ஸ்ரீ திரு விருத்தம் -பாசுரங்கள்–11-20–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

நாயகன் பிரியாமல் உடனே இருக்கச் செய்தேயும் பிரிந்தானோ என்று அதிசங்கை பண்ணி
விருத்தமாகா நிற்கும் நாயகி நிலையை தோழியை நோக்கியோ
தம் நெஞ்சை நோக்கியோ அருளிச் செய்யும் வார்த்தைகள்

கீழ் எட்டாம் பாட்டில்
நாயகன் பொருள் சம்பாதிக்க தேசாந்தரம் செல்ல நினைத்து இருந்த படியை நாயகி
குறிப்பால் அறிந்து கூறி இருக்கிறாள்
அது நிற்க
பொருள் படைப்பதற்காக நாயகியைப் பிரிந்து போக வேணும் என்று எண்ணிய நாயகன் –
அவளோடு செல்லாமல் சடக்கெனப் பிரிந்தாலும் -அல்லது தேசாந்தரம் போகப்போகிறேன் என்று
சடக்கென பிரிவைத் தெரிவித்தாலும் அவள் மரண பர்யந்தமான கஷ்டத்தை அடைந்திடுவாள் எனக்கருதி
அவள் ஆற்றுமாறு கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிவைத் தெரிவிக்கத் தொடங்கி லோகாபிராம மாகப் பல
பிரஸ்தாபங்கள் பண்ணும் அடைவிலே
உலகத்திலே பொருள் ஸம்பாதிக்கப் பிரிந்து தேசாந்திரம் போகும் விஷயம் ஓன்று உண்டு என்று
பொதுப்படையான ஒரு பிரஸ்தாபம் எடுத்துக்கூற
அவள் அது கேட்டவுடன் -இப்போது இவர் இவ்விஷயம் பிரஸ்தாபித்தது வெறுமனே இல்லை –
இது லோகாபிராம வார்த்தைகளிலே சேர்ந்தது அல்ல – நம்மைப் பிரிந்து போவதற்காகவே
இது அவதாரியை யாகவே வேணும் என்று கருதி
பிரிவு உண்டானதாகவே நினைத்து வருந்தி பிரிவாற்றாமையால் உண்டான பசப்பு என்கிற நிற வேறுபாட்டை
அடைந்து கண்ணும் கண்ண நீராய் இருக்க
அதைக்கண்ட நாயகன் நாம் பிரிந்து போவதாகச் சொல்லாது இருக்கவும் வெறும் வார்த்தையாலே
நம் உட்கருத்தைத் தெரிந்து கொண்ட இவள் நிலைமை இப்படி யாயிற்றே என்று ஆச்சர்யப்பட்டுத்
தோழியை நோக்கிக் கூறொயது என்றாவது நெஞ்சை நோக்கிக் கூறியதாகவோ கொள்ள வேண்டும் –

அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11-

பதவுரை

யாம் இன்று காண்கின்றன–நாம் இப்பொழுது பார்க்கின்றவை
அரியன–(உலகத்தில் வேறு எங்கும் பார்ப்பதற்கு) அருமையானவை;
கண்ணன் விண் அணையாய்–எம்பெருமானுடைய பரமபதம்போல அளவற்ற இன்பம் தருபவளே!
பெரியன காதம் பிரிவு–அதிக தூரங்களான பலகாங்களில் (அவரவர்கள்) பிரிந்து போவதானது
பொருட்கோ–பொருள் சம்பாதிப்பதற்காகவோ?’
என–என்று யான் (பொதுப்படையாக உலக நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்க
(அவ்வளவிலே)
ஞாலம் எய்தற்கு உரியன–எல்லாவுலகங்களையும் தம் வசப்படுத்திக் கொள்ளக்கூடியவையாயும்
ஒரோ குடங்கைப் பெரியன–தனித்தனி ஒரு அகங்களையவ்வளவு பெரியவையாயுமுள்ள
கெண்டை குலம் இவை–கெண்டை மீன்களின் இனமான இக்கண்கள்
ஒள் முத்தும் பை பொன்னும் ஏந்தி–(பிரிவாற்றாமையால் வந்த கண்ணீர்த் துளிகளாகிய அழகிய முத்துக்களையும்
(பசலை நிறமாகிய) பசும் பொன்னையுங் கொண்டு
வந்து பேர்கின்ற–(என் முன்னே) வந்து உலாவுகின்றன;
ஓ–இது என்ன வியப்பு!.

இதுவரையில் நான் எத்தனையோ ஆச்சர்யங்கள் கண்டு இருக்கிறேன்
ஆனால் இன்று காணும் ஆச்சர்யம் என்றைக்கும் காண முடியாது என்று அடங்கா வியப்புத் தோற்ற
பாசுரம் தொடங்கும் போதே
அரியன யாமின்று காண்கின்றன
இது போன்ற அதிசயம் முன்பு எங்கும் கண்டேன் இல்லையே -என்கிறான்
மேல் முழுவதும் இந்த ஆச்சர்யத்தை விவரிக்கின்றான்-

ஸாமான்யமாக உலக நிகழ்ச்சியை நான் பிரஸ்தாபித்த மாத்ரத்திலும் இவளோ
தன்னையே குறித்துச் சொன்னதாக நினைத்து
அதுக்கும் மேலே தன்னைப் பிரிந்ததாக நினைத்து விலக்ஷணமான விகாரத்தை அடைந்து விட்டாளே
இதனின் மிக்கதோர் ஆச்சர்யம் உலகிலே உண்டோ என்கை –

உன்னை நான் பிரிந்து போக ஒருகாலும் பிரிந்து போக முடியாது என்பதை விளக்க மேல்
கண்ணன் விண்ணனையாய்
பரமபதத்தை பிரிந்து வருவார் உண்டோ -உன்னை விட்டு பிரிவார் உண்டோ

கண்ணன் விண் அனையாய் -என்று நாயகியை நான் விளித்துச் சொல்லி இருக்கவும்
இவள் பிரிவைச் சங்கித்தாளே என்று உள் குழைகின்றமை அறியலாம்

-பெரியன காதம் பொருட்கோ பிரிவென
பொருள் சம்பாதிக்க லோகத்தார் த்வீபாந்தரங்களுக்கு செல்லுகின்றனர் அன்றோ

ஓ -வினாவாகவும் கொள்ளலாம் -தெரி நிலையாகவும் கொள்ளலாம்
உலகில் காதலர் காதலிகளை விட்டுப் பிரிந்து த்வீபாந்தரங்களுக்குச் செல்வது பொருள் சம்பாதிக்கப் போவதா என்று
இவள் இடம் கேட்பதாகவும் கொள்ளலாம்
அவர்கள் பொருள் படைக்கவே செல்கிறார்கள் என்று உலக நிகழ்வைத் சொன்னதாகவும் கொள்ளலாம்

ஞாலம் எய்தற்குரியன –
உலகம் முழுவதும் விலை யாகப் பெறுவதற்கு உரியவை என்றும்
உலகம் எல்லாம் ஆசைப்படுவதற்கு உரியவை என்றுமாம்-

வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி
கண்ணீர் பெருக்கு முத்து –
பசலை நிறம் பொன்–
ஆகு பெயர் –

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் -கலியன்
ஊருண் கேணி யுண்டுறைத்தொக்க பாசி யற்றே பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழி பரத்தலானே -குறுந்தொகை -399-

தொட்ட இடங்கள் தோறும் பாசி நீங்கி விட்ட இடங்கள் தோறும் மீண்டும் பரவுதல் போல்
கணவனது கை படும் இடங்களிலே பசலை நிறம் நீங்கி அணைத்த கை நெகிழ்த்தவாறே
அப்பசலை நிறம் படரும் -என்றவாறே

கெண்டைக் குலம் இவையோ
கண்கள் சொல்லாமல் முற்று உவமை –
ஓ -வியப்பிடைச் சொல்

பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து போவதைக் கூறத் தொடங்கின என் முன்
பரந்த கண்கள்
உலகையே விலை பெறத் தக்கவையாய்ச்
சிறந்த முத்தையும் பொன்னையும் ஏந்தி வந்து எதிர் நின்று
நீ பொருட்களுக்கு பிரிந்து போக வேண்டுமோ
இந்த பொன்னும் முத்தும் உனக்காக இங்கே இருக்க –

குளிர்ச்சியாலும் மிளிர்ச்சியாலும் ஓடுதலாலும் மதமதப்பாலும் கண்கள் கெண்டை மீன் போலும்
கெண்டைக்குலம்-என்பதைக் குலக் கெண்டை என்று மாற்றி அமைத்து
உயர்ந்த சாதிக் கெண்டை மீன் எனினுமாம்

இப்பொருள்கள் உனக்கு உரியவையே காண் -என்று கூறுகின்றன போலும்
பிரிவை நினைத்த மாத்ரத்திலே கண்ணீரும் நிற வேறுபாடுமாய் இருந்த இருப்பும் புதியதாக
ஒரு முத்து அணியையும் பொன் அணியையும் அணிந்தால் போலே தனக்கு ஒரு அழகு விளைத்தது என்பது தோன்ற
ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி -என்றான் என்னவுமாம்

வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி-என்று –
ஆழ்வாருடைய ஞான விசேஷத்தையே –அரியன யாமின்று காண்கின்றன-என்றும்

குடங்கை
தட என்பது போல் குட என்பதும் வளைவை உணர்த்தும் -வளைந்த கை என்ற பொருள்
குடக்கை என்று வலி மிகாது குடங்கை என்று மெலி மிக்கதுக்குக் காரணம் உரிச்சொல் புணர்ச்சி யாதலாலே
கண்ணுக்கு குடங்கை உவமை யாதல் ஆக்ருதியில் என்க –

ஒரோ -ஓ அசை
பேர்கின்ற -வினை முற்று -அன் சாரியை பெற வில்லை

—-

ஸ்வாபதேசம்
ஆழ்வாரைப் பிரிந்து திவ்ய தேசம் போகக் கருதிய ஸ்ரீ பாகவதர்கள் தமது பிரிவைப்
பொறுக்க மாட்டாத படியான
அவருடைய ஞான விசேஷத்தைக் கண்டு கூறுதலாம்

அரியன நாம் இன்று காண்கின்றன
இவருடைய ஞான விசேஷம் வேறு எவ்விடத்திலும் காண முடியாது

கண்ணன் விண்ணனையாய்-
எம்பெருமானுடைய பரமபதம் போல்
ஆழ்வாருடைய மகிமையும் பேரின்பமும் பிரகிருதி சம்பந்தம் இல்லாமையும் –
என்றும் வேறுபாடு இல்லாத தன்மையும்
ஆழ்வாரை விளித்த படி

பெரியன காதம் பொருட்கோ பிரிவென-
பரம் பொருளான எம்பெருமானை சேவிக்க நீண்ட தூரம் போவதை –
திவ்ய தேச யாத்ரா பிரஸ்தாபம் செய்த அளவிலே

ஞாலம் எய்தற்குரியன –
எல்லா உலகங்களையும் வேண்டிய வேண்டியவாறு பெறுகைக்கு உரியவையும்
அல்லது
உலகத்தாரை எல்லாம் வசப்படுத்த வல்லவையும்
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே
விசேஷ ஞானமுடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாம் அனுபவிக்கத் தக்கவை என்றுமாம் –

அனைத்து  லோகார்த்தார் பெற வேண்டிய புருஷார்த்தங்களும்
அனைவரையும் வசப்படுத்தும் திறமையும் ஆழ்வாருக்கு உண்டே

ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி
எம்பருமான் உடைய சுத்த சத்வமயமும் ஒளிமயமான தேஜஸ் கொண்ட ஆழ்வார் –

ஒரோ குடங்கைப் பெரியன
கைகளால் ஏந்தி பருகும் படி ஸுலப்யமும் இங்கே உண்டே –
அன்றிக்கே
கைக்கு வசப்பட்டவர் – என்றுமாம்

கெண்டைக் குலம் இவையோ-
எம்பெருமானுடைய மத்ஸ்யாவதாரத்தில் ஈடுபட்டு தன்மயம் ஆனவர் –
ஆழ்வார் உடைய ஞான விசேஷங்கள் பரவி வந்து ஆசையை மூட்டுகின்றன –

இவையோ வந்து-பேர்கின்றவே-
இவை ஆழ்வாரது ஞானத்து வகைகள்
பரவி வந்து -பிரிய ஒண்ணாத படி ஆசையை மூட்டுகின்றன

ஓ இவை என்ன வியப்பு –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பிரிவு தமக்கு ஏற்பட்டு விடுமோ என்று
அதிசங்கை பண்ணி ஆழ்வார் உடைய ஆற்றாமை விசேஷம் இருந்தவாறே –

————————————————————————

நாயகன் பிரியப்பெற்ற நாயகி தன் ஆற்றாமையைக் கூறி நெஞ்சோடு கலாய்த்தல்
அன்றியே
பாங்கியை நோக்கித் தலைமகள் தன் ஆற்றாமையை சொல்லுகிறாள் ஆகவுமாம்

பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—12-

பதவுரை

மணி மாமை–(எனது) அழகிய நிறமானது
பேர்கின்றது–விகாரப் படா நின்றது;
பிறங்கி அள்ளல் பயலை–விளங்கி அடர்தலை யுடைய பயலை நிறமானது
ஊர்கின்றது–மேன் மேல் பரவா நின்றது;
கங்குல்–இராப் போது
ஊழிகளே–அனேக கற்பங்களாக நின்றது;
இது எல்லாம் இனவே–இத் தன்மையுள்ள இவை யெல்லாம்
ஈர்க்கின்ற சக்கரத்து–(கொடியோரை) அறத்திடுகிற திருவாழியை யுடைய
எம்பெருமான் கண்ணன்–எனது தலைவனான கண்ணபிரானது
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயிலே
சார்கின்ற–ஆசைப்பட்டுச் செல்கின்ற
நல் நெஞ்சினார்–(எனது) நல்ல மனம்
தந்து போன–(தான் செல்கிற போது எனக்குக்) கொடுத்து விட்டுச் சென்ற
தனி வளமே–ஒப்பற்ற செல்வங்களாம்.

பேர்கின்றது மணியாமை
மாந்தர்க்கு இளமைப் பருவத்தில் உள்ள நிறம் மாமை எனப்படும் –
தனது மேனி நிறத்தை தானே மணி மாமை என்று புகழ்ந்து கூறுதல் ஆகுமோ எனில் –
ஆகாது தன் நிறத்தை அவன் புகழும் விதத்தால் சொல்லுவது என்க
நாயகனைப் பிரிந்ததனாலே என்னுடைய மேனி நிறம் மாறிப் போயிற்று என்றவாறு –

பிறங்கி யள்ளல் பயலை ஊர்கின்றது
பசலை நிறமானது அடர்ந்து கொண்டே மேல் மேலே பரவத் தொடங்கிற்று என்க
அள்ளல் பயலை -என்று
பசலை வண்டலிடும் தன்மையைக் குறிக்கும்

கங்குலூழிகளே
நாயகன் உடன் கூடிய காலத்தில் ஒரு நொடிப் பொழுதாக கழியும் இரவு பிரிவு காலத்தில்
கல்ப கோடி காலமாக நீள்கின்ற படியைக் கூறியபடி –

இதெல்லா மினவே
அன்றில் தென்றல் திங்கள் கடல் குயில் முதலியவனா எல்லாம் வருத்துவன

ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் –
அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே ஈர்கின்றபடி-சேதன சமாதியாலே ஈர்கின்றது என்கிறார்
பிரதிகூலரைப் போய் ஈரும்-
அனுகூலரை கையில் சேர்த்தியாலே ஈரும்-
பிரதிகூலரை ஆண்மையாலே கொல்லும்-
அனுகூலரை அழகாலே கொல்லும்

தண்ணம் துழாய்-சார்கின்ற நன்னெஞ்சினார் –
அவன் சம்பந்தம் பெற்ற திருத் துழாய் சம்பந்தம் கிடைத்ததே பெரும் பேறு என்று ஈடுபட்டு
கிடைக்குமோ கிடையாதோ என்று ஆராயாமல் மேல் விழுந்ததால் –
சார்ந்தது என்கிறார்
என்னை வருந்த விட்டு உடையவன் இடம் சென்ற மிக்க வேட்க்கையுடைய நல்ல நெஞ்சே -மகிழ்ந்து சிறப்பித்து
உயர் திணையாக நெஞ்சினார் -கோபத்தாலும் என்னவுமாம் –

தந்து போன தனி வளமே–
மேனி நிறம் மாறப்பெற்றதும் –
பசலை நிறம் படர பெற்றதும்
இரவு நீடிக்கப் பெற்றதும்
நான் வருத்தப் பெற்றதும் பாக்கியமே –

வளமே –
எதிர்மறை லக்ஷணை என்றுமாம்
நெஞ்சு இழந்து வருந்தி ஆற்றாமையால் ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ —
இழந்தது மாமை நிறமே -என்று வருந்தும்படி –

ஆழ்வார் தமது அகக்கண்ணால் எம்பெருமானைக் கண்டு வைத்தும்
சேரப்பெறாது நெஞ்சு இழந்து தனித்து வருந்துபவராய் தமது ஆற்றாமையைக் கூறுதல் இதுக்கு உள்ளுறைப் பொருளாம்
எம்பெருமான் கையும் திருவாழியுமாய்த்
தோளும் தோள் மாலையுமாய்
ஸேவை சாதிக்கிற நிலையிலே ஸேவிக்கப் பெற வேணும் என்று ஆசைப்பட்டு
அது கிடையாமையாலே ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ -என்று வருந்தவும்
சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையர்க்கு –கொங்கலர் தண்ணம் துழாய் முடியர்க்கு என் மங்கை இழந்தது மாமை நிறமே
என்று கிலேசிக்கவும் நேர்ந்ததே என்றார் ஆயிற்று

——————————————————————–

நாயகனைப் பிரிந்து ஆற்ற மாட்டாத நாயகி இருளுக்கும் வாடைக்கும் கஷ்டப் பட்டுக் கூறும் பாசுரம் இது
இந்திரியங்கள் பகலிலே பகலிலே பலவகைப்பட்ட பொருள்களை நாடி இருக்கக் கூடி இருக்குமாதலால்
நாயகன் பிரிவை ஒரு விதமாக ஆறி இருக்கலாம்
இரவில் மனம் அவனையே நாடி இருப்பதாலும் கலவிக்கு உரிய காலமாதலாலும்
இராப்பொழுதிலே ஆற்ற மாட்டாது இருப்பது இயல்பே
இப்பராங்குச நாயகியும் அவ்வாறே வருந்துகிறாள் என்க

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
தினி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-

பதவுரை

தனி வளர்–ஒப்பில்லாமல் வளருந்தன்மையுள்ள
செங்கோல்–(தனது ஒளியாகிய) அரசாட்சியை
ஈடாவு–(எங்கும் தடையின்றிச்) செலுத்துகிற
தழாய்வாய் அரசு–வெப்பம் வாய்ந்த ஸுர்யனாகிய அரசன்
அவிய–ஒழிய
பனி வளர் செங்கோல் இருள்–(ஜனங்களுக்கு) நடுக்கத்தைச் செய்கின்ற ஆட்சியையுடைய இருளாகிய சிற்றரசு
பார் முழுவதும்–பூமி முழுவதும்
வீற்றிந்தது–அரசு வீற்றிருந்தது;
இனி–இனி மேல்,
நுனி வளர் காதல்–துன்பத்தை அதிகப்படுத்துகிற என் ஆசைக்கு இலக்கான
துழாயை–(தலைவனது) திருத்துழாய் மாலையை
துழாவு–அளைந்து வருகிற
தண் வாடை–குளிர்ந்த காற்றை
தடிந்து–தண்டித்து (அழித்து)
வளை–(பிரிவாற்றாமையால் மெலிந்த எனது கைகளினின்று கழன்று விழத்தொடங்கின) வளைகளை
காப்பவர்–கழலவொட்டாது தடுத்துப் பாதுகாப்பவர்.
ஆர்–யாருளர்?
(எவருமில்லை.)
ஊழிகள்–(கற்பக வடிவங்கொண்ட இராத்திரிகள்
எனை–என்னை
ஈர்வன–விளக்குந்தன்மையுடையன.

பேரரசர் தலை சாய்ந்தால் சிற்று அரசர்கள் தலை விரித்து ஆடத் தொடங்குவார்கள் –
இருளாகிற சிற்றரசு தலை விரித்து ஆடுமே
சூரியனின் உஷ்ண கிரணமும்
அரசனுடைய பிரதாபமும்
ஆகிய இரண்டும் தழல் வாய் என்றதால் சொல்லப் பட்டது

சூர்யன் மறைய என்னாமல்
அவிய
-என்றது –
மீண்டும் உதயம் ஆகாமல் இரவே நீண்டதை சொல்லுமே
ஸூர்யன் அழிந்தான் என்னுமா போலே –

இருள் செங்கோல் நடத்துவது விபரீத லக்ஷணை –
பிரிந்தாரை வருத்துதலாகிற கொடும் தொழிலைச் செய்வதால்

பார் முழுதும் வீற்று இருந்தது –
உலகம் முழுவதையுமே தன்னுள்ளே யாக்கிக் கொண்டு -தன்னை எதிர்ப்பார் இல்லாமையாலே
தன் பெருமை தோற்றும்படி இருக்கிறது என்றபடி
ஸூர்யன் அரசு ஆண்ட இடம் எங்கும் இருளுக்கு வீற்று இருக்க மாத்ரமே இடமாயிற்று
நாடு எங்கும் பரவி விரஹிகளை நலியும்

இதற்கு மேலே
துளாயை துழாவு தண் வாடை தடிந்த

கூடி இருந்த காலத்து இன்பம் செய்த வாசனையால் தண் வாடை என்கிறாள்
விபரீத லக்ஷணை -வெவ்விய வாடை –

தடிந்து
வெட்டி உருவம் இல்லாத காற்றை வெட்ட முடியுமோ
அது செய்யும் துயரம் பொறுக்க உண்ணாமல் கோபத்தில் சொன்ன வார்த்தை

இனி
காப்பவனான நாயகனும் பிரிந்து
இம்சிக்கும் இராப்பொழுதும் வந்த பின்பு

வளை காப்பவர் ஆர்
புணர்ச்சியை உண்டாக்கிக் தருவார் யார் –

ஸ்வாபதேசம்
ஸர்வேஸ்வரனுடைய பிரிவுக்கு ஆற்றா மாட்டாமல்
அறிவு குலைந்து
மோகம் தலையெடுத்து
தளர்ச்சி பிறந்து
தஞ்சம் தேடும்படியான நிலையில் ஆழ்வார் அருளிச் செய்க்காது

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
இருளை ஒழிப்பதும் -வெவ்வியதும் -தடையற்றதும் -ஒப்பிலாதான கதிரவன் ஒளி போல்
மதாந்தரங்களை ஒழித்து -அதனால் பிரதாபம் மிக்கு
எம்பெருமான் கட்டளையை தடை அற நடத்தி -அதனால் ஒப்பில்லாத விவேகமும் குலையும் படி –

பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது
வருத்தத்தை வளரச் செய்கிற பெருமையை யுடைய மோஹ அந்தகாரம் பரவி விட்டது -இனி மேல்

பார் முழுதும்-துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
அன்புக்கு விஷயமான எம்பெருமான் போக்யதை நினைப்பூட்டி -இவ்வுலகப் பொருளை விலக்கி

இனி வளை காப்பவர்
மறந்தும் புறம் தொழா அடிமைத் தனத்தை பாதுகாப்பார் யார் –வளை-அநந்யார்ஹ சேஷத்வம்

ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-
-கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -கால விளம்பம் அஸஹ்யம் -என்றவாறு –

————————————————————————

நாயகன் நாயகியினது நன்மையைக் கொண்டாடி -நலம் பாராட்டு துறையில் அருளிச் செய்தது
மூன்று காரணங்கள்
அழகிலே ஈடுபட்டு பேசுவது
விஸ்லேஷத்தில் தன்னுடைய தரிப்புக்கு
நம்மைப் பிரிந்து நெடும்காலம் இருக்க மாட்டாமல் கடுக வந்திடுவார் என்று உணர
நாயகியின் கண் அழகிலே ஈடுபட்டுப் பேசும் பாசுரம் இது

ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14-

பதவுரை

ஈர்வனவேலும்–(பகையைப்) பிளப்பனவான, வேல்கள் போலவும்
அம் சேலும்–அழகிய சேல்மீன்கள் போலவும் உள்ளனவான
இவை-இவை
உயிர்மேல் மிளிர்ந்து–(எனது) உயிரை வசப்படுத்தும் பொருட்டு அதன் மேற்பாய்ந்து
பேர்வனவோ அல்ல–(அதைவிட்டு) நீங்குவன அல்ல;
தெய்வம்–தெய்வத் தன்மையை யுடைய
நல்–அழகிய
வேள்–மன்மதனுடைய
கணை–அம்புகளினுடைய
பேர் ஒளிய–சிறந்த ஒளியையே
சோர்வன–தாம் வெளியிடுவன
நீலம்–நீலமணியினுடைய
சுடர்–ஒளியை
விடு–வீசுகின்ற
மேனி–திருமேனியை யுடையனான
அம்மான்–எம்பெருமானது
ஊர் விசும்பு–திருநாடாகிய பரமபத்தை
தேர்வன–(தனக்கு, ஒப்பாகத்) தேடுந் தன்மையுடையன;
இ செழு கயல்–கொழுதத் கயல் மீன்களென்று சொல்லத்தக்க இவை
தெய்வம் அன்னீர கண்ணோ–(மோஹினியென்னும்) பெண் தெய்வத்தையொத்த உமது
கண்ணோ–கண்களோ?

நாயகியின் கண் அழகில் ஈடுபட்டு -கூர்மையான நோக்கால் வருத்தும் என்பதால் –ஈர்வன வேலும் –
மீன் போலே மடப்பமும் பிறழ்ச்சியும் –அம் சேலும்
வேல் போலவும் என்னாமல் -உவமை உருபு தொக்கி நிற்கிறது
அநித்யமாய் நாசம் அடையும் உடம்பை மட்டும் இன்றி நித்தியமாய் அழியாத உயிரையும் அழியச் செய்யுமே

வேள் கணை பேரொளியே சோர்வன
ஓயாத சிந்தையை விளைத்தல் -நிறத்தை வேறு படுத்துதல் போன்ற
மன்மதனுடைய பஞ்ச பானங்கள் செய்யும் தொழில்களைச் செய்யுமே

நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்-தேர்வன
ஒரு கால் அனுபவித்தவர்கள் திரும்ப முடியாததால் மீளா ஸ்ரீ வைகுண்டத்தை ஒத்தும் –
லீலா விபூதியை அகப்படுத்திக் கொண்டதில் திருப்தி பெறாமல்
பரமபதத்தை வசப்படுத்திக் கொள்ள தேடும்
பரம பதத்தை தேடும் -என்றும் பரமபதத்தினால் தேடப்படுகின்றன -என்றும்
நித்ய முக்தரும் ஆசைப்படும் கண்கள் என்றவாறு –

இங்கு நம்பிள்ளை ஈடு
அந்நீர -தைவங்களினுடைய ஸ்வ பாவத்தை யுடையனவாய் யுள்ளன என்னுதல்
அதாவது திவ்யம் என்று சொல்லத்தக்க நீர்மை
அன்றிக்கே
தெய்வம் அன்னார்-முன்னிலை பன்மைக்குறிப்பு – என்று
இவர்கள் தங்களுக்குப் பேராக்கி அப்ராக்ருத ஸ்வ பாவைகளான உங்களுடைய என்னவாய் இருந்தன

தைவம் அந் நீர கண்ணோ
தெய்வங்களின்  ஸ்வ பாவங்களை யுடையனவாய் உள்ளன –

தெய்வம் அன்னார்
இவர்கள் தங்களுக்கு பேராக்கி அப்ராக்ருத ஸ்வபாவைகளான உங்களுடைய என்னவாய் இருந்தன –
திவ்யம் என்று சொல்லப்பட்ட அப்படிப்பட்ட நீர்மை -தன்மை -என்றபடி

ஸ்வாபதேசம்
ஆழ்வாருடைய ஞான விளக்கத்தைக் கண்டு கொண்டாடும் பாகவத வார்த்தை
இதுக்கு உள்ளுறைப் பொருள்
ஸ்வாபதேசத்தில் தலைமகன் -ஸ்ரீ வைஷ்ணவர்கள்

ஈர்வன வேலும் அஞ்சேலும்
இவரது ஞானத்தின் கூர்மையும் நீர்மையும்
புற சமயிகளைத் தோற்கடித்து
ஸ்வ கீயர்களை உகப்பிக்கும் தன்மையும் சொன்னபடி

உயிர் மேல் மிளிர்ந்து இவையோ பேர்வனவோ அல்ல
இவருடைய ஞானம் சேதனர் யாவர் இடத்தும் பூர்ணமான அருளைத் தவறாமல்
கொண்டுள்ளமையைச் சொன்னபடி

தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
மன்மத பாணங்கள் போல் ஸூ குமாரமாய் உள்ள ஞானம்
கேவல முரட்டு ஞானம் அன்றே
பக்தி ரூபா பன்ன ஞானம் அன்றோ
மதி நலம் அருள பெற்றவர் தானே

நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன
இருள் தரும் மா ஞாலத்து இனிப்பிறவி யான் வேண்டேன் என்று வெறுத்து
நித்ய விபூதியிலே நித்ய கைங்கர்யம் தேடும் ஞானம்

தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே –
தேவரீர் லோக விலக்ஷணமாய் இருப்பது போலவே
தேவரீருடைய ஞானம் லோக விலக்ஷணம்

————————————————————————–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அவதாரிகை-
இயற்கையிலே கலந்து பிரிந்த தலை மகன் ,இரண்டாம் கூட்டத்துக்காக புனத்திலே வந்து கிட்ட கடவதாக குறி வர விட்டு போய்,
கால அதிக்கிரமம் பிறந்து பின்பு,அங்கே கிட்டினவன்,,இவர்களை கண்டு கலங்கி,அசந்கத பாஷணம் பண்ண,
அவர்களும் அத்தை கொண்டு,இவர் வருவதாக போன படிக்கும்,வந்த படிக்கும்,
இப்போது ஆற்றாமை தோற்ற பேசுகிற பேச்சுக்கும் ஒரு சேர்த்தி,கண்டிலோம் என்று சிரித்து கொண்டாடுகிறார்கள்..
இவனும் வீரன் ஆகையாலே, என்றும் ஆனை வேட்டைக்கு போம் பழக்கத்தாலே ,ஆனை வேட்டையை வினவி கொண்டு,
செல்ல கடவதாக நினைக்கிறான்,..
பிடியை இழந்த தொரு களிறு,தன் ஆற்றாமையாலே,அமாணனை பட்டு திரியுமா போலே ,
இவர்களை இழந்து ,தன் ஆற்றாமை யோடு திரிகிற படியை அன்யாபதேசத்தாலே ,ஆவிஷ்கரிகிறான்-

காந்தர்வ விவாக முறையிலே நாயகியோடே புணர்ந்து தெய்வம் பிரிக்கப் பிரிந்த நாயகன்
நாயகியும் தோழியும் தினைப்புனம் காக்கும் வியாஜத்தாலே தனது வரவை எதிர்பார்த்து இருக்கும்
கொல்லைப் புறத்திலே காலதாமதமாகச் சென்று நின்று
இவர்கள் மனம் சினம் கொண்டு இருக்கும்
அன்பு வார்த்தைகள் பேசலாகாது
இவர்கள் மனம் அறிய அந்நிய பரமான சாதாரண வார்த்தைகளைப் ப்ரஸ்தாபித்து

வேட்டை கருதிச் சென்றானாக வினவ -காலை மான் வினாதல் -வழி வினாதல் -பெயர் வினாதல் –
தீர்த்தம் கிடைக்குமா -சுண்ணாம்பு கிடைக்குமா –
அபேக்ஷைகளை வியாஜ்யமாகக் கொண்டு புகுந்து வார்த்தை சொல்லவும் கருத்தறிந்து கொள்ளவும் இடம் பெறுதல்
பேசத்  தொடங்கினாலும் நாயகியின் கண் அழகில் ஈடுபட்டு இவை கண்களோ கயல்களோ கேட்க
இவன் கருத்தை அறிந்த தோழி அவன் ஆசையை மறுப்பதாக பிறர் அறியவும்
தலைவியின் ஆற்றாமையும் அன்பையும் மிகுத்து இருப்பதையும் உணர்த்துகிறாள்

அன்பு மிகுதி தோற்றும் விதமாகவும்
அன்பை மறுத்து உரைக்கும் விதமாகவும்
அமைந்து இருக்கும் சொல் போக்கு அறிந்து அனுபவிக்க வேண்டும்

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

பதவுரை

களிறு வினவி–யானை (இங்குவரக கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி
கயலோ நும கண்கள் என்று நிற்றீர்;–‘உங்கள் கண்கள் கயல்மீன்கள் தாமோ?’ என்று (எங்கள் கண்களைக் கொண்டாடிக்) கால் பேராமல் நின்றீர்;
அயலோர் அறியிலும்–அயலார் அறிந்தாலும்
ஈது என்ன வார்த்தை–இது என்ன பொருந்தாத வார்த்தை;
கடல் கவர்ந்த–கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும்
புயலோடு உலாம்–மழையோடு மந்தமாகச் சஞ்சரிப்பதுமான
கொண்டல்–காளமேகம் போன்ற
வண்ணன்–(குளிர்ந்த) திருநிறத்தை யுடையனனான எம்பெருமானது
புனம் வேங்கடத்து–(பல) கொல்லைகளையுடைய திருவேங்கட மலையிலே
கொல்லை காக்கின்ற நாளும் பல பல–(நாங்கள்) கொல்லை காத்து வருகிற மிகப்பல நாள்களிலொன்றிலும்
எம்மோடும் பயலோ இலீர்–எங்களோடு (நீர்) பாகமுடையீரல்லீர்.

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்- அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை–
அசங்கதமான இது என்ன வார்த்தை
பேச்சை நிறுத்தும் மேல் எழுந்த அபிப்ராயம்
கண் அழகில் ஈடு பட்டீர்  ஸந்தோஷம்-களிறு வினவி நிற்பது தகுமோ –
நும் அன்பை அயலார் அறியட்டும் — குடியா கெட்டுப் போகும்

இதுக்கு இரண்டு படியாக யோஜனை
யானையைப் பற்றி மட்டும் பேசாமல் கண் அழகையும் பேசுகிறீரே
அக்கம் பக்கத்தில் உள்ளார் செவிப்பட்டால் என்ன நினைப்பார்கள்
சம்பந்தம் உண்டு போலும் என்று குடியைக் கெடுப்பார்களே இப்பேச்சுகளை நிறுத்தும் -என்றும்
உமது கண் அழகில் ஈடுபாட்டைக் கண்டு மகிழ்ந்தோம்
களிறு வினவ வேண்டுமோ
நமது சம்பந்தத்தை அயலாரும் அறியட்டுமே
குடியா கெட்டப் போகும்
வந்த காரியத்தை விட்டு களிறு வினவுதல் ஒரு வார்த்தை வேண்டுமோ

அயலார் -என்றது
நாங்கள் உமக்கு அயலார் அல்லோம்
நீர் எங்களுக்கு உரியவர்

புன வேங்கடதெம்மாடும்-பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–
பயல் என்று பாகமாய்
எங்களுக்கு உம்மோடு கூட்டுப் பயிர் இல்லையே
நெடு நாள் கூட்டுப் பழக்கம் உடையவர் போலே நின்று பேசாதீர் மேல் எழுந்த அபிப்ராயம்
உம் வருகையை எதிர் பார்த்து கொல்லை காத்தோம் -இது ஒரு வியாஜ்யமே

பயலோ இலீர்
நெடு நாள் பழகினாலும் கண்டு அறியாதது போலே என்றும் புதியனவாய் உள்ள உமது அழகுடைமை முதலியன -என்றுமாம்
இங்கனம் தலைமைகளின் காதலைத் தலை மகனுக்குத் தெரிவித்தபடி –

————————————————————————-

நாயகனோடு கூடி இருந்து பிறகு விதி வசத்தால் பிரிந்த நாயகி -அப்பிரிவை ஆற்ற மாட்டாதாளாய்
இராப்பொழுதைக் கடக்க மாட்டாமையைத் தோழிக்கு உரைக்கிறாள்
நித்ய சம்ஸ்லேஷ அபி நிவேசத்தை வெளியிட்ட படி

அன்றிக்கே
கலந்த ஸம்ஸ்லேஷத்தின் தன்மையைத் தோழி வினவ
பிரிந்த போது காலம் நெடுக்குவது போல் கூடிய பொது காலம் குறுகின படி என்னே என்று
கலவியின் சிறப்பைச் சொன்னபடி –

நீங்கில் ஊழியாயிடும் -கூட்டில் நாழிகை கூறாயிடும் -என்று
மாறிச் சென்று அந்வயிப்பதால்
எதிர் நிரல் நிறைப்பொருள் கோள்
மொழி மாற்று நிரல் நிறை
மயக்க நிரல் நிறை –என்பதுவும் இதுவே –

பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-

பதவுரை

கண்ணன் விண் அனையாய்–எம்பெருமானுடைய பரமபதம் போல மிகப் பிரியமானவளே!
பல பல வழிகள் ஆயிரம்–(நாயகரைப் பிரிந்த நிலையில் இருட்பொழுது) மிகப்பல கற்பகங்களாக நிற்கும்;
அன்றி–அதுவல்லாமல்
(நாயகரோடு கூடியிருக்கும் நிலையில் இந்தப் பொழுதுதானே)
ஒரு நாழிகையை பலபல கூறு இட்ட கூறு ஆயிடும்-ஒரு நாழிகையைப் பலபல பகுப்புகளாக்கிய கூறுகளில் ஒரு கூறாக ஆகா நிற்கும்;
அன்பர்-நாயகர்
பல பல நாள் கூடினாலும்-பல பல நாள் கூடிநின்றாலும்
(காலம் மிகச் சுருங்குதலால்)
யாம் மெலிதும்-யாம் வருந்துகிறோம்; (ஆதலால்)
(அன்பர் பல பல நாள்) நீங்கினாலும்–(நாயகர் பலபல நாள்) நீங்க நின்றாலும்
(காலம் மிக வளர்தலால்)–
யாம் மெலிதும்–யாம் மிக வருந்துகிறோம்;
(ஆதலால்)
இ பாய் இருள்–இந்தப் பரந்த இருட்பொழுது
பல பல சூழல் உடைத்து–சிறுமைக்கும் பல உபாயமுடையதாய்ப் பெருமைக்கும் பல உபாயமுடையதாயிரா நின்றது.
பல பல சூழல் உடைத்து–அம்ம வாழி- எந்த நிலையிலும் வருத்துகின்ற இவ்விருட்பொழுது)
அந்தோ! வாழ்க.

அன்பார் நீங்கில் பல பல ஊழிகளாயிடும்
ஊரெல்லாம் துஞ்சி
அன்பர் நீங்கில் ஊழியாய் விடும் -கூடில் நாழிகை கூறாயிடும்
க்ஷணம் அணுவத் ஷிப்த பராதி காலயா -ஸ்தோத்ர ரத்னம் -44-பிரமன் ஆயுள் காலம் பரம் -அதில் பாதி பரார்த்தம்
கோழி கூவும் என்னுமால் தோழி நான் செய்கேன் ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்று கோழி கூவும் என்னுமால் -கலியன்

ஆச்சர்யமாக லீலா ரசங்களை அனுபவிக்கத் தொடங்கி விட்டால்
பலகோடி நூறு சம்வத்சரங்களும் அவலீலையாகக் கழிந்து போமே

இப்பாய் இருளே பல பல சூழல் உடைத்து அம்ம வாழி
இராப் பொழுதின் சாமர்த்தியம் என்ன
கலவியில் குறுகக் கற்றது
பிரிவில் நெடுகக் கற்றதே

– சூழல்
சூழ்ச்சி விரகு-நிந்திக்க வேண்டும் இடத்தில் வாழி -விபரீத லக்ஷணை –
காலத்தின் தன்மையை வியந்து நொந்த படி

உள்ளுறைப் பொருள்
பாகவதரைக் கூடிய பொழுது காலம் குறுக
பிரிந்த பொழுது காலம் நெடுக
தாம் படுகிற தளர்ச்சியை ஆழ்வார் அருகில் உள்ள பாகவதர்களுக்குச் சொன்னபடி

இப்பாய் இருளே-மோஹ அந்தகாரம்
கண்ணன் விண் அனையாய்-கால பரிமாணம் அல்லாத பரம பதம் போலே–உள்ள நீங்கள் என்று கொண்டாடின படி –

அம்ம வாழி என்றது
தான் நினைத்த வடிவு கொள்ள வல்ல காலத்தின் தன்மையை வியந்து நொந்த படி

————————————————————————–

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்னும் துறை இது –
இத்துறை திருக்கோவையாரில்
உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப யுடையவனாட் கொள்ளுமவரில் ஓர் கூட்டம் தான் குனிக்கும் புலியூர்
விள்ளும் பரிசு சென்றார் வியன் தேர் வழி தூரல் கண்டாய் புள்ளும் திரையும் பொரச் சங்க மார்க்கும் பொரு கடலே

களவு முறையால் நாயகியைப் புணர்ந்து நின்ற நாயகன் அதனால் ஊரெல்லாம் பழி பரவுதலை அறிந்து
அப்பழி தூற்றல் அடங்குமாறு சில நாள் பிரிந்து இருக்கக் கருதி நாயகிக்கு கூறாமல்
தான் பிரிவதை அறிந்தால் அவள் வருந்துவாள் என்றும் அவள் அறியாதபடியும் ஊரார் அறியாதபடியும் இருளிலே பிரிந்து செல்ல
அப்பிரிவை அறிந்து ஆற்றாது வருந்தும் நாயகி அவன் தேர்ச்சக்கரம் சென்ற அடையாளத்தை நோக்கி
அவன் திரும்பி வரும் அளவும் அதனையே தனது உயிருக்குப் பற்றுக் கோடாகப் பாவித்துப் பார்த்துக் கொண்டு இருக்கையில்
அங்கனம் பிரிந்து இருக்கும் இடம் நெய்தல் நிலம் ஆதலால் அத்தேர்க்கால் அடையாளத்தைக்
கடலின் அலை வந்து அழிக்கப் புக அழித்திடாதே என்று அதனை வணங்கி வேண்டிக்கொள்ளுமதாயிற்று இது –

தேர் வழி நோக்கிகே கடலோடு கூரும் துறை -பிரிந்து இரங்கும் இடம் நெய்தல் –
கடல் கரையில் தேர்க்கால் அடையாளம் கண்டு கொண்டு தரிக்க ஒட்டாமல் –
கடலின் அலை வந்து அழித்திடாமல் இருக்க வேண்டி அதனை வணங்கி வேண்டிக் கொள்ளுமது –

முன்பு ஸ்ரீ ராமபிரான் வனவாசம் யாத்ரை புறப்பட்ட பொழுது உடன் சென்ற
அயோத்யா நகர ஜனங்கள் அறியாத படி தேர் ஏறிச் சென்றால் போல்
இங்கு மறைத்துப் போகாமல் போன வழி தெரியும் படி போனதே இவ்விடத்துக்கு வாசி –

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–17-

பதவுரை

இருள விரி–இருளை வெளியுமிழ்கிற
நீலம்–நீலரத்தினம் போன்ற
கரு–கருமை நிறமுடைய
ஞாயிறு–ஸூர்யமண்டலமென்று
சுடர் கால்வது போல்–ஒளி வீசுவது போல,
இருள் விரி சோதி பொருள்–கருமை நிறம்
அரவணைமேல்–சேஷ சயனத்தின்மேல்
உறையும்–நித்யவாஸம் செய்யப்பெற்ற
எறி கடலே–அலை வீசுகிற கடலே!
வாழி–வாழ்வாயாக:
இருள் விரிந்தால் அன்ன–இருள் பரப்பினாற்போன்ற
மா நீர் திரை கொண்டு–கருத்த நீரையுடைய அலைகளால்
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல்–இருளிலே என்னை விட்டுப் பிரிந்து சென்ற நாயகருடைய தேர் போன வழியை அழியா தொழிவையாக

கடலே அன்பருடைய தேர் வழியை இருள் விரிந்தால் போல் மா நீர்த் திரைகளைக் கொண்டு
தூரல்
எதிர்மறை ஏவல் ஒருமை
மறைத்திடாதே என்று கைகூப்பி யாசிக்கின்றாள்
தேர் வழி தூராமல் தனக்கு உதவும் பொருட்டு வாழியரோ என்று வாழ்த்துகிறாள்
கடலே உனது தலைவன் உன்னை விட்டுப் பிரியாமல் நித்ய வாஸம் பண்ணுவதால்
பிறவித் துயர் அறியாதே களித்து கிளர்ந்து உள்ளாய் நீ

அபூத உவமையால் அவன் திருமேனியை -நீல ரத்னம் போன்று கரிய நிறமுடைய சூர்ய மண்டலம்
ஓர் கரு நாயிறு -அந்தமில்லாக் கதிர் பரப்பி வளர்ந்தது ஒக்கும் அம்மான் -திருவாய் -8 -5 -7 –
இருள் விரி -நீலம் -கரு-மூன்றுமே -ஒரு பொருள் பன் மொழி -மிகவும் கரிய சூர்யன் –

திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல்-

நடுவில் வாழியரோ-என்று சரணம் புகுகிறாள்

பகல் பட போனார் ஆகில் ஆற்றாமையாலே கடக்க மாட்டாது ஒழிகிற படியும்
அவர் முகத்தில் உண்டான குளிர்த்தியும் ஸ்மிதைதையும் கண்டு
தரித்து இருத்தல் ஆகாது –அவர் தாமும் பகல் போகில்-இவளை கண்டு வைத்து கால் நடை தாராது –என்னும் படியே போனார்

எங்கேனும் போனாரும் சேரும் காலத்திலேயே போனார் –பதார்த்த தரசனங்களாலே ஆறி இருக்க ஒண்ணாத
ஸம்ஸ்லேஷிக்க வேண்டிய காலத்திலேயே போனார்
-பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்வாபதேசம்
அன்பரான பாகவதரைப் பிரிந்து வருந்தும் நிலையே -அவர்கள் இடம் இடைவிடாமல்
மநோ ரதம் செலுத்தி ஆறி இருக்கும் ஆழ்வார்
அந்த மநோ ரதத்தை குலையாது ஒழிய ஸம்ஸாரமாகிற கடலை வேண்டிக்கொண்டபடி
துன்ப அலைகளையே மேல் மேல் தருவதால் ஸம்ஸாரம் கடல் தானே –
தமக்கு இத்தீங்கு செய்யாமைக்காக வாழியரோ என்கிறார் –
சம்சாரத்துக்கு உள்ள பகவத் ஸம்பந்தத்தைக் காட்டி -அவனுக்கு லீலா விபூதி தானே –
உறவு கொண்டாடுகிறார் பின்னடிகளில்

சம்சாரத்தை அலை வீசும் பெரும் கடல் -பாகவதர்கள் சம்ச்லேஷம் குலையாமல் இருக்க வேண்டி –
மோஹ அந்தகார பெருக்கு -உண்டே
அவற்றால் குலையாமல் இருக்க வேண்டி – கொள்கிறார் –

————————————————————————

கலந்து பிரிந்த தலைமகன் கார் காலத்தைக் குறித்து போனானாய் -முக்காலமும் வந்து இவன் வாராது ஒழிய –
அத்தாலே ஆற்றாமை மீதூர்ந்து நோவு படுகிற பிராட்டியைக் கண்டு தோழியானவள் அவன் வரும் அளவும்
இவளை ஜீவிப்பைக்காக காலத்தை மயக்கி ஆசிவசிப்பிக்கிறாள் -நம்பிள்ளை-
கலந்து பிரிந்த தலைமகன் கார்காலத்தைக் குறித்தும் போனானாய்
அக்காலமும் வந்து இவன் வாராது ஒழிய அத்தாலே ஆற்றாமை மீதூர்ந்து நோவு படுகிற பிராட்டியைக்
கண்ட தோழியானவள் அவன் வரும் அளவும் இவளை ஜீவிப்பிக்கைக்காகக் காலத்தை மயக்கி
ஆஸ்வசிப்பிக்கிறாளாய் இருக்கிறது -நம்பிள்ளை ஈடு

பெரியவாச்சான் பிள்ளையும் இதே போல்- ஏழாம் பாட்டைப் போலவே -கால மயக்குத் துறை என்பர் –

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -இது காலம் தெளிந்த பாங்கி இரங்கி உரைத்த பாசுரம் என்பர்
அதாவது கார்காலத்திலே மீண்டு வருவேன் என்ற நாயகன் அக்கார் காலம் வந்தாலும் வரமால் இருக்க
தலைவி ஆற்றாது வருந்த தோழி அது கண்டு இரங்கிக் கூறியது என்பர்
புயற் காலம் கொலோ -என்று இருப்பதால் காலம் தெளிந்த பாங்கி இரங்கி உரைத்த பாசுரம் என்பர்

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18-

பதவுரை

கடல்கொண்ட–கடலளவினதான
கண்நீர் அருவி–கண்ணீர் வெள்ளத்தை
செய்யா நிற்கும்–செரிந்து நிற்கிற
காரிகையே–அழகிய நங்காய்!
வானம்–ஆகாயமானது
கடல் கொண்டு எழுந்தது–கடலைக் கவர்ந்து கொண்டு கிளம்பியது;
கடல்–அக் கடல்தான்
அன்றி–(அங்ஙனம் தன்னைக் கொள்ளைகொண்ட ஆகாசத்தின் மீது கோபித்து
அ வானத்தை சென்று கொண்டு ஒழிந்த அதனால்–ஆகாயத்தைப் போய்க் கவர்ந்து கொண்டு விட்டதனால்
இது–இந்த நிலை, உண்டாயிற்று;
கண்ணன் மண்ணும் விண்ணும்–எம்பெருமானுடைய உடைமையான மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும்
கடல்கொண்டு எழுந்த அகாலம் சொல் ஓ–பிரளய சமுத்திரம் தன்னுள் ஆக்கிக்கொண்டு மேற்கிளர்ந்த அந்தக் கறபாந்த காலந்தானோ? (அன்றி)
புயல் காலம் கொல் ஓ–மழைக்காலந்தானோ? (அறியேன்.)

மேகம் கடலைத் தரை அளவாகப் பருகி ஜல ஜந்துக்களைத் துடிக்க வைக்க கடலும் வானமும் போர் செய்யும்
காலம் இது கார் காலம் இல்லையோ -சங்கையில் தோழி சொல்வதாக –

மெய்யே கார் காலம் வந்தால் அன்றோ நாயகன் வருவான்
மேகமானது கடலைத் தரையளவாகப் பருகி ஜல ஜந்துக்களைத் துடிக்க விட்டுப் போயிற்று
அதைக்கண்ட கடல் பெரிய தத்துவமான நம்மை மதியாதே நம் பிரஜைகளை நோவு படுத்துவதே
என்று சீற்றம் கொண்டு போர் செய்யும் காலம் இது என்று சொல்லி
மேலும் தானும் ஐயப்படுவது போல் பின்னடிகளிலே கூறுகிறாள்
எல்லாப் பொருள்களையும் முடிக்க வந்தானோ தெரிகிறது இல்லையீ -என்று
இரண்டு வகையாகவும் சொல்லி ஆறுதல் படுத்துகிறாள்
நாமே ஆராய்ந்து நிச்சயிப்போம் என்று ஆராய்ச்சியில் சிறிது பொழுது ஆறி இருப்பாளே –
அதற்குள் நாயகனும் வந்து விடுவான் என்பதே தோழியின் கருத்து

காரிகை -அழகு -ஆகுபெயர் -அது உடையவள்

பேறு வரும் வரை ஆறி இருக்க வேண்டும் -ஆழ்வாரை அன்பார் ஆற்றுதல் -உள்ளுறை பொருள் –

எம்பெருமான் தன்னோடு சம்பந்தம் உடையாரை ஒரு காலும் கைவிடான்
உரிய காலத்தில் கைக்கொள்வான் இது காலம் அன்று
அவன் திரு உள்ளத்திலே கொண்டு இருக்கும் காலம் வரை ஆறி இருக்க வேண்டுமே -என்று
ஆழ்வாரை அன்பார் ஆற்றுதல் இதுக்கு உள்ளுறை பொருள் –

முதல் அடியில் அன்றி -கோபம் கொண்டு -அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய போல்

————————————————————————-

செவிலித்தாய் பழிக்கு இரங்கல் என்பது துறை
இன்ன காலத்திலேயே வருகிறேன் என்று சொல்லிப் போன நாயகன் வாக்குத் தவறிதற்கு
ஆற்றாத தலைவிக்கு நிகழும் பழிக்கு செவிலித்தாய் இரங்கல்

அழகிய மணவாள சீயர் உரையில் பாங்கி பழிக்கு இரங்கின பாசுரம் என்பர்
நம்பிள்ளையும் பெரிய வாச்சான் பிள்ளையும் தாய் பாசுரமாகவே வியாக்யானம் செய்து இருப்பதாலும்
என் சின் மொழிக்கு -என்று தனது உடைமையாக கூறி உள்ளதாலும் தாய் பாசுரமாகவே கொள்ள வேண்டும்

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19-

பதவுரை

காரிகையார் நிறைகாப்பவர் யார் என்று–‘ஸ்திரீகளுள் (எம்முன், அடக்கத்தை அழியாமற் பாதுகாத்துக்கொள்ள வல்லவர் யாவருள்ளார்?” என்று கருதிச்செருக்கி
மாரி–மேகங்கள்
கார் கொண்டு–கருமை நிறங்கொண்டு
இன்னே–இவ்வாறு
கை ஏறி–ஒழுங்காக (வானத்தின் மீது) ஏறி நின்று
அறையிடும் காலத்தும்–அறைகூவுகிற காலத்திலும்
சாரிகை புள்ளர்–விரைந்த நடையையுடைய கருடப் பறவையை வாஹநமாக வுடையரான இத்தலைவர்
அம் தண்ணம் துழாய்–அழகிய குளிர்ந்த (தமது) திருத்துழாயை
கூய் இறை அருளார்–(இவளை) அழைத்து (இவளக்கு)ச் சிறிதும் கொடுத்தருளுகிறாரில்லை;
(ஆகவே)
என் சில் மொழிக்கு–சில பேச்சுக்களையுடை என் மகளான இவளுக்கு
சேரி கை ஏறும்பழி ஆய் விளைந்தது–(அவர் பக்கல்கொண்ட காதல்தான்) இவ்வூர் முழுவதும் பரவும் பழியாய்ப் பலித்தது.
வாழியரோ–இவள் இத் துன்பம் நீங்கி வாழ்ந்திடுக.

தாய் வார்த்தை இதில் –
வீர வாதம் செய்து மேகம் -என் முன் ஸ்த்ரீத்வம் காப்பார் யார்
-கார் மாரி கொண்டு கை ஏறி -படை அணி வகுத்து

மேகங்கள் கர்ஜிப்பதை பார்த்தால்
எங்கள் முன்னே ஸ்த்ரீகள்-நாண் மடம் அச்சம் – அடக்கத்தைக் காத்துக் கொள்வார் உண்டோ -என்று
உத்ப்ரேஷித்து அருளிச் செய்கிறார் –
கார் கொண்டு -கோபம் கொண்டு என்றுமாம்
கறுப்பும் சிகப்பும் வெகுளிப்பொருள்
கார் -கருமை என்னும் பண்பின் விகாரம்

கார் மாரி கொண்டு கையேறி -என்று மாற்றி -மேகங்கள் மழையைக் கொண்டு அணிந்து ஏறி என்றுமாம்
கையேறிதல் -படை அணி வகுத்தால் போல் வரிசைப்பட்டு நிற்றல்
மேகத்தின் கர்ஜனையை அறை கூவுதல் என்கிறார்

சாரிகைப் புள்ளார்
எவ்வளவு தூரத்தில் இருந்து வர வேண்டி இருந்தாலும் பெரிய திருவடி வாஹனம் உண்டே
விரைந்த நடையும் வட்டமிட்ட நடையும் –சாரிகை

தண் துழாய் — அருளார்
கலவி தந்து விடா விடிலும்
சம்பந்தம் கொண்ட திருத் துழாயும் தருகிறாய் இல்லையே –
உயிர் தரும் மூலிகை போலே அன்றோ திருத் துழாய் –

கூய் அருளார்
திருத் துழாய் தாரா விடிலும் அன்போடு அழைப்பதும் அரிதாய் இருந்ததே

என் சின் மொழிக்கே –
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது
-இந்நிலையிலும் வந்திலனே என்று பல படியாக
தோன்றினவாறு எல்லாம் பேசுமே சேரி
சின் மொழி-
இளம் பருவத்தள்-

நாலு வார்த்தைகளை சேர்த்துச் சொல்ல திறமை போராமல் குதலைச் சொற்களை யுடையளாய்
இளம் பருவத்தனள்
செயல் முழுதும் அற்றுச் சில் சொல் மாத்திரமே மிச்சமாக உள்ளவள் என்றவாறு

ஆழ்வார் படும்பாட்டை அறிவுடையார் கூறுதல் –ஸ்வாபதேசம்
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று
பாரதந்த்ரமே ஸ்வரூபமான இவர் நிலையை அழியாது காப்பார் உண்டோ –

கார் கொண்டு இன்னே-மாரிகை ஏறி அறை இடும் காலத்தும்
எம்பெருமானுடைய ஸ்வரூபத்தையும்
குண மழையையும்-நினைப்பூட்டிக் கொண்டு காலம் நேர்ந்து விரைவை யுண்டாக்கவும்

வாழியரோ-சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
அழகிய வாஹனம் -தவறாத பிரமாணம்
ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு அருள் செய்தால் போலே விரைய வந்து திரு மிடற்று ஓசையால்
இவளை அழைத்து இவளுக்கு அருளுகின்றிலன்

என் சின் மொழிக்கே
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சொல் அழகு உடையவர் –
எங்கள் விருப்பத்துக்கு உரியரான இவர்க்கு

சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது
சாத்விக ஜனங்கள் எல்லாம் இரங்கி கை எடுத்துக் கூப்பிடும் படி –
இப்போது இவர் பழி என்கிறது-பகவத் பிராவண்யத்தை இறே-

அத்தை பழி என்பான் என் என்னில்-
அத்தலையால் வரக் கண்டு இருக்கும் அத்தனை ஒழிய

இத்தலையால் பெற ப்ரவர்த்திக்குமது பழியாய் இருக்கும் இறே –
ஆனபின்பு பழி என்னத் தட்டில் இறே -நம்பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள்

————————————————————————–

வெறி விலக்கு துறை பாசுரம்
தீர்ப்பாரை யாம் இனி -திருவாய் மொழி பாசுரம் போல்
உலகமுண்ட பெரு வாயனின் திரு நாமங்களை செவிப்படுமாறு சொல்வதும்
அவன் திருத்துழாயைத் தருவதும் பரிஹாரம்
இது தெய்வ நல் நோய் -என்கிறாள் தோழி

சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –20–

பதவுரை

சில் மொழி நோயோ–சில பேச்சுக்களே பேசவல்ல இவளுடைய நோயோவென்றால்
இ நோய் இனது என்று இல்மொழி கேட்கும் இன தெய்வம் அன்று இது–இந்த நோய் இப்படிப்பட்ட தென்று வரையறுத்து
இல்லாத மொழிகளைப் படைத்துச்சொல்லக் கேட்கத்தக்க க்ஷுத்ரதெய்வத்தின் விஷயமாக வந்ததன்று இது;
வேல–வெறியாட்டாளனே!
நீ நில்–நீ விலகி நிற்பாயாக;
எம் அம்மனைமீர் எனது தாய்மார்களே–
என் மொழி கேண்மின்–(இவள் தன்மையை உண்மையாக அறிந்த) எனது வார்த்தையைக் கேளுங்கள்;
கழிபெருந் தெய்வம்– மிகப் பெரிய தெய்வமான எம்பெருமான் விஷயமாக உண்டானது.
ஏழு உலகும்–எல்லாவுலகங்களையும்
உண்டான்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிற்கொண்டு காத்தருளிய பெருமானது.
சொல் மொழிகொண்டு–திருநாமத்தைச் சொல்லுதலைச் செய்து கொண்டு
மாலை அம் தண்ணம் துழாய்–(அவனது) மாலையாகவுள்ள அழகிய குளிர்ந்த திருத்துழாயை
சூட்டுமின்–(இவளுக்குச்) சூட்டுங்கள்

திசைக்கின்றதே யிவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்காடும் இளந்தெய்வம் அன்றிது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றிராகில் நன்றேயில் பெறுமிது காண்மினே-4–6-2–

இது காண் மின் அன்னைமீர் இக்கட்டுவிச்சி சொற்கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவளுற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே -4–6-3–

சின் மொழி
மித பாஷிணி -மழலைச் சொல் மிழற்றுபவள் -குளிர்ந்த மொழிகள்
பிறர் நன்மைக்காக பேசுவது அன்றி ஸ்வ கார்யார்த்தமாக மிக்குப் பேச அறியாதவள் –

நோய் கழி பெரும் தெய்வம்
நோயோ -ஓ இரக்கம்
எம்பெருமானுக்கும் ஷூத்ர தேவதைக்கும் வாசி பர்வத பரம அணு போல்
கழி பெரும் தெய்வம் -இளம் தெய்வம்
ஷூத்ர தேவதாந்த்ர விஷயம் அடியாக வந்த நோய் அல்லவே

அர்த்த ரஹிதமான மொழி கேட்க்கும் இளம் தெய்வம் அன்று இது
தனக்கு இல்லாததை உண்டாகச் சொல்லப் புக்கால் கேட்டுக் கொண்டாடும் தெய்வம் அன்று
கைக்கூலி கொடுத்துக் கவி பாடுவித்துக் கொள்ளும் தேவதைகள் அன்று -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள்

வேலன் என்றது -கையிலே வேலைக்கொண்டு ஆடுபவன்
வேல நில் நீ -தேவதாந்த்ர பரர் புகும் மாளிகை அன்று
கூராழி வெண் சங்கு ஏந்தி ஸேவை சாதிக்க வேண்டிய திரு மாளிகையில்
நீ கையும் வேலுமாக நிற்பதே பாவீ ஒழிந்து போ என்கிறாள்

ஒருங்காகவே உலகு எழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெரும் தேவன் பேர் சொல்ல கிற்கில் இவளை பெறுதிரே
திரு நாமமே தக்க மருந்தும் -திருத் துழாய் பசு மருந்தால் -<strong

சூட்டுமின் –
சஞ்சீவி மூலிகை உட் கொள்வது அன்றிக்கே சிரஸா வகிக்க வேண்டுமே
உள் மருந்து -செவி வழிய திரு நாமம் -பூச்சு மருந்து திருத் துழாய் சூடிக் கொள்வது

மொழி -ஏவல் ஒருமை வினை முற்று–
உலகு எழும் உண்டானுடைய சொற்களை
-திரு நாமங்களை சொல்லு –

வேல நில் நீ
உலகு எழும் உண்டான் சொல் மொழி
என் அன்னைமீர் என் மொழி கேண்மின்
மாலை யம் தண் துழாய் கொண்டு சூட்டுமின்
என்று அன்வயித்து வேலனுக்கு கட்டளை விடுகிறாள்

ஆழ்வாரது தன்மையை அறிந்த அன்பர்கள்
தேவதாந்த்ர பஜனத்தாலாவது ஆழ்வாருடைய ஆற்றாமையைத் தீர்க்க முயலும் ஞானிகளை விலக்குகிறார்கள்
சின்மொழி -பிறரது நன்மைக்காகவே பேசுமவள்

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: