ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை 1-49–தாத்பர்ய சாரம் -ஸ்ரீ உ .வே. காஞ்சி ஸ்வாமிகள் —

திவ்ய பிரபந்தங்களில் -ஆழ்வார் உடைய திரு உள்ளக் கருத்தை தெளிய வெளியிட்டு அருளி
-செவிக்கு இனிய செஞ்சொல் -இந்த ஆச்சார்ய ஹிருதயம் –

பண வாள் அரவு அணை பள்ளி பயில்பவர்க்கு எவ் உயிரும்
குணா போகம் என்று குருகைக்கு அதிபன் உரைத்த தூய
உணர் பாவின் உள் பொருளும் அறியா உலகு அறிய
மணவாளன் மாறன் மனம் உரைத்தான் வண் முடும்பை வந்தே

மாதவத்தோன் மாறன் மனம் கூறும் மணவாளன்
தோ தவத்தித் தூய் மறையோரான பெற்றார் –நீதி யினால்
ஆங்கு அவர் தாள் சேர் பெற்றாராய் மணவாள மா முனி
பூம் கமலத் தாள்கள் நெஞ்சே போற்று-

தந்து அருள வேணும் தவத்தோர் தவப் பயனாய்
வந்த முடும்பை மணவாளா -சிந்தையினால்
நீ யுரைத்த மாறன் நினைவின் பொருள் அனைத்து என்
வாயுரைத்து வாழும் வகை

விஷயங்கள் சங்க்ரஹம் –
1-சார அசார விவேகம் பண்ணுகைக்கு எம்பெருமான் சாஸ்திரங்களை அருளிச் செய்தான்
2-அந்த சாஸ்த்ரங்களினால் தத்வ ஞானம் பிறப்பதின் அருமையை நோக்கி சகல சாஸ்திர தாத்பர்யமான திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான் –
3-சாஸ்திரங்களின் -அவற்றின் தாத்பர்யமான திரு மந்திரத்தின் விஷய பேதம் –
4–இவை இரண்டிலும் ஊற்றம் உடைய அதிகாரிகளின் பிரகாரங்கள் –
5–அந்த வியாஜ்ஜியத்தாலே ப்ரஸ்துதமான திருவாயமொழியின் வைபவம் –
6-அதற்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய பிரபாவம் –
7-அதற்கு மூலமான பகவான் நிர்ஹேதுக கடாக்ஷம் –
8-அந்த கடாக்ஷம் அடியாக ஆழ்வாருக்கு பிறந்த ஞான பக்திகள் -அந்த ஞான பக்தி தசைகளில் இவர் பேசும் பேச்சுக்கள்
9-அந்த பக்தி தசையில் பிரேமா யுக்தர்கள் எல்லோரோடும் இவருக்கு உண்டான சாம்யம் –
10-இவர் பேசும் அந்யாபதேசங்களுக்கு ஸ்வாபதேசங்கள் –
11-அந்த பக்திக்கு இலக்கான திவ்ய தேசங்களில் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானின் குண விசேஷங்கள் –
12-அந்த குணங்கள் மலிந்த எம்பெருமானை அனுபவித்து அந்த ப்ரீதி உள் அடங்காமல் புரா வெள்ளம் இட்டு திவ்ய பிரபந்தமாக வழிந்தமை
13-பொருள் ஒற்றுமையால் ஸ்ரீ கீதைக்கும் திருவாய் மொழிக்கும் உள்ள சாம்யம் -அதினில் காட்டில் இதற்கு உண்டான ஏற்றம் –
14-ஆழ்வார் இதில் உபதேசிக்கும் விஷய பேதங்கள் -அந்த விஷயங்கள் தோறும் இவர் உபதேசிக்கும் அர்த்த விசேஷங்கள்
15-அந்த வியாஜ்ஜியத்தாலே உபதேசத்துக்கு இலக்கான சிஷ்ய லக்ஷணம்
16-அந்த லக்ஷணம் இல்லாதார்க்கும் இவர் உபதேசிக்க ஹேதுக்களும் அந்த உபதேசம் பலித்தமையும்
17-உபதேசிக்கும் இந்த திவ்ய பிரபந்தங்கள் ரகஸ்ய த்ரயார்த்தம் என்பதும்
18-அந்த ரகஸ்ய த்ரயத்தில் பிரதிபாதிக்கப் படும் அர்த்த பஞ்சகமும் இந்த பிரபந்தங்களிலே சங்க்ரஹ விவரண ரூபேண அருளிச் செய்தமையும்
19-பிரபந்த ஆரம்பத்தில் வேண்டிய மங்களாசரணங்கள் இந்த திவ்ய பிரபந்த ஆதியில் இருந்தமையும்
20-சாது பரித்ராணாதி களுக்காக பகவத் அவதாரம் போலே-ஜகாத் ரக்ஷணார்த்தமாக இப்பிரபந்த அவதாரமும்
21-பத்து பத்தாலும் பிரதிபாதிக்கப்படும் ஈஸ்வரனுடைய பரத்வாதி குணங்கள்
22-பத்து பத்தாலும் இக் குணக் கடலானவன் ஆழ்வாருக்கு தத்வ ஞானம் முதலாக பகவத் பிராப்தி பர்யந்தமாக பிறப்பித்த தசா விசேஷங்கள்
23-பத்து தோறும் இவர் தாம் பிறருக்கு உபதேசித்த பிரகாரங்கள்
24-இவருக்கு முதலிலே ஆர்த்தி பிறந்து இருக்கச் செய்தே-ஈஸ்வரன் இவரை இங்கே வைகைக்கு பிரதான அப்ரதான ஹேதுக்கள்
25-இவருக்கு பிறப்பித்த பர பக்தி பர ஞான பரம பக்தி தசா விசேஷங்கள் தோன்றும் இடங்கள்
26-திருவாய் மொழியின் ஒன்றான தாத்பர்யத்தை கூறி நிகமித்தல்-

1-காருணிகனான –அருள் கடலான எம்பெருமான் -அறிவிலிகளான சம்சாரிகள் ஞானம் என்னும் விளக்கை ஏற்றி அகவிருள் நீங்கப் பெற்று
தன்னைக் கண்டு சத் அஸத் விவேகம் பண்ணுகைக்காக
சகல வேத காரணமாய் -நித்தியமாய் -ஸர்வார்த்த பிரகாசமாய் இருக்கிற அகாரத்தில் நின்றும் உண்டான விளக்குப் போன்ற வேதங்களையும்
அவற்றுக்கு உப ப்ரும்ஹணங்களான வற்றையும் வெளியிட்டு அருளினான் –

2-விவேக -சத் அஸத் விவேகத்துக்கு பலன் ஏது என்னில்-த்யாஜ்யங்களை விடுகையும் உபாதேயங்களைப் பற்றுகையுமேயாம்

3-த்யாஜ்ய உபாதேயம் -அனைவருக்கும் துக்கம் த்யாஜ்யம் -ஸூகம் உபாதேயம்-

4-இவற்றுக்கு எல்லை -அநந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில் அழுந்துகைக்கு மேற்பட்ட துக்கம் இல்லை –
நித்ய விபூதியில் நிரந்தரம் பகவத் அனுபவம் பண்ணுகைக்கு மேற்பட்ட ஸூகம் இல்லை –

5-அநந்த கிலேசம் -கீழ் சொன்ன துக்க பரம அவதிக்கு ஹேது அர்த்த பஞ்சக ஞானம் இல்லாமை –
கீழ் சொன்ன ஸூக பரம அவதிக்கு ஹேது அர்த்த பஞ்சக உணர்ச்சி –

6-இவற்றுக்கு காரணம் -அர்த்த பஞ்சக ஞானம் உண்டாகைக்கு காரணம் சத்வ குண பிராசர்யம் –

7-சத்வ அசத்வ –ரஜஸ் தமஸ் குணங்களின் பிராஸுர்யத்துக்கு காரணம் இவ்விருள் தரும் மா ஞாலத்தில் பிறவி
-சத்வ குண பிராஸுர்யத்துக்கு காரணம் ஜாயமான கடாக்ஷம் –

8-இவற்றுக்கு மூலம் -பிறவிக்கு மூலம் புண்ய பாபங்கள் -ஜாயமான கடாக்ஷத்துக்கு மூலம்
எம்பெருமானுடைய ஸ்வாபாவிக கிருபை யாகிற ஸூ க்ருதம் –

9-கர்ம க்ருபா -புண்ய பாப ரூப கர்மங்களுக்கு காரணம் அவித்யை -கிருபைக்கு காரணம் ஸுஹார்த்தம் –

10- ஏதன் நிமித்தம் -அவித்யைக்கு அடி அநாதியான அசித் சம்பந்தம் -ஸுஹார்த்தத்துக்கு அடி அத்யந்த அநாதியான நாராயண சம்பந்தம்

ஆக இவ்வளவாலும்
அசித் சம்பந்தம் அடியாக அவித்யை -அது அடியாக புண்ய பாபங்கள் -அவை அடியாக பிறவி –அது அடியாக ரஜஸ் தமோ குண பிராசர்யம்
–அது அடியாக அர்த்த பஞ்சக ஞானம் இல்லாமை -அது அடியாக சம்சார துக்கம் உண்டாகும் -என்றும்
நாராயண சம்பந்தம் அடியாக அவனுடைய ஸுஹார்த்தம் -அது அடியாக கிருபை -அது அடியாக ஜாஅது அடியாக
அர்த்த பஞ்சக ஞானம் -அது அடியாக மோக்ஷ ஸூ கம் உண்டாகும் என்றும் சொல்லப் பட்டது ஆயிற்று –

11-இவை கிட்டமும் –கிட்டமானது தன்னோடு சேர்ந்த மாணிக்கத்தை ஒளி அறத் தின்று -உரு அழித்து-தன்னைப் போலே ஆகுமா போலே –
அசித் சம்பந்தமானது ஒண் பொருளான ஆத்மாவை அஸத் கல்பம் ஆக்கி ஞானம் லேசம் அற தின்று சத்தா ஹானியைப் பண்ணும் —
வேட்டு வேளான் என்கிற குளவியானது அபதார்த்தமான ஒரு புழுவை சுவரில் கொண்டு வைத்து ஊதித் தன்நிறம்
ஆக்குமா போலே நாராயண சம்பந்தமானது பொருள் அல்லாததை பொருள் ஆக்கி விபுத்வ சாம்யம் தந்து தன்னாக்கி சத்தை பெறுவிக்கும் –

12-ஓன்று கூடியதாய் -அசித் சம்பந்தம் வந்தேறி -நாராயண சம்பந்தம் அநாதி –

13-இந்த உதரத் தரிப்பு -இந்த அநாதி சம்பந்தமே இப்பகவான் கலைகளை வெளியிட்டமைக்கு ஹேது வாயிற்று –

14-வத்ஸலையான -தாயானவள் பிள்ளை முகம் கன்றாத படிக்கு மண் தின்ன விட்டு -அதனால் உண்டான தோஷம் போகப் பிறகு
ஆத்மா வர்க்கங்களின் அனைத்தின் நிறத்திலும் தாய் போலே வத்ஸலையான எம்பெருமான் சேதனனுடைய ருசிக்குத் தக்கவாறு
பந்தகங்களையும் காட்டிப் பின்னை பந்த நிவர்த்தக பேஷஜம் ஆனவற்றையும் காட்டின் பொருந்தும் –

15-அது தானும் ஆஸ்திக்ய –சகல ஆத்மாக்களுக்கும் ஹிதத்தையே கோருமவனான எம்பெருமான் இப்படி
பந்தகங்களையும் காட்டியது -தானும் க்ரமத்திலே அவர்களை உஜ்ஜீவிப்பைக்கு இட்ட வழியாம் –

16-சதுர்விதமான -அவகாஹிக்க அரிய பல்வகைப்பட்ட அர்த்தங்களையும் அமைத்துக் கொண்டு இரா நின்ற சாஸ்திரங்களின்
தாத்பர்யம் கைப்படும் படி அதிகரிப்பதற்கு -ஜம்பூத்வீமத்தின் நவம கண்டத்தில் பிறவி -மானிடப் பிறவி -சரீரஸ் தைர்யம் -அதிகாரி வர்ணத்தில் உத்பத்தி
-இளமையின் வாய்ப்பு -நெஞ்சி இசைவு முதலானவை -இன்றியமையாதன வாதையால் -இவ்வளவும் பெற்று -இடையூறு ஒன்றும் இன்றி
சாஸ்திரங்களை அதிகரிப்பது அரிது என்று திரு உள்ளம் பற்றின எம்பெருமான் தன கருணையால் சம்சாரி சேதனரை உஜ்ஜீவிப்பைக்காக
ஸ்ரீ பத்ரிகாஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாய் திருவவதரித்து
சகல சாஸ்திர தாத்பர்ய சாரமான திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான் –

17-முனிவரை இடுக்கியும் -வியாசர் முதலிய மஹர்ஷிகளுக்கு அந்தர்யாமியாய் இருந்து அவர்களைக் கொண்டு வெளியிட்ட சாஸ்திரத்து
அதாவது சாஸ்திரங்கள் வர்ணாஸ்ரம தர்மங்களை சொல்லும் என்கை -தானாக நின்று வெளியிட்ட திருமந்த்ரத்துக்கு சேதனருடைய
நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் நோக்கு -அதாவது திரு மந்த்ரம் ஆத்ம ஸ்வரூபத்தை மாத்திரம் சோதிக்கத் தோன்றியது என்றபடி –

18-தோல் புரையே -உள் இதழான ஸ்வரூபத்தில் ஊற்றம் இன்றிக்கே-மேல் எழ தேஹத்திலே நோக்கான சாஸ்திரத்தை அதிகரிக்க
-ஆபி ஜாத்தியமாதல் – ஆசாரமாதல் ஆகிற யோக்யதை வேணும் -ஸ்வரூப ஸ்பர்சியான திரு மந்திரத்துக்கு அனைவரும் அதிகாரிகள் –

19-சாஸ்திரிகள் –சாஸ்திர நிஷ்டரான உபாசகர்கள் ஆறு நீந்துவதற்கு தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கிக் கொண்டு தாங்களும் ஒரு கை
துழாவுகின்றவர்களைப் போன்று -ஸ்வ யத்னத்தையும் -அதனாலாகும் பகவத் கிருபையையும் அவலம்பித்து சம்சார சாகரத்தை கடக்க நினைப்பார்கள் –
திரு மந்த்ர நிஷ்டரான பிரபன்னர்கள் ஓடத்தின் உள்ளே இரு கையையும் விட்டு நிர்ப்பரராய் இருப்பாரைப் போலே வைகுந்தன்
என்பதோர் தோணியைப் பற்றி கேவல பகவத் கிருபையையே -அதாவது ஸ் வ யத்னத்தால் விளையாத பகவத் கிருபையையே
உத்தாரகம் என்று அத்யவசித்து -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ என்று பகவத் பிராப்தி காலத்தை ப்ரதீஷித்து இருப்பார்கள் –

20-இவை ஸ்வரூபத்தை -சாஸ்திர நிஷ்டர்கள் ஸ்வ ப்ரவ்ருத்திகளிலே ஊன்றுவதற்கும் -திரு மந்த்ர நிஷ்டர்கள் பகவத் கிருபையையே உத்தாரகம் என்று
அத்யவசித்து இருப்பதற்கும் காரணம் ஏது என்னில் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி அவரவர்கள் தெரிந்து கொண்டு இருக்குமதுவே யாம் –
சாஸ்திர நிஷ்டர்கள் தெரிந்து கொண்டு இருக்குமது எங்கனே என்னில் ஆத்ம ஸ்வரூபம் ஞானத்தையே குணமாக யுடைத்தாய் இருக்கும் –
அந்த ஞானத்தால் எங்கும் வியாபித்து தேகத்தில் காட்டில் விலக்ஷணமாய் கர்த்ருத்வ போக்த்ருத்வ யுக்தமாய் பகவானுக்கு சேஷமாய் இருக்கும் என்று –
இனி திரு மந்த்ர நிஷ்டர்கள் தெரிந்து கொண்டு இருக்குமது எங்கனே என்னில் எம்பெருமானை தவிர்ந்து எல்லாம் ஹேயம் என்னும் அறிவைப் பெறும் படி
நிர்ஹேதுகமாக எம்பெருமான் நடத்த அதனாலே ஆத்ம ஸ்வரூபத்தை தேஹாதி விலக்ஷணமாய் ஞாத்ருத்வாதி குணகமாய்
-பாகவத சேஷத்வ பயந்த பகவச் சேஷத்வமே வடிவாய் -பாரதந்தர்ய போக்யதைகளையே ஸ்வரூபமாக யுடைத்தாய் இருக்குமதாக-
இப்படிப்பட்ட உணர்ச்சியின் வாசியினாலேயே சாஸ்திர நிஷ்டர்கள் ஸ்வ யத்னத்தாலே பிறவிக்கடலை நீந்த நினைப்பதும்
சார நிஷ்டர்கள் தங்கள் பாரத்தை அவன் மேலே பொகட்டு ஸ்வ யத்ன ரஹிதராய் இருக்கையும் பிராப்தம் ஆகிறது –

21-சேஷத்வ போக்த்ருத்வங்கள் –சாஸ்திர முகத்தால் ஸ்வரூபத்தை அறியும் அளவில் -பகவச் சேஷத்வமும்
-பகவத் அனுபவ போக்த்ருத்வமே பிரகாசிக்கும் –
சாஸ்திர தாத்பர்யமான திரு மந்திரத்தின் உட் புக்கால் -பாரதந்தர்யமமும் போக்யதையும் ஆகிற ஸ்வரூப யாதாம்யம் பிரகாசிக்கும் –
இவற்றில் சேஷத்வத்தில் காட்டில் பாரதந்தர்யம் மிகச் சிறந்தது ஆகும் -எதனால் என்னில் –
இஷ்ட விநியோகத்துக்கு போக்யமாய் இருக்கும் அளவே சேஷத்வம் ஆகும் –
அவ்வளவே அல்லாமல் இவ்வஸ்துவை சேஷிக்கு இஷ்டமான படி விநியோகப் படுத்திக் கொடுக்கும் பாரதந்தர்யம் –
ஆகவே ஸ்வரூப யோக்யதா ரூப மான சேஷத்வத்தில் காட்டில் பல உபாதான ரூபமான பாரதந்தர்யமே சிறந்தது –
இனி போகத்தில் ஸ்வார்த்த புத்திக்கு ஹேதுவான போக்த்ருத்வத்தில் காட்டில் அந்த போக்த்ருத்வத்தை சேஷியினுடைய
உகப்புக்கு உறுப்பாக்கிக் கொடுக்கிற போக்யத்தை சிறந்ததாய் இருக்கும் –

22-ஞான சதுர்த்திகளின் -சேஷத்வம் பாரதந்தர்யம் -போக்த்ருத்வம் போக்யதை-என்கிற நான்கினுள் சேஷத்வமும் போக்த்ருத்வமும் தாழ்ந்தவை என்றும்
பாரதந்தர்யமும் போக்யதையும் உயர்ந்தவை என்றும் நிஷ்கர்ஷிப்பதற்கு திரு மந்திரத்தில் என்ன கமகம் உள்ளது என்னில் -அது நிரூபிக்கப் படுகிறது –
திரு மந்திரத்தில் சேஷத்வம் தோன்றின பின்பும் அதற்கு ஒரு விரோதி தோன்றி அதைக் களைய வேண்டியதாயிற்று –
அப்படியே அதில் போக்த்ருத்வம் தோன்றின பின்பும் அதற்கும் ஒரு விரோதி தோன்றி அதைக் களைய வேண்டியதாயிற்று
பார தந்தர்யம் தோன்றின பின்பு அதற்கு ஒரு விரோதியும் தோன்றிற்று இல்லையே -அதைக் களைய வேண்டிய பிரசக்தியும் இல்லை யாயிற்று –
போக்யதை தோன்றின பின்பு அதற்கும் ஒரு விரோதி தோன்றிற்று இல்லை -அதைக் களைய வேண்டிய பிரசக்தியும் உண்டாயிற்று இல்லை
ஆக மேலே விரோதி தோன்றும் படியாக நிற்கிற சேஷத்வ போக்த்ருவங்களில் காட்டில் -விரோதி தோன்றப் பெறாத
பாரதந்தர்ய போக்யத்தைகளே மேலானவை என்னத் தட்டில்லை-
இரண்டுக்கும் விரோதிகள் தோன்றினதாகவும் அவை களையப் பட்டதாகவும் சொன்னது இனி விவரிக்கப் படுகிறது –
பிரணவத்தின் மூன்றாவது அக்ஷரமான மகாரமானது ஆத்மாவைச் சொல்லுகிறது –
மன ஞானி என்கிற தாது அடியாக மகாரம் தோன்றிற்று ஆதலால் ஆத்மா ஞாதா வென்று சொல்லிற்று ஆகிறது –
ஞாதாவான போதே கர்த்தாவுமாய் போக்தாவுமாய் யாயிற்று –
இந்த போக்த்ருத்வமானது -அந்த போகத்திலே ஸ்வார்த்தம் ஆகிற கல்மஷத்தின் உதயத்தை -தான் அனுபவித்து தானே ஆனந்தப் படுவதாகிற விரோதியை
ஸஹித்து இருந்த படியால் தான் மேலே நம-என்று அந்த விரோதியைக் களைய நேர்ந்தது –
ஆகவே போக்த்ருத்வமானது மேல் எழுந்த சாமான்ய தர்மம் என்றும் போக்யதை என்பது வடி கட்டி எடுக்கப் பட்ட சாரமான தர்மம் என்றும் தேறிற்று-
இப்படியே சேஷத்வத்தில் காட்டிலும் பாரதந்தர்யமே சாரம் என்பதும் தேறும் -எங்கனே என்னில்
பிரணவத்திலே -இதிலே சதுர்த்தி ஏறிக் கழியும் -என்கிற முமுஷுப்படி ஸ்ரீ ஸூ க்தியின் படியே ஹாரித்த்தின் மேல் ஏறிக் கழிந்ததான
லுப்த சதுர்த்தியில் யாயிற்று சேஷத்வம் தோன்றி இருக்கிறது -இது தோன்றி இருக்கச் செய்தேயும் தன்னைத் தானே
ரஷித்துக் கொள்வதில் முயற்சி செய்வதற்கு ஹேது வான ஸ்வாதந்தர்யத்தைக் காட்டுகிற
ம -என்கிற சஷ்ட்டி ஏற்பட்டு அப்படிப் பட்ட ஸ்வாதந்தர்யத்தை -ந -என்று கழிக்க வேண்டியதாயிற்று -அதி கழிந்தே பாரதந்தர்யம் பிரகாசித்தது –
ஆக சேஷத்வம் மாத்திரம் தோன்றினால்-அதின் மேல் ஒரு விரோதி உண்டாகி அதனை பார தந்தர்ய வேஷத்தினால் கழிக்க வேண்டியும் –
போக்த்ருத்வம் தோன்றினால் தான் ஆனந்தப் படுவதாகிற ஒரு விரோதி உண்டாகி அதனை போக்யதா வேஷத்தினால் கழிக்க வேண்டியும்
நேர்ந்த படியால் விரோதியின் உத்பத்தியை ஸஹிக்குமவை ஞாத்ருத்வ போக்த்ருவங்கள் என்று ஸ்பஷ்டமாக அறியலாயிற்று –
பாரதந்தர்யமும் போக்யதையும் சித்தித்த பின்பு அவற்றின் மேலே ஒரு விரோதியும் தோன்றவும் இல்லை -அது கழிக்கப் படவும் இல்லை –
ஆகவே அவை விரோதியின் உத்பத்தியை சஹியாதவை என்ற காரணத்தினால் சிறந்தவை யாயின –
சேஷத்வ போக்த்ருவங்கள் வடிக் கட்ட வேண்டிய நிலைமைகள் என்றும் பாரதந்தர்ய போக்யதைகள் வடிக் கட்டியான நிலைமைகள் என்றும் தேறிற்று –

இப்படி உத்க்ருஷ்டமான பாரதந்தர்ய போக்யதைகளை ஆத்மாவுக்கு வடிவாக சாரஞ்ஞரான திரு மந்த்ர நிஷ்டர் உணர்ந்தமையால்
அவர்களுக்கு ஸ்வ யத்ன ராஹித்யம் உண்டாயிற்று -இங்கண் அன்றியே கீழ்ப் படியான சேஷத்வ போக்த்ருத்வங்களை
ஆத்மாவுக்கு வடிவாக சாஸ்திரிகள் உணர்ந்தமையாலே அவர்களுக்கு ஸ்வ ப்ரயத்னபரத்வம் உண்டாயிற்று என்று நிகமித்துக் கொள்க –

23-முளைத்து எழுந்த -ஸ்வப்ரயத்ன லவ லேசத்தையும் -ஸ்வ பிரயோஜன லவ லேசத்தையும் சஹியாதவையாய்
எம்பெருமானுடைய போகத்துக்கு மிகவும் பாங்காய் இருந்து கொண்டு ஸ்வ ரூபத்தை நிரூபிக்கும் அவையான
பாரதந்தர்யமும் போக்யத்தையும் கீழ்ச் சொன்ன தன்மைகள் இல்லாத சேஷத்வத்தையும் போக்த்ருத்வத்தையும் கீழ்ப் படுத்தித் தாமே மேலாய் இருக்கும் –
இந்த சூரனையில் பிரதமம்-மத்யமம் -சரமம்-என்று மூன்று பதங்கள் உள்ளன -திரு மந்திரத்தில் முதல் அக்ஷரத்தில்
லுப்த சதுர்த்தியில் தோன்றின சேஷத்வம் பிரதம தசை –
பிறகு அந்த சேஷத்வத்துக்கு ஆச்ரயத்தைச் சொல்லுமதான மகாரத்தில் தோன்றின ஞாத்ருத்வ பல ப்ராப்தமான போக்த்ருத்வம் மத்யம தசை –
அதன் மேலே நம பத-நாராயண பதங்களில் விளங்கின பாரதந்தர்யமும் போக்யதையும் சரமம் –
சரமமான இவை பிரதம மத்யம தசைகளான சேஷத்வ போக்த்ருத்வங்களைப் பகல் விளக்குப் போலே பயன் அற்றதாகவும்
மின் மினிப் பூச்சி போலே அற்பமான ஒளியை யுடையதாகவும் பண்ணும் என்றதாயிற்று –

24-நாலில் ஓன்று -கீழில் பிரவ்ருத்தி பரராகச் சொல்லப் பட்ட சாஸ்திரிகளுக்கும் -நிவ்ருத்தி பரராகச் சொல்லப் பட்ட
சாரஞ்ஞர்களுக்கும் -அந்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்தங்களுக்கு ஹேதுக்கள் எவை என்னில் –
சேஷத்வ போக்த்ருத்வங்கள் -பாரதந்தர்ய போக்யதைகள் -என்கிற நான்கினுள் சேஷத்வ போக்த்ருத்வங்களே
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று கண்ட சாஸ்திர நிஷ்டர்களை –
போக்த்ருத்வமானது -போக்ய வஸ்து கிடைப்பதற்கு போக்தாவானவன் முயற்சி செய்ய வேண்டாவோ -என்னும் நினைவாலே
போக்ய பூதமான பகவத் விஷயத்தின் லாபத்துக்கு உறுப்பான உபாய ப்ரவ்ருத்தியிலே கொண்டு மூட்டும்
பாரதந்தர்ய போக்யதைகளையே ஸ்வரூப யுண்மை வடிவு என்று கண்ட சாரஞ்ஞர்களாகிய திரு மந்த்ர நிஷ்டர்களை போக்யதை யானது
போக்தாவான எம்பெருமான் அன்றோ தனக்கு போக்யமான இவ்வாத்ம வஸ்துவை பெறுகைக்கு முயற்சி பண்ணுவான் –
அப்பெருமானுக்கு போக்யமாய் இருக்கும் இவ்வாத்ம வஸ்துவுக்கு அவனைப் பெறுவதற்கான முயற்சிகளைச் செய்ய அதிகாரம்
இல்லை என்னும் நினைவாலே உபாய ப்ரவ்ருத்தியிலே நின்றும் மீள்விக்கும் -அதாவது நிவ்ருத்தியிலே மூட்டும் –
சேஷத்வ போக்த்ருத்வ பாரதந்தர்ய போக்யதைகள் ஆகிற நாலில் ஒன்றான போக்த்ருத்வம் ஆனது சாஸ்திரிகளை
உபாய அனுஷ்டானத்திலே பிரவர்த்திப்பிக்கும்
போக்யதை யாகிற மற்ற ஓன்று சாரஞ்ஞரை உபாய அனுஷ்டானத்தில் நின்றும் நிவர்த்திப்பிக்கும் என்றதாயிற்று –

25-முற்பாடர்க்கு–திருமந்திர நிஷ்டர்களுக்கும் -சேஷத்வ போக்த்ருத்வங்கள் உண்டே -அவர்கள் இடத்தில்
அவை எப்படி இருக்கும் என்னில் -அது சொல்லுகிறது இதில் –
சாஸ்திரிகள் என்று முற்படச் சொல்லப்பட்ட -உபாசகர்களுக்கு கர்மத்துக்கு அங்கமாய் உள்ள அவை இரண்டும்
-செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் -என்ற திரு மழிசைப் பிரான் அருளிச் செயலின் படியே
இவ்வாத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை -எம்பெருமானே நிர்வாஹகன் என்று அனுசந்தித்து உபாய அனுஷ்டானம் ஆகிய
பிரவ்ருத்தியில் நின்றும் நிவ்ருத்தரான-சாரஞ்ஞர்களான பிரபன்னருடைய கைங்கர்யம் ஆகிய வ்ருத்தியிலே
எம்பெருமான் உகப்பை பின் செல்லுமத்தைத் தவிர தம் நிர்பந்தத்தைக் காட்டிக் கொள்ள மாட்டா –

26-கர்ம கைங்கர்யங்கள் -கீழ் சூர்ணிகையில் க்ரியா என்னும் சப்தத்தால் சொன்ன கர்மமும் -வ்ருத்தி -என்னும் சப்தத்தால் சொன்ன கைங்கர்யமும்
முறையே சாஸ்திரஞ்ஞர்கள் யுடையவும் சாரஞ்ஞர்கள் யுடையவும் எந்த அம்சத்துக்கு ஏற்று இருக்கும் என்னில்
கர்ம அனுஷ்டானமானது அஸத்யமுமாய் அநித்யமுமான வருணத்துக்கு -ஜாதிக்கு -ஏற்றதாய் இருக்கும்
கைங்கர்யமானது சத்யமுமாய் நித்யமுமான அடிமைக்கு ஏற்று இருக்கும்
வருணத்தை அசத்தியம் அநித்தியம் என்பது -ஆத்மாவுக்கு ஏற்பட்டது அன்று -வந்தேறியான -தேகத்தின் அளவிலே நின்று
அந்த தேகத்தோடே கூடவே கழிந்து போகுமது அன்றோ -அடிமை அப்படிப்பட்டது அன்றே
-திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -என்றபடி யவாதாத்மபாவி தொடரும் -ஆகவே சத்யமுமாயும் நித்யமாயும் இருக்குமே –

27-இவற்றுக்கு விதி ராகங்கள் -வேதங்களில் யஜேதே என்றும் -ஜூ ஹூ யாத் -என்றும் உள்ள விதிகள் கர்மத்தைப் பிரேரிக்கின்றன –
கைங்கர்யம் அப்படி விதியினால் விளைவது அன்று -உகந்து பணி செய்து -என்று அருளிச் செய்கையாலே
அநு ராகமே கைங்கர்யத்தை பிரேரிக்கின்றது –

28-மண்டினாரும் -கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார் என்று உகந்து அருளினை திருப்பதிகளில்
ஊற்றம் உடையவர்கள் -பிரபன்னர் -கைங்கர்யத்துக்கு ஆஸ்ரய பூதர் -அந்த பாசுரத்திலேயே -மற்றையார்க்கு உய்யலாமே -என்று
மற்றையாராகச் சொல்லப்பட்ட உபாசகர் கர்மத்துக்கு ஆஸ்ரய பூதர்-

29-அருள் முடிய நிறுத்தி -அவரவர்கள் ஏதேனும் தேவதைகளை ஆஸ்ரயித்து பெற நினைக்கும் பேறுகள் எம்பெருமான் தன்னுடைய
அனுக்ரஹத்தாலே தேறுகின்றன என்னும்படி -தனக்குச் சரீர பூதர்களான தேவதைகளை நிறுத்தி அவர்களுக்கு அந்தர்யாமியாய்
நின்றவிடம் கர்மத்துக்கு இலக்கு -அங்கனம் இன்றியே -நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம்
உய்பவர்க்கு உய்யும் வண்ணம் -என்றும் -கருத்துக்கு நன்றும் எளியனாய் -என்றும் சொல்லுகிறபடியே கேவலம் தன்
கருணையாலே மிகவும் எளியனாய் கொண்டு அர்ச்சாவதாரமாய் நிற்கிற இடமே கைங்கர்யத்துக்கு இலக்கு
அக்னி இந்திரன் சோமன் வருணன் பிரஜாபதி பசுபதி ப்ருஹஸ்பதி -வழிபாடுகள் எல்லாம் அந்தர்யாமி -பகவான் -ஒருவனே இலக்கு என்றபடி –

30-இவற்றாலே-இப்படி தேவதாந்த்ராமியையும் -அர்ச்சாவதாரத்தையும் விஷயமாக யுடைய இத்தன்மைகளாலே
சாதாரண விக்ரஹ விசிஷ்டனை விஷயமாக உடைய-கர்மம் சாதாரணம் என்றும் -அசாதாரண விக்ரஹ விசிஷ்டனை விஷயமாக யுடைய
கைங்கர்யம் அசாதாரணம் என்றும் சொல்லப்படும்-

31-ஜாதி ஆஸ்ரம -ப்ராஹ்மணாதி ஜாதிகளிலும் ப்ரஹ்மசர்யம் முதலிய ஆஸ்ரமங்களிலும் -ஜ்யோதிஷ்டோமாதி தீஷைகளிலும்
தர்மம் பேதிக்குமா போலே -அத்தாணிச் சேவகம் என்கிற அந்தரங்க சேவை யாகிற கைங்கர்யத்தில் அதிகரித்தவர்களுக்கு
தேவதாந்தரயாமி விஷயமாய் -தத் சரீர பூத தேவதா த்வாரா தத் ஆராதனம் ஆகையால் சாதாரணமாய் இருந்துள்ள
கர்மம் உறங்குவான் கைப் பண்டம் போலே தன்னடையே நழுவும் –

32-சாதன சாத்யங்களில் –சாதனத்தில் முதல் அடியான கர்மமும் -சாதியத்தின் சரம அவதியான கைங்கர்யமும் -இத்தார தம்யம் அறிந்தவர்களை –
நீங்கள் வர்ண தர்ம நிஷ்டர்கள் -நாங்கள் தாஸ வ்ருத்தி நிஷ்டர்கள் -என்று உறவு அறுத்து துறை வேறு இட்டு போகப் பண்ணிற்று
இங்கே வில்லிபுத்தூர் பகவர் வ்ருத்தாந்தத்தை ஸ்மரிப்பது-திரு வயிந்த்ர புரத்தில் துறை வேறு இட்ட ஐதிகம் –

33-வேத வித்துக்கள் – வேத வித்துக்களான பூர்வ பாக நிஷ்டர்கள் காயத்ரியின் உபதேசத்தால் பிறப்பிக்குமது-கர்ம நிஷ்டர்க்கு ஸ்ரேஷ்டமான ஜென்மம் –
வேத தாத்பர்ய வித்துக்கள் -திரு மந்த்ர உபதேசத்தால் பிறப்பிக்குமது கைங்கர்ய நிஷ்டர்க்கு ஸ்ரேஷ்டமான ஜென்மம் –

34-அந்தணர் மறையோர் -விசேஷண பூத சரீரத்வாரா வந்த வருணமும் -தத் ப்ரயுக்தமான வைதிகத்வமும் கர்ம படர்களுக்கு நிரூபகம்-
ஆத்ம வஸ்துவுக்கு அந்தரங்க நிரூபகமான சேஷத்வமும் -தத் ப்ரயுக்த கிஞ்சித் கரத்வமும் பிரபன்னர்க்கு நிரூபகம் –

35-ஒரு தலையில் –கர்ம நிஷ்டர் என்று சொல்லப் பட்ட ஒரு தலையிலே சரீர அநு பந்திகளான க்ராம குலாதிகளை இட்டு
வழங்கும் அந்த வியபதேசத்தை கைங்கர்ய நிஷ்டரான மற்றைத் தலையில் உள்ளவர்கள் -திரு மந்த்ர சித்த பகவத் சம்பந்த ஞான ப்ரயுக்தமாய்
சேஷத்வ விரோதியான அஹங்காராதிகள் இல்லாமையால் நிர்தோஷமாய் இருக்கிற இக்குலத்துக்கு அவத்யம் என்று கருதி
வேங்கடத்தை பாதியாக வாழ்வீர்காள் -என்றும் -கோயிலிலே வாழும் வைட்டணவன்-என்றும்
பகவத் அந்வயம் உள்ள தேச சம்பந்தத்தை இட்டு வியவஹரிப்பர்கள் –

36-விப்ரர்க்கு -ப்ராஹ்மணர்க்கு கோத்ர கூடஸ்தர் பராசராதிகள் -சரண கூடஸ்தர் பாராசர்யாதிகள்-ஸூத்ர கூடஸ்தர் போதாயநாதிகள்-
பிரபன்ன ஜனங்களுக்கு கூடஸ்தர் நம்மாழ்வார் திரு மங்கை ஆழ்வார் தொடக்கமான ஆழ்வார்களும் -எம்பெருமானார் முதலான ஆச்சார்யர்களும் –

37-அத்யயன ஞான அனுஷ்டானங்கள் -முதலிலே வேதத்தை ஆச்சார்ய உச்சாரண அநு உச்சாரண முகேன அக்ஷர ராசி கிரஹணம் பண்ணுகை யாகிற
அத்யயனத்தை பண்ணி -மீமாம்ச ஸ்ரவணாதிகளாலே வேதார்த்தம் அறிந்து தத் அநு ரூபமான அனுஷ்டானம் உண்டானால்
ப்ராஹ்மண்யம் சித்திக்குமா போலே திருவாய் மொழியை ஆச்சார்ய முகேன ஓதி உபதேச முகத்தால் அதன் பொருளை அறியப் பெற்று
அதற்குத் தக்கவாறு அனுஷ்ட்டிக்கவும் வல்லார் ஆனால் யாயத்து வைஷ்ணத்வம் சித்திப்பது –

38-இந்த உட் பொருள் கற்று -வேதம் ஓதுகைக்கு பிரயோஜனம்
ஈஸ்வரனை உள்ளபடி அறிந்து -ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் கைங்கர்யம் –
என்று அத்யவசிக்கையாலே இப்படிப்பட்ட ஞானம் இல்லாமல் நான்கு வேதங்களையும் அதிகரித்தவர்களே யாயினும்
அந்த வேதத்தோடு தங்களுக்கு சம்பந்தம் இன்றி அதுக்கு அசல் ஆனவர்கள் என்று அறுதி இடப்பட்டு –
விஷ்ணு பக்தி விஹிநோ யஸ் சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி -ப்ராஹ்மண்யம் தஸ்ய நபவேத் தஸ்யோத் பத்திர் நிரூப்யதாம்-என்று
இவர்கள் ப்ராஹ்மணர் அல்லர் என்று உத்பத்தி ஆராயப்படும் –

39-எவ்வுலகத்து எவ் –ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும் -என்கையாலே
வேதமானது ஓதுமவர்களுடைய பேதத்தாலும் -லோக பேதத்தாலும் பஹு விதமாய் இருக்கும் –

40-அதில் சம்ஸ்க்ருதம் -இப்படி பஹு விதமான வேதத்தில் சம்ஸ்க்ருத வேதம் -திராவிட வேதம் -என்கிற பிரிவு –
சம்ஸ்க்ருதம் தன்னில் ருக் வேதம் யஜுர் வேதம் சாம வேதம் அதர்வண வேதம் என்கிற பிரிவு போலே –
வேத ராசி ஒன்றாய் இருக்கச் செய்தே-சம்ஸ்க்ருத பாஷா ரூபமானது ருக்காதி பேதத்தாலே
நான்காவது போலே -பாஷா பேதத்தாலும் பிரிந்து இருக்கும் என்றபடி –

41-செந்திறத்த–செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி -என்று ஸம்ஸ்க்ருதத்தோடு சஹாபடிதமும் பிரதம யுக்தமாகையாலே-
அகஸ்திய ப்ரகாசிதமான மாத்திரம் கொண்டு ஆகஸ்த்யம் என்னப் படுகிற திராவிடமும் அநாதியாய் யுள்ளதாம் –

42-வட மொழி மறை -மறை என்ற இவ்வளவே சொல்ல அமைந்து இருக்க வட மொழி மறை என்று விசேஷித்து சம்ஸ்க்ருத வேதம்
என்றது திராவிட வேதமும் உண்டு என்று நினைத்து அன்றோ -ப்ரதிகோடி இல்லாத போது இப்படி விசேஷிக்க வேண்டாவே –

43-வேத சதுஷ்ட்ய அங்க -ருக் வேதம் முதலிய நான்கும் -சீஷா வியாகரணம் நிருத்தம் சந்தஸ் கல்பம் ஜ்யோதிஷம் -ஆகிற ஆறு அங்கங்களும்
மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராதிகள் -உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே
திரு விருத்தம் -திருவாசிரியம் -பெரிய திருவந்தாதி திருவாய்மொழி ஆகிற திராவிட வேதங்கள் நான்குக்கும்
திருமங்கை ஆழ்வாருடைய திவ்ய பிரபந்தங்கள் ஆறும் -மற்றை ஆழ்வார்கள் எண்மருடைய
விலக்ஷணருடைய பிரபந்தங்களும் அங்க உபாபங்கள் ஆகுமே –

44-சகல வித்யாதிக -வேதமானது தனது அங்க உபாங்களான சகல வித்யைகளில் காட்டிலும் தனக்கு உண்டான வைபவத்தாலே
மேன்மை பெற்றால் போலே நம் ஆழ்வாருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களும் தம் அங்க உபாங்களான
மற்ற எல்லா பிரபந்தங்களில் காட்டிலும் ஸ்வ வைபவத்தாலே மேலாய் இருக்கும் –

45-வேத நூல் –வேத நூல் பிராயம் என்று அத்தை வேத சாஸ்திரம் என்றால் போலே
இத்தையும் இரும் தமிழ் நூல் -என்று பெரிய திராவிட சாஸ்திரம் என்கையாலும் –
அத்தை சுருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஞ்ஞா -என்று -பகவத் ஆஞ்ஞா ரூபமாகச் சொன்னால் போலே
-இத்தையும் ஆணை யாயிரம் -என்று அப்படிச் சொல்லுகையாலும் –
அத்தை -வசையில் நான் மறை -என்று விப்ர லம்பாதி தோஷ ரஹிதம் என்றால் போலே
-இத்தையும் ஏதமில் ஆயிரம் -என்று நிர்தோஷமாகச் சொல்லுகையாலும்
அத்தை சுடர் மிகு சுருதி என்று ஸ்ரூயத இதை சுருதி -என்கிறபடியே பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்திலே
ஸ்ரவண இந்த்ரியத்தாலே -கிரஹிக்கப் படுமதாகச் சொன்னால் போலே
இத்தையும் செவிக்கு இனிய செஞ்சொல் -என்று ஸ்ராவ்யமாகச் சொல்லுகையாலும்
அத்தை வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை -என்று சத்யவாதி என்றால் போலே
இத்தையும் பொய்யில் பாடல் ஆயிரம் -என்று அசத்திய கந்த ரஹிதம் என்கையாலும்
அத்தை -பண்டை நான் மறை -என்று அநாதியாகவும் -நிற்கும் நான் மறை என்று மேல் அழிவு இல்லாததகாகவும்-சொன்னால் போலே
இத்தையும் -முந்தை யாயிரம் -அழிவில்லா யாயிரம் -என்று அவ்வண்ணமாகவே சொல்லுகையாலும்
இத லக்ஷணங்கள் எல்லாம் இரண்டுக்கும் ஒக்கும் என்று உணரத் தக்கது –

46-சொல்லப் பட்ட வென்ற -குருகூர்ச் சட கோபன் சொல்லப்பட்ட வாயிரம் -என்று திருவாய் மொழியில் ஆழ்வாருக்குச் சொன்ன கர்த்ருத்வம் –
அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத்ருஷ்டா ஸ்வயம்புவா -என்று ஸ்ம்ருதி அந்த வேதத்தை ப்ரஹ்மா ஸ்ருஷ்ட்டித்தான் என்றால் போலே –
அநாதி நிதனமான சந்தர்ப்பம் ப்ரஹ்மாவின் வாக்கில் நின்றும் ஆவிர்பவித்த மாத்திரம் கொண்டு ப்ரஹ்மாவுக்கு அதில் சொன்ன கர்த்ருத்வம் போலே இதிலும்
ஆழ்வாருக்குச் சொன்ன கர்த்ருத்வம் ப்ரகாசத்வ ப்ரயுக்தம் ஆகையால் -இத்தால் இதனுடைய நித்யத்வ அப்வருஷேயங்களுக்கு ஹானி வாராது என்கை –

47-நால் வேதம் கண்ட – நாலு வேதங்களையும் சாஷாத் கரித்த ஸ்ரீ வேத வியாச பகவான் வேதாதிகளின் முன்னைய ஆனு பூர்வியை தர்சித்துச் சொன்ன படியால் –
தர்ச நாத் ருஷி -மனன சீலோ முனி -கவி -க்ராந்த தர்சீ -என்கிற அர்த்தங்களை நினைத்துக் கொண்டு
ருஷேஸ் தஸ்ய மஹாத்மன என்றும் -வ்யாஸ ரூபி மஹா முனி -என்றும் -கவி முக்ய பாராசர்ய-என்றும்
-அவரை ருஷி முனி கவி என்றால் போலேயும்-
மந்த்ர தர்சிகள் ஆனவர்களை பூர்வ சித்த சந்தர்ப்பத்தை சாஷாத் கரித்துச் சொன்ன வர்கள் என்னும் இடம் தோற்ற
நம ருஷிப்யோ மந்த்ர க்ருத்ப்யா-என்றும் பகவான் ஸுநக முனி என்றும் இத்யாதிகளாலே ருஷி முனி என்றால் போலேயும்
திராவிட வேதமான இதன் பூர்வ சித்த ஆனு பூர்வியை சாஷாத் கரித்துப் பேசின இவ்வாழ்வாரையும்
-ருஷிம் ஜுஷா மஹே-என்றும் சடகோப முனிம் வந்தே -என்றும் –
உலகம் படைத்தான் கவி யாயினேற்கு என்றும் –முன்பு உண்டான சந்தர்ப்பத்தை தர்சித்துப் பேசினவர் என்னும் இடம் தோற்ற
ருஷி என்றும் முனி என்றும் கவி என்றும் சொல்லா நிற்கும் –

48-படைத்தான் கவி -பிரளயம் கொண்ட உலகத்தை முன்பு போலே ஸ்ருஷ்டித்த ஈஸ்வரனுடைய கவி நான் –என்னும் அர்த்தம் தோற்ற –
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி யாயினேற்கு -என்று ஆழ்வார் தாம் அருளிச் செய்த பாசுரத்தை நோக்கும் இடத்து
ஸ்ருஷ்ட்டி தோறும் சந்த்ர ஸூ ர்யாதி சகல பதார்த்தங்களும் யதா பூர்வ கல்பநமாய் வருமா போலே
இந்த திராவிட வேதமும் ஸ்ருஷ்ட்டி தோறும் யதா பூர்வ கல்பநமாய் வரும் என்று தோற்றுமாயிற்று-

49-உறக்கம் தலைக் கொண்ட –சம்ஹார சமயத்திலே நாம ரூப விபாக அநர்ஹமாய்-சத்வஸ்தமாய்க் கிடந்த வித்தை
ஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே விபக்தமாக்கி மஹதாதி சகல தத்வங்களையும் அண்டீத்தையும் ஸ்ருஷ்டித்து
-சதுர்முக ஸ்ருஷ்டிக்கு முன்னாக ஏகார்ணவத்திலே -இவை நல் வழியாய்க் கரை சேரும் விரகு ஏதோ என்று
அனுசந்திக்கை யாகிற யோக நித்ரையைச் செய்த பின்பு ஸூப்த பிரபுத்த நியாயத்தாலே ஸம்ஸ்காரகதமாய்க் கிடந்த
நாலு வேதங்களையும் ஆனு பூர்வி தப்பாமல் ஸ்மரித்த தன் தகப்பனான சர்வேஸ்வரன் பக்கல் அவ்வேதங்களை ஓதின
சதுர்முகன் நித்ய ஸ்நான-உபவீத கிருஷ்ணாஜிநதாரன-
பிஷான்ன போஜன -இந்திரிய ஜய-சதா அத்யயன பரத்வங்களான ப்ரஹ்மசர்ய லக்ஷணங்களோடே கூடினவனாய்
தனக்கு ஜ்யேஷ்ட புத்திரனான ருத்ரன் முதலானோர்க்கு அந்த வேதத்தை ஓதுவித்தால் போலே
சம்ஹார காலத்தில் நாம ரூபங்களை இழந்தால் போலே சத்தையும் இழந்து போகாமல் எந்தையான முறையால்
தன் மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கி மீண்டும் கரண களேபரங்களை தந்து ஞான விகாசத்தைப் பண்ணின
ஆதி பகவான் தானே ஆழ்வாருக்கு ப்ரஹ்ம குருவாய் இரவும் பகலும் முன்னுருச் சொல்ல ஆழ்வாரும்
அநு உச்சாரணம் பண்ண -இப்படி அவன் பக்கலில் ஓதின
இவ்வாழ்வாரும் தம் பக்கலில் க்ருதஞ்ஞரான மதுர கவிகள் போல்வாரை அப்யஸிக்க -வேதமானது தன்னை ஓதுமவர்களை இட்டு
நிரூபிக்கப் படுமதாகையாலே -ஆதர்வணம்-காண்வம் -தைத்திரீயம் -என்று பேர் பெற்றால் போலே ஆழ்வார்
இந்த திராவிட வேதத்துக்கு முதன்மையான அதயேதாவானது பற்றி இதுவும் சடகோபன் சொல் -என்று பேர் பெற்றது –

ஆக -37-சூரணையில் ப்ரஸ்துதமான திருவாய் மொழியின் வேதத்வம் இவ்வளவும் வர சாதிக்கப் பட்டது –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: