைவிக்கைக்காக வேதத்தை பிரமாணமாகக் காட்ட –
அது எழுதா மறையாகையாலே -அத்தை ஓலைப் படா பிரமாணம் என்று இவர் அத்தை அந்யதாகரித்து தம்முடைய அநாதியனுபவத்தை
பிரபலமாகக் கொண்டு நிற்கையாலே ஆட்சியிலும் பிரபலமான தொடர்ச்சியை முன்னிட்ட அளவிலே அதுக்கு சாக்ஷி யார் என்று கேட்டவாறே
தத்வ தர்சிகளான ஞானிகளை சாக்ஷியாகக் காட்ட -அவர்கள் உனக்கு பக்ஷ பாதிகள்-என்று அதுக்கும் இவர் கண் அழிவு சொல்லுகையாலே அநாதி காலம்
தாம் அஹம் மம என்று இருந்து போந்த அனுபவம் ஆத்ம அபகாரம் ஆகிய வலிய களவுகளாலே வந்தது என்று இவர் அநு தபிக்கும் படி
இந்திர ஜாலங்களை போலே த்ருஷ்ட்டி சித்த அபஹாரிகளான வடிவு அழகையும் சீலத்தையும் சேஷ்டிதங்களையும் காட்டி வாய் மாளப் பண்ணி
இவர் தம்மதாக நினைத்து இருந்த ஆத்மாத்மீயங்களை தன்னதாக்கிக் கொள்ளும் படியாக அநிவார்யமான கிருபையானது எம்பெருமானைச் சூழ்ந்து கொண்டது –

113-வரவாறில்லை வெறிதே-எல்லாம் செய்தாலும் இப்படிப்பட்ட கிருபையானது அநாதி காலம் இவ்வாத்ம விஷயமாக பெருகாமல் இன்று பெருகும் அளவில்
இதுக்கு ஒரு ஹேது வேண்டுகையாலே இதுக்கு உடலாக கல்பிக்கலாவதொரு ஸூ க்ருதம் இல்லையோ என்னில்
-வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் -என்றும் -வெறிதே அருள் செய்வார் -இத்யாதிகளால் பகவத் விஷயீ காரம்
நிர்ஹேதுகம் என்று ஆழ்வார் தாமே அறுதியிட்டு பின்பு தனியேன் வாழ் முதலே -என்று
தம்முடைய பேற்றுக்கு மூல ஸூ க்ருதமாக இவர் அருளிச் செய்தே அவ்வீஸ்வரனை ஒழிய வேறு கல்பிக்கலாவதொரு ஸூ க்ருதம் இல்லை –

114-நலம் அருளினன் என் கோல் -இப்படி நிர்ஹேதுக விஷயீ கார பாத்ர பூதரான இவருடைய பக்தி எம்பெருமானது அருளினாலேயே பெறப்பட்டதாகிலும்
உபாசகனுக்கு கர்ம ஞான ஜெனித பக்தி போலே இவருக்கு பிராப்தி சாதனம் இதுவோ என்னில் -மயர்வற மதி நலம் அருளினன் என்று
-தம்முடைய பக்தியுத்பத்தி காரணம் கேவல பகவத் கிருபை -என்று உபக்ரமித்து
என் கொல் அம்மான் திருவருள்கள் -என்னு-பிராப்தி தசையோடு -வாசி யற ஆமூல சூடம் -மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன் -என்று
நின்ற நிலை தோறும் அவன் அருள் கொண்டே தரிக்க வேண்டும் ஸ்வபாவரான இவர்க்கு -ஆறா வன்பில் யடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே
-என்கையாலே -மதி நலம் அருளினன் -என்று முதலிலே பக்தி காரணமாகச் சொன்ன கிருபையே தத் சரண கமல ப்ராப்திக்கும் சாதனம் –

115-புணர் தொறும் என்ன -இப்படி பிராப்தி சாதனம் கிருபையே யாகில் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்ற போதே இவர் அபேக்ஷிதம்
செய்து விடலாய் இருக்க -இவரை இந்நிலத்திலே வைத்து ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷங்களாலே ஞான பக்திகளை வளர்த்தது ஏதுக்காக என்னில் –
கனமான கர்ண பூஷணம் இடுகைக்கு இடமாம்படி நூலிட்டுத் திரியிட்டு குதம்பை இட்டு காது பெருக்குமா போலேயும்
மாச உபவாசிகளுக்கு முதலிலே போஜனம் இட்டால் பொறாது என்று சோற்றை அறைத்து உடம்பில் பூசிப் பொரிக் கஞ்சி கொடுத்து
பொரிக் கூழ் கொடுத்து நாளடைவில் போஜனம் பொறுப்பிக்குமா போலேயும் -ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -என்று
தனக்கு பொறுக்க பொறுக்க தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி அவ்வழியாலே என்னை அடிமை கொண்டவன் என்னும் படி
பகவத் அனுபவம் கனாக் கண்டு அறியாத இவர்க்கு அதி சிலாக்யமாய் நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கிற போகத்தை முதல் முதலிலே கொடுத்தால்
சாத்மியாது என்று கருதி அது சாத்மிக்கைக்காக சிரமம் செய்வித்த படி -ஆனபின்பு ஞான பக்திகளை வளர்த்தது பிராப்தி சாதனதயா அன்று என்று கருத்து –

116-இவற்றால் வரும் சம்–கீழ்ச சொன்ன இக்காரியங்கள் அடியாக வரும் சம்ச்லேஷமும் விஸ்லேஷமும் எவை என்னில் –
ப்ரத்யக்ஷ துல்யமான மானஸ அனுசந்தானம் -சம்ச்லேஷம் -அபேக்ஷிதமான பாஹ்ய அனுபவம் பெறாமையாலே
உள்ள அனுபவமும் அடி மண்டி யோடே கலங்கும் படி பிறந்த அந்த கரணம் ஸைதில்யம்-விஸ்லேஷம் –

117-புண்ணியம் பாவம் புணர்ச்சி -ஆனால் அபிமத விஷய சம்ச்லேஷ விஸ்லேஷன்கள் புண்ய பாப நிபந்தனமாக அன்றோ லோகத்தார்க்கு வருவது –
லோக விலக்ஷணரான இவர்க்கு அவை வருகைக்கு நிதானம் ஏது என்னில் -நாட்டார்க்கு புண்ய பாப பலமாய்க் கொண்டு வருகிற சம்ச்லேஷ விஸ்லேஷன்களை
புண்ய பாப ரூபமான பிரபல கர்மங்கள் அற்று இருக்கிற இவ்வாழ்வாருக்கு பிரிய பரனும் ஹித பரனுமான ஈஸ்வரன் தானே நடத்திக் கொண்டு போவான் –
கிம் நிமித்தம் என்னில் -துளக்கம் அற்ற அமுதாய எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணன் -என்று
ஸ்வ சம்ச்லேஷத்தாலே இவர் அதி ப்ரீதராக்சைக்கும்-தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-என்று
விஸ்லேஷ வியசனத்தாலே நான் முடியா நின்றேன் -இனி என் துக்கம் காணாமையாலே லோகம் எல்லாம் ஸூ கித்து சம்ருதமாகக் கடவது -என்னும் படி
மிகவும் துக்க நிமக்நராகைக்காகவும் -இப்படி ப்ரீதி துக்கங்களை வளர்ப்பதும் ஞான பக்திகளை வளர்க்கையில் நினைவாலே என்பது கீழ்ச் சொல்லப்பட்டது –

118-ஞானத்தில் தம் பேச்சு -இவர் ஞான தசையில் தாமான தன்மையில் நின்று பேசுவர் -பிரேம தசையில் அவஸ்த் தாந்த்ரபன்னராய்ப் பெண் பேச்சாய் பேசுவர்

119-தேறும் கலங்கி என்றும் -இப்படி தெளிவும் கலக்கமுமான இத்தசைகளில் பேச்சில் வாசி ஒழிய ஸ்வரூபத்திலும் வாசி உண்டோ என்னில்
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் -என்றும் -கண்ணீர் மிகக் கலங்கிக் கை தொழும் நின்று இவளே -என்றும்
தெளிந்த திசையிலும் கலங்கின திசையிலும் சேஷத்வ பிரகாசகமான அஞ்சலி மாறாமையாலே – தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இது திருவே-
என்கிறபடியே தெளிந்த தசையோடு கலங்கின தசையோடு வாசி அற இரண்டு அவஸ்தைகளிலும் சேஷத்வ ரூப ஸ்வரூபம் நிலை குலையாது –

120-அடியோம் தொடர்ந்து -ஆனால் இவர்க்கு அவஸ்தாந்தரம் ஏது என்னில் -அடியோம் போற்றி ஓவாதே -தொடர்ந்து குற்றேவல் செய்து -என்று
தாமான தன்மையில் சொல்லுகிறது போலே -அடிச்சியோம் தலை மிசை நீ அணிவாய் -திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய -என்று
ஸ்த்ரீத்வ திசையிலும் சொல்லுகையாலே ஸ்வரூபத்திலும் -ஸ்வரூப அநு ரூப வ்ருத்தி பிரார்த்தனையிலும் பேதம் இல்லை –
பிராட்டியான பாவனையாலே தம் பேச்சான இது போய் பெண் பேச்சாகை இவருக்கு அவஸ்தாந்தரமாவது –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: