வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –
அவன் ஸுலப்யன் என்று சொல்லி தோழி தலைவியை ஆசிவசிப்பிக்கிறாள்
வாசகம் செய்வது நம் பரமே-யதோ வாசோ நிவர்த்தக்கே -என்று வேதங்களே மீண்டனவே –
வேயகமாயினும்-ஒரு மூங்கில் நடும் சிறு இடங்களையும் விடாமல் அன்றோ அளந்தான்
இரண்டே யடியால்-தாயவன்–ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக என்னா
மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் -என்றபடி இரண்டு அடிகளாலாயே அளவிட்டு முடித்தவன் –
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று–அரசர் குலத்திலே ஒருத்தி மகனாய் வந்து பிறந்து இடையர் குலத்திலே
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்த எளிமை -வாசகம் செய்வது நம் பரமே-
ஆஸ்ரித ஸூலபனாய் கண்ணனாய் வந்த நீர்மை யுடையவன் -உம்மை விரைந்து வந்து சேர்த்துக் கொள்வான்
இந்த நீர்மை -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணும் -அது ஒழிய புகழ சாத்தியப் படுமோ –
————————————————————–
இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண் பால் எனவும் இரங்காது
அறையோ என நின்று அதிரும் கரும் கடல் ஈங்கு இவள் தன்
நிறையோ இனி யுன் திருவருளால் அன்றிக் காப்பு அரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே -62-
நாயகனை நோக்கி நாயகியின் ஆற்றாமையை தோழி கூறுதல் –
தானே இரங்க ப்ராப்தமாய் இருக்க -அப்படி செய்யாததோடு
இவளது பெண்மையையும் ஸுகுமார்யத்தையும் இளமையையும் காட்டி இரங்குமாறு வேண்டிக் கொண்டாலும் இப்பாழும் கடல் இரங்குகிறது இல்லை
மேலில் காணும் கருமை நிறத்தோடு உள்ளுள்ள கருமையும் -கொடுமையையும் -காட்டுவதற்கு கருங்கடல் -என்றது –
இனி -கடல் ஆகிய பெரும் பகையும் யுண்டாய் -தனக்கு நிறை காக்கும் சக்தியும் இல்லையுமான பின்பு –
நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடைக்க -அரவணைமேல் பள்ளி கொண்ட-படுக்கை கொள்ளாமல் கருந்தரையில் இவள் கிடக்க
இவளுக்கு இடம் கொடாமல் மெல்லிய படுக்கை தேடிக் கிடக்கிறீரே –
முறையோ — முகில் வண்ணனே -மேகம் போலே உதார குணம் கொண்ட நீர் இவளுக்கு உதவாமல் இருப்பதும் ஒரு முறைமை தான் –
ஸ்வாபதேசம் –
ஆழ்வார் ஆற்றாமைக்கு வருந்தும் பாகவதர்கள் -சம்சார சாகரம் பயங்கரம் -இவள் ஸ்வரூபத்தை உன் திருவருளால் அன்றி
பாதுகாக்க ஒண்ணாது -ஆதி சேஷன் இடம் கைங்கர்யம் பெறுவது போலே இவள் இடமும் அருள் காட்ட வேணும்
உமது இனிய வடிவை இவர் அனுபவிக்கப் பெறும் படி செய்வதே உமக்குத் தகுதி –
————————————————————————–
வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே – – 63-
தோழி நாயகனை பழித்துச் சொல்வதை பொறுக்காத நாயகி -அவன் திருக் கண்கள் என் நெஞ்சுள்ளும்
கண்ணுள்ளும் தோன்றி நீங்காது இருக்கின்றன –
இங்கனம் அன்போடு அணியனாய் உள்ளவனை அநாதரம் செய்து பிரிந்து சென்றான் என்று பழிப்பாயோ-என்கிறாள் –
வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய-அநு ராகத்தாலும் சீற்றத்தாலும் சிவக்கலாம் -இங்கு குளிர்ந்த வேட்க்கையால் அன்றோ –
தாம் இவையே -மானஸ அனுபவம் மாத்திரம் இன்றியே உரு வெளிப்பாடால் பிரத்யக்ஷம் ஆனவாறு
நினைவின் முதிர்ச்சியால் -அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே
அவன் பூர்ண கடாக்ஷம் தம் நெஞ்சில் நிலை பெறும் படி பேர் அருள் செய்த விதத்தை அறிவித்து அவர்களை சமாதானப் படுத்திய பாசுரம் –
———————————————————-
இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 –
நாயகி திரு நாமங்களை சொல்லி தரித்து இருந்தமை –
ப்ராஹ்மண உத்தமர்கள் வேத மந்த்ரங்கள் ஓதி அனுபவிக்கும் அவனை
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே-என்கிறார் –
கண்ணாலே கண்டு கையாலே அணைக்க ஆசைப் பட்டவருக்கு திரு நாம சங்கீர்த்தனம் மட்டுமே போதாதே
இருக்கார் மொழியால்-ருக்காதி வேதங்கள் பொருந்திய புருஷ சூக்தம் -அன்றிக்கே –திரு மந்த்ரம் –
நெறி இழுக்காமை உலகளந்த-திருத் தாளிணை -வழி படும் முறைமையில் தவறாமல் சர்வ ஸூலபனானவன் திருவடித் தாமரைகளை
வினையொடும் எம்மோடும் நொந்து-அனுபவிக்கப் பெறாத பிரதிபந்தகங்காளல் வெறுத்து
கனியின்மையின்-கருக்காய் கடிப்பவர் போல்-கருக்காய் -பசுங்காய் -இளங்காய் -நைச்சயானு சந்தானம்
யாமுமவா-யாமும் அவ்வோ -அப்படி பாக்யம் செய் தேன் அல்லேன் என்றபடி -அவா ஆசைப்பட்டது தோன்ற
ஒருக்கா வினையொடும் -பரிஹரிக்கப் போகாத வினை என்றபடி –
அபரிஹரியமாய் இருபத்தொரு பாபம் உண்டாவதே-இத்தை அனுஷ்டிக்கைக்கு நான் உண்டாவதே –
————————————————————————–
கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோகரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே – – -65
தலைவியின் நோக்கில் ஈடுபட்ட தலைவன் பாசுரம் –
கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று —இளைய மான் பேடை நோக்கும் நோக்கத்தினும் இவள் நோக்கம் அழகியதாய் உள்ளதே
ஒரோகரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி-தான் நாயகியை நோக்காத பொழுது அவள் தன்னை மனத்தில் பொருந்திய
காமத் குறிப்பு வெளியாம்பாடி அன்போடு நோக்கியும்
தான் நோக்கும் பொழுது அவள் நாணத்தால் எதிர் நோக்காது வேறு ஒரு வஸ்துவை பார்ப்பவள் போலே வேறு இடத்தில் செலுத்தியும்
இப்படி பல கால் விரைவில் நிகழும் பொழுது அவள் கண் பார்வை காதல் அளவும் செல்லுதல் –
தான் கருத்தூன்றியதொரு கார்யத்தைப் பற்றி காதை யடுத்து வினவி-அதனோடு ஆராய்தல் போலும் –
நாயகியின் கண்கள் காது அளவும் நீண்டு விலக்ஷணமாக இருப்பதை வெளியிட்ட வாறு –
உற்றமுறாதும் மிளிர்ந்த -குறிப்பு நோக்கை அனுகூலமாகவும் புறம்பு நோக்குவதை பிரதிகூலமாகவும் கொண்டு –
உலகமெல்லாம்-முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்- யெம்மை உண்கின்றவே-சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரன்
விபூதியின் கண் தமக்கு இந்த நலிவு உண்டாவதே -உண்கின்றன -என்னை வசப் படுத்து கின்றன -நலிகின்றன –
ஸ்வாபதேசம் –
கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று–சம்சாரமாகிய காட்டில் -பேதமையுள்ள மிருகம் போலே
ஐம்புல வழியில் பரவும் ஞான சாதியை அதிசயித்து உத்க்ருஷ்டமான ஆழ்வார் ஞானம்
ஒரோகரும-முற்றுப் பயின்று-ஆழ்வார் ஞானம் அவன் ஸ்வரூபாதி களில் பொருந்தி உன்று ஆராய்ந்து நிலை பெற்ற ஞானம்
செவியொடு உசாவி –செவி -சுருதி -ஆழ்வார் ஞானம் மறைகளு உடன் ஓத்தே இருக்கும் என்றபடி
உலகமெல்லாம்-முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-உற்றமுறாதும் —
எண்ணம் புகுந்து -மானஸ அனுபவம் உற்றது –
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே-பூர்ண அனுபவம் இல்லாத -உறாதத -இரண்டையும் காட்டிய படி
மிளிர்ந்த கண்ணா -எல்லா நிலையிலும் ஆழ்வார் ஞானம் குவியாது விசாலித்து உள்ளபடி
யெம்மை உண்கின்றவே -இப்படிப் பட்ட ஆழ்வார் ஞானம் தம்மை வசப்படுத்திய படி –
———————————————————
தலைமகன் பாங்கனுக்கு கழற்று எதிர் மறுத்தல்
உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 –
கீழே புலக்குண்டல புண்டரீகத்த -பாசுரம் போலே இதுவும் -நாயகி உடைய கண் அழகில் ஈடுபட்டமை –
தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன் தன் உறாவுதல் கண்டு வினவிய பாங்கனைக் குறித்து உற்று உரைத்த பாசுரம் –
வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்-கண்ணாய் -பரம பதம் போல் பேர் இன்பம் வடிவு எடுத்த தலைவியின் கண் –
யோகியர்க்கும்-எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்-யோகம் கை வந்த பரம யோகிகளுக்கும் சிந்தனைக்கு உரியன
அவர்கள் பரம் பொருளை சிந்தனை மாற்றி இவள் கண் அழகையே சிந்தனை செய்வார்கள்
அருவினையேன் உயிராயின-பிரிந்து ஆற்றாமையும் துடிக்கும் அரு வினையேன் -உயிர் போலே தரிக்க முடியாமல் பண்ணுமே –
ஸ்வாபதேசம் –
ஆழ்வார் ஞானத்தின் சிறப்பை பாகவதர்கள் அன்பர்களுக்கு சொல்லும் பாசுரம் –
பரமபதம் போலே அழிவற்ற -அனுபவிக்கத் தக்க ஞானம் -எங்களுக்கு மட்டும் இல்லை நிறைந்த அனுபவம் செய்யும் நித்ய ஸூரிகளுக்கும்
இன்பம் பயக்குமதாய்-யாவரும் மகிழ்ந்து சிரஸ் மேல் வைத்து கொண்டாடும் படியான ஞான வகைகளை காவி மலர்கள் என்கிறது –
———————————————————————–
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – – 67-
தலைவன் தன் ஆற்றாமைக்கு காரணம் சொல்லும் பாசுரம் –
உத்தம லக்ஷணம் ஆகிற ரேகைகள் செம்மையால் செங்கழு நீரையும் -கரு நிறத்தால் நீலோத்பத மலரையும்
கூர்மையாலும் வருத்துவதாலும் ஒளியால் வேலாயுதம் போன்றதும் -குளிர்ச்சியால் வடிவாலும் கயல் மீனையும்
மருட்சி முதலியவற்றால் மான் விழி போன்ற பல வற்றுக்கும் கூட ஒப்பு சொல்ல முடியாத திருப் கண்கள்
என்னை வென்று வருத்தி உயிர் நிலையில் நலிகின்றன
ஸ்வாபதேசம் –
ஆழ்வார் ஞான விளக்கம் -ஆழ்வார் -துஷ்ட நிக்ரஹ சீலத்திலும்-கருடாவாஹன ரூபத்திலும் -உத்தம பிரமாண
ப்ரதிபாத்யனுமாய் புருஷகார பூதையான பிராட்டிக்கு வசப்பட்டவனும் – ஆத்மாக்களை பரிபாலனம் செய்து அருளும் அவனது
வாஸஸ் ஸ்தானம் திரு மலையில் ஆழ்வார் ஈடுபட்டமை –
வேங்கடம் சேர்-இடை விடாமல் நினைந்து கொண்டே இருப்பவர் என்றவாறு
தூவியம் பேடை யன்னாள்-சுத்த ஸ் வ பாவமும் -அர்ச்சிராதி கதி கூட்டிச் செல்ல சாதனம் உடைமையும் பார தந்தர்யமும் சொன்ன படி
வேங்கடம் சேர்-தூவியம் பேடை-அலர் மேல் மங்கை தாயாருக்கு ஒப்பு உடையவள் என்றுமாம்
கண்களாய துணை மலரே-தமக்கும் தம் அடியார்க்கும் துணை யாகும் ஞான வகைகள்
காவியை வென்றது என்றது ரஜஸ் குணங்களை அகற்றி என்றபடி
நீலத்தை வென்றது தமஸ் அகற்றி
வேலை வென்றது என்றது சத்வ குணத்தை கடந்து –
கயலை வென்றது முக்குணங்கள் ஜட பொருள்களை வென்று சஞ்சலத் தன்மை இல்லாமை என்றபடி
இப்படி பட்ட ஞான விசேஷம் எம்மை வென்றதில் அதிசயம் இல்லையே
வியப்புள் என்றது -வியம்புள்-என்று மெலித்தது –
————————————————————————–
மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர்கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – – 68-
கார்காலம் வந்தது அன்று -அவன் வருகையை முன்னிட்டு மகிழ்ந்து கொன்றை மலர்கள் அரும்பின –
கலந்து பிரிந்த தலைமகன் கொன்றை போக்கும் காலத்திலேயே வருவேன் என்று சொல்லிப் போக –
முக்காலமும் வந்து அவையும் போகச் செய்தே
அவன் வாராமையாலே தலைமகள் தளர அத்தைக்கு கண்ட தோழியானவள் –
அக்காலம் அல்ல என்ன ஒண்ணாத படி
அவை முடிகிக் கொடு நிற்கையாலே -இவை பூக்க உத்யோகிக்றன அத்தனை -பூத்துச் சமைந்து இல்லை காண்
ஆன பின்பு அவனும் வந்தான் அத்தனை -நீ அஞ்சாதே கொள் என்று ஆசிவசிப்பிக்கிறாள்-
அக்காலம் அல்ல காண்
என்னும் தோழி கெடுவாய் இவை இங்கனம் மலரா நிற்க அல்ல காண் என்னும் படி எங்கனே என்ன மலர உபக்ரமித்த
அத்தனை காண் -மலர்ந்து சமைந்து இல்லை காண் -என்கிறாள்
மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-மாலைகளாகவும் பொன் மாலையால் சமைந்த வட்டம் போலே சுருளவும் கொன்றை பூத்தலால்-
அம்மலர் அலரத் தொங்குதல் -பந்தலில் கொம்புகளின் இடையில் தொங்க விட்டதை போல் உள்ளதால் –
தழைப் பந்தர் தண்டுற நாற்றி -என்கிறார்
இத்தைக் கண்ட கண்கள் வேறு எங்கும் போகாது என்பதை -புலந்தோய் தழை-
புலம் -நிலம் -தரையிலே வந்து தோயும்படி கவிந்து செழித்து உள்ள தழை என்றுமாம்
வைகுந்த மன்னாய்-எம்பெருமானுக்கு உரியவள் -உன்னைப் பிரிந்து அவன் ஆற்றான்
கலந்தார்-பிரிந்தார் என்னாமல் -கலந்தார் என்றது உன்னை கலந்து உன் தன்மை அறிந்தவர் உன்னை விட்டு இருக்க மாட்டார் என்றபடி
வர வெதிர்கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே-வாசி அறியாத ஸ்தாவரங்கள் கூட வர இருப்பதைக் கண்டு அலரா நிற்க நீ தளர வேண்டுமோ –
தாம் மலர்ந்தால் இவள் கலங்குவாள் என்று அறிந்தும் மலர்ந்த வன் கொன்றைகள்
கார்த்தன -கருக் கொண்டன -அரும்பின் நிலையை ஒழிய மலரின் நிலையை அடைய வில்லையே –
கார் காலத்தை காட்டா நின்றன என்றுமாம் –
எம்பெருமானுக்கு உரியவரே-உம்மை ஆட் கொள்ளாது ஒழியான் -அவன் வரவை ஸூசிப்பிக்கும் காலம் தோன்றா நின்றது
வரும் காலம் இன்னும் அணுகிற்றிலை என்று கூறி ஆற்றிய படி –
————————————————————————–
காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69 –
மாலை பொழுதில் தோழி தலைவிக்கு -இருள் ஆகிய கறுத்த எருதும் ஸூ ரியன் ஆகிய சிவந்த எருதும் பொருகின்றன-
காலையில் பகலுக்குத் தோற்ற இருள் இப்பொழுது வெல்லும் பொருட்டு வந்து மேலிடத்து என்கிறார்
இந்திரியாணி புரா ஜித்வா ஜிதம் த்ரிபுவனம் த்வயா ஸ்ம்ரத்பரிய தத் வைரம் அத்ய தைரேவா மிர்ஜித்த
மண்டோதரி ராவணனுக்கு இந்திரியங்கள் சமயம் பார்த்து ராவணனை நலிய வந்தன என்றால் போலே
காவலில் புலனை வைத்து -என்ற பாசுரத்தில் தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும் அருளிச் செய்தார்
புன் தலை மாலை -நலியும் மாலை -பகலுக்கும் இரவுக்கும் நடுவில் சிறிய பொழுது என்றுமாம்
நீரேற்று –தாரேற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் தாமரை மேல் சீரற்ற தொல் நான் முகத்தோன் விளக்கவும் செம் பொன் முடி
காரேற்ற மேனி அரங்கன் கையும் கழலும் ஓக்க நீர் ஏற்றன வண் திருக் குறளாகி நிமிர்ந்த அன்றே -திருவரங்கத்து மாலை -33-
நெடிய பிரான் -ஓங்கி உலகு அளந்த பராத் பரன்
பூமிப் பரப்படைய நீரேற்றுஅளந்து கொண்டு –
புவனி எல்லாம்-நீரேற்று அளந்த நெடிய பிரான் -அருளாவிடுமே -எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைக்கச் செய்தேயும்
பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கும் மகா உபகாரன் ஆனவன் –
அருளா விடுமே -பிரண யித்வம் போனால் ஸ்வரூப அநு பந்தியான அருளும் -உன் பக்கம்-கார்யகரம் இன்றிக்கே ஒழியுமோ –
வாரேற்றி இள முலையாய்-இப்படிப் பட்ட அழகையும் இளமையையும் விட்டு இருப்பானோ
ஸ்வா பதேசம் –
முன்பு உள்ள அஞ்ஞானம் -பக்தி ரூபா பன்ன செவ்விய ஞானத்தால் கழிந்தது என்றும்
உரிய காலத்தில் அனுபவிக்கப் பெறாமையால் அருள பெற்ற மதி நலமும் அழிந்து மோஹாந்தகாரம் மேலிட்டது என்றும்
வாரேற்றி இள முலையாய்-அடக்கவும் மறைக்கவும் அரிதான பக்தி விசேஷம்
வருந்தேல் உன்வளைத் திறமே -இப்படிப் பட்ட பக்தி வெள்ளம் உடைய நீர் உமது அடிமைத் திறம் குலையும் என்று வருந்த வேண்டா –
————————————————————————
வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70- –
இருள் இன்று என்னை அடியோடு முடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு வந்து நீடிக்கிறதே
வளைவாய்த் திருச் சக்கரத்து-வட்டமான நுனியை யுடைய திருச் சக்கரம் என்றும் -சங்கையும் கூர்மையான சக்கரமும் என்றுமாம்
ஸர்வேச்வரத்வத்துக்கு ஸூ சகமம் -அடிமை கொள்ள -சம்பந்தமும் உடைய -உபய விபூதி நாயகன் -அலங்காரமும் உடைய
சர்வேஸ்வரனை அனுபவிக்க பெறாமையாலே தன்மை குலையும் படி காலம் வரையறை இல்லாமல் வளர்கின்றதே –
————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply