ஸூம்ய ஜமாத்ரு யோகீந்த்ர பாத ரேகாமயம் சதா
ததாயத் தாத்ம சத்தாதிம் ராமானுஜ முனிம் பஜே —
———
ஸ்ரீ திருப்பாவை முதலிட்டு ஐஞ்சு பாட்டுக்களாலும் –
பிரபன்ன நிஷ்டா க்ரமங்களையும் –
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது –
மேல் பத்து பட்டாலும்
பிரபத்வயனுடைய திருநாம சங்கீர்த்தனம் ப்ரபன்னனுக்கு கால ஷேபம் ஆகையால்
அந்த சங்கீர்த்தனத்துக்கு அதிகாரிகள் ஆனவர்களை எழுப்பிக் கூட்டிக் கொள்ளும் படியை சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –
முதல் பாட்டாலே
பரிசுத்தரராய் வ்ருத்ய அப்யாஸத்தை யுடையவர்கள் உடைய சத்வ பிரமாணத்தை முன்னிட்டு –
சத்வ குண நிஷ்டரை சாத்விக சமாசார நிதர்சன பூர்வக
பகவன் நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –
இரண்டாம் பாட்டில் –
பகவத் அபிமத க்ரியா கலாபங்களாலே பகவத் போக்யமான வஸ்துவை
விவேகித்து தரிப்பார் படியைக் காட்டி சத்வ பிரதானரை விரோதி நிரசன சமர்த்தனுடைய
திரு நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –
மூன்றாம் பாட்டில் –
சங்கீர்த்தனத்துக்கு அடுத்த சத்வ உத்தர காலத்தை முன்னிட்டு சத்துக்களால் குதூகலிக்கப் படும் விஷயரானவர்களை
சகல விரோதி நிவாரகனுடைய சங்கீர்த்தனத்திலே சங்கதராக்கி ஸமாஹிதர் ஆகும் படி சொல்கிறது
நாலாம் பாட்டில்
ஞான தீப பிரகாசராய் அத்தாலே உத்துங்கமான பதத்தில் இருக்கும்படியான சம்பந்தம் உடையவர்களையும்
அவனுடைய சர்வ நாம சங்கீர்த்தனத்திலே சங்கதரானார் படி சம்பவித்தானாம் பண்ணும் படி சொல்கிறது
அஞ்சாம் பாட்டில்
பகவத் குண வித்தரான பாசுரம் கேட்க்கையிலே அபேக்ஷிக்கும் படி சொல்கிறது –
ஆறாம் பாட்டில் –
அபிஜாதமும் ஆஹ்வாத கரமுமான திரு நாம சங்கீர்த்தனத்திலே அந்வயிக்கும் படி சொல்கிறது –
ஏழாம் பாட்டில் –
பகவத் ப்ரத்யாஸன்னரோடு ஆசத்தி யுடையாரையும் மநோ ராபிமான திரு நாம சங்கீர்த்தனத்திலே
சமர்த்தராய் ததுக்கி பரராம் படி சொல்லுகிறது
எட்டாம் பாட்டில்
பகவத் குண ஞான நிஷ்டரையும் இதிஹாச யுக்தமான குண நாம சங்கீர்த்தனத்திலே
பிரவணர் ஆக்கும் படி சொல்லுகிறது –
ஒன்பதாம் பாட்டில் –
ஸுகந்திய சாரஸ்ய யுக்தர் விகாசத்தையும் சத்வ உத்ரிக்த்தர் சமாராதன சம்விதான தத் பரர் ஆகிற படியையும் காட்டி
பரிபூர்ண ஞானரையும் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன தத் பரராக்கிச் சேர்த்துக் கொள்ளும் படி சொல்லுகிறது –
பத்தாம் பாட்டில் –
வாக் பணிதி யுடையாராயும் ஸமஸ்த பிரதிபந்தக நிவர்த்தகமான சர்வேஸ்வர திரு நாம சங்கீர்த்தனத்திலே
சஹகாரிகள் ஆக்கிக் கொண்ட படியைச் சொல்லுகிறது –
ஏவம் வித திரு நாம சங்கீர்த்தனத்தாலே அவனுக்கு அறுதியாகையும் –
அவனையும் எழுப்பி ஸ்வ அபேக்ஷிதங்களையும் விண்ணப்பம் செய்து
அடிமை செய்யும் படியையும் -அவன் அடிமை கொள்ளும் படியையும் அவனுக்கு அறிவித்து
தலைக் கட்டுகிறது
மற்று எல்லா பாசுரங்களாலும் –
திருப்பாவை அடியிட்ட அஞ்சு பட்டாலும் –
பிரபன்ன நிஷ்டா க்ரமமும்-
பிரபத்தவ்யன் அதி ஸூலபனாமாம் படிக்கு அடியான –
அவனுடைய அவதாரத்தின் அடிப்பாடும் சொல்லுகிறது –
————
அஸ்மத் குருப்யோ நம:
எனக்கு பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன்
அஸ்மத் பரமகுருப்யோ நம:
எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சமகாலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன்
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரியநம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீமத் யாமுந முநயே நம:
வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன்
ஸ்ரீ ராமமிஸ்ராய நம:
ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:
ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன்
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம்
அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன்
ஸ்ரீமதே சடகோபாய நம:
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
பெரிய பிராட்டியாரிடம் ரஹஸ்யத்ரய உபதேசம் பெற்ற மிக்க செல்வரான சேனை முதலியாரை(முதல்வர்) வணங்குகிறேன்
ஸ்ரீயை நம:
தேவதேவ திவ்ய மஹிஷியாய் எம்பெருமானுக்கு வல்லபையாய் புருஷகாரம் மிக்க செல்வமுடையவளை வணங்குகிறேன்
ஸ்ரீதராய நம:
திருவுக்கும் திருவாகிய செல்வனான எம்பெருமானை வணங்குகிறேன்.
வாக்ய குரு பரம்பரையில் முதல் மூன்று வாக்யங்கள் வேத வாக்யங்கள்
மற்றவை ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்தது ஆகும்
—————
மேலிட்டுப் பத்துப் பாட்டும் ப்ரபத்திக்கும் பூர்வ பாவியான
வாக்ய குரு பரம்பரையினுடைய க்ரமம் சொல்லி
பகவத் விஷயத்தில் உத்யுக்தரானவர்களோடு போர அவகாஹித்தரோடு வாசி அற
உத்தேச்யர் என்னும் இடம் சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –
பிள்ளாய் எழுந்திராய் -என்கையாலே
அபி நவமாக மூட்டும் அஸ்மத் குருப்யோ நம -என்னும் படி சொல்லுகிறது –
அனந்தரம் -நாயகப் பெண் பிள்ளாய் -என்கையாலே
ஸ்வ ஆச்சார்யனுக்கும் கௌரவன் ஆகையால் அஸ்மத் பரம குருப்யோ -என்னும் படியைச் சொல்லுகிறது –
கோதுகலமுடைய பாவாய் -என்று
சர்வராலும் கொண்டாடும்படியாய் இருக்கையாலே -அஸ்மத் சர்வ குருப்யோ என்கிற அர்த்தத்தைச் சொல்லுகிறது –
மாமான் மகளே-என்கையாலே
ஓளி புதுவை நகர் வாழும் பேர்கள் தாயான ஆண்டாளுக்கு அண்ணரான
ஸ்ரீ மத் ராமாநுஜாயா-என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
இதுவும் ஆழ்வான் அளவும் அனுசந்தேயம் –
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்கையாலே
சித்த உபாயத்தாலே ப்ராப்ய வைலஷ்ண்ய ஞானத்தை யுடையராய் –
அத்தாலே உடையவருக்கு கௌரவராய் இருக்கும் ஸ்ரீ பராங்குச தாசாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
கோவலர் தம் பொற் கொடி -என்கையாலே –
ஸ்ரீ கிருஷ்ண ப்ரீதி உக்தரான -ஸ்ரீ நாதமுனி வம்ச உக்தராய் –
ஸ்ரீ மத் யாமுன முனயே நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
நற் செல்வன் தங்காய்-என்கையாலே
திருக் குமாரத்தியார் திருவடிகளில் சேறு படாமல் சேற்றில் படியாய் கிடந்து அனுசரணம் பண்ணியும்
மனத்துக்கு இனியானைப் பாடவும் -என்கையாலும் -ஸ்ரீ ராம மிஸ்ராய நம என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
போதரிக் கண்ணினாய் -பங்கயக் கண்ணானைப் பாட -என்கையாலே –
ஸ்ரீ புண்டரீகாஷா நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
நா உடையாய் என்கையாலே
தமிழ் மறையை இயலிசை யாக்கின நா வீறு உடைமையாலே
ஸ்ரீ மன் நாத முனயே -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
எல்லே இளங்கிளியே -என்கையாலே –
சுக முகாத் அம்ருதத்ரவ ஸம்யுத்தம் -என்னும் படி
திருவருள் கமுகு ஒண் பழத்ததான ஆழ்வார் திருப்பவளத்தில்-
நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் மொழி பாட்டோடும் கவி யமுதமாய் திருவாய் மொழி பிரவஹிக்க -அத்தாலே
அணி மழலைக் கிளி மொழியானை -அநு சரிக்கையாலே –
ஸ்ரீ மதே சடகோபாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
நாயகனாய் என்று தொடங்கி –
மேல் ஐந்து பாட்டாலே –
ஸ்ரீ மத் விஷ்வக் சேனாயா நம —
ஸ்ரீ யை நம —
ஸ்ரீ தராய நம -என்னும் அர்த்தங்களையும்
அச் சேர்த்தியிலே
இருவர் புருஷகார பூர்வகமாக ஆஸ்ரயிக்கச் செய்த பெருமை ஏற்றங்களை சொல்லுகிறது –
—————————————————
எட்டு எழுத்தின் இணைப் பொருளும்
இரண்டு தனில் பொருளும்
இயல் வலித்தோர் அருச்சுனனுக்கு இறைவன் தம்மை தொட்டுரைத்த முறை யறுதிப் பொருளை
எல்லாம் தோன்றும் வகை –இத்யாதி படியே
இப்பிரபந்தம் ரகஸ்யார்த்தத்தை ப்ரதிபாதிக்கக் கடவதாய் இருக்கும் –
அதில் த்வய யோஜனையும் மேலே யோஜிக்கப்பட்டது –
———–
அநந்தரம்
பாட்டுக்கள் எல்லாவற்றாலும் ப்ரதிபாதிக்கிற படியே விசேஷ கடாக்ஷ லஷ்யமாம் படியை அபேக்ஷிக்கிற படியையும் –
வீற்று இருந்து ஏழ் உலகில் படியே திவ்ய சிம்ஹாசனத்திலே பேர் ஓலக்கமாய் இருக்கிறபடியையும்
போற்றி என்று சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணும் படியையும்
தங்கள் ஆர்த்தித்தவத்தையும் -கைங்கர்ய உபகரணங்களை அதிர்த்து இருக்கும் படியையும்
எல்லாரும் அவனோடே கூடி இருந்து குளிரும் படியையும்
பலத்துக்கு அநு குணமாக சாதனங்கள் தங்கள் கையது அன்றிக்கே அவன் கையதாய் இருக்கும் படியையும்
கைங்கர்ய வேஷத்தையும் –
மாதர்களை எழுப்பும் படியையும்
கைங்கர்ய பிரதிசம்பந்தியான ஸ்ரீ யபதி கடாக்ஷத்தாலே அந்த கைங்கர்யத்தை பெற்று
வாழும் படியையும் சொல்லித் தலைக் கட்டுகிறது –
—–
ஆகையால் குரு பரம்பரா விவரண பூர்வகமாக த்வய விவரணமான இப்பிரபந்தமே
பிரபன்னனுக்கு அநு வரதம் அநு சந்தேயம் என்றதாயிற்று –
ஞாதவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் என்னக் கடவது இறே –
இது குரு பரம்பரா விவரணம் –
—————-
த்வயத்துக்கு சங்க்ரஹமான திருமந்திர யோஜனை காட்டப் படுகிறது –
இப்பிரபந்தத்தாலே —
நமோ நாராயணா என்பாரே-என்று இறே இவர் தாமே அருளிச் செய்தது –
இப் பிரபந்தத்திலே –
ஊழி முதல்வன் -பற்ப நாபன் -என்று -சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வத்தையும் –
உனக்கே -என்கையாலே -உகாரத்தில் அநந்யார்ஹ சேஷத்வத்தையும் –
நாம்-என்றும் –
யாம் -என்றும் –
மகார வாச்யனான ப்ரக்ருதே பரனாய் பகவத் சேஷ பூதனாய் இருக்கிற
ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே
ப்ரணவார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –
தூயோமாய் வந்து நாம் –
தூயோமாய் வந்தோம் –
அபிமான பங்கமாய் –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே நமஸ்ஸில் அர்த்தமும் –
கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -என்றும் –
நாராயணன் மூர்த்தி -என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் -என்றும் -சொல்லுகையாலே நாராயண சப்தார்த்தமும்-
உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே -என்னக் கடவது இறே
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கையாலே
அதிலே சர்வ வித பந்துத்வமும்
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்கையாலே
சதுர்த்யர்த்தமும் சங்க்ரஹீதம் ஆயிற்று –
ஆக இது திருமந்திர விவரணம் என்றதாயிற்று –
————————–
கறவைகள் பின் சென்று -இத்யாதிகளாலும் –
செய்யாதன செய்யோம் –
உன்னை அருத்தித்து வந்தோம் –
சிற்றம் சிறு காலை வந்து உன்னைத் சேவித்து -என்றும் –
நாராயணன் -என்றும் –
புண்ணியம் நாமுடையோம் என்றும் –
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -என்று தொடங்கி -தீயினில் தூசாகும் என்றும்
எங்கள் மேல் சாபம் இழிந்து என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும் சொல்லுகையாலே
சரம ஸ்லோகார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –
ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்றீர் –
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா –
நகரமருள் புரிந்து இத்யாதி-
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு வெண்ணும் காந்தியால் ஆம் பயன் அங்கு என் -என்னச் சொல்லக் கடவது இறே –
திருப்பாவையால் –
நாராயணன் -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி –
ஏவம் விதமானவன்
மாயனை மன்னு இத்யாதிப்படியே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளருகிற இடத்தே
பேய் முலை நஞ்சுண்டு -கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -என்று பூதனை சகட நிராகரணம் சொல்லி –
அதுக்கு மேலே
தாமோதரன் -என்று வெண்ணெய் களவு காண்கையாலே கட்டவும் அடிக்கவும் எளியனாம் இருந்தபடி சொல்லி
மதுரையிலே மல்லரை மாட்டி வல்லானை கொன்றபடியைச் சொல்லி
அநந்தரம் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து
கஞ்சன் வயிற்றில் நெருப்பாய்-அவனைப் போக்கின அளவும் அருளிச் செய்தார் இறே –
இது சரம ஸ்லோக விவரணம் –
———————————
திருப்பாவையில் -அத்யந்த பக்தி உக்தரானவர்கள் –
பகவத் விரஹ பரிதாபஹரமாக ஸஹ காரிகளுடன் பகவத் விஷய அவகாஹனம் பண்ண ஒருப்பட்டு –
ஸ்வ அபேக்ஷிதங்களை அத்தலையால் பெற்று வாழும் படியையும் சொல்லுகிறது-
தாம் தாம் ப்ரீதி விஷயங்களைப் பிரிந்தார்களுக்கு எல்லாம் இப்படி இறே பிரேம ஸ்வபாவம் இருப்பது –
ஸ்ரீ யபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -சர்வ ஸ்மாத் பரனாய் -இருந்துள்ள சர்வேஸ்வரன் –
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக –
ஸ்வ விபூதியில் சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்துப் போந்து –
பிராட்டியைப் பிரிந்து-மெல்லியல் தோள் தோய்ந்து –
அநந்தரம் இப்படி அதி விலக்ஷணையாய்-
அத்யந்த அபிமதையான தத் விஷயத்தை லோக ரக்ஷண அர்த்தமாக விஸ்லேஷித்து-
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து -என்னும்படி
பரி தப்த்தனாய-அந்த விரஹ தாபம் மாற்றலாமோ என்கிற அலமாப்பாலே
அரணவத்திலே அவகாஹிக்க நினைப்பது ஆனால் போலேயும் –
அவனைப் பின் தொடர்ந்து போந்த பரிவரான தம்பி பரதனும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தைப் பிரிந்து –
கூடேக் நிரிவபாதபம் -என்னும் படி பரிதபித்து
சரயு ஆற்றிலே அவகாஹித்து ஒருப்பட்டு இருந்தால் போலேயும்
பின்னையும் மா மாயன் மாதவன் வைகுந்தன் வான் இளவரசு வைகுந்தக் குட்டன்
வா ஸூ தேவன் மதுரை மன்னன் நந்த கோபன் இளவரசு
கோவலர் குட்டன் -சூட்டு நன் மாலை தொடக்கமான -அங்குத்தை போகத்தை அநாதரித்து
அடலாயர் தம் கொம்பினுக்காக இங்கே போந்தால் போலே –
ஆண்டாளும் அந்த வைகுண்ட போகம் தன்னை இகழ்ந்து இங்கே ஏற
வேயர் தங்கள் குலத்திலே விஷ்ணு சித்தன் வியன் கோதையாய் வந்து அவதரித்து –
ஆயர் சிறுமியர் படியை அடைந்து –
ஆயர் குலத்தில் தோன்றினவனை மனதுக்கு இனிதாகப் பாடி கூடி இருந்த படியை
செய்ய வெண்ணப் போந்தவளாய் –
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது தொடக்கமான விஷயங்களை பிரிந்த தளர்த்தியாலே
இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தாதே –
அவனில் எண் மடங்கான காமத் தீயுள் புகுந்து கதுவ-
அந்த விரஹ தாபம் ஆகிற பெரு நெருப்பை ஆற்றுகைக்கு ஆதரம் பெருத்து பெரும் புறக் கடல்
இப்புறத்திலே திருப் பாற் கடலாய் பொங்கி எங்கும் பரந்து
வெள்ளக் கால்களாய் பரந்து சுழித்துப் பெரு நீராக மதுர ஆறாகப் பெருகுகிற அம்ருதத்திலே
குள்ளக் குளிர குடைந்து நீராட ஒருப்பட்டு
பெருக்காற்றிலே இழிவார் துறை தப்பாமே துறை அறிந்த நிலவரோடே கூட இறங்க நிலைக்குமா போலே
இறங்க நினைக்கதாய் இருக்கும் இங்கும் –
அது எங்கனே என்னில் –
ஸ்ரீயபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -நித்ய முக்த அநு பாவ்யனாய்-
சர்வ ஸ்மாத் பரனாய் இருந்துள்ள -சர்வேஸ்வரன் –
நாராயணனே -என்று அவன் பெரும் புறக் கடலாய் இருக்கிறபடியும் –
அநந்தரம் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று பாற் கடல் போலேயான வ்யூஹத்தையும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்று அது கால்களாய்ப் புறப்பட்டுப் பரந்து
பற்ப நாபன் -என்று சுழித்து –
தூய பெரு நீர் யமுனைத் துறைவன் -என்று பெருக்காறு போல விபவத்தையும் –
நாற்றத் துழாய் முடி நாராயணன் என்று
உள்ளே ஊற்று ஜலம் போலே அந்தர்யாமியாய் இருக்கும் படியையும்
புள்ளரையன் கோயில் -என்று நித்தியமான நீர்மையால் –
அதிலே தேங்கின மடுக்கள் -என்னலாம் படி ருசி ஜனக விபவ லாவண்யத்தோடே
எப்போதும் ஆஸ்ரயிக்கலாம் படி அர்ச்சாவதாரத்தையும் –
அத்யபி நிவேசத்தோடே இங்கே காண இப்பிறப்பே அநு பவிக்கக் கோலி-
அது அப்போதே அனுபவிக்கப் பெறாமையாலே –
வைகுந்தன் என்பதோர் தோனி பெறாதே உழல்கின்றேன் -என்றும்
பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து
குமைந்து குதூகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் -என்றும்
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி -என்றும்
பாஞ்ச சன்னியத்தை பற்ப நாபனோடு வாய்ந்த பெரும் சுற்றமாக்கிய -என்றும்
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்பு போய்ச் செய்யும் தவம் தான் என் -என்றும்
ஆவல் அன்புடையார் தம் மனத்து அன்றி மேவலன் -என்றும்
உலங்குண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணன் -என்றும்
பெண் கொடியை வதம் செய்தான் -என்றும் –
காமத் தீயுள் புகுந்து கதுவ -என்றும்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் ஆ முகத்தை நோக்காரேல்-என்றும் சொல்லுகிறபடியே
பரத்வாதி பஞ்ச அவஸ்தா வஸ்திதனாய்-
பஹு குணனாய் -தேச கால விப்ரகர்ஷ்யாதி உபாதியாலே
ஆஸ்ரயிப்பார்க்கு அசன்னிஹிதத் வாதிகளாலும்
ஆலோக ஆலபாத்ய அநனுபாவிகத்வத்தாலும்
எம்பெருமான் அரியனாய் இருக்கிற படியை தர்சித்து-
முற் காலத்தில் ஸ்ரீ கோபிமார் -கோபீ பரி வ்ருதோ ராத்ரிம் -என்று பூர்வ பக்ஷத்தில் பூர்வ ராத்திரியில்
அணி யாய்ச்சியர் சிந்தையுள் குழகனான கிருஷ்ணனோடு கழகமாக கூடி இருந்து –
ஒரு கார்யப் பாட்டிலே பிரிந்து போந்து அவனை விட்டு அகன்று
உயிர் ஆற்ற கில்லாதாப் போலே
யமுனை ஆற்றிலே மார்கழி நீராட -என்ற ஒரு வியாஜத்தாலே
ஸ்ரீ கிருஷ்ண அனுபவ குதூஹலத்தை யுடையராய்
அபர ராத்திரியிலே உணர்ந்து முற்பட்டார் பிற்பட்டாரை எழுப்பி –
எல்லாரும் திரண்டு நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக
கிருஷ்ணனை எழுப்பி
ஸ்வ லாபங்களை அர்த்தித்துப் பெற்று அனுபவித்தால் போலேயும்
சீர் மல்கும் ஆய்ப்பாடிக்கு சத்ருசமான ஸ்ரீ வில்லி புத்தூரிலும் –
ஸ்ரீ வைஷ்ணவ சந்தான ப்ரஸூதையான-ஆழ்வார் திரு மகளாரான ஆண்டாள்
ஸ்ரீ கிருஷ்ண அநு காரிகளான அவர்களை அநு கரித்து –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே –
வேதப் பயன் கொள்ள வல்ல விஷ்ணு சித்தன் சம்பந்தத்தாலே-
வேதம் அனைத்தைக்கும் வித்தான அர்த்தத்தைக் கொண்டு
பகவத் ருசி யுடையாரைக் கொண்டு –
பத்துப் பெண்களை எழுப்புகிற முகேன -பிரபன்ன ஜன கூடஸ்தரான பதின்மரை முன்னிட்டு
வேதப் பொருளாய் – யமுனைத் துறைவன் -என்று
பேர் பெற்ற எம்பெருமான் திருவடிகளை பற்றும் அளவும் சொல்லுகிறார்கள் –
புள்ளும் தொடங்கி -எல்லே அளவும் –
தசமாந்த மாயே -என்றார் இறே தேசிகரும் –
இவர்கள் கிருஷ்ண அனுபவத்துக்கு தேசிகர் ஆகையாலும்-
பிராட்டியோடே சாம்ய குண ஷட்கத்தை யுடையவர் ஆகையாலும்
இவ் வனுபவத்துக்கு இவர்களைக் கூட்டிக் கொள்ளுகிறது –
இன்னமும் பகவத் விஷயத்தில் முற்பட்டார் பிற்பட்டாரையும் கூட்டிக் கொண்டு போக வேண்டும் –
பர ஸம்ருத்தியாலும் எழுப்புகிறார்கள் –
புஷ்ப்ப ராத்ரிஸ்து தத்ரைவ கங்கா கூலே ச ராகவ-ப்ராத காலயமுதாய சத்ருக்நமித மப்ரவீத் –
சத்ருக்நோத்திஷ்ட கிம் சேஷ நிஷாதாதிபதி மகுஹம் சீக்ரமா நயபத்ரந்தே தாரயிஷ்யதி வாஹி நீம் –
ஜாகர்மி நாஹம் ஸ்வபி மிதமேவார்யம் விசிந்தயன்-என்னக் கடவது இறே –
இங்கும் அப்படியே யாயிற்று –
ப்ரத்யக்ஷ அனுபவத்தால் அல்லது தரியாதார்
குண அனுபவத்தால் தரித்து இருப்பாரை த்வரித்து எழுப்புகிற படி
———————————
இதில் முதல் பாட்டில்
பிள்ளாய் எழுந்திராய் -என்று பிள்ளைப் பெண் என்கிறது பொய்கை ஆழ்வாரை –
அது எங்கனே என்னில் –
அரவம் அடல் வேழம்-இத்யாதியாலே
ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்துக்கு தேசிகர் ஆகையாலும்
சூடிக் கொடுத்த வடிவுக்கு –
வையம் தக்ளி இத்யாதி –
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை -என்றும்
மாலும் கரும் கடலே என்நோற்றாய் இத்யாதியாலே –
அவனுடைய அங்க சங்கத்தை ஆதரித்துப் பேசியும்
மணமருவ மால் விடை ஏழ் செற்று-என்று
நப்பின்னை பிராட்டியை பெறுகைக்கு எருதுகளின் மேல் வியாபாரித்த படியைப் பேசுகையாலும்
இதில்
பேய் முலை நஞ்சுண்டு -என்றத்தை –
பேய் முலை நஞ்சூணாக யுண்டான் -என்றும்
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி -என்று
கன்னிப் போரான சிறுச் சேவகத்தை -ஓரடியும் சாடுதைத்த -என்றும் –
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை -என்றத்தை
வெள்ளத்தில் உள்ளானும் இத்யாதியால் பேசியும்
ஒன்றும் அதனை உணரேன் நான் -என்றும் –
முந்துற முன்னம் பகவத் விஷயத்திலே இழிந்தவர் ஆகையாலும்
பிள்ளைப் பெண் என்கிறது -பொய்கை ஆழ்வாரை —
பிள்ளை -மௌக்த்யம்-என்றவாறு
————————————–
இரண்டாம் பாட்டில் –
பேய்ப் பெண் -என்கிறது –
பேயாழ்வாரை -அது எங்கனே என்னில்
திருக் கண்டேன் இத்யாதியாலே நாயகனுடைய வைபவத்தை தர்சிப்பிக்கையாலும்
மற்றும் ஸ்த்ரீத்வாபத்தியால் -வெற்பு என்று வேங்கடம் என்று தொடங்கி
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் என்கையாலும்
கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்துக் குழலூதி -என்று கிருஷ்ண சேஷ்டிதங்களைப் பேசுகையாலும்
பின்னைக்காய் எற்று உயிரை அட்டான்-என்று நப்பின்னைப் பிராட்டிக்காக
அவன் எருதுகளின் மேல் வியாபாரித்த படியை பேசுகையாலும்
பேய்ப் பெண்ணே -என்றது பேய் ஆழ்வாரை -என்றபடி –
—————————————————————-
மூன்றாம் பாட்டில் –
கோதுகலமுடைய பாவாய் -என்கிறது பூதத் தாழ்வாரை –
அது எங்கனே என்னில் –
ஸ்த்ரீத்வாபத்திக்கு உடலாக -அன்பே தகளியாக -இத்யாதியாலே பக்தியைப் பேசி –
பெரும் தமிழன் அல்லேன் பெரிது என்ற
அநந்தரம்
பெருகு மத வேழம் -என்று
அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதத்தையும் ஜாதி யுசித தர்மத்தையும் பேசியும்
ஏறின் பெருத்த எருத்தம் கோடு ஓசியப் பெண் நசையின் பின் போய் எறுத்து இருத்த நல்லாயர் ஏறு – என்று
நப்பின்னைப் பிராட்டியைப் பெறுகைக்கு எருதுகளின் மேலே அவன் வியாபாரித்த வியாபாரத்தைப் பேசியும்
இதில் தேவாதி தேவன் என்னப்படுவான்
முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன் –என்றும்
மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியான் துழாய்க் கண்ணியனே மேலா விளவின் காய் கன்றினால்
வீழ்த்தவனே என் தன் அளவன்றால் யானுடைய அன்பு என்று அருளிச் செய்கையாலும்
கோதுகலமுடையாய் பாவாய் என்றது பூதத் ஆழ்வாரை -என்றபடி –
மாதவன் பூதம் என்கிறது -கோதுகலமிறே –
ஆகையாலும் மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -என்றவர் இறே –
ஆக மூவரும் –
ஞான -தர்சன-ப்ராப்த்திய அவஸ்தைகளோடே கூடி யாயிற்று இருப்பது –
———————————————
நாலாம் பாட்டில் –
இவர்களுக்கு அநந்தரத்திலானவரை-திரு மழிசை ஆழ்வாரை
மாமன் மகளே -என்கிறது -அது எங்கனே என்னில் –
தாத்ரா துலிதா லகுர் மஹீ -என்றும் –
உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே வைத்து எடுத்த பக்கம் வலிது-என்னும்படி
மஹீ சார க்ஷேத்ரமான திரு மழிசையில் –
பார்க்கவோ தீர்க்க சத்ரேண வா ஸூ தேவம் ஸநாதனம் அபி பூஜ்ய யதா நியாயம் –என்கிறபடியே
ஸ்ரீ ஜெகந்நாதனை உத்தேசித்து யஜித்துக் கொண்டு இருக்கிற காலத்தில் –
பார்க்கவனுடைய பத்னி கர்ப்பிணியாய்
திரு மழிசைப் பிரானை திரு வயிறு வாய்த்ததாலே –
பார்க்க விலோக ஜநநீ-என்னும்படியான பிராட்டியோடே உடன் பிறந்த பார்க்க புத்திரர் ஆகையாலும்
காட்டில் வேங்கடம் இத்யாதி கூடுமாகில் நீ கூடிடு கூடிலே-என்கிறபடியே –
அழைப்பன் திரு வேங்கடத்தானைக் காண இழைப்பன்
திருக் கூடல் கூட -என்று ஸ்த்ரீத்வ பாவனையாகப் பேசுகையாலும் –
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய-என்கிற ஞான தீப பிரகாசத்தை –
என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை-என்றும்
ஞானமாகி நாயிறாகி-என்று பேசுகையாலும் —
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் -என்றும்
அடிச்சகடம் சாடி இத்யாதி வடிப்ப வளவாய்ப் பின்னை தோளிக்காய் வல் ஏற்று எருத்து இறுத்து -என்றும் –
ஆயனாகி ஆயர் மங்கை வேயர் தோள் விரும்பினாய் -என்றும்
பின்னை கேள்வ நின்னோடும் பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கேல் என்றும்
ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களையும் நப்பின்னை பிராட்டி புருஷகார வைபவத்தையும் சொல்லி
இதில் மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றதை –
மாதவனை -என்றும் -வைகுந்தச் செல்வனார் என்றும் -பேசுகையாலே –
மாமன் மகளே என்கிறது திரு மழிசை பிரானை -என்றபடி –
பார்க்கவனும் பார்க்கவியும் பிருகுவுக்கு கியாதீயின் இடத்திலே ஸஹோதரராக சம்பவிக்கையாலும் –
லோக மாதாவுடன் பிறந்தவன் லோகத்துக்கு மாமனாக தட்டில்லை இறே-
அந்த பார்க்கவ புத்ரன் ஆகையால் இவரை மாமன் மகள் என்னைக் குறை இல்லை –
அன்றிக்கே
யசோதைப் பிராட்டிக்கு பின் பிறந்த ஸ்ரீ கும்பர் குமாரத்தியான நப்பின்னை பிராட்டி தரத்தை யுடையார்
ஒருவர் ஆகையால் மாமன் மகள் என்று சொல்லுகிறது ஆகவுமாம்
—————————————————–
அஞ்சாம் பாட்டில்
அம்மனாய் என்கிறது -குலசேகர பெருமாளை-அது எங்கனே என்னில் –
குலசேகரன் ஆகையாலும்
எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவும் மனத்தனன் ஆகையாலும் –
அல்லிமலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து
இள யாய்ச்சியார்கள் எல்லிப் பொழுதினில் ஏமத்தூடி எள்கி யுரைத்த யுரையதனை ஸ்த்ரீத்வ பாவனயா பேசுகையாலும்
ஏறு அடர்த்ததும் -என்றும்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால் -என்று நப்பின்னை விஷயமாக வியாபாரித்த
வியாபாரத்தில் தோற்று-அடிமை அல்லது -என்கையாலும் –
ஆலை நீர் கரும்பன்னவன் -என்று தொடங்கி –
மல்லை மா நகருக்கு இறையவன் தன்னை வான் செலுத்தி என்னும் அளவும்
கிருஷ்ண சேஷ்டிதங்களைப் பேசி அனுபவிக்கையாலும் –
இதிலே நாற்றத் துழாய் முடி நாராயணன் என்றதை –
வண்டு கிண்டு நாறும் துழாய் மாலை உற்றவரை பெரும் திரு மார்வனை என்றும் –
அந் நாரணனை-நலம் திகழ் நாரணன் என்று பேசுகையாலும்
இவருக்கு அசல் உணர்த்தி அனுபவம் போலே
ஸ்ரீ ரெங்க யாத்திரையில் அனுபவம் நடந்து செல்லுகையாலே
பிரபன்ன குல சேகரரான குலசேகர பெருமாளை –
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் -என்கிறது என்கை –
————————————————————————–
ஆறாம் பாட்டில் –
கோவலர் தம் பொற் கொடியே-என்கிறது
பெரியாழ்வாரை -எங்கனே என்னில் –
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான இவளை போல கோவலப் பட்டம் தவிக்கும் படி
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினவர் ஆகையாலும்
கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை -என்னும் படி –
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் என்று தொடங்கி –
பண்டு அவன் செய்த க்ரீடை எல்லாம் என்கிறபடி
ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதம் பேசி அனுபவிக்கையாலும்
நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழு அவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே -என்றும்
ஐய புழுதி -நல்லதோர் தாமரை -இவைகளில் திருத் தாயார் பேச்சாக பேசுகையாலும்
தழை களும் இத்யாதி அளவாய் கன்னிமார்கள் காமுற்ற மாற்றத்தைப் பேசுகையாலும்
இதிலே முகில் வண்ணன் -என்றத்தை —
விட்டு சித்தன் மனத்தைக் கோயில் கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில் வண்ணனை -என்கையாலும்
கோவலர் தம் பொற் கொடியே -என்கிறது பெரியாழ்வாரை –
————————————————————————–
ஏழாம் பாட்டில் –
நற் செல்வன் தங்காய் -என்கிறது
தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -அது எங்கனே என்னில் –
ஸ்த்ரீத்வத்வ அநு குணமாக -தம் பால் ஆதரம் பெருக வைத்த அழகன் -என்றும் –
உடல் எனக்கு உருகுமாலோ -என்றும் –
கண்ணனைக் கண்ட கண்கள் பனி யரும்பு உதிருமாலோ -என்றும் -தம்முடைய பக்தியைப் பேசுகையாலும் –
கற்றினம் மேய்த்த கழல் இணைக் கீழ் உற்ற திரு மாலைப் பாடுகையாலும் –
மலைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே -என்று குன்று குடையாக எடுத்த படியைப் பேசுகையாலும்
கவள மால் யானை கொன்ற கண்ணனை என்கையாலும்
ஸ்ரீ மாலாகாரரைப் போலே செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்து சாற்ற-
அத்தால் வந்த கைங்கர்ய ஸ்ரீ யை யுடைய -பெரியாழ்வாருக்கு பிற்பாடராய்
அவர் கைங்கர்ய ஸ்ரீ யை அநு விதானம் பண்ணுகையாலே
அவருக்கு அநுஜர் என்னும் படியாய் –
திருப் பள்ளி உணர்த்துவதிலும் வந்தால் விஷ்ணு சித்த துளஸீ ப்ருத்யர் -என்று ஸஹ படிதர் ஆகையாலும்
நற் செல்வன் தங்காய் என்கிறது ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -என்கை –
இவரும்-இதிலே -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானை -என்றத்தை –
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே-என்றும்
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -என்றும் -அருளிச் செய்தார் இறே –
——————————————————————
எட்டாம் பாட்டிலே –
போதரிக் கண்ணினாய் -என்கிறது
திருப் பாண் ஆழ்வாரை -அது எங்கனே என்னில் –
தொண்டர் அடிப் பொடியாரோபாதி –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் –
எண் கண்ணின் உள்ளன -என்றும் –
கொண்டல் வண்ணன் கோவலனாய் என்று தொடங்கி -எண் அமுதினைக் கண்ட கண்கள் என்கையாலே
போதரிக் கண்ணினாய் -என்கிறது திருப் பாண் ஆழ்வாரை –
மெய்ம்மையை மிக உணர்ந்து -என்று ததீய சேஷத்வ பர்யந்தமான ஞானம் இறே ஞானமாவது
ததீயருக்கு உகப்பாகப் பண்ணும் பகவத் அனுபவம் இறே இவரது –
ஸ்த்ரீத்வ பாவனையில் யுண்டான பக்தி பத்தும் பத்தாக
அடி தொடங்கி முடி அளவுமாய் மேலாய் இருக்கும் –
இப் பாட்டில்
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -என்றத்தை –
இவரும் -சதிர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன்
தலை பத்து உத்திர ஓட்டியோர் வெங்கணை உய்த்தவன் -என்றார் இறே –
————————————————————————–
ஒன்பதாம் பாட்டில் –
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் -என்கிறது
நம்மாழ்வாரை -அது எங்கனே என்னில் –
திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் என்னும் படியான சேஷத்வ பூர்த்தியை யுடையவராய் –
அவன் அடியராய் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே -என்னும்படி
பாகவத ஸம்ருத்தியைக் காண்கையிலே-அபிவ்ருத்த மநோ ரதத்தை யுடையராய் –
அனயாப தேசத்திலும் -அடிச்சியோம் என்கையாலும் –
பின்னை கொல்-என்கிற ஒப்பனையாலும் –
சூட்டு நன் மாலைகள் -என்று தொடங்கி –
அடலாயர் தம் கொம்பினுக்கே -என்று நப்பின்னைப் பிராட்டிக்காக அவன் விடை யடர்த்த வியாபாரத்தை பேசியும் –
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலான -என்றும்
என்னை நெகிழ்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -என்றும் –
வேயின் மலி யுரை தோளி பின்னைக்கு மணாளனை -இத்யாதியாலும் –
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேன் –
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் -என்றும் –
எருது ஏழ் தழி -என்றும் -சடையினார் -என்றும் -இத்யாதியாலே
பல படியாக அவள் புருஷகார வைபவத்தை ஆதரித்து –
மற்றும் எத்திறம் என்று பிறந்த வாற்றிலே கிருஷ்ண சேஷ்டிதங்களிலே ஈடுபட்டு
குரவை ஆய்ச்சியரிலே நண்ணி வணங்கி அனுபவித்தும்
எல்லாம் கண்ணன் -என்றும் –
நீராடப் போதுவீர்-என்றத்தை -கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் -என்கையாலும் –
மந்தாதிகாரிகளை -என் நெஞ்சால் நோக்கிக் காணீர்-என்று உணர்த்தியும் –
சகோதரிகளை உயிராகத் தேடி -இசைமின் என்று போதிக்கையாலும்-
நீராட -என்றத்தை -காலை நன் ஞானத் துறை படிந்தாடி -என்றும் –
அப்பன் திருவருள் மூழ்கினன் -என்கையாலும் –
இதில் நாணாதாய் என்றத்தை -நாணும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை -என்றும்
நா உடையாய் என்றத்தை -என் நா -என்றும் –
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை யுடை மால் வண்ணனை மலக்குடை நாவுடையேன் -என்கையாலே
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் -என்கிறது நம்மாழ்வாரை –
இப்பாட்டில் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் பங்கயக் கண்ணானைப் பாட -என்றதையே
பங்கயக் கண்ணனையே -என்றும்-பங்கயக் கண்ணன் என்கோ-என்றும்
வீவில் சீரன் மலர்க கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி -என்றும் பேசினார் இறே –
—————————————————–
பத்தாம் பாட்டில் –
எல்லே இளங்கிளியே என்கிறது –
திரு மங்கை ஆழ்வாரை-அது எங்கனே என்னில் –
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தாம் அடியான் -என்று சேஷத்வத்தின் எல்லை நிலத்தில் நிற்கையாலும்
ஸ்த்ரீத்வத்வ அநு குணமாக பேராளன் பேரோதும் பெண்ணை என்றும்–
கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் என்றும்
லஷ்மீ சாம்யத்தை யுடையராய் இருக்கும் இருப்பை பேசுகையாலும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்றும் –
வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு–இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -என்றும்
தத் அனுபவ தத் பரராய் தத் ப்ரீதி ஹேதுவாக –
ஆயர் பூம் கொடிக்கு இனவிடை பொருதவன் -என்றும் –
பின்னை பெறும் தம் கோலம் பெற்றார் -என்றும் –
பின்னை மணாளர் தம் திறத்தும் என்றும் –
அன்றாயர் குல மகளுக்கு அரையன் தன்னை -என்றும் –
நப்பின்னை பிராட்டி புருஷகாரத்தை அடியே தொடங்கி முடிய நடத்தியும் –
நீராடப் போதுவீர் -என்றத்தை –
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் என்றும் –
சந்த மலர்க குழல் –பூம் கோதை –
எங்கானும் -மானமுடைத்து-இத்யாதிகளிலே -கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அநு பவித்து –
பண்டிவண் ஆயன் நங்காய் -என்று தொடங்கி –
அவன் பின் கெண்டை ஒண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து -என்றும்
மென் கிளி போல் மிக மிழற்றும் -என்கையாலும் –
இளம் கிளியே -என்கிறது திரு மங்கை ஆழ்வாரை –
வல்லே யுன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் -என்னும் அது உண்டு இவருக்கும் –
இப் பாட்டில்
வல்லானை கொன்றானை என்கிற வித்தை
ஆவரிவை செய்து அறிவார் -இத்யாதியாலும்
கரி முனைந்த கைத்தலமும்-என்றும் அருளிச் செய்தார் –
—————————————————-
இப்படி யாயிற்று இப் பத்து பாட்டுக்கும்
குண சாம்யத்தாலும்-கௌரவ்யதையாலும்-பத்துப் பெண்களை எழுப்புகிற முகத்தால்
ஆழ்வார்கள் பதின்மரையும் கூட்டிக் கொண்டு
ஆழ்வார் திரு மகளார் அனுசந்திக்கிறதாக அறுதி இட்டார்கள் –
இப்படி பக்தராய் முக்தராய் இருப்பார் ஆழ்வார்கள் –
அநந்தரம்
நித்ய கைங்கர்ய நிரதரான நித்யரையும் –
நித்ய அநபாயினியான பிராட்டியையும் உணர்த்தி
இவர்களை முன்னிட்டு
நித்ய முக்த அநு பாவ்யானான எம்பெருமானைப் பற்றும் படி சொல்லுகிறது –
நாயகன் -தொடங்கி -அஞ்சு பாட்டாலே –
ஜன பத சரி தந்த ரீப புஷ்யத்புர பரிபாலன நித்யஜா கருகான் ப்ரஹரண பரவார வாஹனாட்யான்
குமுதா முகான் சுண் நாய கான்னமாமி -என்றும்
ஸ்மேரா நநாஷீ கமலைர் நமத-புனா நாந்தம் ஷ்ட்ராகதா ப்ருகுடீ பிர்த்விஷ தோது நாநான் சண்டை ப்ரசண்ட
முகத ப்ரணமாமி ரங்கத்வாரா வளீஷூ சத ந்ருஷ்வதிகார பாஜ -என்றும் –
சே நான்ய மன்ய விமுகாஸ் தம சிஸ்ரயாம -என்றும் –
ஸைன்ய துரீண பிராண ஸஹாயம் ஸூத்ரவதீ மாஸிஸ்ர யமம்பாம் -என்றும்
நம ஸ்ரீ ரெங்கே நாயக்யை யத் ப்ருவிப்ரம பேதத ஈசேசிதவ்ய வைஷமய நிம்னோன்னதமிதம் ஜகத் என்றும்
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே சிந்தாமணி மிவோத் பாந்தமுத் சங்கே நந்த போகின -என்றும் சொல்லுகிறபடி
வைகுந்தத்து அமரரான கோயில் கொள் தெய்வங்களையும்
வானவர்களையும்
தேவியர்களையும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியை
ஆயிரம் முகத்தினால் காப்பாருடை தயா வதாரமானவரையும் –
அவர்களையும் அதி சங்கை பண்ணி நெருங்க அனைத்துக் கொண்டு
கிடக்குமவர்களையும் எழுப்பி
அவர்களுடனே எம்பெருமான் திருவடிகளில் சென்று கிட்டி அபேக்ஷிதங்களை ஆர்த்திக்கும் படி சொல்லுகிறது
ஸ்ரீ யை நம –
ஸ்ரீ தராய நம -என்று இறே க்ரமம் இருப்பது –
உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும் -என்றதிலே
முமுஷுக்களாய் முக்தரோடு சாம்யம் பெற்ற
நாத முனிகள்
யாமுன யோகி
யதி வராதிகளும் ஸூசித்தர் –
இது குரு பரம்பரையின் அடைவு –
ஆறாயிரப்படியில் -நாயனார் –
பெறுகைக்குப் புறப்படுகிற திரளை
பெற்று அனுபவிக்கிற ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமானவரை எழுப்புகிறார்கள் –
அவர்கள் முன்னாக கிருஷ்ணனைப் பெற வேண்டுகையாலே –
அதாவது
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமானை திருப் பாதம் பணிகை இறே –
நல் ஞானத் துறை படிந்தாடி -என்னுமா போலே –
நல் ஞானம் ஆகிறது -ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்கை-
விஞ்ஞானம் யதீதம் பிராப்தம் –என்னுமா போலே —
துறையாவது முறை தப்பாமல் குரு பரம்பரை வழியே பற்றுகை –
த்வய நிஷ்டருக்கு குரு பரம்பரையே பிரதானமாகக் கடவது –
துறை தப்பாதார் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் போல்வார் –
வேதம் வல்லார்கள் என்றவிடத்து
குரு பரம்பரையை நினைத்து –
கீழ் பத்துப் பட்டாலும் அனுஷ்ட்டித்தார்கள் –
விண்ணோர் பெருமானில்-விண்ணோர் என்கிறது –
த்வார பாலர்கள் தொடக்கமான திவ்ய மஹிஷிகளாய் உள்ளவர்கள் -என்றபடி –
இந்த யோஜனைகள் எல்லாம் –
விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -என்று அருளிச் செய்யும்
ஆச்சார்ய அபிமான நிஷ்டையான ஆழ்வார் திரு மகளார் படிக்கு சேரும் இறே –
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் என்கிற இடத்து
குண சமயத்தாலே யோஜித்த படியாகக் கடவது இங்கும் –
———————————————————————
இனி த்வய யோஜகையில்-
அர்த்த விஷயமாக மெய்ப்பொருளை இறே விசதம் ஆக்கிற்று –
இரண்டு அர்த்தத்தையும் புலம் ஐந்தும் மேயும் -என்று உபதேசிக்கக் கேட்டவர்கள்-
அனுஷ்டானமாக திருப்பாவையில் –
தாயே தந்தையிலும் –
ஸ்தோத்ர கத்யங்களிலும் த்வயத்தின் அடைவு காணும் படி எங்கனே என்னில் –
முதல் பாட்டில் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்ற
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும்-
கறவைகள் பின் சென்றிலும்-
சிற்றம் சிறு காலையிலும் க்ரமத்திலே வெளியிடுகிறது –
நடுவடைய யுண்டானவை இரண்டு அர்த்தத்துக்கும் உபபாதங்களாய் இருக்கும் ஆகையால்
த்வயத்தின் அடைவு க்ரமமாகக் காணலாம் என்றபடி –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
திரு மந்திரத்தில் பத த்ரயத்திலும் ப்ரதிபாதிக்கிற
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்கள் மூன்றும்
ஒவ் ஒன்றே பத்துப் பாட்டாய் பரவும் படி திருப்பாவை முப்பது பாட்டாக பாடி அருளிற்று –
திருமந்திரத்தில் ஸ்வரூப அனுரூபமாக நிஷ் கர்ஷித்த
ப்ராப்ய ப்ராபகங்கள் இறே த்வயத்தில் விசதமாக அனுசந்திக்கிறது –
அந்த க்ரமத்திலே யாயிற்று இங்கும் அனுசந்திக்கிறது –
இனி மேல் குரு பரம்பரா பூர்வகமாக த்வயத்தின் அடைவு சொல்லுகிறது –
நப்பின்னை நங்காய் திருவே -என்கையாலே -ஸ்ரீ சப்தார்த்தமும் –
உன் மணாளனை என்கையாலே -ஸ்ரிங் சேவாயாம் -என்கிற தாத்வர்த்தமும்-
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா -என்றும் –
நீ உன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் -என்கையால் –
வாத்சல்யாதி குண பிரகாசகமான நாராயண பதத்தில் அர்த்தமும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி என்றும் –
ஓங்கி உலகளந்த -அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த -அன்று இவ்வுலகம் அளந்தாய் -என்றும் –
லோக விக்ராந்த சரணங்களாய்
நாராயணன் த்ரிவிக்ரமன் அடியான உலகு அளந்த மெல்லடியை -உன் பொற்றாமரை அடி -என்றும் –
சரண -சப்தார்த்தமும் –
கார் மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் –
ஊழி முதல்வன் உருவம் போல் –முகில் வண்ணன் -சங்கோடு சக்கரம் ஏந்தும்
தடக் கையன் பங்கயக் கண்ணன் -என்றதில் விக்ரஹ யோகத்தையும்
முத்துத் திரைக் கடல் சேர்ப்பன் -என்னும் படி சம்சாரி திரிந்த இடத்தில் வந்து கிடக்கிற
பாற் கடல் பையத் துயின்ற பரமன் என்கையாலே ஸ்வாமித்வமும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்கையாலே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த ஸுலப்யமும்-
மாயனை என்று தொடங்கி தாமோதரன் அளவும் -கட்டவும் அடிக்கவும் ஆம்படியான ஸுசீல்யமும் –
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா என்று கல்யாண குண விசிஷ்ட வஸ்துவான உபாய பூர்த்தியையும்
அறிவு ஒன்றும் இல்லா ஆய்க்குலம் -அறியாத பிள்ளைகளோம்-என்கையாலே அதிகாரி ஸ்வரூபமான ஆகிஞ்சன்யமும் –
தூயோமாய் வந்து நாம் தூய் மலர்கள் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும்
புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -என்றும் –
வந்து தலைப் பெய்தோம் -என்றும் –
உன்னை அருத்தித்து வந்தோம் -என்றும் -அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும்
தப்பாத உபாயமாக ஸ்வீகரிக்கும் உபாய வரணத்தையும் –
ஆவாவென்று ஆராய்ந்து அருள் –
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் –
இறைவா நீ தாராய் பறை -என்று
அவனுடைய பரகத ஸ்வீகாரத்தின் ஏற்றத்தையும் –
குத்து விளக்கு எரியக் கோட்டுக்கு கால் காட்டில் மேல் -இத்யாதியிலே பர்யங்க வித்யையில் படியே இருவருமாய்
எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியான வேஷத்தை –
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்கையாலும் –
தேவாதி தேவன் என்கையாலும் -உம்பர் கோமானே -என்கையாலும்
இறைவா நீ என்கையாலும் -உத்தர வாக்ய நாராயண பதத்தில் ப்ரதிபாதிக்கிற சேஷித்வமும் –
தட்டொளியும் தந்து உன் மணாளனை -என்கையாலும் –
இப்போதே எம்மை நீராட்டு -என்கையாலும் –
பூ வளரும் திருமகளால் அருள் பெற்று வரும் படியும் –
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து -என்றும் –
பள்ளிக் கட்டில் கீழே -என்றும்
சீரிய சிங்காசனத்து இருந்து -என்றும் –
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும்
மாலே ஆலினிலையாய் அருளாய் -என்றும் –
கூடி இருந்து குளிர்ந்து என்றும் –
நீ தாராய் பறை -என்றும்
சிற்றம் சிறு காலே வந்துன்னைச் சேவித்து -என்று தொடங்கி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே
உத்தர சதுர்த்தியில்
கைங்கர்ய உபகரண ஸஹிதமான பல அனுபவ கைங்கர்ய பரம்பரைகளையும் –
கைங்கர்ய பிரார்த்தனையும் –
அவற்றில் களை அறுப்பையையும் –
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று -என்கையால்
த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே என்றமதும் சொல்லித் தலைக் கட்டிற்று –
மாதவன் என்று த்வயம் ஆக்கினால் போலே –
மாதவனே என்றும் –
மாதவனை என்றும் இறே -இங்கு இரட்டித்து இருப்பது –
செல்வத் திருமாலால் -என்றும் –
பட்டர் பிரான் கோதை சொன்ன -என்கையாலே இவ்வர்த்தம்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் -என்னும் இடம் சொல்லிற்று –
இப்படி குரு பரம்பரா பூர்வகமான த்வயத்தாலே
பேறாக ப்ரதிபாதிக்கிறதாய் இறே திருப்பாவை தான் இருப்பது –
ஆக விறே இதுக்கு வர்த்தகரான உடையவரும்
இத்தை நாள் தோறும் ஆதரித்திக் கொண்டு போந்து அருளிற்று –
ஆகையால் இது ஆண்டாள் அடியாராக யாவர்க்கும் நித்ய அனுசந்தேயமாக நடந்து போருகிறது-
கோப ஸ்த்ரீ குலமதி கோதாய உபதிஷ்ட்டம் க்ருஷ்ணாக்யம் பிரணவம் இவ அதிகாரி ஜப்யம்
தத்ரிம்சத் பரி மித பத்ய மார்க்க சீர்ஷ ப்ராப்தோத் சவ சமயோசிதம் பிரசித்தம் –
எட்டு எழுத்தின் இணைப் பொருளும் இரண்டதனில் பொருளும் இயல் வலித் தேர் அர்ச்சுனனுக்கு இறைவர் தம்மை
தொட்டு உரைத்த மறை அறுதிப் பொருளை எல்லாம் தோன்றும் வகைப் புகழ் வரை துடர் வளைந்து பாட
மட்டவிழும் பொழில் புடை சூழ் முடும்பை வேந்தன் மணாளன் தணவாத மாயன்
கட்டுரையே புதுவையர் கோன் கோதை சொன்ன கவி பாடல் பொருள் தெரியக் காட்டினானே
———————————————————————
திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு சங்க்ரஹமாய் இருக்கும் –
எங்கனே என்னில் –
ஸ்ரீ பாஷ்யம் ஒன்பதினாயிரம் கிரந்தத்துக்கும் முதல் ஸ்லோகம் சங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ மஹா பாராதம் -125000–கிரந்தத்துக்கும் முதல் அத்யாயம் சங்க்ரஹமானால் போலேயும்
திருவாய் மொழிக்கு முதல் திருவாய்மொழி சங்க்ரஹமானால் போலேயும்
முதல் திருவாய் மொழிக்கு முதல் பாட்டு சங்க்ரஹமானால் போலேயும்
மந்த்ர சேஷத்துக்கு பிரணவம் சங்க்ரஹமானால் போலேயும்
முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு சங்க்ரஹமாயே இருக்கும் –
சங்க்ரஹமான படி எங்கனே என்னில்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -என்ற இடத்தால்
முதல் ஐஞ்சு பாட்டுக்கள் சங்க்ரஹம் சொல்லிற்று –
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் -என்கிற இடத்தில்
பத்துப் பெண்களை எழுப்புகிற இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
கூர் வேல் கொடும் தொழிலன் -என்று –
கோயில் காப்பானே -என்கிற இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
நந்த கோபன் என்று –
நாயகனாய் நின்ற நந்தகோபன் -என்றும் –
ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் என்கிற இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
குமரன் -என்றதால் –
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெறும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -என்கிற
இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
கார் மேனி -என்று
முகில் வண்ணன் -என்றும் –
பூவைப் பூ வண்ணா -என்றும் –
மாயன் மணி வண்ணன் -என்றும்
மாலே மணி வண்ணா -என்றும் இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
செங்கண் -என்று
கிண்கிணி வாய்ச செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறிச் சிறிதே எம்மேல் விழியாவோ என்றும்
அங்கண் இரண்டும் கொண்டு -என்றும் –
பங்கயக் கண்ணன் -என்றும்
செங்கண் திருமுகம் -என்கிற இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
கதிர் மதியம் போல் முகத்தான் -என்று –
திங்களும் ஆதித்யனும் சேர்ந்தால் போல் என்றும் –
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -என்னும் இடங்களுக்கு சங்க்ரஹமாகச் சொல்லிற்று –
நாராயணன் -என்று –
நாராயணன் மூர்த்தி கேசவன் -என்றும் –
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் –
மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றும் –
முகில் வண்ணன் பேர் பாட -என்றும்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே -என்றும் –
வங்கக் கடல் கடைந்த மாதவன் -என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம்
நமக்கே பறை தருவான் -என்பதால் –
பாடிப் பறை கொண்டு -என்றும் –
நம்மால் போற்றப் பறை தரும் என்றும் –
இற்றைப் பறை கொள்வான் என்றும் –
அறை பறை -என்றும் –
சாலப் பெரும் பறை -என்றும் –
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்றும் –
இறைவா நீ தாராய் பறை என்றும் –
அங்கு அப்பறை கொண்ட வாற்றை என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம்
பாரோர் புகழ -என்று –
நாடு புகழும் -எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம் –
ஏலோர் எம்பாவாய் -என்று
முப்பது பாட்டிலும் சொல்லும் ஏலோர் எம்பாவாய்க்கு சங்க்ரஹம் –
————————————————————————–
இப்பாட்டில் காலத்தைக் கொண்டாட நின்று கொண்டு பிரபந்த தாத்பர்யமான
ப்ராப்ய ப்ராபகங்களை சொல்லுகிறது –
அதிகாரி ஸ்வாபதேசம் –
இந்த ஸ்வாபதேசத்தில் –
முதல் ஐஞ்சு பட்டாலும் –
பிரபந்த நிஷ்டா க்ரமங்களையும் –
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது –
அதில் முதல் பாட்டில்
பிரபன்ன அதிகாரிக்கு -ச ஏஷ தேச கால -என்கிறபடியே
தேச காலம் எல்லாம் அவனுடைய கடாக்ஷத்தாலே ப்ராப்யம் என்னுமத்தையும் –
கரமாந்தர பரித்யாகத்தையும் –
பகவத் விஷயங்களில் ருசி விசுவாசங்களினுடைய பிரதான்யத்தையும் –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் சர்வ ஸ்வாமியான நாராயணனே என்றத்தையும்
ஏவ காரத்தால் தேவதாந்த்ர ராஹித்யத்தையும் –
பிரயோஜனாந்தர ராஹித்யத்தையும் –
அநந்ய பிரயோஜனத்தையும் –
த்ரிபாத் விபூதி நாயகனான சர்வேஸ்வரன் தங்களுக்கு அபேக்ஷிதா விதானம் பண்ணுவான் என்று
நிரபரத்வ அனுசந்தானத்தையும்
சர்வ ஜன ஸூ ஹ்ருதத்வத்தையும் –
இப்படி நிஷ்டா க்ரமங்களையும் பிரபத்தி வாசகமான திரு நாமத்தையும் சொல்லுகையாலே
அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று யாயிற்று –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே
திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற –
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –
ஆகையால் இப்பாட்டு
திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று –
இப்பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது –
———
இரண்டாம் பாட்டில்
நோன்புக்கு பெண்கள் தங்கள் செய்யக் கடவ க்ருத்யத்தை நியமிக்கிற முகத்தாலே-
இவ்விஷயத்தில் இழிவாருடைய விரக்தியையும்
சம்பாவித ஸ்வபாவத்தையும் சொல்லுகிறது
என்ற ஒரு ஸ்வாபதேசம் –
இப் பாட்டில்
இந்த பிரபன்ன அதிகாரிக்கு சம்பாவிதமான நிஷ்டா க்ரமங்களையும்
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் சொல்லுகிறது —
எங்கனே என்னில் –
ஸ்ரீ வைகுண்ட நிகேதனனாய் இருக்கிற சர்வேஸ்வரன் –
தேயே சதம் இத்யனுக்ரமாத் -என்று
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -என்கிறபடியே –
ஆஸ்ரிதர்கள் வந்து ஒரு விண்ணப்பம் செய்வதற்கு அங்கு அவசரம் இல்லாமையால் –
ஒரு பயணம் எடுத்து ஷீர சாகரத்தில் திரு வனந்த ஆழ்வான் மேலே
ஜகத் ரக்ஷண சிந்தனையாலே சாய்ந்து அருளி –
ஆஸ்ரிதற்கு யாராலே யாருக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று அந்த யுரைக்கு செவி கொடுத்து
கண் வளருகிறதாக நினைத்து இருக்கையும் –
சகல சேதன உஜ்ஜீவனமான த்வயத்தை பெரிய பிராட்டியாருக்கு உபதேசம் பண்ணுகிற
ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை வாயாலே சங்கீர்த்தனம் சதா பண்ணுகையும் –
ஆகையால் பிரபன்னனுக்கு த்வய அனுசந்தானம் சதா பண்ண வேணும் என்று தாத்பர்யம் –
அந்த ரசானுபவம் பண்ணுகிறவரைக்கும் இதர விஷயங்களில்
தவாம்ருதஸ் யந்தினிபாத பங்கஜே நிவேசி தாத்மாக தமன்யதிச்சதி-என்கிறபடி –
போக்யமான மது சக்கர ஷீரா ததி க்ருதாதிகளிலும் நைரபேஷயத்தையும்-
த்ரிவிக்ரமத் வச்சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி–என்கிறபடியே
அவன் திருவடிகளை சர்வ அலங்காரமாகப் பற்றுகையும்
அது ஒழிய ஸ்ரக் சந்தன வஸ்த்ராத்யா பரணங்களை நிஷேதித்தமையும்-
அவனுக்கு சேஷமாய் இருக்கிற சகல வஸ்து விஷயங்களில்
ஜாதி பேதத்தாலே அபோக்யமாய் இருக்கச் செய்தேயும் பரம போக்யத்தால் ஸ்வீகரிக்கையும்-
யதா சக்தி பாகவதருக்கு நித்ய ததீயாராதனம் பண்ணி பகவத் அனுபவம் பண்ணுவித்து –
ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கையும்
இப்படி அதிகாரி நிஷ்டா க்ரமம் சொல்லுகிறது –
இரண்டாம் பாட்டில் வ்யூஹம் சொல்லுகிறது –
———
மூன்றாம் பாட்டில்
நோன்பில் இழியவே-தாத் பலமான சம்ருதிகள் அடைய உண்டாம் -என்கிறார்கள் –
இத்தால்
பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழிய
வேறே -ஆயுராசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலங்களும் ஆனு ஷங்கிக சித்தமாய்க் கொண்டு சித்திக்கும் என்கிறது –
—————
நாலாம் பாட்டில் –
வர்ஷ தேவதையைக் குறித்து வர்ஷிக்கும் படியை நியமிக்கிறார்கள்-
இத்தால்
அநந்ய பிரயோஜனராய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணுமவர்க்கு
இந்திராதி தேவதைகளும் நியாமியர் ஆவார்கள் என்று இவ்வதிகாரியினுடைய உத்கர்ஷம் சொல்லுகிறது –
சர்வேஸ்மை தேவா பலிமா வஹந்தி-என்னக் கடவது இறே
————-
அஞ்சாம் பாட்டில் –
ஸ்ரேயாம் சிபஹூவிக்நானி -என்கிறபடி
நோன்புக்கு விக்னங்கள் சம்பவியாதோ என்னில் –
மநோ வாக் காயங்களாலே கிருஷ்ணனையே அனுசந்திக்க அவை போம் -என்கிறார்கள் –
இத்தால்
பகவத் குண அனுபவம் பண்ணுமவனுக்கு
உத்தர பூர்வாக யோரச் லேக்ஷவிநாசவ்-என்கிறபடியே
பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்கிறது –
————–
ஆக இவ் வைந்து பட்டாலும் –
நாராயணனே -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும்
மாயனை வடமதுரை மைந்தனை -என்றும் சொல்லுகையாலே கிருஷ்ணனுடைய அடிப்பாடு சொல்லுகிறது –
இதுக்கு மேல் பத்துப் பாட்டும்
முற்பட்டவர்கள் பிற்பட்டவர்களை எழுப்பிச் செல்லுகிறது –
இத்தால்
பகவத் விஷயம் அபரிச்சின்னமாய் –
தனி அனுபவிக்க ஒண்ணாமையாலே பெருக்காற்றிலே இழிவார் துணை கொண்டு இழியுமா போலேயும்
ஏக ஸ்வாது நபுஞ்சீத-என்று தனி அனுபவிக்க மாட்டாத சாபல்யத்தாலும் பகவத் அனுபவம் பண்ணுவார்க்கு
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்கிறபடி
துணை தேட்டமாய் இருக்கும் என்னும் இவ்வர்த்தத்தைச் சொல்லுகிறது –
————-
இதில் முதல் பாட்டில் –
கிருஷ்ண அனுபவத்தில் புதியளாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறாள் –
இத்தால்
பகவத் ஏக போக்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய பிரயோஜனராய்
இவ்விஷயத்தில் தேசிகர் அன்றிக்கே இருப்பாரை அவர்கள் பக்கல்
பரிவாலே தேசிகர் ஆக்குகைக்கு தங்களுக்கு கிருத்யம் என்று இருக்கை ஸ்ரீ வைஷ்ணத்வம்
என்கிற ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது –
———
இரண்டாம் பாட்டில் –
கிருஷ்ண அனுபவத்தை தேசிகையாய் -இவ்வனுபவத்தை ஸ்மரித்துக் கிடக்கிறாள் ஒருத்தி எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் விஷயத்தில் ஞாதமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவாலே
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடி அறிவிக்கை
ஸ்ரீ வைஷ்ணவர் ஆனார்க்கு ஸ்வரூபம் என்கிறது –
————-
மூன்றாம் பாட்டில் –
கிருஷ்ணனால் கொண்டாடப்படும் ஏற்றம் உடையவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் அனுபவத்தில் ப்ரத்யாசன்னராய் இருப்பார் இடத்தில் சா பேஷாராய் இருக்கையும் –
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனை கிட்டுக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –
———-
நாலாம் பாட்டில் –
கிருஷ்ணன் வந்த போது வருகிறான் -என்று நிர்ப்பரரையாய்க் கொண்டு கிடக்கும் அவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் – என்று
பூர்வார்த்த நிஷ்டராய் இருப்பாரை பகவத் பிரேமாதிசயத்தாலே
தத் ஏக போகராய் இருக்குமவர்கள் போகார்த்தமாக ப்ரேரிக்கை
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிற அர்த்தம் சொல்லுகிறது –
————–
அஞ்சாம் பாட்டில் –
பெண்கள் எல்லாம் -கிருஷ்ணன் -என்றால் படும் பாட்டை –
அவன் தான் தண்ணீர் தண்ணீர் என்னும் படியாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால்
ஞானீத் வாத்மைவ மே மதம் –
அஹம் ச சம ப்ரிய -என்றும் அவன் பக்ஷத்தில் இருப்பார் திறத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நித்ய சா பேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்னும் இவ்வர்த்தம் சொல்லுகிறது –
————-
ஆறாம் பாட்டில் –
அபிஜாதையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆச்சார்ய சந்தான ப்ரஸூதர் நமக்கு உத்தேச்யர் என்றும் –
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வபாவம் என்கிறது –
———–
ஏழாம் பாட்டில் –
இளைய பெருமாளை போலே கிருஷ்ணனைப் பிரியாதே இருப்பான் ஒருவன் தங்கையை எழுப்புகிறார்கள்
இத்தால்
பகவத் விஸ்லேஷம் அஸஹ்யமாம் படி அவகாஹித்தார் தங்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
உத்தேச்யராம் அளவன்றிக்கே-
தத் சம்பந்த சம்பந்திகளும் உத்தேச்யர் என்று இருக்கை ஸ்வரூபம் என்கிறது –
—————-
எட்டாம் பாட்டில் –
நம் கண் அழகு உண்டாகில் தானே வருகிறான் -என்று அவயவ சோபையை மதித்து கிடக்கிறாள்
ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் அனுபவ பரிகரமான ஞான பக்தி வைராக்யங்களால் பூர்ணராய் இருக்குமவர் நிறத்திலும்
ததர்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் சா பேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்கிறது –
————–
ஒன்பதாம் பாட்டில்
எல்லார்க்கும் தானே நிர்வாஹகையாய் -எல்லாரையும் தானே எழுப்பக் கடவளாய் சொல்லி விஸ்மரித்து
கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் விஷயத்தில் மூட்டுகையாலே அதிகரித்த
நிர்வாஹகர் முன்னாக பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது –
—————
பத்தாம் பாட்டில் –
எல்லாருடைய திரட்சியும் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால் ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம்
அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால் அந்த ஸமூஹமாக அவர்களை உதகை ஸ்வரூபம் என்கிறது –
———–
ஆக இப்பதினைந்து பட்டாலும் எழுப்பப் பட்டவர்கள் எல்லாரும் கூட வந்து –
மேல் பதினாறாம் பாட்டால்
ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையில் சென்று
கோயில் காப்பானையும் ஸ்ரீ வாசல் காப்பானையும் எழுப்புகிறார்கள் –
———–
பதினேழாம் பாட்டில் –
இவர்கள் திருக் காப்பு நீக்கி -உள்ளே புக விட
ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமான உள் உள்ளாரை அடைய எழுப்புகிறார்கள் –
இவ் விரண்டு பாட்டிலும்
பகவத் விஷயத்தை கிட்டுவார் தாத் ப்ரத்யாஸன்னரை புருஷகாரமாகக் கொண்டு புகுறுக்கை ஸ்வரூபம் என்கிறது –
—————
பதினெட்டாம் பாட்டில் –
இப்படி எழுப்பின இடத்திலும் எழுந்து இராமையாலே தங்களுக்கு புருஷகாரமாக நப்பின்னையை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் விஷயீ காரம் பிராட்டி புருஷகார சாபேஷை என்கிறது –
————–
பத்தொன்பதாம் பாட்டில் –
இவள் திறக்கப் புக -நம்முடையாருக்கு இவள் முற்பட்டாளாக ஒண்ணாது -என்று இவளைத் திறக்க ஒட்டாதே
கட்டிக் கொண்டு கிடக்கிற கிருஷ்ணனை எழுப்பி –
மறுமாற்றம் கொள்ளாமையாலே மீளவும் அவனை உணர்த்துகைக்காக அவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பிராட்டியை புருஷகாரமாக வரித்தால் அவனும் இவளும் இசலி இசலிப் பரியும் பரிவைச் சொல்லுகிறது –
————–
இருபதாம் பாட்டில் –
அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ எங்களை நீராட்டுவீ -என்று
கிருஷ்ணனையும் நப்பின்னை பிராட்டியும் கூட எழுப்புகிறார்கள்
இத்தால்
அடிமை செய்யும் இடத்தில் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்வதே முறை என்கிறது –
—————-
இருபத்தோராம் பாட்டில் –
நப்பின்னைப் பிராட்டியும் -நானும் உங்களில் ஒருத்தி அன்றோ –
நாம் எல்லாரும் கூட கிருஷ்ணனை அர்த்திக்க வாருங்கோள்-என்ன
அவன் குணங்களில் தோற்றார் தோற்றபடி சொல்லி எழுப்புகிறார்கள் –
இத்தால்
பிரபுத்தனாய் தங்கள் கார்யம் செய்கைக்கு
ஏத்த ஏழு உலகம் கொண்ட -என்கிறபடியே
ஆஸ்ரிதரானவர் களுக்கு நிர்மமராய்க் கொண்டு அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யம் என்கிறது –
—————-
இருபத்து இரண்டாம் பாட்டில்
கீழ்ப் பாட்டில் தங்கள் அபிமான ஸூ ன்யத்தையைச் சொல்லி
இப்பாட்டில் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது –
இத்தால்
அவனுடைய விசேஷ கடாக்ஷத்துக்கு தங்கள் அநந்யார்ஹ சேஷத்வம் அனுசந்தேயம் என்கிறது –
—————-
இருபத்து மூன்றாம் பாட்டில் –
உபஸ்தேயை ருபஸ்தித -என்று
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளினுடைய துக்க நிவ்ருத்திக்கு
நாம் முற்பாடராக பெற்றிலோம் என்று வெறுத்தால் போலே
இவர்கள் நோவு படைப்பு பார்த்து இருந்தோம் ஆகாதே -என்று இன்னாதாய் –
அவர்களை அழைத்து செய்ய வேண்டுவது என் என்ன –
இங்கனே சொல்ல ஒண்ணாது -பேர் ஓலக்கமாக இருந்து கேட்டருள வேணும் என்கிறார்கள் –
இத்தால் –
கர்ம பரதந்த்ரராய் இருந்துள்ள பிரயோஜனாந்தர பரரைக் காட்டிலும்
அநந்ய பிரயோஜனராய் சா
தனாந்தர நிஷ்டராய் இருக்குமவர்களைக் காட்டிலும் -சித்த சாதனம் பண்ணினார்க்கு
தம் தாம் கையில் கைம்முதல் இல்லாமையால் ஈஸ்வரனே பிரபுத்தனாய்க் கொண்டு அபேக்ஷித சம்விதானம் பண்ண வேணும்
என்று இவ்வதிகாரத்தில் வியாவ்ருத்தி சொல்லுகிறது –
————-
இருபத்து நாலாம் பாட்டில் –
அப்படியே செய்கிறோம் என்று பிரதிஞ்ஜை பண்ணின படியைக் கண்டு –
தங்கள் வந்த காரியத்தை மறந்து
தற் காலீகமான அழகிலே ஈடுபட்டு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
இத்தால்
அர்த்திகளாகச் சென்றால் தம் தாமுடைய
புருஷார்த்தத்தை விஸ்மரித்து மங்களா சாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வை லக்ஷண்யம் சொல்லுகிறது –
————-
இருபத்தஞ்சாம் பாட்டில் –
ஏதேனும் இப்பிரவ்ருத்திக்கு ஒரு பிரதிபந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி எங்கள் துக்கம் எல்லாம் கெட
விஷயீ கரிக்க வேணும் -என்கிறார்கள் –
இத்தால்
ஸ்வரூப லாபம் அத் தலைக்கே கூறானவோபாதி-துக்க நிவ்ருத்தியும்
அத் தலைக்கே பரம் என்னும் இவ் வர்த்தம் சொல்லுகிறது –
———
இருபத்து ஆறாம் பாட்டில் –
மற்ற அபேக்ஷிதம் என் என்ன நோன்புக்கு வேண்டும் உபகரணங்களை தர வேணும் என்கிறார்கள் –
இத்தால்
துக்க நிவ்ருத்தியோபாதி போக உபகரண சித்தியும் அவனாலே என்கிறது –
—————
இருபத்து ஏழாம் பாட்டில் –
நோற்றால் பெறக் கடவ பேறு சொல்கிறது –
இத்தால்
ப்ரஹ்ம அலங்கார ரேனோலங்குர்வந்தி-
என்று அலங்காராதிகளும் பகவத் பிரசாதாயத்தாம் என்கிறது
————-
இருபத்து எட்டாம் பாட்டில் –
நாட்டார் இசைகைக்காக நோன்பு என்று ஒரு வியாஜத்தை இட்டு புகுந்தோம் அத்தனை
எங்களுக்கு அது உத்தேச்யம் அன்று –
உன் திருவடிகளில் கைங்கர்யம் என்று தங்களுக்கு உத்தேசியமான புருஷார்த்த சித்திக்கு
தங்கள் ஆகிஞ்சன்யத்தையும் ப்ராப்தியையும் முன்னிட்டு –
அவனே உபாயமாக வேணும் என்று அபேக்ஷித்து ஷாமணம் பண்ணிக் கொண்டு
ப்ராப்ய பிரார்த்தனம் பண்ணித் தலைக் கட்டுகிறது –
இதுக்கு கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வபாவங்களை சொல்லிற்று யாயிற்று
இப்பாட்டில்
அதிகாரி ஸ்வரூபமான உபாய ஸ்வீகாரத்தை ஸப்ரகாரமாகச் சொல்லுகிறது
—————
இருபத்து ஒன்பதாம் பாட்டில் –
தங்களுக்கு உத்தேச்யமானது கைங்கர்யம் -என்று பிரபந்த தாத்பர்யம் சொல்லி முடிக்கிறார்கள்
இத்தால்
ஸ்வீக்ருத உபாயத்துக்கு பலமான புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லுகிறது –
————
முப்பதாம் பாட்டில் –
இப் பிரபந்தம் கற்றார் -நாய்ச்சியாராலும் ஈஸ்வரனாலும் சர்வ காலமும் உண்டான விசேஷ கடாக்ஷத்தைப் பெற்று
நித்ய ஸூகிகளாகப் பெறுவர் –
இத்தால்
யுக்தமான அனுஷ்டானம் இல்லாதார்க்கும் அவர்களுடைய பாசுரமே அவர்கள்
பெற்ற பேற்றைத் தரும் -என்று
இப் பாசுரத்தில் ஏற்றத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –
———–
ஆக
திருப்பாவையால் சொல்லிற்று யாயிற்று வேதார்த்தம் –
அதாவது
அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் என்றும்
அவதீர்ணனாவனுடைய வடிவு அழகே ருசி ஜனகன் என்றும்
ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே-அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேச்யர் என்றும்
ப்ராப்யம் ஆகிறது -அனுபவ ஜனித ப்ரீதி காரியமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் என்றும்
தத் சாதனமும் அவன் திருவருளே என்றும் சொல்லிற்று யாயிற்று –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஒண்னான வானமா மா மலை ராமாநுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –